ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The socioeconomic basis of identity politics: Inequality and the rise of an African American elite

அடையாள அரசியலின் சமூகபொருளாதார அடித்தளம்: சமத்துவமின்மையும், ஓர் ஆபிரிக்க அமெரிக்க உயரடுக்கின் வளர்ச்சியும்

David Walsh
30 August 2016

ஊடகங்களின் பல செய்திகள் மற்றும் முன்னணி அமெரிக்க அரசியல்வாதிகளின் அறிக்கைகளைக் கொண்டு தீர்மானித்தால், 2016 தேர்தல்களில் இனம் தான் மத்திய பிரச்சினையோ என்று தோன்றும்.

வரலாற்றில் முந்தைய வேறெந்த காலகட்டத்தையும் விட அமெரிக்க மக்கள் அவர்களின் சமூக கண்ணோட்டங்களில் மிகவும் சகிப்புத்தன்மையோடு இருக்கும் ஒரு கட்டத்தில், பெண்கள் மீதான வன்முறையான வெறுப்பு மற்றும் ஓரினச்சேர்க்கை ஆகியவற்றுடன் சேர்ந்து, இனம் மற்றும் வம்சாவளி சார்ந்த வெறுப்புகளால் அமெரிக்கா கொந்தளித்துக் கொண்டிருக்கிறது என்பதாக நாளாந்தம் அவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.

பல்வேறு இடது-தாராளவாதிகள் மற்றும் போலி-இடது போக்குகள் அனைத்தும் ஆதரித்து வரும் ஜனநாயகக் கட்சியே குறிப்பாக இந்த விடயத்தில் ஆக்ரோஷமாக கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறது. இனம், பாலினம் (gender) மற்றும் பாலியல் அடையாளத்தில் (sexual identity) தன்னை மையப்படுத்தி உள்ள உயர்மட்ட நடுத்தர வர்க்கத்தினது ஆவேசமான அடையாள அரசியல், அக்கட்சியினது பிரதான தூண்களில் ஒன்றாக மாறியுள்ளது.

முந்தைய காலகட்டத்திற்கு எதிர்விதமாக, இன்று இனம் சார்ந்த பிரச்சினைகள் குடியுரிமை உடனோ, ஒரு மிகப்பெரிய சமூக சீர்திருத்த திட்டத்துடனோ, ஒட்டுமொத்தமாக தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமைகளை முன்னேற்றுவதுடனோ சம்பந்தப்பட்டு கிடையாது, அதுவும் நிச்சயமாக சோசலிசத்துடன் கிடையவே கிடையாது. இனம் சம்பந்தப்பட்ட சர்ச்சை, பெரிதும் கறுப்பின குட்டி முதலாளித்துவ வர்க்க பிரிவுகளுக்கு அதிக பொருளாதார ஆதாரவளங்களை ஒதுக்கீடு செய்வதற்கான கோரிக்கைகளை சுற்றி கட்டமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய உயர்மட்ட நடுத்தர வர்க்க இயக்கங்களின் தலைமைகளுக்குள் குறிப்பிடும் அளவிற்கு கவனத்தை ஈர்க்கும் ஜனநாயக கோரிக்கைகளோ அல்லது உணர்வுகளோ கிடையாது.

இனம் குறித்த பெரும்பாலான வனப்புரையின் குறுகிய மற்றும் வக்கிரமான தொனி உட்பட நடப்பு பிரச்சாரங்களின் குணாம்சத்தை ஒருவர், ஆபிரிக்க அமெரிக்க மக்களிடையே கூர்மையாக அதிகரித்துவரும் சமூக சமத்துவமின்மை என்ற ஒரேயொரு உண்மையை ஆராய்ந்தால் விளங்கிக் கொள்ள முடியும்.

