ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

No party able to claim victory in Australian election

ஆஸ்திரேலிய தேர்தலில் எந்தக் கட்சியும் வெற்றிக்கு உரிமை கோர முடியவில்லை

By James Cogan
4 July 2016

ஆஸ்திரேலியாவில் உத்தியோகபூர்வ அரசியல் பெரும் இக்கட்டில் சிக்கியிருக்கிறது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலுமான அனைத்து இருக்கைகளுக்கும் ஜூலை 2 அன்று நடைபெற்ற “இரட்டைக் கலைப்பு” (double dissolution) தேர்தலில் ஆளும் தாராளவாத-தேசியவாதக் கட்சியும் சரி அல்லது எதிர்க்கட்சியான தொழிற் கட்சியும் சரி வெற்றிக்கு உரிமை கோர முடியாத நிலையில் இருக்கின்றன. சனிக்கிழமையன்று இரவு வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்ட சமயத்தில், கீழவையில் 150 தொகுதிகளில் குறைந்தபட்சம் 13 இல் இரண்டும் நெருக்கமான வித்தியாசத்தில் இருந்தன.

ஆட்சியமைக்க 76 தொகுதிகளில் வெற்றி தேவை என்ற நிலையில், கூட்டணியானது இதுவரை வெறும் 64 தொகுதிகளையும் தொழிற் கட்சியானது 69 இடங்களையும் கைப்பற்றியிருப்பதாக ஆஸ்திரேலிய தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டுகிறது. பசுமைக் கட்சியைச் சேர்ந்த ஒருவர், சுயேச்சைகள் இருவர், மற்றும் மூன்று தொகுதிகள் வரை வலது-சாரி ஜனரஞ்சகவாதிகள் ஆகியோர் வெற்றி பெற்று ஏறக்குறைய ஆறு “கட்சிதாவக் கூடிய” இருக்கைகளை பெறலாம், அமையக் கூடிய ஒரு தொங்கு நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தை தீர்மானிப்பவர்களாக அவர்கள் ஆகலாம் என்று தெரிகிறது.

மில்லியன் கணக்கிலான அஞ்சல் வாக்குகளும் தேர்தலுக்கு முந்தைய வாக்குகளும் இன்னும் எண்ணப்பட வேண்டியிருக்கும் நிலையில், அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஒரு முடிவு தெரியாத நிலை நிலவக் கூடும். மேலவையான செனட்டுக்கான முடிவு இறுதியாக ஒரு மாதம் வரையும் கூடப் பிடிக்கலாம். ஆயினும், பெருங்கட்சிகளில் எதுவொன்றும் செனட்டைக் கட்டுப்படுத்தாது, பசுமைக் கட்சி மற்றும் பிற கட்சிகளின் கைகளிலேயே அதிகாரத்தின் பிடி இருக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

சென்ற செப்டம்பரில் டோனி அபோட்டை கோஷ்டி பூசலில் வெளியே தள்ளிய பின்னர், தாராளவாத தலைவரான பிரதமர் Malcolm Turnbull க்கு இந்த முடிவுகள் ஒரு தணிக்கவியலாத பேரழிவாய் நிற்கின்றன. இரண்டு அவைகளிலும் ஒரு பெரும்பான்மையை பெறுகின்ற நோக்கத்திலேயே Turnbull இரட்டைக் கலைப்பு தேர்தலுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதற்கு மாறாய், அவர் ஒரு சிறுபான்மை அரசாங்கத்தை உருவாக்க முயலும் சாத்தியத்திற்கோ, அல்லது பதவியையே ஒட்டுமொத்தமாக இழக்கின்ற வாய்ப்பிற்கோ தான் முகம்கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

2016 தேர்தலானது கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அரசியல் ஸ்தாபகத்தை உலுக்கியிருக்கக் கூடிய நெருக்கடியில் ஒரு திட்டவட்டமான திருப்புமுனையைக் குறித்து நிற்கிறது. பல தசாப்தங்களாய் தொழிற் கட்சி அரசாங்கங்கள் மற்றும் கூட்டணி அரசாங்கங்கள் இரண்டின் கீழும் வாழ்க்கைத் தரங்கள் வீழ்ச்சி காண்பதை கண்டு வந்திருக்கக் கூடிய பாரிய வெகுஜனங்கள் நீண்ட நெடிய காலமாய் இருந்து வருகின்ற இந்த இரு கட்சி ஆட்சிமுறையில் இருந்து ஆழமாய் அந்நியப்பட்டும், அதற்கு குரோதமானதாகவும் இருக்கின்றனர்.

