ஏனைய மொழிகளில்

Print Version|Feedback
What political conclusions must be drawn from Trump’s Super Tuesday?

ட்ரம்ப் இன் சூப்பர் செவ்வாய்க்கிழமையில் இருந்து என்ன அரசியல் முடிவுகளை பெற வேண்டும்?

David North
3 March 2016

சூப்பர் செவ்வாய்க்கு பின்னர், அமெரிக்கா ஓர் ஆழ்ந்த அரசியல் நெருக்கடியினுள் இருக்கின்றது என்பதை அரசியல் ஸ்தாபகங்களும் ஊடகங்களும் கூட மறுக்க முடியாதுள்ளது. மிக சமீபத்தில் வரையில் பல ஊடக வல்லுனர்களின் கருத்தாக இருந்துபோல் டோனால்ட் ட்ரம்ப் இனி வேட்பாளராவது வினோதமான மற்றும் ஏதோவிதத்தில் பக்கவாட்டில் நடக்கும் வெறுமனே பொழுதுபோக்கு காட்சி என்றும் ஒதுக்கிவிட முடியாது. முடிவு நிச்சயமின்றி இருந்தாலும், குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னணியில் இருப்பவர், மிகத் தெளிவாக பாசிச குணாம்சத்தின் தனித்துவம் மற்றும் பிம்பத்தை ஏற்றிருக்கும் ஒரு வேட்பாளராவார்.

கடந்த சில வாரங்களின் போது, சூப்பர் செவ்வாய் இல் குடியரசுக் கட்சி நியமனத்திற்கான முன்னணி வேட்பாளராக அவர் மேலுயர இருக்கிறார் என்பது அதிகரித்தளவில் வெளிப்படையாக இருந்த நிலையில், ட்ரம்ப் ஐ விமர்சிக்கும் சில விமர்சகர்கள், அவரை ஒரு "பிரங்கன்ஸ்ரைன் அசுரனாக", அக்கட்சியின் இனவாத கூறுபாடுகளது தசாப்த கால விளைபொருளாக உருவானவர் என்பதை ஒப்புக் கொள்ள தொடங்கி இருந்தனர். இதை பின்னோக்கி 1960 களில் இருந்து தேதியிட முடியும், அப்போது ரிச்சார்ட் நிக்சன் குடியரசுக் கட்சியின் "தெற்கு மூலோபாயத்தை" (southern strategy) தொடங்கினார், அது குடியுரிமைகள் இயக்கத்திற்கு பின்னரும் காலங்கடந்தும் நீடித்து இருந்து வந்த விரோதங்களுக்கு எதிராக முறையிடுவதை நோக்கமாக கொண்டது. ஆகஸ்ட் 1980 இல், குடியரசுக் கட்சி வேட்பாளர் அந்தஸ்தை வென்ற பின்னர் உடனடியாக, ரோனால்ட் ரீகன் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அவரது முதல் பொது பிரச்சார உரைக்கான இடமாக பிலடெல்பியா, மிசிசிபியைத் தேர்ந்தெடுத்தார். அங்கே தான் அதற்கு 16 ஆண்டுகளுக்கு முன்னதாக மூன்று குடியுரிமை போராளிகள் கொல்லப்பட்டிருந்தார்கள்.

குடியரசுக் கட்சியின் இனவாத அரசியல் கலாச்சாரம் ட்ரம்ப் இன் அரசியல் வாழ்க்கை அபிவிருத்திக்கும் முஸ்லீம்கள் மற்றும் ஹிஸ்பானிக் மூலவேர்களை கொண்ட புலம்பெயர்வோருக்கு எதிராக இன்றைய நாட்களில் அவர் இனவாதத்தை தூண்டுவதற்கும் ஒரு சரியான சூழலை வழங்கியுள்ளது என்பதில் அங்கே எந்த கேள்வியும் இல்லை. இருந்தாலும், இந்தளவிற்கு பட்டவர்த்தனமான இனவாதத்திற்கு கோரிக்கைவிடுவதை வைத்துப் பார்த்தால், அது ட்ரம்ப் இன் வேகமான அரசியல் வளர்ச்சிப் போக்கை எடுத்துக்காட்டவில்லை, மாறாக உண்மையில் அது அனைத்து குடியரசுக் கட்சி வேட்பாளர்களின் கையிருப்புகளாக உள்ளன.

மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் அன்றாடம் அவர்களது வாழ்வில் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் ஓர் அரசியல் அமைப்புமுறையால், அவர்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக மற்றும் நிந்திக்கப்பட்டிருப்பதாக —மிகவும் நியாயமாகவே— உணர்கின்ற நிலையில், அந்த மக்களின் ஆழ்ந்த கோபம் மற்றும் விரக்திக்கு, வேறெந்த குடியரசுக் கட்சி வேட்பாளரையும் விட, ட்ரம்ப், அவரது சேதியை உறுதியாக கொடுத்துள்ளார். அவம்பிக்கையிலுள்ள மில்லியன் கணக்கான மக்களின் பொருளாதார மற்றும் சமூக பாதுகாப்பின்மைக்கு ஒரு முறையீடு செய்யக்கூடிய அரசியல் சாத்தியத்திறனை ஏதோவொரு வலதுசாரி வார்த்தையாடி கண்டுகொள்வதற்கு அதிகளவு காலம் பிடிப்பதில்லை.

“என்ன இருக்கிறதோ அதை உள்ளவாறே அவர் கூறுகிறார்" என்பது அந்த வேட்பாளரை முன்வைக்க ட்ரம்ப் ஆதரவாளர்களால் பயன்படுத்தப்பட்ட வனப்புரை என்பதை, குடியரசுக் கட்சியின் பிரதான வேட்பாளர்களை குறித்து வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட வாக்கெடுப்புக்குப்-பிந்தைய கருத்துக்கணிப்புகள் ஸ்தாபிக்கின்றன. அதன் அர்த்தம் என்ன? அது மிகவும் சாதாரணமானது, “அமெரிக்கா தோல்வி அடைந்து வருகிறது" என்பதை ட்ரம்ப் பிரகடனப்படுத்துகிறார். வருடாந்தர ஜனாதிபதியின் நாட்டிற்கான உரை ஒவ்வொன்றிலும் கரவொலி பெறும் ஒரு சம்பிரதாயமான வாசகமாக மாறியுள்ள, அமெரிக்கா மிகச் சிறப்பாக இருக்கிறது என்ற வழமையான பிரகடனங்களை விட, அந்நாட்டின் நிலையைக் குறித்த இந்த மதிப்பீடு உண்மைக்கு மிக நெருக்கத்தில் சரியான வாசகமாக எதிரொலிக்கிறது.

அதிக வேலைவாய்ப்பின்மை, குறைந்த கூலி மற்றும் மருத்துவ சிகிச்சையின் படுமோசமான நிலைமை ஆகியவற்றைக் குறித்து ட்ரம்ப் பேசுகிறார். இந்த பிரச்சினைகளுக்கு அவரிடம் எந்த தீர்வும் இல்லை அல்லது அர்த்தமற்ற, பிற்போக்குத்தனமான மற்றும் முட்டாள்தனமான "தீர்வுகள்" மட்டுந்தான் உள்ளன என்ற உண்மை, வாக்காளர்களுக்கு தெரிந்த பொருளாதார வீழ்ச்சியின் யதார்த்தத்தை ட்ரம்ப் விவரிப்பதுடன் ஒப்பிட்டு நோக்குகையில், முந்தையது கவனத்திற்கு எடுக்காததாக தெரிகிறது. செவ்வாயன்று லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸில் பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரை பின்வருமாறு குறிப்பிடுகிறது:

முதலில் வாக்கெடுப்பு நடந்த மாநிலங்களில் இருந்து வந்த வாக்களிப்பு நிலவர விபரங்கள், ட்ரம்ப் இன் ஆதரவாளர்களில் பலர் நிதியியல்ரீதியில் பின்தங்கி இருப்பதாக அவர்கள் குறைகூறியதை உறுதிப்படுத்துகிறது. இதுவரையில் ட்ரம்ப் இன் வாக்காளர்கள், அவர்களது படிப்பை உயர்நிலைப் பள்ளியோடு நிறுத்தியவர்களாகவும் மற்றும் அவர்களது வேலைக்கான சாத்தியக்கூறுகள் குறைந்தவர்களாகவும் இருக்கின்றது.

