ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

US defence secretary’s trip to Asia sets stage for new provocations against China

அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலரின் ஆசிய பயணம் சீனாவிற்கு எதிரான புதிய ஆத்திரமூட்டல்களுக்குக் களம் அமைக்கிறது

By Peter Symonds
13 April 2016

தென் சீனக் கடல் மீது சீனாவுடன் தீவிரமடைந்துவரும் பதட்டங்களுக்கு இடையே, அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் அஷ்டன் கார்ட்டர் இன்று பிலிப்பைன்ஸில் வந்திறங்க உள்ளார். புது டெல்லியில் இருந்து வரும் அவர் அங்கே இந்தியாவுடனான அமெரிக்க மூலோபாய பங்காண்மையை மேற்கொண்டு பலப்படுத்தும் உயர்மட்ட விவாதங்களை நடத்தினார். கார்ட்டரின் மணிலா விஜயம் அண்டைநாடுகளுடனான கடல் எல்லை பிரச்சினைகளில் சீனாவிற்கு எதிராக புதிய இராணுவ ஆத்திரமூட்டல்களுக்குக் களம் அமைக்கும்.

அப்பயணத்தை முன்னோட்டமிட்ட ஒரு மூத்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி CNN க்குத் தெரிவிக்கையில், கார்ட்டரின் விஜயம் "சமாதானம் மற்றும் ஸ்திரப்பாட்டிற்கான எங்களின் கடமைப்பாட்டை அப்பிராந்தியத்திற்கு அறிவிக்கும் ஒரு சேதியாகும்" என்றார். “தென் சீனக் கடலை" அமெரிக்கா "முக்கியமாக அமெரிக்க பாதுகாப்பு நலனுக்குரியதாக" பார்க்கிறது மற்றும் அதன் பிலிப்பைன்ஸ் கூட்டாளிக்கு உத்தரவாதமளிக்க "திடமான பொறுப்புறுதியை" ஏற்றுள்ளது என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

“சமாதானம் மற்றும் பாதுகாப்புக்கான" கடமைப்பாடுகளினூடாக, வாஷிங்டன் ஒட்டுமொத்தமாக, இராணுவ வழிவகைகள் உட்பட சகல வழிவகைகள் மூலமாக தென் கிழக்கு ஆசியா மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அதன் தொடர்ச்சியான மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தி வைப்பதை அர்த்தப்படுத்துகிறது. பெய்ஜிங்கிற்கு எதிராக நோக்கங்கொண்ட அதன் "ஆசியாவில் முன்னிலையின்" பாகமாக, ஒபாமா நிர்வாகம் பிலிப்பைன்ஸூடன் புதிய இராணுவத் தள உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டு உள்ளதுடன், அந்நாட்டின் கடல்ரோந்து படையை அதிகரிக்க நிதியுதவியாக 40 மில்லியன் டாலர் வழங்குகிறது மற்றும் சீனாவின் கடல் எல்லை உரிமைக்கோரல்களுக்கு எதிராக ஹேக் (Hague) நிரந்தர பொது தீர்ப்பாயத்தில் பிலிப்பைன்ஸின் சட்டப்பூர்வ சவாலையும் ஆதரிக்கிறது.

அவரது விஜயத்தின் போது, சுமார் 8,000 அமெரிக்க, பிலிப்பைன்ஸ் மற்றும் ஆஸ்திரேலிய இராணுவ சிப்பாய்கள் தற்போது ஈடுபட்டுவரும் வருடாந்தர கூட்டு பாலிகட்டன் (Balikatan) இராணுவப் பயிற்சிகளைப் பார்வையிடும் முதல் அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலராக கார்ட்டர் இருப்பார். கூட்டு கடற்படை பயிற்சிகள், கடல் வழியாக நிலத்தில் தரையிறங்கும் ஒத்திகை மற்றும் தென் சீனக் கடலில் பெயர் குறிப்பிடப்படாத ஒரு நாட்டால் அபகரிக்கப்பட்ட ஒரு தீவை மீட்கும் பாவனை ஒத்திகை ஆகியவற்றை இந்தாண்டின் போர் சாகசங்கள் பீதியூட்டும் வகையில் உள்ளடக்கி உள்ளன.