2007 இல் கூட்டணியானது ஒரு மிகப்பெருவாரியான விதத்தில் தொழிற் கட்சியிடம் அரசாங்கத்தை இழந்தது. 1929க்குப் பின்னர் தனது தொகுதியில் தோற்ற முதல் பிரதமராய் ஜோன் ஹோவர்ட் ஆனார். பின் பிரதமராக இருந்த கெவின் ரூட்டை பதவியிறக்குவதற்காக தொழிற் கட்சிக்குள் நடந்த முன்கண்டிராத ஒரு அரசியல் கவிழ்ப்பைத் தொடர்ந்து ஜூலியா கிலார்ட் மூலம் அழைப்பு விடுக்கப்பட்ட 2010 தேர்தலானது தொழிற் கட்சிக்கான ஒரு படுதோல்வியிலும் 1941 க்குப் பின்னர் முதன்முதலாய் ஒரு சிறுபான்மை அரசாங்கத்திலும் விளைந்தது. 2013 இல் பசுமைக் கட்சியின் ஆதரவுடனான தொழிற் கட்சி அரசாங்கம் பதவியில் இருந்து தூக்கி வீசப்பட்டது, தொழிற் கட்சி 110 ஆண்டுகளில் தனது மிகக்குறைந்த வாக்குகளைப் பெற்றது.

அதற்குப் பின்னர் மூன்று ஆண்டுகளும் கூட முடிந்திராத நிலையில், இப்போது, கூட்டணியானது ஒரு கப்பல்மூழ்கும் நிலையை சந்தித்திருக்கிறது. Turnbull அதிகாரத்தை இழப்பாரானால், ஆஸ்திரேலிய பிரதமர் பதவி வெறும் ஆறு ஆண்டுகளில் ஆறு முறை மாறியிருக்கும் என்பதோடு 1931 முதல் இரண்டாம் முறை வெற்றிபெறாத முதன்முதல் அரசாங்கமாக கூட்டணி அரசாங்கம் ஆகும்.

இரு கட்சி அமைப்புமுறையின் உடைவின் வரலாற்றுப் பரிமாணங்கள் தொழிற் கட்சியின் அடிப்படை வாங்கு வங்கியின் சரிவில் கூர்மையாக வெளிப்படுகின்றன. தேசிய அளவில் அது பெற்ற வாக்குகளின் விகிதம் 2013 ஐக் காட்டிலும் அதிகரித்திருந்தாலும் கூட, புள்ளிவிவரப்படி இது அக்கட்சி பெற்ற இரண்டாவது மிகக் குறைந்த வாக்குகளாகும்.

வாக்காளர்கள் முன்கண்டிராத எண்ணிக்கையில் “சிறு கட்சிகள்” என்று சொல்லப்படுவனவற்றையும் சுயேச்சைகளையும் நோக்கித் திரும்பினர். கீழ்வையில் இவர்கள் 13 சதவீதம் வாக்குகளும் செனட்டில் 26 சதவீத வாக்குகளும் பெற்றிருந்தனர். தொழிற் கட்சியின் துணைத் தலைவரான டானியா பில்பெர்ஸெக் இன்று காலையில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்: “இனியும் இருகட்சி அமைப்புமுறை நம்மிடம் இல்லை; அளவுக்கதிகமான புதிய தெரிவுகள் வந்திருக்கின்றன.”

