ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The Trump campaign: A new stage in the crisis of American democracy

ட்ரம்ப் இன் பிரச்சாரம்: அமெரிக்க ஜனநாயக நெருக்கடியில் ஒரு புதிய கட்டம்

The WSWS Editorial Board
14 March 2016

குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஆவதற்கு போட்டியிட்டு வரும் பில்லியனர் டோனால்ட் ட்ரம்ப் இன் கூட்டங்களின் உள்ளேயும் மற்றும் வெளியேயும் உடலியல்ரீதியான மோதல்கள் வெடித்துள்ளதுடன், இதை அந்த வேட்பாளரே நிலையில், அமெரிக்க அரசியல் வாழ்வின் பாரம்பரிய நெறிமுறைகள் வேகமாக உடைந்து வருகின்றன.

வெளிநாடுகளில் முடிவில்லா போருடன் சேர்ந்து, அமெரிக்காவிற்கு உள்ளே நிலவும் வெடிப்பார்ந்த சமூக பதட்டங்களின் விளைவுகள், அரசியல் வாழ்வின் மேற்மட்டத்திற்கு எழுந்து வருகின்றன. ஒரு வெளிப்படையான பாசிசவாத மற்றும் சர்வாதிபத்திய வேலைத்திட்டத்தை கொண்ட ஒரு வேட்பாளர், அவரது எதிர்ப்பாளர்களுக்கு எதிராக பகிரங்கமாக வன்முறையைத் தூண்டிவிட்டு வருவதுடன் அமெரிக்க மக்களின் பெரும் பகுதியினர் ஒடுக்கப்பட வேண்டுமென அறிவிக்கின்ற அவர், அமெரிக்காவில் முதல் முறையாக குடியரசு கட்சியின் வேட்பாளர் அந்தஸ்தைக் கைப்பற்றும் தறுவாயில் உள்ளார்.

நிதித்துறை, நில/கட்டிட விற்பனைத்துறை ஆகியவற்றிலிருந்தும் மற்றும் அவரது அயோக்கியத்தனமான வியாபார குணத்தை ஊடக-ஒத்துழைப்புடன் வணிகம் செய்ததில் இருந்தும் சேர்த்த சொத்துக்களுடன், ட்ரம்ப், மலைப்பூட்டும் அளவிலான சமூக சமத்துவமின்மையை குணாம்சப்படுத்தும் அமெரிக்க சமூகத்தின் செல்வந்த தன்னலக்குழுவின் பண்புக்கு மிகச் சிறந்த உதாரணமாக திகழ்கிறார். அவர் இந்த செல்வந்தத் தன்னலக்குழுவினது ஒட்டுமொத்த "அதிகார விருப்பை" பிரதிநிதித்துவம் செய்கிறார். பெருகிவரும் மக்கள் அதிருப்தி மற்றும் அதிகரித்து வரும் தொழிலாள வர்க்க போர்குணத்தால் பீதியுற்றுள்ள மிகவும் இரக்கமற்ற தீர்க்கமான முதலாளித்துவ வர்க்க பிரிவுகளது சர்வாதிகார மற்றும் பாசிசவாத ஆட்சி வடிவங்களைத் திணிப்பதற்கு, அவரது பிரச்சாரம் ஒரு முன்கூட்டிய முயற்சியாகும்.

