ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

A dangerous turn to economic nationalism

பொருளாதார தேசியவாதத்தை நோக்கிய ஓர் அபாயகரமான திருப்பம்

Nick Beams
12 July 2016

திங்களன்று பைனான்சியல் டைம்ஸில் பிரசுரமான முன்னாள் அமெரிக்க நிதி செயலர் லாரன்ஸ் சம்மர்ஸின் ஒரு கருத்துரை, ஆளும் வட்டாரங்களில் எழுச்சி அடைந்து வரும் பின்வரும் இரண்டு அபிவிருத்திகளுக்கு அறிகுறியாக உள்ளது: ஒன்று உலகளாவிய பொருளாதார நிலை குறித்து அதிகரித்து வரும் குழப்பங்கள், மற்றது, பாதுகாப்புவாதம் மற்றும் பொருளாதார தேசியவாதம் நோக்கிய ஒரு திருப்பம் ஆகியவையாகும்.

“கட்டுப்படுத்தமுடியாத பூகோளமயமாக்கலை (reflex globalism) அல்ல பொறுப்பான தேசியவாதத்தையே வாக்காளர்கள் விரும்புகிறார்கள்" என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்ட அக்கட்டுரை குறிப்பிடத்தக்கதாகும், ஏனென்றால் கிளிண்டன் நிர்வாகத்தில் அவர் இருந்த காலத்தில் சம்மர்ஸ் "சுதந்திர சந்தை" திட்டநிரலுக்கான மிக முக்கிய ஆதரவாளர்களில் ஒருவராக, முதலாளித்துவ பூகோளமயமாக்கலின் நன்மைகளை பெருமைப்படுத்தியவர் ஆவார்.

சாதனையளவிற்கு குறைந்த வட்டி விகிதங்களுக்கு இடையிலும் 2008 நிதியியல் நெருக்கடிக்குப் பின்னர் பொருளாதார மீட்சியை ஊக்குவிப்பதற்கான அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்திருக்கும் நிலையில், சம்மர்ஸ் சமீபத்திய காலத்தில் நிரந்தரமான வளர்ச்சி குறைவு மற்றும் பின்தங்கிய நிலைமைக்கு இட்டுச் செல்லும் "நீடித்த மந்தநிலைமையின்" அபாயங்களைக் குறித்து எச்சரிக்கிறார்.

சம்மர்ஸ் கருத்துப்படி, ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான வாக்குகள் மற்றும் குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் டோனால்ட் ட்ரம்ப் இன் வெற்றி ஆகியவை "இரண்டாம் உலக போருக்குப் பின்னர் அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் வழமையாகி உள்ள ஒப்பீட்டளவில் சுதந்திர பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக வாக்காளர்கள் கிளர்ந்தெழுந்து வருவதை" காட்டுகிறதாம். இத்துடன் சேர்ந்து, ஐரோப்பாவின் பெரும்பகுதிகளிலும், அத்துடன் இலத்தீன் அமெரிக்காவிலும் பொருளாதார ஒருங்கிணைப்புக்கு பரந்துபட்ட மக்கள் எதிர்ப்பு அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த காலங்களின் “பிரதான அணுகுமுறை போக்கு" (mainstream approach) என்று சம்மர்ஸ் எதை அழைக்கிறாரோ அது, “சர்வதேச ஒருங்கிணைப்பின் பொருளாதார விளைவுகளை ஊதிப் பெரிதாக்கிய வார்த்தைஜாலங்களை" உள்ளடக்கி இருக்கிறதாம். ஆனால் இப்போது "வல்லுனர்களின் அச்சுறுத்தப்பட்ட பன்முகத்தன்மை விளைவுகளை ஆதரிப்பது மீதான மக்களின் விருப்பம் இத்தருணத்தில் செயலிழந்து போயிருப்பதாக தெரிகிறது.”

“அரசின் அடிப்படை கடமைப்பாடு என்பது ஏதோவிதத்தில் உலகிற்கு நல்லது செய்வது என்று வார்த்தையளவில் வெறும் கருத்துருவைப் பின்பற்றுவதல்ல, குடிமக்களின் நலன்களை அதிகரிப்பதாகும் என்ற கருத்திலிருந்து ஒரு புதிய அணுகுமுறையைத் தொடங்க வேண்டியுள்ளது,” என்று சம்மர்ஸ் அறிவுறுத்துகிறார்.

