ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Halt the attacks on living conditions! Fight for socialist policies!

வாழ்க்கை நிலைமைகள் மீதான தாக்குதல்களை நிறுத்து! சோசலிச கொள்கைகளுக்காகப் போராடு!

By the Socialist Equality Party (Sri Lanka)
12 July 2016

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்து வெறும் 18 மாதங்களே முடிந்துள்ள நிலையில், அவரது "தேசிய ஐக்கிய அரசாங்கம்", ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் பேரில் அது முன்னெடுக்கும் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களால், தொழிலாளர்கள், இளைஞர்கள், கிராமப்புற ஏழைகள் மத்தியில் வளர்ந்து வரும் எதிர்ப்புக்கு முகங்கொடுக்கின்றது.

கடந்த ஆறு வாரங்களாக தபால், சுகாதாரம் மற்றும் கல்வி துறைகளிலும், அத்துடன் கிராபைட் (பென்சிற்கரி) சுரங்கங்கள் மற்றும் பெருந்தோட்டங்களிலும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவர்கள் உட்பட தொழில் வல்லுனர்களும் தமது தொழில் மற்றும் வேலை நிலைமைகள் சம்பந்தமாக எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்தனர். அரசாங்கத்தை காக்க உறுதி கொண்டுள்ள தொழிற்சங்கங்கள், வேண்டுமென்றே எந்தவொரு அரசியல் போராட்டத்தையும் தடுத்துவிட்ட காரணத்தாலேயே, இந்த போராட்டங்கள் இடையிடையே இடம்பெறுவதோடு தனிமைப்படுத்தப்பட்டும் விட்டன.

கடந்த வாரம், நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள விவசாயிகள், உர மானியப் பணம் தாமதமாவதை எதிர்க்க இந்த ஆண்டு இரண்டாவது முறையாக தெருக்களில் இறங்கினர். ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் கல்வி தனியார்மயமாக்கம் மற்றும் தங்கள் பிரச்சாரத்தின் மீதான பொலிஸ் தாக்குதல்களுக்கு எதிராக தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிறிய வர்த்தகர்கள் மற்றும் கடை தொழிலாளர்களும் சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளுக்கு ஏற்ப அரசாங்கத்தால் அதிகரிக்கப்பட்ட வாட் (பெறுமதி சேர்ப்பு வரி) வரியை குறைக்கக் கோரி ஒன்றன் பின் ஒன்றாக நகரங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

தீவின் வடக்கு மற்றும் கிழக்கில், தமிழ் மக்கள் தமது சமூக நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் நசுக்கப்படுவதற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 2009ல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இனவாத யுத்தம் முடிவடைந்துள்ள போதிலும், இந்த முன்னாள் யுத்தப் பிராந்தியம் இன்னமும் ஒடுக்குமுறைக்கும் இராணுவ ஆக்கிரமிப்புக்கும் உள்ளாக்கப்படுகின்றது.

ஜூலை 3 அன்று, சண்டே டைம்ஸ் பத்திரிகையின் அரசியல் கட்டுரையாளர், ஆளும் வர்க்கம் எதிர்கொண்டுள்ள கொந்தளிப்பான நிலைமையை சுருக்கி எழுதியிருந்தார்: "அரச புலனாய்வு முகவர்கள் வெளிப்படுத்துகின்றவாறு, மக்களின் அதிருப்தியை ஓரளவிற்கு அளவிட முடியும். இந்த வாரம் பல்வேறு குழுக்களால் நாடு முழுவதும் வெவ்வேறு காரணங்களுக்காக 56 ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ள போதிலும், அவை அனைத்தும் அரசாங்கத்திற்கு எதிரானவை. அதில் ஒரு வலுவான செய்தி உள்ளது."

சிறிசேன, ஜனநாயகத்தை பாதுகாப்பதாகவும் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் எதேச்சதிகார ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதாகவும் வாக்குறுதியளித்து, ஒரு போலிப் பிரச்சாரத்தின் அடிப்படையில் 2015 ஜனவரியில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஆட்சிக்கு வந்தார். இராஜபக்ஷ அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் என்ற வகையில், சிறிசேன அவரது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (ஸ்ரீ.ல.சு.க.) பகுதியனரதும், பின்னர் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினதும் (ஐ.தே.க.) ஆதரவைப் பெற்றிருந்தார்.

தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் என்று அழைக்கப்பட்டவையினதும் ஒரு அணியும், அதே போல், நவசமசமாஜக் கட்சி (ந.ச.ச.க.) மற்றும் ஐக்கிய சோசலிசக் கட்சி (ஐ.சோ.க.) போன்ற போலி இடது குழுக்களுமாக அனைத்தும், இராஜபக்ஷவின் பொலிஸ்-அரச வழிமுறைகள் மற்றும் வாழ்க்கை தரத்தின் மீது தாக்குதல்களுக்கு ஒரு "ஜனநாயக மாற்றீடாக" சிறிசேனவைத் தூக்கிப் பிடித்தன. எதிர்க்கட்சிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA) மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) போன்றவையும் சிறிசேனவின் பிரச்சாரத்தின் பின்னால் தங்களது பலத்தை செலுத்தின.

சிறிசேனவின் தேர்வு, ஒரு "ஜனநாயகப் புரட்சியை" பிரதிபலிக்கின்றது என்ற கூற்று, எப்போதும் ஒரு மோசடி ஆகும். இராஜபக்ஷ நீக்கப்பட்டமை, வாஷிங்டன் மற்றும் புது டெல்லியுடன் நெருக்கமாக செயற்பட்டு, ஸ்ரீ.ல.சு.க. மற்றும் ஐ.தே.க.யினதும் முக்கிய பிரமுகர்களின் ஈடுபாட்டுடன், கவனமாக திட்டமிடப்பட்ட ஒரு ஆட்சி மாற்றமாகும். இராஜபக்ஷவின் யுத்தத்தை ஆதரித்த, அவரது ஜனநாயக விரோத வழிமுறைகளை கண்டும் காணாதது போல் இருந்த அமெரிக்காவுக்கு, பெய்ஜிங் உடனான அவரது நெருக்கமான உறவுகளை பொறுத்துக்கொள்ள முடியாமல் போனது.

சிறிசேன மற்றும் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராகக் கொண்ட புதிய "தேசிய ஐக்கிய" அரசாங்கம், முறையாகக் அமெரிக்கவின் "ஆசியாவில் முன்னிலை" கொள்கையுடனும் சீனாவிற்கு எதிரான அதன் யுத்த தயாரிப்புடனும் நாட்டை ஒருங்கிணைத்தது. அதே நேரத்தில், அது, பெய்ஜிங்கிற்கு எதிரான போர் முயற்சிகளில் வாஷிங்டனின் முக்கிய மூலோபாய பங்குதாரரான இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தி வந்துள்ளது.

அரசாங்கம், தீவின் இனவாத யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவது, சர்வாதிகார நிறைவேற்று அதிகாரங்கள் கொண்ட ஜனாதிபதி முறையை தூக்கிவீசுவது போன்ற சிறிசேனவின் வாக்குறுதிகள் உட்பட தனது “ஜனநாயக பாசாங்குகளை" துரிதமாக கைவிட்டுவிட்டது. சில ஒப்பனை ரீதியான மாற்றங்களை தவிர, இராஜபக்ஷ கையாண்ட சகல நிறைவேற்று அதிகாரத்தையும் சிறிசேன தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

இப்போது, உலக முதலாளித்துவத்தின் ஆழமடைந்துவரும் பொறிவு இலங்கை மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்ற நிலையில், அரசாங்கமானது நெருக்கடியின் சுமையை தொழிலாளர்கள் மற்றும் வறியவர்களின் முதுகில் சுமத்துவதற்காக அதன் சிக்கன திட்டத்தை துரிதப்படுத்தியுள்ள அதேவேளை, நாட்டை மேலும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு திறந்துவிடுகின்றது. பொருளாதாரம் குவிந்துவரும் கடன்களை எதிர்கொள்வதுடன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவில் மந்தநிலை போக்குகளாலும், அத்துடன் அமெரிக்காவுடன் ரஷ்யாவுடன் மோதிக்கொள்வதாலும் மத்திய கிழக்கில் போர்களாலும் இலங்கையின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியம், கடுமையான அந்நிய செலாவனி நெருக்கடியை தடுப்பதற்காக 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்க உடன்பட்டிருந்தாலும், கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது. இதில், வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறையை 2020ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீதம் வரை (கடந்த ஆண்டு பற்றாக்குறையை விட அரைவாசியாக) குறைப்பதும், அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார் மயமாக்குவதும், விலை மானியங்களை குறைப்பதும் மற்றும் நிதித் துறையை சர்வதேச முதலீடுகளுக்கு முழுமையாக திறந்துவிடுவதும் அடங்கும்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கு பிரிட்டிஷ் எடுத்த முடிவிற்கு பிரதிபலிக்கும் விதமாக, அரசாங்கம் இந்தியா, சீனா, பிரிட்டன், ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் உடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை துரிதப்படுத்தும் என்று விக்கிரமசிங்க அறிவித்தார். இலங்கை உற்பத்தியாளர்கள் தமது "சர்வதேச போட்டித்" தன்மையை அதிகரிக்க முயற்சி செய்யும்போது, இந்த ஒப்பந்தங்கள் தவிர்க்க முடியாமல் தொழிலாளர்களின் தொழில் மற்றும் நிலைமைகள் மீது மேலும் தாக்குதல்கள் தவிர்க்க முடியாமல் கட்டவிழ்த்துவிடப்படும்.

