ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

EU leaders call for rapid British exit and European military buildup

பிரிட்டன் துரிதமாக வெளியேறுவதற்கும் ஐரோப்பிய இராணுவப் பெருக்கத்திற்கும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் அழைப்பு விடுக்கின்றனர்

By Alex Lantier
  28 June 2016

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கு பிரிட்டனில் வாக்களிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக விவாதிப்பதற்கு ஜேர்மன் சான்சலர் அங்கேலா மேர்க்கெல், பிரான்சின் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் மற்றும் இத்தாலியப் பிரதமர் மாத்தியோ ரென்சி ஆகியோர் பேர்லினில் நேற்று சந்தித்தனர். யூரோ மண்டலத்தின் மூன்று பெரிய பொருளாதாரங்களின் இத்தலைவர்கள் புரூசேல்ஸில் இன்று தொடங்குகின்ற இரண்டு நாள் ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டிற்கு முன்னதாக கூட்டாக ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். அந்த செய்தியாளர் சந்திப்பில், அவர்கள் பிரிட்டன் துரிதமாக வெளியேறுவதற்கும் இராணுவ மற்றும் போலிஸ் நடவடிக்கைகள் பாரிய அளவில் அதிகரிக்கப்படுவதற்கும் நெருக்குதலளித்தனர்

அவர்களது கருத்துகள் கவனமான வார்த்தைகள் கொண்டு தயாரிக்கப்பட்டிருந்தன என்றபோதிலும், பிரெக்ஸிட் வாக்களிப்பு பரந்த உலகளாவிய எதிர்விளைவுகளைக் கொண்ட வரிசையான நிதி மற்றும் அரசியல் நெருக்கடிகளைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது என்பது தெளிவாய் வெளிப்பட்டது. பிரெக்ஸிட்டினால் திகைத்துப் போயிருக்கும் ஐரோப்பிய ஒன்றியமானது, சிக்கன நடவடிக்கைகளின் அதிகரிப்பு மற்றும் ஒரு இராணுவவாத வெளியுறவுக் கொள்கை உள்பட வலது நோக்கி இன்னும் அதிகமாய் நகர்வதன் அடிப்படையில் எஞ்சியிருக்கும் தனது 27 உறுப்பு நாடுகளை ஒருங்கிணைப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறது. இது தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களின் அதிகரிப்புக்காக மட்டுமன்றி, அமெரிக்கா உட்பட வெடிப்புமிக்க சர்வதேச மோதல்களுக்கும் களம் அமைத்திருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்குரிய ஷரத்துகளின் மீது பேச்சுகளை தொடக்கும் வகையில் லிஸ்பன் உடன்படிக்கையின் 50வது பிரிவை பிரிட்டன் உடனடியாக அமலாக்கத் தொடங்க வேண்டும் என்பதான கோரிக்கைகளில் இருந்து மேர்க்கெல் முன்னதாய் தன்னை தள்ளி நிறுத்தி வந்திருந்தார். சென்ற வியாழக்கிழமை கருத்துவாக்கெடுப்பில் எதிர்பாராமல் விலக வேண்டும் பிரச்சாரம் வெற்றி பெற்றிருந்ததை அடுத்து, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன், அக்டோபரில் கட்சி மாநாட்டிற்குப் பின்னர் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் மற்றும் பிரதமர் பதவிகளை இராஜினாமா செய்யவிருப்பதாகவும் பிரிவு 50 ஐ அமலாக்கும் பொறுப்பை தனக்கு அடுத்து வருபவரிடம் விட்டு விடப் போவதாகவும் அறிவித்திருந்தார்.

