World Socialist Web Site www.wsws.org


இலங்கை: தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள் வசதிகள் பற்றாக்குறைக்கு எதிராக போராடுகின்றனர்

Pradeep Ramanayaka and S. Ajanthan
25 January 2016

Back to screen version

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் ஒலுவிலில் அமைந்துள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு 2015ல் சேர்த்துக்கொள்ளப்பட்ட புதிய மாணவர் பிரிவினர், தம்மை ஏனைய பொறியியல் பீடங்களில் மீண்டும் இணைத்துக்கொள்ளுமாறும் முழு பீடத்தையும் தொழில்துறை நகரொன்றுக்கு அருகாமையில் சிறந்த நிர்வாகத்துடன் மீள ஸ்தாபிக்குமாறும், அல்லது சகல மாணவர்களையும் இப்போதுள்ள ஏனைய பொறியியல் பீடங்களுக்கு மாற்றுமாறும் கோரி டிசம்பர் 21 அன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவைச் சூழவுள்ள வீதிகளில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

நீண்ட காலமாக பல்கலைக்கழக நிர்வாகத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில், கடந்த ஆண்டு முடிவில் மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பை தொடங்கினர். அதைத் தொடர்ந்து நவம்பர் 26 அன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு தமது பிரச்சாரத்தை கொண்டு சென்று மாணவர்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல பல்கலைக்கழக கல்வி இராஜாங்க அமைச்சர் மோகன்லால் கெய்ரோவிடமும் தமது கோரிக்கைகள் அடங்கய மகஜர் ஒன்றை ஒப்படைத்தனர்.

மகஜருக்கு பதிலளித்த கிரியெல்ல, மாணவர்களின் கோரிக்கையின்படி அவர்களை ஏனைய பல்கலைக்கழகங்களுக்கு இடமாற்றம் செய்ய அல்லது பீடத்தை புதிய வளாகத்தில் மீண்டும் ஸ்தாபிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்த வாக்குறுதி இட்டுநிரப்பப்பாடத நிலைமையிலேயே மாணவர்கள் டிசம்பர் 21 ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏனைய பல்கலைக்கழகங்களில் அடிப்படை தேவைகளைக் கூட இட்டுநிரப்ப முடியாத நிலையில், 2013 நடுப்பகுதியில் மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தினுள் திடீரென பொறியியல் பீடமொன்று தொடங்கப்பட்டது. இந்த அவசர முடிவுக்கு காரணம், 2011ல் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடும்போது, பரீட்சைத் திணைக்களத்தினால் இழைக்கப்பட்ட பிரதான புள்ளியியல் பிழையினால், "இசட் புள்ளிகள் சிக்கல்" ஏற்பட்டதே ஆகும். பாதிக்கப்பட்ட மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களின் மத்தியில் வளர்ச்சியடைந்த அதிருப்தியை சமாளிக்க எடுத்த முயற்சியே இதுவாகும்.

இசட் புள்ளிகளில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக, பொறியியல் பீடத்துக்கு நுழைவதற்காக விண்ணப்பிக்கும் தகுதி கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை இன்னும் 100 பேரால் அதிகரித்தது. அப்போது மொரட்டுவ, பேராதனை, உருகுணை ஆகிய பல்கலைக்கழகங்களில் அந்த மாணவர்களுக்கு போதுமான இடம் இல்லாத காரணத்தால், தான் எதிர்பார்த்திராத நெருக்கடிக்குள் சிக்கிய அரசு, தான் அவசரமாக முண்டுகொடுத்து உருவாக்கிய பீடத்துக்குள் அந்த மாணவர்களை இணைத்துக்கொண்டது. அப்போதிருந்து முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது பிரிவு மாணவர்கள் அந்த பீடத்துக்குள் உள்வாங்கப்பட்டதோடு அடுத்த சில வாரங்களில் நான்காவது ஆண்டுக்கான மாணவர்களும் சேர்த்துக்கொள்ளப்பட உள்ளனர்.

