சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : துனிசியா

France gives €1 billion aid to Tunisia in bid to halt mass protests over jobs

வேலைகள் குறித்த மக்கள் போராட்டங்களை நிறுத்தும் முயற்சியில் பிரான்ஸ் துனிசியாவிற்கு €1 பில்லியன் யூரோ உதவி வழங்குகிறது

By Kumaran Ira
26 January 2016

Use this version to printSend feedback

துனிசியா எங்கிலும் வேலைவாய்ப்பின்மை மற்றும் வறுமைக்கு எதிரான கடந்த வாரத்தின் பெருந்திரளான போராட்டங்களுக்குப் பின்னர், பிரெஞ்சு அரசாங்கம் அடுத்த ஐந்தாண்டுகளில் அதன் முன்னாள் காலனிக்கு 1 பில்லியன் யூரோ உதவி வழங்குமென அறிவித்துள்ளது.

உள்நாட்டு தொழிலாளர்களுக்கு எதிராக பத்து பில்லியன் கணக்கான யூரோ சமூக வெட்டுக்களைச் செய்து வரும் ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் இன் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம், துனிசிய தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்பற்றோரின் அடிப்படை சமூக தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்நடவடிக்கையை எடுக்கவில்லை. மாறாக, 2011 இல் துனிசிய மேலெழுச்சி எகிப்தில் புரட்சியைத் தூண்டிவிட்டதால், சர்வதேச அளவில் ஒரு கட்டுப்படுத்தவியலாத சமூக வெடிப்பைத் தடுக்க இதுவே ஒரே வழியென அது அஞ்சுகிறது.

வேலைவாய்ப்பு மீதான மக்கள் போராட்டங்களின் ஓர் அலையைக் கடந்த வாரம் துனிசியா கண்டது. அப்போராட்டங்கள், ஜனவரி 16 இல் ஓர் இளைஞர், Ridha Yahyaoui, மின்சாரம் தாக்கி இறந்ததும் காசெரைன் மாகாணத்தில் வெடித்தது. உள்ளூர் கல்விக்குழுவின் நியமன பட்டியலில் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டதற்கு எதிராக அவர் போராடி வந்தார். வேலைகள் கோரி தொழிலாளர்களும் வேலைவாய்ப்பற்றோரும் அந்த இயக்கத்தில் இணைந்ததால் நாடெங்கிலும் போராட்டங்கள் வெடித்து வேகமாக பரவியது.

வேலைவாய்ப்பற்றோர் வேலைகள் கோரி அரசாங்க அலுவலகங்களுக்கு வெளியே கூடியதும், துனிசிய அரசாங்கம் போராட்டக்காரர்களுக்கு எதிராக இராணுவம் மற்றும் கலக பொலிஸை அனுப்பியதுடன், கண்ணீர் புகை குண்டு மற்றும் நீர்பீய்ச்சிகளைப் பிரயோகித்தது. குற்றகரமான வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக நாடெங்கிலும் 423 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக சனியன்று உள்துறை அமைச்சகம் அறிவித்தது. அந்த போராட்டங்களை அது லிபியாவில் உள்ள ISIL பயங்கரவாத குழுவின் (ஈராக் மற்றும் லேவன்ட் இன் இஸ்லாமிய அரசு) வேலையாகவும் பழிசுமத்தியது.

2011 இன் புரட்சிகர மேலெழுச்சிகளை ஏற்படுத்திய பிரச்சினைகளில் எதுவும் தீர்க்கப்படவில்லை என்பதையே இந்த மக்கள் போராட்டங்கள் எடுத்துக்காட்டுகின்றன. இந்த மேலெழுச்சிகள் முடித்துக்கொள்ளப்பட்டால் தான் அவர்களுக்கு "ஜனநாயகத்தை" அமைத்துக் கொடுக்க முடியுமென வாதிட்ட பல்வேறு போலி-இடது கட்சிகளுடன் மற்றும் துனிசிய முதலாளித்துவ வர்க்கம், துனிசிய பொது தொழிற்சங்கம் (UGTT), துனிசிய மனித உரிமைகள் கழகம் (LTDH) ஆகியவற்றுடனும் கூடி இயங்கி ஏகாதிபத்தியம் தொழிலாள வர்க்கம் அதிகாரத்திற்கு வருவதைத் தடுத்தது. ஆளும் கட்சி, Nidaa Tounes, பென் அலியின் பழைய கட்சியைச் சற்றே வேறுபடுத்தி பெயர்மாற்றியதாகும்.

வெள்ளியன்று போராட்டங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர துனிசிய அரசாங்கம் ஆயுத படைகளை அனுப்பி ஒரு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்திருந்த நிலையில், ஹோலாண்ட் மற்றும் ஏனைய பிரெஞ்சு அதிகாரிகள் பாரிஸில் துனிசிய பிரதம மந்திரி ஹபிப் எஸ்சித்தைச் சந்தித்தனர்.