"சுதந்திர சந்தையும்" மற்றும் பூகோளமயமாக்கலும் தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு வரும் மற்றும் உலக மக்களின் வாழ்க்கை தரங்களை அதிகரிக்கும் என்று பிரகடனப்படுத்திய முதலாளித்துவ வர்க்கத்தின் ஒட்டுமொத்த முன்னோக்கின் அடித்தளத்திலேயே நெருக்கடி உள்ளது. இந்த கோட்பாடு 1990களில் மற்றும் புதிய நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் ஒருவிதமான உலகரீதயான சமயக்கொள்கையைப் போல ஊக்குவிக்கப்பட்டது. 2016 ஜனாதிபதி தேர்தல் "அமெரிக்க பொருளாதாரத்தின் தோல்வியுற்ற வாக்குறுதிகளால்" உந்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டு, இந்த நெருக்கடியும் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் சமீபத்திய கட்டுரை ஒன்றில் அடிக்கோடிடப்பட்டுள்ளது.

முந்தைய முன்னோக்கு தோல்வியடைந்துவிட்டது என்பதை பகிரங்கமாக ஒப்புக்கொண்டு அந்த கட்டுரை அறிவிக்கிறது: “கடந்த ஒன்றரை தசாப்த காலம், நவீன பொருளாதார மற்றும் நமது அரசியல் அமைப்புமுறை குறித்த அடிப்படை அனுமானங்களைத் தலைகீழாக்கி, மிகவும் கொந்தளிப்பானதாக மற்றும் ஏமாற்றுகரமானதாக நிரூபணமாகி உள்ளது. இந்த தொடர்ச்சியான ஏமாற்றங்கள், டோனால்ட் ட்ரம்ப் மற்றும் பேர்ணி சாண்டர்ஸ் ஐ உயர்த்தி நவீன வரலாற்றில் மிகவும் முன்அனுமானிக்க முடியாத மற்றும் வழக்கத்திற்கு மாறான அரசியல் காலகட்டங்களில் ஒன்றை ஏற்படுத்தி உள்ளது.”

மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமைகளின் பாதிப்பை வெளிப்படுத்தும் தொடர்ச்சியான அமெரிக்க புள்ளிவிபரங்களை அது மேற்கோளிடுகிறது: 2000 க்கு பின்னர் நடுத்தர குடும்பங்களின் நிஜமான வருவாயில் 7 சதவீத அளவிற்கு வீழ்ச்சி, தேசிய வருவாயில் தொழிலாளர்களின் பங்கு 66 சதவீதத்தில் இருந்து 61 சதவீதமாக சரிவு, உற்பத்தி தொழில்துறையில் வேலை இழப்புகள், வேலைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அல்லது வருவாய் வளர்ச்சியை உருவாக்கும் புதிய தொழில்நுட்பங்கள் இல்லாமை மற்றும் நூலக நிர்வாகிகளில் இருந்து பொறியியல் வல்லுனர்கள் வரையில் தொழில்திறன்சார் வேலைகள் "வெறுமையாகி இருப்பது" ஆகியவை இதில் உள்ளடங்கும்.

இத்தகைய பொருளாதார மாற்றங்கள், பெருந்திரளான மக்களை ஒட்டுமொத்த அரசியல் மற்றும் பொருளாதார ஸ்தாபகத்திடமிருந்து ஆழமாக அன்னியப்பட செய்துள்ளது. சமீபத்திய கருத்துக்கணிப்புகளின்படி, பத்து அமெரிக்கர்களில் ஏழு பேர் நாடு தவறான பாதையில் செல்வதாக நம்புகிறார்கள் மற்றும் சுமார் 61 சதவீத ட்ரம்ப் ஆதரவாளர்களும் மற்றும் 91 சதவீத சாண்டர்ஸ் ஆதரவாளர்களும் பொருளாதார அமைப்புமுறை "சக்தி வாய்ந்தவர்களின் நலன்களை நோக்கி திரும்பி இருப்பதாக" நம்புகிறார்கள்.

