ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The political significance of the campaign for an active boycott of the Brexit referendum

பிரிட்டன் வெளியேறுவதற்கான வெகுஜன வாக்கெடுப்பைச் செயலூக்கத்துடன் புறக்கணிக்கும் பிரச்சாரத்தின் அரசியல் முக்கியத்துவம்

By Chris Marsden
18 April 2016

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டனின் அங்கத்துவம் மீதான ஜூன் 23 வெகுஜன வாக்கெடுப்பு பிரச்சாரம் வெள்ளியன்று ஆரம்பிக்கப்பட்டதற்கு பின்னர் உத்தியோகபூர்வமாக நடந்து வருகிறது. பிரிட்டன் சோசலிச சமத்துவக் கட்சி (SEP), இந்த உத்தியோகபூர்வ இரண்டு முகாம்களது பிற்போக்குத்தனமான தேசியவாதத்தை எதிர்த்து அந்த வெகுஜன வாக்கெடுப்பைச் செயலூக்கத்துடன் புறக்கணிக்குமாறு அழைப்பு விடுக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடித்திருக்க வேண்டும் என்ற ஐரோப்பிய ஒன்றிய பாதுகாவலர்களையும் சரி மற்றும் பிரிட்டன் வெளியேற வேண்டும் என்ற தேசவெறிக்கு வக்காலத்து வாங்குபவர்களையும் சரி இந்த இருதரப்பு உத்தியோகபூர்வ பிரச்சாரங்களையும் நிராகரிக்குமாறு நாம் வலியுறுத்துகிறோம்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டுமா அல்லது பழமைவாத பிரதம மந்திரி டேவிட் கேமரூன் பேரம்பேசும் பிற்போக்குத்தனமான விட்டுக்கொடுப்புகளின் அடிப்படையில் அதில் நீடித்திருக்க வேண்டுமா என்பதில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்குமாறு பிரிட்டன் வாக்காளர்களிடம் கேட்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் புலம்பெயர்ந்தவர்களுக்குக் கிடைக்கும் வேலையிட நல சலுகைகளில் ஒரு "அவசரகால நிறுத்தம்", ஐரோப்பிய ஒன்றிய புலம்பெயர்ந்தோருக்கான குழந்தை வளர்ப்பு சலுகைகள் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் இலண்டன் நகரைப் பாதிக்கும் நிதியியல் நெறிமுறைகளைத் தற்காலிகமாக இங்கிலாந்து நீக்கிக் கொள்வதற்கான உரிமை ஆகியவை இந்த விட்டுக்கொடுப்புகளில் உள்ளடங்கும்.

ஒட்டுமொத்த பிரிட்டிஷ் அரசியல் ஸ்தாபகமும் முடுக்கிவிட்டு வரும் சிக்கனத் திட்டம் மற்றும் தேசிய பகைமைகளுக்கு எதிராக உழைக்கும் மக்கள் அவர்களது எதிர்ப்பைப் பதிவு செய்வதற்கு இந்த வெகுஜன வாக்கெடுப்பில் எந்த இயங்குமுறையும் கிடையாது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடித்திருக்கலாம் என்று வாக்களிப்பதானது, சிக்கனத் திட்டங்கள், இராணுவவாதம் மற்றும் போருக்குக் கட்டளையிடும் ஓர் ஏகாதிபத்திய அணியான ஐரோப்பிய ஒன்றியத்தையும் மற்றும் கேமரூன் அரசாங்கத்தின் வெளிநாட்டவர் விரோத, வணிக-ஆதரவிலான நிகழ்ச்சிநிரலையும் ஆமோதிப்பதாக இருக்கும். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறலாம் என்று வாக்களிப்பதானது, கேமரூனின் எதிர்பாளர்களான வலதுசாரி டோரி கட்சி மற்றும் இங்கிலாந்து சுதந்திரக் கட்சியை (UKIP) ஆதரிப்பதை அர்த்தப்படுத்தும். இவர்கள், புலம்பெயர்ந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கேமரூன் பெற்றுள்ள முறைமைகள் போதுமானளவிற்கு இல்லையென வாதிடுகிறார்கள். இலண்டன் நகரம் நிதியியல் ஒட்டுண்ணித்தனத்தின் ஓர் உலகளாவிய மையமாக செயல்படுவதற்கான தகைமையை ஐரோப்பிய ஒன்றிய சட்டங்கள் குறுக்காக வெட்டுகின்றன மற்றும் உழைக்கும் மக்களைச் சுரண்டுவதை முன்னெடுப்பதில் இருந்து அவை இங்கிலாந்து வணிகங்களைத் தடுக்கின்றன என்பதே இத்தகைய சக்திகளது நிலைப்பாடாகும்.