மில்லியன் கணக்கான மக்களைப் பாதித்து வரும் பாரிய வேலைவாய்ப்பின்மை, வீழ்ச்சி அடைந்துவரும் கூலிகள் மற்றும் பொருளாதார வீழ்ச்சியின் பிரச்சினைகளுக்கு அக்கறையின்றியும் மற்றும் விரோதமாகவும் இருக்கும் ஓர் அரசியல் அமைப்புமுறையால் உண்டாக்கப்பட்ட ஆழ்ந்த சமூக கோபத்தை ட்ரம்ப் சாதகமாக்குகிறார். இந்த கோபத்தை அவர் பிற்போக்குத்தனமான போக்குகளுக்குள் திருப்பி விட்டு வருகிறார், அத்துடன் வேலைகளை வெளிநாடுகளுக்கு வழங்கும் "நம்பிக்கைத்துரோக" பெருநிறுவனங்களைப் பாசாங்குத்தனமாக கண்டிப்பது, சீனா மற்றும் மெக்சிகோவிற்கு எதிராக வெளிநாட்டவர் விரோத ஆத்திரங்களைத் தூண்டுவிடுவது ஆகியவற்றுடன், "வெளியிலிருந்து வந்தவர்கள் இங்கிருக்க உரிமை இல்லை" என்று புலம்பெயர்ந்தவர்கள், முஸ்லீம்கள் மீதான மற்றும் ஒரு பரந்த மக்கள் மீதான இனவாத தாக்குதல்களும் இணைந்துவருகின்றன.

ட்ரம்ப் இன் தோற்றப்பாடு, ஒரு நோய்பீடித்த சமூக, பொருளாதார மற்றும் அரசியல் அமைப்புமுறைக்கு ஓர் அடையாளமாகும். ஒரு "மிதவாத" மாற்றீடாக பிரதிநிதித்துவம் செய்து வருகின்ற அவரது பிரதான குடியரசு கட்சி போட்டியாளர் டெக்சாஸ் செனட்டர் டெட் க்ரூஸ், அமெரிக்க அரசியல் அமைப்புமுறை எந்தளவிற்கு வலதிற்குச் சென்றுள்ளது என்பதனை வெளிப்படுத்துகிறார். ட்ரம்ப் எந்தளவிற்கோ அதேயளவிற்கு க்ரூஸூம் பிற்போக்குத்தனமான மற்றும் அபாயகரமானவர் ஆவார் என்று கூறலாம், இவரும் மத்தியக் கிழக்கில் இராணுவத் தீவிரப்பாட்டுக்கு, பெருநிறுவனங்கள் மற்றும் செல்வந்தர்களுக்கான பெரும் வரி வெட்டுக்களுக்கு, மற்றும் அமெரிக்காவில் மதவாத அரசு போன்ற ஒன்றை உருவாக்குவதற்கு வக்காலத்து வாங்குகிறார்.

எதிர்வரவிருக்கும் வாரங்கள் மற்றும் மாதங்களில் ட்ரம்ப் பிரச்சாரத்தின் நிலை என்னவாக இருந்தாலும், அவரது இந்த திடீர் எழுச்சியைப் பொறுத்த வரையில், அமெரிக்க ஜனநாயகம் ஓர் மரண நெருக்கடியை முகங்கொடுக்கிறது என்பதற்கு ஒரு தெளிவான எச்சரிக்கையாகும். ட்ரம்ப் இருந்தாலும் சரி அல்லது அவர் இல்லாவிட்டாலும் சரி, முதலாளித்துவ அமைப்புமுறையின் அடித்தளத்தில் அதீத செல்வத் திரட்சி மற்றும் பெருநிறுவன-நிதியியல் செல்வந்த தட்டுக்களது மேலாதிக்கம், பகிரங்கமான சர்வாதிகாரம் மற்றும் பாசிசவாத ஆட்சி வடிவங்களுக்கே இட்டுச் செல்கிறது. இந்த ட்ரம்ப் இன் முதல் பதிப்பு பிரச்சாரம் திடீரென ஒன்றுமில்லாமல் போனாலும் கூட, அரசியல் சந்தையில் விரைவிலேயே இரண்டாவது பதிப்பு உருவாகிவிடும். அனேகமாக அது அதிக நயமானதாக இருக்கலாம் ஆனால் அபாயம் குறைந்ததாக இருக்காது. ட்ரம்ப் இன் கொடூரமான அணுகுமுறைகள் குறித்து குடியரசு கட்சி உயரடுக்கிற்குள் தற்போது கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட, அது "கீழ்மட்டத்திலிருந்து" வரும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக முதலாளித்துவ அமைப்புமுறையைப் பாதுகாப்பது என்ற அவரது இறுதியான நோக்கத்துடன் உடன்படுகிறது.

