ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The ruling class and the spectre of Leon Trotsky

ஆளும் வர்க்கமும், லியோன் ட்ரொட்ஸ்கி பற்றிய பேரச்சமும்

Chris Marsden
20 August 2016

இன்றிலிருந்து அறுபத்தி ஆறு ஆண்டுகளுக்கு முன்னர், கொலையாளி ராமொன் மெக்கடர் மெக்சிகோவின் கோயோகான் நகர ட்ரொட்ஸ்கியின் வீட்டில் அவரது தலையில் ஒரு பனிக்கோடாரியால் தாக்கினார். படுபயங்கரமாக தாக்குண்ட ட்ரொட்ஸ்கி முழுப் பலத்துடன் அந்த கொலையாளியை எதிர்த்து போராடியிருந்தபோதிலும், அதற்கடுத்த நாள் அவரது காயங்களால் அவர் மரணமடைந்தார்.

அந்த கொலையாளியின் எஜமானரான சோவியத் தலைவர் ஜோசப் ஸ்ராலினின் நோக்கம், அவரது பிரதான எதிராளியின் குரலை மௌனமாக்கி, ரஷ்ய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கம் அதன் தலைச்சிறந்த புரட்சிகர தலைவரை இழக்கச் செய்வதாக இருந்தது.

ஸ்ராலின் தோல்வியடைந்தார். இன்று அந்த சர்வாதிகாரியின் பெயரும் அவரைப் பின்தொடர்பவர்களின் பெயரும் நிந்திக்கப்படுகிறது. ட்ரொட்ஸ்கி எச்சரித்ததைப் போலவே, அவர் [ஸ்ராலின்] "புரட்சிக்கு புதைக்குழி வெட்டியவராக" இருந்தார், அதேவேளையில் ட்ரொட்ஸ்கி ஸ்ராலினிசத்திற்கு எதிரான மற்றும் சர்வதேச சோசலிசத்திற்கான சளைக்காத போராட்டத்துடன் எப்போதும் தொடர்புபட்டதாக இருப்பார்.

ட்ரொட்ஸ்கி வெறுமனே ஓர் உயர்ந்த வரலாற்று முக்கியத்துவம்மிக்க நபராக மட்டும் இருக்கவில்லை, மாறாக உலகெங்கிலுமான தொழிலாளர்களுக்கு அக்காலகட்டத்தின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரமுகராகவும் இருந்தார். இது பிரிட்டிஷ் தொழிற் கட்சியின் ஆழமடைந்து வரும் நெருக்கடியில் மீண்டும் மீண்டும் அவர் பெயர் சம்பந்தப்படுத்தப்படும் விதத்தில் உறுதிப்படுத்தப்படுகிறது.

தொழிற் கட்சியின் துணை தலைவர் ரொம் வாட்சன் கார்டியன் இல் ஆகஸ்ட் 9 இல் எழுதிய ஒரு கட்டுரையில் ஆரம்பித்து வைத்ததில் இருந்து, அக்கட்சியின் வலதுசாரிகள், "ட்ரொட்ஸ்கிச நுழைவுவாதிகளை" (Trotskyist entryists) கடுமையாக குற்றஞ்சாட்டி வருவதுடன், தொழிற் கட்சியின் தற்போதைய தலைவர் ஜெர்மி கோர்பினின் சகல ஆதரவாளர்களும் அவர்களை அறியாமலேயே இத்தகைய நிழலுலக சக்திகளின் நகல்களாக இருப்பதாக சித்தரித்து வருகின்றன.

இத்தகையவொரு குற்றச்சாட்டுக்கு எதுவும் கிடையாதென சீற்றத்தை வெளிப்படுத்துவதே கோர்பின் முகாமின் விடையிறுப்பாக உள்ளது —"தொழிற் கட்சியினுள் திடீரென நுழைந்துள்ள 300,000 குறுங்குழுவாத தீவிரவாதிகள் நிறைய பேர் இந்நாட்டில் இருக்கிறார்கள் என்பது எந்தவொரு கட்டத்திலும் யாரொருவராலும் இந்தளவிற்குத் தெளிவாக ஊகிக்க முடியாது [அழுத்தம் சேர்க்கப்பட்டது],” என்று கோர்பின் Observer க்கு மறுஉத்தரவாதம் அளித்துள்ளார்.

