ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The crimes behind the US lead water crisis

அமெரிக்காவில் ஈயம் கலந்த குடிநீர் நெருக்கடிக்குப் பின்னணியில் உள்ள குற்றங்கள்

Andre Damon
19 March 2016

வெர்ஜீனியா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் கட்டுமான பொறியியல் துறை பேராசிரியரும் குடிநீரில் ஈயம் கலந்ததைக் குறித்து ஆராயும் முன்னணி வல்லுனருமான மார்க் எட்வர்ட்ஸ், செவ்வாயன்று, மிச்சிகனின் ஃப்ளிண்ட் இல் நடந்துவரும் நெருக்கடி குறித்து அமெரிக்க காங்கிரஸிற்கு விளக்கமளித்தார்.

முனைவர் எட்வர்ட்ஸ் முன்கூட்டியே ஓர் அறிக்கை நகலை இவ்வார USA Today பதிப்பிற்காகச் சமர்ப்பித்திருக்கக்கூடும், அந்த இதழ் பலயிடங்களிலும் அவரை மேற்கோளிட்டு, நாடெங்கிலும் நூற்றுக் கணக்கான பள்ளிக்கூடங்கள் மற்றும் குழந்தை பராமரிப்பு மையங்களின் குடிநீரில் ஈயம் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அறிவித்தது. அரசு புள்ளிவிபரங்கள் மீது ஒரு சுதந்திரமான ஆய்வின் அடிப்படையில் அந்த அறிக்கை குறிப்பிடுகையில், அமெரிக்காவின் நீர் வினியோக முறையில் ஏறத்தாழ ஐந்தில் ஒரு பங்கு தண்ணீரில் அபாயகரமான அளவுக்கு ஈயம் கலந்திருப்பதாக குறிப்பிட்டது.

பிரதிநிதிகள் சபையின் மேற்பார்வை மற்றும் அரசு சீர்திருத்த குழுவின் முன்னால் அவர் கட்டுப்பாட்டுடன் பேசுகையில், அக்குழுவின் அங்கத்தவர்களில் பலர் அதில் கலந்து கொள்ளாத நிலையில், குடியரசு கட்சியினதும் மற்றும் ஜனநாயக கட்சியினதும் ஜனாதிபதி நிர்வாகங்களின் கீழும், மாநிலங்கள் மற்றும் நகராட்சிகளது குடிநீர் தரம் தொடர்பான பரிசோதனை முடிவுகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் (EPA) மோசடி செய்வதை அனுமதித்தது ஒரு சதி நடவடிக்கைக்கு ஒப்பானதாக விளக்கினார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் பிராந்திய நிர்வாகி சூசன் ஹெட்மன், “மிச்சிகன் சுற்றுச்சூழல் தரக்கட்டுப்பாட்டு துறையின் உள்துறை பணியாளர்களின் நெறிமுறையற்ற நடவடிக்கைகளுக்கு உதவினார், துணைபோனார் மற்றும் ஊக்குவித்தார்" என்று எட்வர்ட்ஸ் தெரிவிக்கிறார். பத்தாண்டுகளுக்கு முன்னர் அந்நாட்டின் தலைநகரில், வாஷிங்டன் டி.சி. இல், குடிநீரில் ஈயம் கலந்தது குறித்த ஒரு வழக்கைக் குறிப்பிட்டுக் காட்டி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் "பொய்யான விஞ்ஞானப்பூர்வ அறிக்கைகளை எழுதியது மற்றும் அமெரிக்கா எங்கிலும் உடல்நலம் சம்பந்தமாக என்ன நடந்தாலும், அது அனைத்தும் ஈயம் கலந்த குடிநீரால் ஏற்பட்ட பாதிப்பாக இருக்கக்கூடிய ஒரு சூழலை உருவாக்கி இருப்பதாக" எட்வர்ட்ஸ் குற்றஞ்சாட்டினார்.

"அறியாமையுடனும்" மற்றும் “முற்றிலும் விட்டுகொடுக்காத" அரசு அதிகாரிகள் "விருப்பத்துடன் கண்மூடி இருந்த" குழப்ப நிலைமையை அவர் வெளிப்படுத்தினார்.

