ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

இலங்கை: யுத்தத்தால் அழிவுற்ற கிளிநொச்சியில் தீ விபத்தில் கடைகள் தீக்கிரையாகின

S. Ahilan and Subash Somachandran
24 September 2016

வட இலங்கையில் யுத்தத்தினால் பேரழிவுக்குள்ளான கிளிநொச்சியில் ஏற்பட்ட தீ விபத்தில் 125 கடைகள் எரிந்து சாம்பலாகியுள்ளன. கடந்த 16 அன்று கிளிநொச்சி பொதுச் சந்தைக்குள் அமைந்திருந்த கடைத் தொகுதிக்குள் ஏற்பட்ட இந்த விபத்தில் 90 கடைகள் முற்றாக அழிந்து போனதோடு தீ பரவுவதை தடுப்பதற்காக எஞ்சிய கடைகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. 225 மில்லியன் ரூபா சொத்துக்கள் நாசமாகியுள்ளதாக தெரியவருகின்றது.

கிளிநொச்சியில் எரிந்த கடைகளின் ஒரு பகுதி

பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இனவாத யுத்தம் 2009ல் முடிவுக்கு வந்த பின்னர், பெரும் சிரமங்களுக்கு மத்தியில் சற்றே தலைதூக்கிய இந்த சிறு வியாபாரிகளது குடும்பங்களும் அதில் வேலை செய்தவர்களது குடும்பங்களும் நிர்க்கதிக்குள்ளாகி உள்ளன. இந்த சம்பவம் வடக்கில் பெரும்பாலான மக்களின் அவல நிலையின் ஒரு வெளிப்பாடு மட்டுமே.

இந்த அனர்த்தத்தில் பழக்கடை, ஆபரண பொருட்கள் கடை, புடவைக்கடை நடத்தும் சிறிய வர்த்தகர்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த கடைத் தொகுதிகளில் 22 பழக்கடைகள் அந்த கடை உரிமையாளர்களாலேயே அமைத்துக்கொள்ளப்படவை. சிலர் பெரும்பாடுபட்டு கடைகளுக்குள் இருந்த பொருட்களை கொண்டுவந்து வெளியில் குவித்துக்கொண்ட போதும், குள்ப்பமான நிலையில் நீர்த்தாங்கிகளும் வாகனங்களும் அவற்றுக்குமேல் சென்றதால், அவை விற்பனைக்கு உதவாதவையாகியுள்ளன.

இவர்களில் அநேகர் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் கடன்பட்டே முதலீடு செய்துள்ளனர். சிலர் தங்க நகைகளை அடகுவைத்தும் முதலீடு செய்துள்ளதோடு விற்பனைக்காக தொகையாக பொருள்களை கொள்வனவு செய்யும் கடைகளுக்கும் கடன்பட்டுள்ளனர். அவற்றினை எவ்வாறு திருப்பிச் செலுத்துவது, தங்களின் அன்றாட வாழ்க்கையை ஓட்டுவது எப்படி என்ற ஏக்கத்தில் அவர்கள் கவலையடைந்துள்ளார்கள். தங்களது நிர்க்கதி நிலையை எண்ணி பலர் கதறி அழுதனர்.

அங்கு வந்த அமெரிக்கச்-சார்பு தமிழ் கூட்டமைப்பின் வட மாகாண சபை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், மக்களின் கோபத்தை தணிப்பதன் பேரில், இலட்சக்கணக்கில் சொத்துக்களை இழந்துள்ள பாதிக்கப்பட்டவர்களுக்கு “உடனடியாக 20 ஆயிரம் ரூபா” அற்பத் தொகையை வழங்குவதாகவும் ஒரு மாத்துக்குள் கடைகளை மீண்டும் தற்காலிகமாக கட்டித்தர ஆவன செய்வதாகவும்” வாக்குறுதியளித்தார்.

இந்த விபத்து, நாட்டில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள், தற்போதைய அமெரிக்க-சார்பு சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் மற்றும் அதற்கு முண்டு கொடுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீதுமான ஒரு குற்றப் பத்திரிகையாகும். தமிழ் தேசியக் கூட்டமைப்பே வட மாகாண சபையை ஆளுகின்றது.

பிரதானமாக கிளிநொச்சி நகரை அண்டிய பகுதியில் தீயணைப்பு படையோ அல்லது இயந்திரமோ கிடையாது. கொக்காவில் இராணுவ முகாமில் இருந்து தீயணைப்பு படை வந்து சேரும் போது அனைத்தும் அழிந்து விட்டன. யாழ்ப்பாணத்தில் இருந்து தீயணைப்பு படை வரும்போது நள்ளிரவாகி விட்டது என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறினர். சில ஆண்டுகளுக்கு முன்னர் கிளிநொச்சியில் கடையொன்று தீப்பற்றியது முதலே அங்கு தீயணைப்பு வசதிகள் கோரப்பட்ட போதும் அது அலட்சியம் செய்யப்பட்டுள்ளது.