இதில் எதுவுமே, ட்ரொட்ஸ்கி பற்றிய கட்டுரைகள் வெள்ளமென வெளியிடுவதில் இருந்து பிரதான பிரிட்டிஷ் பத்திரிகைகளை தடுத்துவிடவில்லை, அவை அவரை சிறுமைப்படுத்த முயல்வதுடன், அவர் கருத்துக்களுடன் எந்தவிதத்திலும் தொடர்புபடுத்துவதை குறித்து எச்சரிக்கின்றன. தொழிற் கட்சியை துரத்திக் கொண்டிருக்கும் "ட்ரொட்ஸ்கியின் ஆவியைக்" குறித்து மீண்டும் மீண்டும் குறிப்பு காட்டப்படுவதுடன், அக்கட்சிக்குள் நடக்கும் அரசியல் மோதலை ஏதோ சீர்திருத்தத்திற்கும் மற்றும் புரட்சிக்கும் இடையே நடக்கும் மோதலாக அவை சித்தரிக்கின்றன.

தொழிற் கட்சி வலதினது உள்கட்சி நோக்கங்கள் என்னவாக இருந்தாலும், களம் அமைப்பதற்கு ட்ரொட்ஸ்கியின் பெயரை எடுத்திருப்பதானது மிகப்பெருமளவில் புறநிலை முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. உண்மையில் முதலாளித்துவம் எப்போதெல்லாம் நெருக்கடியால் பீடிக்கப்படுகிறதோ, தொழிலாள வர்க்கம் சம்பந்தப்பட்ட சமூக மற்றும் அரசியல் மோதல் வெடிக்கிறதோ, அப்போதெல்லாம் ட்ரொட்ஸ்கியின் பிரசன்னம் உணரப்படுகிறது.

ஏன் இது?

கடுமையான சமூக பிளவுகள், பிரிட்டன் வெளியேறுவது மீதான வெகுஜன வாக்கெடுப்பால் உருவான அரசியல் கொந்தளிப்பு, மற்றும் அனைத்திற்கும் மேலாக, ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தொழிலாள வர்க்க போராட்டங்களை கட்டிப்போட்ட தொழிற் கட்சியின் உடைவு குறித்த அச்சுறுத்தல் என இந்த நிலைமைகளின் கீழ், அவரை “அர்த்தமற்றவராக" கூறும் அறிக்கைகளுக்கு மத்தியிலும், ஆளும் உயரடுக்கும் அதன் ஊடகங்களும் ட்ரொட்ஸ்கி மற்றும் ட்ரொட்ஸ்கிசம் முன்னிறுத்தும் அச்சுறுத்தல் குறித்து துல்லியமாக நன்கறிந்துள்ளது.  

மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும் சிக்கனத் திட்டங்கள் மற்றும் இராணுவவாதத்திற்கு எதிராக போராடுவதற்கான வழிவகைகளை தேடிவருகிறார்கள். அதற்கு ஒரு மாற்றீடாக இருப்பதாக கோர்பின் காட்டிக் கொள்கின்ற அதேவேளையில் தொழிற் கட்சிக்குள் எந்தவித உடைவையும் அவர் தடுக்கமுனைவது நீண்ட நாட்களுக்கு நீடிக்காது. ஒரு புதிய மற்றும் உண்மையான சோசலிச கட்சியைக் கட்டியெழுப்புவதற்கான கேள்வி தவிர்க்கவியலாமல் மேலெழும்.

பிரிட்டனின் நிலைமை உலகெங்கிலும் வளர்ந்து வரும் நிலைமையைத் தான் எடுத்துக்காட்டுகிறது. தொழிலாள வர்க்கம் இடதை நோக்கி நகர்கிறது, ஆனால் அதற்கு தேவையான சோசலிச தலைமையை அது இன்னும் கட்டமைக்கவில்லை.

அடுத்த ஆண்டு 1917 ரஷ்ய அக்டோபர் புரட்சியின் 100 வது நினைவாண்டாகும். உலகின் முதல் தொழிலாளர் அரசை ஸ்தாபித்த அந்த சகாப்தகால சம்பவத்தில் லெனின் உடன் சேர்ந்து ட்ரொட்ஸ்கியின் பெயரும் இணைந்துள்ளது. இன்று மீண்டுமொருமுறை உலக முதலாளித்துவம் தீவிரமடைந்து வரும் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நெருக்கடியின் பிடியில் உள்ளது, இது மனிதயினமானது, சர்வாதிகாரம், காட்டுமிராண்டித்தனம் மற்றும் போரின் ஒரு சகாப்தத்திற்குள் இழுக்கப்படுமா அல்லது தொழிலாள வர்க்கம் வர்க்க சுரண்டல் மற்றும் தேசிய பிளவுகளை முடிவுக்குக் கொண்டு வந்து, உலக சோசலிசத்தை ஸ்தாபிப்பதில் வெற்றி பெறுமா என்ற ஒரு புதிய கேள்வியை எழுப்புகின்றது.

