ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Oppose imperialist war! Join the International May Day Online Rally!

ஏகாதிபத்திய போரை எதிர்ப்போம்! சர்வதேச மே தின இணையவழி கூட்டத்தில் இணையுங்கள்!

By Joe Kishore and David North
  25 April 2016

எதிர்விரும் ஞாயிற்றுக்கிழமை, மே 1 அன்று அமெரிக்க கிழக்கத்திய நேரப்படி மாலை 1:00மணிக்கு, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) ஓர் இணையவழி கூட்டத்துடன் இந்த மே தினத்தை கொண்டாடும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் உலகெங்கிலுமான தலைவர்களது சொற்பொழிவுகளைக் கொண்டிருக்கும் அதன் மத்திய நோக்கம், பூமியை அழிக்க அச்சுறுத்தி கொண்டிருக்கும் பரந்த ஏகாதிபத்திய இராணுவவாத பிரவாகத்திற்கு எதிராக உழைக்கும் மக்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் ஓர் உலகளாவிய போர்-எதிர்ப்பு இயக்கத்தை கட்டமைப்பதாகும். அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் 2016 ஜனாதிபதி வேட்பாளர் ஜெர்ரி வைட்டும் சொற்பொழிவாளர்களில் ஒருவராவார்.

நாம் ஒரு நிரந்தர போர் சகாப்தத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பொய்கள் மற்றும் வரம்பில்லா பாசாங்குத்தனத்துடன் நியாயப்படுத்தப்படுகின்ற "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" இப்போது அதன் பதினைந்தாம் ஆண்டை எட்டுகின்றது. இதன் விளைவாக மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர். எண்ணற்ற மில்லியன் கணக்கானவர்கள் வீடற்ற அகதிகளாக்கப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, லிபியா மற்றும் யேமனில் அமெரிக்காவினால் தூண்டிவிடப்பட்ட இத்தகைய பிராந்திய போர்கள், பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பதிலாக, முன்பினும் அதிகமாக வன்முறை, தனிநபர் பாதுகாப்பின்மை மற்றும் உலகளாவிய ஸ்திரமின்மையின் அலை பரவுவதற்கு இட்டுச் சென்றுள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் நவ-காலனித்துவ தலையீடுகள், இன்னும் அதிகமாக இரத்தக்களரியான வல்லரசுகளின் மோதல்களுக்கு முன்னறிவிப்பாக உள்ளன.

உலகளாவிய மேலாதிக்க சக்தியாக தனது அந்தஸ்தைப் பேணுவதற்கு தீர்மானகரமாக உள்ள அமெரிக்கா, ஒரேநேரத்தில் ரஷ்யா மற்றும் சீனாவுடன் மோதல்களைத் தீவிரப்படுத்தி வருகிறது. ரஷ்யாவின் எல்லைக்கருகே உள்ள நாடுகளில் நேட்டோ படைகளின் ஆதரவுடன் இராணுவ ஆயுதமயமாக்கல் நடைபெற்று வருகின்றன.

ஒபாமா நிர்வாகத்தினது "ஆசிய முன்னிலையினூடாக" சீனாவைச் சுற்றி வளைக்கும் அமெரிக்க முயற்சிகளால், ஒட்டுமொத்த பிராந்தியமும் குழப்பத்தில் சிக்கி உள்ளது.

இம்மாத தொடக்கத்தில், அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் அஷ்டன் கார்ட்டர், தென் சீனக் கடல் போர் சாகசங்களை தனிப்பட்டரீதியில் பார்வையிடவும் மற்றும் வாஷிங்டனின் இராணுவ கூட்டாளிகளது வலையமைப்பை பலப்படுத்த அமெரிக்க போர்விமானங்கள், ஹெலிகாப்டர்கள், சிறப்பு படைப் பிரிவுகள் மற்றும் விமானந்தாங்கி போர்க்கப்பல்களை நிலைநிறுத்தவும் பிலிப்பைன்ஸிற்கு விஜயம் செய்தார்.