எட்வர்ட்ஸின் கருத்துக்களும் மற்றும் USA Today இல் வெளியான அறிக்கையும் அந்நாட்டின் குடிநீர் வினியோக முறை முழுவதிலும் ஈயம் தற்போது அதிகரித்தளவில் கலந்திருப்பதன் மீதான தொடர்ச்சியான வெளியீடுகளில் சமீபத்தியதாகும். ஃப்ளிண்ட் தனிப்பட்ட விடயமல்ல. ஃப்ளிண்ட் ஐ விட அதிகளவில் ஓகியோவின் க்ளீவ்லாந்து, மிசிசிபி இன் ஜேக்சன் மற்றும் பென்சில்வேனியா எங்கிலும் உள்ள நகரங்களில் ஈயம் கலந்திருப்பதைச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

ஓர் அடிப்படை யதார்த்தத்தில் எட்வர்ட்ஸ் ஆல் அவரது பெரும் எரிச்சலை மறைக்க முடியவில்லை: “நில உரிமையாளர்களது அலட்சியத்தால், ஒரேயொரு குழந்தையேனும் ஈயம் மேற்பூச்சு அபாயத்திற்கு உள்ளாகும் வகையில் அவர்கள் இதுபோன்ற நடைமுறைகளில் ஈடுபட்டிருந்தால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வாதிட்டிருக்கும். ஆனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையமே ஒட்டுமொத்த நகரங்களின் குடிநீரிலும் அனாவசியமாக அதிகரித்தளவில் ஈயம் கலக்க அனுமதித்துள்ளது,” என்றார்.

எட்வர்ட்ஸின் இன் கருத்துக்கள் ஓர் முக்கிய புள்ளியை உயர்த்தி காட்டிகின்றன: இந்த நிலைமையை உருவாக்கிய நடவடிக்கைகளுக்கு ஏன் யார் மீதும் வழக்கு தொடரப்படவில்லை? பல்வேறு ஜனநாயக கட்சி நிர்வாகிகள் மிச்சிகன் ஆளுநர் ரிக் சிண்டர் இராஜினாமா செய்ய வேண்டும் என்று அறிவுறுத்திகின்ற அதேவேளையில், சேதத்தைக் கட்டுப்படுத்துவதில் மற்றும் மாறிமாறி ஒருவர்மீது ஒருவர் குற்றஞ்சாட்டும் முயற்சியில் இருக்கின்றனரே ஒழிய, அவரைக் கைது செய்யவோ, குற்றப்பத்திரிகை பதிவு செய்யவோ யாரும் அழைப்புவிடுக்கவில்லை.

இரண்டு நாட்கள் கழித்து அதே அறையில் விளக்கவுரை அளித்த சிண்டர், இவரது நிர்வாகம் குறைந்தபட்சம் ஓராண்டுக்கு குடியிருப்போருக்கு விஷம் கலந்த குடிநீர் வழங்கியதை மூடிமறைத்த நிலையில், “உள்ளாட்சி அதிகாரிகள், மாநில மற்றும் கூட்டாட்சி அதிகாரிகள்—நாங்கள் அனைவரும் ஃப்ளிண்ட் குடும்பங்களுக்குத் தவறு செய்து விட்டோம்,” என்று அறிவித்தார்.

இல்லை, ஏதோ தவறான கணக்கீடுகள் அல்லது தவறான நடவடிக்கைகளின் ஒரு விடயத்தைப் போல, இந்த அதிகாரிகள் ஃப்ளிண்ட் குடிவாசிகளுக்குத் "தவறு" செய்துவிடவில்லை. மாறாக, அவர்கள் தெரிந்தே முடிவெடுத்தார்கள், அது நிரந்தரமான குறைபாடுகளுக்கும் மற்றும் கூற முடியாதளவில் ஆயிரக் கணக்கான குழந்தைகள் நோய்வாய்படுவதற்கும் இட்டுச் சென்றுள்ளது மற்றும் Legionnaires நோய் உண்டானதால் இறந்த குறைந்தபட்சம் பத்து பேர் உயிரிழப்புடன் தொடர்புபட்டுள்ளது, அதன் பின்னரும் அவர்கள் அந்நகரின் குடிநீர் குடிப்பதற்குப் பாதுகாப்பானதல்ல என்பதைக் காட்டும் ஆதாரங்களை மறைத்து, திரித்துள்ளனர்.

மத்திய மட்டத்தில், புஷ் மற்றும் ஒபாமா நிர்வாகங்களின் கீழ், இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் அரசின் சொந்த தரமுறைகளைத் தெரிந்தே உதாசீனப்படுத்த அந்நாடெங்கிலுமான நகரங்களை அனுமதித்துள்ளது. இந்த நடவடிக்கைகளின் விளைவுகள் இன்னும் அறியப்படவில்லை. நிரந்தரமான மூளை பாதிப்புகளால் அல்லது அதிக அளவிலான ஈயத்தின் ஏனைய விளைவுகளால் தேவையின்றி எத்தனை பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்? எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள்?

