ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Indian workers need a socialist strategy to oppose pro-investor “reform,” austerity and war

இந்திய தொழிலாளர்கள் போர், சிக்கன நடவடிக்கை மற்றும் முதலீட்டாளர் சார்பு "சீர்திருத்த" கொள்கைகளை எதிர்ப்பதற்கு ஒரு சோசலிச மூலோபாயம் தேவை

By Deepal Jayesekara
1 September 2016

இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் பிரதமர் நரேந்திர மோடியும் அவரது பாரதிய ஜனதா கட்சி (பாஐக) அரசாங்கமும் அமுல்படுத்திவரும் சமூக ரீதியில் கேடுவிளைவிக்கும் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் முதலீட்டாளர் சார்பு "சீர்திருத்தங்களுக்கு" எதிராகக் குரல் எழுப்ப இந்த வெள்ளிக்கிழமை ஒரு நாள் பொது வேலைநிறுத்தத்தில் இணைவார்கள்.

இந்த வேலை நிறுத்தமானது, தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகள் மத்தியில் அதிகரித்து வரும் சமூக சீற்றத்தின் ஒரு தெளிவான அறிகுறியாகும். ஆனால் இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த தொழிற்சங்க கூட்டு குழுவில் (JTUC) உள்ள தொழிற்சங்கங்களின் கூட்டுகள், திட்டமிட்டு வர்க்கப் போராட்டத்தை நசுக்கி வந்துள்ளதோடு இந்தியாவை உலக முதலாளித்துவத்தின் மலிவு-உழைப்புக் களமாக ஆக்குவதற்கான முதலாளத்துவத்தின் முயற்சிகளில் முக்கிய பங்கு வகிக்கும் அரசியல் கட்சிகளுடன் நேரடியாக பிணைந்துள்ளன. இந்த உண்மை, காங்கிரஸ் கட்சியோடு இணைந்த இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரசுக்கு (INTUC) மட்டும் பொருத்தமானது அன்றி, JTUC ஐ வழிநடத்தும் "இடது" தொழிற்சங்கங்கள் என கூறிக்கொள்பவற்றுக்கும் பொருந்தும். ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சி.பி.எம். சார்ந்த இந்திய தொழிற்சங்கங்களின் காங்கிரஸ் (CITU), ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ.) சார்ந்த அனைத்து இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC) ஆகியவையே இந்த “இடது” எனப்படும் தொழிற்சங்கங்களாகும்.

தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் ஸ்ராலினிஸ்டுகளையும் பொறுத்தவரையில், செப்டம்பர் 2 வேலைநிறுத்தமானது ஒரு மோசடித் தந்திரோபாயமாகும். அதாவது, வளர்ந்து வரும் சமூக எதிர்ப்பை கட்டுப்படுத்தி செயலிழக்கச் செய்வதற்கும், பா.ஜ.க. அரசாங்கத்துக்கும் முழு முதலாளித்துவ சமூக ஒழுங்கிற்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கம் அபிவிருத்தி அடைவதை  தடுப்பதற்குமான ஒரு வழிமுறையே ஆகும்.

மோடியும் அவரது இந்து மேலாதிக்கவாத பா.ஜ.க.யும், தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதலை முன்னெடுக்கும் முதலீட்டாளர் சார்பு "சீர்திருத்தத்தை" துரிதப்படுத்துவதற்கும், உலக அரங்கில் தனது சூறையாடும், வல்லரசாகும் அபிலாஷைகளை மேலும் ஆக்ரோஷத்துடன் உறுதிப்படுத்துவதற்கும், 2014 மே மாதத்தில் இந்திய பெரு வர்த்தகர்களால் ஆட்சிக்கு கொண்டுவரப்பட்டது.

மோடி அரசாங்கமானது சுகாதார பராமரிப்புக்கான நிதி மற்றும் தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதம் உட்பட மானியங்களையும் சமூக செலவுகளுக்கான நிதியையும் வெட்டித்தள்ளியது. அது பங்குகள் விற்பதை (அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்கலை) உக்கிரமாக்கியது; பல துறைகளிலும் அந்நிய முதலீட்டின் மீதான கட்டுப்பாடுகளை அகற்றியது அல்லது குறைத்தது; வரிச் சுமையை மேலும் உழைக்கும் மக்கள் மீதே சுமத்தப் பயன்படுத்தப்படும் பிற்போக்கான பொருட்கள் மற்றும் விற்பனை வரியை திணித்தது; மேலும், வேலை வெட்டுக்கள் மற்றும் உழைப்பு தரங்களின் மீதான கட்டுப்பாடுகளை அகற்றுவதற்காக பா.ஜ.க. தலைமையிலான மாநில அரசாங்கங்களுடன்  சதி செய்கின்றது.