அது பகுதியாக பெருமந்தநிலைமைக்கு பின்னர் தேசத்தின் வருவாய் தேக்கமடைந்ததன் ஒரு பிரதிபலிப்பாகும். வெள்ளையின அமெரிக்கர்களுக்கான தனிநபர் வருவாய், $32,089, 2005 இல் என்னவாக இருந்ததோ வெறுமனே அதேயளவுக்கு மட்டுமே திரும்பி உள்ளது. நிறுவனங்கள் உயர்திறன் மற்றும் உயர் கல்வி மட்டங்களை கோர தொடங்கியிருப்பதால் மற்றும் வேலையிட மாற்றங்களால், ஒரே சீராக உற்பத்தித்துறை வேலைகளை இழந்துள்ள தெற்கு மாநிலங்களின் பொருளாதார நிலைமைகள் மிகவும் குறிப்பாக சிக்கலாக உள்ளன. கடந்த மாதம் ட்ரம்ப் க்கு மிகச் சுலபமான ஒரு வெற்றியை வழங்கிய வாக்காளர்களைக் கொண்ட தெற்கு கரோலினாவில், புதிய தொழில்நுட்பம்-நிறைந்த தானியங்கி உற்பத்தி ஆலைகள், மூடப்பட்ட ஜவுளித்துறை ஆலைகளைப் பிரதியீடு செய்துள்ளன. ஆனால் நடுத்தரத்தட்டு குடும்பங்களின் வருவாய், $44,929, பணவீக்கத்திற்கு ஏற்ப ஈடுகட்டப்பட்டு, மந்தநிலைமைக்கு முன்னர் 2006 இல் இருந்தவாறு $50,484 அளவுக்கு இன்னமும் உயரவில்லை.

செவ்வாயன்று சாதனையளவுக்கு வாக்குப்பதிவு எதிர்பார்க்கப்படும், ஜோர்ஜியாவை போலவே, டென்னிசி, பணவீக்கத்திற்கு ஏற்ப ஈடுகட்டப்பட்ட அதன் நடுத்தர குடும்ப வருவாய் உயர்வைக் கடைசியாக 1999 இல், $51,190, கண்டது; இன்று அது $43,716 ஆக உள்ளது.

ட்ரம்ப் ஒரு பொய்யான கடந்த காலத்தைக் காட்டி, “அமெரிக்காவை மீண்டும் சிறப்பானதாக ஆக்க" உறுதியளிக்கிறார். அமெரிக்கா ஏமாற்று வணிகர்களின் பிறப்பிடமாகும். மார்க் ட்வைனின் Duke of Bilgewater கதாபாத்திரம், பற்களிலிருந்து கறைகளை நீக்கும் என்று கூறி ஒரு பொருளைச் சந்தைப்படுத்துகிறார். துரதிருஷ்டவசமாக, அது பற்களின் வெளிமிளிரியைக் கரைத்துவிடுகிறது.

ட்ரம்ப் அவரது பொருளாதார மற்றும் அரசியல் சரக்குகளைப் அவநம்பிக்கையில் இருப்பவர்கள் மற்றும் அதைரியமடைந்து இருப்பவர்களிடம் விற்பனை செய்து கொண்டிருக்கிறார். அவரது வணிகங்களில் பல திவால்நிலைமை நீதிமன்றங்களில் போய் நிற்கின்றன என்பதை எடுத்துக்காட்டினால், ட்ரம்ப் ஐ மதிப்பிழக்கச் செய்ய முடியுமென அவரது ஊடக மற்றும் அரசியல் விமர்சகர்களில் சிலர் நம்புகின்றனர். அவர்கள் முற்றிலும் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். ட்ரம்ப் இன் திவால்நிலைமைகளது கதை மற்றும் அடுத்தடுத்து உயிர்த்தெழுந்த கதை, தாங்கள் வைத்திருக்கும் அனைத்தையும் இழப்பதென்றால் என்ன என்பதை அறிந்தவர்களுக்கு ஒருவித வினோதமான நம்பிக்கை தான் அளிக்கும். பல வணிக தோல்விகளின் சாம்பலில் இருந்து பீனிக்ஸ்-போல ட்ரம்ப் மேலெழுந்தார் என்றால், அவரது வெற்றியின் இரகசிய சூத்திரத்தை அவரே மற்றவர்களோடு, ஏன் ஒட்டுமொத்த நாட்டிடமே கூட, பகிர்ந்து கொள்ள முடியும். அவர் அமெரிக்காவின் பிரச்சினைகளுக்கு "அந்த கையாளும் கலையை" பயன்படுத்தலாம். தங்களின் இறுதிப்படியில் நிற்பவர்களிடம், ட்ரம்ப், அதிசயங்களுக்கான வாக்குறுதிகளை அளிக்கிறார்.

