ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

CGT union tries to block general strike against French labor law

பிரெஞ்சு தொழிலாளர் சட்டத்திற்கு எதிராய் பொது வேலைநிறுத்தத்தினை தடுக்க CGT தொழிற்சங்கம் முயற்சிக்கிறது

By Alex Lantier
30 May 2016

PS அரசாங்கத்தின் பரவலாய் வெறுக்கப்படும் தொழிலாளர் சீர்திருத்தத்திற்கு எதிராக அதிகரித்துச் செல்லும் வேலைநிறுத்த இயக்கம் குறித்து விவாதிப்பதற்காக CGT தலைவரான பிலிப் மார்டினேஸ் நேற்று BFM-Politique நிகழ்ச்சியில் தோன்றினார். இந்தச் சட்டத்திற்கு எதிராக வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுக்கின்ற CGT இன் முடிவைக் குறித்து தொகுப்பாளர் Apolline de Malherbe, பல பத்திரிகையாளர்கள் மற்றும் PS சட்டமன்ற உறுப்பினரான Philippe Doucet ஆகியோரிடம் இருந்து பல தீவிரமான, பல சமயங்களில் குரோதமான கேள்விகளுக்கு அவர் முகம்கொடுத்தார்.

இரண்டு மாதங்களுக்கு முன்பாய் PS தொழிலாளர் அமைச்சர் மரியம் எல் கொம்ரிக்கு எதிராக இளைஞர் ஆர்ப்பாட்டங்களும் மற்றும் வேலைநிறுத்தங்களும் வெடித்தது முதலாகவே, அதிலும் குறிப்பாக சென்ற இரண்டு வாரங்களில் இந்த சட்டத்திற்கு எதிரான தொழிலக நடவடிக்கைகளுக்கு CGT அழைப்பு விடுக்கத் தொடங்கியது முதலாகவே, மார்டினேஸ் ஒரு தீவிரப்பட்டவரான பிம்பத்தைக் காட்டிக் கொள்ள முனைந்து வந்திருக்கிறார். எல் கொம்ரி சட்டத்திற்கு எதிரான வேலைநிறுத்த நடவடிக்கையை “பொதுமைப்படுத்த” (generalizing) அவர் அழைப்பு விடுத்திருக்கிறார். இருந்தாலும் CGT, PS உடன் இரகசியமான கொல்லைப்புற பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தது என்பதையும், வேலைநிறுத்த அலை பெருகிய போதிலும், அந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கான ஒரு உடன்பாட்டை எட்ட முயற்சி நடந்து கொண்டிருந்தது என்பதையும் அவரது நேர்காணல் ஊர்ஜிதம் செய்தது.

இது CGT அதிகாரத்துவத்துக்கு பிரம்மாண்டமான சிரமங்களை முன்நிறுத்துகிறது: ஒரு பரந்த வேலைநிறுத்த அலை எழும்பிக் கொண்டிருக்கிறது, அத்துடன் ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கான சடரீதியான சாத்தியம் பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவெங்கிலும் எழுந்து கொண்டிருக்கிறது. ஆனாலும், ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டும், பிரதமர் மானுவல் வால்ஸும் PS இன் முதன்மை செயலாளர் ஜோன்-கிறிஸ்தோப் கம்படெலிஸ் உம், இந்த சட்டத்தில் இம்மியளவான மாற்றங்களை மட்டுமே தங்களால் ஏற்றுக் கொள்ள முடியும் என வலியுறுத்திக் கூறியுள்ளனர். இந்த சட்டத்தை எதிர்த்துப் போராடுகின்ற தொழிலாளர்களுக்கு மார்டினேஸின் கருத்துகள், போராட்டம் விலைபேசப்படுவதை தவிர்க்கவேண்டுமென்றால் இந்தப் போராட்டம் CGT இன் கரங்களில் இருந்து அகற்றப்பட்டு சுயாதீனமான வகையில் ஒழுங்கமைக்கப்பட்டாக வேண்டும் என்ற ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளன.

