ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lanka: Gartmore workers refuse to go back to houses because landslide threats

இலங்கை: நிலச்சரிவு பீதியால் காட்மோர் தொழிலாளர்கள் வீடுகளுக்கு திரும்ப மறுக்கின்றனர்

M. Thevarajah
  24 June 2016

மஸ்கெலியாவில் உள்ள காட்மோர் தோட்டத்தின் கல்கந்த பிரிவு தொழிலாளர்கள், நிலச்சரிவு பீதியினால் தங்களின் வீடுகளுக்கு மீண்டும் திரும்ப மறுத்துவருகின்றனர். கடந்த மாதம் தொடர்ச்சியாகப் பெய்த மழை காரணமாக நிலச்சரிவு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தினால், மே 27 அன்று வீடுகளை விட்டு வெளியேறிய 44 குடும்பங்களைச் சேர்ந்த, குழந்தைகள் உட்பட 200 பேர், இப்பொழுதும் தோட்ட கோவில் மற்றும் சிறுவர் நிலையங்களில் தங்கியுள்னர்.

தோட்ட உரிமையாளரும் தொழிற்சங்கங்களும் அருகில் உள்ள பற்றைப் புதர் பிரதேசத்தில் வீடுகள் கட்டித் தருவதாக உறுதியளித்தனர். ஆனால் இந்த வேண்டுகோளை நிராகரித்த தொழிலாளர்கள், தோட்டத்திலேயே ஒரு பாதுகாப்பான இடத்தினைக் கோரியுள்ளனர். காட்மோர் தோட்டம், மஸ்கெலியாவில் இருந்து 12 கிலோமீட்டர் தூரத்தில் பாறைகள் மற்றும் வீழ்ச்சிகள் சூழ அமைந்துள்ளது.

இந்த தொழிலாளர்கள் இரண்டாவது தடவையாக வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ள போதிலும் தோட்ட முகாமைத்துவமோ அரசாங்கமோ அவர்களுக்கு பாதுகாப்பான இடத்தில் வீடுகளை அமைத்துக் கொடுப்பதை நிராகரித்து வருகின்றன. 2014 நவம்பரில் முதற்தடவையாக அவர்கள் இடம்பெயர்ந்திருந்தனர். பதுளை மாவட்டம், கொஸ்லந்தை மீரியபெத்த தோட்டத்தில் நிலச்சரிவு பேரவலம் நடந்து சில காலத்தின் பின்னர், காட்மோர் தொழிலாளர் குடும்பங்களும் பெரும் மழைக்கு மத்தியில் நிலச்சரிவுக்கு பயந்து வீடுகளில் இருந்து வெளியேறி, அருகில் உள்ள தமிழ் பாடசாலையில் தஞ்சமடைந்திருந்தனர். சில நாட்களின் பின்னர், அரச-சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் கூடாரங்கள் அமைத்து தங்க வைக்கப்பட்டார்கள். கூடாரங்களில் தொடர்ந்தும் தங்க முடியாத காரணத்தினால் இரண்டு மாதங்களின் பின்னர் தொழிலாளர்கள் சொந்த வீடுகளுக்கு திரும்பினர்.

இம்முறை தொடர்ச்சியான மழை காரணமாக ஏற்பட்ட பெரு வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 200 பேர் வரை கொல்லப்பட்டும் ஐந்து லட்சம் மக்கள் இடம்பெயரவும் தள்ளப்பட்ட நிலையிலேயே அவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் இன்னும் அடிப்படை வசதிகளற்ற தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளார்கள்.

காட்மோர் குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறியதை அடுத்து, அரசாங்கத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட இராணுவமானது தோட்ட உத்தியோகத்தர் தங்குமிடங்களின் முன்னாலும், தொழிலாளர்களின் லயன் அறைகளின் முன்னாலும் மற்றும் தோட்ட உள் வீதியின் நடுவிலும் கூடாரங்களை அமைத்தது. தொழிலாளர் தேசிய சங்கத்தின் (தொ.தே.ச) மஸ்கலியா பிரதேச தலைவர் நகுலேஸ்வரன் தோட்டத்துக்கு வருகை தந்து, வீடுகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வரை கூடாரங்களில் தற்காலிகமாகத் தங்குமாறு கேட்டுக் கொண்டார்.

தே.தொ.ச. அரசாங்கத்தின் பங்காளியாகவும் அதன் தலைவர் பி. திகாம்பரம் ஒரு அமைச்சரவை அமைச்சராகவும் இருக்கின்றார். தொழிலாளர்கள் அவரின் வார்த்தைகளை நம்புவதற்கு மறுப்புத் தெரிவித்து விட்டார்கள். தொ.தே.சங்கமும் தோட்டங்களில் உள்ள ஏனைய தொழிற்சங்கங்களைப் போல, அரசாங்கத்தினதும் முதலாளிகளினதும் விருப்பங்களின் அடிப்படையில் தொழிற்படுவதிலும் மற்றும் பொய் வாக்குறுதிகளை வழங்குவதிலும் பேர் போனது.

