ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Turkish newspaper identifies US general behind failed military coup

தோல்வியடைந்த இராணுவ சதியின் பின்னால் அமெரிக்க தளபதி இருந்ததை துருக்கிய செய்தித்தாள் அடையாளம் காண்கிறது

By Johannes Stern
28 July 2016

தேர்ந்தெடுக்கப்பட்ட துருக்கிய ஜனாதிபதியான ரெசெப் தயிப் எர்டோகனை தூக்கிவீசுவதற்கும் கொலைசெய்வதற்கும் ஒரு தோல்வியடைந்த இராணுவ சதி நடந்த இரண்டு வாரங்களுக்குப் பின்னர், துருக்கிய நாடாளுமன்றத்தின் மீது குண்டுவீசப்படுவதற்கும் 246 துருக்கிய குடிமக்கள் மரணமடைவதற்கும் இட்டுச் சென்ற குருதி கொட்டிய நிகழ்வுகளில் வலுவாய் அமெரிக்கா சம்பந்தப்பட்டிருந்தது என்பதைக் காட்டும் கூடுதல் விபரங்கள் மேலும் மேலும் வெளிச்சத்துக்கு வந்த வண்ணம் இருக்கின்றன.

“அமெரிக்க தளபதி காம்ப்பெல்: துருக்கியில் தோல்வியடைந்த சதியின் பின்னாலிருந்த மனிதர்” என்ற தலைப்பிலான ஒரு கட்டுரையில், பழமைவாத துருக்கிய செய்தித்தாளான Yeni Safak, “துருக்கியில் தோல்வியடைந்த சதி முயற்சிக்குப் பின்னால் இருந்த படையினர்களை ஒழுங்கமைத்ததிலும் நிர்வகித்ததிலும் முக்கியமாக இருந்த மனிதர்களில்” தளபதி ஜோன் எப். காம்ப்பெலும் ஒருவர் என்று தெரிவித்தது. சதிக்கு ஆதரவாயிருந்ததாக கைதாயிருப்பவர்கள் மீது நடைபெற்று வருகின்ற சட்டரீதியான விசாரணைகளுக்கு நெருக்கமாய் இருக்கும் ஆதாரங்களிடம் இருந்து இந்தத் தகவல் வெளியிடப்பட்டதாக இந்த செய்தித்தாள் தெரிவித்தது.

காம்ப்பெல் ஒரு ஓய்வுபெற்ற அமெரிக்க தளபதியாவார், குருதி கொட்டும் இராணுவத் தலையீடுகளிலும் போர்க் குற்றங்களை மேற்பார்வை செய்வதிலும் அவருக்கு ஓரளவு அனுபவம் உண்டு. 2014 ஆகஸ்டுக்கும் 2016 மேக்கும் இடையிலான காலத்தில் ஆப்கானிஸ்தானில் Resolute Support Mission இன் மற்றும் அமெரிக்கப் படைகளின் உத்தரவிடும் தளபதியாக அவர் இருந்தார். சென்ற அக்டோபரில் குண்டூஸில் ஒரு மருத்துவமனையின் மீது நடத்தப்பட்ட ஒரு படுபயங்கர தாக்குலில் ஏராளமான அப்பாவி நோயாளிகளும் மருத்துவ ஊழியர்களும் கொல்லப்பட்டது இந்தக் காலத்தில் நடந்த முக்கிய அமெரிக்கக் குற்றங்களில் ஒன்றாகும்.

சதிமுயற்சிக்கு முன்பாக, மே முதலான காலத்தில் காம்ப்பெல் குறைந்தபட்சம் இரண்டுமுறை துருக்கிக்கு பயணம் செய்திருந்ததாக ”நடந்துவரும் விசாரணை வெளிக்கொண்டுவந்திருப்பதாக” Yeni Safak கூறியது. இந்த அமெரிக்க தளபதி Incirlik விமானத் தளத்தில் இருக்கின்ற Erzurum இராணுவத் தளத்தில் தொடர்ச்சியான உயர்நிலை இரகசியக் கூட்டங்களை நடத்தியிருந்தார் என்றும் இராணுவ ஆதாரங்கள் கூறின. காம்ப்பெல் தான் “இத்தளத்தில் இராணுவ அதிகாரிகளின் கறுப்புப்பட்டியல் தயாரிப்புக்கு வழிகாட்டிய மனிதராக இருந்தார்”.

