ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French government backs down from ban on protest against labor law

தொழிலாளர் சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதிப்பதில் பிரெஞ்சு அரசாங்கம் பின்வாங்குகிறது

By Alex Lantier
  23 June 2016

பாரிஸில் இன்றைய ஆர்ப்பாட்டத்தைத் தடைசெய்வதற்கு விடுத்த அச்சுறுத்தல்களில் இருந்து PS திடீரென்று பின்வாங்கியதை தொடர்ந்து, சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தின் மக்கள் வெறுப்பை சம்பாதித்திருக்கும் தொழிலாளர் சட்டத்திற்கு எதிராக பிரான்சின் நகரங்களெங்கும் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற இருக்கின்றன. அத்தகைய ஒரு தடை அச்சுறுத்தலை விடுக்கும் முன்கண்டிராத முடிவானது தொழிலாள வர்க்கத்திலான சமூக எதிர்ப்பின் மீதான அரச ஒடுக்குமுறையின் தயாரிப்புகள் முன்னேறிய நிலையில் இருப்பதை சுட்டிக்காட்டுகிறது.

மேலதிக ஆர்ப்பாட்டங்களைத் தடைசெய்வதற்கு பிரதமர் மானுவல் வால்ஸும் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டும் சென்ற வாரத்தில் மீண்டும் மீண்டும் அச்சுறுத்தியிருந்ததற்கு பின்னர், நேற்று காலையில் பாரிஸ் போலிஸ் prefecture நிர்வாகம் விடுத்த ஒரு சுருக்கமான செய்திக்குறிப்பில் பாரிஸிலான ஆர்ப்பாட்டம் பாதுகாப்புக் காரணங்களுக்காக தடை செய்யப்படவிருப்பதாக அறிவித்தது.

தொழிற்சங்கங்களுடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததாக கூறிய அது, “ஒரு இடத்தில் நிற்பதான ஒரு கூட்டத்தை நடத்துவதற்கு தொழிற்சங்க நிர்வாகிகள் திட்டவட்டமாக மறுத்தனர், அதற்கு மாறாய் ஆர்ப்பாட்டப் பேரணிகளது பாதைகளுக்கு மாற்று ஆலோசனைகளை வகுத்தளித்தனர்” என்றது.

அந்த செய்திக்குறிப்பு தொடர்ந்தும் கூறியது: “கவனமாய் பரிசீலிக்கப்பட்டதன் பின்னர், இந்த மாற்று ஆலோசனைகள் தனிமனிதர்கள் மற்றும் சொத்துகளுக்கு அவசியமான பாதுகாப்பை அனுமதிப்பதாக இருக்கவில்லை, அத்துடன் இப்போது உச்ச மட்டத்தில் இருந்து வரக் கூடியதும் தேசிய மண்ணின் மீது அசாதாரணமான கோரிக்கைகளை திணிக்கக் கூடியதுமாய் இருக்கின்ற பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக பாதுகாப்புப் படைகளை அவசியமான வகையில் அதிகப்பட்சமாய் குவிப்பதற்கும் அவை அனுமதிக்கவில்லை. இந்த நிலைமைகளில், ஆர்ப்பாட்டங்களைத் தடைசெய்வதைத் தவிர போலிஸ் நிர்வாகத்திற்கு வேறு எந்த வாய்ப்பும் தென்படவில்லை.”

Prefecture இன் நிலைப்பாட்டின் முக்கியத்துவம் தெளிவாக இருக்கிறது. லிபியா மற்றும் சிரியாவிலான நேட்டோவின் ஏகாதிபத்தியப் போர்களின் பகுதியாய் பயிற்சியளிக்கப்பட்ட இஸ்லாமிய வலைப்பின்னல்களில் இருந்து வரக்கூடிய பயங்கரவாத அச்சுறுத்தல் குறையும் என்று நம்புவதான எந்த அறிகுறியையும் அரசாங்கம் வெளிப்படுத்தவில்லை என்பதால், பாரிஸில் ஒரு மொத்தக் காலத்திற்கு சமூகப் போராட்டங்கள் தடை செய்யப்படவிருப்பதாய் prefecture வாதிடுகிறது. வேலைநிறுத்தம் செய்வதற்கும் ஆர்ப்பாட்டம் செய்வதற்கும் இருக்கின்ற அடிப்படையான, அரசியல்ரீதியாகப் பாதுகாக்கப்பட்ட ஜனநாயக உரிமைகள் பாரிஸ் prefecture இன் பேனா மை வரிகள் சிலவற்றின் மூலம் இல்லாது செய்யப்படவிருந்தது.