பெருநிறுவன உயர் பதவிகளில் ஆபிரிக்க அமெரிக்கர்கள் இன்னமும் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட பாத்திரம் வகித்தாலும், கடந்த பல தசாப்தங்களில் மிகப்பெருமளவில் இலாபமடைந்துள்ள மிகவும் குறிப்பிடத்தக்க செல்வாக்கான பிரிவும் அவர்களிடையே உள்ளது என்பதை புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. வேறொரு உலகில் வாழ்கின்ற இவர்கள், தொடர்ந்து வறுமையில் அவதிப்படுகின்ற கறுப்பின தொழிலாள வர்க்கத்தின் பரந்த அடுக்குகளில் இருந்து ஆழமாக பிளவுபட்டுள்ளனர்.

ரிச்சார்ட் நிக்சன் நிர்வாகம் தொடங்கி அமெரிக்க ஆளும் வர்க்க கொள்கையானது, நடைமுறையில் இருப்பதற்கு விசுவாசமாக இருக்கும் ஒரு கறுப்பின உயர்மட்ட நடுத்தர வர்க்கத்தை தோற்றுவித்துள்ளது. இதற்கு கைமாறாக, இந்த அடுக்கு பாரிய போராட்டம், சமூக எதிர்ப்பு மற்றும் முதலாளித்துவ எதிர்ப்பு ஆகியவற்றுடன் எவ்விதத்திலும் தொடர்புபடுவதில்லை. இன்று பரந்த பெருந்திரளான மக்களுடன் மற்றும் மக்களுக்காக பேசும் முன்னணி ஆபிரிக்க அமெரிக்க பிரமுகர், எந்தவொரு துறையிலும், எவரும் இல்லாமல் இருப்பது ஏன் என்பதை விளங்கிக்கொள்ள இது உதவும்.

இந்த உண்மைகளும் புள்ளிவிபரங்களும் மலைப்பூட்டுகின்றன.

உலகளாவிய தகவல் மற்றும் அளவீட்டு நிறுவனமான நைல்சென் (Nielsen) 2015 இல் "அதிகரித்தளவில் செல்வாக்கானவர்கள், படித்தவர்கள் மற்றும் வேறுபட்டவர்கள்" என்ற அறிக்கை ஒன்றை உருவாக்கியது, "குறிப்பாக 75,000 டாலர்கள் அல்லது அதற்கு அதிகமான வருடாந்தர குடும்ப வருமானம் கொண்ட பொதுவாக கவனிக்காமல் விடப்பட்ட ஆபிரிக்க-அமெரிக்கர்களது ஒரு பிரிவின் மீது கவனம் செலுத்தியது. அந்த அடுக்கின் அளவும் செல்வாக்கும் எல்லா வருமாய் பிரிவுகளிலும் 60,000 டாலர்களுக்கு அதிகமாக வருவாய் பெறும் ஹிஸ்பானியர்கள் அல்லாத வெள்ளையினத்தவர்களை விட வேகமாக அதிகரித்து வந்துள்ளது,” என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது. (இந்த புள்ளிவிபரம் அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு, அமெரிக்க சமூக ஆய்வு, 2014 என்பதில் கிடைக்கிறது.)

உண்மையில் 75,000 டாலர்களுக்கு அதிகமாக சம்பாதிக்கும் கறுப்பின குடும்பங்கள் தான் நாட்டிலேயே மிகவும் வேகமாக வளர்ந்து வரும் வருவாய் பிரிவாக உள்ளன. நைல்சென் தகவல்படி, “2005-2013 ஆம் ஆண்டுகளில், கறுப்பின குடும்பங்களில் மிக அதிக உயர்வைக் கொண்ட வருவாய் பிரிவாக இருப்பது 200,000 டாலர்களுக்கு அதிகமாக சம்பாதிக்கும் குடும்பங்களாகும், இது மொத்த மக்கள்தொகையில் 74 சதவீத உயர்வுடன் ஒப்பிடுகையில் 138 சதவீதம் உயர்ந்துள்ளது.”