5 ஜனவரி 2015 அன்று வெளியான கொழும்பு டெலிகிராப் இணையத்தில் வெளியிடப்பட்ட கட்டுரையில், இந்தப் பீடத்திற்கு 2013ல் இணைத்துக்கொள்ளப்பட்ட முதலாவது மாணவர் குழுவைச் சேர்ந்த எலிஜா ஹூலே என்ற மாணவனிடம் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. அதில் கூறப்படுவது போல், அவர்கள் பொறியியல் பீடத்திற்காக விண்ணப்பித்த நேரத்தில் கூட, தான் இணைந்துகொள்ள விரும்பும் பல்கலைக்கழகங்களின் பட்டியலில் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. அரசாங்கம் இந்த பீடத்திற்கு சேர்த்துக்கொள்ளப்பட்ட மாணவர்கள் சம்பந்தமாக எந்தளவு அலட்சியமாக செயற்பட்டுள்ள்ளது என்றால், முதலாவது மாணவர் குழுவை பதிவுசெய்துகொண்ட பின்னரே பீடாதிபதி உட்பட கல்விசார் நிர்வாகசபையை இணைத்துக்கொண்டுள்ளது. அந்தவகையில், அரசாங்கம் இந்த மாணவர்களின் எதிர்காலத்தை கொடூரமான முறையில் ஆபத்தில் இருத்தி, அச்சமயத்தில் “நடப்பு உலகில் இருந்திராத” ஒரு பீடத்தில் வழங்கப்படும் பாடத்திட்டத்திற்காகவே மாணவர்களை பதிவு செய்துகொண்டுள்ளது.

பாடத்திட்டத்தின் தற்போதைய நிலைமையை பற்றி அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, பாடத்திட்டத்தின் அனைத்து பாடங்களையும் கற்றுக்கொடுப்பதற்கு போதுமானளவு கல்வியாளர்கள் இல்லாமை காரணமாக, பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் அதிகளவில் வாரக் கடைசியில் வரும் விரிவுரையாளர்களிலேயே தங்கியிருக்கின்றன. அதேபோல் கணினி மற்றும் மின் பொறியியல் துறைகள் இன்னமும் பீடாதிபதிகள் இல்லாமலேயே செயற்படும் அதேவேளை, முறையான திட்டமிடல் இன்றி அந்த பிரிவுகளில் கல்வி நடவடிக்கைகளின் முழு பொறுப்பும் அனுபவம் குறைந்த விரிவுரையாளர்கள் மற்றும் பயிற்சி விரிவுரையாளர்கள் சிலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பீடத்தை ஆரம்பிக்கும்போது, அங்கு பீடாதிபதி உட்பட 8 பேர் மட்டுமே ஆசிரியர்களாக இருந்தனர். அவர்கள் மத்தியில் கலாநிதி பட்டம் பெற்றவர்கள் இருவர் மட்டுமே இருந்தனர். ஏனைய அனைவருமே பல்கலைக்கழக கற்பித்தலில் முன் அனுபவம் இல்லாதவர்கள். பீடத்தை நடத்திச் செல்லும்போது, அரசாங்கம் அதை எந்தளவுக்கு புறக்கணித்துள்ளது என்றால், கடந்த இரண்டரை ஆண்டு காலத்தில், மூன்று விரிவுரையாளர்களே மேலதிகமாக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

நீண்டகால இடைவெளி காரணமாக, கல்வி நடவடிக்கைகளுக்காக ஒதுக்கீடு செய்யப்படும் கிழமைகளின் எண்ணிக்கை குறைவதனால், பதினைந்து வார காலத்திற்கு வடிவமைக்கப்பட்டுள்ள சில பாட பிரிவுகளை, மாணவர்கள் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் பெரும் சிரமத்துக்கு மத்தியில் கற்றுக்கொள் நெருக்கப்பட்டுள்ளனர். காலம் போதாத காரணத்தால், சில பயிற்சி அமர்வுகள் முழுமையாக கைவிடப்படுகின்றன. இதனால் பாடத்திட்டத்தின் உண்மையான தரம் மாணவர்களைச் சென்றடைவதில்லை. எண்ணிக்கையில் எந்தவகையிலும் போதாத விரிவுரையாளர்கள் சிலர் மீது தாங்க முடியாத வேலைச்சுமை திணிக்கப்பட்டுள்ளதனால், இப்போது இலங்கையில் ஏனைய பொறியியல் பீடங்களில் உள்ள மாணவர் குழுவினரை விட தென்கிழக்குப் பல்கலைக்கழத்தின் மாணவர்களது கல்வி நடவடிக்கைகள் ஒரு வருடம் பின்தள்ளப்பட்டுள்ளன.