அவரிடம் இருப்பதாக அவர் கூறும் பில்லியன்களை ட்ரம்ப் வைத்திருக்கிறாரா இல்லையா என்பது விவாதத்திற்கு அப்பாற்பட்ட விடயம். அவரது தனிப்பட்ட சொத்துக்களின் நிஜமான அளவு என்னவாக இருந்தாலும், அந்த வலதுசாரி நிலம்/வீடு வணிகத்துறை அதிபர், குறைந்த-வருவாய் வெள்ளையின தொழிலாளர்களின் கணிசமான பிரிவுகளிடையே ஆதரவைப் பெறுவார் என்பது வினோதமாக தெரிகிறது. மக்கள்தொகையில் இந்த குறிப்பிடத்தக்க அடுக்கு ஏன் இடதிற்கு இழுக்கப்படவில்லை என்று கேட்கப்பட வேண்டும்?

இந்த கேள்விக்கான பதிலுக்காக, ஒருவர், பொதுவாக அமெரிக்காவில் "இடது" அரசியலாக பிரதிநிதித்துவம் செய்யப்படுவது எது என்பதன் மீது ஒரு கடினமான பார்வையை எடுக்க வேண்டும்.

உத்தியோகபூர்வ "இடது" அரசியல் ஜனநாயகக் கட்சியாக அமைந்துள்ளது, இது —குடியரசு கட்சிக்கு குறைவின்றி (சில விடயங்களில் அதை விட அதிகமாகவே)— வோல் ஸ்ட்ரீட் இன் மற்றும் இராணுவ மற்றும் உளவுத்துறை மூலோபாயவாதிகளின் முக்கிய பிரிவுகளது அரசியல் கருவியாக உள்ளது. “மாற்றம் ஏற்படும் நீங்கள் நம்பலாம்" என்ற வாக்குறுதிகளுடன் வெள்ளை மாளிகைக்குள் நுழைந்த ஒபாமா நிர்வாகம், புஷ் நிர்வாகத்தின் கொள்கைகளைப் பின்தொடர்ந்ததுடன், அவற்றை விரிவாக்கியது. அதன் பொருளாதார கொள்கைகள் ஒட்டுமொத்தமாக வோல் ஸ்ட்ரீட்டை மீட்கவும் மற்றும் செழிப்பாக்கவும் அர்பணிக்கப்பட்டுள்ளன. அதன் முக்கியமான சமூக திட்டம், மருத்துவக் காப்பீட்டுத் திட்ட மறுசீரமைப்பு, இது காப்பீட்டுத் துறையின் இலாபங்களை அதிகரிக்கவும் மற்றும் அதிகாரங்களைப் பாரியளவில் விரிவாக்கும் விதத்திலும் வடிவமைக்கப்பட்டது. ஒபாமா நிர்வாகம், அமெரிக்க வெளியுறவுத்துறை கொள்கையின் ஒரு மத்திய கருவியாக படுகொலைகளை ஸ்தாபனமயப்படுத்தி இருப்பதுடன், ஜனநாய உரிமைகள் மீதான தாக்குதல்களைக் கடுமையாக தீவிரப்படுத்துவதை மேற்பார்வையிட்டது.