குடியரசுக் கட்சிக்கு முற்போக்கான மாற்றீடாக மரபார்ந்து முன்வைக்கப்படும் ஜனநாயக கட்சியாலும் கூட, இந்த நடைமுறையைத் தடுக்க முடியாது. உத்தியோகபூர்வமாக அக்கட்சியின் முன்னணி வேட்பாளராக உள்ள ஹிலாரி கிளிண்டன் இப்போதைய இந்த அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைக்கு அவரே உருவடிவமாக உள்ளார். எந்த அரசாங்கத்தினது கொள்கைகள்—உழைக்கும் மக்களை விலையாக கொடுத்து வோல் ஸ்ட்ரீட்டிற்கு பிணையெடுப்பு வழங்கியதோ, புஷ் நிர்வாகத்தின் போர்களை விரிவாக்கியதோ, இராணுவ-பொலிஸ் எந்திரத்தின் அதிகாரங்களை கட்டமைத்ததோ — ட்ரம்ப் இன் எழுச்சிக்கான நிலைமைகளை உருவாக்கியதோ அதே அரசாங்கத்தை அவர் ஆரத்தழுவி, அவரது பிரச்சாரத்தை ஒபாமா நிர்வாகத்தின் தொடர்ச்சியாக முன்வைத்துள்ளார்.

கிளிண்டனின் பிரச்சாரம் பொய்கள் மற்றும் பாசாங்குத்தனத்தின் மீது கட்டமைந்துள்ளது. அவரும் மற்றும் முன்னாள் ஜனாதிபதியான அவரது கணவரும், தனிநபர்கள் அளப்பரிய செல்வவளத்தைப் பெறுவதற்கு அரசியல் எந்திரத்தில் அவர்களது நிலைமைகளை நெம்புகோல்களாக பயன்படுத்திகொண்டனர்.

இப்போதைய அமைப்புமுறைக்கு ஒரு மாற்றீட்டை விரும்பும் பெருந்திரளான உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்களின் விருப்பம், வெர்மாண்ட் செனட்டர் பேர்ணி சாண்டர்ஸின் பிரச்சாரத்தில் வெளிப்பாட்டைக் கண்டுள்ளது. அவர் தன்னைத்தானே ஒரு "ஜனநாயக சோசலிஸ்டாக" அடையாளப்படுத்தியதன் அடிப்படையில் பெருமளவில் பாரிய ஆதரவை ஈர்த்துள்ளார். சற்றே பலமிழந்த தாராளவாதம் கூட "மோசமான” வார்த்தையாக குறிக்கப்படும் ஒரு நாட்டில், மேலும் சோசலிசம் என்பது உத்தியோகபூர்வ அரசியல் வனப்புரைகளில் இருந்து அண்மித்து எழுபது ஆண்டுகளாக கிட்டத்தட்ட முழுமையாக தவிர்க்கப்பட்டுள்ள ஒரு நாட்டில், சாண்டர்ஸ் பிரச்சாரமானது, அமெரிக்க மக்கள் முதலாளித்துவத்திற்கு ஒரு மாற்றீட்டை ஒருபோதும் எண்ணியதில்லை என்ற அரசியல் கட்டுக்கதையை பொய்மையாக்கியுள்ளது.

ஜனநாயக கட்சி வேட்பாளர் அந்தஸ்திற்கு ஒரு தீவிர போட்டியாளராக சாண்டர்ஸை முன்கொண்டு வந்துள்ள தொழிலாளர்களும் இளைஞர்களும், தீர்வான அரசியல் மற்றும் சமூக மாற்றத்தைக் கோருவதால் தான் அவரை ஆதரிக்கின்றனர்.

