ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

UK vote to leave the European Union triggers economic and political crisis

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான இங்கிலாந்து வாக்களிப்பு பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியைத் தூண்டுகின்றன

By Chris Marsden and Julie Hyland
  24 June 2016

நேற்றைய வெகுஜன வாக்கெடுப்பில் மொத்தம் 72 சதவீத வாக்குப்பதிவில் 48.1 சதவீதத்திற்கு 51.9 சதவீதம் என்ற விகிதத்தில் மிகச்சிறிய வாக்கு வித்தியாசத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதென்று பிரிட்டன் வாக்களித்தது. இதற்கு விடையிறுப்பாக பிரதம மந்திரி டேவிட் கேமரூன் பதவியிலிருந்து இறங்குவதாகவும், ஆனால் அக்டோபரில் பழமைவாத கட்சி மாநாடு வரையில் பதவியில் இருக்கப் போவதாகவும் அறிவித்தார்.

அந்த வெகுஜன வாக்கெடுப்பின் முடிவு பிரிட்டன் முழுவதிலும் மட்டுமல்ல, மாறாக ஐரோப்பா மற்றும் உலகெங்கிலும் ஒரு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அது நிதியியல் சந்தைகள், தனியார் முதலீட்டு நிதியங்கள் (hedge funds), வியாபார சூதாடிகள் மற்றும் அரசியல் ஸ்தாபகத்தினது எதிர்பார்ப்புகளைக் குழப்பத்தில் ஆழ்த்தியது.

நேற்று மாலை 10 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த பின்னரும் கூட, ஒன்றியத்தில் தொடர்ந்திருப்பதற்கு சாதகமாக வாக்குகள் கிடைக்கும் என்பதன் மீதே அனுமானங்கள் இருந்தன. இது பிரித்தானிய பவுண்டு மதிப்பு அதிகரிப்பு மற்றும் உலகளாவிய சந்தைகளின் மீட்சி ஆகியவற்றில் பிரதிபலித்தது. ஆனால் வெள்ளியன்று அதிகாலை வாக்கில், பவுண்டு மதிப்பு 30 ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில் இல்லாதளவிற்கு அதன் மிகக்குறைந்த மட்டத்திற்கு வீழ்ச்சி அடைந்து, டாலருக்கு எதிராக 10 சதவீதம் சரிந்தது, மேலும் யூரோ மற்றும் யென்னுக்கு எதிராகவும் வீழ்ச்சி அடைந்தது.

இங்கிலாந்து உலகளவில் ஐந்தாவது மற்றும் ஐரோப்பா அளவில் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதாரமாகும். பிரான்ஸ், நெதர்லாந்து, ஸ்பெயின், கிரீஸ் ஆகியவையும் மற்றும் கருத்துக்கணிப்புகளில் யூரோவிலிருந்து வெளியேறுவதற்கு பெரும்பான்மையை கொண்டிருக்கும். இத்தாலியுமே கூட ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்து செல்வதை பிரிட்டன் வெளியேற்றம் சாத்தியமான அளவிற்குத் துரிதப்படுத்துமென, ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதன் பாதிப்புகளாக பரவலாக பார்க்கப்படுகின்றன.

இங்கிலாந்தே கூட பிளவுபட்டுள்ளது, இங்கிலாந்தும் வேல்ஸூம் வெளியேறலாமென வாக்களித்துள்ள நிலையில், ஸ்காட்லாந்தும் வடக்கு அயர்லாந்தும் ஒன்றியத்திலேயே தொடர்ந்தும் இருக்கலாமென வாக்களித்துள்ளன. இங்கிலாந்தில் 53 சதவீதம் பேர் மற்றும் வேல்ஸில் 52 சதவீதம் பேர் பிரிட்டன் வெளியேற வேண்டுமென வாக்களித்தனர், ஆனால் ஸ்காட்லாந்தில் 62 சதவீதத்தினரும் வடக்கு அயர்லாந்தில் 56 சதவீதத்தினரும் தொடர்ந்திருக்க வாக்களித்தனர்.