இந்த சட்டத்திற்கு எதிரான எந்தவொரு வேலைநிறுத்தங்களையும் அல்லது ஆர்ப்பாட்டங்களையும் சிறுமைப்படுத்துகின்ற நோக்கத்துடன் Malherbe ம் அவரது விருந்தினர் பேட்டிகாணுபவர்களும் மார்டினேஸ் மீது வலது-சாரித் தாக்குதல்கள் தொடுப்பதில் தமது நேரத்தில் பெரும்பங்கினை செலவிட்டனர். PS இன் ஒரு உள்ளூர் தலைமையகம் ஒரு ஆர்ப்பாட்டத்தின் போது அடையாளம் தெரியாத சக்திகளால் புல்லட்டுகளால் சல்லடையாக துளையிடப்பட்டிருந்த ஒரு படத்தை Doucet ஆத்திரமூட்டும் வகையில் எடுத்துக் காட்டினார்; அதன்பின் அவர் CGT மீது தாக்குதல் நடத்தியதோடு, PS மீதான வன்முறையான தாக்குதல்களை மார்டினேஸ் கைவிட வேண்டும் என வெறிபிடித்தாற்போன்று கோரிக்கை விடுத்தார். மார்டினேஸ் எழுதிய ஒரு தலையங்கத்தினை வெளியிட மறுத்த செய்தித்தாள்களில் Malherbe ம் Le Parisien செய்தியாளர் ஒருவரும் CGT வேலைநிறுத்தங்கள் மீது தாக்கியிருந்தனர்.

எவ்வாறாயினும், PS அரசாங்கத்தை CGT ஆதரிக்கிறது மற்றும் அதனுடன் ஒரு உடன்பாட்டிற்காக அது எதிர்நோக்கியிருக்கிறது என்பதை மறைமுகமாக ஆனாலும் சந்தேகத்திற்கிடமில்லாத வகையில் காட்டிய ஒரு வரிசையான வசனங்களே மார்ட்டினேஸின் நேர்காணலின் இருதயத்தானமாக இருந்தது.

“இரண்டு மாதங்களில் முதன்முறையாக, பிரதமரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அரசியல் நிலைப்பாடுகளில் அவர் முடக்கப்பட்டு விடாமல் இருப்பதே சிறந்ததாகும்.” என்றார் மார்டினேஸ். ஆயினும், வால்ஸ் உடன் அவர் என்ன பேசினார் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, கூறுவதற்கு அவர் வெளிப்படையாக மறுத்து விட்டார்.

“இரகசிய உரையாடல்” என்று அவர் பதிலளித்தார்.

வால்ஸ் உடனான தனது இரகசியமான, கொல்லைப்புற உரையாடலைக் குறித்து மக்களுக்கு சொல்வதற்கு மார்டினஸ் மறுத்து விட்டார் எனினும், அவர், துரிதமான ஒரு பல்டிக்கு தயாரிப்பு செய்து கொண்டிருப்பதை அவரது கருத்துக்கள் காட்டுகின்றன. சட்டத்தை “திரும்பப் பெறுவதற்கு” தொழிற்சங்க நிர்வாகிகள் கொடுத்த முந்தைய அழைப்புகளை எல்லாம் கைவிட்ட அவர், அதற்கு மாறாய் அந்த சட்டம் “மீண்டும் விவாதிக்கப்பட” அழைத்தார்.

PS உடன் CGT அரசியல் மோதலுக்குள் செல்லாது என்பதை மார்டினேஸ் திரும்பவும் வலியுறுத்தினார். அவர் “வால்ஸுக்கு எதிராக ஒண்டிக்கு ஒண்டியாக நிற்கவில்லை” என்று அறிவித்தார். CGT “தனது பாத்திரத்தை ஆற்றிக் கொண்டிருக்கிறது... ஒரு தொழிற்சங்கமாக எங்களது முறையான பாத்திரத்தை ஆற்றிக் கொண்டிருக்கிறோம்” என்று அவர் வலியுறுத்தினார்.

இது ஏறக்குறைய PS க்கு ஆதரவான ஒரு வெளிப்படையான கூற்றாக இருந்தது. 2012 ஜனாதிபதி தேர்தலில் ஹாலண்டுக்கு வாக்களிக்க CGT அழைத்ததற்காக அவர் வருந்துகிறாரா என்று கேட்கப்பட்டபோது, மார்ட்டினேஸ் ஆம் என்றோ இல்லை என்றோ பதிலளிக்காமல், அந்த சமயத்தில் CGT “போதுமான கவனம் செலுத்தவில்லை” என்று மட்டும் கூறினார். 2012 இல், அப்போது CGT இன் பொதுச் செயலராய் இருந்த பேர்னார்ட் திபோ ஹாலண்டின் வலது-சாரி போட்டியாளரான நிக்கோலோ சார்க்கோசியை அகற்றுவதற்கான ஒரு வாக்குக்காக அழைப்பு விடுத்திருந்தார் என்பதை நினைவுகூர்ந்த அவர், பின் “இன்னொரு சகாப்தத்தில்” ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான பகிரங்க வழிமொழிவுகளை CGT வழங்கியிருந்ததாக அவர் அறிவித்தார்.

ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியுடன் இரண்டாம் உலகப் போர் தொடங்கி இன்று வரையிலும் நீடித்து வருகின்ற CGT யின் ஒரு நீண்ட கூட்டணியையே அவர் மறைமுகமாய் குறிப்பிட்டார். எதிர்ப்புரட்சிகரமான சோவியத் அதிகாரத்துவம் 1991 இல் சோவியத் ஒன்றியத்தினை கலைக்கின்ற வரையிலும் அதற்கு நெருக்கமான ஒரு கூட்டாளியாக இருந்த PCF, பிரான்சில் தொழிலாள வர்க்கத்தின் கடைசியான மாபெரும் புரட்சிகர அனுபவமான 1968 பொது வேலைநிறுத்தத்திற்கு சிறிது காலத்திற்கு பின்னர் PS ஸ்தாபிக்கப்பட்டது முதலாக அதனுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்து வந்திருக்கிறது. 1981 இல் ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோன் பதவிக்கு வந்தது முதலாக ஒவ்வொரு PS அரசாங்கத்திலும் உத்தியோகபூர்வ அல்லது உத்தியோகபூர்வமற்ற கூட்டணிக் கூட்டாளியாக அது இருந்து வந்திருக்கிறது.

இந்த வேலைநிறுத்தத்தின் அறிவிக்கப்படாத தலைமையாக CGT எவ்வாறு எழுந்திருக்கிறது என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. பெருமளவில் இது வழமையின் படி வந்திருக்கிறது, ஏனென்றால் பல தசாப்தங்களாக “இடது” எனக் கூறப்பட்டு கையளிக்கப்பட்டு வந்திருக்கக் கூடிய அரசியல் கட்சிகள் - PCF, ஜோன்-லுக் மெலன்சோன் தலைமையிலான இடது முன்னணிக்குள் இருக்கின்ற PCF இன் கூட்டாளிகள், மற்றும் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி ஆகியவை - PS ஐ எதிர்ப்பதில்லை அல்லது சவால் செய்ய விரும்புவதில்லை.

அதற்கு மாறாய், இத்தாலியில் Rifondazione Comunista மற்றும் கிரீசில் சிரிசா போன்று சோவியத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில் ஐரோப்பாவில் இருக்கும் இதேபோன்ற கட்சிகளை அடியொற்றி, அவை சிக்கன நடவடிக்கை-ஆதரவு மற்றும் போர்-ஆதரவு அரசாங்கங்களை ஆதரித்தன அல்லது அவற்றில் இணைந்தன. இன்றும் கூட, எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறை முதலாக, மின்சாரம், வாகன உற்பத்தித் துறை, டிரக் போக்குவரத்துத் துறை, துறைமுகத் துறை மற்றும் வெகுஜனப் போக்குவரத்துத் துறை வரையிலும் பிரான்ஸ் எங்கிலுமான தொழிற்சாலைத் தொழிலாளர்கள் பாரிய அளவில் போராட்டத்தில் அணிதிரள்கின்ற நிலையிலும் கூட, இவை PS ஐ சவால் செய்யவில்லை அல்லது ஹாலண்டுக்கு எதிரான அரசியல் போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கு முனையவில்லை.

பிரான்சில் ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு அழைக்காமல் மாறாக வேலைநிறுத்தத்தை “பொதுமைப்படுத்துவதற்கு” அழைப்பு விடுக்கின்ற CGT இன் அழைப்புகளது உள்ளடக்கத்தின் மீதும் இது வெளிச்சம் பாய்ச்சுகிறது. ஒரு பொது வேலைநிறுத்தத்தை, அதாவது, PS அரசாங்கத்திற்கும் முதலாளித்துவ வர்க்கத்திற்கும் எதிரான ஒரு பொதுவான வேலைநிறுத்தத்தில் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தையும் அணிதிரட்டி ஐக்கியப்படுத்துவதற்கான ஒரு போராட்டத்தை, அவை எதிர்க்கின்றன. மாறாக, தொழிலாளர்களின் பரந்த பிரிவுகள் இடையே வெடிப்பு மிக்க கோபம் அபிவிருத்தி காணுகின்ற நிலையில், வேலைநிறுத்தங்களை “பொதுமைப்படுத்தி”, அதாவது பல்வேறு துறைகளெங்கும் தொடர்பில்லாமல் அவற்றை சிதறடித்து, அவற்றின் வீரியத்தைத் தணித்து அவை ஹாலண்ட் அரசாங்கத்தைப் பதவியிறக்காமல் பார்த்துக் கொள்வதை நோக்கமாய் கொண்டிருக்கின்றன.

