ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Protests shrink as police attack fourth day of action against French labour law

பிரெஞ்சு தொழிலாளர் சட்டத்திற்கு எதிரான நான்காம் நாள் நடவடிக்கை : பொலிஸ் தாக்குதல்களும், சிறிய ஆர்ப்பாட்டங்களும்

By Alex Lantier
29 April 2016

சோசலிஸ்ட் கட்சியின் (PS) தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மரியம் எல் கொம்ரியின் தொழிலாளர் சட்ட சீர்திருத்தத்திற்கு எதிராக தொழிற்சங்கங்கள், உயர்நிலை பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவ சங்கங்கள் அழைத்திருந்த நான்காம் நாள் நடவடிக்கையில் நேற்று பிரான்ஸ் எங்கிலும் ஆயிரக் கணக்கானவர்கள் அணிவகுத்துச் சென்றனர். இரயில்வே துறை, விமானத்துறை தொழிலாளர்கள் மற்றும் துறைமுகத் தொழிலாளர்கள் வேலையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். எல் கொம்ரி சட்டத்திற்கு எதிரான ஒவ்வொரு போராட்டத்திலும் இளைஞர்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய கலகம் ஒடுக்கும் பொலிஸ், மீண்டும் நாடெங்கிலுமான போராட்டக்காரர்களுடன் மோதலில் ஈடுபட்டது.

எத்தனை பேர் அணிவகுத்து சென்றனர் என்பதன் மீதான மதிப்பீடுகள் பரவலாக மாறுபடுகின்றன, அதிகாரிகளது தகவல்படி 170,000 ஆகும் மற்றும் ஸ்ராலினிச அமைப்பான தொழிலாளர்களின் பொது கூட்டமைப்பின் (CGT) கருத்துப்படி 500,000 ஆகும். இது மார்ச் 31 இல் போராடிய 1 மில்லியனுக்கும் அதிகமானவர்களை விட பங்களிப்பு அதிகமாக குறைந்திருந்ததை தெளிவுபடுத்துகிறது.

எல் கொம்ரி சட்டத்திற்கு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே பரந்த எதிர்ப்பு ஏதோவிதத்தில் குறைந்து வருவதற்கான பிரதிபலிப்பல்ல இது. பொதுவாக ஆளும் வர்க்கத்தின் தேவைகளுக்கு ஏற்ப இருக்கும் கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் கூட, அச்சட்டம் பரவலாக வெறுக்கப்படுவதை ஒப்புக் கொள்கின்றன. அச்சட்டம் வேலை நாளை நீடித்து, இளம் தொழிலாளர்களின் வேலை பாதுகாப்புக்கு குழிபறிக்கிறது, மற்றும் தொழிலாளர் சட்ட விதிமுறைகளை கீழறுத்து ஒப்பந்தங்களைப் பேரம்பேச தொழிற்சங்கங்களை அனுமதிக்கிறது. ஆனால், இப்போராட்டம் ஒரு முக்கிய தடையை எதிர்கொள்கிறது: அதாவது, போராட்டங்களில் அணிவகுக்கும் பாரிய பெருந்திரளான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடம், சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தை எதிர்க்கும் ஒரு போராட்டத்திற்கான நம்பகமான மூலோபாய கிடையாது.

நேற்றைய பேரணிகளில் பல இளைஞர்கள் WSWS செய்தியாளர்களிடம், உண்மையில் சோசலிஸ்ட் கட்சியை எப்படி எதிர்ப்பதென கேள்வி எழுப்பினர். இது ஓர் அடிப்படை அரசியல் யதார்த்தத்தை பிரதிபலிக்கிறது: போராட்டங்களை கட்டுப்பாட்டில் கொண்டுள்ள அமைப்புகள் சோசலிஸ்ட் கட்சியின் கூட்டாளிகளாவர் மற்றும் இவை எல் கொம்ரி சட்டத்திற்கு எதிரான எந்தவித நிஜமான போராட்டத்தையும் நடத்தி இருக்கவில்லை. அவை சோசலிஸ்ட் கட்சியை பாதுகாக்கின்றன. 2012 இல், CGT இன் அரசியல் கூட்டாளியான இடது முன்னணி, புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சியுடன் (NPA) சேர்ந்து, ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டுக்கு வாக்களிக்குமாறு அழைப்புவிடுத்தது. இவை அனைத்தும் தசாப்தங்களாக சோசலிஸ்ட் கட்சியுடன் இணைந்து பல்வேறு கூட்டணிகளில் இயங்கி உள்ளன.