அங்கே ஸ்காட்லாந்து சுதந்திரத்தின் மீது இரண்டாவது வெகுஜன வாக்கெடுப்பு நடத்துவது குறித்து பேசப்படுகிறது, முன்னாள் ஸ்காட்லாந்து தேசிய கட்சி தலைவர் அலெக்ஸ் சால்மொண்ட் வலியுறுத்துகையில், அத்தகையவொரு வெகுஜன வாக்கெடுப்பு ஐரோப்பிய ஒன்றியத்தின் லிஸ்பன் உடன்படிக்கையின் 50 வது ஷரத்தின் படி, இரண்டாண்டுகளுக்குள் நடத்தப்பட வேண்டும். அது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேறும் நடைமுறையைத் தொடங்கி வைக்கும் என்கிறார்.

அயர்லாந்து குடியரசின் 330 மைல் வடக்கு எல்லையை ஒட்டி, எல்லை கட்டுப்பாடுகளையும் மற்றும் வரிவிதிப்புகளையும் மீள்அறிமுகம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கைகள் எழுந்துள்ள நிலைமைகளில் கீழ், சின் ஃபைன் (Sinn Fein) தலைவர் ஜெர்ரி ஆடம்ஸ் குறிப்பிடுகையில், இந்த வாக்கெடுப்பின் முடிவு ஓர் ஐக்கியப்பட்ட அயர்லாந்து மீதான பிரச்சினையை மீண்டும் எழுப்பி இருப்பதாக தெரிவித்தார்.

இங்கிலாந்தில், இலண்டன் மட்டுமே 40 க்கு 60 என்றரீதியில் ஒன்றியத்தில் தங்கியிருக்கலாம் வாக்குகளை அளித்த ஒரே பிரதேசமாக இருந்தது. ஏனைய ஒவ்வொரு பிரதேசமும் வெளியேறலாம் வாக்குகளை அளித்தன, யோர்க்க்ஷைர் மற்றும் ஹம்பர்சைட் 58 சதவீத அளவிற்கும், வடமேற்கு 54 சதவீதம், மேற்கு மிட்லாந்து 59 சதவீதம், தென்கிழக்கு மற்றும் தென் மேற்கு இரண்டுமே 50 சதவீதத்திற்கு அதிகமாக வெளியேறலாம் வாக்குகளை அளித்திருந்தன.

இந்த வாக்கு வடிவத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க விதிவிலக்காக இருந்தது என்னவென்றால் 24 வயதிற்கு கீழே இருந்தவர்களது வாக்குகளாகும், இவர்களில் 75 சதவீதத்தினர் ஒன்றியத்திலேயே தொடர்ந்திருக்கலாம் என்பதற்கு ஆதரவாக இருந்தனர்.

வெஸ்ட்மின்ஸ்டரில், பிரதான கவலையே நிதியியல் சந்தைகளை ஸ்திரப்படுத்தும் முயற்சியாக இருந்தது, கேமரூன் 50வது ஷரத்தை பயன்படுத்துவதைத் தாமதிக்க வேண்டுமென வங்கிகள் வலியுறுத்துகின்றன. FTSE 100 சந்தை, திறந்த உடனேயே 500 புள்ளிகள் சரிந்து 120 பில்லியன் பவுண்டு அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது, குறிப்பாக வங்கிகள் மற்றும் வீட்டுக் கட்டுமான நிறுவனங்கள் கடுமையான இழப்பைச் சந்தித்தன. பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் தலைவர் மார்க் கார்னே சந்தைகளுக்குள் 250 பில்லியன் பவுண்டு பாய்ச்சுவதற்கு உறுதியளித்தார். ஆகஸ்ட் வாக்கில் வட்டி விகிதங்கள் பூஜ்ஜியம் அளவுக்கு வெட்டப்படும் என்ற ஊகங்கள் நிலவுகிறது, அத்துடன் இங்கிலாந்து வளர்ச்சி "முடமாகும் அளவுக்கு குறையுமென" எதிர்பார்க்கப்படுகிறது.