பெரும்பான்மையுடன் கூட்டணி அரசாங்கம் அமையும் என்றே ஏறக்குறைய ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய ஸ்தாபகங்களும், மிகப் பிரதானமாய் முர்டோக்கிற்குச் சொந்தமான செய்தித்தாள்கள், நிதி ஊடகங்கள் மற்றும் வணிக கூட்டமைப்புகள் ஆகியவை, ஆலோசனையளித்ததோடு நம்பிக்கையுடன் கணிப்பும் கூறின. ஆனால், வருவாய் தேக்கத்தை அல்லது வீழ்ச்சியை, பாதுகாப்பற்ற வேலையை அல்லது வேலைவாய்ப்பின்மையை, நிச்சயமற்ற ஓய்வை மற்றும் அழிந்து செல்லும் சமூக சேவைகளை தாங்கிக் கொண்டிருக்கின்ற பெரும் எண்ணிக்கையிலான மக்கள் விரக்தியுடன் ஒட்டுமொத்த அரசியல் அமைப்புமுறைக்கும் எதிரான ஒரு எதிர்ப்பு வாக்கை அளித்தனர்.

அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தலுக்கான முதனிலைத் தேர்தல்களுடனும் ஐக்கிய இராச்சியத்தில் சமீபத்திய பிரெக்ஸிட் கருத்துவாக்கெடுப்புடனும் இதனை ஒப்பிட்டால் கிடைக்கும் ஒற்றுமை மலைப்பூட்டக் கூடியதாகும். ஆளும் வர்க்கத்திற்கும் சாதாரண உழைக்கும் மக்களின் பரந்த எண்ணிக்கைக்கும் இடையில் ஒரு பாரிய இடைவெளி பிரித்து நிற்கிறது. பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான ஒரு பரந்த சமூகப் பிளவினால் இது எரியூட்டப்படுகிறது.

அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்புக்குக் கிடைத்திருக்கக் கூடிய ஆதரவிலும், அத்துடன் ஐக்கிய இராச்சியத்தில் விலக வேண்டும் பிரச்சாரத்திற்குக் கிட்டிய ஆதரவிலும், இந்தக் கட்டத்தில் பிரதான அனுகூலம் பெற்றிருப்பது, பிற்போக்குத்தனமான, புலம்பெயர்ந்தோர்-விரோத தேசியவாத சக்திகளாகவே இருக்கிறார்கள். இந்த அபாயகரமான வலது-சாரி உருவாக்கங்களின் எழுச்சிக்கான தலைமையான அரசியல் பொறுப்பு தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களிடமே இருக்கிறது. இவை வெளிநாட்டு தொழிலாளர்களுக்கும் மற்றும் முதலீட்டுக்கும் எதிராய் அந்நியரச்சத்தைக் கிளறி விடுவதோடு, பல்வேறு வாய்வீச்சாளர்கள் சுரண்டிக் கொள்ளத்தக்கதான சமூக நெருக்கடியையும் உருவாக்கியிருக்கின்றன.

தெற்கு ஆஸ்திரேலியாவில், மாநிலக் கட்சியான ஜனரஞ்சக Nick Xenophon Team 20 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்கிறது, குறைந்தபட்சம் மூன்று செனட் இருக்கைகளையும், கீழவையில் அநேகமாய் இரண்டு இடங்கள் வரையிலும் பெற்றிருக்கிறது. குவீன்ஸ்லாந்தில், புலம்பெயர்ந்தோர்-விரோத ஒரே தேசம் (One Nation) கட்சி செனட் வாக்குகளில் 9 சதவீதத்தை வென்று, அதன் தலைவரான போலின் ஹான்சனை, மேலவைக்குள் உந்தித் தள்ளியிருக்கிறது. ஒரே தேசம் கட்சி மற்ற மாநிலங்களிலும் வெற்றி பெறும் என்பதாகக் கூறப்படுகிறது. விக்டோரியா மாநிலத்தில் ஊடகத்தில் தடாலடிப் பேச்சு தொகுப்பாளராய் இருந்த டெரின் ஹின்ச் செனட்டிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். டாஸ்மானியாவில், முன்னாள் உளவுத் துறை அதிகாரியும் எச்சரிக்கையூட்டியுமான ஆண்ட்ரூ வில்கி கீழவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார், வலது-சாரி ஜனரஞ்சகவாதியான ஜாக்கி லாம்பி தனது செனட் இருக்கையை தக்கவைத்துக் கொண்டார்.

