ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The political roots of the terror attack on New York and Washington

நியூயோர்க் மற்றும் வாஷிங்டன் நகரங்களின் மீதான பயங்கரவாத தாக்குதல்களின் அரசியல் வேர்கள்

By David North and David Walsh
12 September 2001

உலக வர்த்தக மையம் (World Trade Center) மற்றும் பென்டகன் (Pentagon) மீது தொடுக்கப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை எவ்வித ஐயப்பாட்டுக்கும் இடமின்றி உலக சோசலிச வலைத் தளம் கண்டிக்கின்றது. நான்கு வர்த்தக பயணிகள் விமானங்களைக் கடத்தி, அவற்றை பறக்கும் குண்டுகளாக உருமாற்றியதற்குப் பொறுப்பானவர்கள் பரந்த அளவிலான கொலைகளுக்கான குற்றவாளிகளாவர். மனித உயிர்களை அந்த விதத்தில் கண்மூடித்தனமாகவும் ஈவிரக்கமின்றியும் அழித்தொழிப்பதன் மூலம் சமூக ரீதியில் முற்போக்கு பண்பை கொண்ட எதையும் அடைந்துவிடமுடியாது.

இந்த மனிதப் படுகொலை பயங்கரவாத நடவடிக்கைகள், ஒரு மனமுடைந்த அவநம்பிக்கைவாதத்தினதும் மத ரீதியானதும் அதிதீவிர தேசிய குருட்டு நம்பிக்கைவாதத்தினதும் ஒரு நச்சுக் கலவயை வெளிக்காட்டிக் கொண்டுள்ளது. அரசியல் சந்தர்ப்பவாதத்தின் இழிந்த பண்பு இதுவாகும் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அமெரிக்க விரோத பகட்டு வாய்வீச்சு இருந்தபொழுதும், பயங்கரவாத இயக்கங்களின் தாறுமாறான வன்முறை நடவடிக்கைகள், அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் கொள்கையை நகர்த்த நிர்ப்பந்திக்கும் என்ற பிரமையின் அடிப்படையிலேயே, தங்களின் தந்திரோபாயங்களைக் கொணடிருக்கின்றன. இவ்வாறு, இறுதி ஆய்வில் அவை வாஷிங்டனுடன் பேரம் செய்து கொள்ளலாம் என்று நம்பிக்கை கொண்டுள்ளன.

அது எவ்வளவுதான் தன்னை நியாயப்படுத்திக் கொண்டாலும், பயங்கரவாத முறையானது அடிப்படையில் பிற்போக்கானதாகும். ஏகாதிபத்திய இராணுவவாதத்துக்கு எதிரான சக்திமிக்க தாக்குதலைத் தொடுப்பதற்கு அப்பால், இத்தகைய நிகழ்வுகள், அமெரிக்க ஸ்தாபகம் இப்படியான சம்பவங்களைப் பற்றிக் கொண்டு, ஆளும் மேல்தட்டினரின் புவிசார் அரசியல், பொருளாதார நலன்களை தொடரும் வகையில் யுத்தத்தில் இறங்குவதை அவர்கள் நியாயப்படுத்தவும் சட்டபூர்வமாக்கவுமே பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றது. அப்பாவி மக்கள் படுகொலையானது, பொதுமக்களை சினமூட்டி, திசைதெரியாமல் செய்து குழப்புகின்றது. அது சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்கான போராட்டத்தை கீழறுக்கின்றது மற்றும் மத்திய கிழக்கில் இன்றைய நிகழ்வுகளுக்கு பின்புலத்தை அமைத்த வரலாறு மற்றும் அரசியல் அடிப்படையில் அமெரிக்க மக்களை கல்வியூட்டும் அனைத்து முயற்சிகளுக்கும் எதிரானதாகச் செயற்படுகிறது.