1960 இல், E. Franklin Frazier அவரது முன்னோடி படைப்பான The Black Bourgeoisie ஐ எழுதிய சமயத்தில், அமெரிக்காவில் 25 கறுப்பின மில்லியனர்கள் இருந்ததாக மதிப்பிடப்பட்டது. இன்று 35,000 கறுப்பின மில்லியனர்கள் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது.

ஆபிரிக்க அமெரிக்கர்களிடையே செல்வ திரட்சி அதீதமாகி உள்ளது. பியூ ஆய்வு மைய தகவல்படி, கறுப்பின குடும்பங்களில் 35 சதவீதத்தினர் எதிர்மறை அல்லது பூஜ்ஜிய நிகர மதிப்பைக் கொண்டுள்ளனர். மற்றொரு 15 சதவீதத்தினரது மொத்த குடும்ப மதிப்பு 6,000 டாலருக்கும் குறைவாக உள்ளது. மொத்தம் 14 மில்லியன் கறுப்பின குடும்பங்களில் அண்மித்து 7 மில்லியன் குடும்பங்களது மதிப்பு மிகச் சிறியளவிலோ அல்லது பூஜ்ஜியம் அளவிலோ உள்ளது.

கடந்த மே மாதம் Huffington Post இன் விமர்சகர் அன்டோனியோ மூரே குறிப்பிடுகையில் உயர்மட்ட 1 சதவீத அமெரிக்க கறுப்பின குடும்பத்திற்கும் சராசரி கறுப்பின குடும்பத்திற்கும் இடையிலான சொத்து வித்தியாசம், வெள்ளையின குடும்பங்களுடன் ஒப்பிடுகையில் இருப்பதை விட பல மடங்கு அதிகமாக இருப்பதாக தெரிவிக்கிறார்.

“உயர்மட்ட 1 சதவீதத்தில் சில கறுப்பின குடும்பங்களின் சராசரி நிகர மதிப்பு 1.2 மில்லியன் டாலர்களாக இருந்தது, அதேவேளையில் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த கறுப்பின குடும்பங்களின் சராசரி நிகர மதிப்பு மொத்தத்தில் சுமார் 6,000 டாலராக இருந்தது. ஒரு சதவீதத்தில் வரும் ஒரு கறுப்பின குடும்பம் ஒரு சராசரி கறுப்பின குடும்பத்தின் மதிப்பை விட 200 மடங்காக மலைப்பூட்டும் அளவிற்கு உள்ளது. கறுப்பின அமெரிக்கா ஒரு நாடாக இருந்தால், உலகிலேயே மிக செல்வந்த அடுக்குகளைக் கொண்டவர்கள் மத்தியில் நாமும் இருந்திருப்போம்,” என்று குறிப்பிட்டது.

“வருமாய் ஏற்றத்தாழ்வு", அதாவது ஏழைகளாகவோ அல்லது அண்டையில் வசிக்கும் செல்வந்தர்களாகவோ வாழும் நிலை, 1970 இல் இருந்து கறுப்பின குடும்பங்களிடையே கூர்மையாக அதிகரித்துள்ளது. “1970 இல் கறுப்பின குடும்பங்களிடையே வருவாய் ஏற்றத்தாழ்வு வெள்ளையின குடும்பங்களை விட குறைவாக இருந்தது, ஆனால் 1970 க்கும் 2009 க்கும் இடையே அது நான்கு மடங்கு அதிகரித்தது. 2009 வாக்கில், கறுப்பின குடும்பங்களிடையே வருவாய் ஏற்றத்தாழ்வு வெள்ளையின குடும்பங்களிடையே இருந்ததை விட 65 சதவீதம் அதிகமாகும்.” (கோர்னெல் பல்கலைக்கழகத்தின் கென்ந்த்ரா பிஷாப் மற்றும் ஸ்டான்ஃபோர்டு இன் சீன் எஃப். ரீர்டன் ஆகியோரின் வருவாய் அடிப்படையில் மக்களின் ஏற்றத்தாழ்வு, 1970-2009)