தொழிலாள வர்க்கப் பகுதிகளான பெரும் நகரங்கள் மற்றும் பிராந்திய நகரங்களது புறநகர்ப் பகுதிகளில் கூட்டணியானது மிக வலுவுடன் மறுதலிக்கப்பட்டது. பல தசாப்த கால பொருளாதார மறுசீரமைப்பில் இப்பகுதிகள் நாசம் செய்யப்பட்டிருப்பதோடு, ஆஸ்திரேலியா 25 ஆண்டுகளில் தனது முதல் மந்தநிலையை நோக்கி சரிந்து கொண்டிருக்கும் நிலையில் மோசமான நிலைமைகளுக்கு முகம்கொடுக்கின்றன. மெடிகேர் அரசு சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தை தனியார்மயமாக்க, கூட்டணி திட்டமிடுகிறது என்று குற்றம்சாட்டி தொழிற் கட்சி நடத்திய ஜனரஞ்சகப் பிரச்சாரமானது தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களது பிரிவுகளில் ஒரு திட்டவட்டமான தாக்கத்தைக் கொண்டிருந்தது. இத்தனைக்கும் தொழிற் கட்சி அரசாங்கங்களும் கூட அரசாங்க சுகாதார அமைப்புமுறையை முறைப்படி செல்லரிக்கச் செய்து வந்திருந்தன. இந்த நேர்மையற்ற ஒரு பிரச்சாரத்தின் மூலமாக, தொழிலாள வர்க்கப் பகுதிகளில் தொழிற் கட்சி ஏராளமான கீழவை மற்றும் பிராந்திய இருக்கைகளை தக்கவைத்துக் கொள்ள முடிந்தது.

பசுமைக் கட்சியினருக்கும் அதன் புதிய தலைவரான ரிச்சர் டி நட்டாலிக்கும் இந்தத் தேர்தல் ஒரு பலத்த அடியாக இருந்தது. கீழவை அல்லது மேலவையில் பசுமைக் கட்சியினர் கூடுதலாய் எந்த இருக்கையையும் வெல்ல முடியவில்லை என்பதோடு, தேசிய அளவில் 10 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளையே பெற்றனர். தொழிலாள வர்க்கத்தில் ஆதரவு அதிகமில்லாத அதேநேரத்தில், பெருநகரங்களின் உள்புறநகர்ப் பகுதிகளில் நடுத்தர வர்க்கத்தின் வசதியான அடுக்குகளின் கட்சியாக பசுமைக் கட்சியின் இடத்தை வலுப்படுத்துவதற்கு இந்த முடிவுகள் சேவை செய்கின்றன.

Turnbull க்கு எதிரான கடுமையான பதில் குற்றச்சாட்டுகள் தாராளவாதக் கட்சியை இப்போது கிழித்துக் கொண்டிருக்கின்றன. முன்னணி வலது-சாரி வருணனையாளர்கள் அவர் இராஜினாமா செய்யக் கோருகின்றனர் என்பதுடன் அப்போட் மூலமாக தலைமைக்கான ஒரு சவாலையும் அவர் முகம் கொடுக்கலாம் என்பதான பெரும் ஊகம் நிலவுகிறது. தாராளவாதக் கட்சி உடைவதும் கூட நிராகரிக்கப்பட முடியாததாகும். ஒரு புதிய தேர்தல் நடத்தப்படுவதற்கான அழைப்புகள் ஊடகங்களில் பெருகிச் செல்கின்றன.