இந்தாண்டு செயல்பாட்டிற்கு வந்த, விரிவார்ந்த பாதுகாப்பு கூட்டு-ஒத்துழைப்பு உடன்படிக்கையின் (EDCA) கீழ், அமெரிக்கா அணுகுதலை பெற்றுள்ள ஐந்து பிலிப்பைன்ஸ் இராணுவத் தளங்களில் இரண்டிற்கும் கார்ட்டர் விஜயம் செய்வார். அந்த ஐந்தில் அந்நாட்டின் மிகப் பெரிய இராணுவ தளமும் அத்துடன் நான்கு விமானப்படை தளமும் உள்ளடங்கும். குறிப்பாக ஒரு ஆத்திரமூட்டும் அறிகுறியாக, கார்ட்டரது பயண நிகழ்ச்சி நிரலில் உள்ள இராணுவத் தளங்களில் ஒன்று, தென் சீனக் கடலுக்கு நேராக பக்கவாட்டில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டின் போது, வாஷிங்டன் தென் சீனக் கடலில் சீனாவின் நில சீரமைப்பு நடவடிக்கைகளை "விரிவாக்க நடவடிக்கை" என்று அதிகரித்தளவில் கடுமையான வார்த்தைகளில் கண்டித்ததுடன், அப்பகுதியை சீனா "இராணுவமயப்படுத்துவதை" நிறுத்துமாறு கோரியது. அக்டோபரில் மற்றும் மீண்டும் ஜனவரியில், அமெரிக்க கடற்படை "கப்பல் போக்குவரத்துக்கான சுதந்திரம்" என்ற போலிச்சாக்கின் அடிப்படையில், சீன-நிர்வாகத்தின் கீழ் உள்ள ஒரு தீவைச் சுற்றி 12 கடல் மைல் தூரத்திற்குள் ஒரு சிறிய போர்க்கப்பலை அனுப்பியது.

இம்மாத ஆரம்பத்தில், பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர் ராய்டர்ஸிற்குக் கூறுகையில் பெண்டகன் ஏப்ரலில் தென் சீனக் கடலில் மூன்றாவது "கடல் போக்குவரத்துக்கான சுதந்திர" நடவடிக்கையை திட்டமிட்டு வருவதாக தெரிவித்தார். அமெரிக்கா ஏற்கனவே தென் சீனக் கடலில் விமானந்தாங்கி போர்க்கப்பலான USS ஜோன் சி ஸ்டென்னிஸ் மற்றும் அதனுடன் சென்ற அதன் போர்க்கப்பல்களின் தாக்கும் குழு ஆகியவற்றுடன் அதன் கடற்படையின் ஆயுதபலத்தை கணிசமானளவிற்குக் காட்டியுள்ளது. ஜப்பானிய கடற்படையும் ஒரு பலமான பிரசன்னத்தைக் கொண்டுள்ளது, அது இந்தோனேஷியா கடற்படையுடன் கூட்டு பயிற்சிகளில் பங்கெடுக்க ஹெலிகாப்டர் தாங்கி சிறுபோர்க்கப்பலான JS Ise ஐ கடந்த வாரம் அனுப்பியது, இது நடைமுறையளவில் ஒரு விமானந்தாங்கி போர்க்கப்பலாகும்.

அத்தகைய "கடல் போக்குவரத்துக்கான சுதந்திர" நடவடிக்கைகள் என்பது, பெரும்பாலும் உட்கிடக்கையாக இருப்பதைப் போல, சர்வதேச வணிகத்திற்கு கடல் பாதைகளைத் திறந்துவிடுவதை உறுதிப்படுத்துவதற்காக கிடையாது. மாறாக அதன் நோக்கம் துல்லியமாக நேரெதிரானது. சீனாவுடன் யுத்தத்திற்கான பெண்டகன் திட்டங்களின் பாகமாக, அமெரிக்க இராணுவ போர்க்கப்பல்கள் இத்தகைய மூலோபாய கடல்பகுதிகளைச் சுதந்திரமாக அணுகுவதை உறுதிப்படுத்துவதில் அது தீர்மானகரமாக உள்ளது. அதன் வான்வழி/கடல்வழி போர் மூலோபாயம் சீனப் பெருநிலத்தில் ஒரு பாரிய குண்டுவீச்சையும் அத்துடன் தென் சீனக் கடல் வழியாக ஆபிரிக்கா மற்றும் மத்தியக் கிழக்கிலிருந்து அத்தியாவசிய எரிபொருள் மற்றும் மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதிலிருந்து சீனக் கப்பல்களைத் தடுக்கும் ஒரு கடற்படை முற்றுகையையும் கருத்தில் கொண்டுள்ளது.