அவ்விரு கட்டுரைகளுமே ட்ரம்ப் மற்றும் சாண்டர்ஸ் நிகழ்வுபோக்கு மீது கவனம் செலுத்தி இருப்பதானது அரசியல் ஸ்தாபகத்திற்குள் மேலோங்கி வரும் இரண்டு அச்சங்களைச் சுட்டிக்காட்டுகின்றது. ஒருபுறம் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் திட்டநிரலுக்கு தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு அதிகரித்திருப்பதன் மீது வளர்ந்து வரும் கவலை, இது மில்லியன் கணக்கானவர்கள் குறிப்பாக இளைஞர்கள் தன்னைத்தானே "ஜனநாயக சோசலிசவாதியாக" அறிவித்துக் கொண்ட சாண்டர்ஸிற்கு வாக்களித்ததில் பிரதிபலித்தது, மறுபுறம், ட்ரம்ப் இனால் அடையாளப்படுத்தப்படும் அதிதீவிர வலதுசாரி தேசியவாதம் மற்றும் அரை-பாசிசவாத அரசியல் போக்குகளின் வளர்ச்சி.

சம்மர்ஸ் அவரின் கருத்துரையின் முடிவிலிருந்து ஒரு அதிதீவிர வலதுசாரி வெளிப்பாட்டின் அபாயத்தை சுட்டிக்காட்டுகிறார்: “கட்டுப்படுத்தமுடியாத சர்வதேசியவாதம் (Reflex internationalism) பொறுப்பான தேசியவாதத்திற்கு வழிவிட வேண்டியிருக்கிறது அல்லது இன்னும் நிறைய சிக்கலான வெகுஜன வாக்கெடுப்புகள் மற்றும் உயர் பதவிகளுக்கு போட்டியிடும் வெகுஜன வார்த்தைஜாலங்களை மட்டுமே நாம் காண வேண்டியிருக்கும்,” என்கிறார்.

எவ்வாறிருப்பினும் அவர் முன்மொழியும் "பகுத்தறிவார்ந்த" பொருளாதார தேசியவாதம் என்பது வலதுசாரி வெகுஜனவாத அதிகரிப்பிற்கு ஒரு மாற்று மருந்தல்ல. அது பெரிதும் அதேபோன்ற கொள்கைகளுக்கான ஒரு தத்துவார்த்த நியாயப்பாட்டைத்தான் வழங்குகிறது. இவ்விடயத்தில், “முற்போக்கு" ஜனநாயக சாண்டர்ஸ் ஆதரிக்கும் ஒரு பாதுகாப்புவாத வர்த்தக கொள்கை ட்ரம்ப் முன்வைக்கும் கொள்கையிலிருந்து மிக குறைவாகத்தான் வேறுபடுகிறது.

அவர் மிகவும் விடாப்பிடியாக ஊக்குவித்த கடந்த மூன்று தசாப்த கால பொருளாதார திட்டநிரலின் பேரழிவுகரமான விளைவுகளைக் குறித்து சம்மர்ஸ் வழங்கும் எல்லா விமர்சனமும், அதன் விளைவுகளை மாற்றுவதற்கான எந்த வேலைத்திட்டத்தையும் கொண்டிருக்கவில்லை, இது அவரிடமும் கிடையாது அல்லது ஆளும் அரசியல் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்தாபகத்தில் எவரிடமும் கிடையாது.

“பொறுப்பான" அல்லது வேறுவிதத்திலான பொருளாதார தேசியவாதத்திற்குத் திரும்புதல் என்பது ஒரு வரலாற்று சமாந்தரத்தைக் கொண்டுள்ளது. பெருமந்தநிலைமைக்கு இடையில் 1934 இல் தேசியவாதம் மற்றும் பொருளாதார வாழ்வு என்ற அவரின் கட்டுரையில் லியோன் ட்ரொட்ஸ்கி எழுதுகையில், தசாப்தங்களாக வர்த்தகம் மற்றும் சர்வதேச தொழிற்பங்கீடு குறித்த நற்கூறுகளைப் போதித்த பின்னர், முதலாளித்துவ வர்க்கம் "தேசிய சமையற்கட்டுக்கு திரும்ப" அழைப்பு விடுக்கிறது என்றார்.

இந்த முன்னோக்கு வெளிப்படையான வலதுசாரிகள் மற்றும் அடோல்ப் ஹிட்லர் போன்ற பாசிவாத சக்திகளால் மட்டும் முன்னெடுக்கப்படவில்லை என்பதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். இது "நவீன" முதலாளித்துவ பொருளாதார கோட்பாட்டின் ஸ்தாபகர்களில் ஒருவராக கருதப்படும் ஜோன் மேனார்ட் கேய்ன்ஸ் போன்றவர்களது "முற்போக்குகளின்" கோட்பாடாக இருந்தது, இவரின் பகுப்பாய்வு "நீடித்த மந்தநிலைமை" குறித்த சம்மர்ஸின் எச்சரிக்கைகளில் அவரால் எடுத்தாளப்பட்டுள்ளது.

