ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The return of German militarism to Eastern Europe

கிழக்கு ஐரோப்பிற்குள் ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள்வரவு

Johannes Stern
11 June 2016

கிழக்கு ஐரோப்பாவில் வெளிப்படையாக ரஷ்யாவிற்கு எதிரான போருக்குத் தயாரிப்பு செய்து வரும் நேட்டோவின் இராணுவ தயாரிப்புகளில், ஜேர்மனி ஆயுதப்படை (Bundeswehr) அதிகரித்தளவில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்து வருகிறது.

பனிப்போர் முடிவுற்றதற்குப் பிந்தைய மிகப் பெரிய நேட்டோ இராணுவ பயிற்சியான இப்போதைய அனகொண்டா 2016 இராணுவ நடவடிக்கைகளின் பாகமாக, ஜேர்மன் போர்படை பொறியாளர்கள், பிரிட்டிஷ் சிப்பாய்களுடன் சேர்ந்து, வியாழனன்று விஸ்துலா நதி மீது 300மீட்டருக்கும் மேலான நீர்-நில மேம்பாலத்தைக் கட்டியுள்ளனர். சில மணி நேரத்திற்குப் பின்னர், கனரக ஆயுதமேந்திய நேட்டோ டாங்கிகள், கிழக்கில் ரஷ்ய எல்லையை நோக்கி போகும் வழியில் அப்பாலத்தின் மீது ஊர்ந்து சென்றன.

பல நாட்களாக, ஜேர்மன் இராணுவ வலைத்தளம் கிழக்கு ஐரோப்பாவிற்குள் ஜேர்மன் துருப்புகள் நகர்வதை ஆவணப்படுத்தி, பிரச்சார கட்டுரைகளையும் காணொளிகளையும் வெளியிட்டு வந்தது. "அனகொண்டா 2016 பயிற்சி—மின்டென் விஷேடபடையினர் விஸ்துலா நோக்கி செல்கின்றனர்"; “நேட்டோ உச்சிமாநாட்டின் இறுதி அணிவகுப்பு"; “இரண்டாம் ட்ரகூன் பயணம்—ட்ரகூன்கள் பால்டிக் உள்ளே பயணிக்கின்றன"; “பால்டிக் உள்ளே பயணிப்பதன் மூலம்—வாள் தாக்குதல் பயிற்சியை முன்னெடுப்போம்" மற்றும் "பால்டிக் உள்ளே ஏவுகணைதாக்கிகள்—மாற்றம் தொடங்குகிறது" என்பன போன்று அவை தலைப்பிடப்பட்டு இருந்தன.

இந்த செய்திகள் கிழக்கில் ஜேர்மன் இராணுவப் படைப்பிரிவுகள் அதிகரித்து வருவதன் மீது ஒரு மேலோட்டமான பார்வையை வழங்கும். மே 30 இல், “நிரந்தர பிரசன்னம்" (Persistent Presence) நடவடிக்கையின் பாகமாக, “பீரங்கிப்படை பிரிவு 295 இன் 3வது குழு, கேப்டன் P. ஆணையின் கீழ், லிதுவேனியாவில் பயிற்சிகள் மற்றும் ஒத்திகைகளுக்காக புறப்பட்டது". 14 நாடுகளிலிருந்து மொத்தம் 45 வாகனங்கள், 60 விமானங்கள் மற்றும் 4,000 துருப்புகளை உள்ளடக்கிய பால்டிக் கடலில் இப்போது நடக்கும் கடற்படை ஒத்திகையான "BALTOPS” இல், ஜேர்மனியினது கடற்படை தாக்குதலுக்கு உதவும் கப்பல் "பேர்லின்", சிறிய போர்க்கப்பல் "சாக்சென்" மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை வேட்டையாட வடிவமைக்கப்பட்ட ஒரு கடற்படை ரோந்து விமானமான P-3C “Orion” உட்பட ஒன்பது பிரிவுகள் ஈடுபட்டுள்ளன.

ஆம்பேர்கில் 12வது ஆயுதப்படையின் ஒரு குறிப்பிடத்தக்க கேப்டன் பூமுல்லர் இன் "அணிவகுப்பு நாளேடு" ஆத்திரமூட்டும் "இரண்டாம் ட்ரகூன் பயணத்தைக் குறித்து ஆழமான விபரங்களை வழங்குகிறது, இது ஜேர்மன் இராணுவப்படை 16 வாகனங்களுடன் பங்குபற்றி வரும் எஸ்தோனியாவிற்கு "போலந்து வழியாக பாரிய தரைவழி அணிவகுப்பாக" குறிப்பிடப்படுகிறது. ஊடக செய்திகளின்படி, ஜேர்மன் இராணுவப்படை இந்தாண்டு மட்டும் கிழக்கு ஐரோப்பாவிற்கு மொத்தம் 5,000 சிப்பாய்களை அனுப்பி உள்ளது.