அவை போராட்டங்கள் மீதான தொடர்ச்சியான பொலிஸ் தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாளர்களை ஏதேனும் வகையில் பரந்தளவில் அணிதிரட்டுவதற்கு அழைப்புவிடுக்கவில்லை. இத்தகைய போராட்டங்கள், மக்கள் செல்வாக்கிழந்த மற்றும் முற்றிலும் பலவீனமான ஜனாதிபதி ஹோலாண்ட் இன் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தை கீழிறக்கும் என்று அவை அஞ்சுகின்றன. அவர்கள் அழைப்புவிடுத்த ஒன்றுக்கும் உதவாத அடையாள போராட்டங்களை தொழிலாளர்கள் பெரிதும் புறக்கணித்துள்ளனர். இத்தகைய அடையாள போராட்டங்கள், அவசரகால நெருக்கடி நிலை என்ற சாக்கின் கீழ், மூர்க்கமான ஒடுக்குமுறையுடன் அதன் சட்டத்தை நிறைவேற்ற முயற்சிப்பதற்கு சோசலிஸ்ட் கட்சியை அனுமதிக்கிறது: அது தொழிலாளர்களை கலைக்க தொழிற்சங்கங்களை சார்ந்துள்ளது, அவ்விதத்தில் மாணவர் போராட்டங்களை தனிமைப்படுத்தி, அடுத்தடுத்து ஒவ்வொரு நடவடிக்கை நாளிலும் இளைஞர்கள் மீது பொலிஸ் மூர்க்கமான தாக்குதல்களை நடத்தியது.

இன்று, ஐரோப்பிய ஒன்றியத்தால் ஐரோப்பா எங்கிலும் சமூக செலவினக் குறைப்பு நிகழ்ச்சிநிரலை பலவந்தமாக திணிக்க மற்றும் மக்களின் 70 சதவீதத்தினருக்கும் அதிகமானவர்களின் எதிர்ப்பை நசுக்க சோசலிஸ்ட் கட்சி தீர்மானகரமாக இருக்கிறது என்பது தெளிவான போதும் கூட, இத்தகைய அமைப்புகள் இத்தகைய அமைப்புகள் இன்னும் அதிகமான ஒன்றுக்கும் உதவாத முறையீடுகளைத்தான் சோசலிஸ்ட் கட்சியிடம் முறையிட்டு வருகின்றன. அரசாங்கம் எல் கொம்ரி சட்டத்தை மே 3 இல் தேசிய நாடாளுமன்றத்தில் முன்வைக்க தயாரிப்பு செய்து வருகின்ற நிலையில், தொழிற்சங்கங்களோ வேலையிடங்களில் வேலைநிறுத்த கூட்டங்களை நடத்துவதானது, "சமூக முன்னேற்றத்தை உருவாக்குவதற்கு புதிய கூட்டு உத்தரவாதங்களைப் பெற" தொழிலாளர்களை அனுமதிக்கும் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

PS உடன் கூட்டு சேர்ந்துள்ள ஊழல் அதிகாரத்துவங்களுக்கு அரசியல் மூடிமறைப்பை வழங்க வடிவமைக்கப்பட்ட, இத்தகைய பொய்யான மற்றும் வெற்று வாக்குறுதிகள், ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் பெற்று வரும் அனுபவங்களுக்கு நேர்எதிராக செல்கின்றன. PS மற்றும் தேசிய சட்டமன்றத்தில் உள்ள ஏனைய கட்சிகள், கூலிகள் மற்றும் வேலையிட நிலைமைகளை குறைக்க தீர்மானகரமாக உள்ளன மற்றும் அதை செய்து முடிக்காமல் அவை எங்கும் நிற்கப் போவதில்லை.

பிரான்சிலும் சரி ஐரோப்பா எங்கிலும் சரி —இதுவே பிரான்சில் சோசலிஸ்ட் கட்சி மற்றும் அதன் போலி-இடது கூட்டாளிகளுக்கு எதிராக—சோசலிசத்திற்கான ஒரு பகிரங்க அரசியல் போராட்டத்தில் பெருந்திரளாக மக்களை அணித்திரட்டுவது மட்டுமே, தொழிலாள வர்க்கம் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரே வழியாகும். பிரான்சில் உள்ள தொழிலாளர்களும் இளைஞர்களும் முகங்கொடுக்கும் மத்திய பிரச்சினையே, தற்போது, அத்தகையவொரு போராட்டத்தை எந்த அரசியல் கட்சியும் ஆதரிக்கவில்லை என்பதுதான். ஒவ்வொரு பெயரளவிற்கான "இடது" கட்சியும், ஒரு பெருவணிக கட்சியான சோசலிஸ்ட் கட்சியை சோசலிசத்திற்கான மற்றும் தொழிலாளர் இயக்கத்திற்கான ஒரு பிரதிநிதியாக தசாப்தகாலமாக எடுத்துக்காட்டி வருகின்றன.