உலக சோசலிச வலைத் தள நிருபர்களிடம் பேசிய இயந்திரப் பொறியியல் பீடத்தின் தலைவர் கலாநிதி அப்துல் மஜீத் முஸானிக், விரிவுரையாளர்கள் பற்றாக்குறை பற்றி விளக்கியதாவது: “இரண்டாவது ஆண்டில் எமது மாணவர்களின் செயல்திறனின் படி அவர்களை பல பிரிவுகளாக பிரிக்க வேண்டும். முதலாவது ஆண்டில் அனைவருக்கும் ஒன்றாக கற்பிக்கும் போது இருக்கின்ற ஆசிரியர்களின் எண்ணிக்கை போதுமானதாக இருந்தாலும், இரண்டாம் ஆண்டில் மாணவர்கள் பல்வேறு பிரிவுகளுக்கு பிரிக்கப்படும் போது, அந்தந்த பிரிவுகளில் திறமைகொண்ட விரிவுரையாளர்கள் எமக்குத் தேவை. எனினும், இப்போதுள்ள விரிவுரையாளர்களின் எண்ணிக்கை அதற்குப் போதுமானதாக இல்லை.”

இந்தப் பீடத்தைத் தொடங்கும் போது, நிர்வாகமானது கல்விச் சூழல் போலவே மாணவர்களுக்கான நலன்புரி சேவைகள் சம்பந்தமாகவும் மிகவும் குறைந்தபட்ச அக்கறையையே காட்டியுள்ளது. மாணவர்களின் படி, இரண்டு மாணவர்களுக்கே இடவசதி கொண்ட சிறிய விடுதி அறைகளை நான்கு மாணவர்கள் பகிர்ந்துகொள்ள நேர்ந்த ஒரு கடினமான சூழ்நிலையிலேயே இந்தப் பீடம் நிறுவப்பட்டது. எவ்வாறெனினும், முறையான திட்டமிடல் இன்றி உருவாக்கப்பட்ட இந்த பீடத்தில் படிக்கும் மாணவர்கள், இன்று பிரதானமாக ஆசிரியர்கள் பற்றாக்குறையுடனான குறைபாடுகளின் மத்தியில், தமது தொழில் வாழ்க்கை தொடங்குவதற்கு முன்பே, அதிருப்தி நிறைந்த பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர்.

தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடம் தொடங்கப்பட்ட சமகாலத்தில் ஆரம்பிக்கப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொறியியல் பீடமும் இதே போன்ற விரிவுரையாளர்கள் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது. இவ்வாறு இலங்கை பூராவும் அனைத்து அரசாங்க பல்கலைக்கழகங்களிலும் பல்வேறுபட்ட கல்வி மற்றும் நலன்புரி பிரச்சினைகள் மேலும் மேலும் தீவிரமடைந்து வருகின்றன.

கடந்த இராஜபக்ஷ ஆட்சி சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்த்தால் பதிலீடு செய்யப்பட்டிருந்தாலும், பொதுக் கல்வி தொடர்பான சிக்கன கொள்கைகள் மாறாமல் தொடர்கின்றன. தென்கிழக்கு மாணவர்கள் அமைச்சர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளதாவது: "2015 ஜனவரியில் புதிய ஜனாதிபதி, பிரதமர், உயர் கல்வி அமைச்சர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவர் மற்றும் பல்கலைக்கழக துணை வேந்தர்களும் நியமிக்கப்பட்டிருந்தாலும், எங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை. நிலைமை மேலும் மோசமான நிலையையே அடைந்துள்ளது."