இப்படியென்றால், பின், ஜனநாயகக் கட்சியின் “இடதுவாதத்தில்” என்ன இருக்கிறது? அதன் “இடது” வர்ணம், செல்வாக்கு மிகுந்த நடுத்தர வர்க்க பிரிவுகளின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் அமைப்புகள் மற்றும் குழுக்கள் ஒருங்கிணைந்த ஒரு பரந்த சேர்க்கையால் ஊக்குவிக்கப்படும் அடையாள அரசியலின் பல்வேறு வடிவங்களுக்கான —இனம், வகுப்புவாதம், பாரம்பரிய குணம் மற்றும் ஆண்-பெண் முன்னுரிமை என்ற தீர்மானங்கள் மீதான— அதன் ஆதரவால் வரையறுக்கப்படுகிறது. மக்கள்தொகையில் மிகப் பணக்கார 10 சதவீதத்தினரிடையே மிகவும் உடன்பாடானரீதியில் செல்வவளத்தைப் பகிர்ந்து கொள்வதை எட்டுவதற்கு அப்பாற்பட்டு, சமூகத்தின் இப்போதைய பொருளாதார கட்டமைப்பிற்குள் எந்தவொரு முக்கிய மாற்றத்திலும் அவர்களுக்கு ஆர்வம் கிடையாது.

இந்த அரசியல் சூழலின் இன்றியமையாத குணாம்சங்கள், சுய-திருப்தி, சுயநலத்துக்கான அபகரிப்பு மற்றும், அனைத்திற்கும் மேலாக, தொழிலாள வர்க்கத்தின் மீதான வெறுப்பாகும். குறிப்பாக செல்வ செழிப்பான "இடது" அமைப்புகள் —அல்லது, அவற்றை இன்னும் துல்லியமாக விளக்குவதானால், “போலி-இடது"— இவை வெள்ளையின தொழிலாள வர்க்கத்தின் மீதான அவர்களது அலட்சியத்தை குறைப்பதற்கு சிறிதும் முயற்சிப்பதில்லை. இதற்கு அடையாள அரசியலின் கட்டமைப்பிற்குள் அவ்வாறு செய்வதற்கும் இடமில்லை. அமெரிக்க தொழிலாளர்களின் ஒரு பரந்த அடுக்கு "பிற்போக்குதனமானதாக" ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்களது இன்றியமையாத வர்க்க நலன்கள், அதாவது வேலைகள், ஒரு பாதுகாப்பான வேலையிடம், வாழ்வதற்கேற்ற சம்பளம், ஒரு பாதுகாப்பான ஓய்வூதியம், செலவு குறைந்த மருத்துவ சிகிச்சை முறை, நேர்மையான ஜனநாயக உரிமைகள், சமாதானம் ஆகியவை நிராகரிக்கப்பட்டுள்ளன.

இந்த வஞ்சகமான வழியில், இனவாதத்திற்கு எதிரான போராட்டம் முற்றிலும் ஒரு வாய்சவடால் குணாம்சத்தை பெறுகிறது. தொழிலாளர்களின் பொதுவான வர்க்க அடையாளத்தில் மற்றும் அவர்களை ஒடுக்குவதில் அடித்தளத்தில் இருக்கும் பொருளாதார மூலாதாரத்தைக் குறித்து அவர்கள் எந்தளவிற்கு நனவுபூர்வமாக இருக்கிறார்களோ அந்தளவுக்கு, தொழிலாளர்களுக்கு இடையிலான பிளவுகளின் எந்த வடிவங்களையும் —இனம், தேசியம் அல்லது வகுப்புவாத குணாம்சம் என எதுவாக இருந்தாலும்— அவற்றைக் கடந்து வர முடியும் என்று நிஜமான சோசலிஸ்ட்டுகள் எப்போதும் வலியுறுத்தி உள்ளனர்.

இது ஆண்-பெண் அடையாளம் மற்றும் பாரம்பரிய குணம் சம்பந்தமான பாகுபாட்டின் ஏனைய வடிவங்களுக்கு எதிரான போராட்டத்திற்கும் உண்மையென பொருந்தும். இத்தகைய முக்கிய ஜனநாயக பிரச்சினைகளை நோக்கிய சோசலிஸ்ட்டுகளின் மனோபாவம் என்னவென்றால், முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளையும் அரசியல்ரீதியில் ஒன்றுதிரட்டுவதன் அடிப்படையில் அவற்றை எதிர்த்து போராட வேண்டும் என்பதாகும்.

