ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

After Brussels attack, EU officials plan vast escalation of police spying

புரூசெல்ஸ் தாக்குதலுக்குப் பின்னர், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் பொலிஸ் உளவுவேலையை பாரியளவில் தீவிரப்படுத்த திட்டமிடுகின்றனர்

By Alex Lantier
24 March 2016

புரூசெல்ஸில் செவ்வாய்கிழமை குண்டுவெடிப்புகள் மீதான விசாரணைகள் இப்போது தொடங்கியுள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் பொலிஸ் மற்றும் உளவு அமைப்பு ஒற்றுவேலைக்கான அதிகாரங்களை அசாதாரணமாக விரிவாக்குவதற்கு அழுத்தமளித்து வருகின்றனர். உளவுத்தகவல்கள் சேகரிப்பதை தீவிரப்படுத்துவது மற்றும் அக்கண்டம் முழுவதிலும் பொலிஸ் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பது குறித்து திட்டமிட ஐரோப்பிய ஒன்றிய நீதித்துறை மற்றும் உள்துறை மந்திரிமார்கள் இன்று ஒன்றுகூடுகின்றனர்.

ஏற்கனவே விசாரணையின் முதல் நாள், அத்தாக்குதலில் பெல்ஜிய அரசின் பாத்திரம் குறித்து மிகவும் தீவிரமான கேள்விகளை எழுப்பி உள்ளது. பாரீஸில் கடந்த ஆண்டு ISIS தாக்குதல்களில் ஏற்கனவே தெளிவானதைப் போல, அந்த குற்றத்திற்கு உடந்தையாய் இருந்தவர்கள் பொலிஸ் மற்றும் உளவு அமைப்புகளுக்கு நன்கு பரிச்சயமானவர்களாக இருந்தனர்.

அதிகரித்தளவில் முரண்பட்ட ஆதாரங்களுக்கு முன்னால், ஐரோப்பிய அரசாங்கங்களது எல்லா வகையறாக்களும் உளவுத்தகவல் பகிர்ந்து கொள்ள முடியாமல் போனதால் தான் அதிகாரிகளால் தாக்குதல்தாரிகளை அடையாளம் காண முடியாமல் போனது, ஆகவே மேற்கொண்டும் தாக்குதல்கள் நடக்கக்கூடும் என்று வாதிடுகின்றனர். இந்த மோசடியான அடித்தளத்தில், அவர்கள் மக்கள் மீது பொலிஸ் உளவுவேலைகளை அதிகப்படுத்த கோரி வருகின்றனர்.

“தகவல் பரிமாற்றமே அத்தகைய தாக்குதல்களுக்கு எதிரான நல்லதொரு பரிகாரம்,” என்று ஜேர்மன் உள்துறை மந்திரி தோமஸ் டு மஸியர் அறிவித்தார். “இருந்தாலும் முக்கிய விடயம் என்னவென்றால் நுழைவனுமதி பரிவர்த்தனைகளுக்கான, விசாரணை தகவல்களுக்கான மற்றும் விமானப் பயணியர் தகவல்களுக்கானத் தகவல் திரட்சியை இப்போது நாம் தனித்தனியாகக் கொண்டுள்ளோம். இவற்றை நாம் ஒருங்கிணைக்க வேண்டும்,” என்றார்.

“இந்த தாக்குதல்கள் மற்றும் தற்போதைய பாதுகாப்பு நிலைமை, பயங்கரவாத சூழ்நிலை ஆகியவை தகவல் பாதுகாப்பு காரணங்களை பட்டியலின் கடைசியில் கொண்டு வர நம்மை இட்டுச் செல்லும்,” என்று கூறி, தனிநபர் விபரங்களை பாதுகாப்பது மற்றும் தகவல் பாதுகாப்பு உரிமைகள் பொருத்தமற்று இருப்பதாக டு மஸியர் அப்பட்டமாக அறிவித்தார்.

ஐரோப்பாவில் விமானப் பயணத் தகவல்களை மத்தியப்படுத்த மற்றும் சர்வதேச அளவில் அதை உளவுத்துறை அமைப்புகளுக்கு ஒப்படைப்பதற்கு சர்ச்சைக்குரிய ஐரோப்பா-தழுவிய பயணியர் பெயர் விபர (pan-European Passenger Name Record -PNR) முறை ஒன்றை ஏற்குமாறு பாரீஸ் அழுத்தமளித்து வருகிறது. “PNR என்பது ஒரு அடையாளம். ஐரோப்பிய பாராளுமன்றம் பயங்கரவாதத்திற்கு எதிரான சண்டையில் அதன் கடமைப்பாட்டை முழுமையாக எடுத்துக்காட்ட வேண்டும்,” என்று பிரெஞ்சு பிரதம மந்திரி மானுவெல் வால்ஸ் அறிவித்தார்.

செவ்வாயன்று இத்தாலிய பிரதம மந்திரி மரியோ ரென்சி, “இரகசிய சேவைகள் இன்னும் அதிகமாக மற்றும் சிறப்பாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்” என்று குறிப்பிட்டு, பொலிஸ் மற்றும் உளவுத்துறை அமைப்புகளது ஓர் "ஒன்றுபட்ட ஐரோப்பிய பாதுகாப்பு கட்டமைப்பிற்கு" அழைப்புவிடுத்தார்.

