ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Brexit vote heightens tensions in Europe

பிரிட்டன் வெளியேறுவதற்கான வாக்களிப்பு ஐரோப்பாவில் பதட்டங்களை அதிகரிக்கிறது

By Peter Schwarz
1 July 2016

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான கடந்த வார வாக்களிப்பு, ஐரோப்பாவில் தேசிய விரோதங்களைக் கூர்மையாக தீவிரப்படுத்தி உள்ளது.

இந்த இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரம் 28 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது, ஒன்றியத்திற்குள் ஜேர்மனியின் பொருளாதார பலத்தைப் படிப்படியாக அதிகரிக்கும். பிரிட்டன் வெளியேறுவதை தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஜேர்மனியின் பங்கு வெறுமனே 5 இல் ஒரு பங்கு என்பதிலிருந்து ஏறத்தாழ 4 இல் ஒரு பங்காக அதிகரிக்கும். இந்த புள்ளிவிபரங்களே கூட ஜேர்மன் மேலாளுமையைப் பகுதியாக மட்டுமே பிரதிபலிக்கிறது.

குறிப்பாக 2008 நிதியியல் நெருக்கடிக்குப் பின்னர் இருந்து, ஜேர்மனி ஐரோப்பாவில் அரசியல் மற்றும் பொருளாதார மேலாதிக்கம் பெற முனைந்துள்ளது. கிரீஸ், போர்ச்சுக்கல் மற்றும் ஸ்பெயின் மீது திணிக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைகளுக்கான கட்டளைகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை ஓர் அரசியல் மற்றும் இராணுவ உலக சக்தியாக விரிவாக்கும் திட்டங்கள் இரண்டுமே, பேர்லினால் மிகவும் ஆக்ரோஷமாக முன்னெடுக்கப்பட்டன.

புதனன்று ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்ட பிரதிநிதி பெடரிகா மொஹிரினி (Federica Mogherini) முன்வைத்த மூலோபாய ஆய்வறிக்கை, ஐரோப்பிய ஒன்றியத்தை ஓர் இராணுவ சக்தியாக மாற்றுவதற்கு அழைப்பு விடுத்திருந்ததுடன், ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சகத்தின் நெருக்கமான உடன்பாட்டுடன் வரையப்பட்டது. பேர்லினின் அரசியல்துறை விஞ்ஞானி ஹெர்பிரட் முன்ங்லெர் எழுதிய மத்திய அதிகாரம் (Power in the Middle) எனும் நூல், ஜேர்மனி ஐரோப்பாவில் ஓர் "ஆதிக்க சக்தியாக" மற்றும் "எஜமானராக" பாத்திரம் ஏற்க வேண்டுமென அழைப்பு விடுத்திருந்த நிலையில், ஜேர்மன் ஸ்தாபக கட்சிகள் மற்றும் ஊடகங்களின் பரந்த ஒப்புதலைப் பெற்றுள்ளது.

பிரிட்டன் வெளியேறுவதற்கான வாக்களிப்பு தொடர்பான ஜேர்மனியின் பிரதிபலிப்பு, ஐரோப்பாவில் அதன் மேலாதிக்க முனைவின் உள்ளடக்கத்தில் நடந்து வருகிறது. வாக்கெடுப்புக்கு முன்னதாக, அங்கே ஜேர்மன் உயரடுக்குகளில் பிரிட்டன் வெளியேறுவதற்கு மிகச் சிறியளவிலான ஆதரவே இருந்தது. “வெளியேறும்" முகாமின் வெற்றியானது, வலதுசாரி தேசியவாத நிலைப்பாட்டிலிருந்து ஜேர்மனியின் மேலாதிக்க அபிலாஷைகளை எதிர்க்கும் ஐரோப்பா எங்கிலுமான சக்திகளை பலப்படுத்தி விடுமோ என்று அவர்கள் அஞ்சினர். மேலும் அவர்கள் பிரிட்டனை ஒரு முக்கிய பொருளாதார பங்காளியாகவும் மற்றும் புரூசெல்ஸின் கடுமையான வரவு-செலவு திட்ட கட்டுப்பாடு மற்றும் நவ-தாராளவாத பொருளாதார கொள்கைகளைத் திணிப்பது என்று வருகையில் அதையொரு நம்பகரமான கூட்டாளியாகவும் கருதினர்.

ஆனால் வெகுஜன வாக்கெடுப்புக்குப் பின்னர் ஜேர்மன் நிலைப்பாடு முற்றிலும் மாறிவிட்டது. இப்போது பேர்லின் இலண்டனுக்கான எந்தவித விட்டுக்கொடுப்புகளையும் மற்றும் அந்த முடிவு திரும்ப பெறப்படும் என்ற சகல ஊகங்களையும் கூட நிராகரித்து, சாத்தியமான அளவிற்கு துரிதமாக வெளியேற அழுத்தமளித்து வருகிறது.