“கிளிநொச்சி நகரசபையாக இல்லாத படியினால் தனியான தீயணைப்பு சேவையை வைத்திருக்க முடியாது” என சி.வி. விக்னேஸ்வரன் நியாயப்படுத்தியுள்ளார். பின்னர் விரைவில் அங்கு தீயணைப்பு வசதிகளை கட்டியெழுப்புவதாகக் கூறி சமாளித்துக்கொண்டார்.

இன்னொரு பகுதி

கிளிநொச்சி பொதுச் சந்தை இருந்த இடத்தை போர் முடிந்த பின்னரும் இராணுவம் ஆக்கிரமித்துக்கொண்டிருந்ததனால், மீளக் குடியேறிய மக்கள் வர்த்தக நடவடிக்கைகளுக்கு பொருத்தமற்ற அம்பாள் குளம் என்னும் இடத்தில் தமது வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். நீண்ட போராட்டங்களின் பின்னர் பிரதேசத்தை இராணுவம் விடுவித்த போதிலும் வியாபாரிகள் கொட்டில்களிலேயே வியாபாரத்தை நடத்தத் தள்ளப்பட்டனர். ஒவ்வொரு வருடமும் மழை வெள்ளம் கடைகளுக்குள் புகுந்துவிடுவதோடு நெருக்கம் காரணமாக அதிக வெப்பம் மற்றும் சுகாதாரச் சீக்கேடுகளுக்கும் முகம் கொடுப்பதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

மூன்று வருடங்களுக்கு முன்னர் கரைச்சிப் பிரதேசசபையினால் 8 அடி நீளமும் 8 அடி அகலமும் கொண்ட தொடர் அறைகள் தகரம் மற்றும் மரப் பலகைப் போன்ற தீப்பற்றக் கூடிய பொருட்களால் அமைத்துக் கொடுக்கப்பட்டன. வியாபாரிகள் சொந்த செலவில் அவற்றை கடைகளாக்கினார்கள். அப்போது “ஒரு வருடத்திற்குள் நிரந்தரக் கட்டிடம் கட்டித் தரப்படும்” என்றும் பிரதேச சபை வாக்குறுதி கொடுத்திருந்தது.

இந்த வாக்குறுதிக்கு மாறாக, தமிழ் தேசிய கூட்டமைப்பினால் ஆளப்படும் பிரதேச சபை 1,250 ரூபா வரியையும் குப்பை வாளிக்காக 500 ரூபாவையும் அறவிடுகின்றது. காப்புறுதி வசதிகள் கூட செய்யமுடியாத இந்த கொட்டில்களுக்கு, வரிப்பணத்தை உரிய நேரத்தில் செலுத்தாவிட்டால், தண்டப்பணமாக 125 ரூபா மேலதிகமாக செலுத்த வேண்டும்.

புலிகளின் முன்னாள் கோட்டையாக இருந்த கிளிநொச்சி, பெரும் பேரழிவுகளுக்கு மத்தியில் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டது. போரின் கடைசி நாட்களில் பல பத்தாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டும் மற்றும் முடமாக்கப்பட்டதோடு மக்களின் வீடுகளும் உட்கட்டமைப்புகளும் தரைமட்டமாக்கப்பட்டன. இராணுவக் கட்டுப்பாட்டிலான முகாம்களில் பல ஆண்டுகள் அடைக்கப்பட்டிருந்த மக்கள், மீளக் குடியேற்றம் என்ற பெயரில் அடிப்படை வசதிகள் இன்றி அவர்களது கிராமங்களில் கொட்டப்பட்டனர். வடக்கில் இன்னமும் அநேக குடும்பங்கள் அடிப்படை வசதிகள் இன்றியும் வறுமையிலும் குடிசைகளில் வாழத் தள்ளப்பட்டுள்ளன. மக்களுக்கு சொந்தமான பெருந்தொகை காணிகளை இராணுவம் ஆக்கிரமித்துக்கொண்டுள்ளது.

