ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

EU maintains hard line toward UK over Brexit

பிரெக்ஸிட் விடயத்தில் ஐக்கிய இராச்சியத்தை நோக்கி கடுமையான நிலைப்பாட்டை ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து பராமரிக்கிறது

By Johannes Stern
  30 June 2016

உச்சிமாநாட்டின் இரண்டாவது நாளில், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள், வியாழனன்று ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவதற்கு ஐக்கிய இராச்சியம் வாக்களித்ததற்கு பின்னர் அதன் மீதான கடுமையான நிலைப்பாட்டை தொடர்ந்து பராமரித்தனர்.

பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் செவ்வாயன்று புரூசெல்ஸில் இருந்து கிளம்புவதற்கு முன்பாகவே, ஜேர்மன் சான்சலரான அங்கேலா மேர்க்கெல் கேமராக்களின் முன்னர் தோன்றி, விலகும் முடிவை சரிசெய்து விடலாம் என்று பிரிட்டிஷ் முதலாளித்துவத்தின் ஒரு சாரார் கொண்டிருந்த நம்பிக்கைகளைத் தகர்த்தார். “இது திரும்பப் பெறப்படுவதற்கான எந்த வழியும் எனக்குத் தென்படவில்லை என்பதை வெளிப்படையாக சொல்லிக் கொள்வதற்கு நான் விரும்புகிறேன்” என்று மேர்க்கெல் கூறினார்.

இது “இனிய கனவுக்கான நேரமல்ல... கருத்து வாக்கெடுப்பு முடிவே முன்னிருக்கும் யதார்த்தமாகும்” என்றார் சான்சலர். செப்டம்பரில் பிரிட்டன் இல்லாமல் இன்னுமொரு முறைசாரா உச்சிமாநாட்டிற்கு திட்டமிடப்பட்டிருந்ததை அவர் வரவேற்றார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரு உறுப்பு நாடாக இருப்பதில் இருந்து விலகுவதற்கான நடைமுறைகளை கட்டுப்படுத்தக் கூடிய பிரிவு 50 ஐ பிரிட்டிஷ் அரசாங்கம் இன்னும் அமல்படுத்தவில்லை என்ற போதும், புரூசெல்ஸில் நேற்று நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் எஞ்சிய 27 உறுப்புநாடுகளது கூட்டத்தில் கேமரூன் கலந்து கொள்ளவில்லை.

அதற்குப் பதிலாக, பிரிட்டன் வெளியேறுவதற்கான மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான அதன் வருங்கால உறவுகளுக்கான வழிகாட்டல்களை வகுக்கும் நோக்கத்தை, ஐரோப்பிய கவுன்சில் கொண்டிருந்ததாய் ஜேர்மன் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ வலைத் தளம் தெரிவித்தது. “விண்ணப்பம் வருகின்ற வரையில், ஐக்கிய இராச்சியத்துடன் முறையான அல்லது முறைசாரா பேச்சுவார்த்தைகள் எதுவும் இருக்க முடியாது” என்பதில் உச்சிமாநாட்டில் பங்கேற்ற “அனைவரும் உடன்பட்டனர்” என்று மேர்கெல் தெரிவித்தார்.

கேமரூன் அவரது நாடு வெளியேறுவது குறித்த தெளிவை எத்தனை விரைவாய் முடியுமோ அத்தனை விரைவாய் ஏற்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசுகள் வலியுறுத்தின என்பதை ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவரான ஜோன்-குளோட் ஜூங்கர் ஊர்ஜிதம் செய்தார். “அதைப் பிரதிபலிக்க மாதக் கணக்கில் நம்மிடம் அவகாசமில்லை” என்று உச்சிமாநாட்டிற்குப் பின்னர் அவர் தெரிவித்தார். முந்தைய ஊடக சந்திப்பு ஒன்றில் அவர் பிரெக்ஸிட் ஆதரவாளர்களை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். “பிரிட்டன் வெளியேறுவதற்கு பிரச்சாரம் செய்து விட்டு, இப்போது அவர்களுக்கு என்ன வேண்டும் என்று முழுமையாக நம்மிடம் சொல்லும் திறனில்லாமல் இருப்பவர்களை” புரிந்து கொள்ள முடியவில்லை என்றார். அவர்களுக்கு “ஒரு திட்டம்” இருக்கும் என்றே அவர் அனுமானித்திருந்தார்.