2013 இல் வாஷிங்டன் போஸ்ட் தகவல்படி, ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100,000 டாலர் சம்பாதிக்கும் குடும்பங்களின் எண்ணிக்கையைக் கொண்டு அளவிடப்பட்ட கறுப்பின நடுத்தர வர்க்கம் கடந்த 50 ஆண்டுகளில் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. பத்து கறுப்பின குடும்பங்களில் ஏறத்தாழ ஒன்று இப்போது அந்த வருவாய் பிரிவில் இருக்கின்றது. 1970 மற்றும் 1990 க்கு இடையே, கறுப்பின மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொறியியலாளர்களின் சதவீதம் இரண்டு மடங்கு அதிகரித்தது. 1990 இல் இருந்து 2013 வரையில், கறுப்பின மேலாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் விகிதம் 30 சதவீதம் உயர்ந்தது மற்றும் கறுப்பின வழக்கறிஞர்கள் மற்றும் பொறியியலாளர்களின் விகிதம் 38 சதவீதம் அதிகரித்தது.

“கறுப்பின முதலாளித்துவ" தசாப்தங்கள் மற்றும் இடஒதுக்கீட்டு நடவடிக்கை மிகச் சிறியளவே ஆதாயமளித்துள்ளது என்றாலும் இன்னமும் ஆபிரிக்க அமெரிக்க மக்களின் கணிசமான அடுக்குகளுக்கு பயன்பட்டு வருகிறது. செல்வம் மற்றும் பொருளாதார அனுகூலத்தை மிகவும் முனைப்புடன் பெறுவது இந்த சமூகக்கூறுதான். நவம்பர் 2015 இல் மிசொரி பல்கலைக்கழக போராட்டங்களில் முக்கிய பிரமுகராக இருந்தவரும் உண்ணாவிரதம் இருந்தவருமான ஜோனாதன் பட்லர் இந்த சூழலில் இருந்து வந்தவர் என்பது வெறுமனே தற்செயலாக பொருந்தியதல்ல. அவர் தந்தை, எரிக் பட்லர், யூனியர் பசிபிக் கார்ப். இல் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பிரிவின் நிர்வாக துணை தலைவராக உள்ளார் மற்றும் 2015 இல் மொத்த ஈட்டுத்தொகையில் (compensation) 2.9 மில்லியன் டாலர்கள் திரட்டினார்.

மிக முக்கியமாக, ஆபிரிக்க அமெரிக்கர்கள் தொழில்ரீதியிலான உயரடுக்குகளில் வெள்ளை இனத்தவர்களுடன் நடைமுறையளவில் சரிநிகர் சமமாக இருக்கின்றனர். 2004 வாக்கில், முனைவர் பட்டம் பெற்ற கறுப்பினத்தவர்கள் சராசரியாக 74,207 டாலர் வருவாய் சம்பாதித்தனர், இது முனைவர் பட்டங்களைக் கொண்ட வெள்ளையினத்தவர்களின் சராசரி வருவாயை விட சற்றே அதிகமாகும் ($73,993). (The Journal of Blacks in Higher Education)

“இன இடைவெளியை முடிவுக்குக் கொண்டு வருதல்: கல்வி மூலமாக இளம் ஆபிரிக்க அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பின்மையை உயர்த்துதல்” என்றவொரு ஒரு சமீபத்திய அறிக்கை வாதிடுகையில், “ஆபிரிக்க அமெரிக்கர்களும் வெள்ளை இனத்தவர்களும் உயர் கல்வி வேலைவாய்ப்பில் அண்மித்து சமமான வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்,” என்றது.

ஒப்பீட்டளவில் இந்த சமநிலையின் தாக்கங்கள் என்ன?