இந்த நிலைப்பாட்டுக்கு PS அரசாங்கத்தின் ஒட்டுமொத்த ஆதரவும் இருந்தது என்பது தெளிவாய் தெரிந்தது. ஆர்ப்பாட்டத்தினை தடைசெய்வதற்கு நெருக்குதலளிப்பதில் வால்ஸின் பாத்திரம் என்ன என்று கேட்டதற்காக, PS இன் செய்தித் தொடர்பாளரான Stéphane Le Foll ஊடக சந்திப்பு ஒன்றில் பத்திரிகையாளர்களை விமர்சித்தார்.

”உங்கள் சிறு விளையாட்டின் மூலமாக பிரதமரால் தான் நிர்வாகத்திற்குள்ளான ஒரு முடிவு எடுக்கும்படி செய்யப்பட்டதாக மக்கள் கருதுவதற்கு நீங்கள் விடுவது என்பது விடயத்தை பொய்யாக்கி விடுகிறது” என்றார் Le Foll. “முடிவுகள் கூட்டாகவே எடுக்கப்படுகின்றன, போலிஸ் நிர்வாகமானது ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமைக்கும் அதில் அடங்கியிருக்கும் ஆபத்துகளுக்கும் இடையில் சமநிலை செய்து கொள்வதற்கு முயற்சிக்கிறது.”

எப்படியிருந்த போதிலும், Le Foll பேசிக் கொண்டிருந்த அதேவேளையில், ஸ்ராலினிச CGT மற்றும் தொழிலாளர் சக்தி (FO) இன் தலைவர்கள், உள்துறை அமைச்சரான பேர்னார்ட் கஸ்னேவ் (Bernard Cazeneuve) உடன் ஒரு அவசர சந்திப்புக்கு கோரினர். ஆர்ப்பாட்டம் தடை செய்யப்பட்டாலும் கூட, பெருந்திரளான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற வருவதையோ ஏராளமான சிறிய சட்டவிரோதமான ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல்களில் அவர்கள் திரள்வதையோ தடுப்பது சாத்தியமற்றதாகும் என்று அவர்கள் கஸ்னேவ் ஐ எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. இத்தகைய ஆங்காங்கான பேரணிகளைத் தாக்குவதற்கும் கலையச் செய்வதற்கும் ஒரேயொரு பெரிய ஆர்ப்பாட்டத்தைக் கண்காணிப்பதை விடவும் அதிகமான போலிசார் தேவைப்படுவதாய் அமையும்.

CGT மற்றும் FO நிர்வாகிகள் கஸ்னேவ் உடன் பேசிக் கொண்டிருந்த சமயத்தில், எந்த தடையையும் மீறி நாளைய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவிருப்பதாக அறிவிக்கின்ற கையெழுத்து சேகரங்கள் இணையத்தில் நிறைய சுற்றிவந்தன. change.org வலைத் தளத்தில் வெளியான அத்தகைய ஒரு அறிக்கையில் ஒரேநாளில் சுமார் 150,000 கையெழுத்துகள் பதிவாயின.