திங்களன்று ஜப்பானில் நடந்த ஜி7 வெளியுறவு மந்திரிமார்கள் கூட்டத்தில் "நடைமுறையில் உள்ளதை மாற்றி பதட்டங்களை அதிகரிக்கும் எந்தவித அச்சுறுத்தும், நிர்பந்திக்கும் அல்லது ஆத்திரமூட்டும் ஒருதலைபட்சமான நடவடிக்கைகளுக்குக் கடுமையான எதிர்ப்பை" வெளிப்படுத்திய ஓர் அறிக்கை, இராணுவ நோக்கங்கள் உள்ளடங்கலாக நில சீரமைப்பு மற்றும் வெளிச்சாவடிகளை கட்டமைப்பதை எல்லா நாடுகளும் நிறுத்திக் கொள்ளுமாறு அழைப்புவிடுத்திருந்த நிலையில், அதை கொண்டு பெய்ஜிங் மீதான அழுத்தத்தை வாஷிங்டன் அதிகரித்தது. பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகிய பிரதான ஐரோப்பிய சக்திகள் அத்தகையவொரு பிரகடனத்தில் அவற்றின் பெயர்களைச் சேர்த்துக் கொண்டமை இதுவே முதல்முறையாகும்.

அந்த அறிக்கை சீனாவின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும், அந்த சேதி வெளிப்படையாக பெய்ஜிங்கிற்கு எதிராக திரும்பி இருந்ததால் ஓர் ஆத்திரமான எதிர்நடவடிக்கையைத் தூண்டியது. ஜி7 நாடுகளது நடவடிக்கையில் சீனா "கடுமையாக அதிருப்தி" இருப்பதாகவும் மற்றும் "பிராந்திய நாடுகளின் முயற்சிகளை" மதிக்குமாறும் மற்றும் "அனைத்து பொறுப்பற்ற வார்த்தைகள் மற்றும் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளுமாறு" அழைப்பு விடுப்பதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அறிவித்தார். தென் சீனக் கடலில் அமெரிக்க தலையீடுகளைச் சீனா மீண்டும் மீண்டும் எதிர்ப்பதுடன், எல்லை பிரச்சினைகளை இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மூலமாக தீர்க்க அழைப்புவிடுத்தது.

ஜி7 நாடுகளின் அறிக்கையானது, பிலிப்பைன்ஸ் வழக்கில் நிரந்தர பொது தீர்ப்பாயம் அதன் தீர்ப்பை அறிவித்ததும் ஓர் ஆக்ரோஷமான புதிய இராஜாங்க தாக்குதலுக்கு அமெரிக்கா செய்துவரும் தயாரிப்புகளின் பாகமாகும். அனேகமாக மே மாதம் வரவிருக்கும் அந்த தீர்ப்பு, பிலிப்பைன்ஸிற்குச் சாதகமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. சீனா அந்த நீதிமன்றத்தின் நீதி பரிபாலனையை அங்கீகரிக்கவில்லை என்பதுடன், அதில் பங்கெடுக்கவும் இல்லை. பிலிப்பைன்ஸ் வழக்கின் அடித்தளத்தில் இருக்கும் கடல் சட்டத்திற்கான ஐநா தீர்மானத்தை அமெரிக்கா ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை என்ற போதும், தென் சீனக் கடலில் சீன நடவடிக்கைகளைச் "சட்டவிரோதமானதாக" கண்டிக்க ஐயத்திற்கிடமின்றி வாஷிங்டன் அந்த தீர்ப்பைக் கையிலெடுக்கும்.

தென் சீனக் கடலில் அமெரிக்கா "தேசிய நலனைக்" கொண்டிருப்பதாக வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் அறிவித்த பின்னரில் இருந்து ஐந்தாண்டுகளில், ஒபாமா நிர்வாகம் அந்த மூலோபாய கடல்பகுதியை சீனா உடனான ஓர் அபாயகரமான வெடிப்புப்புள்ளியாக மாற்றியுள்ளது. இப்போது ஒபாமா, பெய்ஜிங் உடனான மோதலைத் தீவிரப்படுத்த இன்னும் அதிக அழுத்தத்தின் கீழ் உள்ளார்.

பிரிட்டனை மையமாக கொண்ட பைனான்சியல் டைம்ஸில் குடியரசு கட்சி செனட்டர் ஜோன் மெக்கெயின் நேற்று எழுதுகையில், சீனா "ஆசிய-பசிபிக் பகுதியில் விதிமுறைகளின்படி அமைந்த ஒழுங்கமைப்பில் ஒரு 'பொறுப்புள்ள பங்குதாரராக' குறைவாகவே" நடந்து கொள்கிறது "அதிகமாக அச்சுறுத்துபவரைப் போல" நடந்து கொள்கிறது. இப்போது வரையில், அமெரிக்க கொள்கையானது நாம் முகங்கொடுத்து வரும் சவாலின் அளவு மற்றும் வேகத்திற்குப் பொருத்தமாக கிடையாது,” என்று அறிவித்தார்.

