ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

After Brexit, mounting warnings of global slump and financial panic

பிரிட்டன் வெளியேறுவதற்கான வாக்களிப்பிற்கு பின்னர், உலகளாவிய மந்தம் மற்றும் நிதியியல் பதட்டம் பற்றிய எச்சரிக்கைகள் அதிகரிக்கின்றன

By Andre Damon
27 June 2016

வியாழனன்று நடந்த வெகுஜன வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறலாம் என்பதை அடுத்து உலகளாவிய பொருளாதார சரிவு வாரயிறுதியிலும் தொடர்ந்தது. இதற்கிடையே வெள்ளியன்று உலகளாவிய பங்கு விலை நிர்ணய சந்தைகளின் மதிப்பில் 2.5 ட்ரில்லியன் டாலர் அழிக்கப்பட்டதுடன் தொடர்ந்து நிகழ்ந்து வரும் சந்தை விற்றுத்தள்ளல்களானது, இந்த மிகப்பெரும் ஆழ்ந்த உலகளாவிய பொருளாதார நெருக்கடியின் வெறுமனே கண்கூடான தெரியும் ஒரு வெளிப்பாடு மட்டுமே என்ற எச்சரிக்கைகள் அதிகரித்து வருகின்றன.

கடந்த மாதம் சர்வதேச நாணய நிதியமும் பெடரல் ரிசர்வ் தலைமை பெண்மணி ஜெனெட் யெலெனும், ஒரு நீண்டகால வளர்ச்சி விகித பாதிப்புடன் குணாம்சப்படுத்தப்பட்ட "நீடித்த மந்தநிலைமை" என்று பொருளாதார நிபுணர்கள் சிலர் எதை குறிப்பிடுகிறார்களோ அதனுடன் ஒப்பிடும் நிலைமைகளை அமெரிக்காவும் உலக பொருளாதாரமும் உண்மையிலேயே முகங்கொடுப்பதாக எச்சரித்துள்ளனர்.

ஞாயிறன்று "மத்திய வங்கிகளது வங்கி" என்று சிலவேளைகளில் குறிப்பிடப்படும் சர்வதேச கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்கமைக்கும் வங்கியும் (BIS) இந்த கருத்துடன் தனது குரலை சேர்த்துக் கொண்டது. அது உலகளாவிய பொருளாதாரத்தில் நிலவும் ஆழ்ந்து வேரூன்றிய பிரச்சினைகளைக் குறித்து எச்சரித்தது.

வியாழக்கிழமை வெகுஜன வாக்கெடுப்புக்கு முன்னதாக வரையப்பட்ட ஓர் அறிக்கை குறிப்பிடுகையில், மிகவும் அதிகளவிலான கடன் மட்டங்கள், மிகவும் குறைந்துள்ள உற்பத்தி வளர்ச்சி, மற்றும் கொள்கை நடவடிக்கைகளுக்கான மிகவும் சுருங்கிய சூழல் என உலக பொருளாதாரம் "ஒரு 'மும்முனை அபாயங்களால்' அச்சுறுத்தப்பட்டு" இருப்பதாக குறிப்பிட்டது. நிதிக் கட்டுப்பாட்டு கொள்கையைக் கொண்டு நெருக்கடிகளை தொடர்ந்து எதிர்கொள்வதற்கான தகைமை குறித்து அது ஐயப்பாடுகளை காட்டியது.

இத்தகைய எச்சரிக்கைகள் நடைமுறையளவில் உலகின் ஒவ்வொரு மத்திய வங்கிகளது அறிக்கையிலும் இருந்தன. பங்குகளது விற்றுத்தள்ளல்களுக்கு விடையிறுப்பாக மேற்கொண்டு பணப்புழக்க நடவடிக்கைகளை விரிவாக்குவதற்கு தயாராக இருப்பதாகவோ அல்லது அதை தொடங்க இருப்பதாகவோ அவை கூறுகின்றன. பெடரல் ரிசர்வ் அதன் வட்டிவிகிதங்களை உயர்த்த தொடங்குவதன் மீதான அதன் அறிவிக்கப்பட்ட திட்டங்களை நிறுத்தும் அல்லது தலைகீழாக திருப்பும் என்பது தொடர்பாக சந்தைகளில் அதிகரித்தளவில் பந்தயம் கட்டிவருகிறன.