ஜேர்மன் இராணுவ பயன்படுத்தலின் வரலாற்று மற்றும் அரசியல் முக்கியத்துவம் மிகைப்படுத்தல் இல்லை. ஜூன் 22 தினம், நாஜி ஜேர்மனி சோவியத் ஒன்றியத்தின் மீது தாக்குதல் நடத்திய பார்பரோஸ்ஸா நடவடிக்கையின் 75 ஆம் நினைவாண்டைக் குறிக்கிறது, ஒரு நிர்மூலமாக்கும் போராக கிழக்கு ஐரோப்பா எங்கிலும் நடத்தப்பட்ட அந்நடவடிக்கையில் 40 மில்லியன் சோவியத் பிரஜைகள் கொல்லப்பட்டார்கள். மீண்டுமொருமுறை ஜேர்மன் டாங்கிகள் மற்றும் படையினர் நடந்து செல்லும் ஒவ்வொரு சதுர மீட்டரும் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் கடந்தகால குற்றங்களது இருண்ட நினைவுகளை நினைவூட்டுகின்றன. நாஜிக்கள் தொடக்கத்தில், ஆக்கிரமிப்பு போலந்தை சோவியத் ஒன்றியம் மீதான படையெடுப்புக்கான அரங்கேற்ற களமாக பயன்படுத்தினர். பின்னர் அவர்கள் அங்கே அவர்களது இனப்படுகொலை கூடங்களை (extermination camps) கட்டமைத்தனர்.

நாஜி ஜேர்மனியின் தோல்விக்கு பின்னர், மற்றும் இனப்படுகொலையின் முழு வீச்சும் அறிய வந்த பின்னர், ஜேர்மனி நீண்ட காலத்திற்கு இராணுவ கட்டுப்பாடுகளைப் பின்பற்ற நிர்பந்திக்கப்பட்டது. ஆனால் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதுடனும், ஜேர்மன் மறுஐக்கியத்துடனும் இந்த நிலைப்பாடு மாறத் தொடங்கியது. கடந்த இரண்டாண்டுகளில், ஜேர்மன் ஆளும் வர்க்கம் அதன் போருக்குப் பிந்தைய அமைதிவாத அலங்கார வனப்புரைகளை முற்றிலுமாக கைவிட்டுள்ளது. அது வெளிப்படையாகவே 1941 க்கு சமாந்தரமான ஓர் ஆக்ரோஷ வெளியுறவு கொள்கைக்குத் திரும்பி உள்ளது.

Die Welt பத்திரிகை செய்தியின்படி, ஜேர்மன் இராணுவப்படையை உள்நாட்டிலும் மற்றும் ஏனைய வெளிநாட்டு நடவடிக்கைகளுக்கு அனுப்புவதையும் குறிப்பிடும் ஒரு புதிய பாதுகாப்புத்துறை வெள்ளையறிக்கை, ரஷ்யாவை ஒரு "பங்காளியாக" குறிப்பிடவில்லை, மாறாக ஒரு "எதிரியாக" குறிப்பிடுகிறது. “போருக்கும் சமாதானத்திற்கும் இடையிலான தெளிவற்ற எல்லைகளை இலக்கு வைக்கும் வேறுபட்ட வழிவகைகளை" அதிகரித்தளவில் பயன்படுத்தல் மற்றும் "நிலைகுலைய செய்யும் வகையில் ஏனைய நாடுகளைப் பலவீனப்படுத்துவது" ஆகியவை ஜேர்மன் அரசாங்கத்தின் குறிப்பிடத்தக்க கவலைகளாக உள்ளன.