இதன் விளைவாக, இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய பிரான்சின் மிகவும் செல்வாக்கிழந்த ஜனாதிபதியாக ஹோலாண்ட் இருந்தாலும் கூட, தொழிலாளர்களது பரந்த அடுக்குகள் போராட்டத்திற்குள் நுழையவில்லை, மற்றும் ஆட்டக்காரர்களின் ஒரு சிறிய அடுக்கு, கலகம் ஒடுக்கும் பொலிஸின் கும்பல்களுக்கு எதிராக எதையும் செய்யாமல், பலனில்லாத வீதிப் போராட்டங்களுக்குள் இறங்க நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.

பாரீஸ், லு ஆவ்ர், லியோன், ரென், நாந்தேர் மற்றும் மார்சைய் உள்ளடங்கிய போராட்டங்களில் மற்றும் அவற்றை சுற்றியும் மோதல்கள் வெடித்தன. மார்சையில் பொலிஸ் இளம் போராட்டக்காரர்களை தாக்கியதுடன், செயிண்ட் சார்லஸ் ரயில் நிலையத்தில் பலரை கைது செய்தது, அதேவேளையில் நாந்தேரில் பொலிஸிற்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையிலான சண்டையின் போது ஒரு கார் கொளுத்தப்பட்டது.

பல தொழிற்சங்க நிர்வாக பிரதிநிதிகளும், சோசலிஸ்ட் கட்சி மற்றும் இடது முன்னணி இளைஞர் அமைப்புகளின் அங்கத்தவர்களும், பல்வேறு உள்ளூர் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இருந்து மாணவர் குழுக்களும் கலந்து கொண்ட மத்திய பாரீஸின் பிரதான போராட்டத்தில் உலக சோசலிச வலைத் தள செய்தியாளர்களும் கலந்து கொண்டனர். அவர்கள் எல் கொம்ரி சட்டத்திற்கு எதிராக பாரீஸ் ஆர்ப்பாட்டங்களில் பங்கெடுத்திருந்த, பாரீஸின் 13 வது மாவட்ட மாணவி ஒருவருடன் உரையாற்றினர்.

அவர் எல் கொம்ரி சட்டத்தைப் பலமாக எதிர்த்தார். “நாங்கள் ஏற்கனவே போதுமானளவிற்கு படுமோசமாக உள்ளோம், நாங்கள் இன்னும் அதிகமாக வேலை பாதுகாப்பை இழந்தோம் என்றால், அது நியாயமாக இருக்காது. இளைஞர் எதிர்காலத்திற்கு அதில் எதுவும் நல்ல விடயம் இல்லை, இளைஞர்களுக்கு மட்டுமல்ல, அனைத்துத்துறை பணியாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் கூடத் தான்,” என்றார்.

அவர் PS ஆல் நிறைவேற்றப்பட்ட அவசரகால நெருக்கடி நிலையைத் தாக்கினார். “வீதிகளில் இறங்கி அணிவகுத்து செல்லும் மக்களை தடுப்பதற்கு அதுவொரு நல்ல சாக்குபோக்கு … ஆனாலும் அதில் நிறைய பேர் கலந்து கொண்டிருந்தனர், இது நல்ல விடயமாகும், அவர்களது திட்டங்கள் சிறப்பாக வேலை செய்வதாக இல்லை,” என்றவர் தெரிவித்தார்.

எல் கொம்ரி சட்டத்தை எதிர்த்து போராடும் மாணவர்களைப் பிளவுபடுத்தும் ஒரு நடவடிக்கையாக பிரெஞ்சு பல்கலைக்கழகங்களில் இஸ்லாமிய முகத்திரையை தடுப்பதற்கு சோசலிஸ்ட் அரசாங்கம் திடீரென கொண்டு வந்த ஒரு பிற்போக்குத்தனமான முன்மொழிவையும் அவர் விமர்சித்தார். அவர் கூறுகையில், “இளைஞர்களும் அனைவரும் அரசாங்க நடவடிக்கை ஒன்றை எதிர்த்து வீதிகளில் வந்திருக்கையில், முற்றிலும் அதற்கு உடன்நிகழ்வாக, இப்போது அவர்கள் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய முகத்திரையைத் தடுக்கும் பிரச்சினையைக் கொண்டு வருகிறார்கள் … இதில் எனக்கு உடன்பாடு இல்லை,” என்றார்.

