ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Germany, France propose EU military alliance before post-Brexit summit

பிரெக்ஸிட்டுக்கு பிந்தைய உச்சிமாநாட்டுக்கு முன்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் இராணுவக் கூட்டணிக்கு ஜேர்மனியும், பிரான்சும் ஆலோசனை வைக்கின்றன

By Alex Lantier
13 September 2016

பிரடிஸ்லாவாவில் வெள்ளிக்கிழமையன்று நடைபெறவிருக்கும் ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டிற்கு முந்தைய நாட்களது நிகழ்வுகளில், ஐரோப்பிய ஒன்றியத்தை வெளிநாடுகளில் அல்லது சொந்த நாட்டில் மிகப்பெரும் நடவடிக்கைகளை நடத்துவதற்கான திறம்படைத்ததான ஒரு இராணுவக் கூட்டணியாக மாற்றுவதற்கு ஜேர்மனியும் பிரான்சும் நெருக்குதலளித்துக் கொண்டிருக்கின்றன.

ஜேர்மனியின் பாதுகாப்பு அமைச்சரான ஊர்சுலா வொன் டெர் லையன் மற்றும் பிரான்சின் பாதுகாப்பு அமைச்சரான ஜோன்-ஈவ் லு திரியோன் ஆகியோரால் வரைவு செய்யப்பட்டிருக்கும் ஒரு ஆறு பக்க ஆலோசனை மொழிவு Sueddeutsche Zeitung மற்றும் Le Figaro ஆகிய இதழ்களிடம் காண்பிக்கப்பட்டது. நேட்டோ கூட்டணிக்கு அப்பாற்பட்டு, எஞ்சிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் இராணுவப் படைகளை ஒருங்கிணைத்து ஐரோப்பிய இராணுவக் கூட்டணிகளை உருவாக்குவதை, அமெரிக்காவைப் போலவே, வழமையாக எதிர்த்து வந்திருக்கின்ற பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதைப் பயன்படுத்திக் கொள்வதே இந்த ஆலோசனைகளின் நோக்கமாய் இருக்கிறது. எஞ்சிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், பிரிட்டனை பிரட்டிஸ்லாவா கூட்டத்தில் இருந்து வெளியே தள்ளி விட்டன என்பதால் வார்த்தைநுட்பமாய் பார்த்தால் இது “உத்தியோகபூர்வமில்லாத” ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடாகும்.

ஜேர்மன் சான்சலரான அங்கேலா மேர்க்கெலும் பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டும் இந்த ஆலோசனை தொடர்பான பேச்சுவார்த்தைகளை, பிரெக்ஸிட் வாக்களிப்புக்குப் பின்னர், ஜூலையின் ஆரம்பத்திலேயே தொடக்கி விட்டனர். “நமது எல்லைகளையும் ஐரோப்பிய ஒன்றியக் குடிமக்களையும் கூடுதல் திறம்பட்ட வகையில் பாதுகாப்பதற்கு நமது ஒற்றுமையையும் ஐரோப்பிய பாதுகாப்புத் திறன்களையும் வலுப்படுத்துவதற்கு இது மிகச் சிறந்த நேரமாகும்” என்று அந்த ஆவணம் அறிவிப்பதாய் Le Figaro தெரிவிக்கிறது. “ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக முடிவெடுத்திருக்கும் நிலையில், நாம் [மீதமுள்ள] 27 நாடுகளைக் கொண்டு இப்போது செயல்பட வேண்டும்.”

“நேட்டோ கூட்டணிக்குப் போட்டியாக வந்துவிடும் என்று அஞ்சி அமெரிக்கா எதிர்த்து வந்ததால், பல ஆண்டுகளாக, [ஐரோப்பிய இராணுவ] ஒத்துழைப்பு தோல்வி கண்டிருந்தது” என்று Sueddeutsche Zeitung இல் Stefan Kornelius எழுதினார். “பிரெக்ஸிட் இதனை ஒரே அடியில் மாற்றியிருக்கிறது. பிரிட்டன் உத்தியோகபூர்வமாக இன்னும் ஐரோப்பிய ஒன்றியத்தில் தான் இருக்கிறது என்றாலும் கூட, அங்கிருந்து இனி எதிர்ப்பு ஏதும் இருக்காது. இரு அரசுகள் திடீரென தமது முறை வந்திருப்பதைக் காண்கின்றன: ஜேர்மனியும் பிரான்சும் தமது அபிலாசைகள் வெளிப்பட அனுமதிக்கின்றன, ஒரு பரிசோதனை முயற்சி செய்பவரின் பாத்திரத்தை ஆற்றுகின்றன.”

