ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Brexit and the return of European militarism

பிரெக்ஸிட்டும் ஐரோப்பிய இராணுவவாதத்தின் மீள்வரவும்

Johannes Stern
5 July 2016

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகும் ஐக்கிய இராச்சிய கருத்துவாக்கெடுப்பு முடிவுக்கும், அதிலிருந்து விளைந்திருக்கும் ஐரோப்பாவின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியின் தீவிரப்படலுக்கும், ஐரோப்பிய ஒன்றியமானது, கண்டத்தை இராணுவமயமாக்குவதற்கும் உள்நாட்டு பாதுகாப்பு சக்திகளை கட்டியெழுப்புவதற்கும் அழைப்பு விடுவதன் மூலமாக பதிலிறுப்பு செய்துள்ளது. 11 நாட்களுக்கு முன்பாக முடிவு அறிவிக்கப்பட்டது முதலாக, உள்நாட்டு ஒடுக்குமுறைகளுக்கான விரிவடைந்த சக்திகளைக் கொண்ட ஒரு இராணுவக் கூட்டணியாக ஐரோப்பிய ஒன்றியத்தை உருமாற்றம் செய்வதற்கு அறிவுறுத்துகின்ற உயர்மட்ட வெளியுறவுக் கொள்கை ஆய்வறிக்கைகள் ஏராளமாக வெளியிடப்பட்டிருக்கின்றன.

சென்ற புதன்கிழமையன்று புரூசெல்ஸில், பிரிட்டன் பங்கேற்காமல் நடந்த முதல் ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவரான ஃபெடரிகா மொகெரினி எழுதிய, “ஐரோப்பிய வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்கான உலகளாவிய மூலோபாயம்” என்ற தலைப்பிலான ஒரு அறிக்கையில் ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கத்தின் எஞ்சியிருந்த 27 அரசாங்கத் தலைவர்களும் உடன்பட்டனர். ஐரோப்பிய ஒன்றியமானது இராணுவரீதியாக தலையீடு செய்கின்ற, அவசியமானால், நேட்டோவில் இருந்தும் அமெரிக்காவில் இருந்தும் சுயாதீனமான வகையில் போர் நடத்துகின்ற திறன்படைத்த ஒரு மூர்க்கமான உலக சக்தியாக ஆக வேண்டும் என்ற வாதமே இந்த அறிக்கையின் இருதயத்தானமாக இருந்தது.

இந்த புதிய உலக மூலோபாய ஆவணமானது எதிரிகளின் தாக்குதல்களில் இருந்து ஐரோப்பிய ஒன்றிய அரசுகளைப் பாதுகாப்பதில் நேட்டோவின் பாத்திரத்தை ஒப்புக் கொள்கிறது. என்றபோதிலும் ”இத்தகைய கூட்டு முயற்சிகளுக்கு தீர்மானகரமான பங்களிப்பு செய்வதற்கும் அவசியப்படுகையில் தன்னுரிமையுடன் செயல்படுவதற்கும் ஏற்ப ஐரோப்பா மேம்பட்ட வகையில் திறமேற்றப்பட, பயிற்சியளிக்கப்பட மற்றும் ஒழுங்கமைக்கப்பட வேண்டும்” என்று அது கூறுகிறது.

ஐரோப்பிய மக்களின் முதுகிற்குப் பின்னால் தயாரிப்பு செய்யப்பட்டு வருகின்ற நடவடிக்கைகளுக்குள் சில உட்பார்வையை இந்த ஆவணம் அளிக்கிறது. இராணுவத் திறன்கள் “ஒத்திசைவான மற்றும் ஒத்துழைப்புடனான முயற்சி”யில் மேம்படுத்தப்பட வேண்டும். சமூகத் தேவைகளுக்கு செலவிடப்படும் ஆதாரங்கள் இன்னும் அதிகமாய் இதற்கு மாற்றப்பட வேண்டியிருக்கும் என்பது பின்வருமாறு மறைமுகமாகக் குறிப்பிடப்படுகிறது: “பாதுகாப்புத் திறன்களை அபிவிருத்தி செய்வதற்கும், பராமரிப்பதற்கும் முதலீடுகள் மற்றும் ஆழமான கூட்டுறவின் மூலமாக தேசிய வளங்களின் பயன்பாட்டை அதிகபட்சம் ஏற்புடையதாக்குதல் ஆகிய இரண்டுமே அவசியமாயிருக்கின்றன.”