இந்த வாக்கெடுப்பின் முடிவு ஐரோப்பிய ஒன்றியத்திலேயே இருக்கலாம் என்றிருந்தாலும் சரி அல்லது வெளியேறலாம் என்றிருந்தாலும் சரி, தீவிரமடைந்துவரும் தேசிய பதட்டங்களுடன் சேர்ந்து முதலாளித்துவ அரசியல் இன்னும் அதிகமாக வலதிற்கு மாற்றப்படும். ஐரோப்பா எங்கிலும் ஆளும் வர்க்கங்களால் தேசியவாதம் மற்றும் இராணுவவாதம் பரப்பப்படுவதுடன், அணுஆயுதமேந்திய சக்திகளுக்கு இடையே போர் அபாயம் அதிகரித்து வரும் நிலையில், தொழிலாள வர்க்கம் ஒரு புரட்சிகர சோசலிச மற்றும் சர்வதேச முன்னோக்குடன் வரவிருக்கும் போராட்டங்களுக்கு ஆயுதபாணியாக சோசலிச சமத்துவக் கட்சி ஒரு செயலூக்கத்துடனான புறக்கணிப்பை முன்மொழிகிறது.

கடந்த வாரம், தொழிற் கட்சி தலைவர் ஜெர்மி கோர்பின் தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கேற்ப ஐரோப்பிய ஒன்றியத்தைச் சீர்திருத்தலாம் என்று கூறி, ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடித்திருக்கும் முகாமை ஆதரிப்பதை அவரே உறுதிப்படுத்தினார். கேமரூன் அரசாங்கம் பரவலாக நிந்திக்கப்படுகிற நிலைமைகளின் கீழ் மற்றும் ஐரோப்பா உள்ளார்ந்து பிளவுபட்டிருக்கின்ற நிலைமைகளின் கீழ், ஒரு சாத்தியமான பிரிட்டன் வெளியேற்றத்தால் பிரிட்டிஷ் முதலாளித்துவத்தின் நலன்களுக்கு முன்னிறுத்தப்படும் அச்சுறுத்தலில் இருந்து அதை மீட்பதற்கான ஒரு முயற்சியாகவே அவர் ஐரோப்பிய ஒன்றியத்தை ஆமோதிக்கிறார்.

கோர்பின் உரை நிகழ்த்திய அடுத்த நாள் வெளியான அறிவிப்பால் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற்போக்குத்தன குணாம்சம் எடுத்துக்காட்டப்பட்டது, ஐரோப்பிய ஒன்றியத்திலேயே நீடித்திருக்கும் பிரச்சாரத்திற்கு அமெரிக்காவின் ஒருமைப்பாட்டை காட்ட ஜனாதிபதி பராக் ஒபாமா இங்கிலாந்திற்கு விஜயம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டது. இந்த உயர்-மட்ட ஆமோதிப்பானது, ஐரோப்பிய ஒன்றியம் நேட்டோவிற்குள் ஓர் இராணுவ பாதுகாப்பு அரணாக இன்றியமையா செயல்பாட்டைக் கொண்டிருப்பதையும், அத்துடன் ஐரோப்பிய சக்திகள் தற்போது சிரியாவில் குண்டுவீச்சு நடவடிக்கைகளில் மட்டும் ஈடுபட்டிருக்கவில்லை, மாறாக ரஷ்யாவின் எல்லையோரம் உள்ள எல்லா நாடுகள் மற்றும் சர்வதேச கடல்எல்லைகளிலும் இராணுவ உபாயங்களில் ஈடுபட்டிருப்பதையும் சுட்டிக்காட்டுகிறது.