பேர்லின், பாரிஸின் நோக்கங்கள் முற்றிலும் பிற்போக்குத்தனமானவையாகும். பிரெக்ஸிட் வாக்களிப்பினாலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சமூக சிக்கன நடவடிக்கைத் திட்டநிரலுக்கு தொழிலாள வர்க்கத்தில் நிலவுகின்ற ஆழமான வெறுப்பினாலும் திகைத்துப் போய், ஐரோப்பிய ஆளும் வர்க்கமானது, வெளிநாடுகளில் எதிரிகளுக்கு எதிராகவும் சொந்தநாட்டில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகவும் ஆயுதம்தரித்து நிற்கச் செய்வதன் மூலமாக ஐரோப்பிய ஒன்றியத்தை தொடர்ந்து பிடியில் வைத்திருக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறது.

வொன் டெர் லையன் -லு திரியோன் ஆவணமானது ஐரோப்பிய ஒன்றிய இராணுவ நடவடிக்கைகளைத் திட்டமிடும் வேலையை Eurocorps வசம் ஒப்படைக்கிறது. ஜேர்மனி, பெல்ஜியம், பிரான்ஸ், இத்தாலி, லுக்சம்பேர்க், மற்றும் போலந்து துருப்புகளின் ஒரு கூட்டு அலகான அதன் தலைமையகம் Strasbourg இல் அமைந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டு இராணுவ மருத்துவ தலைமையகம், தடவாள வசதிகள் மற்றும் அதிகாரிகள் பயிற்சித் திட்டங்கள், மற்றும் ஒருங்கிணைந்த ஐரோப்பிய ஒன்றிய இராணுவத் தலைமையகங்களை உருவாக்குதல் ஆகியவற்றுக்கும் இது அழைப்புவிடுக்கிறது.

முக்கியமான தொழில்நுட்பங்களை அபிவிருதி செய்வதைச் சுற்றி ஐரோப்பிய பாதுகாப்புத் துறைகளை ஒருமைப்படுத்த இது ஆலோசனை வைக்கிறது. “ஐரோப்பிய பங்காளிகள் ‘வெளியிலிருந்து’, முக்கியமாக அமெரிக்காவிடம் இருந்து, சாதனங்களை வாங்கி அதன்மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலோபாய தன்னாட்சியை பலவீனப்படுத்துவதை தவிர்க்கச் செய்வதே இலக்காகும்” என்று Le Figaro எழுதுகிறது. “விமானத்திற்குள்ளான எரிபொருள் மறுநிரப்பல், செயற்கைக்கோள் தகவல்தொடர்புகள், இணைய பாதுகாப்பு, மற்றும் ஆளில்லா விமானங்கள் ஆகிய நான்கு முக்கிய தொழில்நுட்பங்களில் முயற்சிகள் கவனம் குவிப்பதாக இருக்க வேண்டும்.”

தங்கள் ஆலோசனைகள், எல்லைப் பாதுகாப்பு தொடர்பானது என்று வொன் டெர் லையனும் லு திரியோனும் கூறுவதை இது கேலிக்கூத்தாக்குகிறது. வழக்கமான எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அவசியமில்லாத மூலோபாயக் குண்டுவீச்சு, நெடுந்தொலைவு தேடல் மற்றும் கண்காணிப்பு, இணையப் போர் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலமான கொலை ஆகிய இராணுவத் திறன்களை இத்தகைய தொழில்நுட்பங்கள் வழங்குகின்றன. ஆயினும், 2003 இல் ஈராக் மீதான அமெரிக்க தலைமையிலான சட்டவிரோத படையெடுப்பு, அல்லது மற்ற முக்கிய உலக சக்திகளுடனான போர்கள் போன்ற கடுமையான காலனித்துவ ஆக்கிரமிப்பு போர்களை நடத்துவதற்கு இவை இன்றியமையாதவையாய் இருக்கின்றன.

அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ஆப்கானிஸ்தான் முதல் ஈராக் மற்றும் ஆபிரிக்கா வரை நவ-காலனித்துவ போர்களில் டிரில்லியன் கணக்கான டாலர்களைச் செலவிட்ட இந்த இரண்டு தசாப்தங்கள் காட்டியிருப்பதைப் போல, ஐரோப்பாவிலும் அதற்கு வெளியிலும் இருக்கக் கூடிய தொழிலாளர்களுக்கு இத்தகைய கொள்கைகளால் எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் இராணுவரீதியாக போட்டிபோடுவதற்காக டிரில்லியன் கணக்கான யூரோக்களை செலவிடுவதென்பது, சுமார் ஒரு தசாப்த கால ஆழமான சிக்கன நடவடிக்கைகளால் ஏற்கெனவே நாசம் செய்யப்பட்டிருக்கும் ஒரு கண்டத்தை, மேலும் சிதைவடையவே செய்யும். சிரியாவில், உக்ரேனில் மற்றும் கிழக்கு ஐரோப்பாவெங்கிலும் நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் பதட்டங்கள் அதிகரித்துச் செல்கின்ற நிலையில், இது மனிதகுலத்தின் இருப்பையே அச்சுறுத்துகின்ற ஒரு போருக்கு மேடையமைத்துத் தருவதாகவே அமையும்.

அணுசக்திகள் இடையிலான ஒரு புதிய உலகப் போரின் அபாயம் குறித்து ஆளும் வட்டாரங்களில் பகிரங்கமாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஏப்ரலில், பிரிட்டனின் டெலிகிராப் பத்திரிகை “மூன்றாம் உலகப் போர் நாளை இவ்வாறு தொடங்கலாம்” என்ற தலைப்பிலான ஒரு கட்டுரையை கொண்டிருந்தது.

“கடந்த காலத்தில் நடந்ததைப் போலவே, ஒரு மூன்றாம் உலகப் போரானது ஒரு சிறிய நிகழ்வின் மூலமாக, அல்லது ஒரு விபத்தின் மூலமாகக் கூட தொடங்க முடியும் என்பது மிகவும் சாத்தியமானதே” என்று அது எழுதியது. “உண்மையில், சிரிய வான்பகுதி அபாயகரமான விதத்தில் நெரிசலடையத் தொடங்கியிருக்கிறது, குண்டுவீச்சுகளின் போது ரஷ்ய ஜெட் விமானங்கள் அமெரிக்க விமானங்களுக்கு மிக அருகில் பறக்கின்றன, அருகே துருக்கியில் இருக்கும் நேட்டோ வான் பாதுகாப்புத் தளங்களுக்கு நெருக்கடியை கூட்டுகின்றன. ஆசியாவின் நடப்பு ஆயுதப் போட்டியின் பகுதியாக இராணுவமயமாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற பசிபிக் கடலில் ஜப்பான் அல்லது அமெரிக்கக் கப்பல் ஒன்று சீனக் கடற்படைக் கப்பலுடன் உரசும்போது, கடலிலும் கூட அது நிகழலாம்.”

இத்தகைய ஒரு போருக்கும், அதேபோல, சொந்த நாட்டில் தொழிலாள வர்க்கத்திலான எதிர்ப்பை வன்முறையாக ஒடுக்குவதற்கும் எஞ்சிய ஐரோப்பிய ஒன்றிய அரசுகளும் தயாரித்துக் கொண்டிருக்கின்றன என்பதையே வொன் டெர் லையன் மற்றும் லு திரியோனின் ஆலோசனைகள் காட்டுகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கையை வகுக்கின்ற, பரந்த சமூக எதிர்ப்பைக் கண்டு அஞ்சுகின்ற ஒரு சிறு சதிக்கும்பலின், பிரதான இலக்காக ஐரோப்பிய தொழிலாளர்கள் இருக்கின்றனர். பாதுகாப்பு ஆய்வுகளுக்கான ஐரோப்பிய ஒன்றிய நிறுவனம், தனது “ஐரோப்பிய பாதுகாப்புக்கான முன்னோக்குகள் 2020” என்ற ஆவணத்தில், “இந்த உலகின் செல்வத்தை, வறுமைப்பட்டவர்களின் பதட்டங்களில் இருந்தும் பிரச்சினைகளில் இருந்தும் பாதுகாப்பது” ஐரோப்பிய ஒன்றிய இராணுவ நடவடிக்கையின் ஒரு முக்கிய பணியாக இருக்கிறது என்று ஒளிக்காமல் அறிவித்தது.