அரசாங்கம் வாழ்க்கை நிலைமைகள் மீதான தாக்குதல்களை முன்னெடுக்கத் தொடங்கும் நிலையில், அது 30 ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்தின் போது கட்டியெழுப்பப்பட்ட பொலிஸ்-அரச எந்திரத்தை வலுப்படுத்தி வருகின்றது. அது தேசிய பாதுகாப்பு, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் தேசிய புலனாய்வு சம்பந்தமாக விரைவில் புதிய சட்டங்களை முன்வைக்க உள்ளது. மாணவர்களின் எதிர்ப்புக்கள் மீதான வன்முறையான பொலிஸ் தாக்குதல்கள், அரசாங்கம் தனது கொள்கைகளுக்கு விரோதமான மக்களின் எந்தவித எதிர்ப்பையும் அடக்குவதற்கு அரசின் முழு சக்தியையும் இரக்கமற்ற முறையில் பயன்படுத்தும் என்பது பற்றிய ஒரு எச்சரிக்கையே ஆகும்.

ஒவ்வொரு நாட்டிலும் போலவே, உலகப் பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள அதிகரித்து வரும் சமூக பதட்ட நிலைமைகளால் ஆளும் வர்க்கங்கள் சீர்குலைந்து போயுள்ளன. ஆளும் கூட்டணியில் ஸ்ரீ.ல.சு.க. மற்றும் ஐ.தே.க. இடையேயான உறவும் ஊசலாடுகின்றது.

இராஜபக்ஷ, அதிருப்திகொண்ட 30 ஸ்ரீ.ல.சு.க. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், மற்றும் சிங்களப் பேரினவாதத்தை தூண்டும் பௌத்த பிக்குகள், இராணுவத்தின் ஒரு பிரிவினர் மற்றும் சிங்கள சமூகத்தின் பிற பிற்போக்கு பகுதியினருக்கும் அழைப்பு விடுத்தும் வெகுஜன அதிருப்தியை சுரண்டிக்கொள்ள முற்படும் ஏனைய பங்காளிகளுக்கும் தலைமை வகிக்கின்றார். அவர், ஒரு தீவிர வலதுசாரி இயக்கத்தை உருவாக்குவதற்கு முயற்சிக்கின்றார். அது அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபடவுள்ளதோடு தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதலை மேற்கொள்ளும்.

இவற்றுக்கு பிரதிபலிப்பாக, சிறிசேனவை அதிகாரத்தில் உட்கார வைத்த போலி-இடதுகள், சிவில் சமூகக் குழுக்கள் மற்றும் தொழிற்சங்கங்களும் அவரது அமெரிக்க-சார்பு அரசாங்கத்தையும் அதன் தொழிலாள வர்க்க விரோத கொள்கைகளையும் பாதுகாக்கும் முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளன. உதாரணமாக, பிரஜைகள் சக்தி மற்றும் நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கமும் (NMSJ) அரசாங்கம் "சரியான பாதைக்கு" திரும்ப வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து அதை விமர்சிக்கின்றன –அதாவது, சிறிசேனவின் போக்கை மாற்றுவதற்கு அவரை நெருக்க முடியும் என்ற ஆபத்தான மாயையை முன்னிலைப்படுத்துகின்றன.

கடந்த 18 மாதங்களில் அரசாங்கத்தை பாதுகாப்பதில், குறிப்பாக ஒரு கேடுகெட்ட பங்கை ஆற்றிவரும் நவசமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன, சிறிது வேறுபட்ட பாதையை எடுத்துள்ளார். "இராஜபக்ஷ இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புடன் ஒரு அரசியல் மாற்றத்திற்கு திட்டமிட்டுள்ளார்" என்று அவர் சமீபத்தில் எச்சரித்தார். இந்த போக்கு, முதலாளித்துவ "தேசிய ஐக்கிய" அரசாங்கத்திற்கு எதிராக வளர்ந்துவரும் வெகுஜன எதிர்ப்புக்களை அடிபணிய செய்ய உதவுதாகும்.