எர்டோகனுக்கு எதிரான சதிக்கு தயாரிப்பு செய்வதற்காக பல மாதங்கள் நீண்ட மற்றும் பல பில்லியன் டாலர்கள் சம்பந்தப்பட்ட ஒரு பெரும் நடவடிக்கை பெண்டகன்/சிஐஏ உபயத்தில் நடந்து வந்திருந்ததாக இந்த துருக்கிய செய்தித்தாள் விவரிக்கிறது. நைஜீரியாவில் உள்ள UBA வங்கியின் மூலமாக 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான பரிவர்த்தனைகளை காம்ப்பெல் நிர்வகித்திருந்தார் என்றும், துருக்கியில் சதிக்கு ஆதரவான இராணுவ ஊழியர்களிடையே பணத்தை விநியோகிக்க சிஐஏ தொடர்புகளைப் பயன்படுத்தினார் எனவும் அந்த செய்தித்தாள் கூறுகிறது.

அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் மதகுருவான ஃபெத்துல்லா குலான் (Fethullah Gülen) க்கு நெருக்கமானவர்களாக துருக்கிய இராணுவத்திற்குள் இருக்கும் சதி-ஆதரவு கூறுகளுடன் “சிஐஏ இன் 80 பேர் கொண்ட சிறப்புக் குழு” வேலை செய்து வந்ததாக, இச்செய்தித்தாளின் ஆதாரங்கள் தெரிவித்தன. இந்த மதகுரு சிஐஏ இன் ஒரு சொத்தாக பரவலாய் கருதப்படும் மனிதர் என்பதோடு, எர்டோகனே கூட தனது முன்னாள் கூட்டாளியும் இப்போது பரமவைரியுமான குலான் தான் இந்த சதியின் சூத்திரதாரியாக செயல்பட்டிருந்ததாக குற்றம்சாட்டியிருந்தார்.

இன்சிர்லிக் (Incirlik) விமானத் தளத்தில் இருந்த குலான் ஆதரவு அதிகாரிகள் 2015 இலேயே ஒரு விசாரணைப் பிரிவை நிறுவியிருந்தனர் என்று Yeni Safak தெரிவித்தது. தங்களின் உத்தரவுக்குக் கீழ் இருந்த படைவீரர்களை அவர்கள் எதிரிகள், நடுநிலையானவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வரிசைப்படுத்தும் வேலையைத் தொடக்கியிருந்தனர். ஒரு இராணுவ ஆட்சிக்குழு நிறுவப்படுவதற்கு எதிரானவர்களாய் கருதப்படும் படைவீரர்கள் “நிதி உதவி” பெறுவதில் இருந்து தடைசெய்யப்பட்டனர். “நம்முடன் இணைந்து வருவோர்” என்று இராணுவம் பட்டியலிட்டவர்களுக்கு பெரும் தொகைகள் வழங்கப்பட்டிருந்தன. 

ஒரு நியமிக்கப்பட்ட “பண வசதி ஏற்பாடுகள் செய்பவர்” வழியாக 2015 மார்ச்சில் பணப் பரிவர்த்தனைகள் தொடங்கியதாக இந்த செய்தித்தாள் கூறுகிறது.

சதி முயற்சியில் சம்பந்தப்பட்டதாய் கைதான உயர் இராணுவ அதிகாரிகளில் ஒருவரான பிரிகேடியர் ஜெனரல் மெஹ்மெட் டெஷ்லி இன் அறையில் பெரும் தொகை கொண்ட ஒரு பை கண்டறியப்பட்டது.

துருக்கிய பத்திரிகையின் இந்தக் குற்றச்சாட்டுகளை தளபதி காம்ப்பெல் கோபாவேசமாய் நிராகரித்தார். இந்த கதைக்கு “பதில் சொல்ல அவசியப்படவில்லை” என்றும் இது “முற்றிலும் அபத்தமானதாக இருக்கிறது” என்றும் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலிடம் கூறினார். ஏற்கனவே சென்ற வாரத்தில் பராக் ஒபாமா தெரிவித்திருந்தார்: “ஒரு சதி முயற்சி குறித்து முன்கூட்டிய தகவல் எதுவும் எங்களுக்குத் தெரிந்திருந்தது என்பதான, அதில் அமெரிக்கா சம்பந்தப்பட்டிருந்தது என்பது மாதிரியான, நாங்கள் துருக்கிய ஜனநாயகத்திற்கு முழு ஆதரவளிக்கிறோம் என்பதல்லாத எதனையும் கூறுகின்ற எந்தச் செய்திகளும் முற்றிலும் பொய்யானவையே, சந்தேகத்திற்கிடமில்லாமல் பொய்யானவையே.”