ஒரு தொழிலாளி உலக சோசலிச வலைத் தள நிருபர்களுடன் கூறியதாவது: “எங்களால் அந்த கூடாரங்களில் பிள்ளைகளுடன் வாழ முடியாது. மழைக்காலங்களில் எவ்வாறு இந்தக் கூடாரங்களில் தூங்க முடியும்? எங்களுக்காக வீடுகள் அமைப்பதற்கான பொருத்தமான நிலத்தினை தோட்ட உரிமையாளரிடமிருந்து பெற்றுத் தருவதற்கு யாரும் தயாராக இல்லை. கடந்த முறையும் ஒரு மாதமாக நாங்கள் இது போன்ற கூடாரங்களில் இருந்தோம், வீடுகள் வழங்கப்டும் என்று கூறி ஏமாற்றினார்கள்,” என்றார்.

மே 27 அன்று காலை பெரிய கல் மலையில் இருந்து வீழ்ந்து வீதியின் நடுவில் கிடந்தபோது, மக்கள் தங்களுக்கு சொந்தமானவை எதையும் எடுத்துக் கொள்ளாமல் உடனடியாகவே வீடுகளை விட்டு வெளியேறினார்கள். பல கற்கள் தொடர்ச்சியாக வீழ்ந்து, வீதியினை தடை செய்கின்றன.

எமது நிருபர்கள் சிறுவர் நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள இடம்பெயர்ந்தவர்களை சந்தித்தனர். மக்கள் தங்கள் அவலநிலையை விளக்கினர்.

தொழிலாளர்களின் கடுமையான போராட்டங்கள் பற்றி ஒருவர் விபரித்தார்: “கடந்த 2 வருடங்களாக, நாங்கள் புதிய வீடுகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றோம். அங்கு வாழும் குடும்பங்கள் அபாயத்துக்கு முகம்கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், தோட்ட முகாமைத்துவம், அரசாங்கம் மற்றும் தொழிற்சங்கங்களும் எங்களைப் பற்றி அக்கறைப்படுவதில்லை. தோட்ட உரிமையாளர் எங்களுக்கான பொருத்தமான காணிகளை வழங்குவதற்கு மறுத்துள்ளார். காட்டுக்கு அருகில் உள்ள ஒரு சேற்று நிலத்தில் சிறிய குடிகளை அமைத்து தருவதற்கு அவர் விரும்புகின்றார். ஆனால் நாங்கள் அங்கு போவதை நிராகரித்துள்ளோம். நாங்கள் தோட்டத்துக்குள்ளேயே ஒரு பொருத்தமான நிலத்தினை கேட்கின்றோம், ஆனால் பெருந்தொகையான தேயிலைச் செடிகளை தாங்கள் இழக்க வேண்டிவரும் எனக் கூறிக் கொண்டு, நிலத்தினை தருவதற்கு அவர் விரும்புகிறார் இல்லை. அவருக்கு எங்களின் உயிரை விட தனது இலாபம் மிகவும் முக்கியமானது. தொழிற்சங்கங்கள் எங்களைப் பாதுகாப்பதற்குத் தயாராக இல்லை. கூடுதலான தொழிலாளர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.), மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு) ஆகியவற்றிலேயே அங்கத்தவர்களாக உள்ளார்கள்.

ஓய்வுபெற்ற தொழிலாளி பி. பாப்பாத்தி (75) கூறியதாவது: “எங்களைக் கூடாரங்களில் வாழச் சொல்கிறார்கள். அதற்குள் எவ்வாறு தங்க முடியும். நான் வயது போய்விட்டது. நாங்கள் எங்களின் வாழ்நாள் பூராவும் இந்த தோட்டத்துக்காகப் பாடுபட்டோம், ஆனால் எங்களுக்கு வீடுகள் அமைப்பதற்கான சிறிய நிலத்தினை தருவதை தோட்ட உரிமையாளர் நிராகரிக்கின்றார். அவர்கள் எங்களை காட்டுப் பக்கத்துக்கோ அல்லது சேற்று நிலத்துக்கோ அனுப்புவதற்கு விரும்புகின்றார்கள்”.

இன்னொரு பெண் தொழிலாளி கூறுகையில், “எங்களுடைய சம்பளம் சாப்பாட்டுக்கு கூட போதாது. இப்படியான பேரழிவுகளை எப்படி சமாளிப்பது? நாங்கள் மிகவும் பின்தங்கிய பிரதேசத்தில் வாழ்கின்றோம். எங்களுக்கு எதாவது விபத்து ஏற்பட்டால், மஸ்கேலிய வைத்தியசாலையை அடைவதற்கு 12 கிலோ மீற்றர் தூரம் போகவேண்டும். தோட்டத்துக்கு அம்புலன்ஸ் சேவை இல்லை, ஆஸ்பத்திரிக்கு போக ஒரு வாகனத்துக்கு 1000 ரூபாய் செலவு செய்ய வேண்டும். வீடுகள் மோசமான நிலையில் உள்ளன. மழைகாலங்களில் கூரை ஒழுகும். மிகவும் பழைய வீடுகள். இவற்றை தோட்ட நிர்வாகம் ஒருபோதும் திருத்துவதில்லை. தொழிற்சங்கங்கள் உபயோகமற்றவை. அவர்கள் எமது உரிமைகளுக்காகப் போராடவில்லை, அவை நிர்வாகத்துடன் ஒத்துழைக்கின்றன,” என்றார்.