ஐரோப்பிய ஒன்றிய இராணுவப் படையின் சாத்தியமான தொடுஎல்லைக்கு புவியியல்ரீதியாக எந்த வரம்பும் இல்லை என்பதை அந்த அறிக்கை தெளிவாக்குகிறது. வட ஆபிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பா போன்ற அண்மையில் இருக்கும் பிராந்தியங்களில் மட்டுமல்லாது, உலகின் எந்தப் பகுதியானாலும் தலையீடு செய்வதற்கான உரிமையை ஐரோப்பிய ஒன்றியம் பாதுகாக்கிறது.

“இயற்கை வளங்களின் வர்த்தகம் மற்றும் அணுகலுக்கு இன்றியமையாததாக இருக்கின்ற கடல்வழிப் பாதைகள் திறந்தும் பாதுகாப்புடனும் இருப்பதை உறுதி செய்வதும்” ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிவிக்கப்பட்ட நலன்களில் இடம்பெற்றிருக்கிறது. அந்த நோக்கத்தின் அடிப்படையில் “ஐரோப்பிய ஒன்றியமானது இந்திய பெருங்கடலிலும் மத்திய தரைக்கடலிலுமான தனது அனுபவத்தின் மூலம் கட்டியெழுப்புவதின் மூலமும், கினிய வளைகுடா, தென் சீனக் கடல் மற்றும் மலாக்கா ஜலசந்தியிலான சாத்தியங்களை ஆராய்வதன் மூலமும் உலக கடல்வழிப் பாதுகாப்பிற்கு பங்களிப்பு செய்யும்.”

ஐரோப்பிய இராணுவவாதத்தை நோக்கிய செலுத்தமானது எல்லாவற்றுக்கும் மேலாக ஜேர்மனியின் மூலமே உந்தித் தள்ளப்படுகிறது. ”’உலக மூலோபாய’த்தின் கூட்டு அபிவிருத்தியில் மொகெரினியின் உறுதிப்பாடு மற்றும் தொலைநோக்கு” ஆகியவற்றுக்காக ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் சமீபத்திய நாட்களிலான ஒரு உத்தியோகபூர்வ அறிக்கையில் மொகெரினிக்கு வெளிப்படையாக நன்றி தெரிவித்துக் கொண்டார். “அதில் ஜேர்மன் அமைதிக் கொள்கையின் முக்கியமான கூறுகளை” காண்பதில் அவர் மகிழ்ச்சி கண்டார்.

ஸ்ரைன்மையரின் “அமைதிக் கொள்கை”யின் —துல்லியமாகச் சொன்னால் போர்க் கொள்கையின்— உத்வேகம் நன்கு ஸ்தாபிக்கப்பட்டதாகும். ஜேர்மன் மறுஆயுதபாணிவதற்கான பிரச்சாரத்தில் இவர் ஜேர்மன் ஜனாதிபதி ஜோஅஹிம் கௌக் உடன் முன்னிலையில் இருந்து வருபவராவார். 2014 இல் மூனிச் பாதுகாப்பு மாநாட்டில், ஜேர்மனி “உலக விவகாரங்களில் வெறுமனே ஓரத்தில் நின்று கொண்டு கருத்துக் கூறுகின்ற நாடாக இருக்க முடியாத வண்ணம் மிகப் பெரிய நாடாகும்” என்று அறிவித்த அவர் “வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கை வட்டத்தில் ஆரம்ப கட்டத்திலான, கூடுதல் தீர்மானகரமான, மற்றும் கூடுதல் கணிசமான ஈடுபடுத்தங்களுக்கு ஜேர்மனி ஆயத்தமாக இருக்க வேண்டும்” என்று சேர்த்துக் கொண்டார்.