பிரிட்டன் துரிதமாக வெளியேறுவதற்கு ஆதரவாகவும், அதனுடன் சேர்ந்து ஐரோப்பாவின் இராணுவ சக்தி வலுவூட்டப்படுவதற்கு ஆதரவாகவும் பல நாட்களாய் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்ற ஜேர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சியினர் இந்த கடுமையான நிலைப்பாட்டு பாதையை பாராட்டினர். புரூசெல்ஸில் SPD இன் முன்னணி அரசியல்வாதிகளது ஒரு கூட்டம் நடப்பதையொட்டி SPD தலைவரும் துணை சான்சலருமான சிக்மார் காப்ரியல் பின்வருமாறு கூறினார்: “பிரிட்டனுடன் முறைசாரா பேச்சுவார்த்தைகள் இருக்காது என்பதையும் நாம் விரைவாக முடிவுகளை எட்டியாக வேண்டும் என்பதையும் அங்கேலா மேர்கெல் தெளிவாக்கி இருக்கிறார். யாரும், பேச்சுக்கேனும், ஒரு துளி எதிர்ப்பேனும் காட்டலாம் என்பதான எந்த கருத்தையும் அவர் தெளிவாக நிராகரித்திருந்தார்.”

ஐக்கிய இராச்சியத்தின் உடைவில் இது விளையுமானால் லண்டனை ஒரு உதாரணமாக நிறுத்துவதற்கு தான் ஆதரவாய் இருப்பதாக திங்களன்று ஜேர்மன் தினசரியான Handelsblatt க்கு அளித்த ஒரு நேர்காணலில் காப்ரியல் அறிவித்தார். “ஜோன்சன் மற்றும் கேமரூனின் அரசியல், ஐக்கிய இராச்சியம் உடையும் சாத்திய விளைவையும் கொண்டதாய் இருந்தது” என்றார் அவர். ஸ்காட்லாந்தும் வடக்கு அயர்லாந்தும் “ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு தாங்கள் விலக விரும்பவில்லை என்பதை தெளிவாகக் கூறி விட்டன.” இந்த கடும் நிலைப்பாட்டுக்குப் பின்னால் ஐரோப்பிய ஒன்றியம் முழுமையாக உருக்குலைந்து விடுமோ என்ற ஜேர்மன் மற்றும் ஐரோப்பிய உயரடுக்கின் அச்சம் ஒளிந்திருக்கிறது. கருத்துக்கணிப்புக்கு முந்தைய அதன் பதிப்பில் தனது அட்டைப் படத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடருமாறு பிரிட்டனுக்கு விண்ணப்பம் செய்திருந்த Der Spiegel அதன் சமீபத்திய பதிப்பில் முன்னணிக் கட்டுரையில் பின்வருமாறு எச்சரித்தது: “பிரிட்டன் வெளியேறுவதை முடிந்த அளவுக்கு சுலபமாக்குவதில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எந்த ஆர்வமும் இருக்க முடியாது. பிரிட்டிஷ் உதாரணம் தொற்றிக் கொள்ளக் கூடிய அபாயம் என்பது மிகப்பெரியதாகும்.”

அக்கட்டுரை தொடர்ந்து எழுதியது, ஏற்கனவே “பல ஐரோப்பிய நாடுகளில் ஜனரஞ்சகப் போக்குகள் (populist tendencies) ஒரு திருப்புமுனையை உணர்கின்ற நிலையில் ஒன்றுபட்ட ஐரோப்பாவில் இருந்து பிரிந்து அதிக காயமின்றி பிரிட்டிஷ் பொருளாதாரம் தப்பிப் பிழைக்க முடியும் என்ற வெறும் சிந்தனை மட்டுமே உருவானாலும் கூட அப்போக்குகள் மேலும் வலுப்பெற்று விடும்.” பிரெக்ஸிட்டுக்குப் பின்னர் ஃபிரெக்ஸிட்டோ (Frexit) அல்லது ஆக்ஸிட்டோ (Öxit) –அதாவது பிரான்ஸ் வெளியேற்றமோ அல்லது ஆஸ்திரிய வெளியேற்றமோ– நடக்குமானால், “ஐரோப்பிய ஒன்றியத்தின் கதை அத்துடன் முடிந்தது. யூரோவின் கதையும் தான்.”