போர் நடத்துவதற்கு பக்கவாட்டில், கடுமையான சிக்கனத் திட்டங்களைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவது மற்றும் ஐரோப்பிய அரணின் எல்லைகளைப் காவலுக்கு உட்படுத்துவது ஆகியவையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டு பிரதான முன்னீடுபாடுகளாக உள்ளன. கிரீஸிற்குக் கடன்வழங்குபவர்கள், 5 பில்லியன் யூரோ வரி உயர்வு பொதி மற்றும் ஏற்கனவே பேரம்பேசப்பட்டு வரும் செலவின வெட்டுக்களுக்குக் கூடுதலாக 3 பில்லியன் யூரோ வெட்டுக்களை பரிசீலித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கிரீஸின் சிரிசா அரசாங்கம், இம்மாதம், புரூசெல்ஸ் மற்றும் அங்காராவிற்கு இடையே கையெழுத்தான மார்ச் உடன்படிக்கையின் கீழ் நூற்றுக் கணக்கான புலம்பெயர்ந்தவர்களை துருக்கிக்கு அனுப்ப தொடங்கியுள்ளது. போர்க்கப்பல்கள் ஏகியன் கடலில் ரோந்து வருகின்ற நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஃப்ரென்டெக்ஸ் (Frontex) படைகளால் பாதுகாக்கப்பட்ட காவல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள ஆயிரக் கணக்கானவர்களும் கூடுதலாக வெளியேற்றப்பட உள்ளார்கள்.

உழைக்கும் மக்களும் இளைஞர்களும் ஐரோப்பிய ஒன்றியத்திலேயே நீடித்திருக்கலாம் என்பதற்கு எதிராக வெளியேறலாம் பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்க முடியாது. கிரேக்க தொழிலாள வர்க்கத்தின் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய சிக்கனத் திட்டத்தால் பாதிக்கப்பட்ட ஏனையவர்களின் எல்லை கடந்த ஐக்கியத்திற்கான முறையீடுகள் மற்றும் வேலைநிறுத்தங்கள் உள்ளடங்கிய, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான ஒரு பாரிய தொழிலாள வர்க்க இயக்க நிலைமைகளின் கீழ் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்காக வாக்களித்தால் அதுவொரு முதலாளித்துவ-எதிர்ப்பு குணாம்சத்தைக் கொண்டிருக்கும். ஆனால் தற்போதைய நிலைமைகளின் கீழ், வெளியேறுவதற்கான வாக்கு என்பது பிரிட்டிஷ் அரசியலில் மிகவும் அப்பட்டமான பிற்போக்குத்தன சக்திகளை மட்டுமே ஊக்குவிக்கும்.

வெளியேறுவதற்கான வாக்களிப்பளிப்பானது, ஐரோப்பிய சக்திகளுக்கு இடையே அதிகரித்துவரும் தேசிய விரோதங்களிள் அழுத்தத்தின் கீழ் ஐரோப்பிய ஒன்றியத்தின் உடைவை தீவிரப்படுத்தி, அக்கண்டம் முழுவதிலும் தீவிர-வலது சக்திகளை மேலுயர்த்தும். ஐரோப்பிய ஒன்றியத்திற்கான வெகுஜன எதிர்ப்பைச் சாதகமாக்கி, ஒரு தேசியவாத, புலம்பெயர்ந்தோர் விரோத திசையில் திருப்ப விரும்பும் பல கட்சிகளில் பிரான்சில் உள்ள நவ-பாசிசவாத தேசிய முன்னணியும் ஒன்றாகும் —"பிரான்ஸை வெளியேற்றும் அம்மையாராக" (“Madame Frexit.”) தன்னைத்தானே மரீன் லு பென் சித்தரித்துக் கொள்வதிலிருந்து இது மிகச் சிறப்பாக எடுத்துக்காட்டப்படுகிறது.