அதன்பின், இந்த ஆண்டில் ஜூன் 13 அன்று, “ஜேர்மனியின் புதிய உலகளாவிய பாத்திரம்” என்ற தலைப்பில் வெளியுறவு விவகாரங்கள் இதழில் அவர் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தார். அதில் ஜேர்மனி “ஒரு பெரும் ஐரோப்பிய சக்தி” என்று அறிவித்ததுடன் மட்டும் நில்லாது அமெரிக்காவின் மேலாதிக்கமான பாத்திரத்தின் மீதும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இப்போது ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சகம், ஜேர்மனியின் வல்லரசு நோக்கங்களை முன்னெடுப்பதற்கு ஐக்கிய இராச்சியத்தின் கருத்துவாக்கெடுப்பை பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. ஸ்ரைன்மையர் மற்றும் அவரது பிரெஞ்சு சகாவான ஜோன்-மார்க் எய்ரோ எழுதி சென்ற வார இறுதியில் வெளியான “நிச்சயமற்ற ஒரு உலகில் வலிமையான ஒரு ஐரோப்பா” என்ற தலைப்பிலான ஒரு அறிக்கையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்தான பிரிட்டனின் விலகல், “கூட்டான ஐரோப்பிய பதில்களால் மட்டுமே நிவர்த்தி செய்யப்படத்தக்க சவால்களில் நமது கூட்டு முயற்சிகளின் மீது” கவனம்குவிப்பதற்கான ஒரு வாய்ப்பாக போற்றப்படுகிறது.

பிரெக்ஸிட் வாக்களிப்பும் ஜேர்மனியின் சமீபத்திய முன்முயற்சிகளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமைப் பிரதிநிதிகளை எச்சரிக்கை செய்துள்ளன. அமெரிக்க வெளியுறவுக் கொள்கை ஸ்தாபகத்தின் ஒரு செல்வாக்கான அங்கத்தவரும் ஈராக் மீதான 2003 அமெரிக்கப் படையெடுப்பின் சிற்பியுமான ரோபர்ட் டி. காப்லன் சென்ற வெள்ளிக்கிழமையன்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் பத்தி ஒன்றில் பின்வருமாறு எச்சரித்தார்: “மீள்வரவாகிக் கொண்டிருக்கும் புவியரசியல் குழப்பங்கள், சில அம்சங்களில், 1930களை ஒத்திருக்கின்றன.”

“புட்டினின் பிரெக்ஸிட் விருந்தை எப்படி தகர்ப்பது” என்ற தலைப்பிலான ஒரு கட்டுரையில் அவர் பின்வருமாறு திட்டவட்டம் செய்கிறார்: ”... கண்டத்தில் எதாவது ஒரு சக்தி மேலாதிக்கம் செலுத்துவதை தடுப்பது என்ற நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னாலிருந்து பிரிட்டனின் புவியரசியலின் ஒரு முக்கியமான இலக்காக இருந்துவருகின்ற ஒன்றை, பிரெக்ஸிட் பலவீனப்படுத்தி விட்டிருக்கிறது. இப்போது ஜேர்மனி அந்த மேலாதிக்கத்தைக் கையிலெடுக்கும் சக்திவாய்ந்ததாக இருக்கிறது.”

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜேர்மனி இடையிலான இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய கூட்டணி இக்கட்டில் இருப்பதாக காப்லன் காண்கிறார். “ஜேர்மனியும் பிரிட்டனும் சமீபத்தில் கூட்டாளிகளாக இருந்து வந்திருக்கின்றன” என்று எழுதிய அவர் மேலும் கூறினார்: “கோன்ராட் அடினோவர் தொடங்கி ஜேர்மன் சான்சலர்களின் ஒரு நீண்ட வரிசை அட்லாண்டிக்வாதத்தையும் ஐரோப்பிய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஜேர்மனி கொண்டுள்ள தனித்துவமான பொறுப்புகளை புரிந்து வைத்திருப்பதையும் பிரதிபலித்து வந்திருக்கின்றனர். இனிவரும் சான்சலர்கள் அவ்வாறு செய்யாமல் போகலாம்.”