ஆகவே ”அத்தகைய ஒரு பற்றவைப்பை தடுப்பதற்கு ஐரோப்பிய அரசியல்வாதிகள் இயன்ற அத்தனையையும் செய்வது மிக முக்கியமானதாகும்” என்றது Der Spiegel.

கண்டத்தின் அரசியல், பொருளாதார, மற்றும் சமூக நெருக்கடியை மட்டுப்படுத்துவதற்கு ஐரோப்பிய உயரடுக்கினர் நப்பாசையுடன் முயலுகின்ற அதேநேரத்தில், முன்னர் பிரிட்டனால் முட்டுக்கட்டையிடப்பட்டிருந்த விடயங்களில் ஐரோப்பிய ஒன்றியத்தை “மேலும் அபிவிருத்தி செய்வதற்கான” ஒரு வாய்ப்பாகவும் பிரெக்ஸிட் பார்க்கப்படுகிறது. எல்லாவற்றுக்கும் முதலில், ஐரோப்பாவுக்கான ஒரு கூட்டுப் பாதுகாப்புக் கொள்கையை உருவாக்குவது குறித்த அக்கறை இதில் வருகிறது.

இப்போது செயல்படுவதற்கான நேரம் வந்திருப்பதாக மேர்க்கெல் அறிவித்தார். “உலகம் கொந்தளிப்பில் இருக்கிறது, உலகம் ஐரோப்பிய ஒன்றியத்திற்காகக் காத்திருக்காது, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் நாம் நமது அண்மைப் பகுதிகளின் ஸ்திரமின்மை, போர்கள் மற்றும் நெருக்கடிகளின் பின்விளைவுகளுக்கு முகம்கொடுத்தாக வேண்டும். செயல்படத் தயாராய் இருக்க வேண்டும்.”

இக்கூட்டத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு விவகாரத் தலைவரான ஃபெடரிக்கா மொகேரீனி முன்வைத்த “வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உலகளாவிய மூலோபாயம்” என்ற தலைப்பிலான ஒரு அறிக்கை இருதயத்தானமாக இருந்தது. ஜேர்மன் தினசரியான Die Welt இல் வந்த ஒரு செய்தியின் படி, இந்த அறிக்கை சென்ற ஆண்டில் ஜேர்மனியின் பாதுகாப்பு அமைச்சகத்துடன் நெருக்கமாக விவாதித்து வரைவு செய்யப்பட்டிருந்தது.

அவசரகால சூழ்நிலைகளில் நேட்டோவில் இருந்து சுயாதீனமாய், போரை நடத்தும் திறனும், ஐரோப்பாவுக்கு வெளியிலான இராணுவத் தலையீடுகளை ஒழுங்கமைக்கும் திறனும் கொண்ட ஒரு மூர்க்கமான இராணுவ சக்தியாக ஐரோப்பிய ஒன்றியத்தை ஸ்தாபிப்பதற்கான ஒரு திட்ட வரைபடத்தை இந்த அறிக்கை முன்வைக்கிறது.

