ஏனைய மொழிகளில்

Workers, students march against French labor law reform

பிரெஞ்சு தொழிலாளர் சட்ட சீர்திருத்தத்திற்கு எதிராக தொழிலாளர்கள், மாணவர்கள் அணிவகுத்தனர்

By Alex Lantier
14 March 2016

சோசலிஸ்ட் கட்சியின் (PS) தொழிலாளர் சட்ட சீர்திருத்தத்திற்கு எதிராக தொழிற்சங்கங்கள் மற்றும் மாணவர் சங்கங்கள் அழைப்புவிடுத்த பிரான்ஸ் எங்கிலுமான போராட்டங்களில், புதனன்று, 250,000 மற்றும் 450,000 க்கு இடையிலான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் அணிவகுத்தனர். அணிவகுப்பாளர்கள், வாராந்தர வேலையை நீடிக்கும் மற்றும் அடிப்படை வேலையிட பாதுகாப்புகளை அழிக்கக்கூடிய அந்த முன்மொழியப்பட்ட தொழிலாளர் சட்டச் சீர்திருத்தத்தைக் கண்டிக்கும் பதாகைகளை மட்டுமல்ல, மாறாக ஐரோப்பிய ஒன்றியத்தின் அகதிகளைத் தொல்லைப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் நவம்பர் 13 பாரீஸ் பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பின்னர் சோசலிஸ்ட் கட்சியால் திணிக்கப்பட்ட அவசரகால நெருக்கடி நிலையைக் கண்டித்த பதாகைகளையும் ஏந்தி இருந்தனர்.

SNCF தேசிய இரயில்வே மற்றும் RATP பாரீஸ் போக்குவரத்து ஆணையத்தின் தொழிலாளர்கள் அதே தினத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.



நேருக்குநேரான பாரிய எதிர்ப்பினூடாக அச்சட்டத்தைத் திணிப்பதற்குச் சங்கங்களின் ஆதரவை வென்றெடுக்கும் பொருட்டு, அச்சட்டத்தில் சிறிய திருத்தங்களைச் செய்யும் ஒரு முயற்சியில், சோசலிஸ்ட் அரசாங்கம் இன்று சங்கங்களைச் சந்திக்கிறது.

பாரீஸில், பத்து ஆயிரக் கணக்கானவர்கள் அந்நகரின் வெவ்வேறு பகுதிகளில் நடந்த பல்வேறு போராட்ட அணிவகுப்புகளில் பங்குபற்றினர். “எங்களின் எதிர்காலமே தாக்குதலில் உள்ளது. நாங்கள் இன்னும் வேலை செய்யக்கூட தொடங்கவில்லை, ஆனால் எங்களைச் சுலபமாக வேலையில் இருந்து நீக்குவது குறித்து அவர்கள் எங்களிடம் பேசுகிறார்கள்,” என்று உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் அலெக்ஸாண்டர் மற்றும் மத்தில்ட் தெரிவித்தனர்.

“வேலையிட நிலைமைகள் ஏற்கனவே இன்று சிக்கலாக உள்ளது, உங்களது வேலை வழங்குனருடன் பேசுவது சுலபமல்ல. இந்த சட்டம் வந்தால், பிரச்சினைகள் இன்னும் மோசமடையும். பின்னர் நிறைய ஆட்களை எடுப்பதற்குப் பதிலாக, மக்கள் அவர்களது முழு உடல்சக்தியை இழக்கும் வரையில் அதிக நேரம் வேலை செய்ய கூறப்படுவார்கள். இதில் தர்க்கமே இல்லை! இது வேலைகளை உருவாக்கும் என்று வால்ஸ் கூறுகையில், அவர் பொய் உரைக்கிறார்,” என்று சுற்றுலா நிர்வாகத்துறையில் வேலை பெற முடியாமல் உள்ள Flavie தெரிவித்தார்.