அமெரிக்கா ஓராண்டில் ஒரு ட்ரில்லியன் டாலருக்கும் அதிகமாக அதன் இராணுவத்திற்குச் செலவிடுகிறது, இதை இந்தாண்டின் ஜனாதிபதி உரையில் ஒபாமா கூறுகையில், இது அதற்கு அடுத்துள்ள 10 நாடுகளது செலவினங்களின் கூட்டுத் தொகையை விட அதிகமானது என்று பெருமைபீற்றினார். அந்நாடு பில்லியனர்களின் எண்ணிக்கையில் ஏறத்தாழ அதற்கு அடுத்ததாக இருக்கும் ஐந்து நாடுகளது மொத்த கூட்டு எண்ணிக்கையிலான பில்லியனர்களை கொண்டுள்ளது. தீவிர இராணுவ விரிவாக்கம் நடந்து வரும் அதேவேளையில், போக்குவரத்து மற்றும் குடிநீர் உள்கட்டமைப்பில் அரசு மூலதன முதலீடு 2003 க்குப் பின்னர் இருந்து 23 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. கல்வி, மருத்துவச் சிகிச்சை மற்றும் ஏனைய சமூக செலவினங்களுக்கான வெட்டுக்களும் ஒப்பிடக்கூடியவையே.

ஃப்ளிண்ட் இன் நெருக்கடி ஒரு முன்வடிவத்தைப் பின்தொடர்கிறது, இந்த முன்வடிவத்தில் தடுக்கக்கூடிய பேரழிவுகள் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன, ஆனால் அதற்காக யாரும் பொறுப்பாக்கப்படவில்லை. குறைந்த உள்கட்டமைப்பு முதலீடு காரணமாக அந்நாட்டின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றான நியூ ஓர்லியன்ஸ் பெரிதும் ஒரு சூறாவளியால் அழிக்கப்படலாம், இது ஆயிரத்திற்கும் அதிகமான உயிரிழப்புகளுக்கு இட்டுச் செல்லும், ஆனால் யாரும் ஜெயிலுக்கு அனுப்பப்பட மாட்டார்கள்.

வங்கிகளும் முதலீட்டாளர்களும் ஓர் நிதியியல் பேரழிவை மற்றும் ஓர் உலகளாவிய பொருளாதார நெருக்கடியை உருவாக்கி உள்ளனர், யாரும் தண்டிக்கப்படவில்லை. செலாவணி விகிதங்கள் திரிக்கப்பட்டதைக் குறித்தும் மற்றும் வீட்டுத்துறையில் மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகள் குறித்தும் வெளியான அம்பலப்படுத்தல்கள், பெரிதும் மென்மையான அபராதங்களைத் தான் கொண்டு வந்தது. அமெரிக்க அரசாங்கம் பொய்கள் அடிப்படையில் போர்களைத் தொடங்கியது, சிஐஏ சிறைக் கைதிகளைச் சித்திரவதை செய்தது, பின்னர் அதை மூடிமறைக்க அரசு கணினிகளை ஊடுருவியது, மீண்டும், அதற்காக யாரும் குற்றவாளி ஆக்கப்படவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும், அவர்கள் மீது வழக்கும் கூட தொடுக்கப்படவில்லை.

நிதியியல் மற்றும் பெருநிறுவன உயரடுக்கின் நலன்களுக்கு ஒவ்வொன்றையும் அடிபணியச் செய்வதன் அடிப்படையில் அமைந்த, அவை பாதுகாக்கும், சமூக அமைப்புமுறையின் தன்மையே அரசு அதிகாரிகளது நடவடிக்கைகளை கட்டளையிடுகின்றன. அமெரிக்கா ஒரு குற்றகரமான சதிக்கூட்டத்தின் நலன்களுக்காக செயல்படுகிறது என்பது ஃப்ளிண்ட் பேரழிவில் மற்றும் ஒட்டுமொத்தமாக அந்நாட்டின் உள்கட்டமைப்பு நிலையைக் குறித்து என்ன வெளி வந்துள்ளதோ அவற்றால் மீண்டும் உறுதிப்படுத்தப்படுகிறது.