கிளிநொச்சிப் பிரதேசத்தில் பயணிகளுக்கு முறையான பஸ் நிலையமோ அல்லது பஸ் நிறுத்துமிடமோ கிடையாது. பயணிகள் பஸ்களில் ஏறுவதற்காக கொழுத்தும் வெய்யிலில் அல்லது மழையில் காத்திருக்க வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கமும் தற்போதைய அமெரிக்க-சார்பு சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கமும் வடக்கிற்கு முதலீட்டாளர்களையும், சுற்றுலாப் பயணிகளையும் ஈர்ப்பதற்கான உட்கட்டமைப்பு வசதிகளிலேயே அக்கறை காட்டியுள்ளன. அதன் பாகமாக தமிழ் முதலாளித்துவ தட்டுக்களின் நலன்களைப் பாதுகாப்பதன் பேரில் தமிழ் கூட்டமைப்பு இந்த அரசாங்கத்திற்கு முண்டு கொடுத்து வருகின்றது.

உலகப் பொருளாதார பின்னடைவின் பாகமாக ஆழமான பொருளாதார நெருக்கிடியில் மூழ்கியிருக்கும் அரசாங்கம், மக்களுக்கு இன்றியமையாத அடிப்படைத் தேவைகளைக் கட்டியெழுப்புவதற்கு மாறாக, எதிர்காலத்தில் தங்களது உரிமைகளையும் நலன்புரி சேவைகளையும் காக்க போராட்டத்துக்கு வரும் தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்களை நசுக்குவதற்கு அவசியமான அரச எந்திரங்களை பலப்படுத்தி வருகின்றது. அதன் பாகமாக, வடபகுதியில் நீதிமன்ற கட்டிடங்கள், பொலிஸ் நிலையங்கள், சிறைச்சாலைகள், இராணுவ முகாம்களையும் கட்டியெழுப்புவதற்காக கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவிடப்படுகின்றன.

தீ விபத்து பற்றி உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசிய குமாரி, ஒரு பழக்கடை வியாபரி ஆவார். “நான் இரவு வீட்டில் இருந்தபோது கடைகள் எரிவதாக தகவல் வந்தது. நான் அதிர்ச்சியடைந்தேன், எமது வாழ்வாதாரமே அழிந்துவிட்டது. கடன்பட்டே வியாபாரத்தினை நடத்துகின்றேன். ஒரு மாதத்துக்கு முன்னர் எனது நகைகளை 45 ஆயிரம் ரூபாவுக்கு அடகு வைத்து பொருட்கள் வாங்கினேன். நாங்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டோம், அதற்கு கூட எமக்கு எந்த இழப்பீடும் கிடைக்கவில்லை. எனக்கு ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகிவிட்டன. நாங்கள் குடும்பத்தில் 5 பேர் எனது கணவன் கூலித் தொழிலாளி, இந்தக் கடையை நம்பித்தான் எமது வாழ்க்கை இருக்கின்றது. இனி எம்மால் சாப்பிடக் கூட முடியாது. இடப் பிரச்சினை காரணமாக நாங்கள் இரண்டு தடவைகள் எமது கடைகளை களற்றி வேறு வேறு இடங்களுக்கு நகர்த்தினோம்,” என குமாரி புலம்பினார்.

அவர் மேலும் கூறியதாவது: “யுத்த காலத்திலும் எமது கடை நாசமாகியது. எமது 6 லட்சம் ரூபா பெறுமதியான வாகனம் எரிந்தது. ஆனால் அதற்கு கூட எமக்கு எந்தவிதமான நட்ட ஈடும் கிடைக்கவில்லை. யுத்தத்தில் உயிர் பிழைத்தால் போதும் என்று தப்பினாலும் இப்போது வழியற்று நிற்கிறோம். அரசாங்க அதிகாரிகள் அனைத்தையும் பதிவு செய்தார்கள் ஆனால் ஒன்றும் கிடைக்கவில்லை. திங்கட் கிழமைக்குள் கடை போட உதவி செய்வதாக அதிகாரிகள் கூறினார்கள். தந்தால்தான் உண்மை. நாங்கள் வறுமைக்குள் வாழ்கின்றோம் இப்போது எனது காதில் இருக்கும் தோட்டினைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. கடை எரிந்தாலும் கடன் கட்ட வேண்டும். எடுத்த சீட்டுக்கு காசு கட்டவேண்டும். எமது சகல ஆவணங்களும் கடைக்குள் எரிந்துவிட்டன.

“சில புடவை வியாபாரிகள் தமது நட்டத்தினை நினைத்து விரக்திக்கு ஆளாகி தீக்குள்ளே குதிப்பதற்கும் முயற்சி செய்தார்கள். எனது நண்பி ஒருவர் புடவைக் கடை நடத்துகின்றார் சம்பவ தினத்தன்று இரவுதான் 4 இலட்சம் ரூபாவுக்கு புடவை கொண்டுவந்து அவிழ்துக் கூட பார்க்காமல் கடைக்குள் வைத்துப் பூட்டிவிட்டுச் சென்றார். அவ்வளவும் எரிந்து நாசமாகிவிட்டது. அவர் கதறி அழுதுகொண்டிருக்கின்றார்.”