Yeni Safak இன் செய்தியில் இருக்கின்ற அத்தனை விபரங்களுமே உண்மையா இல்லையா என்பதைத் தீர்மானிப்பது சாத்தியமில்லைத்தான். ஆனால் “அபத்தமானது” மற்றும் “முற்றிலும் பொய்யானது” என்பதற்கெல்லாம் எட்டாத் தூரத்தில், பெண்டகனும் சிஐஏ உம் சதி முயற்சியில் ஒரு முக்கியமான கரம் கொண்டிருந்தன என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.

சுமார் 5,000 அமெரிக்க விமானப்படை வீரர்களைக் கொண்டிருப்பதோடு, ஐரோப்பாவில் அமெரிக்க அணு ஆயுதங்களது மிகப்பெரும் கிடங்காக இருப்பதும், சிரியா மற்றும் ஈராக்கிற்கு எதிரான அமெரிக்க தலைமையிலான குண்டுவீச்சுப் பிரச்சாரத்திற்கான தளமாக இருப்பதுமான இன்சிர்லிக் (Incirlik) விமானத் தளம் தான் இந்த சதியின் மையமாக இருந்தது என்பது ஏற்கனவே மிக நன்றாகவே ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது.

இந்த சதிமுயற்சியின் போது சதியில் ஈடுபட்டிருந்தவர்களால் இயக்கப்பட்ட துருக்கிய போர் விமானங்கள் அமெரிக்க இராணுவத்தின் கண்களின் முன்பே இன்சிர்லிக் (Incirlik) இன் உள்ளே வருவதும் வெளியே செல்வதுமாய் இருந்திருந்தன. இந்த சதி தோல்வியடைவது தெளிவான உடன், இத்தளத்தின் தளபதியான ஜெனரல் பெகிர் எர்கான் வான் அமெரிக்காவிடம் தஞ்சம் கோரினார். இயல்பாக, அமெரிக்காவில் இருந்த அவரது ஆதரவாளர்கள் கைவிட்டதன் பின்னர், இத்தளத்திலிருந்த அவரும் மற்ற சதி-ஆதரவு படையினர்களும் கைதுசெய்யப்பட்டனர்.

இந்த தோல்வியடைந்த சதிக்குப் பிந்தைய மிகக் குறுகிய காலத்திற்குள், துருக்கியின் தொழிலாளர் அமைச்சரான Suleyman Soylu, Haberturk ஒளிபரப்பு நிறுவனத்திடம் பேசுகையில், “இந்த சதியின் பின்னால் அமெரிக்கா இருக்கிறது” என்று நேரடியாகக் குற்றம்சாட்டினார்.

அமெரிக்க புவிமூலோபாய நலன்களைப் பாதுகாக்கும் பொருட்டு துருக்கியில் இராணுவ சதிகளுக்கு ஆதரவளித்த ஒரு நெடிய மற்றும் குருதிகொட்டும் வரலாறு அமெரிக்காவுக்கு இருக்கிறது என்பது அனைவரும் அறிந்த விடயமே. 1960 இல் அப்போதைய பிரதமரான அட்னான் மென்டெரெஸ் (Adnan Menderes) பொருளாதார உதவி கோரி மாஸ்கோவை நோக்கித் திரும்பிய சமயத்தில் அவருக்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு அமெரிக்கா ஆதரவளித்தது. 1980 இல் துருக்கியின் விமானப் படை தலைவர் அமெரிக்காவில் இருந்தான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துத் திரும்பிய சில மணி நேரங்களில் ஆட்சிக்கவிழ்ப்பு சதி நடவடிக்கை தொடக்கப்பட்டிருந்தது. துருக்கி அரசாங்கத்தில் இருந்த எவருக்கும் முன்னால் இந்த கவிழ்ப்பு நடவடிக்கை குறித்து அமெரிக்காவின் வெளியுறவுத் துறை பகிரங்கமாக அறிவித்தது.

