ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Indian Stalinists ally with regional DMDK party in Tamil Nadu elections

தமிழ்நாடு தேர்தலில் இந்திய ஸ்ராலினிஸ்டுகள் பிராந்திய தேமுதிக கட்சியுடன் கூட்டமைக்கிறது

By V. Gnana
5 April 2016

இந்தியாவின் தென்மாநிலமான தமிழ்நாட்டில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-மார்க்சிஸ்ட் (சிபிஎம்) உள்ளடங்கிய தேர்தல் கூட்டணியான மக்கள் நலக் கூட்டணி (PWF) தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்துடன் கூட்டுச்சேர்வது உறுதியாகிவிட்டது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் நெருக்கமான உறவுகளை கொண்டுள்ள, ஊழலுக்கு எதிராக பிரச்சாரம் செய்துவரும் பிராந்தியவாத கட்சியான தேமுதிகவுடனான ஸ்ராலினிஸ்டுகளின் கூட்டு, முதலாளித்துவ கட்சியைப்போல தொழிலாள வர்க்க எதிர்ப்பை நசுக்கவும் சீனாவை தனிமைப்படுத்தும் அமெரிக்காவின் ஆசியாவை “சுற்றி வளைத்தல்”க்கு உதவவுமான அதன் பாத்திரத்தை கோடிட்டுக்காட்டுகின்றது. மக்கள் நலக் கூட்டணியானது, தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை தமது கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக உத்தியோகபூர்வமாக அறிவித்தது. மக்கள் நலக் கூட்டணி–தேமுதிக கூட்டணியானது தமிழ்நாடு சட்டமன்றத்தின் 234 தொகுதிகளிலும் கூட்டு வேட்பாளர்களை களம் இறக்க உள்ளது, அதில் 124 இடங்கள் தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்தவாரம் வரை, மக்கள் நலக் கூட்டணி ஆனது, தேர்தல் முடிந்த பின்னரே முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ அறிவித்தார்: ”நாம் ஜனநாயக மரபுகளை மதிக்கிறோம். இது ஒரு கொள்கை அடிப்படையிலான கூட்டு, நாம் ‘குறைந்த பட்ச வேலைத்திட்ட’ அடிப்படையில் செயல்படுவோம். 1967 தேர்தலில் திமுக அதன் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்கவில்லை. தனிநபர்களை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தினால் நாம் கொள்கையில் சமரசம் செய்துகொள்வோம்.” என ஒரு தொடர் வாய்ச்சவடால்களை மேற்கொண்டார்.

மார்ச் 23 அன்று, இதுநாள்வரை “குறைதந்தபட்ச வேலைத்திட்டம்” பற்றி பேசியதெல்லாம் காற்றோடு மறைந்துபோனது. கூட்டு செய்தியாளர் மாநாட்டில் பேசும்பொழுது வைகோ, தேமுதிக தலைவரும் கோலிவுட் (கோடம்பாக்கம்) நடிகருமான விஜயகாந்த்தை புகழ்ந்து தள்ளினார் மற்றும் தங்களின் கூட்டணி இதுமுதற்கொண்டு “கேப்டன் விஜயகாந்த் அணி” என்று அழைக்கப்படும் என்றார். இந்தக் கூட்டணியில் மக்கள் நலக் கூட்டணி “ராஜாவை ஆக்குபவர்கள்” என்றார். “நீங்கள்தான் ராஜா, ராஜாவை ஆக்குபவர்கள் உங்களை ராஜாவாக ஆக்குவார்கள் என்று விஜயகாந்தைப் பார்த்துக் கூறினார்.

விஜயகாந்த் பேசும்பொழுது சுருக்கமாக வைகோவின் கருத்துக்களை எதிரொலித்தார். “மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் தாங்கள் ராஜாவை உருவாக்குபவர்கள் என்றும் நான் ராஜா ஆவேன் என்றும் கூறினார்கள். நான் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன்” என்றார்.