“உலக மக்களில் வறுமைப்பட்டும் விரக்தியுற்றும் செல்பவர்களின் விகிதாச்சாரம் தொடர்ந்தும் அதிகரித்துச் செல்கின்ற நிலையில், இந்த உலகத்திற்கும், வளமான உலகத்திற்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரிக்கும்” என்று அறிவித்த அது, மேலும் சேர்த்துக் கொண்டது: “தொழில்நுட்பம் உலகத்தை புரட்சியின் விளிம்பில் இருக்கும் ஒரு சிறு நகரமாகச் சுருக்கி விடுகிறது. மேலும்மேலும் ஒருங்கிணைந்ததாக ஆகின்ற ஒரு உயர் அடுக்கை நாம் கையாளுகின்ற அதேவேளையில், வறுமைப்பட்ட மிகக் கீழிருக்கும் அடுக்கில் வெடிப்பான பதட்டங்கள் வளர்ச்சி காண்பதற்கும் நாம் முகம் கொடுக்கிறோம்.”

இது பிரான்சில் ஏற்கனவே நடைமுறை வெளிப்பாட்டை கண்டிருக்கிறது. பாரிஸில் 2015 நவம்பர் 13 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர் அறிவிக்கப்பட்ட அவசரகால நிலையின் கீழ் பத்தாயிரக்கணக்கான துருப்புகளும் கலகத் தடுப்பு போலிசாரும் வீதிகளில் இருக்கின்றனர். தொழிலாளர்கள் மீது அரக்கத்தனமான சமூக வெட்டுகளை திணிக்கின்றதும் ஆழமான மக்கள் வெறுப்பை சம்பாதித்ததுமான தனது தொழிலாளர் சட்டத்திற்கு எதிரான வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் மீது வன்முறையாக தாக்குவதற்கான ஒரு சாக்காக, அவசரகால நிலையை சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் பயன்படுத்தி வருகிறது.

முக்கிய நேட்டோ சக்திகள் தங்களை முழு ஆயுதபாணியாக்கிக் கொள்ள எத்தனிக்கின்ற நிலையில், அவ் ஆயுதபாணியாக்கம், அவற்றுக்குள்ளேயேயும் பதட்டங்களை வெடிப்பான உயரங்களுக்கு அதிகப்படுத்துகின்றன. கடந்த தடவை ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்காவில் இருந்து சுதந்திரமான இராணுவத் திறன்களுக்காக தீவிரமாய் நெருக்கிய சமயத்தில் —சோவியத் ஒன்றியத்தை ஸ்ராலினிசம் கலைத்ததன் பின்னர் 1990கள் மற்றும் 2000களின் ஆரம்பங்களில் ஒரு “பலதுருவ” (“multipolar”) உலகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது— அமெரிக்காவுடன் கடுமையான மோதல்கள் வெடித்தன.

பிரான்ஸ் மற்றும் ஜேர்மனிய அதிகாரிகள் ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்பை எதிர்த்த சமயத்தில், அது அமெரிக்காவுடனான உறவுகளை ஒரு வரலாற்று நெருக்கடிக்குள் மூழ்கடித்தது: அமெரிக்காவின் அப்போதைய தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான கொண்டலிசா ரைஸ் “பிரான்ஸை தண்டிப்பதற்கு, ஜேர்மனியை உதாசீனம் செய்வதற்கு, ரஷ்யாவை மன்னிப்பதற்கு” ஆலோசனையளித்தார்.

முக்கியமாய், ஒரு சுதந்திரமான ஐரோப்பிய ஒன்றிய இராணுவக் கொள்கைக்கான இப்போதைய நெருக்குதல், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா இடையிலான ஆழமான பதட்டங்களுக்கு மத்தியில் வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பாக, ஜேர்மனி மற்றும் பிரான்சின் உயர் அதிகாரிகள் அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை காலவரையன்றி நிறுத்தி வைப்பதற்கு அழைப்புவிடுத்தனர். நேற்று, செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதல்களின் 15வது நினைவு தினத்தை ஒட்டி பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் அமெரிக்கப் போர்க் கொள்கை மீது ஒரு வழக்கமில்லாத தாக்குதலைத் தொடுத்தார்.

அவரது முகநூல் பக்கத்தில் அவர் எழுதினார்: “நாட்டிற்குள்ளே இருந்து திட்டமிடப்பட்டு, முறையாக கவனத்துடன் நடத்தப்பட்டிருந்த இந்தத் தாக்குதல்களுக்கு அமெரிக்க நிர்வாகம் அளித்த பதிலிறுப்பானது, பயங்கரவாத அச்சுறுத்தலை அகற்றுவதற்கு எட்டாத்தொலைவில், இன்னும் பெரிய பகுதியில், குறிப்பாக ஈராக்கில், அதைப் பரப்பியது”. பிரான்ஸ் ”நியாயமான விதத்தில் அந்தத் தலையீட்டில் இணைய மறுத்தது, மேலும் அதனைக் கண்டனமும் கூட செய்தது” என்று எழுதிய ஹாலண்ட் தொடர்ந்து எழுதினார்: “அப்படியிருந்தும், அத்தலையீடு உருவாக்கிய குழப்பத்தின் பின்விளைவுகளால் அது பாதிக்கப்பட்டது”.

ஐரோப்பிய ஒன்றியம்-அமெரிக்கா இடையிலான பதட்டங்கள் ஒரு வெடிப்பு காண்கின்ற நிலையில், ஆலோசனையளிக்கப்படும் ஐரோப்பிய ஒன்றிய இராணுவக் கூட்டணியே கூட வெடிப்பான முரண்பாடுகளின் ஊடாகத் தான் முன்தள்ளப்படுகிறது. கடந்த 150 ஆண்டுகளில் மூன்று முறை ஜேர்மனியும் பிரான்சும் பெரிய போர்களில் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டிருக்கின்றன. கண்டமெங்கிலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளை வகுப்பதில் முன்னிலை கொடுக்கின்ற ஐரோப்பாவின் “வேலைவாங்குபவராக” பேர்லின் எழுவதென்பது ஐரோப்பிய ஒன்றிய சக்திகளுக்கு இடையிலான பதட்டங்களை முன்கண்டிராத உயரங்களுக்கு உயர்த்தியிருக்கிறது.

இராணுவ நடவடிக்கை விடயத்தில், ஐரோப்பிய ஒன்றியம் கூட்டாக முடிவெடுக்க முடிகின்ற சாத்தியத்தை Sueddeutsche Zeitung நிராகரித்தது. அது எழுதியது: “இராணுவத் தலையீட்டு விடயத்திலும், வாழ்வா சாவா பிரச்சினைகளிலும், ஜேர்மனி மற்றும் அதன் நாடாளுமன்றம் உள்ளிட அத்தனை ஐரோப்பிய ஒன்றிய அரசுகளுக்குமே தேசிய இறையாண்மை புனிதமானதாய் இருக்கிறது.”

பிரான்ஸ் அதன் இராணுவத்தை —அதிலும் குறிப்பாக, பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய ஐரோப்பிய ஒன்றியத்தில் சட்டபூர்வமாக அறிவிக்கப்பட்ட ஒரே அணுஆயுத படைவரிசையான, அதன் அணுஆயுதப் படைகளை— முழுமையாக ஒப்படைக்குமா என்பது தனக்கு சந்தேகமாய் இருப்பதாக இத்தாலியின் ஓய்வுபெற்ற படைத்தளபதி வின்சென்ஸோ கம்போறினி Defense News இடம் தெரிவித்தார். ஒரு ஐரோப்பிய ஒன்றிய இராணுவத்துக்கு பிரிட்டன் காட்டிய எதிர்ப்பு, ஏனைய ஐரோப்பிய அரசுகளை தயக்கம் கொள்ள வைத்தது என்றார் அவர். “இப்போது அந்த சாக்குபோக்குக்கு இடம் இல்லாமல் போய்விட்டது; முன்னால் செல்ல யார் தயார்? ஜேர்மனி விருப்பத்துடன் இருப்பதாகவே நான் நம்புகிறேன், அணுஆயுதத் தயக்கம் காரணமாக பிரான்ஸ் முன்வருவது குறித்து எனக்கு சந்தேகங்கள் இருக்கின்றன, என்றாலும் அது பகிர்ந்து கொள்ளப்படுமா? அது மிகக் கவனநுட்பமாகக் கையாளப்பட வேண்டிய ஒரு அரசியல் பிரச்சினை ஆகும்” என்றார்.