குறிப்பாக இந்தச் சட்டத்தைத் திணிப்பதற்கு PS அரசாங்கம் முழுத் தீர்மானத்துடன் இருப்பதைக் கொண்டு பார்த்தால், இந்த மூலோபாயமானது, தொழிலாளர்களின் போராட்டங்களை அசிங்கமாய் விலைபேசத் தயாராகின்ற அதேநேரத்தில் அவற்றின் மீதான அரசியல் கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக் கொள்ள CGT மேற்கொள்கின்ற ஒரு முயற்சியையே குறிப்பதாக இருக்கிறது.

இந்த விலைபேசலுக்கான மார்ட்டினேஸின் தயாரிப்புகள் அரசியல் மற்றும் வரலாற்று பொய்களைக் கொண்டு மூடிமறைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து வேலைநிறுத்தங்களுக்கு அழைக்க நிர்ப்பந்தம் பெற்றதாக CGT உணர்வது ஏன் என்பதை விளக்குமாறு கேட்கப்பட்டபோது, தொழிலாளர்கள் போராட விரும்பி ஆனால் CGT மறுத்து ஒரு வேலைநிறுத்த இயக்கத்தை நிறுத்த அது நெருக்குதலளித்ததாக “வரலாற்றில் ஒருபோதும் இருந்ததில்லை” என்று மார்டினேஸ் தெரிவித்தார்.

உண்மையில் பிரெஞ்சு ஸ்ராலினிசம், லியோன் ட்ரொட்ஸ்கி மற்றும் ட்ரொட்ஸ்கியின் ஆதரவாளர்கள் பிரதிநிதித்துவம் செய்த உலக சோசலிசப் புரட்சியின் வேலைத்திட்டத்திற்கு அது கொண்டிருந்த குரோதத்தின் காரணத்தால், புரட்சிகரப் போராட்டங்களை ஒரு முடிவுக்கு கொண்டுவந்து பிரெஞ்சு முதலாளித்துவத்தை ஸ்திரப்படுத்துவதில் அது முன்னணிப் பாத்திரத்தை வகித்திருந்த போராட்டங்களையே தன் வரலாற்றில் பெருமளவில் கொண்டிருக்கிறது. மிக இழிபுகழ் பெற்ற உதாரணத்தை கூற வேண்டுமென்றால், 1936 வேலைநிறுத்தத்தை PCF விலைபேசிய சமயத்தில், கம்யூனிஸ்ட் கட்சி தலைவரான மொரிஸ் தொரேஸ், CGT தலைமையின் ஆதரவுடன், “ஒரு வேலைநிறுத்தத்தை எப்படி முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதை ஒருவர் தெரிந்து வைத்திருக்க வேண்டும்” என்று அறிவித்தார்.

1968 இல் பொது வேலைநிறுத்தத்திற்கு மத்தியில், Boulogne-Billancourt இல் உள்ள Renault தொழிற்சாலையில், தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு பலவந்தமாய் திருப்பியனுப்புவதற்கு CGT தலைவரான Georges Séguy முயற்சி செய்தபோது, அவர் தொழிலாளர்களின் பரிகசிப்புக்கு ஆளானதோடு தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இன்று CGTயின் பாத்திரம் கூடுதலாய் தொழிலாளர்களுக்கு குரோதமானதாகவே இருக்கும். சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது முதலான கடந்த 25 ஆண்டுகாலத்தில் PCF மற்றும் பிற தொழிற்சங்கங்களைப் போலவே, CGTயும் தொழிலாள வர்க்கத்திலான தனது வெகுஜன அடித்தளத்தை முற்றிலுமாய் தொலைத்து, தொழிலாள வர்க்கத்திற்கு குரோதமான ஒரு தனிப்பட்ட குட்டி-முதலாளித்துவ செல்வாக்கு வங்கியாக எழுந்து நிற்கிறது. தொழிலாளர்கள் வென்றிருக்கக் கூடிய அடிப்படையான சமூக உரிமைகளைக் கிழித்துப் போடுவதற்கு PS செய்கின்ற முயற்சிகளுக்கு எதிராய் சிடுமூஞ்சித்தனத்துடன் துண்டுதுக்கடா நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டே, இன்னும் கூடுதல் பிற்போக்குத்தனமான விலைபேசல்களுக்கு CGT தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறது.

முதலாளித்துவ அமைப்புமுறைக்கும் ஆளும் வர்க்கத்திற்கும் எதிரான போராட்டத்திற்குள்ளாக தொழிலாள வர்க்கம் நுழைந்து கொண்டிருக்கிறது. PS மற்றும் CGT போன்ற அதன் சுற்றுவட்டத்திடம் இருந்து அரசியல்ரீதியான மற்றும் அமைப்புரீதியான சுயாதீனத்தை நிலைநாட்டுவதே தொழிலாளர்கள் முகம் கொடுக்கின்ற இன்றியமையாத கடமையாகும்.