கூட்டணியின் ஒவ்வொரு தலைவரும் அமைச்சராகும் வாய்ப்பில் கண்வைத்து இருக்கிறார்கள். குறிப்பாக சிபிஐ க்கு உள்துறை அமைச்சும் சிபிஎம் க்கு நிதித்துறையையும் வளங்கப்படுமென தேமுதிக அறிவித்துள்ளது.

தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி கூட்டானது பெருமுதலாளிகளுக்கான அதன் ஆதரவை அச்ச உணர்வோ சஞ்சலமோ இல்லாமல் செய்கின்றது. விஜயகாந்த நிதிதிரட்டும் பிரச்சினைகள் குறித்து கவலை தெரிவித்தபோது, மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ, “அப்படி ஒரு வலுவான கூட்டணி எழுந்தால், பல தொழிலதிபர்கள் நமக்கு நிதிரீதியாக ஆதரவு தருவார்கள். எதுபற்றியும் நீங்கள் கவலைப்பட வேண்டாம்.” என அவருக்கு உறுதி அளித்தார்.

தேமுதிக- மக்கள் நலக் கூட்டணியின் கூட்டானது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் “ஆசியாவில் முன்நிலை” என்ற சீனாவிற்கு எதிரான ஒரு போர்த்தயாரிப்பில் இந்தியாவை பிணைத்திருக்கச் செய்ய விரும்புவதை வெளிப்படையாய் ஆதரிக்கும் ஸ்ராலினிஸ்டுகளது பரிணாம வளர்ச்சியையும் உறுதிப்படுத்துகிறது. வைகோ ஜனாதிபதி ஒபாமாவை புகழ்ந்து ஒரு புத்தகம் எழுதிய அதேவேளை, தேமுதிக அமெரிக்க வெளியுறவு கொள்கை அமைப்புடன் நெருக்கமான உறவுகளை வைத்திருக்கிறது.

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக தலைவர் பிலிப் மின் பிப்ரவரி 19 அன்று திமுக தலைவர் கருணாநிதியையும் பிப்ரவரி 23 அன்று விஜயகாந்த்தையும் சந்தித்தார். அதற்கு அமெரிக்க அதிகாரிகள் தேர்தல் காலகட்டத்தில் அரசியல் தலைவர்களை சந்திப்பது வழமையானது என்று சாதாரணமாக தெரிவித்தனர். சீனாவுடனான போரில் இந்தியாவின் எல்லையில் அமெரிக்கப் படைகள் நிலைகொள்வதை ஏற்குமாறு வலியுறுத்திவரும் அமெரிக்க அதிகாரிகளுடனான சந்திப்பிற்குப் பின்னால் என்ன கணக்கீடுகள் உள்ளன என்று ஊகிப்பது ஒன்றும் கடினமானதல்ல.

தமிழ்நாட்டில் ஆளும் அதிமுக மீதான கோபத்தை சிடுமூஞ்சித்தனமாக சுரண்டிக்கொண்டு, வெற்று ஊழல் எதிர்ப்பு வாய்ச்சவடாலின் பின்னே பிற்போக்கு ஏகாதிபத்திய நிகழ்ச்சிநிரலை மறைப்பதே ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் மக்கள் நலக் கூட்டணி ஆற்றும் பங்காகும். தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியின் போராட்டம் “அதிமுக அரசாங்கத்திற்கு எதிரானது. அணியின் வெற்றிக்காக நாம் சேர்ந்து வேலை செய்வோம், விஜயகாந்த் ராஜாவாக இருப்பார் என்று சிபிஐ(எம்) மாநில செயலர் ஜி.இராமகிருஷ்ணன் விஜயகாந்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் குறிப்பிட்டார்.