இதற்கு அங்கே பலகாரணங்கள் உள்ளன. வெளியேறுவதற்காக நீண்டகாலத்திற்கு முன்னர் நடந்த பேரம்பேசல்களும் மற்றும் பிரிட்டனுக்கான விட்டுக்கொடுப்புகளும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மையவிலக்கு சக்திகளை (centrifugal forces) பலப்படுத்தி விடும் என்ற அச்சமும் இதில் ஒன்றாகும். சான்றாக, முன்னதாக பிரிட்டன் வெளியேறுவதற்கு எதிராக பலமாக வாதிட்டு வந்த செய்தி வாரயிதழ் Der Spiegel குறிப்பிடுகையில், ஐரோப்பிய ஒன்றியம் இலண்டன் விடயத்தில் மிகவும் மிருதுவாக நடந்து கொண்டால், பிரிட்டன் முன்னுதாரணமே மற்றவர்களால் ஒரு நகலாக எடுக்கப்படக் கூடும் என்று எச்சரித்தது.

அனைத்திற்கும் மேலாக இங்கிலாந்து இதுவரையில் எதிர்த்து வந்த கொள்கைகளை முன்னெடுக்க ஒரு சந்தர்ப்பமாக, பேர்லின், பிரிட்டன் வெளியேறுவதற்கான இந்த சாத்தியக்கூறைக் கைப்பற்றி உள்ளது. இது குறிப்பாக அமெரிக்காவிலிருந்து சுதந்திரமான வெளியுறவு மற்றும் இராணுவ கொள்கையை அபிவிருத்தி செய்யும் ஒரு விடயமாகும். 2003 ஈராக் போர் விவகாரத்தில் நடந்ததைப் போல, அமெரிக்க வெளியுறவு கொள்கையை எதிர்க்கும் ஜேர்மன் முயற்சிகளை அல்லது நேட்டோவிற்கு சமாந்தரமாக ஓர் ஐரோப்பிய இராணுவத்தை உருவாக்குவதை பிரிட்டிஷ் அரசாங்கம் தொடர்ச்சியாக எதிர்த்து வந்துள்ளது.

பிரிட்டன் வெளியேறுவதற்கான வெகுஜன வாக்கெடுப்பின் முடிவு அறிவிக்கப்படுவதற்கு முன்னரே, ஜேர்மன் வெளியுறவுத்துறை மந்திரி பிராங்க் வால்டர் ஸ்ரைன்மையர் மேற்கொண்டு நடைமுறைகளை விவாதிக்க ஆறு ஐரோப்பிய ஒன்றிய ஸ்தாபக நாடுகளின் பிரதிநிதிகளைப் பேர்லினுக்கு வர அழைத்திருந்தார். பிராங்கோ-ஜேர்மன் அச்சைப் பலப்படுத்த ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டை சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் சந்தித்தார். ஃபைவ் ஸ்டார் (Five Star) இயக்கம் மற்றும் வடக்கு லீக் ஆகியவற்றிடமிருந்து தேசியவாத அழுத்தத்தை முகங்கொடுத்துள்ள இத்தாலிய பிரதம மந்திரி மரியோ ரென்சியும், இத்தாலி திசை மாறிவிடாதவாறு தடுக்கும் ஒரு முயற்சியாக அக்கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தை ஒருங்கிணைத்து வைக்க தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு மூன்று அரசாங்க தலைவர்களும் உடன்பட்டனர். இந்த செயல்பாட்டின் முதல் கட்டம், “உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பாக" இருந்தது, அதாவது உள்நாட்டு கிளர்ச்சிகளுக்கு எதிராக அரசு எந்திரங்களையும் மற்றும் புதிய போர் நடவடிக்கைகளுக்கு இராணுவத்தையும் ஆயுதமயப்படுத்த செய்வது.

இந்த வார்த்தைகளை கொண்டு அவர்கள் என்ன அர்த்தப்படுத்துகிறார்கள் என்பதை "ஒரு நிச்சயமற்ற உலகில் ஒரு பலமான ஐரோப்பா" என்ற கூட்டு ஆவணத்தில் பார்க்க முடிகிறது, அதில் ஜேர்மன் மற்றும் பிரான்சின் வெளியுறவு மந்திரிமார்கள், பிராங்க் வால்டர் ஸ்ரைன்மையர் மற்றும் ஜோன்-மார்க் எய்ரோ, பிரிட்டன் வெளியேறுவதற்கான வெகுஜன வாக்கெடுப்பிலிருந்து அவர்கள் எடுக்கும் தீர்மானங்களைத் தொகுத்தளிக்கிறார்கள்.