இந்த சமீபத்திய சதி முயற்சிக்கு அமெரிக்க அரசாங்கம் அளித்த ஆரம்பகட்ட பதிலிறுப்பு மிகவும் சந்தேகத்துக்குட்படக் கூடிய வகையில் இருந்தது. ஆட்சிக்கவிழ்ப்பு சதி இன்னும் கட்டவிழ்ந்து கொண்டிருந்த நேரத்தில், அமெரிக்க வெளியுறவுச் செயலரான ஜோன் கெர்ரி மேலோட்டமான வார்த்தைகளில் “துருக்கிக்குள்ளாக ஸ்திரநிலைக்கும் தொடர்ச்சிக்கும்” அழைப்புவிடுத்தார். 2013 இல் எகிப்தில் இஸ்லாமிய ஜனாதிபதி முகமது முர்ஸிக்கு எதிராய் அமெரிக்க ஆதரவுடன் நடந்த இராணுவக் கவிழ்ப்பு விடயத்தில் போல், ஜனநாயகரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி காப்பாற்றப்பட வேண்டும் என்பதான எந்த அழைப்பையும் அமெரிக்கா விடுக்கவில்லை என்பதுடன் அவரது தனிமனிதப் பாதுகாப்புக்கோ அல்லது அவர் உயிர் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்கோ எந்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கவில்லை. 

இந்த கவிழ்ப்பு சதி வெற்றிபெறுவதற்கும் எர்டோகன் உயிர்பிழைப்பதை விட இறந்து போவதற்குமே ஒபாமா நிர்வாகம் உண்மையில் விரும்பியிருந்தது என்ற உண்மையானது அமெரிக்க ஊடகங்களின் பதிலிறுப்பில் மிகத் தெளிவாக வெளிப்பட்டது. இந்த கவிழ்ப்பு சதி தோல்வியடைந்து விட்டிருந்தது என்பது மிகத் தெளிவானதன் பின்னர், எர்டோகனையும் அவரது அரசாங்கத்தையும் கண்டனம் செய்கின்ற ஒரு ஒருமித்தான பிரச்சாரத்தை முன்னணி செய்தித்தாள்கள் தொடங்கின. ஒரு சில உதாரணங்களை மட்டும் இங்கே குறிப்பிடுவோம்: துருக்கியின் ஜனாதிபதி “துருக்கியின் பன்மைத்தன்மைக்கு எதிராக தனது சொந்த கவிழ்ப்பு சதியை அரங்கேற்றினார்” என்று தி எகனாமிஸ்ட் குற்றம்சாட்டியது; “துருக்கியின் தோல்வியடைந்த கவிழ்ப்பு சதி புட்டினுக்கு உதவிசெய்கிறது” என்று தி ஹில் புகாரிட்டது; நியூயோர்க் டைம்ஸ் தனது தலையங்கப் பக்கங்களை குலானுக்காய் திறந்துவிட்டது.

இந்த சதியில் அமெரிக்காவின் ஈடுபாடு குறித்த கூடுதல் ஆதாரங்கள் வெளிவருகின்ற நிலையில், துருக்கிக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு மேலும் விரிசலடைந்து கொண்டிருக்கிறது. அமெரிக்கா உடனடியாக குலானை நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற பகிரங்க அழைப்பை துருக்கிய அரசாங்கம் செவ்வாயன்று மீண்டும் விடுத்தது. வெளியுறவு அமைச்சரான Mevlut Cavusoglu அல் ஜசீராவில் வெளியான ஒரு கட்டுரையில், “அவருக்கு தஞ்சமளிப்பது குறித்து அமெரிக்கா வலியுறுத்துவதில் துருக்கி மக்கள் திகைப்படைந்துள்ளனர்’ என்று அறிவித்ததோடு நாட்டிலிருந்து வெளியேற்றும் உத்தரவே அமெரிக்கா மற்றும் துருக்கி இடையிலான உறவுகளின் வடிவத்தை “வருங்காலத்தில் தீர்மானிக்கக் கூடியவை”யாக ஆகலாம் என்றும் எச்சரித்தார். அமெரிக்காவினால் பாதுகாக்கப்படுகின்ற இந்த மதகுருவின் ஏற்பாட்டிலேயே இந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி நடந்திருந்தது என்றே நாட்டின் சுமார் மூன்றில் இரண்டு பங்கு பேர் நம்புவதாக கருத்துக்கணிப்பு நிறுவனமான Andy-Ar நடத்தியிருந்த கருத்து வாக்கெடுப்பு ஒன்று செவ்வாயன்று காட்டியது.