ஆனால், நேற்று, மேர்கெல், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் துரிதமாக வெளியேற வேண்டும் என்று கோரும் ஐரோப்பியத் தலைவர்களின் பக்கம் சாய்ந்தார். அவர் அறிவித்தார்: “ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக விரும்பும் உறுப்பு நாடு ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலுக்கு தகவல் அறிவிக்க வேண்டும் என்று ஐரோப்பிய உடன்படிக்கைகளின் 50வது பிரிவு தெளிவாகக் கூறுகிறது, அதில் நாங்கள் ஒற்றுமையுடன் இருக்கிறோம். இது நடப்பதற்கு முன்னால், எந்த மேலதிக நடவடிக்கையும் முன்னேற முடியாத நிலையிருக்கிறது... அதாவது ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான பிரிட்டனின் முறைப்படியான கோரிக்கை ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் முன்னால் வைக்கப்படுகின்ற வரை அது குறித்த முறைசார்ந்த அல்லது முறைசாராத பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட முடியாதிருக்கிறது என்ற விடயத்தில் நாங்கள் ஒருமித்த கருத்து கொண்டிருக்கிறோம்.”

“மையத்தை விட்டு விலகும் போக்குகளை வலுப்படுத்தக் கூடிய” எது ஒன்றுக்கு எதிராகவும் எச்சரித்த மேர்க்கெல், பிரெக்ஸிட்டுக்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தை முன்செலுத்துவதற்கான ஒரு புதிய “உந்துசக்தி”க்கு அழைப்பு விடுத்தார். இராணுவ மற்றும் போலிஸ் படைகளைப் பெருக்குவது மற்றும் வணிகப் போட்டித்திறனை ஊக்குவிப்பது ஆகியவற்றை பிரதான பிரச்சினைகளாக அவர் அடையாளம் காட்டினார்.

ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பங்குச் சந்தைகள் தொடர்ந்து தடுமாறி வருகின்ற நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டனை துரிதமாக வெளியேறக் கோருவதை நியாயப்படுத்துவதற்கு, ஹாலண்ட் ஒரு நிதி பீதியின் அபாயத்தை காரணம் காட்டினார். “ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும் விவகாரத்தைக் கையாளுவதிலோ, அல்லது 27 உறுப்பினர் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு புதிய உந்துசக்தியை வழங்குவதிலோ நாம் கொஞ்சமும் தாமதிக்கக் கூடாது” என்றார் அவர். அவர் மேலும் கூறினார்: “நிச்சயமற்ற தன்மையே அனைத்திலும் மோசமானதாகும். அது பெரும்பாலும் பகுத்தறிவற்றதாக இருக்கின்ற அரசியல் நடத்தையை உருவாக்குகிறது. நிச்சயமற்ற நிலையானது பகுத்தறிவற்றதாக இருக்கின்ற நிதிரீதியான நடத்தையையும் உருவாக்கி விடுகிறது. ஐக்கிய இராச்சியம் இந்த வலிமிக்க அனுபவங்களுக்குள், நிதிரீதியாகவும் சரி அரசியல்ரீதியாகவும் சரி, ஏற்கனவே பயணித்துக் கொண்டிருக்கிறது.”

இராணுவ மற்றும் பாதுகாப்பு செலவினத்தை ஊக்கப்படுத்துவதற்கான மேர்க்கெலின் முன்மொழிவை வழிமொழிந்ததற்கு பின்னர், ஹாலண்ட் “யூரோ மண்டலத்தில் சமூக மற்றும் நிதிச்செலவின ஒருமுகப்படுத்தலுக்கு” அழைப்பு விடுத்தார். “இது நமது முன்னுரிமைகளில் ஒன்று” என்றார். யூரோ மண்டல நாடுகள் ஊதியங்கள் மற்றும் சமூக உரிமைகளின் மீது ஏற்கனவே அரக்கத்தனமான தாக்குதல்களை நடத்தி வருகின்ற நிலையில், இராணுவச் செலவினத்திற்கு ஊட்டமளிப்பதும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வரவு-செலவுகளை தரப்படுத்துவதும் தவிர்க்கவியலாமல் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களின் மீது புதிய, இன்னும் ஆழமான தாக்குதல்களைக் கொண்டதாய் இருக்கும்.