இந்த கதையாடலுக்கும் யதார்த்தத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மாஸ்கோவின் இராணுவவாத நடவடிக்கை முற்போக்கானது எதுவுமில்லை மற்றும் போர் அபாயத்தையும் அதிகரிக்கிறது தான். ஆனால் கிழக்கு ஐரோப்பாவில் வலிந்து சண்டைக்குள் இறங்குவதும் மற்றும் "நாடுகளைப் பலவீனப்படுத்துவதும்" மற்றும் "போருக்கும் சமாதானத்திற்கும் இடையே எல்லையை தெளிவற்றதாக்குவதும்" ரஷ்யா கிடையாது, மாறாக மேற்கத்திய சக்திகளாகும். உக்ரேனில், வாஷிங்டனும் பேர்லினும் 2014 இன் ஆரம்பத்தில் ரஷ்ய ஆதரவிலான ஜனாதிபதி விக்டொர் யானுகோவிச் இற்கு எதிராக, பாசிச சக்திகளுடன் நெருக்கமாக வேலை செய்து, ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதியை ஒழுங்கமைத்தன. அப்போதிருந்து ரஷ்யாவின் பாதுகாப்பு எதிர்நடவடிக்கைகளை, ஜேர்மனி அதன் இராணுவத்தைத் திட்டமிட்டு பலப்படுத்தவும் மற்றும் அத்துமீறல்களுக்குள் இறங்கவும் பயன்படுத்திக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு செலவினங்களை 130 பில்லியன் யூரோவாக அதிகரிப்பது மற்றும் இராணுவத்தில் குறைந்தபட்சம் 7,000 படையினரின் அளவிற்கு அதிகரிப்பது ஆகிய கடந்த சில வாரங்களின் முடிவுகள் வெறுமனே தொடக்கம் மட்டுமேயாகும். ஜேர்மன் அரசாங்கத்தின் அறிவிக்கப்பட்ட நோக்கம், நேட்டோவின் கோரிக்கைக்கு இணங்க, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இராணுவ செலவினங்களைப் படிப்படியாக இரண்டு சதவீதத்திற்கு உயர்த்துவதாகும்.

வாரந்தார செய்தியிதழ் Der Spiegel, ஜேர்மனியின் பாதுகாப்பு வரவுசெலவு திட்டக்கணக்கில் "இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 2024 வரையில், ஆண்டுக்கு ஆண்டு ஐந்தரை பில்லியன் யூரோ அதிகரிக்கப்பட" வேண்டியிருக்கும் என்று அனுமானிக்கிறது. “அப்போது இறுதியில் ஜேர்மனி அக்கண்டத்தின் மிகப்பெரிய இராணுவ சக்தியாக விளங்கும். அதை எல்லா ஐரோப்பிய அண்டைநாடுகளும் விரும்பும் என்று கருத முடியாது,” என்று அந்த இதழ் முடிக்கிறது.

இப்போதைக்கு, ஜேர்மன் அத்துமீறலை அமெரிக்கா ஆதரிக்கிறது. கடந்த வாரயிறுதியில் கூட, நியூ யோர்க் டைம்ஸ் ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள்வரவுக்கு ஒரு வாழ்த்துப்பா பிரசுரித்தது. “இரண்டாம் உலக போர் பயங்கரங்களுக்குப் பின்னர், அதற்கு தசாப்த காலங்கள் எடுத்துள்ளன, ஆனால் பேர்லினின் இன்றைய-நாள் கூட்டாளிகளும் ஜேர்மன் தலைவர்களுமே கூட, இறுதியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நடைமுறையளவிலான தலைமையாக ஜேர்மனி இருப்பதற்கு ஓர் இராணுவ பரிமாணம் தேவைப்படுகிறது என்ற கருத்துடன் மிகவும் சௌகரியமாக இருப்பதாக தெரிகிறது,” என்று அது எழுதியது. இவை அனைத்தும் "அனேகமாக விரைவாக வந்துவிடாது", என்று டைம்ஸ் குறிப்பிடுகிறது. “அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளும்—ஜேர்மனியின் சொந்த பாதுகாப்புத்துறை வல்லுனர்களில் பலர் உட்பட—ஜேர்மனி அக்கண்டத்தின் பாதுகாப்பிற்கு இன்னும் நிறைய செய்ய வேண்டுமென மற்றும் வெளிநாடுகளில் பரந்த இராணுவ ஆயத்தப்படுத்தல்களை மேற்கொள்ள வேண்டுமென விரும்புகிறார்கள்.”

பேர்லின் தற்போது நேட்டோ கட்டமைப்பிற்குள் அதன் பாதுகாப்பு செலவினங்களை அதிகரித்து வந்தாலும், மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-தலைமையிலான அத்துமீறலின் பாகமாக அதன் துருப்புகளை கிழக்கில் நிலைநிறுத்தி வந்தாலும், யுரேஷியா, அத்துடன் மத்தியக் கிழக்கு மற்றும் ஆபிரிக்கா மீதான கட்டுப்பாட்டுக்கான எதிர்கால போராட்டம், முதலாம் மற்றும் இரண்டாம் உலக போருக்கு முன்னதாக நடந்ததைப் போலவே, ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான வன்முறையான பதட்டங்கள் மற்றும் மோதல்களுக்கு இட்டுச் செல்லும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.