அதேபோன்ற சமீபத்திய நடவடிக்கையாக, பிரதம மந்திரி ஷின்ஜோ அபே இன் ஜப்பானிய அரசாங்கமும் பேங்க் ஆஃப் ஜப்பானும், நிதியியல் அமைப்புமுறைக்குள் கூடுதல் நிதிகளைப் பாய்ச்சும் வகைமுறைகளை அறிவித்தன. இது திங்களன்று காலை வர்த்தகத்தில் ஒரு சிறிய பங்குச்சந்தை அதிகரிப்பை ஏற்படுத்தியது, இதற்கிடையிலும் உலகளாவிய நாணயத்தில் மற்றும் ஏனைய பங்கு விலை நிர்ணய சந்தைகளில் தொடர்ந்து கொந்தளிப்பு நிலவியது, பிரிட்டிஷ் பவுண்டு தொடர்ந்து விற்றுத் தள்ளப்பட்டு, இரண்டு சதவீதம் வீழ்ச்சி அடைந்தது.

2008 இல் வெடித்த நெருக்கடிக்கு உலகின் மத்திய வங்கிகளது விடையிறுப்பில், குறைந்த வட்டி விகித கொள்கைகள் மூலமாக சொத்து குமிழிகளை உருவாக்குவதே மேலோங்கி இருப்பதாக BIS எச்சரித்தது. இத்தகைய நிலைமைகள் ஆக்கப்பூர்வமான முதலீடுகளைக் குறைத்து, உலகளவில் கடன் விரிவாக்கத்திற்கு எரியூட்டி இருப்பதாகவும், புதிதாக எழும் நெருக்கடிகளுக்கு மத்திய வங்கிகள் முறையாக விடையிறுப்பு காட்டுவதை கிட்டத்தட்ட சாத்தியமில்லாது செய்திருப்பதாகவும் அது எச்சரித்தது.

“உலக பொருளாதாரத்தை தற்போதைய சிக்கலான நிலைக்கு கொண்டு வந்துள்ள, கடன்களால் எரியூட்டப்பட்ட வளர்ச்சி மாதிரி மீது இனியும் உலக பொருளாதாரம் தங்கியிருக்க முடியாதென,” அந்த அறிக்கை எச்சரித்தது, “எதிர்காலமும் இன்றையதைப் போலவே ஆகி நாம் மீண்டுமொருமுறை வருத்தம் தெரிவிக்காதவாறான கொள்கைகளே நமக்கு மிகவும் அவசியப்படுகிறது,” என்பதையும் அது சேர்த்துக் கொண்டது.

பெருமந்த காலத்தை விவரிக்க 1930களில் முன்வைக்கப்பட்டதும், தற்போதைய நெருக்கடியைக் குறிப்பிட முன்னாள் நிதித்துறை செயலர் லாரன்ஸ் சம்மரால் பயன்படுத்தப்பட்டதுமான "நீடித்த மந்தநிலைமை" என்ற பதத்தை அந்த அறிக்கை, எழுத்துப்பூர்வமாக பிரயோகிக்கவில்லை என்ற போதும், அந்த பகுப்பாய்வின் உள்ளடக்கம் நடைமுறையளவில் அந்த கருத்துருவையே கொண்டிருந்தது.

“இந்த நெருக்கடி உற்பத்தி அளவை நிரந்தரமாக குறைத்திருப்பதாக தெரிகிறது,” என்று குறிப்பிட்ட அந்த அறிக்கை, “சமீபத்திய நெருக்கடி ஏறத்தாழ முன்னொருபோதும் இல்லாத அளவிலும் மற்றும் ஆழத்திலும் இருக்கின்ற நிலையில், உற்பத்தி அதன் நெருக்கடிக்கு முந்தைய போக்கிற்கு மீண்டும் திரும்புமென நினைப்பது யதார்த்தத்திற்கு முரணாக இருக்கும்,” என்பதையும் சேர்த்துக் கொண்டது.

உற்பத்தி வளர்ச்சி உலகளவில் "நீடித்தும் இல்லையென்றால் ஏற்ற-இறக்கத்துடனும்" மெதுவாக இருக்குமென்பதை அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது. உலகின் மத்திய வங்கிகளால் நடைமுறையளவில் கட்டுப்பாடின்றி பாய்ச்சப்பட்ட பணத்தால் எரியூட்டப்பட்ட நிதிமயமாக்கம் (financialization) மற்றும் ஊகவணிக நோய் (speculative mania) அதிகரித்தளவில் உலக பொருளாதாரத்தில் மேலாளுமை செலுத்திய நிலையில், சமீபத்திய ஆண்டுகளில் அதை குணாம்சப்படுத்திய ஒரு தொடர்ச்சியான பாரிய செல்வசெழிப்புகள் மற்றும் உயர்வுகளின் விளைவை இந்த வளர்ச்சிக்குறைவுக்கான காரணமாக அது சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