கஸ்னேவ் உடனான சந்திப்புக்கு பின்னர், CGT இன் பொதுச் செயலரான பிலிப் மார்ட்டினேசும் FO இன் தலைவரான Jean-Claude Mailly ம் மாலை 12.45 மணியளவில், அசாதாரணமான முறையில் மற்ற தொழிற்சங்க நிர்வாகிகளுடன் இணைந்து ஒரு கூட்டு செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். போலிஸ் நிர்வாகம் மற்றும் Le Foll ஆகியோர் கூறியதற்கு நேர்மாறாய், பாஸ்டிய் சதுக்கத்தில் தொடங்கி பாஸ்டிய் சதுக்கத்தில் நிறைவடைகின்ற வண்ணம் ஒரு சிறிய சுற்றுவட்டப் பாதையில் ஒரு ஆர்ப்பாட்டப் பேரணி ஊர்வலம் செல்வதற்கு கஸ்னேவ் ஒப்புதலளித்து விட்டிருந்தார் என அவர்கள் அறிவித்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களை ஒரு வட்டப் பாதையில் அடைப்பதன் மூலம் நிர்வாகம் ஆரம்பத்தில் கோரியிருந்த “ஒரே இடத்தில் நிற்கின்றதான கூட்டத்தை” அமைத்தளிப்பது தான் இந்த முடிவின் நோக்கம் என்பது தெளிவாகத் தென்பட்ட நிலையிலும், இந்த முடிவினை “தொழிற்சங்கங்களுக்கும் ஜனநாயகத்திற்குமான ஒரு வெற்றியாக” மார்ட்டினசும் Maillyயும் பாராட்டினர்.

கஸ்னேவ் ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் நடத்திய ஒரு செய்தியாளர் சந்திப்பில் இந்த வட்டப்பாதை பேரணி தடை செய்யப்படாது என்பதை ஊர்ஜிதம் செய்தார். அதே நேரத்தில், “எதுவும் கட்டுப்பாட்டை மீறி விடக் கூடாது, எந்த வன்முறையும் சகித்துக் கொள்ளப்படாது” என்று அறிவித்து ஆர்ப்பாட்டக்காரர்களை அவர் அச்சுறுத்தினார்.

ஆர்ப்பாட்டங்களுக்கு தடைவிதிப்பதற்கு வால்ஸ் மேற்கொண்ட அழைப்புகளுக்கு ஹாலண்டும் கஸ்னேவ் உம் தோள்களைக் குலுக்கி விட்டிருந்த நிலையில், இந்த அவமானகரமான பல்டியை வால்ஸுக்கு ஒரு அவமதிப்பாக கருதலாமா என ஊடக வருணனையாளர்கள் ஊகங்களைத் தொடங்கினர். உண்மையில், ஆர்ப்பாட்டங்களை தடைசெய்வதற்கும் அதன்பின் அதிலிருந்து திடீரென்று பின்வாங்குவதற்கும் சோசலிஸ்ட் கட்சி எடுத்திருந்த முடிவுகள், தொழிலாள வர்க்கத்தில் பாரிய எதிர்ப்புக்கு முகம் கொடுக்கின்ற நிலையில் கட்சியின் விரக்தி அதிகரித்துச் செல்வதையும், தனது சமூகத் தாக்குதல்கள் வேலைத்திட்டத்தைத் திணிப்பதற்கு வழிதருமானால் அடிப்படை ஜனநாயக உரிமைகளை கழுத்து நெரிப்பதற்கு அது தீர்மானத்துடன் இருப்பதையுமே அம்பலப்படுத்தியிருக்கின்றன.

பாரிஸில் நவம்பர் 13 பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர் திணிக்கப்பட்ட அவசரகாலநிலையானது பயங்கரவாதிகளுக்கு எதிராகச் செலுத்தப்படவில்லை, மாறாக தொழிலாள வர்க்கத்திற்கும் அதன் ஜனநாயக உரிமைகளுக்கும் எதிராகவே செலுத்தப்பட்டிருக்கிறது என்பதையும் இது மீண்டுமொரு முறை தெளிவாக்கியது. முன்னெப்போதினும் அப்பட்டமான ஜனநாயக-விரோத ஆட்சியைத் திணிப்பதற்கு சோசலிஸ்ட் கட்சி சூழ்ச்சி செய்து வருகின்ற நிலையில், ஜனநாயக உரிமைகளது பிரதான காவலராகவும் அதற்கான சமூக இருப்பிடமாகவும் இருக்கின்ற சமூக சக்தியாக தொழிலாள வர்க்கம் மேலெழுச்சி கண்டு வருகிறது.