கேமரூனின் இராஜினாமா அறிவிப்பானது, இந்த தாமதப்படுத்துவதற்கான கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளது. எப்போது ஷரத்து 50 ஐ பயன்படுத்துவது என்பதை முடிவு செய்வது இப்போதும் அவரது தனியுரிமையில் இருப்பதாகவும், இலையுதிர் காலத்தில் புதிய பழமைவாத கட்சி தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரையில் அவர் அவ்வாறு செய்யப் போவதில்லை என்றும் அவர் கூறினார். அதே நேரத்தில் அவரது இந்த வாக்குறுதியானது, அவரது கட்சிக்குள்ளேயே வெளியேற வேண்டுமென்ற உத்தியோகபூர்வ பிரச்சாரத்திற்கு தலைமை வகிக்கும் முன்னாள் இலண்டன் மேயர் போரிஸ் ஜோன்சனைச் சுற்றி உள்ள அணியை, பொருளாதார ஸ்திரப்பாட்டை உறுதிப்படுத்துவதற்காக குறுகிய-காலத்திற்கு ஒருங்கிணைந்து செயல்பட கோரும் ஒரு கோரிக்கையாக அமைகிறது.

ஐக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சி (UKIP) இன் தேர்தல் சவாலைச் சமாளிக்க அவசியமான தலைவராக ஜோன்சன் முன்கொண்டு வரப்படுகிறார். “வணிக வங்கிகள்" மற்றும் "உயரடுக்குக்கு" எதிரான ஒரு வெகுஜனவாதியாக காட்டிக்கொண்டு, இந்த வெகுஜன வாக்கெடுப்பில் இருந்து ஆதாயமடைந்த ஒரே கட்சி தலைவர் UKIP இன் நைஜல் ஃபாராஜ் ஆவார். அவர் தன்னை ஷரத்து 50 ஐ பயன்படுத்துவதன் மீதான எந்தவொரு சமரசத்தையும் விமர்சிப்பவராக காட்டிக் கொள்கிறார்.

தொழிற் கட்சி தலைவர் ஜெர்மி கோர்பின் நிலைப்பாடு எவ்விதத்திலும் உறுதியானதாக இல்லை. ஒன்றியத்தில் தொடர்ந்திருக்கலாம் என்ற வாதத்தை ஜெயிக்க செய்வதில் அவர் போதுமான அளவிற்கு ஈடுபடவில்லை எனும் அவரது பிளேயரிச எதிர்ப்பாளர்களது விமர்சனங்களையே, வெளியேறுவதை ஆதரித்த 10இல் இருந்து 15 தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிரொலிக்கின்றனர். அவர்கள் இப்போது 45 சதவீத தொழிற் கட்சி வாக்காளர்களுக்காக பேசுவதாக கூறிக் கொள்வதுடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் மீதான அவரது முந்தைய எதிர்ப்பை கைவிட்டு விட்டதற்காகவும், புலம்பெயர்ந்தவர்கள் குறித்து "கண்டு கொள்ளாமல்" இருந்து வருவதாகவும் அவருக்கு கண்டனம் தெரிவிக்கின்றனர்.

அனேகமாக தலைமைக்கான போட்டி ஏற்படலாம் என்பதுடன், கோர்பினின் விடையிறுப்பானது எப்போதும் போல அவரது விமர்சகர்களை முக்கோணரீதியில் பிரித்துக்கையாளும் ஒரு முயற்சியாக இருக்கிறது. மக்களின் விருப்பத்தை பிரதிநிதித்துவம் செய்வதாக காட்டிக் கொண்டு, அவர் ஷரத்து 50 ஐ உடனடியாக பிரயோகிக்க அழைப்பு விடுத்துள்ளார், மேலும் தொழிலாளர்களின் சுதந்திர நகர்வு மீதான ஐரோப்பிய ஒன்றிய சட்ட மசோதா நடைமுறையில் முறிந்து போன உடனேயே, பொருளாதார தகுதி வகைகள் அடிப்படையில், புலம்பெயர்வோர் மீதான கட்டுப்பாடுகளை மேற்கொள்ள அவரது ஆதரவைத் தெரிவித்துள்ளார். ஆனால் இதை எடுத்துக்காட்டி உள்ள அதேவேளையில் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சியில் அதை ஆதரிக்க வேண்டுமென்றும் அவர் வலியுறுத்துகிறார்.