ஜேர்மனி “ரஷ்யாவுடன் ஒரு தனியான பேரத்தை முடிக்கலாம் அல்லது உள்நாட்டில் ஜனரஞ்சக தேசியவாதத்தை நோக்கித் திரும்பலாம்” என்று அவர் எச்சரிக்கை செய்கிறார்.

ரஷ்யாவுடனான அமெரிக்காவின் போர்த் தயாரிப்புகளுக்கு பிரெக்ஸிட் குந்தகம் விளைவிக்கலாம் என்பதே காப்லனின் உடனடிக் கவலை. ”ஐரோப்பா எத்தனை அதிகமாக விரிசலடைகிறதோ” அவர் கவலை கொள்கிறார், “அத்தனை அளவுக்கு ஒரு உறுப்பினர் மீதான தாக்குதல் அனைவரின் மீதுமான தாக்குதல் என்ற நேட்டோவின் பிரிவு 5 ஐ கையிலெடுப்பதற்கான மன உறுதி குறைந்து விடும்.” அதற்கு அவர் முன்வைக்கின்ற எதிர்-மூலோபாயம்: “ஐக்கிய இராச்சியம் அமெரிக்காவுடனான அதன் கூட்டணிக்கு புத்துயிர் ஊட்ட வேண்டும். இணைந்து செயல்பட்டால், இந்த இரு நாடுகளும் இப்போதும் கூட ஐரோப்பிய நிலத்தில், ரஷ்யாவின் வாயில்கதவுகள் வரையிலும் கம்பீரத்துடன் அதிகாரம் செலுத்த முடியும்.”

இத்தகைய வசனங்களின் வரலாற்று மற்றும் அரசியல் முக்கியத்துவத்தை யாரும் குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது. பிரான்சில் ஸொம் (Somme) பகுதியில் நடந்த இரத்த ஆறு பாய்வின் ஒரு நூறு ஆண்டுகளுக்குப் பின்னரும் சோவியத் ஒன்றியத்தின் மீதான ஜேர்மனியின் அழித்தொழிப்புப் போர் தொடங்கப்பட்ட 75 ஆண்டுகளுக்கு பின்னரும், முதலாளித்துவத்தின் முரண்பாடுகள் மீண்டும் தலைதூக்கிக் கொண்டிருக்கின்றன; முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின் பயங்கரங்களை சிறிதாக்கி விடத்தக்க ஒரு புதிய உலகப் போரை பெரும் சக்திகளுக்கு இடையில் கட்டவிழ்த்து விடுவதற்கு அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன.

முதலாளித்துவ ஒழுங்கை போரின் மூலமாகப் பாதுகாக்க நினைக்கின்ற ஏகாதிபத்திய சக்திகளின் முயற்சிகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கம் தனது சொந்த மூலோபாயத்தை கையிலெடுக்க வேண்டும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு “சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும்” என்ற தனது அறிக்கையில் வலியுறுத்தியிருந்தவாறாக: தொழிலாள வர்க்கத்தின் போர்-எதிர்ப்பு மூலோபாயமானது “உலக நெருக்கடியை சோசலிசப் புரட்சி மூலமாக” தீர்ப்பதற்கு சர்வதேச அளவில் தனது சக்திகளை ஒன்றுபடுத்துவது மற்றும் அணிதிரட்டுவது என்ற மூலோபாயத்தை அடிப்படையாக கொண்டு “ஏகாதிபத்திய தேசிய-அரசு புவிஅரசியலை நிராகரித்தலாக” அபிவிருத்தி செய்யப்பட்டாக வேண்டும்.