அந்த ஆவணம் ஐரோப்பிய ஒன்றியத்தை, “ஒரு பொதுவான பாதுகாப்பு மற்றும் தற்காப்பு கொள்கைக்காக போராடும்" ஒரு "பாதுகாப்பு ஒன்றியமாக" வரையறுப்பதுடன், “சர்வதேச மட்டத்தில் ஐக்கியம் மற்றும் சுய-நம்பிக்கைடன் நடக்கும் ஓர் ஐரோப்பாவிற்காக நடவடிக்கை எடுப்பதற்காக ஜேர்மனி மற்றும் பிரான்ஸை" பாராட்டுகிறது. ஐரோப்பிய ஒன்றியம் "படிப்படியாக ஒரு சுதந்திரமான மற்றும் உலகளாவிய நடவடிக்கையாளராக" அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமென அந்த ஆவணம் குறிப்பிடுகிறது.

ஸ்ரைன்மையர் மற்றும் எய்ரோ, “ஐரோப்பா" அரசியல் ரீதியிலும் மற்றும் இராணுவ ரீதியிலும் தலையிடும் பிராந்தியங்களாக ஏனையவற்றுடன் சேர்ந்து உக்ரேன், மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவை பெயரிடுகின்றனர். “படைத்துறைசாரா மற்றும் இராணுவ நடவடிக்கைகளை மிகத் துல்லியமாக திட்டமிட மற்றும் நடைமுறைப்படுத்துவதற்காக", மத்தியமயப்படுத்தப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்கின்றனர்.

பேர்லினில் நடந்த கூட்டம் கிழக்கு ஐரோப்பாவில் பீதியை ஏற்படுத்தியது. பிராக் இல் வைஸ்கார்ட் நாடுகளுக்கு (போலந்து, செக் குடியரசு, ஸ்லோவேகியா மற்றும் ஹங்கேரி) இடையே சமாந்தரமான ஒரு கூட்டம் நடந்தது. போலாந்து வெளியுறவு மந்திரி, ஹங்கேரி, ருமேனியா, பல்கேரியா, ஆஸ்திரியா, ஸ்பெயின் மற்றும் பிரிட்டன் உட்பட பத்து ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளை வார்சோவிற்கு அழைத்திருந்தார்.

அனைத்திற்கும் மேலாக, போலந்து அரசாங்கம் பலமாக ஸ்ரைன்மையர்-எய்ரோ ஆவணத்தை நிராகரிக்கிறது. ஒரு "பலமான ஐரோப்பாவிற்கு" பதிலாக, தேசிய நாடுகளுக்கு இடையே அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றிய உடன்படிக்கைகளை மறுவரைவு செய்ய அது பரிந்துரைக்கிறது. அதிதீவிர தேசியவாத போலாந்து அரசாங்கம் பேர்லின் மற்றும் ரஷ்யா இரண்டினாலும் அச்சுறுத்தப்படுவதாக உணர்வதால், அமெரிக்க-மேலாளுமையில் உள்ள நேட்டோவை போலந்தின் சுதந்திரத்திற்கு உத்தரவாதமளிப்பவராக கருதுகிறது.

வியாழனன்று அரசாங்க சார்பு பத்திரிகையான Gazeta Polska, முதல் பக்கத்தில் ஸ்வஸ்திகா சின்னத்துடன், "அங்கே நான்காம் குடியரசு ஏற்படுமா?” என்ற தலைப்புடன் வெளியானது. அக்கட்டுரை ரஷ்ய-சார்பு நோக்குநிலைக்காக ஜேர்மனி மற்றும் பிரான்ஸை குற்றஞ்சாட்டுவதுடன், “அரசியல் அசுரர்கள் நாஜிசம் மற்றும் கம்யூனிசத்துடன் மடிந்துவிடவில்லை —வல்லரசுகளின் சர்வாதிபத்தியம் நமது கண்களுக்கு முன்னால் திரும்ப வருகிறது,” என்று அறிவிக்கிறது. உள்பக்கங்களில் வெளியாகி இருந்த ஒரு நீண்ட கட்டுரை "பேர்லின் இல் இருந்து ஐரோப்பா ஆட்சி செலுத்தப்படுவதற்கு" எதிராக எச்சரிக்கிறது.

Gazeta Polska இன் முதல் பக்கம்: “அங்கே நான்காம் குடியரசு ஏற்படுமா?”