ஸ்ராலினின் கீழ் சோவியத் ஒன்றியத்தின் சீரழிவுக்கு எதிரான அரசியல் போராட்டத்திற்கு ட்ரொட்ஸ்கி தலைமை கொடுத்தார். லெனினில் இருந்து நேரடியாக பாதை ஸ்டாலினுக்கே இட்டுசெல்லும் மற்றும் சோசலிசம், அதிகாரத்துவ சர்வாதிகாரத்தை உருவாக்கியது என்ற கம்யூனிச-விரோத பிரச்சாரங்களின் முக்கியவாதத்தை 1938 இல் நான்காம் அகிலம் நிறுவப்படுவதில் உச்சநிலையை அடைந்த அவரது போராட்டமும் மற்றும் இடது எதிர்ப்பின் போராட்டமும் மறுத்தளிக்கின்றன.     

"முதலாளித்துவத்தின் மரண ஓலம்" போன்ற சகாப்தத்தை வரையறுக்கும் வரிகளையும், நிரந்தர புரட்சி தத்துவத்தையும் ட்ரொட்ஸ்கி எழுதியவாராவார். அவர் உலக சோசலிச புரட்சி முன்னோக்கின் தனிப்பட்ட உருவடிவமாக விளங்குகிறார். பிரிட்டனின் ஆளும் வர்க்கம் மற்றும் சர்வதேச அளவில் உள்ள அதன் சமதரப்பினரது கவலைகளைப் பொறுத்த வரையில், இதுதான் ட்ரொட்ஸ்கியை வரலாற்றில் மிகவும் நச்சுத்தன்மையானவராக மற்றும் அபாயகரமானவராக ஆக்குகிறது.

பல தசாப்தங்கள் கடந்த பின்னரும் கூட, ட்ரொஸ்கியின் எழுத்துக்கள் இப்போதும் பொருத்தமுடையதாக இருக்கின்றன. அவர் பிரிட்டனின் வர்க்கப் போராட்டத்தை நெருக்கமாக கவனத்தில் கொண்டிருந்தார் என்பது மட்டுமல்ல, தொழிற் கட்சி மற்றும் அதன் பாத்திரத்தைக் குறித்து முதலாளித்துவ ஆட்சியின் ஒரு பாதுகாவலராக சுருக்கென்று தைக்கும் விதத்தில் மதிப்பீட்டையும் வழங்கினார். பிரிட்டன் எங்கே செல்கிறது? (Where is Britain Going?) என்ற அவரது தொல்சீர் படைப்பானது, தொழிற் கட்சியும், தொழிற் சங்க காங்கிரஸூம் பொது வேலைநிறுத்தத்தை காட்டிக்கொடுப்பதற்கு வெறும் ஓராண்டுக்கு முன்னர் தான் 1925 இல் பிரசுரிக்கப்பட்டது. ஃபேபியன் இடது மற்றும் அதன் திராணியற்றத்தன்மை, புனிதத்தன்மை பற்றிய பேச்சுக்கள் மற்றும் பாசாங்குத்தனம் ஆகியவை மீதான அவர் எழுத்துக்கள் கோர்பின் மீதும் மற்றும் தொழிற் சங்க அதிகாரத்துவத்தில் உள்ள அவர் ஆதரவாளர்கள் மீதும் எந்தவித நம்பிக்கையும் வைப்பதற்கு எதிரான நல்லதொரு எச்சரிக்கையை வழங்குகிறது:           

அவர்கள், உலக முதலாளித்துவத்திற்கு இல்லையென்றாலும், ஐரோப்பிய முதலாளித்துவத்தின் மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் முக்கிய முண்டுகோல்களாவர். இந்த சுயதிருப்தி கொண்ட ஆணவக்காரர்களை, பன்முக கோட்பாடுகளை (eclectics) பிதற்றிக் கொண்டிருப்பவர்களை, உணர்வுரீதியிலான பிழைப்புவாதிகளை (sentimental careerists) மற்றும் முதலாளித்துவ வர்க்க உடையணிந்த அடிவருடிகளின் உண்மையான நிறத்தை என்ன விலை கொடுத்தாவது தொழிலாளர்களுக்கு எடுத்துக்காட்ட வேண்டும். அவர்களுக்கு எடுத்துக்காட்டுவதென்பது திருத்துவதற்கு முடியாத அளவிற்கு அவர்கள் எந்தளவிற்கு மதிப்பிழந்து போயிருக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்ட வேண்டும். அவர்களை மதிப்பிழக்கச் செய்வது என்பது வரலாற்று நிகழ்வுபோக்கிற்கு ஒரு சிறந்த சேவையை வழங்குவதாகும்.      