அதே சமயம், மோடி, சீனாவுக்கு எதிரான அமெரிக்க போர் உந்துதலில் இந்தியாவை ஒருங்கிணைத்துள்ளார். திங்களன்று, பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர், அமெரிக்க போர் விமானங்களும் போர்க் கப்பல்களுக்கும் இந்திய இராணுவத் தளங்களை நாளாந்தம் அணுகும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

சமூக துருவமுனைப்பும் முதலாளித்துவ ஆட்சியின் தோல்வியும்  

பா.ஜ.க. மற்றும் இந்தியாவின் ஆளும் உயரடுக்கை, "மக்கள் சார்பு" கொள்கைகளை அமுல்படுத்த அழுத்தம் கொடுக்க முடியும் என்ற ஸ்ராலினிச தலைமையிலான தொழிற்சங்க கூட்டுக் குழுவின் கூற்று, ஒரு அப்பட்டமான பொய் ஆகும்.

முதலாளித்துவ ஆட்சியின் கீழ், தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளிகளின் மிக அடிப்படையான ஜனநாயக மற்றும் சமூக அபிலாசைகளைக் கூட பூர்த்தி செய்யவது சாத்தியமற்றது என்பதையே சுதந்திர இந்தியாவின் ஏழு தசாப்த கால முழு வரலாறும் நிரூபித்திருக்கிறது. 1991 வரை, இந்தியாவின் முதலாளித்துவ உயரடுக்கு, அரசு தலைமையிலான, தேசிய முதலாளித்துவ வளர்ச்சி மூலோபாயத்தை பின்பற்றி, அதை சோசலிசம் என பூசி மெழுக முயற்சித்து வந்தது. கடந்த கால் நூற்றாண்டில், உலக முதலாளித்துவத்தின் மலிவு-உழைப்பு வழங்குனராகவும் பின்-அலுவலகமாகவும் இந்தியாவை மாற்றியுள்ள அவர்கள், ஏகாதிபத்தியத்துடனான இந்த நெருக்கமான பங்காண்மை என்ற பிணைப்பில், மேலும் வெளிப்படையாக வாஷிங்டனின் வாடிக்கையாளராகவும் பிராந்திய காவலனாகவும் தலைதூக்கியுள்ளனர்.

முதலாளித்துவத்தின் செல்வம் அதிவேகமாக வளர்ந்துள்ள நிலையில், இந்தியாவின் "எழுச்சியானது" பரந்துபட்ட தொழிலாளர் மற்றும் உழைப்பாளர்களுக்கு சமூக இழப்புக்களையும் பொருளாதார பாதுகாப்பின்மையையும் மட்டுமே அதிகரித்துள்ளது. சீர்திருத்தம் என்று அழைக்கப்படும் 25 ஆண்டுகளுக்கு பின்னர், கிராமப்புற இந்தியாவில் பட்டினி தாண்டவமாடும் அதேவேளை, கோடிக் கணக்கானவர்கள் வேலையின்றியும், தகுதிக்கேற்ற தொழில் அற்றவர்களாகவும் அல்லது ஒரு நிலையான முன்னேற்றத்தைக் காண முடியாத ஒப்பந்தத் தொழிலாளர்களாகவும் உள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக, சீனாவுடனான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மோதலில் ஒரு முன்னிலை அரசாக நாட்டினை இந்திய முதலாளித்துவம் மாற்றியுள்ளதன் காரணமாகவோ, அல்லது, தெற்காசியாவின் பிராந்திய மேலாதிக்க சக்தியாக தன்னை தக்கவைத்துக்கொள்வதற்கான அதன் ஈவிரக்கமற்ற உந்துதலின் காரணமாகவோ இந்தியா இப்போது ஒரு பேரழிவு போரில் மூழ்கும் அபாயத்தில் சிக்கியுள்ளது.

