ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Turkey prepares joint action with US in Syria

சிரியாவில் அமெரிக்கா உடனான கூட்டு நடவடிக்கைக்கு துருக்கி தயாராகிறது

By Bill Van Auken
8 September 2016

இஸ்லாமிய அரசின் (ISIS) சிரிய "தலைநகரமான" ரக்கா மீது அமெரிக்காவுடன் சேர்ந்து தாக்குதல் நடத்த துருக்கி அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் துருக்கிய ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஹாங்ஜோ ஜி20 உச்சி மாநாட்டிலிருந்து திரும்புகையில் எர்டோகன் விமானத்திலேயே இதழாளர்களிடம் இக்கருத்தைத் தெரிவித்தார். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூட்டு நடவடிக்கைக்கு முன்மொழிந்திருப்பதாக சீனாவில் அவர் தெரிவித்திருந்தார்.

“ஒபாமா, குறிப்பாக ரக்கா விவகாரத்தில் [எங்களுடன் சேர்ந்து] ஏதேனும் செய்ய விரும்புகிறார்,” என்று எர்டோகன் தெரிவித்ததாக Hurriyet நாளிதழ் குறிப்பிட்டது. “இதில் எங்களுக்கொன்றும் பிரச்சினை இல்லை என்று அவருக்கு தெரிவித்துள்ளோம்.” இரு தரப்பின் உயர்மட்ட இராணுவ தளபதிகள் சந்திக்க வேண்டும், “பின்னர் எது அவசியமோ அது செய்யப்படும்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர், "யூப்ரரேடஸ் முற்றுகை நடவடிக்கை" (Operation Euphrates Shield) என்ற ஒன்றை தொடங்கிய துருக்கி, ISIS நிலைகள், சிரிய குர்திஷ் ஜனநாயகக் யூனியன் கட்சியின் (PYD) சிரிய குர்திஷ் பிரிவினைவாதிகள் மற்றும் அதன் ஆயுதமேந்திய பிரிவான மக்கள் பாதுகாப்பு பிரிவு (YPG) இரண்டையும் தாக்குவதற்கு அது எல்லையைக் கடந்து துருப்புகள் மற்றும் டாங்கிகளை அனுப்பியது. இந்த குர்திஷ் படைகள் ISIS க்கு எதிரான தரைப்படை நடவடிக்கைகளில் பெண்டகனின் பிரதான பினாமிப் படைகளாக பயன்படுத்தப்பட்டு வருவதுடன், சிரிய மண்ணில் உள்ள அமெரிக்க சிறப்பு நடவடிக்கை பிரிவுகளிடம் இருந்து ஆயுதங்கள், நிதியுதவிகள், பயிற்சிகள் மற்றும் ஒத்துழைப்பைப் பெற்று வருகின்றன.

துருக்கி ISIS ஐ தாக்குவதற்காக மட்டுமின்றி அமெரிக்க ஆதரவுடன் ISIS வசமிருந்து பிடுங்கிய பகுதிகளில் உள்ள குர்திஷ் படைகளை விரட்டுவதற்காகவும், சுன்னி துருக்கியர்கள் மற்றும் அரேபிய இஸ்லாமிய போராளிகள் குழுக்களை உள்ளடக்கிய அதன் சொந்த "கிளர்ச்சியாளர்களை" ஆதரிக்கிறது. இந்த தலையீட்டின் ஆரம்பத்திலிருந்தே குர்திஷ் படைகள்தான் துருக்கியின் பிரதான இலக்காக இருந்தன என்பது வெளிப்படையாக இருந்துள்ளது. YPG இன் தொடர்ச்சியான இராணுவ வெற்றிகள் அதன் எல்லையில் ஒரு குர்திஷ் சுயாட்சி பிரதேசத்தை ஏற்படுத்தி விடுமோ என்றும், சிரிய குர்திஷ் இயக்கத்துடன் அரசியல்ரீதியில் அணிசேர்ந்துள்ளதும் மற்றும் துருக்கிக்கு உள்ளேயே கூட இருக்கக்கூடிய குர்திஷ் பிரிவினைவாத இயக்கத்தை (PKK) ஊக்குவித்துவிடுமோ என்றும் அங்காரா அஞ்சுகிறது.

துருக்கியின் துணை பிரதம மந்திரி Nurettin Canikli ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில், ISIS மற்றும் குர்திஷ் போராளிகளைச் சேர்த்து ஒட்டுமொத்தமாக இதுவரையில் 110 பேர் துருக்கிய படைகளால் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவித்தார். செவ்வாயன்று ISIS இன் ராக்கெட் தாக்குதலில் மூன்று துருக்கிய சிப்பாய்கள் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன, இத்துடன் YPG உடனான மோதல்களில் நடந்த தாக்குதலின் தொடக்கத்திலேயே மற்றொருவரும் கொல்லப்பட்டார்.