இந்திய மற்றும் அமெரிக்க மூலதனத்தின் நலன்கள் மீதான இந்திய ஸ்ராலினிஸ்டுகளின் கருத்து ஒருமைப்பாடானது தவிர்க்கவியலாதவாறு இந்திய முதலாளித்துவத்தின் மீதான அவர்களின் வரலாற்று அணிசேர்க்கையிலிருந்து ஊற்றெடுக்கின்றது. 1991ல் காங்கிரஸ் கட்சியானது இந்தியாவை உலக முதலாளித்துவ சந்தைக்குள் ஒருங்கிணைத்த பின்னர் கால்நூற்றாண்டாக, சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகியன சர்வதேச மூலதனத்தின் நலன்களில் முழு இந்திய மாநிலங்களையும் ஆளுகின்ற, அரசாங்கத்தின் முதலாளித்துவ கட்சிகளாக வெளிப்பட்டுள்ளன. அவை, இந்திய முதலாளித்துவ வர்க்கம் அதன் ஆயதப்படைகளை வலிமைப்படுத்திக்கொண்டு, அமெரிக்க “முன்நிலை” யில் சேர்வதை நோக்கி நகர்ந்துள்ளதை பேரார்வத்துடன் ஆதரித்துள்ளன.

இந்தியா 2005ல் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒரு மூலோபாய இராணுவக் கூட்டுக்குள் நுழைந்தபொழுது, ஸ்ராலினிஸ்டுகள் எல்லாவற்றிலும் காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ (ஐக்கிய முற்போக்கு கூட்டணி) கூட்டரசாங்கத்தின் முட்டுக் கொடுப்பாளர்களாகவும் பங்கேற்பாளராகவும் இருந்தனர். பிஜேபி ஒரு யுத்தத்திற்கு தயார் செய்வதற்காக, 2016-2017ல் அதற்கு முந்திய ஆண்டில் ஒதுக்கிய தொகையான 36 பில்லியன் டாலர்களைக் காட்டிலும், சுமார் 51 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கியபொழுது, அவர்கள் ஆட்சேபம் எதுவும் தெரிவிக்கவில்லை. இப்பொழுது மக்கள் நலக் கூட்டணியானது மேற்கத்திய ஏகாதிபத்திய அரசுகளின், சிறப்பாக சீனாவிற்கெதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் யுத்த உந்துதலின் மிக வெளிப்படையான ஒரு கருவியாக செயல்படுகின்றது.

இரு பிரதான தேசிய கட்சிகளான காங்கிரசும் பிஜேபியும் அவை யுத்த ஆதரவு மற்றும் முதலாளித்துவ ஆதரவு கொள்கைகளுக்கு அழுத்தம் கொடுத்து முன்னெடுத்துச் செல்லுவதால் உழைக்கும் மக்கள் மத்தியில் செல்வாக்கிழந்து வருகின்றன. காங்கிரஸ் கட்சியானது அதன் கடந்தகால நெருக்கடியில் இருந்து இன்னும் வெளிவர வேண்டி இருக்கிறது. ஆளும் பிஜேபியானது, குறிப்பாக தில்லி மற்றும் பிகாரில் தொடர் தேர்தல் தோல்விகளை எதிர்கொண்டு வருகிறது.

காங்கிரஸ் மற்றும் பிஜேபி செல்வாக்கிழந்து வருவதற்கு இந்தியமுதலாளித்துவ வர்க்கத்தின் பதிலானது இந்தியா முழுவதிலும் உள்ள பிற்போக்கு பிராந்திய-தேசியவாத கட்சிகளின் ஒரு தட்டை முன்தூக்கி விடுவதாக உள்ளது. பிஜூ ஜனதா தளத்தின் தலைவர் தத்தாகத்தா சத்பதி, எக்கனாமிக் டைம்ஸ் பத்திரிகையிடம், இந்திய பிரதமர் நரேந்திர “மோடியின் கவர்ச்சி வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. காங்கிரசை ஏற்கும்தன்மை மிக குறைவாக, இல்லாததாகவே……. உள்ளது. தில்லியில் 2019ல் அடுத்த அரசாங்கம், நான் முன்கூட்டிப் பார்க்கிறவாறு, தேசிய கட்சிகளின் எதனையும் சேர்ந்ததாக இருக்காது” என்றார்.

ஒடிசாவில் உள்ள தெலுங்கானாவிலிருந்து நான்குமுறை பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவர் பிராந்திய கட்சிகளின் எதிர்காலம் “பிரகாசம்….. 2014ல் பிஜேபியின் வெற்றியானது பெரும்பாலும் காங்கிரசின் தோல்வியால் விளைந்தது. காங்கிரசை மக்கள் வெளியேற்ற விரும்பினார்கள்.”