என்ன பெயரில் இருந்தாலும், ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சிகள், பல தசாப்தங்களாக முதலாளித்துவ அரசியல் ஸ்தாபனத்தின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருந்நு வந்துள்ளன. 1991ல் இருந்தே, மத்தியில் ஆட்சிக்கு வந்து ஆளும்  நவ-தாராளவாத "சீர்திருத்த" நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்திய மற்றும் வாஷிங்டனுடனும் வோல் ஸ்ட்ரீட்டுடனும் நெருக்கமான உறவுகளை முன்னெடுத்த அரசாங்கங்களை சி.பி.எம். மற்றும் சி.பி.ஐ. ஆதரித்து வந்துள்ளன. தாம் ஆட்சி செய்த மாநில அரசுகளில், மிக குறிப்பாக மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில், ஸ்ராலினிஸ்டுகள் தாமாகவே வெளிப்படையாக கூறும் "முதலீட்டாளர்-ஆதரவு" கொள்கைகளை நடைமுறைப்படுத்தினர். தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் அதைச் சார்ந்த தொழிற் துறைகளிலும் வேலை நிறுத்தங்களைத் தடை செய்தமை மற்றும் பெருவணிக திட்டங்களுக்காக தமது நிலங்கள் பறிக்கப்படுவதை எதிர்த்த விவசாயிகளை இரத்தக் களரியில் நசுக்கியமையும் இக் கொள்கைகளில் அடங்கும். ஸ்ராலினிஸ்டுகள் பெரும் வணிகர்களுக்கு சேவகம் செய்பவர்கள் என்பதை மிகவும் நேரடியாக அடையாளம் காட்ட முனைந்து, கேரளாவின் புதிய முதலமைச்சரும் சி.பி.எம். அரசியல் குழு உறுப்பினருமான பினராயி விஜயன், "முதலீட்டாளர்கள் இருகரம் நீட்டி வரவேற்கப்படும் …ஒரு புதிய முன்னுதாரணத்தை" அபிவிருத்தி செய்ய வாக்குறுதியளித்தார்.

"வலதுசாரிகளைத் தடுக்க", குறிப்பாக வகுப்புவாத பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்கான ஒரே வழி இதுதான் என்று கூறியே, ஸ்ராலினிஸ்டுகள் சாதி அடிப்படையிலான மற்றும் பிராந்திய கட்சிகளுடன் மீண்டும் மீண்டும் ஏற்படுத்திக்கொண்ட தேர்தல் கூட்டணிகளையும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியதையும் நியாயப்படுத்தினர். உண்மையில், முதலாளித்துவ கட்சிகளுக்கு தொழிலாள வர்க்கத்தை ஸ்ராலினிஸ்டுகள் திட்டமிட்டு அடிபணிய வைத்தமையே, இந்து வலதுசாரிகளை மிகப்பெருமளவில் பலமடையச் செய்து, முதலாளித்துவ "வளர்ச்சி" மூலம் உருவாக்கப்பட்ட குவிந்துவரும் சமூக நெருக்கடி மீதான பரந்துபட்ட கோபத்தை சுரண்டுவதற்காக அதற்கு கதவைத் திறந்து விட்டது. 1984ன் பின்னர், மக்களவையில் (இந்திய நாடாளுமன்றத்தின் கீழவை) பெரும்பான்மையை வென்ற முதல் கட்சியாக பா.ஜ.க. 2014 தேர்தலில் ஆட்சியில் அமர்ந்தது.

இப்போது, தொழில் மற்றும் "அபிவிருத்தி" பற்றிய போலியான தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை சம்பந்தமாக குவிந்துவரும் சீற்றத்தை எதிர்கொண்டுள்ள மோடியும், அவரது பா.ஜ. கட்சியும், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும் மிகவும் பின்தங்கிய மற்றும் பிற்போக்கு சக்திகளை அணிதிரட்டவும் இந்து மத பேரினவாதத்தை தூண்டி விடுகின்றனர். இது மேலும் மேலும் சர்வாதிகார ஆட்சி வழிமுறைகளை நோக்கி செல்கின்றது. அரசியல் எதிரிகள், "தேசவிரோதிகளாக" சித்தரிக்கப்படுவது வழமையாகியுள்ளது, இல்லெயெனில் தேச துரோகிகளாக குற்றம் சாட்டப்படுகின்றனர்.