இந்த முன்னோக்கை போலி-இடது அமைப்புகள் மிகப் பெரியளவில் எதிர்க்கின்றன, "கறுப்பினம் வாழ வேண்டும் என்பது தான் விடயம்" என்ற முழக்கத்தை வைத்து, அடிப்படை ஜனநாயக கருத்துருவான “அனைவரும் வாழ வேண்டும் என்பது தான் விடயம்" என்பதை எதிர்க்குமாறு அவர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்த பிற்போக்குத்தனமான நிலைப்பாடு ட்ரம்ப் மற்றும் அவரது வகையறாக்களின் கரங்களில் விளையாடுகிறது.

ஹிலாரி கிளிண்டன் பிரச்சாரத்தை பொறுத்த வரையில், இரண்டு பிற்போக்குத்தனமான நிர்வாகங்களது —அதாவது பில் கிளிண்டன் மற்றும் பராக் ஒபாமா நிர்வாகங்களது— இந்த மோசடி அனுபவஸ்தர்களை, ஒடுக்கப்பட்டவர்களின் பாதுகாவலர்களாக ஊக்குவிக்கும் முயற்சிகள், கோமாளித்தனமானவை என்பதற்கு குறைந்ததில்லை. அப்பெண்மணியின் ஜனாதிபதியாகும் முயற்சி அடையாள அரசியல் ஏமாற்றுத்தனத்திற்கு ஒரு நினைவுச்சின்னம். அவரது கணவரின் நிர்வாகம், கிளாஸ்-ஸ்டீகால் சட்டத்தை (Glass-Steagall Act) நீக்குவதற்கு தலைமை தாங்கியது, இது 2008 பொறிவுக்கு இட்டுச் சென்ற மோசடிகளுக்கு பாதை அமைத்துக் கொடுத்தது. முதலாவது பதவிக்காலத்தில் ஜனாதிபதி கிளிண்டன் மருத்துவ நல வழங்கல்களை வெறுமையாக்கினார், இது மில்லியன் கணக்கான ஆபிரிக்க-அமெரிக்க தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகளில் பேரழிவுகரமான தாக்கத்தை ஏற்படுத்தியது. கிளிண்டன் நிர்வாகத்தின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட குற்றவியல் சட்டமசோதா, சிறையடைப்பு விகிதத்தைப் பாரியளவில் அதிகரிக்க இட்டுச் சென்றது.

இருந்தபோதினும், நூறாயிரக் கணக்கான மக்கள் கொல்லப்படுவதற்கு இட்டுச் சென்ற லிபியா தாக்குதலைப் பின்னின்று தூண்டிவிட்ட இந்த லேடி மெக்பெத் (Lady Macbeth) அமெரிக்க அரசியலில் தேர்ந்தெடுக்கப்படுவது, அமெரிக்க பெண்மைக்கே ஒரு வெற்றியாக இருக்கும் என்று வாதிடப்படுகிறது! அமெரிக்காவில் "இடது-தாராளவாத" அரசியலின் தூணாக விளங்கும் தி நேஷன், அதன் நடப்பு பதிப்பில் "ஹிலாரி கிளிண்டனை நான் ஏன் சந்தோஷத்துடனும், வருத்தமின்றியும் ஆதரிக்கிறேன்” என்ற தலைப்பில் ஒரு செல்வந்த பெண்ணியவாதியின் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. அந்த ஆசிரியர், அவர் போக்கில், அவரது மகள் கிளிண்டன் பிரச்சாரத்திற்கு சம்பளம் பெறுவதாக குறிப்பிடுகிறார்.

பரவலாக ஒரு சோசலிஸ்ட் ஆக அடையாளம் காணப்படும் செனட்டர் பேர்னி சாண்டர்ஸின் பிரச்சாரம், பரந்தளவில் ஆதரவைப் பெற்றிருப்பதுடன், முதலாளித்துவத்திற்கான ஒரு மாற்றீடு குறித்து தொழிலாள வர்க்கத்தின் பெரும் பிரிவுகளுக்குள் விருப்பம் இருப்பதை எடுத்துக்காட்டி உள்ளது. மிக முக்கியமாக, ட்ரம்ப் க்கு எதிராக கிளிண்டனை விட சாண்டர்ஸ் எவ்வளவோ சிறப்பாக செய்வார் என்பதாக கருத்துக்கணிப்புகள் எடுத்துக்காட்டின.