இருந்தபொழுதும், செவ்வாய்க்கிழமை நடந்த பயங்கரவாத அட்டூழியம் பற்றிய எமது கண்டனம், அமெரிக்க அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிரான எமது கோட்பாட்டு ரீதியான மற்றும் விட்டுக் கொடுக்காத எதிர்ப்பினை எந்தவிதத்திலும் குறைப்பதாக அர்த்தப்படுத்தாது. நேற்றைய சம்பவங்கள் ஏன் எதற்காக நடந்தது என்று அறிய விரும்பும் எவரும் மத்திய கிழக்கில் ஐக்கிய அமெரிக்க அரசுகளின், குறிப்பாக கடந்த 30 ஆண்டுகளாக அதன் நடவடிக்கைகள் பற்றிய வரலாற்று மற்றும் அரசியல் நிலைச்சான்றுகளை கண்டிப்பாகப் படிக்க வேண்டும். இப்பிராந்தியத்தின் எண்ணெய் வளங்களின் மேல் தனது மேலாதிக்கத்தைப் பெறுவதற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நெஞ்சம் இளகாத இம் முயற்சிகள், ஏனையவற்றுடன் சேர்த்து, பாலஸ்தீனிய மக்களை இஸ்ரேலிய அரசு ஒடுக்குவதற்கு சளையாது ஆதரவு தருவதை இன்றியமையாததாக ஆக்கி உள்ளது. இது அராபிய பரந்த மக்களின் நியாயமான மற்றும் அடக்கி வைக்கமுடியாத ஜனநாயக, தேசிய மற்றும் சமூக அபிலாஷைகளுக்கு எதிராக, ஐக்கிய அமெரிக்க அரசுகளை பலாத்காரமான எதிர்ப்பில் நிறுத்தி உள்ளது.

செவ்வாய்க்கிழமை சம்பவங்களுக்குப் பின்னர், அரசியல்வாதிகள், ஆசிரியத் தலையங்கக் கட்டுரையாளர்கள், செய்தி ஸ்தாபன ஜாம்பவான்கள், உலக வர்த்தக மையம் அழிப்பு ஐக்கிய அமெரிக்க அரசுகள் யுத்தத்தில் உள்ளது என்று அர்த்தப்படுத்துகிறது மற்றும் அதன்படி அது செயல்பட வேண்டும் என்பதை அமெரிக்கர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என மீண்டும் மீண்டும் அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் உண்மை என்ன வென்றால், இரண்டு தசாப்தங்களின் பெரும் பகுதியில் அமெரிக்க அரசாங்கம் ஏதோ ஒரு விதத்தில் மத்திய கிழக்கில் நேரடி யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றது என்பதேயாகும்.

இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளுக்காக பிரம்மாண்டமான வளங்களை உதவியாக வழங்குவதை ஒருபுறம் ஓரம்கட்டி வைத்தாலும், ஐக்கிய அமெரிக்க அரசுகளானது 1983ம் ஆண்டிலிருந்து ஏறக்குறைய தொடர்ச்சியாக ஒன்று அல்லது மற்றொரு மத்திய கிழக்கு நாட்டின் மீது குண்டு போட்டு வந்துள்ளது. அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள்\யுத்தக் கப்பல்கள் லெபனான், லிபியா, ஈராக், ஈரான், சூடான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவற்றைத் தாக்கியுள்ளன. யுத்தம் ஒன்றைப் பிரகடனப்படுத்தாது, ஏறக்குறைய 12 வருடங்களாக ஈராக்கிற்கு எதிராக ஐக்கிய அமெரிக்க அரசுகள் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளது. ஈராக் மீது தினம்தோறும் நடந்து கொண்டிருக்கும் குண்டு வீச்சுகள் அமெரிக்க செய்தி ஊடகங்களில் எப்போவாவதுதான் சொல்லப்படுகின்றன, இது ஒருபொழுதும் 1991 லிருந்து எத்தனை ஈராக்கியர்கள் கொல்லப்பட்டார்கள் என்று உறுதி செய்வதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

இப்படி இந்த இரத்தம் தோய்ந்த வரலாறு இருக்கும் பொழுது, ஐக்கிய அமெரிக்க அரசுகளால் குறிவைத்துத் தாக்கப்பட்டவர்களின் திருப்பித் தாக்குதல் சம்பந்தமாக ஏன் எவராவது அதிசயப்பட வேண்டும்?