இத்தாலிய வங்கிகளைப் பிணையெடுக்க புதிய 40 பில்லியன் யூரோ தொகைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் ரென்சி கூறுகையில், “பிரிட்டிஷ் குடிமக்களின் முடிவு எங்களுக்கு சோகமளிக்கிறது, ஆனால் இது ஐரோப்பாவிற்கு ஒரு புதிய சகாப்தமாகும்” என்றார்.

பிரிட்டனை கடுமையாக நடத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் விடும் அழைப்புகள் ஐரோப்பாவிற்குள் உறவுகள் முறிந்திருப்பதை மட்டுமன்றி, ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் பதட்டங்கள் வளர்ச்சி கண்டுள்ளதையும் கூட அம்பலப்படுத்துகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்றும் நேட்டோவின் தலைமை அதிகாரிகளை சந்திப்பதற்காக அமெரிக்க வெளியுறவுச் செயலரான ஜோன் கெர்ரி நேற்று ஐரோப்பா பறந்தார். பிரெக்ஸிட் நெருக்கடியைக் கையாளுவதில் “வன்மமான அடிப்படையில் கனவு காணத் தொடங்க வேண்டாம்” என்று அவர் ஐரோப்பிய ஒன்றியத்தை எச்சரித்தார். இத்தாலிய வெளியுறவு அமைச்சரான பாவுலோ ஜென்ரிலோனி (Paolo Gentiloni) உடன் பேசிய அவர், 22 ஐரோப்பிய உறுப்பு நாடுகள் ஏற்கனவே நேட்டோவில் உறுப்பினர்களாக இருப்பதை குறிப்பாக சுட்டிக்காட்டினார், “சாத்தியமான அளவு ஸ்திரத்தன்மையும், சாத்தியமான அளவு நிச்சயத்தன்மையும் நிலவ வேண்டும்” என்றார் அவர்.

திங்களன்று, “பிரெக்ஸிட் மூலம், அக்கண்டத்திற்கான வாஷிங்டனின் நேரடி இணைப்பு திடீரென்று தேய்ந்து போகிறது” என்ற தலைப்பில் வெளியான ஒரு கட்டுரையில், நியூயோர்க் டைம்ஸ், பிரெக்ஸிட் அமெரிக்க-ஐரோப்பிய கூட்டணியை பலவீனம் செய்திருப்பது குறித்த அமெரிக்க அதிகாரிகளின் கவலைகளை வெளிப்படுத்தியது. பிரிட்டன் அளவுக்கு “ஐரோப்பிய விவாதங்களில் அமெரிக்காவுக்கு பயனளிக்கக் கூடிய விதத்தில் உறுதியாக தனது முத்திரையைப் பதித்த நாடுகள் வெகு சிலவே” என்று டைம்ஸ் எழுதியது. வாஷிங்டனுக்கான தலைமை செய்தியாளரான டேவிட் சாங்கரால் எழுதப்பட்டிருந்த இக்கட்டுரை பின்வருமாறு புலம்பியது: “ஐரோப்பிய வர்த்தகக் கோரிக்கைகளை நேர்படுத்துவது மற்றும் நாடுகளை நேட்டோவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு கூடுதலாய் பங்களிப்பு செய்யவைக்கும் வகையில் நெருக்குதலளிப்பது ஆகியவை உட்பட ஓசையில்லாது நகர்ந்துகொண்டிருந்த ஒரு இராஜதந்திர அனுகூலம் திடீரென இல்லாது போயிருக்கிறது.”