வரவிருக்கும் காலத்தில், சர்வதேச அளவில் முன்னேறிய தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய முன்னிற்கும் அவசியமான பிரச்சினை, ட்ரொட்ஸ்கி மற்றும் அவரது அரசியல் மரபியம் ஆகும். சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை (ICFI) பிரிட்டனில் பிரதிநிதித்துவம் செய்யும் சோசலிச சமத்துவக் கட்சி, ட்ரொட்ஸ்கி மற்றும் அவர் வாழ்க்கை அத்தோடு அவர் பணி குறித்த "ஸ்ராலினுக்குப் பிந்தைய வரலாற்று பொய்மைப்படுத்தலை" நிராகரிப்பதற்காக தன்னைத்தானே அர்ப்பணித்துள்ளது.

இந்நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில், மற்றும் 2008 நிதியியல் நெருக்கடிக்கு முன்னர், பிரிட்டிஷ் வரலாற்றாளர்கள் இயன் தாட்சர் (Ian Thatcher), ஜெஃப்ரே ஸ்வைன் (Geoffrey Swain) மற்றும் ரோபர்ட் சேர்வீஸ் (Robert Service) ஆகிய அனைவரும் ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கை வரலாற்றை பிரசுரித்தனர். அவை உள்ளடக்கி இருந்த பொய்கள் மற்றும் திருத்தல்வாதங்களை அம்பலப்படுத்த உலக சோசலிச வலைத் தள தலைவர் டேவிட் நோர்த் திட்டமிட்டவகையில் பணியாற்றி இருந்தார். லியோன் ட்ரொட்ஸ்கியின் பாதுகாப்பில் என்ற தலைப்பின் கீழ் 2010 இல் பிரசுரிக்கப்பட்ட அவர் நூலில், அவர்களது ஒருதலைபட்சமான படைப்புகளை "முன்கூட்டி தாக்குதல் செய்யும் வாழ்க்கை வரலாறு நூல்கள்" (pre-emptive biographies) என்றும், புத்துயிர்க்கவுள்ள புரட்சிகர போராட்டங்களை முன்அனுமானித்து "ட்ரொட்ஸ்கியை ஒரு வரலாற்று பிரமுகராக முற்றிலும் மதிப்பிழக்கச் செய்ய" முனைந்துள்ளன என்றும் நோர்த் விவரித்தார்.

அவரது முன்னுரையில் நோர்த், ட்ரொட்ஸ்கியை சிறுமைப்படுத்துவதற்கான தற்போதைய சகல முயற்சிகளது உள்நோக்கங்களையும் ஆராய்ந்து பின்வருமாறு அளித்திருந்தார்:

லியோன் ட்ரொட்ஸ்கி, வேறெவரைக் காட்டிலும், உலக சோசலிச புரட்சியின் தத்துவவாதியும், தலைச்சிறந்த தலைவரும் ஆவார். அவர் பெயர் உருவாக்கும் உத்வேகங்களே ட்ரொட்ஸ்கியினது சிந்தனைகளின் நீடித்த முக்கியத்துவத்தை நிரூபணம் செய்கின்றன. ட்ரொட்ஸ்கி மீதான வாதங்கள் ஒருபோதும் வெறுமனே கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பது சம்பந்தப்பட்டதல்ல. அதேயளவிற்கு அவை இன்றைய உலகத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது, அதேபோல எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதும் சம்பந்தப்பட்டதாகும்.

இந்த வார்த்தைகள் எழுதப்பட்டதிலிருந்து, ட்ரொட்ஸ்கியைச் சிறுமைப்படுத்தும் மற்றும் அவமதிக்கும் முயற்சியில் கூடுதலான மையும் காகிதமும் விரயமாக்கப்பட்டுள்ளன. இத்தகைய அவதூறுகளுக்கு இடையிலும் மற்றும் இன்னும் அவதூறுகள் வந்தாலும், அவரது நீடித்த பிரசன்னத்தை அழிப்பதென்பது ஒருபோதும் சாத்தியமில்லை. இது ஏனென்றால் வெறுமனே ட்ரொட்ஸ்கி ஒரு பேராபத்து என்பதால் மட்டுமல்ல, மாறாக அவர் ஓர் அரசியல் இயக்கமாவார். அவர் ஸ்தாபித்த அமைப்பான நான்காம் அகிலம், உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தை மீண்டுமொருமுறை முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான புரட்சிகர போராட்டத்திற்குள் கொண்டு வந்து கொண்டிருக்கின்ற, ஆழ்ந்த புறநிலை போக்குகளின் நனவுபூர்வமான வெளிப்பாடாக உள்ளது.