ஆனால் சாண்டர்ஸ் என்னவாக பார்க்கப்படுகிறாரோ அதற்கும், யதார்த்தத்தில் அவர் என்னவாக இருக்கிறார் என்பதற்கும் இடையே அங்கே ஓர் ஆழமான இடைவெளி உள்ளது. “பில்லியனிய வர்க்கத்திற்கு" எதிரான அவரது வாய்சவுடால்களை விட மிக அதிக முக்கியமானது, அமெரிக்காவை 150 ஆண்டுகளாக கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிதிய பிரபுத்துவத்தின் இரண்டு அரசியல் கருவிகளில் ஒன்றான முதலாளித்துவ ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஆவதற்கு சாண்டர்ஸ் முயன்று வருகிறார் என்ற உண்மையாகும். அக்கட்சி, சோசலிசத்திற்கான கருவியாக சேவை ஆற்றாது என்பது இருக்கட்டும், அமெரிக்க சமூகத்தின் ஒரு முற்போக்கான மாற்றத்திற்கான கருவியாக கூட சேவை ஆற்றாது.

இறுதி ஆய்வுகளில், சாண்டர்ஸின் “அரசியல் புரட்சி” பேச்சுக்கள் வெற்று பேச்சுக்கள் என்பதை விட சற்றே அதிகமானது. சாண்டர்ஸின் "நேர்மைக்கு" கிடைக்கும் பாராட்டுக்கள் முதிர்ச்சியற்றவை என்பது மட்டுமல்ல, மாறாக உண்மையில் கருத்திற்கு பொருந்தாதவை ஆகும். இன்று இந்த "வீராவேச பேச்சுக்களில்" எழுச்சி அடைபவர்கள், "மாற்றத்தை நீங்கள் நம்பலாம்" என்று ஒருநேரத்தில் முன்வைக்கப்பட்ட தீர்க்கதரிசி பராக் ஒபாமாவை விட, இந்த வெர்மாண்ட் செனட்டர் அவர்களது நம்பிக்கைகளை எரிச்சலூட்டும் விதமாக மற்றும் குரூரமாக நசுக்கும் போது, நாளை அரசியல் நெஞ்செரிச்சலை உணர்வார்கள்.

ஆளும் பெருநிறுவன-நிதியியல் பிரபுத்துவத்தை பாதுகாக்கும் அவரது தீர்மானத்தில் ட்ரம்ப் மிக பிடிவாதத்துடன் தீவிரமாக இருக்கின்ற அதேவேளையில், சாண்டர்ஸ் இன் "சோசலிசம்", எந்தவித நிஜமான முதலாளித்துவ-எதிர்ப்பு உள்ளடக்கும் இல்லாத ஒரு வனப்புரை என்பதற்கு அதிகமாக ஒன்றும் கிடையாது. பிரச்சாரம் முன்னோக்கி நகர்கையில், அவரது வேலைத்திட்டம் மற்றும் வார்த்தைஜாலங்கள் அதிகரித்தளவில் பழமைவாத குணாம்சத்தை ஏற்று வருகிறது.

அனைத்திற்கும் மேலாக, அவருக்கும் ட்ரம்பிற்கும் இடையே தெளிவான மற்றும் தவறுக்கிடமற்ற கோடுகளை வரைவதற்கு மாறாக, சாண்டார்ஸ், முதலாளித்துவ அமைப்புமுறையை குற்றஞ்சாட்டாமல், பல்வேறு வணிக உடன்படிக்கைகள் "அமெரிக்க வேலைகளை திருடுவதற்கு" சீனா மற்றும் மெக்சிகோவிற்கு உதவுவதாக கூறப்படுவதைக் குற்றஞ்சாட்டி, அவரது சொந்த பிரச்சாரத்தை நச்சுத்தனமான வலதுசாரி வார்த்தைஜால பொருளாதார தேசியவாதத்திற்கு மாற்றி வருகிறார். அத்தகைய வணிக உடன்படிக்கைகள் முதலாளித்துவத்தின் உலகளாவிய நடவடிக்கைகளது தவிர்க்கவியலாத கூறுபாடுகள் என்ற உண்மையை அவர் வெறுமனே உதறித் தள்ளிவிடுகிறார்.