“ஜேர்மனி இன்னும் அமெரிக்காவை சந்தேகக் கண் கொண்டுதான் பார்க்கிறது” என்றும் “பிரான்ஸ் பல சமயங்களில் தனியானதொரு பாதையில் பயணிக்கிறது” என்று எச்சரித்த அக்கட்டுரை, “இடைவெளியை இட்டுநிரப்புகின்ற வகையில் ஐரோப்பியர்களிடம் அமெரிக்காவுக்காக செயல்பட பிரிட்டன் கொண்டிருந்த திறமையே உலக இராஜதந்திரத்தின் ஒரு சகாப்தத்தில் அமெரிக்கா-இங்கிலாந்து உறவை சிறப்புமிக்கதாக ஆக்கியிருந்தது” என்று எழுதியது. “இப்போது ஒரு வெள்ளை மாளிகை அதிகாரி குறிப்பிட்டதைப் போல, இந்த பாலம், ஒருசிலரே முன்கணித்த ஒரு திடீர் எழுச்சி மூலமாக துடைத்தழிக்கப்பட்டிருக்கிறது” என்று சாங்கர் தொடர்ந்து எழுதினார்.

பிரெக்ஸிட் நெருக்கடி உலகளவில் ஒரு வரலாற்று திருப்புமுனையை குறித்து நிற்கிறது என்பதும், ஐக்கிய இராச்சியத்திற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் அதிகரித்துச் செல்லும் மோதலானது உலக ஏகாதிபத்தியத்தின் முரண்பாடுகளில் ஆழமாக வேரூன்றியிருக்கின்ற மிகப் பரந்த மோதல்களால் நிரம்பியிருக்கிறது என்பதும் கருத்துவாக்கெடுப்புக்கு பிந்தைய நிலைமைகளால் ஏற்கனவே தெளிவாகியிருக்கின்றன.

பிரெக்ஸிட் வாக்களிப்பே கூட, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கிடையே ஆழமடைந்திருக்கும் குரோதங்களால் பலவீனப்பட்டும், பல வருட கால சிக்கன நடவடிக்கைகள் மற்றும் சமூக மற்றும் பொருளாதார பிற்போக்குத்தனம் ஆகியவற்றின் விளைவாக தொழிலாள வர்க்கத்தின் பார்வையில் பரவலாய் மதிப்பிழந்தும், ஐரோப்பிய ஒன்றியம் உடைவதையே பிரதிபலிப்பதாக இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் திவால்நிலையும் ஐரோப்பாவை ஒரு முதலாளித்துவ அடிப்படையில் ஐக்கியப்படுத்துவதற்கு சாத்தியமின்மையும், உற்பத்தி உலகளாவ ஒருங்கிணைக்கப்பட்டதாய் இருப்பதற்கும் தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையில் இருக்கக் கூடிய ஒரு பரந்த, தீர்க்கவியலாத முரண்பாட்டின் ஐரோப்பாவிற்குள்ளான வெளிப்பாடு மட்டுமே ஆகும்.

பிரிட்டிஷ்-ஐரோப்பிய உறவுகளில் கடைசியாக ஏற்பட்ட நெருக்கடியானது - 1963 மற்றும் 1967 இல் ஐரோப்பிய பொதுச் சந்தையில் பிரிட்டன் நுழைவதை பிரெஞ்சு ஜனாதிபதி சார்லஸ் டு கோல் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுத்தார் - அமெரிக்காவுடன் ஏற்பட்ட மோதல்களுடன் நெருக்கமாய் பின்னிப்பிணைந்ததாய் இருந்தது. பிரான்சின் முன்னாள் காலனித்துவ பிரதேசங்களில், குறிப்பாக பிரான்சில் இருந்து சுதந்திரம் பெறுவதற்கு அல்ஜீரியா போர் நடத்திய சமயத்தின் போது, அமெரிக்காவின் செல்வாக்கு அதிகரித்துச் சென்றதில் கோபமடைந்தும், உலக கையிருப்பு நாணயமதிப்பாக டாலரின் பாத்திரத்தைக் கொண்டு அமெரிக்கா பொருளாதார அனுகூலங்களை பெற்றுக் கொண்டதைக் கண்டு வெறுப்படைந்தும், ஐரோப்பாவில் அமெரிக்காவின் செல்வாக்கை மட்டுப்படுத்துவதற்கு டு கோல் முனைந்தார்.