பாலிகட்டன் போர் சாகசங்களின் பாகமாக "அமெரிக்காவின் தாக்கும் பலத்தை வெளிப்படையாக காண்பிப்பதில் Scarborough Shoal க்கு அண்மையில் உள்ள கடல்எல்லைகளில் ரோந்து [செல்ல] ஒரு போர்க்கப்பல் தாக்கும் குழுவை" உடனடியாக அனுப்புவது உட்பட தென் சீனக் கடலில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை வேகமாக விரிவாக்குவதற்கு மெக்கெயின் அழைப்புவிடுத்தார். “ஒரு தென் சீனக் கடல் ADIZ ஐ [வான் பாதுகாப்பு அடையாள மண்டலம்] சீனா அறிவித்தால், அமெரிக்கா உடனடியாக வழமையான நடைமுறைகள் பாதிக்கப்பட்ட அப்பகுதிக்குள் இராணுவ போர்விமானங்களைப் பறக்க விடுவதன் மூலமாக அந்த உரிமைகோரலுக்கு சவால்விடுக்க தயாராக இருக்க வேண்டும்,” என்று எழுதினார்.

அந்த செனட்டர் தொடர்ந்து பின்வருமாறு எழுதினார்: “அமெரிக்கா அடையாள தோரணைகளுக்கு அப்பால் நகர்ந்து, துரிதமாக 'சுதந்திர கடல் நடவடிக்கையைத்' தொடங்குவதற்கான நேரமாகும். சீனாவின் கடல் போக்குவரத்து உரிமைகோரல்களுக்குச் சவால்விடுக்க அது சுதந்திர கடல் போக்குவரத்து திட்டத்தின் வேகத்தையும் பரப்பெல்லையையும் அதிகரிக்க வேண்டும், அத்துடன் தென் சீனக் கடலில் அமெரிக்க போர்க்கப்பல்கள் செலவிடும் பயண நாட்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும். கூட்டு ரோந்து நடவடிக்கைகள் மற்றும் பயிற்சிகள் விரிவாக்கப்பட்டு, மேற்கு பசிபிக் எங்கிலும் உளவுத்தகவல்களைச் சேகரிக்க கடல் உளவுவேலை ரோந்து நடவடிக்கைகளைத் தொடர வேண்டும்,” என்றார்.

மெக்கெயின் என்ன முன்மொழிகிறார் என்றால், சீனாவுடனான போருக்கான ஒரு செய்முறை குறிப்பை—அதாவது அணுஆயுத சக்திகளுக்கு இடையிலான மோதலுக்குத் தவிர்க்கவியலாமல் இட்டுச் செல்லும் வாஷிங்டனினது கோரிக்கைகளுக்கு பெய்ஜிங்கை அடிபணிய நிர்பந்திப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு பொறுப்பற்ற மற்றும் தீவிரமயப்பட்ட மோதல்களுக்கான திட்டமிட்ட கொள்கையை முன்மொழிகிறார். காங்கிரஸிற்கான மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தின் அறிக்கை ஒன்றிற்கு பொருந்திய விதத்தில், அமெரிக்கா "அப்பிராந்தியத்தில் அதன் இராணுவத் தோரணையை விரிவாக்குவதன்" மூலமாக அது தயாரிப்பு செய்ய வேண்டும் என்பதை அவர் தெளிவுபடுத்திவிடுகிறார். அது சீனாவுடனான போரில் சண்டையிட ஆசியாவில் தீவிரமயப்படுத்தப்பட்ட இராணுவக் கட்டமைப்புக்கும் அத்துடன் புதிய ஆயுத அமைப்புமுறையில் பாரியளவில் முதலீடு செய்வதற்கும் பரிந்துரைத்தது.

செனட் ஆயுத சேவை கமிட்டியின் தலைவரும் மற்றும் பெண்டகனுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளவருமான மெக்கெயின், குடியரசுக் கட்சியின் மிகவும் இராணுவவாத பிரிவைப் பிரதிநிதித்துவம் செய்கிறார். ஆனால் அவர் எதை வெளிப்படையாக குறிப்பிடுகிறாரோ அது ஏற்கனவே ஒபாமா நிர்வாகத்தின் ஆசியாவை நோக்கிய "முன்னிலை" அல்லது "மறுசமன்படுத்தலில்" உள்ளடங்கி உள்ளது, இது பெண்டகனின் விமானப்படை மற்றும் கடற்படை இருப்புகளில் 60 சதவீதத்தை அப்பிராந்தியத்தில் மீள்நிலைநிறுத்தம் செய்வதையும், இராணுவ கூட்டணிகளின் ஒரு வலையமைப்பைப் பலப்படுத்துவதையும் மற்றும் அதிகரித்தளவில் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை நடத்துவதையும் உள்ளடக்கி உள்ளது.