“புரூசெல்ஸின் புலம்பெயர்வோர் கொள்கையை" தாக்கிய ஹங்கேரிய வெளியுறவுத்துறை மந்திரி பீட்டர் ஷிஜியர்ட்டோ, “ஐரோப்பியர்கள் அவர்களது வாழ்க்கை மற்றும் அவர்களது எதிர்காலத்திற்காக தங்களுக்குள் முடிவெடுக்க விரும்புகிறார்கள், ஐரோப்பாவின் எதிர்காலம் குறித்து மூடிய கதவுகளுக்குப் பின்னால் மற்றும் தனிப்பட்டரீதியில் புரூசெல்ஸின் ஏதோயிடத்தில் அதிகாரத்துவவாதிகள் எடுக்கும் முடிவுகளை அவர்கள் ஏற்க விரும்பவில்லை" என்று அறிவித்தார்.

பிரான்சிலும் கூட, ஜேர்மனியின் ஐரோப்பிய மேலாதிக்கத்திற்கு எதிரான எதிர்ப்பு குரல்கள் ஒலிக்கத் தொடங்கி உள்ளது, அதுவும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரான்ஸ் வெளியேற வேண்டுமென கோரி வரும் மரீன் லு பென் தலைமையிலான தீவிர வலதுசாரி தேசிய முன்னணியிடம் இருந்து மட்டுமல்ல, மாறாக பழமைவாத குடியரசு கட்சியினர் மற்றும் போலி-இடதுகளின் அணிகளிடமிருந்தும் வருகிறது.

சான்றாக முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி இன் ஒரு நெருக்கமான நம்பிக்கைக்கு உரியவரான ஹென்றி கேய்னோ, Le Figaro நாளிதழுக்கு கூறுகையில், “இன்னும் அதிகமானளவில் ஜேர்மனிய ஐரோப்பா என்பதே, பிரிட்டன் வெளியேறுவதற்கான விடையிறுப்பு என்றால், பின் நாம் ஒரு சுவரை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம் என்றாகும்,” என்றார். சார்க்கோசி அவரே கூட மற்றும் வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தல்களில் ஒரு வேட்பாளராக இருக்கக்கூடிய முன்னாள் பிரதமர் பிரான்சுவா ஃபிய்யோன் உம், “நாடுகளின் ஒரு ஐரோப்பா" என்பதை —அதாவது தேசிய நாடுகளுக்கு உகந்த வகையில் ஐரோப்பிய ஒன்றியத்தை பலவீனப்படுத்தும் ஒன்றை அறிவுறுத்துகின்றனர்.

சோசலிஸ்ட் கட்சியில் "இடதாக" கருதப்படும் முன்னாள் பொருளாதார மந்திரி ஆர்னோ மொன்ட்பூர்க், மற்றும் பிரெஞ்சு இடது கட்சியின் தலைவர் ஜோன்-லூக் மெலென்சோன் ஆகியோரும் தேசியவாத மற்றும் ஜேர்மன்-விரோத தொனிகளை அதிகரித்தளவில் எழுப்புகின்றனர்.

பிரிட்டன் வெளியேறுவது மீதான ஐரோப்பிய பாதிப்புகள் ஆரம்பிக்க மட்டுமே தொடங்கி உள்ளன. ஒருபுறம், ஜேர்மனி அதன் மேலாளுமையின் கீழ் ஐரோப்பாவை ஐக்கியப்படுத்த முயற்சிக்கிறது, இது உழைக்கும் மக்கள் மீதான வன்முறை தாக்குதல்கள், அதிகரித்த அரசு ஒடுக்குமுறை மற்றும் இராணுவவாதத்தை உள்ளடக்கி இருக்கும். மறுபுறம், தீவிர வலது மற்றும் போலி-இடது வடிவில் நஞ்சார்ந்த தேசியவாதம், இது தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தி வெளிநாட்டவர் விரோதத்தைப் பலப்படுத்தும்.

இவ்விரு வழிகளிலுமே ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு முன்னோக்கிய பாதை கிடையாது. ஐரோப்பாவை முதலாளித்துவ அடிப்படையில் ஐக்கியப்படுத்த முடியாது என்பது மீண்டுமொருமுறை தெளிவாகிறது. அக்கண்டம் மீண்டுமொருமுறை இருபதாம் நூற்றாண்டு பயங்கரங்களான உலக போர் மற்றும் பாசிசத்திற்குள் நுழையாமல் இருப்பதை, ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசு வேலைத்திட்டத்திற்கான ஓர் ஐக்கியப்பட்ட தொழிலாள வர்க்க இயக்கத்தால் மட்டுமே தடுக்க முடியும்.