அரசியல் நிலைமை வெடிப்பார்ந்து உள்ளது. தற்போதைய தேர்தல் பிரச்சாரம் மற்றும் 1968 தேர்தலுக்கு இடையே அங்கே திட்டவட்டமான ஒற்றுமைகள் உள்ளன, அப்போது அத்தேர்தல் ஜோர்ஜ் வாலஸ் இன் இனவாத வாய்ஜாலங்களை, மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் மற்றும் ரோபர்ட் கென்னடியின் படுகொலைகளைக் கண்டது, மற்றும் சிகாகோவில் ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டில் பொலிசாரின் பயங்கர ஆட்சி நடந்தது. 1968 பிரச்சாரம் வியட்நாம் போருக்கு எதிரான இயக்கத்தின் அதிகரிப்பு, நாடெங்கிலும் பாரிய நகர்புற மேலெழுச்சிகள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் போர்குணம் மிக்க வேலைநிறுத்தங்கள் ஆகிய நிலைமைகளின் கீழ் நடந்தது.

1968 தேர்தல்களுடனான ஒப்பீடுகள் நிச்சயமாக பொருத்தமாக உள்ளன. இருந்தாலும் அங்கே மற்றொரு அமெரிக்க தேர்தல் பிரச்சாரமும் நினைவிற்கு வருகிறது: அதுவாவது, 1860 தேர்தல், அப்போது அமெரிக்காவிற்குள் பிரிவினைவாத மற்றும் வர்க்க மோதல்கள் உள்நாட்டு போர் எழுவதற்கு முன்னறிவிப்பாக இருந்தன.

2016 ஜனாதிபதி பிரச்சாரத்தைக் குணாம்சப்படுத்துகின்ற அதிகரித்து வரும் வன்முறை மற்றும் சமூக பதட்டமான சூழல், தேர்தலில் யார் ஜெயிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தில்லாமல், அமெரிக்காவில் பாரியளவிலான சமூக மோதலுக்கு ஒரு முன் அடையாளமாகும்.

தற்போதைய சூழ்நிலையைக் குறித்த இந்த புரிதலுடன், அரசியல் மூலோபாயத்தின் அடிப்படையை உருவாக்க வேண்டும்.

ட்ரம்ப் இன் பாசிச-பாணியிலான கூட்டங்களுக்கு எதிரான போராட்டங்களில் எரிந்து கொண்டிருக்கும் கோபம் முற்றிலும் நியாயமானதே. ஆனால் ட்ரம்ப் மற்றும் அவரால் உருவம் கொடுக்கப்படுகின்ற சர்வாதிகாரம் மற்றும் பாசிசவாத போக்கால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் அரசியல் அபாயத்தை, எதிர்த்து மோதுவதால் கையாள முடியாது, அது அவரக்கு தான் சாதகமாகும். இந்த எச்சரிக்கையை ஆழமாக எடுத்துக் கொள்ளுமாறு நாங்கள் எமது வாசகர்களை வலியுறுத்துகிறோம். உண்மையில், ட்ரம்ப் அவரது தனிப்பட்ட நிதியுதவி பெறும் குண்டர்களின் நடவடிக்கைகளை சட்டபூர்வமாக்க மற்றும் விரிவாக்க மற்றும் அரசியல்ரீதியில் அனுதாபமான பொலிஸ் சக்திகளைக் கொண்டு அவர்களது நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க அவர் இத்தகைய சம்பவங்களை வரவேற்கிறார்.