பழமைவாதக் கட்சிகளில் குழப்பம் நிலவுகின்ற நிலையில், ஒரு புதிய தேர்தலுக்கு அழைப்பு விடப்படக் கூடாது என தொழிற் கட்சித் தலைவரான பில் ஷார்ட்டன் வலியுறுத்தியிருக்கிறார். அதற்குப் பதிலாக, “இந்த நாடாளுமன்றம் வேலை செய்வதற்கு இயன்ற அனைத்தையும்” தொழிற் கட்சி செய்யும். ஷார்ட்டனின் தலைமைக்கான சவால் எதுவும் கட்சிக்குள் தொடங்கப்படக் கூடாது என்ற கோரிக்கையை தொழிற் கட்சியின் அதிகாரத்தரகர்கள் பகிரங்கமாக வைத்துள்ளனர்.

ஒரு சிறுபான்மை அரசாங்கத்தை உருவாக்குகின்ற கண்ணோட்டத்துடன் Turnbull மற்றும் ஷார்ட்டன் இருவருமே கட்சிதாவக் கூடிய உறுப்பினர்களை நோக்கி அணுகத் தொடங்கியிருக்கின்றனர். ஆயினும், இரண்டு பெரும் கட்சிகளில் ஒன்று சுயேச்சைகளின் அல்லது Xenophon Team பிரதிநிதிகளின் குறுகிய ஆசைகளுக்கு வளைந்து கொடுத்து இத்தகையதொரு அரசாங்கத்தை உருவாக்கக் கூடிய சாத்தியமானது நிதி மற்றும் வணிக வட்டாரங்களில் கிலியுடன் அணுகப்படுகிறது. சர்வதேசரீதியாக பொருளாதார நிலைமை சீர்கெட்டுச் செல்லும் நிலைமைக்கும் ஆஸ்திரேலியாவின் சுரங்க ஏற்றுமதி வளர்ச்சி உருக்குலைந்திருப்பதற்கும் முகம் கொடுக்கின்ற நிலையில், பெருநிறுவன வரி வெட்டுகளுக்கும் மற்றும் நிதிப் பற்றாக்குறைக்கும் நிதியாதாரம் உருவாக்குவதற்காக பொதுச் செலவினங்களில் மிருகத்தனமாக வெட்டுகளை செய்வதற்கும் அத்துடன் தொழிலாளர்களது ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகளில் பெரும் வெட்டுகளை செய்வதற்கும் தொடர்ச்சியான கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

கண்கூடாய் வெளிப்படவில்லை என்றாலும் கூட, சீனாவுடன், குறிப்பாக தென் சீனக் கடலில், ஒரு இராணுவ மோதலை நோக்கிய தனது முன்னெப்போதினும் மூர்க்கத்தனமான செலுத்தத்தில் ஒரு முக்கியமான கூட்டாளியாக ஆஸ்திரேலியாவை நம்பியிருக்கின்ற அமெரிக்க ஆளும் வர்க்கமானது, இந்த தேர்தல் முடிவில் பெரும் அதிருப்தி கண்டிருக்கும். ஒரு நம்பகமான இராணுவக் கூட்டாளியாக ஆஸ்திரேலியா தொடர்ந்து திகழ்வதை உறுதி செய்யக் கூடிய ஒரு முடிவைக் கொண்டுவருவதற்கு அமெரிக்கா, திரைமறைவில், தனது செல்வாக்கை பயன்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

தேர்தல் முடிவு குறித்து பெருநிறுவன ஊடகங்களில் மிரட்சி மற்றும் கோப உணர்வு வியாபித்திருக்கிறது.