மற்றொரு போலி இடது குழுவான ஐக்கிய சோசலிச கட்சி, அரசாங்கத்தின் தாக்குதல்களை எதிர்கொள்ள "வேலைத் தளங்களில் ஐக்கிய குழுக்கள் மற்றும் தேசிய அளவிலான ஒரு தொழிலாளர் மையத்தையும்" அமைக்கப் பிரச்சாரம் செய்கின்றது. முன்னிலை சோசலிசக் கட்சி (FSP) "இடது" குழுக்களின் மையம் ஒன்றை கட்டியெழுப்ப வக்காலத்து வாங்குகிறது. அவற்றின் தாராளவாத கூட்டாளிகள் போலவே, ஐக்கிய சோசலிசக் கட்சி மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சியும், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன இயக்கத்தை கடுமையாக எதிர்ப்பதோடு எந்தவொரு நடவடிக்கையையும் அழுத்தம் கொடுக்கும் அரசியலுக்கு மட்டுப்படுத்துகின்றன. அந்த வழியில் அவை அரசாங்கத்துக்கு முண்டுகொடுக்கின்றன.

இலங்கையில் தொழிலாளர்களும் இளைஞர்களும் ஒரு புதிய சோசலிச, சர்வதேச முன்னோக்கின் பக்கம் திரும்புவதோடு, சிறிசேன-விக்கிரமசிங்க மற்றும் இராஜபக்ஷ கன்னைகள், அதேபோல் அவர்களின் அரசியல் பங்காளிகள், அவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் மற்றும் எடுபிடிகளிடம் இருந்து, அரசியல் ரீதியில் முறித்துக்கொள்ள வேண்டும்.

பிரான்ஸ், கிரீஸ் மற்றும் ஐரோப்பாவின் மற்ற பகுதிகளிலும், அமெரிக்கா, அதே போல் இந்தியா, சீனா மற்றும் ஆசியா எங்கிலும் எதிர்ப்புகளும் போராட்டங்களும் வளர்ந்து வரும் அறிகுறிகளுடன், சர்வதேச அளவிலான தொழிலாள வர்க்கப் போராட்டங்களின் எழுச்சியின் பாகமாகவே வேலைநிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் வெடித்துள்ளன. கொழும்பில் உள்ள முதலாளித்துவ வர்க்கத்தின் கட்சிகளில் தமது சமூக உரிமைகளை பாதுகாப்பதற்கான பங்காளிகளை இலங்கை தொழிலாளர்களால் காண முடியாது. மாறாக, உலகம் முழுவதும் உள்ள தமது வர்க்க சகோதர சகோதரிகள் மத்தியிலேயே காண முடியும்.

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தோழமைக் கட்சிகளுடன் இணைந்து, போர் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்தில் உலகம் பூராவும் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தும் ஒரு அரசியல் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.

2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தலின் போது, சோசலிச சமத்துவக் கட்சி பொதுச் செயலாளர் விஜே டயஸ் விளக்கியதாவது: "ஏகாதிபத்திய போர் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்தின் இலக்கு சர்வதேச ரீதியானதாக இருப்பது அவசியமாகும். ஏகாதிபத்தியம் அல்லது உலக பெருநிறுவனங்கள் மற்றும் நிதிய நிறுவனங்களின் கொள்ளையடிக்கும் நடவடிக்கைகளை, ஒரு தேசம் என்ற அடிப்படையில் இருந்து எதிர்ப்பது என்பது சொல்லளவிலேயே சாத்தியமற்றதாகும். அது எவ்வளவு பெரிய அல்லது சிறிய நாடாக இருந்தாலும் சரி."

தெற்காசியாவிலும் மற்றும் உலகம் பூராவும் சோசலிசத்துக்கான போராட்டத்தின் பாகமாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசு என்ற வடிவத்தில் ஒரு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்காகப் போராட தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது. அத்தகைய அரசாங்கம், சமூகத்தின் பெரும்பான்மை மக்களுடைய நலனுக்காக உற்பத்தியை நேர்மையாக ஒழுங்குபடுத்தக் கூடியவாறு, அனைத்து பிரதான நிறுவனங்கள், பெருந்தோட்டங்கள் மற்றும் வங்கிகளை தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்குவது உட்பட, சோசலிச கொள்கைகளை அமுல்படுத்தும். அது அனைத்து வெளிநாட்டு கடன்களையும் நிராகரிக்கும்.

இந்த அடிப்படையில் மட்டுமே பொதுக் கல்வி, சுகாதார பராமரிப்பு மற்றும் நலன்புரி திட்டங்கள் மற்றும் தொழிலாளர்களதும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகளதும் சகல சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு உண்மையான அரசியல் போராட்டத்தை முன்னெடுக்க முடியும். இந்த போராட்டங்களுக்கு தலைமை வகிக்க தேவையான வெகுஜன புரட்சிகர கட்சியாக சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்ப அதில் இணைந்துகொள்ளுமாறு நாம் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.