எல்லை பகுதியைப் கைப்பற்றியதும், துருக்கிய படைகள் மேற்கொண்டு சிரியாவிற்குள் நுழையும் என்பதையும் அந்த துருக்கிய அதிகாரி சேர்த்துக் கொண்டார்.

இதற்குத்தான் துருக்கி தயாரிப்பு செய்து வருவதாக தெரிகிறது. வடகிழக்கில் 180 கிலோமீட்டர் தூரத்தில் ரக்காவிற்குச் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதும், ISIS வசமிருப்பதுமான அல்-பாப் நகரின் இலக்குகளை துருக்கிய போர்விமானங்கள் தாக்கியதாக சிரிய ஆதாரங்கள் புதனன்று தெரிவித்தன.

அல்-பாப் மீது கட்டுப்பாட்டை பெறுவதற்கான போர், குறிப்பாக ISIS க்கு அப்பாற்பட்டு அதில் சம்பந்தப்பட்டுள்ள பல்வேறு எதிர்விரோதிகளுக்கு இரந்தந்தோய்ந்ததாக நிரூபிக்கும். துருக்கிய படைகள் மற்றும் துருக்கிய ஆதரவிலான இஸ்லாமிய போராளிகள் குழுக்கள் மேற்கிலிருந்து அந்நகரை நோக்கி முன்னேறி வருகின்றன, ரஷ்ய ஆதரவிலான சிரிய இராணுவம் தெற்கிலிருந்து தாக்கும் தொலைவில் உள்ளது மற்றும் அமெரிக்க ஆதரவிலான குர்திஷ் படைகள் வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து அணுகு வருகின்றன. துருக்கியின் பிரதான நோக்கம், அல்-பாப் ஐ குர்திஷ் போராளிகள் குழுக்கள் கைப்பற்றுவதிலிருந்து தடுப்பதற்காக என்று தெரிகிறது. அவை அதை கைப்பற்றினால் அது வடமேற்கில் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியோடு வட-கிழக்கு சிரியாவில் உள்ள அவர்களின் பிரதான நிலப்பகுதியை இணைக்க அவர்களை அனுமதிக்கும்.

துருக்கிய அதிகாரிகள் ஏற்கனவே சமீபத்திய ஊடுருவலில் இருந்து, "உள்ளது உள்ளவாறே ஒரு பாதுகாப்பு மண்டலத்தை" உருவாக்க பேசி வருகின்றனர், இது கிழக்கு மற்றும் மேற்கு எல்லை பகுதியில் சிரிய குர்திஷ் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளைத் துண்டாடி, சிரிய பிராந்தியத்தின் ஒரு சிறிய பகுதியை துருக்கி கூடுதலாகவோ குறைவாகவோ நிரந்தரமாக ஆக்கிரமித்து விட்டுவிடும்.

YPG இன் ஒரு செய்தி தொடர்பாளர் கூறுகையில், துருக்கிய தாக்குதலுக்கு எதிராக தங்கள் பாதுகாப்பில் நிற்கும் நிலைப்பாட்டை எடுக்குமாறு அமெரிக்க படைகளை அக்குழு கேட்டுக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். “அம்முடிவு வாஷிங்டனில் எடுக்கப்படும் என்று அவர்கள் பதிலளித்திருப்பதாகவும்" அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையே ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் புதனன்று வெளியிட்ட ஒரு அறிக்கை, சிரியாவிற்குள் துருக்கியின் தாக்குதல் குறித்து கவலை வெளியிட்டுள்ளது. “இது சிரிய அரபு குடியரசின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டின் மீது கேள்வி எழுப்புகிறது,” என்று குறிப்பிட்ட அந்த அறிக்கை, “சிரியாவில் இன்னும் மேற்கொண்டு நிலைமையை ஸ்திரமின்மைக்கு உட்படுத்தும் எந்தவொரு நடவடிக்கைகளில் இருந்தும் பின்வாங்குமாறு நாங்கள் அங்காராவிற்கு அழைப்புவிடுக்கிறோம்,” என்று தொடர்ந்து குறிப்பிட்டது. துருக்கியின் நடவடிக்கை சிரிய அரசாங்கத்தின் அனுமதியோ அல்லது ஐக்கிய நாடுகளின் ஒப்புதலோ இல்லாமல் தொடங்கப்பட்டிருப்பதை அது சுட்டிக்காட்டியது.