போராட்டக்காரர்களை தாக்குவதற்கும் மற்றும் அசாதாரண சிறை தண்டனைகளைத் திணிப்பதற்கும் அவசரகால நெருக்கடி நிலையிலிருந்து கிடைத்த பொலிஸ் அதிகாரங்களைப் பயன்படுத்தி, சோசலிஸ்ட் கட்சி அரசாங்கமும் மற்றும் பொலிஸூம், லியோனில் 20,000 பேர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தை வன்முறையானரீதியில் ஒடுக்கின. அன்றைய தினம் லியோனில் பல உயர்நிலைப் பள்ளிகளில் மறியல் செய்யப்பட்டது மற்றும் பொலிஸ் திடீரென ஆர்ப்பாட்டக்காரர்களின் பாதையைத் தடுக்க முயன்ற போது மோதல்கள் வெடித்தன. கலகம் ஏற்பட்டதும் பொலிஸ் ரப்பர் தோட்டாக்களைக் கொண்டு சுட்டதில் மற்றும் ஒரு பொலிஸ் உருட்டுக்கட்டை கொண்டு ஒரு போராட்டக்காரரின் மண்டையைப் பிளந்ததில் குறைந்தபட்சம் இரண்டு போராட்டக்காரர்கள் மருத்துமனையில் சேர்க்கப்பட்டனர்.


தொழிலாளர் சட்டச் சீர்திருத்தத்தைக் கண்டிக்கும் பதாகை ஏந்தியிருக்கும் ஒரு போராட்டக்காரர்

சோசலிஸ்ட் கட்சி இன்னமும் ஆர்ப்பாட்டங்களுக்குத் தடை விதிக்க அவசரகால நெருக்கடியைப் பயன்படுத்த துணியவில்லை என்றபோதினும், அந்த மோதல்களின் போது கைது செய்யப்பட்ட மூன்று போராட்டக்காரர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டுக்கள், பொது மக்களின் போராட்டங்களைச் சட்டவிரோதமானதாக ஆக்க அது நகர்ந்து வருகிறது என்பதைத் தெளிவுபடுத்துகிறது. “ஜனநாயகம் வாக்குப் பெட்டிகளில் வெளிப்பட வேண்டும், வீதிகளில் அல்ல,” என்று அரசு வழக்கறிஞர் Jean Ailhaud அறிவித்தார், அதேவேளையில் அவர் "அரசு அமைப்பைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு உத்தியோகபூர்வ அதிகாரிக்கு எதிரான தீவிர வன்முறைக்காக" மட்டுமல்ல, மாறாக "கிளர்ச்சிக்காகவும்" குற்றச்சாட்டுக்களை பதிவு செய்திருந்தார்.

பொலிஸ் தாக்குதலுக்கு எதிராக மக்கள் தங்களைத்தாங்களே பாதுகாத்துக் கொள்வதற்கும் மற்றும் போராடுவதற்குரிய, அரசியலமைப்பில் பாதுகாக்கப்பட்ட உரிமையை அவர்கள் பயன்படுத்துவதை, ஓர் ஆயுதமேந்திய கிளர்ச்சியைப் போல காட்டுவதை உள்ளடக்கிய இத்தகைய குற்றச்சாட்டுக்கள் அப்பட்டமான ஆத்திரமூட்டல்களாகும். அதன் பிற்போக்குத்தனமான வேலைத்திட்டத்திற்குப் பரந்த மக்கள் எதிர்ப்பை முகங்கொடுத்துள்ள நிலையில், சோசலிஸ்ட் கட்சி, எதிர்ப்பின் சகல வெளிப்பாடுகளும் அரசின் உயிர்பிழைப்பை அச்சுறுத்துவதாக மற்றும் அவை நசுக்கப்பட வேண்டுமென அது முடிவெடுத்துள்ளதாக அறிவிக்கிறது.

இது அவசரகால நெருக்கடி நிலையின் தன்மை மற்றும் அரசின் எதிரிகளாக கருதப்படுபவர்களது குடியுரிமையைப் பறிக்கும் கொள்கையின் தன்மையை பொறுத்த வரையில், ஓர் ஆழ்ந்த எச்சரிக்கையாகும். அவசரகால நெருக்கடி நிலை இஸ்லாமிய பயங்கரவாத குழுக்களை இலக்கில் வைத்து முன்வைக்கப்பட்ட போதினும், உண்மையில் இஸ்லாமிய பயங்கரவாத குழுக்கள் சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான சோசலிஸ்ட் கட்சி கொள்கையின் கருவியாக சேவையாற்றுகின்ற நிலையில், அது நிஜத்தில் சோசலிஸ்ட் கட்சியினது மக்கள்விரோத சிக்கனத் திட்ட நிகழ்ச்சி நிரலையும் மற்றும் உள்நாட்டில் போரையும் எதிர்க்கும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களைத்தான் வெளிப்படையாக இலக்கில் வைத்துள்ளது.