“ஐரோப்பியர்களாக நமது பாதுகாப்பிற்கான அதிகமான பொறுப்பை நாம் எடுத்தாக வேண்டும். வெளிப்புற அச்சுறுத்தல்களை தவிர்ப்பதற்கும், அவற்றுக்கு பதிலளிப்பதற்கும், அவற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கும் நாம் தயாராகவும் திறத்துடனும் இருந்தாக வேண்டும். வெளிப்புற தாக்குதல்களில் இருந்து தனது உறுப்பினர்களை பாதுகாக்க, பெரும்பான்மையாய் ஐரோப்பிய நாடுகளை அங்கத்துவத்தில் கொண்ட நேட்டோ இருக்கிறது என்ற அதேநேரத்தில், ஐரோப்பியர்கள் அத்தகைய கூட்டு முயற்சிகளில் தீர்மானகரமாகப் பங்களிப்பதற்கும் அவசியப்பட்டால் சுயாதீனமாக செயல்படுவதற்கும் மேம்பட்ட திறனையும், பயிற்சியையும் ஒழுங்கமைப்பையும் கொண்டிருந்தாக வேண்டும்” என்று அந்த அறிக்கை தெரிவித்தது.

“ஒரு ஒத்திசைவான மற்றும் ஒத்துழைப்புடனான முயற்சியின்” கட்டமைப்பிற்குள்ளாக இராணுவத் திறன்கள் மேம்படுத்தப்பட வேண்டும். “பாதுகாப்புத் திறன்களை அபிவிருத்தி செய்வதற்கும் பராமரிப்பதற்கும் முதலீடுகள், மற்றும் ஆழமான ஒத்துழைப்பின் வழியாக தேசிய வளங்களின் பயன்பாட்டை உகப்பாக்குதல் ஆகிய இரண்டுமே தேவைப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நோக்கம் மனித உரிமைகளைப் பாதுகாப்பதல்ல மாறாக உலகெங்கிலும் அதன் பொருளாதார மற்றும் புவிமூலோபாய நலன்களை முன்னெடுப்பதே என்பதை இந்த ஆவணம் தெளிவாக்குகிறது. இந்த நலன்களில் உள்ளடங்கியவை என ஆவணம் பின்வருவனவற்றைக் கூறுகிறது: “ஒரு வெளிப்படையான மற்றும் நியாயமான பொருளாதார அமைப்புமுறை”, உலகளாவிய கடல்வழி வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான அவசியம், இயற்கை வளங்களுக்கான வர்த்தகம் மற்றும் அணுகலுக்கு இன்றியமையாததாக இருக்கின்ற கடல்வழிப் பாதைகள் திறந்தும் பாதுகாப்புடனும் இருப்பதை உறுதி செய்தல் ஆகியவை.”

அது தொடர்கிறது: ”இந்தியப் பெருங்கடல் மற்றும் மத்திய தரைக்கடல் பகுதியிலான அதன் அனுபவத்தைக் கட்டியெழுப்புவதன் மூலமும், கினியா வளைகுடா, தென் சீனக் கடல் மற்றும் மலாக்கா ஜலசந்தி ஆகியவற்றிலான சாத்தியங்களை ஆராய்வதின் மூலமும் உலக கடல்பாதை பாதுகாப்பிற்கு ஐரோப்பிய ஒன்றியம் பங்களிப்பு செய்யும்.”

மொகேரீனி Süddeutsche Zeitung க்கு அளித்த ஒரு நேர்காணலில், “முறையான பரிசீலிப்புகளுக்கு பின்னர்” அவர் “அந்த மூலோபாயத்தை மேசை மீது வைக்க” முடிவெடுத்திருந்ததாக விளக்கினார். “சிறிய மற்றும் மத்திய அளவிலான அரசுகளாய்” உலகில் “ஒரு பாத்திரத்தை ஆற்றுவதற்கு” ஒன்றுபட்டு நிற்க வேண்டியிருந்தது அவசியமாய் இருப்பதாக அவர் தெரிவித்தார். துல்லியமாக, இப்போது “இதனை நினைவில் கொள்வதற்கான ஒரு நல்ல தருணமாகும்” இந்தக் கருத்து வாக்கெடுப்பு “ஐரோப்பிய ஸ்தாபனங்களுக்கு” மட்டுமன்றி “பேர்லின், பாரிஸ், பிராக் அல்லது டப்ளினில் இருக்கின்ற அரசியல்வாதிகளுக்கும்” கூட ஒரு ”எச்சரிக்கை மணி” ஆகும் என்றார் அவர்.