அவற்றின் சொந்த ஆளும் குழுக்களது முதலாளித்துவ நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற தேசியவாத மற்றும் பேரினவாத ரஷ்யா மற்றும் சீனாவின் அரசாங்கங்கள் இரண்டுமே, இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு முழுமையாக போரில் முடியக்கூடிய பழிவாங்கும் நடவடிக்கைகளைக் கொண்டு விடையிறுக்கின்றன. இம்மாத ஆரம்பத்தில் பால்டிக் கடலில் ரஷ்ய போர் விமானங்கள் மற்றும் அமெரிக்க இராணுவ வாகனங்களுக்கு இடையிலான நுனியளவில் தடுக்கப்பட்ட மோதல் ஓர் ஆழ்ந்த எச்சரிக்கையாகும்: அதிகபட்ச கொந்தளிப்பான சூழலில், ஒரேயொரு தவறான அடிகூட துரிதமாக கட்டுப்பாட்டை மீறி விடக்கூடும்.

முதலாம் உலக போர் மற்றும் இராண்டாம் உலக போர் காலகட்டத்தின் போது, சகல ஏகாதிபத்திய சக்திகளும் உலகின் ஒரு புதிய "மறு-பங்கீட்டிற்கான" முனைவில் பங்கெடுத்திருந்தன. ஜேர்மனி மீண்டும் மீள்ஆயுதமயமாக்கி வருவதுடன், அதன் இராணுவ நடவடிக்கைகளை விரிவாக்கி வருகிறது. ஜப்பானிய ஆளும் வர்க்கம் இரண்டாம் உலக போரில் அதன் தோல்விக்குப் பின்னர் கொண்டு வரப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் மீதான கட்டுப்பாட்டுகளை நீக்குவதில் தீர்மானகரமாக உள்ளது. அணுஆயுதங்களைக் கொண்டு போரிடக்கூடிய ஒரு மூன்றாம் ஏகாதிபத்திய உலக போர் அபாயம், 1945 க்குப் பிந்தைய வேறெந்த காலத்தையும் விட அதிகமாக உள்ளது.

பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய வல்லரசுக்கான ஒரு ஈவிரக்கமற்ற சண்டையில் அவர்கள் ஈடுபட்டிருப்பதை உலக ஏகாதிபத்தியத்தின் தலைவர்களே ஒப்புக் கொள்கிறார்கள்.

Handelsblatt பத்திரிகைக்கான ஒரு பேட்டியில் ஜேர்மன் வெளியுறவுத்துறை மந்திரி பிரான்ங்க்-வால்டர் ஸ்ரைன்மையர், உலக புவிசார் அரசியல் உறவுகள் உச்சக்கட்ட கொந்தளிப்பில் இருப்பதை ஒப்புக்கொண்டார். “பழைய ஒழுங்கமைப்பை ஒரு புதிய ஒன்றைக் கொண்டு பிரதியீடு செய்யப்படவில்லை,” என்று கூறிய ஸ்ரைன்மையர், “மேலாதிக்கம் மற்றும் செல்வாக்கிற்கான இந்த போராட்டம் ஒரு சமாதானமான கருத்தரங்கின் சூழலில் நடைபெறவில்லை, மாறாக இது வன்முறைரீதியில் வெடித்து வருகிறது,” என்றார்.

முதலாளித்துவ அமைப்புமுறை மற்றும் அதன் தேசிய-அரசு அரசியல் கட்டமைப்பிற்குள், அரசியல் மீதும், எல்லைகள், நிதி மற்றும் வர்த்தக நலன்கள் மீதும் நடக்கும் பிரச்சினைகள் உலக போருக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கின்றன. ஏகாதிபத்திய தர்க்கத்தை கடந்து வருவது ஒருபுறம் இருக்கட்டும், ஏகாதிபத்திய அரசாங்கங்கள் ஓர் அணுஆயுத மோதலுக்குள் இறங்குவதை தடுக்க நினைத்தாலும் கூட, அவற்றின் சொந்த பொறுப்பற்றத்தனத்தின் விளைவுகளை அவற்றால் கட்டுப்படுத்த முடியாது.