போரின் பின்னர் இரண்டாவது இழப்பை எம்மால் தாங்க முடியாது என இன்னொரு பழக்கடை வியாபாரி சாந்தகுமார் கூறினார். “எனக்கு அரசாங்கம் வீடு கட்டுவதற்கு முன்றேகால் இலட்சம் ரூபாவை தந்தது. வீடு கட்டி முடிப்பதற்கு 13 இலட்சம் முடிந்துள்ளது. மீதி காசு கடன்பட்டுத்தான் ஈடு செய்தோம். வீட்டுக்கடன், தொழிலுக்கான கடன் என கடன் பொறிக்குள்தான் நாங்கள் வாழ்கின்றோம். எமது தொழில் அழிந்துள்ளதால் எவ்வாறு அதை நாங்கள் திருப்பிச் செலுத்த முடியும் என ஏங்குகின்றோம். காணி உறுதிகளைக் கூட வங்கியில்தான் அடைமானமாக வைத்துள்ளோம்,” என அவர் தெரிவித்தார்.

ஆபரண வியாபாரியான கோபி தனக்கு 16 லட்சத்துக்கு மேல் நட்டம் ஏற்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார். “எனது சகல உழைப்பையும் இந்த கடைக்குள் தான் போட்டேன். இப்போது வெறும் கையோடு நிற்கின்றேன். கடையில் வியாபாரம் குறையும் நேரத்தில் நான் மின்சார தொழில் நுட்பவியலாளராக வேலை செய்து வரும் வருமானத்தினையும் கடையில் முதலீடு செய்துள்ளேன். இந்த நகரத்தில் தீயணைப்பு சேவை இல்லாமையே இந்த பேரழிவுக்கு காரணமாகும். அரசாங்கமே இதற்கு பொறுப்பாளி. அதைவிட எமக்கு ஒரு நிரந்தரமான கட்டிடத்தினை பிரதேச சபை கட்டித் தரவில்லை. எம்மிடம் வரி அறவிட மட்டும் அவர்கள் வருகின்றார்கள். இந்த இடம் எமக்கு வியாபாரம் செய்வதற்கு ஒவ்வாத இடமாகும். எமக்கு பொருத்தமான இடம் ஒன்றினை தருமாறு நாங்கள் கூறினோம் அவர்கள் ஒதுக்குப் புறமான இடத்தினை எமக்கு தந்துள்ளார்கள். அதானால் வியாபாரமும் சீராக நடைபெறுவதில்லை. எனது நண்பர் ஒருவரின் கடைக்கு 40 லட்சம் ரூபா பெறுமதியான புடவை வந்திருந்தது. அதுவும் எரிந்துவிட்டது,” என கோபி கூறினார்.

தையற்கடை நடத்தும் சிவகௌரி, “சந்தையில் வியாபாரம் செய்பவர்களில் பெரும்பாலானவர்களின் குடும்பம் பெண் தலமைத்துவக் குடும்பங்களாகும், அவர்கள் பாரிய இழப்பினைச் சந்தித்து வருகின்றனர், என்றார். “நான் வங்கியில் 4 லட்சம் ரூபா கடன்பட்டுள்ளேன். எனது முதலீடுகள் அனைத்தும் அழிந்துவிட்டன. பாதுகாப்பற்ற கடைகள் எனபதால் அடிக்கடி கடைகள் களவு போகின்றன. தீயில் இருந்து ஏனைய கடைகளைப் பாதுகாப்பதற்காக எமது கடைகளை புல்டோசர் கொண்டு இடித்து தள்ளிவிட்டார்கள். அதனால் எனது தையல் இயந்திரங்களும் துணிகளும் நாசமாகிவிட்டன. ஏற்கனவே நட்ட ஈடுகளைத் தராத அரசாங்கம் இதற்குத் தரும் என நம்ப முடியவில்லை. ஒரு இளைஞனின் 60 லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் சேதமடைந்துவிட்டன. சரியான வகையில் நட்ட ஈடு வழங்க வேண்டும். ஒரு நாள் வியாபாரம் இழந்தால் எல்லா வீட்டிலும் பட்டினிதான். இங்கு சிலர் வேறு ஆட்களின் கடைகளை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகின்றனர். அவர்கள் எரிந்த கடைக்கு உரிமைகோரி நஷ்டஈடு பதிய முடியாமல் உள்ளார்கள்,” என அவர் விளக்கினார்.