எஸ்சித்துடனான சந்திப்பிற்குப் பின்னர், ஹோலாண்ட் அறிவிக்கையில், “பிரான்ஸ் அடுத்த ஐந்தாண்டுகளில் துனியாவிற்கு ஒரு பில்லியன் யூரோ நிதியுதவி வழங்க திட்டமிட்டுள்ளது. … இத்திட்டத்தின் பிரதான அச்சு வேலைகளுக்கு அழுத்தம் கொடுப்பதுடன், சமுதாயத்தில் பின்தங்கிய பகுதிகள் மற்றும் இளைஞர்களுக்கு உதவ நோக்கம் கொண்டது,” என்றார்.

எலிசே ஜனாதிபதி மாளிகை அறிக்கை ஒன்று அறிவிக்கையில், “புரட்சிக்குப் பிந்தைய ஐந்தாண்டுகளில், துனிசியா அதன் ஜனநாயக மாற்றத்தில் வெற்றி பெற்றுள்ளது ஆனால் முக்கியமான பொருளாதார, சமூக மற்றும் பாதுகாப்பு சவால்களை முகங்கொடுக்கிறது,” என்று குறிப்பிட்டது. துனிஸ் ஆட்சி "பிரான்சின் ஆதரவை" எதிர்பார்க்கலாம் என்றும் அது வலியுறுத்தியது.

பிரான்ஸ் துனிசியாவுடன் பரந்த பொருளாதார உறவுகளைக் கொண்டதாகும். குறிப்பாக பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனங்கள் துனிசிய முதலாளித்துவ வர்க்கம் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தை நடைமுறையளவில் மலிவு-உழைப்பு ஒப்பந்ததாரர்களாக பயன்படுத்தி, பிரான்சின் அந்த முன்னாள் காலனி நாடுகளது தொழிலாளர்களை அடிமட்ட கூலிகளுக்குச் சுரண்டுவதற்கு அங்குள்ள உயர்ந்த வேலைவாய்ப்பின்மையைப் பயன்படுத்த முயல்கின்றன.

அவரது விஜயத்தின் போது, எஸ்சித் துனிசியாவில் பிரெஞ்சு முதலீட்டை எவ்வாறு அதிகரிப்பது என்பதை ஆராய, பிரதம மந்திரி மானுவேல் வால்ஸ் மற்றும் பிரெஞ்சு செனட் தலைவர் ஜெரார்ட் லார்சர், அத்துடன் பிரெஞ்சு தொழில் வழங்குனரது அமைப்பான பிரெஞ்சு நிறுவனங்களின் இயக்கத்தின் (Medef) பிரதிநிதிகளுடனும் பேசினார்.

எஸ்சித் மற்றும் வால்ஸ் பிரான்சிற்கான துனிசியா கடனில் ஒரு பகுதியை முதலீடாக மாற்றும் ஓர் உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர். வரவிருக்கும் காலத்தில் செனட் துனிசியாவில் முதலீட்டை அதிகரிக்கவும் முயலும் என்று லார்சர் அறிவித்தார். அவர் கூறுகையில், “வாகனத்துறை போன்ற பல பொருளாதார துறைகளை அபிவிருத்தி செய்வதே துனிசியாவின் மூலோபாயம் என்பதை எஸ்சித் தெரிவித்தார், அவை இளைஞர்களுக்கு வேலைகளை உருவாக்கும்,” என்றார்.

எவ்வாறிருந்தாலும் உருவாகி கொண்டிருப்பது துனிசியாவிற்கான செல்வவளமை அல்ல, மாறாக அந்த முன்னாள் பிரெஞ்சு காலனியில் ஏகாதிபத்திய மேலாளுமையின் ஒரு பரந்த விரிவாக்கமாகும். துனிசியாவிலிருந்து நிறைய இலாபங்களைப் பறிக்க முயல்கின்ற அதேவேளையில், ஏகாதிபத்திய சக்திகள் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற மூடுதிரையின் கீழ் அவர்களது இராணுவ மேலாளுமையையும் அபிவிருத்தி செய்து வருகின்றன.

எலிசே மாளிகை அறிக்கை குறிப்பிட்டது, “பிரான்சைப் போலவே, துனிசியாவும், பயங்கரவாதத்தால் அச்சுறுத்தப்பட்டு மிகக் கொடூரமாக பாதிக்கப்பட்டுள்ளது, ஏனென்றால் அது ஜனநாயகத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது. நமது இரண்டு நாடுகளுமே ஒரேமாதிரியான அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளன, சட்டத்தின் ஆட்சியை மதித்து இந்த தீமைகளுக்கு எதிரான போராட்டத்தில் நாம் ஒருங்கிணைந்து வெற்றி பெற வேண்டும்,” என்று குறிப்பிட்டது.

ஜனநாயகம்மற்றும்சட்டத்தின் ஆட்சியைமதிப்பது குறித்த எலிசே மாளிகையின் பேச்சில் பாசாங்குத்தனத்தின் துர்நாற்றம் வீசுகிறது. உண்மையில் பிரெஞ்சு அரசாங்கம் பெருமாநகர பிரான்சைக் கையாள்வதற்காக, முன்னர் அதன் காலனி நாடுகளுக்காக ஒதுக்கி வைத்திருந்த வழிகளில் நகர்ந்து வருகிறது என்பது தான் மிக முக்கிய சமீபத்திய அபிவிருத்தியாகும்.