குறிப்பாக முன்னேறிய பொருளாதாரங்களில் உழைப்பின் உற்பத்தித்திறன் (Labour productivity) குறைந்துள்ளது. ஆதாரம்: சர்வதேச கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்கமைக்கும் வங்கி

இத்தகைய கொள்கைகள் "அசாதாரணமானரீதியில் குறைந்த வட்டி விகிதங்களுக்கும், பெயரளவிலான அர்த்தத்தில் அதிகளவில் எதிர்மறையாக கூட நீடிப்பதற்கும்" உதவுவதாக BIS எச்சரித்தது. சந்தைகளுக்கு மறுஉத்திரவாதம் வழங்குவதற்காக மத்திய வங்கிகளால் ஊக்குவிக்கப்படும் எதிர்மறை வட்டி விகிதங்கள் அதிகரிப்பதானது, “உடனடியாக பார்க்கையில் குறைந்த நஷ்டத்துடனும், காலப்போக்கில் படிப்படியாக அதிகரிக்கும் விதத்திலும் ஒரு நீண்ட எரியும் மின்உருகியின்-fuse-" அபாயமாக உள்ளது. “அத்தகைய வட்டி விகிதங்கள், ஆபத்தான சொத்துக்களின் அபாயங்களைக் குறைத்து காட்டி, சொத்து மதிப்புகளை அதிகரித்து காட்டி, அபாயகரமான நிதியியல்-முன்னெடுப்புகளை ஊக்கப்படுத்தி, அது தலைகீழாக ஆகும் போது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக மாற்றி விடுகிறது.”

எதிர்மறை-நஷ்ட சொத்திருப்புகளது வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும் வகையில், உலகளாவிய மத்திய வங்கியினது வட்டி விகிதங்கள் பூஜ்ஜியம் அளவிற்கு குறைந்துள்ளது. ஆதாரம்: சர்வதேச கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்கமைக்கும் வங்கி

வட்டி விகிதங்கள், ஒப்பீட்டளவில் பாதுகாப்பான சொத்திருப்புகளை கீழ்நோக்கி தள்ளியிருப்பதால், ஊக வணிகர்கள் கடந்த காலத்தில் பெற்ற அதே அளவிற்கான இலாபத்தைப் பெற அதிகரித்தளவில் அபாயகரமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய ஒரு சூழ்நிலையை இது குறிக்கிறது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், 2008 நெருக்கடியில் இருந்து மற்றும் பின்னோக்கி 1987 பங்குச்சந்தை பொறிவுக்கு அமெரிக்க பெடரல் ரிசர்வின் விடையிறுப்பு வரையில் இருந்துமே கூட, உலகளாவிய மத்திய வங்கி மேற்கொண்ட சகல நடவடிக்கைகளும் புற்றுநோயைப் போல நிதியியல் ஒட்டுண்ணித்தனத்தின் வளர்ச்சியை மட்டுமே தூண்டிவிட்டுள்ளது. இது தான் அந்த "மின்உருகியாகும்". இது தான் சர்வதேச கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்கமைக்கும் வங்கி எதை 2008 இன் "மிகப்பெரும் நிதியியல் நெருக்கடி" என்று குறிப்பிடுகிறதோ அதை தூண்டிவிட்டது, மீண்டும் இது எரிந்து போகக்கூடுமென்று அச்சுறுத்துகிறது.

அந்த அறிக்கை, கடன் பணபரிமாற்றம் இன்னும் மேலதிகமாக எதிர்மறை நஷ்டங்களில் கட்டமைவதற்கு இட்டுச் செல்லக்கூடிய தொடர்ச்சியான அசாதாரணமான அதிமிகை நாணய விநியோக கொள்கையைச் சுட்டிக்காட்டுகிறது, இந்த இயல்நிகழ்வைக் குறித்து BIS கடந்த ஆண்டின் ஆண்டறிக்கையிலேயே முதலில் எச்சரித்திருந்தது. அப்போது, “பணவீக்கத்திற்கு ஏற்ப சரிக்கட்டப்பட்ட கொள்கை விகிதங்கள் ஆழமாக பூஜ்ஜியத்திற்கும் கீழே வந்து, போருக்குப் பிந்தைய காலத்தில் எதிர்மறை பகுதியில் நீண்டகாலமாக தொடர்ந்து இருந்து வருகிறது,” என்று குறிப்பிட்டது. “ஐரோப்பிய மத்திய வங்கி, ஸ்வீடனின் ரிக்ஸ்பேங்க், டென்மார்க்கின் நேனஷல்பேங்க் மற்றும் சுவிஸ் தேசிய வங்கி ஆகியவற்றுடன் பேங்க் ஆஃப் ஜப்பானும் நடைமுறையளவில் எதிர்மறை வட்டிவிகித கொள்கைகளை ஏற்பதில் சேர்ந்துள்ளது,” என்பதையும் அது சேர்த்துக் கொண்டது.