பெருமந்த நிலைக்கு பின்னாரன உலக முதலாளித்துவத்தின் மிக ஆழமான நெருக்கடிக்கு தொழிலாளர்களையும் உழைப்பாளிகளையும் விலை கொடுக்க வைக்க முதலாளித்துவம் முனைகின்ற நிலையில், இத்தகைய அபிவிருத்திகள், ஜனநாயக வடிவங்களில் பொறிந்து போவதை சுட்டிக்காட்டுகிறது. அதனால், இந்த நெருக்கடிக்கு ஒரு சோசலிச தீர்வுக்காகப் போராட தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீனமான சக்தியாக தலையீடு செய்ய வேண்டியது அவசியமாய் உள்ளது.

ஆயினும், ஸ்ராலினிஸ்டுகளின் பிரதிபலிப்பானது, இந்திய முதலாளித்துவம், அதன் அரசு மற்றும் கட்சிகளுக்கு தொழிலாள வர்க்கத்தை அடிபணிய செய்யும் தங்கள் முயற்சிகளை இரு மடங்காக்குவதாக இருந்து வருகிறது. அவர்கள் மீண்டும் "மதச்சார்பின்மை" மற்றும் "ஜனநாயகத்தை" பாதுகாத்தல் என்ற பெயரில், இந்து வலதுசாரிகளுக்கு அடிபணிந்து சூழ்ச்சி செய்வதில் ஒரு நீண்ட வரலாற்றை கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு பின்னால் தொழிலாள வர்க்கத்தை பிணைத்துவிட முயற்சிக்கின்றனர். முதலாளித்துவத்தின் பாரம்பரிய அரசாங்க கட்சியும் கடந்த 25 ஆண்டுகளில் நவ-தாராளமய சீரமைப்பை முன்னெடுப்பதில் பெரும் பங்காற்றிய மற்றும் இந்திய-அமெரிக்க "பூகோள  மூலோபாயக் கூட்டை" உருவாக்கிய காங்கிரஸ் கட்சியுடன், சி.பி.எம். ஏப்ரல்-மே மாதங்களில் மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தலுக்காக முதன் முறையாக ஒரு தேர்தல் கூட்டணியை அமைத்தது. நவ-தாராளமய சீர்திருத்தத்தையும், அமெரிக்க போர் விமானங்களுக்கு இந்தியா தளம் கொடுப்பதையும் ஆதரிப்பது மட்டுமன்றி, பலமுறை பா.ஜ.க. உடன் கூட்டு வைத்துக்கொண்ட ஜே.டி.(யு), பி.ஜே.டி. மற்றும் தி.மு.க. போன்ற பிராந்திய மற்றும் சாதியக் கட்சிகளை கொண்டு மூன்றாவது அணியை உருவாக்கும் திட்டத்தையும் ஸ்ராலினிஸ்டுகள் தொடர்ந்தும் முன்னிலைப்படுத்துகின்றனர்.

 ஒரு நாள் தேசிய வேலைநிறுத்தத்தை தமது வர்க்க நலன்களை உறுதிப்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாக தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவினர் சந்தேகத்திற்கு இடமின்றி பார்க்கும் அதேசமயம், ஸ்ராலினிஸ்டுகளை பொறுத்தவரையில் அது ஒரு அரசியல் நாடக அரங்கு, தொழிலாள வர்க்கத்தின் மீது தமது அரசியல் கட்டுப்பாட்டை அதிகரிக்க உதவும் ஒரு "இடது" முகத்தை காட்டுவதற்கான ஒரு வழிமுறையாகும். 1991ல் இருந்தே, அவர்கள் காங்கிரஸ் உடன் நடைமுறையில் ஒரு கூட்டணியில் இருந்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங்குடன் அன்றாடம் தொடர்பு கொண்டிருந்த 2004-2008 காலப்பகுதி உட்பட, ஏறத்தாழ ஒவ்வொரு ஆண்டும், சி.பி.எம் மற்றும் சி.பி.ஐ. ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தங்களை நடத்தி வந்தன.