அவர் சிரியா போரையும் விமர்சித்தார்: “இத்தகைய நாடுகளில் என்ன நடந்து வருகிறதோ, அது கடாபி பதவியிலிருந்து நீக்கப்பட்டது ஆகட்டும் அல்லது அவரது மரணமாகட்டும், அதைவிட மேற்கத்திய கொள்கை ஒன்றுக்கும் இலாயக்கில்லை. இன்று பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி அல்லது வேறெங்கிருந்தும் சிரியாவற்கு அல்லது மத்திய கிழக்கிற்கு செல்லும் இளைஞர்கள், காரணமில்லாமல் செல்லவில்லை. அவர்கள் அங்கே போக ஒரு விதத்தில் நிர்பந்திக்கட்டிருக்கலாம் மற்றும் இங்கே அவர்களுக்கு எந்த எதிர்காலமும் இல்லை என்பதில் அவர்கள் தெளிவாகி இருக்கலாம் … [பயங்கரவாத] தாக்குதல்களில் கொல்லப்பட்ட, பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் மற்றும் அந்நாடுகளுக்குச் செல்வதைத் தவிர வேறு வழியில்லையென காணும் இளைஞர்களுக்காக நான் துயரப்படுகிறேன். அனைத்திற்கும் பின்னால், அங்கே பல்வேறு திரித்தல்கள் நிலவுகின்றன,” என்றார்.

உலக சோசலிச வலைத் தள செய்தியாளர்கள் மார்சைய்யில் இளைஞர் பேரணி ஒன்றில் கலந்து கொண்டு பல மாணவர்களுடன் உரையாற்றினர். ஒரு உயர்நிலை பள்ளி மாணவர் WSWS க்கு தெரிவிக்கையில், அவர் எல் கொம்ரி சட்டத்தை எதிர்ப்பதாகவும் ஏனென்றால் அது "எங்களின் எதிர்காலத்தை கட்டுப்படுத்துகிறது, ஏனென்றால் வேலை நேரம் அதிகரிக்கப்பட்ட அளவிற்கு, கூலிகள் அதிகரிக்கப்படவில்லை. முந்தைய காலக்கட்டங்களை விட உடல்ரீதியில் வேலை குறைவாகவே தேவைப்பட்டாலும் கூட, அவர்கள் இன்னும் அதிகமாக வேலை செய்ய வைக்கிறார்கள்,” என்றார்.

அவர் பொலிஸ் வன்முறையை, அதுவும் குறிப்பாக மார்சைய்யில் சம்பவத்தையும் கூர்மையாக எதிர்த்தார், அங்கே பொலிஸ் தொடர்ந்து அவர்களது ஆயத்தப்படுத்தலை தீவிரப்படுத்தி உள்ளதுடன், சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்த இராணுவத்தை அனுப்புவதற்கு சோசலிஸ்ட் கட்சி அழைப்புவிடுத்துள்ளது. அவர் கூறுகையில், “மக்கள் கண் திறக்க வேண்டுமென நான் நினைக்கிறேன். பொலிஸ் வன்முறை ஏற்பட்ட போராட்டங்கள் மாத்திரமல்ல, மார்சைய்யின் சில குறிப்பிட்ட இடங்களில் ஒவ்வொரு நாளும் அதுபோன்ற பிரச்சினைகள் உள்ளன,” என்றார்.

பிரான்சில் எந்த அரசியல் அமைப்பும் சமூக சமத்துவத்தைப் பாதுகாக்கவில்லை என்று வருத்தப்பட்ட அவர், “அனைவருக்கும் சமத்துவம் வேண்டுமென நான் விரும்புகிறேன், ஆனால் அது கற்பனையாக இருக்கிறது, ஏனென்றால் யாருமே அதற்காக அழுத்தமளிக்கவில்லை, குறிப்பாக வேலையிடங்களில். ஆனால் ஒருவருக்கொருவர் நாம் உதவ வேண்டிய ஒரு சமூகத்தில் நாம் இருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன்,” என்றார்.