தீவிரமாக வலதிற்கு நகர்ந்திருக்கும் உத்தியோகபூர்வ அமெரிக்க அரசியலை, முதலாளித்துவத்தால் தூண்டிவிடப்பட்ட இனவாத மற்றும் இனக்குழுவாத பிளவுகளைத் தோற்கடிக்கக் கூடிய ஒரு உண்மையான சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் அனைத்து பிரிவுகளுக்கும் அழைப்புவிடும் அரசியல்ரீதியில் சுயாதீனமான ஓர் இயக்கத்தை அபிவிருத்தி செய்வதன் மூலமாக எதிர்க்க வேண்டும். அதிகரித்து வரும் வலதுசாரி அபாயத்திற்கு எதிரான ஓர் உண்மையான போராட்டத்திற்கு, உழைக்கும் மக்களும் இளைஞர்களும் ஜனநாயக கட்சியின் கவசத்திலிருந்து உடைத்துக் கொண்டு, முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக திரும்பிய ஒரு பாரிய சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவது அவசியமாகும்.

தொழிலாள வர்க்கம் அதன் வேலைகள், வாழ்க்கை தரங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும், மற்றும் அதிகரித்து வரும் ஓர் ஏகாதிபத்திய உலக போர் அபாயத்திற்கு எதிராக போராடவும் ஒரு முதலாளித்துவ-எதிர்ப்பு மூலோபாயத்துடன் ஆயுதபாணியாக வேண்டும். இதன் அர்த்தம் என்னவென்றால் சமூகத்தின் மீது பெருஞ்செல்வந்தர்களின் மேலாதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வர, வங்கிகள் மற்றும் பாரிய பெருநிறுவனங்களை ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் பொதுவுடைமையின் அடித்தளத்தில் அமைக்கும் ஒரு நிஜமான சோசலிச வேலைத்திட்டத்திற்காக போராடுவதாகும்.

இதே பிரச்சினைகளைத்தான் ஒவ்வொரு நாட்டின் தொழிலாள வர்க்கமும் முகங்கொடுக்கிறது. தொழிலாளர்களை ஒருவருக்கு எதிராக ஒருவரை பிளவுபடுத்துவதற்காக அதிதீவிர தேசியவாதம் மற்றும் பேரினவாதத்தைத் தூண்டி விட ஆளும் உயரடுக்கின் முயற்சி, ஏகாதிபத்திய போர் மற்றும் சமூக பிற்போக்குத்தனத்தின் தீவிரப்பாட்டுக்கு உரிய நிலைமைகளை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. அது சர்வதேச சோசலிசத்தின் அடித்தளத்தில் அனைத்து நாடுகளின் சகல தொழிலாளர்களையும் ஐக்கியப்படுத்துவதற்கான போராட்டத்தின் மூலமாக எதிர்க்கப்பட வேண்டும்.

இங்குள்ள தீர்க்கமான கேள்வி, தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களிடையே ஒரு புரட்சிகர தலைமையைக் கட்டி எழுப்புவதாகும்.

இது அரசியலில் ஈடுபடுவதற்கும் மற்றும் செயல்படுவதற்கும் உரிய நேரமாகும். ட்ரம்ப் ஓர் அரசியல் அச்சுறுத்தல் என்றும், சர்வாதிகாரம் மற்றும் போர் தடுக்கப்பட வேண்டும் என்றும், முதலாளித்துவத்தை விட சோசலிசம் சிறந்தது என்றும் "கோட்பாட்டுரீதியில்" உடன்பட்டால் மட்டும் போதாது. செயலற்று பார்த்துக்கொண்டிராது! ஓர் ஐக்கிய சோசலிச அரசுகளைக் காண விரும்புபவர்கள் அதற்காக போராட தயாராக வேண்டும். சோசலிச சமத்துவ கட்சியில் இணைந்து அதைக் கட்டியெழுப்புமாறு உலக சோசலிச வலைத் தள (WSWS) வாசகர்களுக்கு நாம் அழைப்பு விடுக்கிறோம்.