சமீபத்திய ஆண்டுகளில், அவர்கள் "தொழிலாள வர்க்க ஐக்கியம்" என்ற பெயரில், காங்கிஸ்-சார்பு ஐ.என்.டி.யு.சி. மற்றும் தமிழ்நாட்டில் பெரு வணிக தி.மு.க.வின் தொழிற்சங்க பிரிவான தொழிலாளர் முன்னேற்ற முன்னணியினதும் ஆதரவை பட்டியலிட்டனர். உண்மையான வர்க்கப் போராட்டத்துக்கு தங்கள் கடுமையான எதிர்ப்பினை அடிக்கோடிட்டுக் காட்டும் இன்னுமொரு சூழ்ச்சியில், ஸ்ராலினிஸ்டுகள், பா.ஜ.க. சார்பு பாரதிய மஸ்தூர் சங்கம் அல்லது பி.எம்.எஸ். உடைய ஆதரவைக் கூட கேட்டு அழைப்பு  விடுத்தனர்.

ஒரு சோசலிச-சர்வதேசிய மூலோபாயம்

தமது வர்க்க நலன்களை உறுதிபடுத்துவதற்காக, முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிராக மற்றும் தொழிலாளர் ஆட்சிக்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசியல் அணிதிரள்வை அடிப்படையாக கொண்ட சோசலிச-சர்வதேசிய மூலோபாயம் ஒன்றே ஏற்றுக்கொள்ள வேண்டியது இந்தியத் தொழிலாளர்களுக்கு முன்னுள்ள அவசரத் தேவையாகும்.

கடந்த கால் நூற்றாண்டு, தொழிலாள வர்க்கத்தின் எண்ணிக்கையில் மிகப்பெரிய வளர்ச்சியையும் அதன் சமூக சக்தியையும் கண்டது. இந்த வர்க்க வலிமையுடன் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்கான போராட்டத்தில், அனைத்து கிராமப்புற உழைக்கும் மக்களையும் ஒடுக்கப்பட்டவர்களையும் அணிதிரட்ட வேண்டும். அத்தகைய அரசாங்கம், தீர்க்கமான பொருளாதார நெம்புகோலை பொது உடமையாக்கி தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும். அதன் மூலம் உற்பத்தியை ஒரு சிறிய வணிக தட்டின் செல்வத்தை ஊதிப்பெருக்குவதற்காக அன்றி, சமூகத் தேவைகளை பூர்த்திசெய்யும் வகையில் ஒழுங்கமைக்க முடியும். அத்தகைய ஒரு அரசாங்கம் நிலப்பிரபுத்துவம் மற்றும் சாதீய ஒடுக்குமுறை ஒழிக்க தீவிர நடவடிக்கைகளை எடுக்கும். இத்தகைய பணிகள், வரலாற்று ரீதியில் ஜனநாயகப் புரட்சியால் மேற்கொள்ளப்பட வேண்டியவை. எனினும், இந்திய முதலாளித்துவத்தின் நெறி தவறிப் பிறந்த ஆட்சியின் கீழ், இவை பாழடைந்து போயுள்ளதோடு சமூகப் பிற்போக்குத்தனத்திற்கு ஒரு பாதுகாப்பு அரணாக  பயன்படுகின்றன.

செப்டம்பர் 2 வேலை நிறுத்தமானது வர்க்கப் போராட்டத்தின் சர்வதேச மறு எழுச்சியின் ஒரு பகுதியாகும். உலகம் முழுவதும், கடந்த வசந்த காலத்தில் தொழிலாளர் உரிமைகளை ஒழிப்பதற்கு எதிராக பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் நடந்த வேலைநிறுத்தங்கள் முதல், பல தசாப்தங்களாக ஊதிய மற்றும் வேலை வெட்டுகளை சுமத்தும் முதலாளித்துவ ஆதரவு தொழிற்சங்கங்களுக்கு எதிரான அமெரிக்கத் தொழிலாளர்களின் கிளர்ச்சி வரையில், பெருநிறுவன மேல்தட்டை எதிர்ப்பதற்கான ஒரு வழிமுறையை தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர். சிக்கன நடவடிக்கைக்கான முடிவில்லா உந்துதல், தொழிலாளிக்கு எதிராக தொழிலாளியை நிறுத்த பூகோள உற்பத்தியை பயன்படுத்துவது, எங்கே தொழிலாளர் செலவுகள் மற்றும் வரிகள் குறைந்து காணப்படுகிறதோ அங்கே உற்பத்தியை தொடங்குவது ஆகியவற்றை எதிர்ப்பதற்கான ஒரு வழிமுறையை அவர்கள் எதிர்பார்க்கின்றனர். தொழிலாள வர்க்கத்தின் புறநிலை ஐக்கியமானது உலகம் முழுவதும் தொழிலாளர்களின் போராட்டங்களை ஐக்கியப்படுத்துவதில் நனவுபூர்வமான வெளிப்பாட்டை காணவேண்டும். இது யுத்தம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தொழிலாள வர்க்க தலைமையிலான ஒரு உலக இயக்கத்தை கட்டியமைப்பதுடன் இணைக்கப்பட வேண்டும்.

தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாக அடக்குவதற்கான கருவிகளாக தொழிற்சங்கங்கள் மற்றும் ஸ்ராலினிசக் கட்சிகள் உள்ளன. அவற்றை சீர்திருத்தவோ அல்லது இடது பக்கம் தள்ளவோ முடியாது. முதலாளித்துவத்தை எதிர்க்க, தொழிலாளர்கள் போராட்டத்திற்கான புதிய அமைப்புகளை உருவாக்க வேண்டும், வேலைத் தளங்களில் தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுக்களை மற்றும் அனைத்துக்கும் மேலக ஒரு பரந்த புரட்சிகர சோசலிசக் கட்சியைக் கட்டியெழுப்ப வேண்டும்.

அத்தகைய ஒரு கட்சி, தொழிலாள வர்க்கத்தின் ஒரு உலக கட்சியுடன் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக இருக்க வேண்டும். அது, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பெரும் மூலோபாய அனுபவங்களை உள்ளீர்த்துக் கொள்வதை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும், அனைத்துக்கும் மேலே 1917 ரஷ்ய புரட்சி, அதைத் தொடர்ந்து லெனின் உடன் இணைத் தலைவராக இருந்த  லியோன் ட்ரொட்ஸ்கி தலைமையில் ஸ்ராலினிச சீரழிவுக்கு எதிராக மற்றும் உலக சோசலிசப் புரட்சியின் வேலைத்திட்டத்தை பாதுகாக்க முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை கிரகித்துக்கொள்ள வேண்டும். அத்தகையதொரு போராட்டம் சோசலிச புரட்சிக்கான உலகக் கட்சியாக 1938ல் ட்ரொட்ஸ்கியின் தலைமையின் கீழ் நிறுவப்பட்ட நான்காம் அகிலத்தின் மூலமாக முன்னெடுக்கப்படுகிறது. இப்போது நான்காம் அகிலமானது அனைத்துலகக் குழுவினதும் மற்றும் அதன் சர்வதேச வெளியீடான உலக சோசலிச வலைத் தளத்தினதும் (WSWS) தலைமையில் செயல்படுகிறது.

தொழிலாள வர்க்கத்துக்கும் உழைப்பாளிகளுக்கும் ஒரு புதிய சோசலிச பாதையை அமைப்பதற்கான அவசர தேவையை அங்கீகரிக்கும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகள், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) இந்திய பகுதியை கட்டியெழுப்பும் போராட்டத்தில் இணைய வேண்டும். முதல் கட்டமாக, ஒரு உண்மையான புரட்சிகர சோசலிச கட்சியை கட்டியெழுப்புவதற்கு அவசியமான வேலைத்திட்டம் மற்றும் கொள்கைகள் பற்றிய கலந்துரையாடலை தொடங்க அவர்கள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் உலக சோசலிச வலைத் தளத்துடன் தொடர்பு கொள்ள வேண்டும்.

ஆசிரியர் பரிந்துரைக்கும் கட்டுரைகள்:

போர் அபாயத்தை நோக்கிய அதிவேக பாய்ச்சலாக, மோடி இந்தோ-அமெரிக்க கூட்டணியை பலப்படுத்துகிறார்
[10 June 2016]

Indian Stalinists abet US war plans against China
[31 May 2016]