நவம்பர் 13 பாரிஸ் தாக்குதலுக்குப் பின்னர், ஹோலாண்ட் நிர்வாகம்அல்ஜீரிய சுதந்திர போராட்டத்தை நசுக்குவதற்குப் பயன்படுத்தி தோல்வியடைந்த போது முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட மற்றும் உருவாக்கப்பட்ட சட்டத்தின் கீழ்பிரான்ஸை அவசரகால நெருக்கடிநிலையில் கொண்டு வந்து நிறுத்தியதுடன், அதை காலவரையின்றி விரிவாக்க திட்டமிடுகிறது. இது, சட்டத்தின் ஆட்சி கைவிடப்படுவதை, அடிப்படை ஜனநாயக உரிமைகள் நீக்கப்படுவதை, பத்திரிகைகள் கட்டுப்படுத்தப்படுவதை, மற்றும் குற்றச்சாட்டுக்களின்றி மக்களைக் கைது செய்வதற்கான நீதிவிசாரணையற்ற பரந்த அதிகாரங்களைப் பொலிஸிற்கு வழங்குவதைக் குறிக்கிறது.

துனிசிய பாட்டாளி வர்க்கத்தின் பொதுவான அச்சமும் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் தொழிலாள வர்க்கத்தின், குறிப்பாக வட ஆபிரிக்க புலம்பெயர்ந்த மக்களைக் கொண்ட மிகப்பெரியளவிலான பிரெஞ்சு நகர்புற அடுக்குகளது சமூக கோபமும், முதலாளித்துவ வர்க்கங்களின் ஒரு கூட்டு அரசியல் விடையிறுப்பைக் கொண்டு வர காரணமாகிறது.

ஏற்கனவே 2011 இல் ஆரம்ப துனிசியா மேலெழுச்சியின் போது, அப்போதைய பிரெஞ்சு வெளியுறவுத்துறை மந்திரி Michèle Alliot-Marie பிரெஞ்சு கலக பொலிஸ் பிரிவுகளைக் கொண்டு பென் அலி சர்வாதிகாரத்தைப் பலப்படுத்த முன்மொழிந்திருந்தார்.

இப்போது, அக்டோபரில் துனிசிற்கான ஒரு விஜயத்தின் போது, பிரெஞ்சு பாதுகாப்பு மந்திரி ஜோன்-ஈவ் லு திரியோன் பிரான்கோ-துனிசிய உறவுகளின் ஒரு பரந்த தீவிரப்பாட்டுக்குச் சமிக்ஞை செய்திருந்தார். “துனிசியாவின் பாதுகாப்பும் பிரான்சின் பாதுகாப்பைப் போன்றதே" என்று அறிவித்த லு திரியோன், 2016-2017 காலத்தில் பிரான்ஸ் துனிசியாவிற்கு 20 மில்லியன் யூரோ இராணுவ உதவிகள் வழங்கும் என்று அறிவித்தார். இது துனிசியாவில் பிரெஞ்சு இராணுவ செலவுகளை ஆண்டுக்கு 2.5 மில்லியன் யூரோ என்ற அதன் தற்போதைய மட்டத்திலிருந்து நான்கு மடங்கிற்கு அதிகமாக அதிகரிப்பதாகும்.

வாஷிங்டனும் துனிசியாவிற்கான அதன் இராணுவ உதவிகளை இரண்டு மடங்கிற்கும் அதிகமாக, அதாவது 40 மில்லியன் டாலரில் இருந்து 99 மில்லியன் டாலராக அதிகரிக்கிறது, இது பெரிதும் உபகரணங்களில் செலவிடப்பட்டன, அதேவேளையில் பிரெஞ்சு பயிற்சிகளில் ஒருங்குவிகிறது.

இத்தகைய நடவடிக்கைகள் தொழிலாள வர்க்கத்தின் சமூக எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதன் மீது, ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையே அதிகரித்துவரும் கவலையை அடிக்கோடிடுகிறது.

2011 மேலெழுச்சிகளுக்கு இட்டுச் சென்ற எந்தவித அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக கேள்விகளையும் தீர்க்க ஏகாதிபத்திய சக்திகளும் அவர்களது துனிசிய முதலாளித்துவ கூட்டாளிகளும் இலாயக்கற்றவர்கள் என்பதை நிரூபித்துள்ளனர். 2011 மேலெழுச்சிகளுக்குப் பின்னர், வயதுவந்தோரிடையே வேலைவாய்ப்பின்மை 12 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்ந்துள்ளது, அதேவேளையில் இளைஞர்களிடையே இந்த புள்ளிவிபரம் 32 சதவீதமாக உள்ளது, கிராமப்புற பகுதிகளில் இது 40 சதவீதமாக உயர்ந்துள்ளது. இத்தகைய பிரச்சினைகள், மோசமடைந்துவரும் உலகளாவிய மந்தநிலைக்கு இடையே துனிசிய பொருளாதாரம் சுருங்க தொடங்குகையில் இன்னும் தீவிரமடையும்.