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் மத்தியில் அரச பல்கலைக்கழகங்களுக்கு நூற்றுக்கணக்கான 10 வீதத்துக்கும் குறைவானவர்களே தெரிவாகின்றனர். கடந்த இரண்டு தசாப்தங்கள் பூராவும் அரச பல்கலைக்கழகங்களில் நுழையும் மாணவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. எனினும் உயர்தர பரீட்சையில் தோற்றும் மாணவர்களின் எண்ணிக்கையுடன் இதை ஒப்பிடும்போது இரண்டு தசாப்தங்களாக இந்த புள்ளி ஒரே இடத்தில் தங்கியிருக்கின்றது.

அரச கல்வியில் சிக்கல்களை தீர்ப்பதாக பொய் வாக்குறுதி கொடுத்த கிரியெல்ல உட்பட சகல அரசாங்க அதிகாரிகளும், பொதுக் கல்வியை வெட்டுவதையும் தனியார்மயப்படுத்தல் மூலம் கல்வியை இலாபம் ஈட்டும் தொழிற்துறையாக ஆக்கும் வேலைத் திட்டத்தை மேலும் துரிதப்படுத்தி முன்னெடுப்பதையுமே செய்துள்ளனர். அமைச்சர் கிரியெல்லவே அண்மையில் கூறிவாறு, தனியார்துறை கல்வி நிறுவனங்களை விரிவாக்குவதற்கே அரசு முயற்சிக்கின்றது.

2009ல் மாலபே 25 மாணவர்களுடன் தொடங்கிய மாலபே சைடெம் தனியார் மருத்துவ பீடம், ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் 800க்கும் மேற்பட்ட மாணவர்களை சேர்த்துக்கொண்டுள்ளது. அது 1978ல் தொடங்கப்பட்ட யாழ்ப்பாண மருத்துவ பீடத்தில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையை விட இரு மடங்காகும்.

தகவல் தொழில்நுட்ப பொறியியல் பட்டத்திற்காக பிரசித்திபெற்ற தனியார் கல்வி நிறுவனமான சிலிட் நிறுவனத்தின் மாணவர்கள் எண்ணிக்கை 7,000த்தை தாண்டியுள்ளது. பொறியியலாளர் பட்டத்தை வழங்கும் சிலிட் உட்பட தனியார் நிறுவனங்களில் இருந்து ஆண்டுக்கு வெளியேறும் பட்டதாரிகளின் எண்ணிக்கை, அரசாங்கத்தின் சகல பொறியியல் பீடங்களில் இருந்து ஆண்டொன்றில் வெளியேறும் பட்டதாரிகளின் எண்ணிக்கையின் கூட்டுத்தொகையை விட அதிகமாக உள்ளது.

இந்த வகையில், பொதுக் கல்வியை அழித்து, தனியார் கல்வியை ஸ்தாபிப்பது, முதலாளித்துவ ஆளும் வர்க்கம் இப்போது உலகளாவிய அளவில் முன்னெடுக்கும் கொள்கையாகும். உலக முதலாளித்துவ அமைப்பு முறையை தூக்கியெறிவதை இலக்காகக் கொண்ட போராட்டம் இன்றி, அதாவது சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டம் இன்றி, இந்த தாக்குதல்களை தோற்கடிக்க முடியாது.

எனினும், கல்வித் துறையில் இத்தகைய தாக்குதல்களுக்கு எதிராக இடைவிடாது போராட்டத்தில் இறங்கும் பல்கலைக்கழக மாணவர்களின் தலைமையில் அமர்ந்திருக்கும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், மற்றும் அதை வழிநடத்தும் முன்னிலை சோசலிசக் கட்சி, அழுத்தம் கொடுக்கும் எதிர்ப்பு அரசியலுக்குள் மாணவர்களை சிறைப்படுத்தி அவர்களை களைப்படையச் செய்துவருகின்றது.