நேற்று மட்டும், ஒரு உயர்நிலை பள்ளி மாணவர் விசாரணை மற்றும் நன்னடத்தை பிணையின் கீழ் வைக்கப்பட்டார், வேலைவாய்ப்பற்ற ஒருவர் அத்தாக்குதலுக்குப் பின்னர் ஒரு பொலிஸ்காரரை நெஞ்சுயர்த்தி எதிர்த்ததற்காக ஆறு மாத சிறை தண்டனை மற்றும் 1000 யூரோ அபராதம் விதிக்கப்பட்டார், மற்றும் ஒரு மாணவர் 800 யூரோ அபராதம் மற்றும் ஆறு மாதகால இடைநிறுத்திய தண்டனையை முகங்கொடுக்கிறார். கடுமையான தண்டனைகளைப் பெறச் செய்வதற்குப் பொலிஸ் முறையீடு செய்ய முயற்சிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

தொழிலாளர்களும் இளைஞர்களும் சோசலிஸ்ட் கட்சியின் பிற்போக்குத்தனமான சமூக கொள்கைகளை எதிர்ப்பதை நோக்கி நகர்கையில், அவர்கள் ஒரு பரந்த அரசியல் சவாலை முகங்கொடுக்கின்றனர். சோசலிஸ்ட் கட்சி ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவில் அதன் சமதரப்பினருடன் பகிர்ந்து கொள்ளும் ஏகாதிபத்திய போர், புலம்பெயர்வோர்-எதிர்ப்பு பேரினவாத நிகழ்ச்சிநிரல் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றிற்கு எதிரான எதிர்ப்பை ஒன்றுதிரட்டுவதே, அக்கட்சிக்கு எதிரான எந்தவொரு நிஜமான போராட்டத்திற்கும் அவசியமாகும்.

"சோசலிசம் மற்றும் போருக்கு எதிரான போராட்டமும்" என்ற அதன் அறிக்கையில் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு விளக்கியவாறு, சிக்கனத் திட்டம் மற்றும் ஏகாதிபத்திய போருக்கு எதிராக சோசலிசத்திற்கான ஒரு உலகளாவிய போராட்டத்தை அபிவிருத்தி செய்வதில், பிரான்சில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் இயல்பான கூட்டாளி சர்வதேச தொழிலாள வர்க்கமாகும்.

இந்த போராட்டத்தை, இடது முன்னணி மற்றும் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி மற்றும் தொழிற்சங்கங்கள் மற்றும் மாணவர் சங்கங்கள் போன்ற சோசலிஸ்ட் கட்சியினது அரசியல் கூட்டாளிகள் கொண்டு வரும் அரசியல் கவசங்களின் கீழ் நடத்த முடியாது. இந்த அமைப்புகள் "சோசலிச" அமைப்புகள் என்பதும் அல்லது ஏதோ விதத்தில் முதலாளித்துவத்திற்கு ஒரு எதிர்ப்பைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன என்பதும் ஒரு மோசடியாக முற்றிலும் அம்பலப்பட்டுள்ளது.

2012 இல் பிரான்சுவா ஹோலாண்டு தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் சோசலிஸ்ட் கட்சி பதவிக்கு வந்ததற்குப் பின்னர் இருந்து, இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய பிரான்சின் மிகவும் மக்கள் செல்வாக்கிழந்த அந்த அரசாங்கத்திற்கு அதிகரித்துவரும் எதிர்ப்பை அவை நசுக்கி உள்ளன. சிரியாவில் நேட்டோ அதிகாரங்களுக்கான அவர்களது ஆதரவு, சோசலிஸ்ட் கட்சியின் பிற்போக்குத்தனமான கொள்கைகள் மீது அவர்கள் அணிசேர்ந்ததற்கு தெளிவான அறிகுறியாகும்.