நேட்டோ இராணுவ கட்டளை தலைமையில் இருந்து பிரான்சை அவர் திரும்பப் பெற்றுக் கொண்டதோடு, ஐரோப்பாவிலான அமெரிக்காவின் செல்வாக்கை அதிகரிக்கச் செய்வதற்கான “ட்ரோஜான் குதிரை” (Trojan horse) ஆக செயல்படுவதக பிரிட்டனை வெளிப்படையாகத் தாக்கினார். ஆயினும், டு கோல் இறந்த பின்னர், பிரிட்டனை பொதுச் சந்தையில் சேர்க்கும் மற்ற ஐரோப்பிய நாடுகளின் விருப்பத்திற்கு பிரான்ஸ் இணங்கியது.

ஆயினும், ஒரு ஒட்டுமொத்தமான காலகட்டத்தில், அமெரிக்க-ஐரோப்பிய உறவுகளில் பதட்டங்கள் அதிகரித்துச் சென்றிருக்கின்றன. சோவியத் ஒன்றியத்தை ஸ்ராலினிசம் கலைத்ததும் கிழக்கு ஐரோப்பாவெங்கிலும் முதலாளித்துவம் மீட்சி செய்யப்பட்டதும் ஒரு பொது எதிரியைக் காட்டி ஐக்கியப்படுத்தும் விளைவை நேட்டோ கூட்டணிக்கு இல்லாது செய்தது. அதே காலத்தில், அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியும் இந்த வீழ்ச்சியை மத்திய கிழக்கிலும் ஆபிரிக்காவிலும் இன்னும் பரந்த குருதிகொட்டும் போர்களை நடத்துவதன் மூலமாக சரிக்கட்ட அமெரிக்கா செய்த முயற்சியும் அமெரிக்க-ஐரோப்பிய பதட்டங்களை மேலும் தீவிரப்படுத்தியது. 2003 இல் ஈராக் மீதான அமெரிக்கப் படையெடுப்பை பிரான்சும் ஜேர்மனியும் வெளிப்படையாக எதிர்த்தன.

2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்குப் பிந்தைய காலத்தில் ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் எதிரான போர் முனைப்பை அமெரிக்கா அதிகப்படுத்தியிருப்பதானது - இது உலகளாவிய ஒரு அணுஆயுதப் போரைத் தூண்ட அச்சுறுத்துகிறது - ஐரோப்பிய முதலாளித்துவத்தின் பிரிவுகளிடம் ஆழமான எதிர்ப்பைத் தூண்டிவிட்டிருக்கிறது என்பது மேலும் மேலும் தெளிவாகி வருகிறது. சென்ற ஆண்டில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சீனாவின் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் இணைந்ததன் மூலம் அமெரிக்காவின் “ஆசியாவை நோக்கிய திருப்பத்தை” மறுதலித்தன.

உக்ரேனில் நேட்டோ ஆதரவு அரசாங்கம் ஒன்றை அமர்த்துவதற்காய் நடத்தப்பட்ட 2014 கியேவ் ஆட்சிக்கவிழ்ப்பை ஜேர்மனி ஆதரித்திருந்தது என்றாலும் கூட, அமெரிக்காவின் தலைமையில் ரஷ்யாவை இலக்காகக் கொண்டு நடத்தப்படுகின்ற நேட்டோ இராணுவ ஒத்திகைகளை “போர்வெறிக்கூச்சல்” என்று ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சரான ஃபிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் சமீபத்தில் கண்டனம் செய்தார்.