1914 இல் முதலாம் உலக போர் வெடித்து வெறும் 25 ஆண்டுகளுக்குப் பின்னர், 1930 களில், பொருளாதார தேசியவாதத்தின் விளைவு என்னவென்றால், அது பாசிசவாத அங்கியை போர்த்தி இருந்திருந்தாலும் சரி அல்லது "முற்போக்கான" அங்கியை போர்த்தி இருந்திருந்தாலும் சரி, உலக வரலாற்றின் மிகவும் காட்டுமிராண்டித்தனமான சம்பவமாக 1939 இல் இரண்டாம் உலக போரின் வெடிப்பாக இருந்தது. இந்த விளைவு இப்போதைய சகாப்தத்தில் வேறுவிதமாக இருக்கப் போவதில்லை, அதற்கான அறிகுறிகள் முன்பினும் அதிக வெளிப்படையாக ஆகி வருகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டீன் லகார்ட் பைனான்சியல் டைம்ஸ் உடனான ஒரு சமீபத்திய நேர்காணலில் போர் அபாயத்தைக் குறித்து எச்சரித்து கருத்துரைக்கையில், அதிகரித்துவரும் தேசியவாத மற்றும் பாதுகாப்புவாத பொருளாதார நடவடிக்கைகளது பேரலைக்கு இடையே உலகம் "1914 சூழலுக்கான" அதிகரித்த சாத்தியக்கூறை முகங்கொடுக்கிறது என்றார்.

சம்மர்ஸ் போன்ற ஸ்தாபக பிரமுகர்களால் பொருளாதார தேசியவாதம் பகிரங்கமாக பெருமைப்படுத்தப்படுவது, சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கான அரசியல் முன்னோக்கின் மீது அடிப்படை கேள்விகளை முன்வைக்கின்றது.

வாழ்க்கை தரங்கள் மீதான தாக்குதல்கள், அதிகரித்தளவில் சர்வாதிகார ஆட்சி வடிவங்களின் அபிவிருத்தி மற்றும் அதிகரித்துவரும் போர் அபாயம் ஆகியவை உள்ளவாறே பூகோளமயமாக்கலில் இருந்து எழவில்லை, மாறாக இந்த முதிர்ச்சியடைந்துகொண்டிருக்கும் நிகழ்வானது தனியார் இலாபத்தின் அடிப்படையிலும் மற்றும் போட்டி வல்லரசுகள் மற்றும் தேசிய அரசுகளுக்குள் உலகம் பிளவுற்றிருக்கும் அடிப்படையிலும் அமைந்துள்ள முதலாளித்துவ சமூக உறவுகளின் பிற்போக்குத்தனமான மற்றும் காலங்கடந்த அமைப்புமுறைக்கு உள்ளே நடக்கிறது.

மனிதயினம் முகங்கொடுக்கும் இன்றியமையாத பிரச்சினை, ட்ரொட்ஸ்கியின் வார்த்தைகளில் கூறுவதானால், “ஒட்டுமொத்தமாக முதலாளித்துவ அபிவிருத்தியும் தீர்க்க முடியாத தடைகள் மற்றும் முரண்பாடுகளையும் எதிர்நோக்குவதுடன் மற்றும் அதிலிருந்து மீளமுடியாது அவற்றை நோக்கி முட்டிமோதிக்கொண்டு செல்கின்றது.”

இந்த வரலாற்று நெருக்கடிக்கு ஒரு தீர்வை வழங்க கூடிய ஒரே சமூக சக்தியாக இருப்பது சர்வதேச தொழிலாள வர்க்கமாகும். பொருளாதார மற்றும் அரசியல் தேசியவாதத்தின் சகல வடிவங்களையும் தொழிலாளர்கள் நிராகரித்து, முதலாளித்துவ உற்பத்தி முறையின் பிற்போக்குத்தனமான தளைகளில் இருந்து அதே உருவாக்கிய உற்பத்தி சக்திகளை விடுவிப்பதற்காக, சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அப்போதுதான் இந்த ஆதார வளங்கள், ஒரு திட்டமிட்ட உலக சோசலிச பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதன் மூலமாக, மனிதயின தேவையை பூர்த்திசெய்ய பயன்படுத்த முடியும்.