1968-1980 “சமூக-அரசியல் குழப்பம்மிக்க ஆண்டுகளின்" (years of lead) போது ரென்சி ஒரு மாதிரி பொலிஸ் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார், அந்த காலப்பகுதி, தீவிர-வலது குழுக்கள் மற்றும் செம்படையினர் (Red Brigades) போன்ற குட்டி-முதலாளித்துவ "இடது" குழுக்கள் சம்பந்தப்பட்ட இரத்தந்தோய்ந்த வன்முறையைக் கண்டது. “ஐயோ, வழங்குவதற்கு இத்தாலியிடம் அனுபவம் இருக்கிறது. மாஃபியா, பயங்கரவாதம் மற்றும் செம்படையை இத்தாலிய பொலிஸ் கையாண்டுள்ளது,” என்றவர் தெரிவித்தார். “இத்தாலி பயங்கரவாதத்தை தோற்கடித்ததைப் போல ஐரோப்பா ஜிஹாதிஸ்ட் பயங்கரவாதத்தை தோற்கடிக்கும்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

ஐரோப்பிய ஒன்றிய உள்நாட்டு விவகாரங்களுக்கான ஆளுனர் டிம்த்திரிஸ் அவ்ராமோபோலுஷ் (Dimitris Avramopoulos) வலியுறுத்துகையில், அரசு அமைப்புகளது இரகசியமான, ஜனநாயக-விரோத நடவடிக்கைகளுக்காக இப்போது வழங்கப்பட்டு வரும் பாரிய அதிகாரங்கள் குறித்து அங்கே கவலைப்பட வேண்டியதில்லை என்றார். “அரசுக்குள் ஒரு அரசு மீதான தர்க்கம் நமது நாட்களிலேயே முடிந்துவிட்டது, ஒவ்வொன்றும் பூகோளமயமாகி உள்ளது, ஒவ்வொன்றும் சர்வதேசமயமாகி உள்ளது,” என்று அவ்ராமோபோலுஷ் அறிவித்தார்.

“அரசுக்குள் ஒரு அரசின்" முடிவைக் குறித்த அவ்ராமோபோலுஷ் இன் கருத்து அதிமுக்கியமானதாகும். உளவுத்துறை மற்றும் பொலிஸ் அமைப்புகளுக்கு அசாதாரண அதிகாரங்கள் வழங்குவதற்கு இடையே, அங்கே 1960 களில் இருந்து மற்றும் 1980 களின் ஆரம்பம் வரையில் ஐரோப்பாவை மூழ்கடித்த தீவிர-வலது கட்சிகள் மற்றும் இராணுவ கன்னைகளது இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு சதிகள் மற்றும் குண்டுவெடிப்புகளின் அலை திரும்ப வராது என்ற அவரது கருத்து, மக்களுக்கு மறுஉத்தரவாதம் அளிக்கும் வெளிப்படையான நோக்கில் இருந்தது.

பிரான்சில் 1968 பொது வேலைநிறுத்தம் மற்றும் ஸ்பெயினில் 1975 இல் பிரான்கோ சர்வாதிகாரம் கவிழ்க்கப்பட்டது போன்ற சம்பவங்களால் குறிக்கப்பட்ட, பொருளாதார நெருக்கடி மற்றும் சமூக போராட்டத்தின் ஒரு காலகட்டத்தில், ஆளும் வர்க்கம் பொய்யாக இடது-சாரி குழுக்களைக் குற்றஞ்சாட்டி இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகள் மற்றும் பயங்கரவாத குண்டுவெடிப்புகளை நாடியதன் மூலமாக அதிகாரத்தைப் பேணுவதற்கு முனைந்தது. கிரீஸில் இராணுவ அதிகாரிகளது சர்வாதிகாரத்திற்கு முன்னறிவிப்பாக இருந்த 1967 சிஐஏ-ஆதரவிலான ஆட்சிக் கவிழ்ப்பு சதி; துருக்கியில் 1960, 1971 மற்றும் 1980 ஆட்சிக் கவிழ்ப்பு சதிகள்; இத்தாலியில், மிலானில் 1969 பியஜ்ஜா ஃபோன்டானா படுகொலை மற்றும் 1980 போலோக்னா படுகொலை போன்ற தீவிர-வலது குண்டுவீச்சுக்கள் ஆகியவையும் அதில் உள்ளடங்கும்.

அவ்ராமோபோலுஷ் இன் மறுஉத்தரவாதங்கள் மதிப்பில்லாதவை. 1930 கள் பெருமந்த நிலைமைக்குப் பிந்தைய ஆழமான பொருளாதார நெருக்கடி மற்றும் ஐரோப்பா எங்கிலும் சிக்கன நடவடிக்கைக்கு ஆதரவான அரசாங்கங்கள் மதிப்பிழந்துள்ளதற்கு இடையே, பொலிஸ் அதிகாரங்களது கட்டமைப்பு ஜனநாயக உரிமைகளுக்கு மிகவும் பயங்கரமான அச்சறுத்தலை முன்னிறுத்துகிறது.