ஒரு இறையாண்மை பிரிட்டிஷ் அரசை முற்போக்கானதாக, சிக்கன-விரோத கொள்கைகளின் அடித்தளத்தில் சித்தரிக்கும் "இடது" தேசியவாதத்தின் அடித்தளத்தில் அமைந்த வெளியேறுவற்கான பிரச்சாரத்துடன் தங்களைத்தாங்களே அணிசேர்த்துக் கொண்டவர்களைத்தான், தொழிலாள வர்க்கம் மிகப்பெரிய அபாயமாக முகங்கொடுக்கிறது. இவர்கள் யாரென்றால், சிரிசா தேர்ந்தெடுக்கப்பட்டதையும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சீர்திருத்துவதற்கான அதன் முன்னோக்கையும் பாராட்டிய மற்றும் சிரிசா அரசாங்கம் முன்பினும் அதிக கடுமையான சிக்கன நடவடிக்கைகளை எடுத்ததை மூடிமறைத்த அதே சக்திகள்தான். இப்போது அவர்கள் அதிதீவிர வலதுசாரி கட்சிகளுடனான ஓர் அரசியல் கூட்டணியை மூடிமறைப்பதற்கான ஓர் இற்றுப்போன சாக்குபோக்காக "இடது வெளியேற்றத்திற்கு" (Lexit) அழைப்புவிடுக்கிறார்கள்.

இரண்டு தேசியவாத முகாம்களையும் நிராகரிக்க வலியுறுத்துவதன் மூலமாக, சோசலிச சமத்துவக் கட்சி (SEP) பிரிட்டனிலும் மற்றும் ஐரோப்பா எங்கிலும் பெருந்திரளான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே அதிகரித்துவரும் வெடிப்பார்ந்த சமூக அதிருப்தியை நோக்கி அதன் கொள்கைகளை நிலைநிறுத்துவதுடன், ஒரு புரட்சிகர சோசலிச முன்னோக்குடன் இந்த அதிருப்தியை ஆயுதபாணியாக்க போராடுகிறது.

சிக்கனத் திட்டங்கள், இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிராக போராட ஐரோப்பா எங்கிலும் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே ஆர்வம் அதிகரித்து வருகிறது என்பதை பிரான்சில் பிரான்சுவா ஹோலாண்ட் இன் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்திற்கு எதிரான பாரிய போராட்டங்கள் எடுத்துக்காட்டுகின்றன. ஆனால் இது சுயாதீனமான அரசியல் வெளிப்பாட்டைக் காண வேண்டும்.

செயலூக்கத்துடன் புறக்கணிப்பதற்கு சோசலிச சமத்துவக் கட்சியின் அழைப்பு, இங்கிலாந்தில் கேமரூன் அரசாங்கத்திற்கு உழைக்கும் மக்களின் எதிர்ப்பை அக்கண்டம் முழுவதிலுமான தொழிலாள வர்க்கத்தின் எழுச்சிபெற்றுவரும் இயக்கத்துடன் இணைப்பதற்கான வழிவகையை வழங்குகிறது. இது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதில் அங்கம் வகிக்கும் அரசாங்கங்களுக்கு எதிரான ஒரு உண்மையான சோசலிச மற்றும் சர்வதேச இயக்க போராட்டத்தை முன்னெடுப்பதற்கு அவசியப்படும் தலைமையாக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை (ICFI) மற்றும் பிரிட்டனில் சோசலிச சமத்துவக் கட்சியைக் கட்டமைப்பதற்கான போராட்டத்தை முன்னுக்குக் கொண்டு வருகிறது.

கட்டுரையாளர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:

Brexit சர்வஜன வாக்கெடுப்பை செயலூக்கத்துடன் புறக்கணிப்போம்!

[29 February 2016]