இன்று இரத்தத்துக்காக கூச்சலிடும் இதே தொடர்புச் சாதனங்கள், ஐக்கிய அமெரிக்க அரசுகளின் நலன்களுக்கு தடையாகவுள்ளதாக கருதும் எந்த ஒரு நாட்டுக்கோ அல்லது மக்களுக்கோ எதிராக வன்முறையை பாவிப்பதைத் தொடர்ந்து ஆதரித்து வந்துள்ளன. 1999ம் ஆண்டு சேர்பிய மக்களுக்கு எதிரான குண்டு வீச்சுத் தாக்குதல்களின் பொழுது, நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிக்கையின் பத்தியாளரான தோமஸ் ஃபிரைட்மன் (Thomas Friedman) இன் வார்த்தைகளை மீண்டும் நினைவு படுத்துவோம். அவர் சேர்பிய மக்களுக்கு, "பெல்கிராட்டில் வெளிச்சமே இல்லாமல் ஆக்கப்பட வேண்டும்: மின்சார விநியோக வலைச் சட்டங்கள், தண்ணீர்க் குழாய், சாலைகள் மற்றும் யுத்த தொடர்புடைய தொழிற்சாலைகள் ஒவ்வொன்றும் குண்டு போட்டு தகர்க்கப்பட வேண்டும்..... நாம் உங்களது நாட்டை சட்னி போட்டு பின்னுக்குத் தள்ளி விடுவோம். உங்களை 1950 க்கு தள்ளி விட வேண்டுமா? சரி அப்படி எங்களால் 1950 க்கு தள்ளி விட முடியும். உங்களை 1389 க்கு தள்ளிவிட வேண்டுமா? உங்களை எங்களால் 1389 க்கே தள்ளிவிட முடியும்" என்று கூறினார்.

ஐக்கிய அமெரிக்க அரசுகளின் வெளியுறவுக் கொள்கையானது, எரிந்து விழும் மனோபாவம், கொடூரத்தன்மை மற்றும் பொறுப்பின்மை ஆகியவற்றின் கலவையாக இருந்து வந்துள்ளது. உலக ஜனத்திரளின் பெரும்பகுதியின் வெறுப்பை சுவாலை விட்டு எரியச் செய்த ஒரு பாதையில் வாஷிங்டன் நடைபோட்டு வந்துள்ளது. இதன் மூலம் அது இரத்தம் தோய்ந்த பயங்கரவாத நடவடிக்கைகளை செயற்படுத்த வேண்டிய ஆட்களை திரட்டுவதற்கான சூழ்நிலையை உருவாக்கி உள்ளது. அபூர்வமாக நடுவுநிலைமையாக இருந்த சந்தர்ப்பங்களில், வெளியுறவுக் கொள்கை நிபுணர்கள் ஐக்கிய அமெரிக்க அரசுகளின் நடவடிக்கைகள் வெறுப்பையும் வஞ்சம் தீர்க்கும் வெறியையும் தூண்டியுள்ளன என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்கள். பால்கன் யுத்தத்தின் பொழுது, முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் லோரன்ஸ் ஈகெல்பேர்க்கர் கூறியதாவது: "நாம் உலகின் ஏனைய பாகங்களில் வாழும் மக்களுக்கு கல்மனம் படைத்த கூலிப்படைகாரனின் ஒரு கருணையை வழங்கியுள்ளோம். ஒருவர் ஒரு பொத்தானை அழுத்துவார், மக்கள் அங்கு விழுந்து மடிவார்கள். நாம் ஒரு ஏவுகணையின் செலவை விட வேறெதையும் செலுத்த வேண்டியதில்லை... எதிர்வரும் வருடங்களில் இதுவே எஞ்சிய உலகையும் கையாளும் விதத்தில் எம்மைச் சுற்றி வடமிடப்போகின்றது."