பரவலாக வாஷிங்டன் ஆதரவுடன் நடத்தப்பட்டதாக பார்க்கப்பட்டதும், கருவிலேயே கலைக்கப்பட்டதுமான ஜூலை 15 ஆட்சிக்கவிழ்ப்பு சதியை அடுத்து, கடந்த மாதம் துருக்கி மாஸ்கோ உடன் உறவுகளைப் புதுப்பித்தது. அதன் சிரிய நடவடிக்கையை தொடங்க அங்காராவின் கரங்களைச் சுதந்திரப்படுத்துவதில், பதட்டங்கள் தணிந்தமை ஒரு முக்கிய பாத்திரம் வகித்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாத சம்பவம் ஒன்றில் துருக்கிய போர் விமானங்கள் எல்லை பகுதியில் ஒரு ரஷ்ய போர்விமானத்தை வழி மறித்து சுட்டு வீழ்த்திய சம்பவத்திற்குப் பின்னர் அவற்றிற்கு இடையிலான உறவுகள் முறிந்து போனதுடன், அமெரிக்க தலைமையிலான நேட்டோ கூட்டணியில் ஒரு அங்கத்துவ நாடான துருக்கிக்கும் ரஷ்யாவிற்கும் இடையே ஒரு பிரதான ஆயுதந்தாங்கிய மோதலின் அச்சுறுத்தல் கூர்மையாக அதிகரித்தது.

எர்டோகன் அரசாங்கம் இப்போது வாஷிங்டன் மற்றும் மாஸ்கோவிற்கு இடையே கையாளுவதன் மூலம் அதன் சொந்த நலன்களைப் பின்தொடர முற்படுவதாக தெரிகிறது, பயங்கரவாதத்திற்கு எதிரான ஒரு பொதுவான போராட்டம் என்ற மூடுமறைப்பின் கீழ், இதன் மூலோபாய நோக்கங்கள் சிரியாவிற்கு நேரெதிராக உள்ளன.

வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி மற்றும் ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரொவ் வியாழன் மற்றும் வெள்ளியன்று ஜெனிவாவில் சந்திக்க இருப்பதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. வாஷிங்டன் உடனடியாக ஒரு போர்நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த கோரியுள்ளது, அதுவும் குறிப்பாக அலெப்போ பகுதியில், அங்கே நடத்தப்பட்ட அரசு தாக்குதல் ஒன்று சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான ஐந்தாண்டு கால போரில் வாஷிங்டனும் அதன் கூட்டாளிகளும் ஆதரித்து வந்துள்ள அல் கொய்தா தொடர்புபட்ட போராளிகள் குழுக்கள் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.

“எங்களது அடிப்படை நோக்கங்களைப் பூர்த்தி செய்யாத ஒரு உடன்படிக்கையை நாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை,” என்று அமெரிக்க துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பென்ஜமின் ரோட்ஸ் லாவோஸில் ஜனாதிபதி ஒபாமா இறங்கியபோது செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார்.

சவூதி முடியாட்சியால் ஒன்றுதிரட்டப்பட்டுள்ள பல்வேறு சக்திகளுடனும் மற்றும் அவற்றின் உளவுத்துறையுடனும் அணிசேர்ந்துள்ள சிரியாவிற்கு வெளியிலிருக்கும் அரசியல்வாதிகள் மற்றும் இஸ்லாமிய போராளிகள் குழுக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு முன்னணியான, உயர்மட்ட பேச்சுவார்த்தை குழு வெளியிட்ட 25 பக்க "மாற்று திட்டத்தில்" இந்த "நோக்கங்கள்" புதனன்று அறிவிக்கப்பட்டன. அது ஆறு மாதங்களுக்குள் "பஷர் அல் அசாத் மற்றும் அவர் பரிவாரங்களை" வெளியேற்றவும் மற்றும் 18 மாதங்களுக்கு அந்நாட்டை ஆட்சி செய்து தேர்தல்களுக்கு இட்டுச் செல்லும் ஒரு "இடைமருவு நிர்வாக அமைப்பை" நிறுவுவதற்கும் கோருகிறது.

அத்தகையவொரு அமைப்பு எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் என்பது குறிப்பிடப்படவில்லை, ஆனால் வெளிப்படையான நோக்கம் வாஷிங்டன் மற்றும் அதன் கூட்டாளிகளுடன் அணி சேர்ந்த ஓர் ஆட்சியை டமாஸ்கஸில் நிறுவுவதாகும், அதன் மூலமாக எண்ணெய் வளமிக்க மத்திய கிழக்கு மீது மேலாதிக்கத்தை அதிகரிக்கும் மற்றும், ரஷ்யா மற்றும் சீனாவை மேலதிகமாக தனிமைப்படுத்தும் அமெரிக்க நோக்கங்களை எட்டுவதாகும்.

இத்தகைய நோக்கங்களை வலியுறுத்துவதானது, சிரிய மண்ணில் அமெரிக்க ஆதரவிலான படைகள் அதிகரித்தளவில் பலவீனப்பட்டு வருவதுடனும் மற்றும் நேட்டோ அங்கத்துவ நாடான துருக்கியின் புதிய ஆக்ரோஷமான தலையீடு மிகவும் கொந்தளிப்பான சூழலை உருவாக்கி வருவதுடனும் சேர்ந்துள்ளது, இதில் உலகின் முன்னணி அணுஆயுத சக்திகளான அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு இடையே ஒரு நேரடி மோதல் குறித்த அச்சுறுத்தலும் அதிகரித்து வருகிறது.