ஆனால், சாண்டர்ஸ் அவரது பிரச்சாரத்தை ஜனநாயகக் கட்சிக்குள் நடத்துவதன் மூலமாக, முதலாளித்துவத்திற்கான மக்கள் எதிர்ப்பை ஒரு முட்டுச்சந்துக்குள் திருப்பி வருகிறார். கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் அவரது பிரச்சாரம் முன்பினும் அதிக பழமைவாத குணாம்சத்தை ஏற்கிறது. அவர் இப்போது அவரது சோசலிசத்தை சமூக பாதுகாப்புக்கான ஆதரவு என்பதற்கு அதிகமாக ஒன்றுமில்லை என்று வரையறுக்கிறார். முதலாளித்துவ வர்க்க அரசியலின் கடுமையான நடைமுறை மரபுகளைக் குற்றஞ்சாட்டுகின்றனவே ஒழிய, தொழிலாள வர்க்கத்தைக் குறிப்பிட்டுக் காட்டும் மேற்கோள்கள் அவரது உரைகளிலிருந்து முற்றிலும் மறைந்துவிட்டன. சாண்டர்ஸ் இப்போது தன்னைத்தானே ஒரு "நடுத்தர வர்க்கத்திற்கான போராளியாக" அடையாளப்படுத்திக் கொள்கிறார்.

இவ்விதத்தில், சாண்டர்ஸ், முதலாளித்துவத்திற்கு எதிரான மற்றும் சோசலிசத்திற்கான தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கம் மேலெழுவதைத் தடுக்க முயல்கிறார்.

குடியரசுக் கட்சி வேட்பாளர் தீர்மான மாநாட்டிற்கு இன்னமும் மூன்று மாதங்கள் இருக்கின்றன. நவம்பர் தேர்தலுக்கு இன்னும் ஓர் அரையாண்டுக்கும் அதிகமான காலம் இருக்கிறது. சர்வதேச அரசியலின் வெடிப்பார்ந்த குணாம்சம், தீவிர பொருளாதார ஸ்திரமின்மை மற்றும் அமெரிக்காவிற்குள் அதிகரித்துவரும் சமூக பதட்டங்கள், இவை அதிகபட்ச மட்டத்திலான நிச்சயமற்றத்தன்மையோடு 2016 தேர்தலுக்கு பங்களிப்பு செய்கின்றன. எவ்வாறிருப்பினும் ட்ரம்ப் இன் புலப்பாடு ஒரு தீவிர அரசியல் எச்சரிக்கையாகும். அமெரிக்க அரசியல் அமைப்புமுறை உள்மையத்திலேயே அழுகி போயுள்ளது. நாளை ட்ரம்ப் இல்லாது போனாலும், அவரது இடத்தை எடுக்க மற்றொரு பாசிசவாத வனப்புரையாளர் வருவதற்கு நீண்டகாலம் எடுக்காது. கணிசமான அளவுக்கு போர் அனுபவமும் மற்றும் தீவிரமாக சண்டையிடும் படைகளை அணுகக்கூடிய தகமை உள்ளவர்களும் அரசியல் களத்திற்குள் நுழைய தயாரிப்பு செய்து வருவதுடன் சேர்ந்து, மனநிறைவின்றி இருக்கும் இராணுவ மற்றும் பொலிஸ்-உளவுத்துறை நடவடிக்கையாளர்களின் எண்ணிக்கை அங்கே குறைவின்றி உள்ளது.

அமெரிக்காவில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர சோசலிச இயக்கத்தைக் கட்டமைப்பது ஓர் அவசர அரசியல் பணியாகும். அரசியல் சூல்நிலையில் இருந்து அவசியமான தீர்மானங்கள் எடுத்து, அதன் பக்கவாட்டில் இருந்து வெளியேறி, சோசலிச சமத்துவக் கட்சியைக் கட்டியெழுப்ப போராடுமாறு நாங்கள் உலக சோசலிச வலைத் தளத்தின் பல ஆதரவாளர்கள் மற்றும் வாசகர்களுக்கு அழைப்புவிடுக்கிறோம்.