இந்த நுண்ணறிவு, அதே ஈகெல்பேர்க்கரை, செவ்வாய் இரவு அன்று உலக வர்த்தக மையம் அழிவுக்கு பதிலடியாக உடனே இதில் சம்பந்தப்பட்டிருக்கக் கூடிய எந்த ஒரு நாட்டின் மீதும் குண்டு போடப்பட வேண்டும் என்று கூறுவதைத் தடுத்து நிறுத்திவிடவில்லை.

செவ்வாய் மாலை அன்று ஜோர்ஜ். டபிள்யு. புஷ் நாட்டிற்கு ஆற்றிய உரை அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் அகந்தை மற்றும் குருட்டுத்தனத்தை சுருக்கமாகக் காட்டியது. "சுதந்திரத்திற்கும் வாய்ப்புகளுக்கும் உலகிலேயே ஒளிமிக்க கலங்கரை விளக்காக” இருப்பதற்கு எவ்வளவோ அப்பால், ஐக்கிய அமெரிக்க அரசுகளானது உலகின் கோடிக்கணக்கானோரால் மனித மற்றும் ஜனநாயக உரிமைகளின் எதிரியாகவும் தங்களின் ஒடுக்குமுறையின் பிரதான ஊற்றுக் காலாகவும் பார்க்கப்படுகின்றது. அமெரிக்க ஆளும் தட்டு, அதன் திமிர் மற்றும் எரிந்து விழும் தன்மை ஆகியவற்றில், பலாத்காரமாய் திருப்பித் தாக்குதலுக்கான அரசியல் சூழ்நிலைகளை உருவாக்காமல் உலகம் முழுவதிலும் தனது பலாத்கார நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்பது போல் செயல்படுகிறது.

செவ்வாய் நடைபெற்ற தாக்குதல்களை அடுத்து உடனடியாக, அமெரிக்க அதிகாரிகளும் செய்தி ஊடகங்களும் ஒசாமா பின் லேடன் தான் பொறுப்பு என்று மீண்டும் ஒருமுறை அறிவித்துள்ளனர். இது சாத்தியமானது, இருந்த போதிலும், அவர்களின் கூற்றுக்கு எப்பொழுதும் போல அவர்கள் ஆதாரத்தை முன்வைக்கவில்லை.

ஆனால் பின் லேடனை குற்றவாளி என்று குற்றம் சுமத்துவது அநேக சிக்கலான கேள்விகளை எழுப்புகின்றது. ஐக்கிய அமெரிக்க அரசுகள் இந்த தனிமனிதனை உலகின் மிகவும் ஆபத்தான பயங்கரவாதியாக அறிவித்துள்ளது, அவரது ஒவ்வொரு நகர்வும் மிக அதிநவீன மற்றும் பரந்த உளவு சாதனங்களின் உதவியுடன் கூர்ந்து கவனிக்கப்படுகிறது என்ற உண்மையை எடுத்துக் கொண்டால், யாரும் கண்டறிய முடியாமல் எப்படி பின் லேடன் அத்தகைய பரந்த தாக்குதலை ஒழுங்கு செய்திருக்க முடியும்? மேலும் 1993ல் தாக்குதலுக்குள்ளான அதே வானளாவிய நியூயோர்க் கட்டிடத்திற்கு எதிரான தாக்குதலை எப்படி ஒழுங்கு செய்திருக்க முடியும்?

அவரது தாக்குதலின் அழிவுகரமான வெற்றியானது, அமெரிக்க அரசாங்கத்தின் நிலைப்பாட்டிலிருந்து பார்க்கையில், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டமானது அமெரிக்க மக்களை பாதுகாப்பதற்கான நேர்மையான முயற்சி என்பதை காட்டிலும், உலகம் முழுவதிலும் அமெரிக்க இராணுவ பலாத்காரத்தினை நியாயப்படுத்துதற்கான கொள்கைப் பிரச்சாரமாக இருக்கப்போகின்றது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