மே 17 அன்று Handelsblatt வணிக நாளிதழில் பிரசுரிக்கப்பட்ட ஜோசப் ப்ரமில் எழுதிய வெளியுறவுகளுக்கான ஜேர்மன் குழுவின் ஒரு நடப்பு மூலோபாய ஆவணம், “ரோமன் சாம்ராஜ்ஜியத்தின் இலட்சியத்தை" (divide et impera) பின்தொடர்வதற்காக, உலகை அணிகளாக பிளவுபடுத்தி "அவற்றை பெரிதும் கட்டுப்பாட்டில் பெறுவதற்காக" அமெரிக்காவைக் குற்றஞ்சாட்டுகிறது. அந்த தலையங்கம் பின்வரும் முறையீட்டில் போய் முடிகிறது: “ஐரோப்பா, முக்கியமாக முன்னணி ஐரோப்பிய சக்தியான ஜேர்மனி, அதன் சொந்த நலன்களைக் கொண்டிருக்க வேண்டும், முன்பினும் தெளிவான எதிரியாக காட்டும் அமெரிக்கா குறித்த கருத்துருவுக்குத் தயாரிப்பு செய்திருக்க வேண்டும்.”

மே மாத இறுதியில், “ஒபாமா மற்றும் ட்ரம்ப் ஐ எது ஐக்கியப்படுத்துகிறது" என்ற தலைப்பில் Die Zeit இல் எழுதுகையில், தியோ சொம்மர் ஐரோப்பாவில் அமெரிக்க படைகளுக்கு எதிராக சீறியிருந்தார். “அவர்களது தொடர்ச்சியான பிரசன்னத்தின் பிரதான நோக்கம்" “ஐரோப்பாவைப் பாதுகாப்பதல்ல" என்று அவர் குறைபட்டுக் கொண்டார். “அவர்களது பிரசன்னத்தின் ஒரு சிறிய பகுதி மட்டுந்தான் ரஷ்யாவிற்கு எதிரான முன்னேற்பாடாக சேவையாற்றுகிறது,” மீதி, “உலகின் ஏனைய பகுதிகளில் அமெரிக்க நலன்களைப் பாதுகாப்பதை அல்லது வலியுறுத்துவதை" நோக்கமாக கொண்டுள்ளது.

“ஐரோப்பாவில் அவர்களது முக்கிய ஆயத்தப்பாடுகள் இல்லாமல், இத்தாலி, ஸ்பெயின், ஜேர்மனி மற்றும் துருக்கியில் துறைமுகங்கள், விமானத்தளங்கள், மருத்துவமனைகள் மற்றும் கட்டளை மையங்கள் இல்லாமல், அமெரிக்கர்கள் மத்தியக் கிழக்கில், மத்தியத்தரைக்கடலில், ஆர்டிக்கில் தகைமையற்று செயல்பட்டதைப் போல தான் செயல்பட முடியும்,” என்பதையும் சொம்மர் சேர்த்து கொண்டார். இது ஆபிரிக்காவிற்கும் பொருந்தும், “அமெரிக்காவின் ஆபிரிக்க கட்டளையகம் ஏன் ஸ்டுட்கார்டில் அமைக்கப்பட்டிருக்கிறது" என்று ஒருவர் கேட்கலாம் என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

தாராளவாத வாரயிதழான Die Zeit இன் நீண்டகால எழுத்தாசிரியரான சொம்மர் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் ஒரு சட்ட ஆலோசகரான ப்ரெம்ல் ஆகியோர் நீண்டகாலமாக அதிகளவில் அட்லாண்டிக் கடந்த பன்னாட்டு நோக்குநிலை கொண்டவர்களாவர். உலகின் ஏகாதிபத்திய மறுபிளவு ஒரு புதிய மற்றும் அபாயகரமான கட்டத்திற்கு நுழைந்து வருகையில், அவர்களது தலையங்கங்கள், மீண்டும் போருக்குப் பிந்தைய கூட்டாளிகளுக்கு இடையே மேற்புறத்திற்கு அடியில் அபிவிருத்தி அடைந்து வரும் பயங்கரமான பதட்டங்களுக்கு ஓர் அறிகுறியாகும்.