இப்போது, ஐரோப்பிய ஒன்றியமானது, பிரெக்ஸிட் நெருக்கடியால் கிழிபடும் அபாயத்தால் அச்சுறுத்தல் பெற்று, உள்நாட்டில் அதிகரித்துச் செல்லும் சமூக எதிர்ப்புக்கு எதிராகவும், அமெரிக்கா உள்ளிட்ட வெளிப்புற எதிரிகளுக்கு எதிராகவும் இரண்டிற்கும் எதிராக பயன்படுத்தத்தக்க வகையில் தனது இராணுவ மற்றும் போலிஸ் படைகளை பாரிய அளவில் கட்டியெழுப்புவதன் மூலமாக இதில் இருந்து தப்பிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறது. இன்று தொடங்கவிருக்கின்ற ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டிற்கு முன்னதாக தயாரிக்கப்பட்டிருக்கும் ஆவணங்களில் —ஒன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை தலைவரான ஃபெடரிகா மோகேரீனி (Federica Mogherini) எழுதியது; இரண்டாவது ஸ்ரைன்மையர் மற்றும் பிரெஞ்சு வெளியுறவு அமைச்சரான ஜோன்-மார்க் எய்ரோ ஆகியோரால் இணைந்து எழுதப்பட்டது— தெளிவாக வெளிப்படுகிறது. இரண்டுமே இராணுவரீதியாக அமெரிக்காவில் இருந்து சுதந்திரமான வகையில் செயல்படுவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் திறனை அபிவிருத்தி செய்வதில் உறுதி காட்டுகின்றன.

ஒரு பொதுவான ஐரோப்பிய இராணுவத்தை உருவாக்குவதற்கான அடிப்படையை அமைக்க வழிவகுக்கும் வண்ணம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தங்களது இராணுவ உபகரணங்கள், அலகுகள் மற்றும் படைத்தலைமை சங்கிலிகளை பகிர்ந்து கொள்கின்ற “கட்டமைப்பான ஒத்துழைப்பு”க்கு மோகேரீனியின் ஆவணம் அழைப்பு விடுத்தது. “ஐரோப்பிய ஒன்றியம் பாதுகாப்பு ஒத்துழைப்பை முறைப்படி ஊக்குவித்து, முடிவெடுத்தல் மற்றும் நடவடிக்கைகளில் ஐரோப்பாவின் தன்னாட்சிக்கு இன்றியமையாததாக இருக்கக் கூடிய ஒரு ஸ்தூலமான ஐரோப்பிய பாதுகாப்புத் துறையை உருவாக்கப் பாடுபடும்” என்று அந்த ஆவணம் தெரிவிக்கிறது.

ரஷ்யா மீது தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்தை அமெரிக்கா நிர்ப்பந்தித்ததன் பின்னர் வீழ்ச்சி கண்டிருந்த ரஷ்யாவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை சரிசெய்வதிலும் பிரெக்ஸிட் உதவும் என்று அந்த ஆவணத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்யாவும் “ஒன்றில் ஒன்று சார்ந்திருப்பவை” என்று கூறி நெருக்கமான உறவுகளுக்கு அது சூளுரைக்கிறது. “ஆகவே நாம் உடன்பாடின்மைகளை விவாதிப்பதற்கும் நமது நலன்கள் ஒன்றுபடும் இடங்களில் ஒத்துழைப்பதற்கும் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம்.”

ஸ்ரைன்மையர் - எய்ரோ ஆவணம், தன் பங்கிற்கு பின்வருமாறு அறிவிக்கிறது: “முன்னெப்போதினும் வலிமையாக பெரும் சக்திகளிடையேயான நலன்கள் பிரிந்து செல்வதை குணாம்சமாகக் கொண்டிருக்கும் ஒரு சர்வதேச சூழலில், ஐரோப்பிய ஒன்றியத்தை படிப்படியாக ஒரு சுதந்திரமான உலகளாவிய கதாபாத்திரமாக அபிவிருத்தி செய்வதற்கு பிரான்சும் ஜேர்மனியும் உழைக்க வேண்டும். நமது அறிவையும் நமது குடிமையியல் மற்றும் இராணுவ உபகரணங்களையும் முன்னெப்போதினும் திறம்பட்டதும் யதார்த்தமானதுமான ஒரு கொள்கையாக மாற்றுவதே இலக்காகும்.”