இனம் மற்றும் பாலினம் அடிப்படையிலான ஆவேசம், கறுப்பின மற்றும் பெண் தொழில்வல்லுனர்களின் ஒரு அடுக்கு அதன் தனிச்சலுகைகளின் மீது வேட்கை கொண்டிருப்பதை உள்ளடக்கி உள்ளது, தீவிரமாக போட்டி நிறைந்த "சந்தையிட" நிலைமைகளின் கீழ், அவர்கள் அவர்களின் சமபலங்களான வெள்ளையின அல்லது ஆண்களை விலையாக கொடுத்து தங்களின் தொழில் வாழ்க்கையை மற்றும் வருவாய்களைப் பெற தீர்மானகரமாக உள்ளனர். இனம் மற்றும் பாலியல் வன்முறை மீதான தற்போதைய பிரச்சாரங்களின் இந்த உறுமல் மற்றும் பொய்மை, ஏற்கனவே இத்தகைய செல்வாக்கான அடுக்குகளுக்கு இடையே இனரீதியிலோ அல்லது பாலினரீதியிலோ பெரிதாக சம்பள இடைவெளி இல்லை என்ற உண்மையின் முன்னால், கடந்தகால குற்றங்கள் மற்றும் அநீதியிலிருந்து இன்னும் ஆதாயமடைவதற்காக மற்றும் தொடர்ந்து இன்னும் நிறைய தனிச்சலுகைகளை நியாயப்படுத்துவதற்காக தற்போதைய நிலைமைகளை இன்னும் அதிகரித்து கொள்வதற்கான தேவையோடு சம்பந்தப்பட்டுள்ளது. இது, மக்களில் மிகப் பணக்கார 5 சதவீதத்தினருக்கும் 10 சதவீதத்தினருக்கும் இடையே (ஆண்டு வருவாய் அண்ணளவாக $190,000 க்கும் $130,000க்கும் இடையே) நடந்து வரும் கடுமையான மோதலாகும்.

இத்தகைய பிரச்சாரங்கள் மற்றும் மோதல்களில் அங்கே எதுவும் "முற்போக்கானதோ" அல்லது "இடதுசாரித்தன்மையதோ" கிடையாது. ஐக்கிய இராஜ்ஜியங்களின் ஜனாதிபதி ஒரு ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அல்லது ஒரு வங்கியின் அல்லது மிகப்பெரும் பெருநிறுவனத்தின் தலைமை செயல் நிர்வாகி வெள்ளையினத்தவராக ஆகட்டும் அல்லது கருப்பினத்தவராக ஆகட்டும் அதற்காக அவர் தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்காக இருப்பார் என்றாகாது. ஓர் அரை நூற்றாண்டுக்கு முன்னர் E. Franklin Frazier குறிப்பிடுகையில் "வெள்ளையினத்தவர்கள் எந்தளவிற்கு ஈரவிக்கமின்றி பெருந்திரளான நீக்ரோ மக்களை சுரண்டியுள்ளனரோ அதேயளவிற்கு" கறுப்பின வணிகங்களும் மற்றும் அரசியல் நலன்களும் சுரண்டியிருப்பதாக குறிப்பிட்டார்.

இனவாத அரசியல் என்ன வடிவத்தில் இருந்தாலும் சோசலிசவாதிகள் அதை நிராகரிக்கிறார்கள். 2016 தேர்தல்களின் உள்ளடக்கத்தில், இதன் அர்த்தம் ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் இரண்டு தரப்பும் மற்றும் முதலாளித்துவ அரசியலைச் சுற்றி வருபவர்களும் பறைசாற்றும் இனவாத மற்றும் தேசியவாத அசிங்கத்தை மறுத்தளிப்பதாகும். சோசலிச சமத்துவ கட்சியின் பிரச்சாரம் மட்டுமே தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் மற்றும் வரலாற்று நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்கிறது.