உலக ஏகாதிபத்தியத்தின் தலைவர்கள் மக்களின் முதுகுக்குப் பின்னால் அவர்களது போர் மூலோபாயங்களை ஒழுங்கமைத்து வருகிறார்கள். அவர்களின் இராணுவ திட்டங்கள் மற்றும் கால அட்டவணைகள் பொது விவாதங்களால் மற்றும் மக்கள் போராட்டங்களால் குழப்பத்திற்கு உள்ளாவதை அவர்கள் விரும்பவில்லை.

அமெரிக்காவில் முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் ஊடகங்கள், 2016 தேர்தல் விவாதங்களில் போர் பிரச்சினையை தவிர்த்து கொள்கின்றன. “ஆட்சி மாற்ற" போரின் ஒரு விளக்கவுரையாளரும், சிஐஏ மற்றும் பெண்டகனின் மிகவும் பொறுப்பற்ற பிரிவினரின் ஒரு ஊதுகுழலுமான ஹிலாரி கிளிண்டனை அதன் வேட்பாளராக்க ஜனநாயகக் கட்சி தயாரிப்பு செய்து வருகிறது. குடியரசுக் கட்சி போட்டியாளர்களை பொறுத்த வரையில், அவர்கள் அணுஆயுத பிரயோகத்தை ஏதோ விளையாட்டு பொருட்களின் பிரயோகத்தைக் குறித்து பேசுவதைப் போல நையாண்டியாக பேசி வருகிறார்கள். நவம்பர் தேர்தல்களுக்குப் பின்னர், இத்தகைய போர்வெறி கொடூரர்களின் கரங்களில்தான் புவியை அழிக்கவல்ல அமெரிக்க ஆயுதங்கள் சென்று சேர உள்ளன.

சமத்துவமின்மை, ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் தொழிலாள வர்க்க நலன்கள் மீதான ஈவிரக்கமற்ற தாக்குதல்கள் மீது ஒவ்வொரு நாட்டின் பெருந்திரளான உழைக்கும் மக்களிடையே மற்றும் இளைஞர்களிடையே அதிகரித்துவரும் கோபத்துடன் சேர்ந்து, போருக்கும் ஆழ்ந்த மற்றும் செயலுக்குவராத வெறுப்பு உள்ளது.

உலகெங்கிலுமான பில்லியன் கணக்கான மக்களின் கோபம் மற்றும் எதிர்ப்புக்கு ஒரு புதிய மூலோபாயம் அவசியப்படுகிறது. போருக்கு எதிரான போராட்டமானது, முதலாளித்துவ-எதிர்ப்பு மற்றும் சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்த வேண்டுமென ICFI வலியுறுத்துகிறது.

நடந்துவரும் போர்களை நிறுத்துவதற்கும் மற்றும் மனித நாகரீகத்தின் எதிர்காலத்தையே அச்சுறுத்துகிற ஒரு பேரழிவுக்குள் அவை தீவிரப்படுவதைத் தடுக்க சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஓர் இயக்கத்தை அபிவிருத்தி செய்து, ஊக்குவித்து, புத்துயிர் அளிப்பதே சர்வதேச மே தின இணையவழி கூட்டத்தின் நோக்கமாகும்.

மே தின இணையவழி கூட்டத்தில் இணைய, நாம் உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) அனைத்து வாசகர்களுக்கும் அழைப்பு விடுக்கிறோம்!

இன்றே பதிவு செய்யுங்கள்! உங்கள் நண்பர்கள் மற்றும் சக-தொழிலாளர்களுக்கும் தெரிவியுங்கள். பேஸ்புக் மற்றும் ஏனைய சமூக ஊடகங்களிலும் இந்த பேரணியை ஊக்குவியுங்கள். இந்தாண்டின் பேரணியை ஏகாதிபத்திய போருக்கு எதிரான சர்வதேச தொழிலாள வர்க்க ஐக்கியத்திற்கு ஒரு சக்திவாய்ந்த வெளிப்பாடாக ஆக்க உதவுங்கள்!

மேலதிக விபரங்களுக்கும் மற்றும் பதிவு செய்வதற்கும், http://internationalmayday.org/ta/ தளத்தைப் பார்வையிடவும்.