இதன் விளைவாக, "மே மாத இறுதியில், நீண்டகால காலாவதியாகும் காலம் உள்ளடங்கலாக 8 ட்ரில்லியன் டாலருக்கு நெருக்கமாக இருந்த தேசியகடன், ஒரு புதிய சாதனையாக, எதிர்மறை நஷ்டங்களுக்குள் பரிவர்த்தனை ஆகி வந்தது.”

உலக சந்தைகளுக்குள் தொடர்ச்சியாக பணம் பாய்ச்சப்பட்டதன் காரணமாக, “நிதிக் கொள்கை வகுப்பாளர்கள் இலக்குகளுக்கு ஏற்ப பணவீக்கத்தைத் திரும்ப கொண்டு வர முடியாமல் சிரமப்பட்டனர்," இது பொருளாதார மந்தநிலைக்கு இட்டுச் சென்றது. “இந்த நடைமுறையில், நிதியியல் சந்தைகளோ அதிகளவில் மத்திய வங்கிகளது ஆதரவைச் சார்ந்திருக்குமாறு வளர்ந்தன, கொள்கை நடைமுறை மாற்றங்களுக்கான சூழலும் சுருங்கி உள்ளது,” என்பதையும் அது சேர்த்துக் கொண்டது. இத்தகைய உண்மைகள் ஏற்கனவே "கொள்கை வகுப்பதன் மீதான பொதுவான நம்பிக்கையை உலுக்கிக்" கொண்டிருக்கின்றன.

2008 நிதியியல் நெருக்கடிக்குப் பின்னர் உலகளாவிய கடன் அதிகரித்துள்ளது. ஆதாரம்: சர்வதேச கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்கமைக்கும் வங்கி

எவ்வாறிருப்பினும் நிகழ்ந்து வரும் நெருக்கடிக்கு, மேலதிக சிக்கன முறைகளுக்கு அப்பாற்பட்டு BIS வசம் உறுதியாக வேறெந்த தீர்வும் கிடையாது. அது "அரசினது செலவிடும் தரத்தை" உயர்த்தவும் "… குறிப்பிடத்தக்க அளவிற்கு பரிவர்த்தனைகளில் இருந்து … கையிருப்பை விலக்கி வைக்கவும்" அதேவேளையில் அரசு கடனைக் குறைக்கவும் அது அழைப்பு விடுத்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அமெரிக்காவில் சமூக பாதுகாப்பு, மருத்துவ காப்பீடு மற்றும் மருத்துவ உதவி போன்ற சமூக சேவைகள் மீது நிறைய செலவிடப்படுவதாகவும், வியாபார நடவடிக்கைகளுக்கு போதுமானளவிற்கு மானியம் உதவிகள் கொடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிடுகிறது.

சர்வதேச கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்கமைக்கும் வங்கி அழைப்புவிடுத்த இவ்விதமான நிதி கட்டுப்பாட்டு முறைமைகள் மற்றும் தொழிலாளர் சந்தை சீரமைப்புகள், யதார்த்தத்தில் 2008 நெருக்கடிக்கு விடையிறுப்பாக ஏற்கனவே ஒவ்வொரு பிரதான பொருளாதாரத்திலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கல்வி செலவினங்களை 25 சதவீத அளவிற்கு வெட்டியுள்ள அமெரிக்காவில் இருந்து தொடங்கி, கிரீஸ், ஸ்பெயின், போர்ச்சுக்கல் மற்றும் மிக சமீபத்தில் பிரான்சில் ஹோலாண்டு அரசாங்கம் எல் கொம்ரி தொழிலாளர் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தியது வரையில் இது பரந்துள்ளது.

இத்தகைய கொள்கைகள் முன்பினும் அதிகமாக செல்வவளத்தை நிதியியல் உயரடுக்கு பரிவர்த்தனை செய்துள்ளது, இவர்கள் அவர்களிடம் தேங்கி கிடக்கும் பணத்தை ஊக வணிகத்திற்கும் நிதியியல் ஒட்டுண்ணித்தனத்திற்கும் பயன்படுத்துகின்றனர், இது கடுமையான பொருளாதார மந்தநிலையின் ஒரு சுழற்சிக்கு எரியூட்டி, சமத்துவமின்மை மற்றும் நிதியியல் நெருக்கடியை அதிகரித்து, அதையொட்டி சர்வதேச விரோதங்களையும் பாதுகாப்புவாதத்தின் வளர்ச்சியையும் தூண்டிவிட்டு வருகிறது.