“பிராந்தியவாதம் நன்றாகவும் உயிரோட்டமாகவும் இருக்கிறது” என்று வலியுறுத்தி, அவர் அடுத்த இரு மாதங்களில் அட்டவணையிடப்பட்டுள்ள ஐந்து மாநிலங்கள் மற்று யூனியன் எல்லைப் பிரதேசங்களில் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தல்கள் “இந்திய அரசியலை பிராந்தியமயப்படுத்தலுக்கான ஒரு “அக்னிப் பரீட்சையாக” இருக்கும் என்றார்.

ஜம்மு & காஷ்மிர், பிகார், ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா, தமிழ்நாடு, அசாம் மற்றும் மேற்கு வங்கம் என தேசிய கட்சிகள் தனித்தே ஒரு அரசாங்கத்தை அமைக்க திராணியற்ற மாநிலங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தில்லியில் உள்ள அடுத்தடுத்த பிஜேபி மற்றும் காங்கிரஸ் அரசாங்கங்களின் யுத்த ஆதரவு, முதலாளித்துவ ஆதரவு, சிக்கனக் கொள்கைகளில் தலையீடு செய்யாதவகையில் பிராந்திய மட்டங்களில் பல்வேறு கட்சிகளையும், கூட்டணிகளையும் ஒழுங்கு செய்வதே ஸ்ராலினிஸ்டுகளின் பங்காகும். கடந்த ஆண்டு சிபிஎம் பிளீனத்தில், “ஆளும் வர்க்க கட்சிகளின் பகுதிகளுக்குள்ளே உள்ள மோதல்களில் அவர்களில் சில பிரிவுடன் ஐக்கியம்கொள்ளும் அதேவேளை, மோதலை” பயன்படுத்துவதற்கான “நெகிழ்வான தந்திரோபாயங்களுக்காக” சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தினார்.

மேற்கு வங்கத்தில், ஸ்ராலினிஸ்டுகள் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசை அகற்றும் முயற்சியில் காங்கிரசுடன் கைகோர்த்துள்ளனர்.

கேரளாவில், சிபிஎம் காங்கிரசை எதிர்க்கையில், பிஜேபிக்கும் சிபிஎம் க்கும் இடையில் ஏற்படும் வன்முறை மோதல்கள் காங்கிரசுக்கு சாதகமாக இருக்கின்றன. பிஜேபி அதன் பிரச்சாரத்தில் இந்த சம்பவங்களை சிபிஎம் இன் குற்றகரமான அரசியலுக்கு ஒரு எடுத்துக்காட்டு என்று தாக்குகின்றது. சிபிஎம் மற்றும் பிஜேபி இரு கட்சிகளுமே வன்முறைக்காக ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொள்கின்றனர்: பிஜேபி, சிபிஎம் தனது வளர்ச்சியைக் கண்டு கவலை கொண்டு வன்முறையைத் தூண்டிவிடுவதாக கூறுகிறது, அதேவேளை சிபிஎம் வகுப்புவாத துருவமுனைப்படலை உருவாக்குவதற்காக பிஜேபி வன்முறையை பயன்படுத்துகிறது என்று கூறுகிறது.

இறுதி ஆய்வில் சிபிஐ மற்றும் சிபிஎம் கொள்கைகள் இந்திய மூலதனத்துக்கு விசுவாசமான சேவகர்கள் என்ற அவர்களின் பாத்திரத்தில் தீர்மானிக்கப்படுகிறது. சிபிஎம் தேசிய செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தமிழ்நாட்டில் தேர்தல் நிலைமை மீதாக கருத்துரைக்கையில், “இடதுசாரிகள் ஏனைய கட்சிகளைப்போல அல்லாமல், என்னமுடிவெடுப்பதானாலும் தேசிய நலன்களின் அடிப்படையிலேயே எடுப்பர் என்பதை உங்களுக்கு நினைவுறுத்த விரும்புகிறேன்” என அறிவித்தார்.