மேலும், பயங்கரவாதியை அமர்த்தியவர்கள் என்று ஐக்கிய அமெரிக்க அரசுகள் குற்றம் சாட்டும் பின் லேடன் மற்றும் தலிபான் முல்லாக்கள் இருவரும், 1980 களில் ஆப்கானிஸ்தானில் சோவியத் ஆதரவு ஆட்சியை எதிர்த்துப் போராட, றேகன்-புஷ் நிர்வாகங்களால் நிதியூட்டப்பட்டவர்கள் மற்றும் ஆயுதம் அளிக்கப்பட்டவர்கள் ஆவர். செவ்வாய்க்கிழமை தாக்குதலில் அவர்கள் சம்பந்தப்பட்டிருந்தார்கள் என்றால், அமெரிக்க வரலாற்றிலேயே அமெரிக்க குடிமக்களுக்கு எதிரான இரத்தம் தோய்ந்த தாக்குதலை நடத்திய அதே சக்திகளை வளர்த்தெடுத்த குற்றவாளிகள், அமெரிக்க CIA யும் அரசியல் ஏற்பாட்டாளர்களும் ஆவர்.

அமெரிக்க இராணுவவாதம் வெளியில் அதிகரிப்பது, உள்நாட்டில் ஜனநாயக உரிமைகளின் மீதான தாக்குதல்களை உக்கிரப்படுத்துதலுடன் தவிர்க்கமுடியாத வகையில் பின்தொடரப்படும். தட்டி எழுப்பப்படும் யுத்த வெறியின் முதலாவது பலியாட்கள் அரபு-அமெரிக்கர்கள் ஆவர். அவர்கள் ஏற்கனவே செய்தி ஊடக வலிப்புக்களின் விளைவாக மரண அச்சுறுத்தல்களுக்கும் ஏனைய வகைப்பட்ட துன்புறுத்தல்களுக்கும் ஆளாகி உள்ளனர்.

யுத்தத்தை பிரகடனப்படுத்துமாறு, குடியரசுக் கட்சியினர் மற்றும் ஜனநாயகக் கட்சியினர் இருவரிடமும் இருந்து வரும் கூக்குரலானது, அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கையின் எதிராளிகள் மீதான கூடிய பொதுவான தாக்குதலை முன் அறிவிக்கிறது. 1991ல் ஈராக் ஆக்கிரமிப்பில் அமெரிக்கத் துருப்புக்களை வழிநடத்திய படைத்தளபதி நோர்மன் சுவார்ஸ்கோப் (Norman Schwarzkopf) பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுவோருக்கு எதிரான யுத்தம் அமெரிக்க எல்லைகளுக்கு வெளியில் போலவே உள்ளேயும் நடத்தப்படும் என்று தொலைக்காட்சியில் அறிவித்தபொழுது, அரசியல் மற்றும் இராணுவ மேல் தட்டினரின் பெரும்பாலோருக்காகப் பேசினார்.

ஆளும் மேல் தட்டினரின் மூலோபாய மற்றும் நிதியியல் நலன்களால் இயக்கப்படுகின்ற ஐக்கிய அமெரிக்க அரசுகளால் பின்பற்றப்பட்ட இந்த கொள்கைகள்தான், செவ்வாய் அன்று கட்டவிழ்த்து விடப்பட்ட பயங்கரத்திற்கான அடித்தளங்களை இட்டன. "இச்செயல்களைச் செய்த பயங்கரவாதிகளுக்கும் அவர்களுக்கு தஞ்சம் அளித்தவர்களுக்கும் இடையில் வித்தியாசம் இல்லாது" செய்வதற்கான ஜனாதிபதியின் அச்சுறுத்தலால் சுட்டிக்காட்டப்படும் --புஷ் நிர்வாகத்தால் இப்பொழுது கருத்தில் கொள்ளப்படும்-- நடவடிக்கைகள் மேலும் அழிவுகளுக்கான அரங்கையே அமைத்துக் கொடுக்கும்.

Notes:

[1] Thomas L. Friedman, “Stop the Music,” New York Times, April 23, 1999.