இந்த இயக்கத்தை அபிவிருத்தி செய்வதற்கு, இது சோசலிஸ்ட் கட்சி, மற்றும் அதன் கூட்டுக்களிடம் இருந்து முற்றிலும் அரசியல் ரீதியாக சுயாதீனமாக நடத்தப்பட வேண்டும் மற்றும் பல்வேறு சங்க அதிகாரத்துவத்தின் கரங்களின் பிடியில் இருந்து எடுக்கப்பட வேண்டும். தொழிலாள சீர்திருத்தத்தை நிறுத்துவதற்காக எடுக்கப்பட்ட வேலைநிறுத்த நடவடிக்கைக்கு சோசலிஸ்ட் கட்சியுடன் அணிசேர்ந்த பிரெஞ்சு ஜனநாயக தொழிற்சங்க கூட்டமைப்பு (CFDT) போன்ற தொழிற்சங்கங்களின் பகிரங்கமான எதிர்ப்பு, உயர்நிலை பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் மறியல்களை ஏற்றுக்கொள்ள மாணவர் சங்கங்கள் மறுப்பது போன்றவை இந்த ஒட்டுமொத்த சமூக அடுக்கின் பாத்திரத்தை நிரூபிக்கின்றன.

தொழிலாளர் சட்ட சீர்திருத்தத்தில் "திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்" என்று ஹோலாண்ட் இப்போது அறிவிக்கிறார் என்றால், மற்றும் பிரதம மந்திரி மானுவெல் வால்ஸ் "ஒரு இலட்சியபூர்வ மற்றும் செயலூக்கமான சமரசத்திற்கு" அழைப்புவிடுக்கிறார் என்றால், அதற்கு காரணம் அவர்களது சட்டத்தின் ஒரு மேலோட்டமான திருத்திய வடிவத்தை நிறைவேற்றுவதற்கு சங்கங்கள் உதவும் என அவர்கள் நம்புவதினால் ஆகும். தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே இப்போது உருவாகி வரும் சமூக கோபத்தைத் தணிப்பதற்கு அவசியமான குறைந்த எண்ணிக்கையிலான போராட்டங்களைச் சங்கங்கள் ஒழுங்கமைக்க முயலும் என்பதும், அதேவேளையில் சோசலிஸ்ட் கட்சி மற்றும் மெடெஃப் வணிக கூட்டமைப்பில் உள்ள அதன் பெரு-வணிக ஆதாரவாளர்களுக்கு ஏற்புடைய உடன்பாட்டை எட்டுவதற்கும் அவை உதவும் என்பதும் அவர்களுக்குத் தெரியும்.

சோசலிஸ்ட் கட்சிக்குத் தொழிலாள வர்க்கத்தில் நிலவும் பரந்த அதிருப்தி மற்றும் எதிர்ப்பை ஒன்றுதிரட்டுவதென்பது, சோசலிஸ்ட் கட்சியின் அரசியல் மற்றும் தொழிற்சங்க வட்டாரங்களுக்கு எதிரான எதிர்ப்பின் அடித்தளத்தில் மட்டுமே நடக்க முடியும்.

அனைத்திற்கும் மேலாக, என்ன அவசியப்படுகிறது என்றால் சோசலிஸ்ட் கட்சி மற்றும் அதன் கூட்டாளிகளது பிற்போக்குத்தனமான முதலாளித்துவ-சார்பு கொள்கைகளுக்கு ஒரு சோசலிஸ்ட் மாற்றீடு மற்றும் ஓர் அரசியல் முன்னோக்கை வழங்கும் ஒரு புதிய கட்சியைத் தோற்றுவிப்பதாகும். உலக சோசலிச வலைத் தளம் பிரான்சில் உள்ள அதன் வாசகர்களை அதன் ஆவணங்களை வாசிக்குமாறும், அவர்களது நண்பர்களுடன் விவாதிக்குமாறும், பிரான்சிலும் மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்திற்கான ஓர் அரசியல் மாற்றீட்டைக் கட்டமைக்கும் அதன் போராட்டத்தில் இணைய உலக சோசலிச வலைத் தளத்தை (WSWS) தொடர்பு கொள்ளுமாறும் ஊக்குவிக்கிறது.