ஐரோப்பிய குழுவின் தலைவர் டோனால்ட் டஸ்க், ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் ஜோன்-குளோட் ஜூங்கர், ஐரோப்பிய நாடாளுமன்ற தலைவர் மார்டீன் சூல்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சுழற்சி முறையிலான ஜனாதிபதி பதவியில் இருக்கும் டச் பிரதம மந்திரி மார்க் ரூட்டே ஆகியோருக்கு இடையே புரூசெல்ஸில் நெருக்கடி கால சந்திப்பு நடந்து வருகிறது.

"அவசரப்பட்டு எதிர்நடவடிக்கைகளைக் காட்டுவதற்கான தருணம் அல்ல" இது என்று டஸ்க் எச்சரித்துள்ள நிலையில், இங்கிலாந்தைத் தவிர்த்து ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 27 அங்கத்துவ நாடுகளுக்கு இடையே அடுத்த வாரம் பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளது.

ஆனால் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் ஒரு மூத்த ஜேர்மன் பழமைவாத அங்கத்தவர் மன்ஃபிரெட் வேபர் கூறுகையில், இங்கிலாந்துக்கு “எந்தவிதமான சிறப்பு சலுகையும்” கொடுக்கப்படமாட்டாது என்று எச்சரித்ததுடன், “அதிகபட்சம் இரண்டு ஆண்டுகளுக்குள் வெளியேற்றத்திற்கான பேச்சுவார்த்தைகள் பேசி முடிக்கப்படும்… வெளியேறி விட்டால் வெளியேறியது தான்,” என்றவர் அறிவித்தார்.

இங்கிலாந்தை முன்னுதாரணமாக கொண்டு ஏனைய அங்கத்துவ நாடுகளும் பின்தொடரும் "ஒரு சங்கிலித் தொடர் போன்ற விளைவை" ஐரோப்பிய ஒன்றியம் எவ்வாறு "தவிர்ப்பது" என்பது குறித்து ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் உடன் தாம் பேசவிருப்பதாக சூல்ஸ் தெரிவித்தார்.

இந்த வெகுஜன வாக்கெடுப்பு பிரிட்டனிலும் மற்றும் ஐரோப்பா எங்கிலும் வலதை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க திருப்பத்தை தோற்றுவித்துள்ளது. இந்த வாக்கெடுப்பின் முடிவில், ஒரு மிகப்பெரிய சமூக எதிர்ப்பு கூறுபாடு சம்பந்தப்பட்டுள்ளது. அது தொழிலாள வர்க்கப் பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவிற்கு வாக்குப்பதிவு அதிகரிப்பதற்கு இட்டுச் சென்றது. டோரி அரசாங்கம் மற்றும் தொழிற் கட்சி மீதான அதிருப்தியும், ஐரோப்பிய ஒன்றியத்தின் மீதான விரோதமும் சேர்ந்து, வெளியேறலாம் வாக்குகள் அதிகரிப்பதை உறுதிப்படுத்தின —குறிப்பாக ஆண்டுக்கு 15,000 பவுண்டுக்கு குறைவாக சம்பாதிப்பவர்கள் மத்தியில் இவ்வாறு இருந்தது.

எவ்வாறிருப்பினும் தேசியவாதம் மற்றும் வெளிநாட்டு புலம்பெயர்ந்தோர்-விரோத மனோபாவத்தால் குணாம்சப்பட்ட ஒரு பிரச்சாரத்துடன், தொழிலாள வர்க்கத்திற்கு ஆழ்ந்த விரோதமாக உள்ள வலதுசாரி அரசியல் போக்குகளுக்குப் பின்னால் இந்த கோபம் வெற்றிகரமாக திருப்பி விடப்பட்டுள்ளது.