ஆஸ்திரேலிய ஃபைனான்சியல் ரிவ்யூ இதழின் இன்றைய தலையங்கம் கூறியது: “ஆஸ்திரேலியாவின் சீன சுரங்க எழுச்சி முடிவுக்கு வந்திருப்பதை எப்படிக் கையாளுவது என்பதில் ஒரு உருப்படியான கருத்தொற்றுமையை எட்டுவதில் ஆஸ்திரேலியாவின் அரசியல் அமைப்புமுறை தோல்வி கண்டிருப்பதை 2016 தேர்தல் ஊர்ஜிதம் செய்கிறது... தேசத்தின் AAA இறையாண்மைக் கடன் தரவரிசையை இழக்கும் சாத்தியம் உள்ளிட்ட கணிசமான நட்டங்களை இது திணிக்கும்.” அத்தலையங்கம் பின்வருமாறு நிறைவு செய்தது: “மாற்றமில்லாமல், இது ஆஸ்திரேலியா இறுதியாக தவிர்க்க இயலாத தேசிய சவால்களை கையாளுவதற்கு அமைப்புமுறையை நெருக்கக் கூடிய ஒரு திணிக்கப்பட்ட நெருக்கடியை எடுக்கக் கூடும்.”

இந்த “திணிக்கப்பட்ட நெருக்கடி”யின் எல்லை என்பது சர்வதேச மூலதனத்தின் பெரும் வெளியேற்றத்தினால் தூண்டப்படுகின்ற ஒரு நிதி நெருக்கடியில், அல்லது ஒரு தேசிய பாதுகாப்பு “அவசரநிலை” இட்டுக்கட்டப்படுவதில் தொடங்கி சீனாவுடன் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவின் இராணுவப் பதட்டங்கள் கூர்மையாக அதிகரிப்பது வரை நீண்டு செல்லலாம்.

பொருளாதார மற்றும் அரசியல் அதிர்ச்சிகளால் ஸ்தாபகக் கட்சிகள் என்னமாதிரியான நிலைப்பாட்டிற்கு நெருக்குதலளிக்கப்படலாம் என்ற திசையை சுட்டிக்காட்டும் விதமாக, ஆஸ்திரேலியன் தலையங்கமானது இன்று பின்வருமாறு திட்டவட்டம் செய்தது: “ஒரு தேசிய ஐக்கிய அரசாங்கம் நமக்கு ஆரோக்கியமான செயல்பாட்டை அளிக்க முடியும் என்கிறதான நிலை இருக்கின்ற நேரத்தில், ஒரு கோஷ்டி சண்டைக்கும் மற்றும் ஆளும் திறமின்மை புலப்படுவதற்கும் நாம் முகம்கொடுத்து நிற்கிறோம்.”

அவ்வாறான எந்தவொரு “தேசிய ஐக்கிய” ஆட்சியிலும், தொழிற் கட்சியானது, தனது ஜனரஞ்சக வாக்குறுதிகளைக் கைவிட்டு, நிதி மற்றும் பெருநிறுவன உயரடுக்கினால் கோரப்பட்டு வருகின்ற சிக்கன நடவடிக்கை, பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் இராணுவவாதத் திட்டநிரலுக்கு பாரிய மக்கள் காட்டும் எதிர்ப்பினை நசுக்குவதற்கு பழமைவாதிகளுடன் சேர்ந்து வேலைசெய்கின்ற வகையில், பிரதானமான பாத்திரத்தை ஆற்ற வேண்டி வரும்.

அரசியல் முட்டுக்கட்டை நிலையானது வருகின்ற நாட்களிலும் வாரங்களிலும் எந்த வகையாக கையாளப்பட்டாலும் கூட, ஆஸ்திரேலிய முதலாளித்துவமானது முன்கண்டிராத சமூக மற்றும் வர்க்க மோதலுக்கு இட்டுச் செல்லக் கூடிய ஒரு வரலாற்று நெருக்கடிக்குள் புகுந்திருக்கிறது. தொழிலாள வர்க்கம் அதன் சுயாதீனமான நலன்களுக்காகப் போராடுவதற்கு அவசியமாக இருக்கின்ற சோசலிச மற்றும் சர்வதேசிய முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்தை எடுத்து வைத்து சோசலிச சமத்துவக் கட்சி நடத்திய தேர்தல் பிரச்சாரமானது, வரவிருக்கும் காலகட்டத்தில் மிக இன்றியமையாததாக நிரூபணமாகும்.