2012 தேர்தலில் ஹாலண்டுக்கு வாக்களிக்க அழைத்ததோடு, ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைத்து நெருக்குதலளிப்பதன் மூலமாக PS ஐ இடது-சாரி கொள்கைகளை ஏற்கின்றபடி செய்யலாம் என்பதாகவும் கூறிய புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி (NPA) மற்றும் ஜோன்-லுக் மெலன்சோனின் இடது முன்னணி (FdG) போன்ற போலி-இடது கட்சிகளையும் இது அம்பலப்படுத்துகிறது. இன்னும் சொன்னால், இந்த ஆண்டில் PS இன் தொழிலாளர் சட்டத்திற்கு எதிராய் இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே பாரிய அதிருப்தி வெடித்தெழுகின்ற வரையிலும் NPA உம் சரி FdG ம் சரி எந்த முக்கியமான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தையும் ஒழுங்கமைக்கவில்லை. அத்துடன் PS ம் இடது நோக்கி நகர்வதை பதிலிறுப்பாய் அளிக்கவில்லை, மாறாக முன்னினும் கூடுதலான மிருகத்தனமான ஒடுக்குமுறையை நடத்துவதையே பதிலாய் அளித்தது.

2014 இல் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக இளைஞர் குழுக்களும் முஸ்லீம் மற்றும் பாலஸ்தீன அமைப்புகளும் நடத்திய ஆர்ப்பாட்டங்களுக்கு PS தடை விதித்தது என்பதோடு, சமூகப் பிரச்சினைகளிலான ஒரு தொழிற்சங்க ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிக்கவிருப்பதாக அது இப்போது முன்வைத்த அச்சுறுத்தல் முன்கண்டிராததாகும்.

இந்த தடை மேற்கொள்ளப்பட்டிருந்திருக்குமாயின், 1962 பிப்ரவரி 8 அன்று ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியும் (PCF) CGT ம் அழைப்பு விடுத்த ஒரு அல்ஜீரியப் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை பாரிஸ் நிர்வாகமும் முன்னாள் நாஜி ஒத்துழைப்புவாதியான மாரிஸ் பப்போனும் தடை செய்ததன் பின்னர், தடை செய்யப்படுகின்ற முதல் தொழிற்சங்க ஆர்ப்பாட்டமாக இது இருந்திருக்கும். அன்று, தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது பாரிஸ் போலிஸ் தாக்குதல் நடத்தியதில், ஷரோன் (Charonne) மெட்ரோ நிலையத்தில் ஒன்பது ஆர்ப்பாட்டக்காரர்கள் இறக்க நேரிட்டது. அல்ஜீரியப் போருக்கான பாரிய எதிர்ப்பை வெளிப்படுத்திய முக்கியமான ஒன்றாக, அவர்களது இறுதி ஊர்வலத்தில் நூறாயிரக்கணக்கிலான மக்கள் பங்குபற்றினர்.

இந்த வரலாற்றைக் கொண்டு பார்த்தால், ஆரம்பத்தில் உள்துறை அமைச்சகத்தின் ஆதரவுடன் போலிஸ் நிர்வாகமானது ஆர்ப்பாட்டத்திற்கான ஒரு தடையை நேற்று அறிவித்ததென்பது, சோசலிஸ்ட் கட்சியின் பிற்போக்குத்தனமான தொழிலாளர் சட்டத்திற்கு எதிராக மூன்றுமாத காலமாக நடந்து வருகின்ற ஆர்ப்பாட்ட இயக்கத்தின் மீது ஏற்கனவே ஏவப்பட்டிருக்கக் கூடிய மிருகத்தனமான ஒடுக்குமுறையை மேலும் தீவிரப்படுத்துவதற்கான ஒரு அச்சுறுத்தலே என்பது தெளிவு.