ஐரோப்பா எங்கிலும் பல்வேறு தீவிர-வலது கட்சிகள், ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்புணர்வையும் மற்றும் சிக்கன திட்டங்களால் உண்டான சமூக சீரழிவுகளையும் பிற்போக்குத்தனமான முடிவுகளுக்கு இட்டுச்செல்வதற்கு பயன்படுத்திக் கொள்கின்றன. பிரான்சின் தேசிய முன்னணி தலைவர் மரீன் லு பென் கூறுகையில், “பெரும்பாலான பிரெஞ்சு மக்களைப் போலவே, பிரிட்டிஷ் மக்களும் சரியான முடிவை உறுதியாக எடுத்துள்ளார்கள் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்றார். நெதர்லாந்தில் சுதந்திர கட்சி தலைவர் Geert Wilders ஐரோப்பிய ஒன்றியத்தில் அது அங்கம் வகிப்பதன் மீது ஒரு வெகுஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென அழைப்புவிடுத்தார்.

இந்த வெகுஜனவாத வனப்புரை, தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான மிகவும் ஆக்ரோஷமான நடவடிக்கைகளை மூடிமறைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. அவரது காலை "வெற்றி" இன் போது, ஃபாராஜ் கூறுகையில், பிரிட்டன் வெளியேறலாம் எனும் வாக்குகள் கிடைத்தால் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இங்கிலாந்தின் இப்போதைய 350 மில்லியன் பவுண்டு நிதியுதவி, தேசிய சுகாதார சேவைக்குச் செலவிடப்படும் என்று வாக்குறுதி அளித்து, வெளியேற வேண்டுமெனும் முகாம் ஒரு "தவறை" செய்துவிட்டது என்றார்.

ஜோர்ஜ் ஹலோவே (George Galloway), சோசலிச தொழிலாளர் கட்சி, சோசலிஸ்ட் கட்சி, Counterfire மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை அரசியல்ரீதியில் ஒரு குற்றகரமான பாத்திரம் வகித்துள்ளன. சோசலிச சமத்துவக் கட்சி விளங்கப்படுத்தியதைப் போல, “இடதிலிருந்து வெளியேறலாம்" என்று வலியுறுத்தி, அவை, அரசியல் வாழ்வை இன்னும் மேலதிகமாக ஒரு தேசியவாத போக்குகளுக்குள் திருப்பிவிடுவதை நோக்கமாக கொண்ட ஒரு வலதுசாரி நடவடிக்கைக்கு தொழிலாளர்களை அடிபணிய செய்ய உதவுகின்றன, “அவ்விதத்தில் அவை இங்கிலாந்திலும் மற்றும் ஐரோப்பா எங்கிலும் தீவிர வலதைப் பலப்படுத்தி ஊக்குவிப்பதுடன், அதேவேளையில் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் பாதுகாப்பைப் பலவீனப்படுத்துகின்றன.”

இந்த வெகுஜன வாக்கெடுப்பை செயலூக்கத்துடன் புறக்கணிக்க அழைப்புவிடுத்து சோசலிச சமத்துவக் கட்சி குறிப்பிடுகையில், பூகோளமயமான பொருளாதார நெருக்கடியின் காரணமாக, தேசிய மற்றும் சமூக விரோதங்களினது எழுச்சியின் காரணமாக ஐரோப்பிய ஒன்றியம் ஒரு முன்னேறிய முறியும் கட்டத்தில் உள்ளது. ஆனால் தொழிலாள வர்க்கம், முதலாளித்துவத்தை பாதுகாப்பது மற்றும் தேசிய அரசுக்குள் பின்வாங்குவதன் அடித்தளத்தில் இல்லாமல், மாறாக சோசலிசத்திற்கான போராட்டத்தில் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கான அதன் சொந்த சுயாதீனமான விடையிறுப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியது.