ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French government seeks to crush strikes against labor law

தொழிலாளர் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை நசுக்குவதற்கு பிரெஞ்சு அரசாங்கம் முனைகிறது

By Alex Lantier
25 May 2016

பிரான்சின் புதிய தொழிலாளர் சட்டத்திற்கு எதிராக எண்ணெய் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் மற்றும் டிரக் ஓட்டுநர்களின் வேலைநிறுத்தங்கள் விரிவடைந்து செல்லும் நிலைக்கு முகம் கொடுக்கின்ற நிலையில், சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம், எண்ணெய் நிறுவல் நிலைய ஆக்கிரமிப்புப் போராட்டங்களை நசுக்குவதற்கும் பெருகிச் செல்லும் எதிர்ப்பு இயக்கத்தை உடைப்பதற்கும் நேற்று பாதுகாப்புப் படைகளை அனுப்பியது.

வாரம் தொடங்கியது முதலாகவே, பிரான்சின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் அத்தனையும் வேலைநிறுத்தத்தில் இறங்கியிருந்தன அல்லது செயல்பாடுகளை நிறுத்தியிருந்தன, டிரக் ஓட்டுநர்கள் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்குத் தடை ஏற்படுத்துவதிலும் பெட்ரோல் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகங்களை நிறுத்துவதிலும் கைகோர்த்தனர். தொழிலாளர்களின் இன்னும் பரந்த அடுக்குகள் போராட்டத்திற்குள் நுழைந்து கொண்டிருக்கின்றன. துறைமுக, ரயில்வே, மற்றும் வாகன உற்பத்தித் துறை தொழிலாளர்களில் சிலர் ஏற்கனவே போராட்டத்தில் தான் இருக்கின்றனர், தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த அழைப்புகளை விடுத்திருப்பதோடு பயணிகள் போக்குவரத்து விமான நிலையங்களில் ஜூன் 3 முதல் ஜூன் 5 வரையான வேலைநிறுத்தங்களுக்கும் அத்துடன் பாரிஸ் பெரும் போக்குவரத்து அமைப்புக்கு எதிராக ஜூன் 2 தொடங்கவிருக்கும் காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கும் சட்டபூர்வ அங்கீகாரத்தையும் கோரியுள்ளன.

நேற்று அதிகாலையில், மார்சைய் அருகே Fos-sur-Mer இல் எண்ணெய் நிறுவல் நிலையங்களை முற்றுகையிட்ட CGT தொழிற்சங்கத்தின் சுமார் 200 உறுப்பினர்கள் மீது பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். “அதிகாலை 4.30 மணிக்கு வந்துசேர்ந்த துணை-இராணுவப் போலிசார் தண்ணீர் பீரங்கிகளையும் கண்ணீர் புகையையும் பயன்படுத்தினர்” என்று ஸ்ராலினிச கட்டுப்பாட்டிலான CGT இன் பிராந்தியச் செயலரான ஒலிவியே மத்தேயு கூறினார்.

போலிஸ் தாக்குதல்களால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த ஏராளமானனோருக்கு காயங்கள் ஏற்பட்டன என்றும், “முற்றுகையை அகற்றுவதற்காக கொத்துக் கொத்தாக ரப்பர் புல்லட்டுகள் சுடப்பட்டு ஏறக்குறைய போர்க்களம் போன்று காட்சியளித்த நிலையினை” அவர்கள் கண்டனம் செய்தனர் என்றும் CGT ஆதாரங்கள் தெரிவித்தன.

“போலிஸ் தாக்குதல்கள் நம்பமுடியாத அளவுக்கு வன்முறையானவையாக இருந்தன” என்று CGT-பெட்ரோலியம் பிரிவின் தேசியச் செயலரான இமானுவேல் லேப்பின் தெரிவித்தார். இந்த ஒடுக்குமுறைக்கு, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் காட்டிய ”கணிசமான எதிர்ப்பினால்” ஏழு போலிசார் இலேசான காயமடைந்தனர் என்று கூறி அதனை போலிஸ் அதிகாரிகள் விமர்சனம் செய்தனர்.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதல் காலை சுமார் 6 மணி அளவில் முடிவுக்கு வந்தபோது, டாங்கர் டிரக்குகள் போலிஸ் பாதுகாப்புடன் உள்ளே நுழைந்தன. மார்சையில் இருக்கும் பிரான்சின் முக்கியமான எண்ணெய் துறைமுகத்தின் அருகே அமைந்திருக்கக் கூடிய இந்த Fos-sur-Mer ஆலையானது பிரான்சில் மட்டுமல்லாது ஐரோப்பா முழுமையாக ஒரு முக்கியமான பாத்திரம் வகிக்கிறது. இது சுவிட்சர்லாந்தில் இருக்கும் செர்சியர் மற்றும் ஜேர்மனியில் இருக்கும் கார்ல்ஸ்ருக ஆகிய இடங்களில் இருக்கும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு பெட்ரோலியம் கொண்டு செல்லும் பைப்லைன்களுக்கு எண்ணெய் விநியோகிக்கிறது.

ஆர்ப்ப்பாட்டங்களை முரட்டுத்தனமாய் ஒடுக்கியபோதிலும், தொழிலாளர்களின் அணிதிரள்வு விரிந்து செல்வதானது PS அரசாங்கத்தை திகைக்க வைத்திருப்பதோடு ஸ்திரம்குலைத்திருக்கிறது. பிரான்சின் 12,000 எண்ணெய் நிலையங்கள் “முற்றிலும் காலியாகின அல்லது ஒன்று அல்லது இரண்டு தயாரிப்புப் பொருட்களின் பற்றாக்குறையை சந்தித்தன” என்று போக்குவரத்து அமைச்சரான அலன் விடாலிஸ் நேற்று தெரிவித்தார்.

பிரெஞ்சு அரசியல்சட்டத்தில் பொறிக்கப்பட்டு அளிக்கப்பட்டிருக்கக் கூடிய வேலைநிறுத்தத்திற்கான உரிமையை கழுத்துநெரிக்கும் பொருட்டு, பிரான்ஸ் எங்கிலும் வேலைநிறுத்தங்களையும் முற்றுகைகளையும் நசுக்குவதற்கு PS ஆத்திரமூட்டுகின்ற வகையில் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. திங்களன்று பிரதமர் மானுவல் வால்ஸ் கூறினார்: “சூழ்நிலை முழுமையாக எங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது. முற்றுகை செய்யப்பட்டுள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எண்ணெய் கிடங்குகள் இயல்புநிலைக்குக் கொண்டுவரப்படுகின்றன அல்லது வரவிருக்கும் மணிநேரங்களில் அல்லது நாட்களில் இயல்புநிலைக்குக் கொண்டுவரப்படும்.”

நேற்று, ஜெருசலமுக்கான ஒரு உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, வால்ஸ், எரிபொருள் பற்றாக்குறையால் அச்சுறுத்தப்படுகின்ற ஆட்டோ ஓட்டுநர்களைக் காப்பாற்ற முனைபவராகக் காட்டிக் கொள்ள முயற்சித்தார். “பிரெஞ்சு மக்கள் பற்றாக்குறைகளை அல்லது முற்றுகைகளை எதிர்கொள்வதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று அவர் அறிவித்தார். மக்கள் பெருவாரியாக எதிர்த்தபோதும் தொழிலாளர் சட்டத்தை PS திணித்தே தீரும் என்பதை அவர் வலியுறுத்தினார். “சட்டம் திரும்ப பெறப்படாது”, “இல்லையென்றால், நம்மால் நாட்டை சீர்திருத்த ஒருபோதும் இயலாது போய்விடும்” என்றார் அவர்.

தொழிலாள வர்க்கம் அல்ல மாறாக PS தான் அடிப்படை ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. வங்கிகளின் உத்தரவுகளுக்கு இணங்க எதேச்சாதிகார பாணியில் அவற்றை அது கிழித்தெறிந்து கொண்டிருக்கிறது. வேலை நேரங்களை அதிகரிக்கின்ற, மேலதிக வேலைநேர ஊதியத்தையும் வேலைப் பாதுகாப்பையும் பலவீனப்படுத்துகின்ற, அத்துடன் தொழிலாளர் சட்டத்தை மீறி ஒப்பந்தங்களைப் பேச்சுவார்த்தை நடத்த தொழிற்சங்கங்களை அனுமதிக்கின்ற இந்த சட்டத்தை பிரெஞ்சு மக்களில் முக்கால்வாசிப் பேர் எதிர்க்கின்றனர். பெரும் மக்கள் வெறுப்பைச் சம்பாதித்ததாலேயே, இந்த சட்டத்தை, தேசிய சட்டமன்றத்தில் ஒரு உத்தியோகபூர்வ வாக்களிப்பு இல்லாமலேயே, அரசியல்சட்டத்தின் பிற்போக்குத்தனமான 49.3 பிரிவின் ஷரத்துகளை பயன்படுத்தி PS திணித்தது.

இந்த சட்டத்திற்கு எதிராய் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் வெவ்வேறு பிரிவுகள் அடுத்து நடத்தக்கூடிய ஆர்ப்பாட்டங்களை தனிமைப்படுத்தி தகர்க்கும் நோக்குடன், தொழிலாள வர்க்கத்திலான இப்போதைய எதிர்ப்பை பலவந்தமாக முறிப்பதற்கு முனைந்து கொண்டிருப்பதையே PS சமிக்கையளித்துக் கொண்டிருக்கிறது. அவ்வாறு செய்வதன் மூலமாக, ஐரோப்பிய ஒன்றியம் எங்கிலும் ஆளும் வர்க்கம் முன்னெடுக்கும் சிக்கன நடவடிக்கை மற்றும் போலிஸ் ஒடுக்குமுறை என்ற திட்டநிரலை PSம் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது. ஒரு தசாப்தத்திற்கு முன்பாக ஜேர்மன் தொழிலாளர்களது ஆர்ப்பாட்டங்களுக்கு முகம்கொடுத்த நிலையில் சமூக ஜனநாயகக் கட்சி திணித்த ஹார்ட்ஸ் சட்டங்கள், பிரான்ஸில் அமல்படுத்தப்படுவது போன்றே PS இன் தொழிலாளர் சட்டம் பெருமளவில் காட்சியளிக்கிறது.

இப்போது, ஐரோப்பிய ஒன்றியம் எங்கிலும் சிக்கன நடவடிக்கைக்கும் வங்கிகளின் சர்வாதிகாரத்திற்குமான எதிர்ப்பு எழுச்சி கண்டுவருகிறது. கிரீஸில் சிரிசா அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான கிரேக்கத் தொழிலாளர்களின் போராட்டங்களும் இதில் அடங்கும்.

துறைமுகங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் போக்குவரத்து அமைப்புகளின் மீதான முற்றுகைகள் ஏற்கனவே பிரெஞ்சுப் பொருளாதாரத்தில் நெருக்கடியான நிலைமைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. மார்செய்க்கு அடுத்தபடியாக பிரான்சின் இரண்டாவது முக்கிய துறைமுகமான Le Havre இல் - பிரான்சின் வட பகுதிக்கும் பாரிஸ் பகுதிக்குமான விநியோகத்திலான பங்களிப்பின் காரணத்தால் இது மூலோபாய முக்கியத்துவம் பெறுகிறது - நடைபெறும் வேலைநிறுத்தங்கள், சரக்கு போக்குவரத்து மற்றும் தடவாளப் போக்குவரத்து நிறுவனங்களையும் அத்துடன் சண்டோவில் இல் இருக்கும் ரெனோல்ட் தொழிற்சாலையையும் இயக்கத்தை நிறுத்தும்படி செய்துள்ளது.

PS க்கு எதிராய் தொழிலாளர்கள் முன்னெடுக்கக் கூடிய ஒரு பரந்தவொரு போராட்டம் குறித்து பெருநிறுவனங்களும் அரசியல் உயரடுக்கினரும் பீதியடைந்துள்ளனர். Le Havre இல் இருக்கும் சரக்கு போக்குவரத்து நிறுவனமான XPLog நிறுவனத்தில் ஒரு மேலாளராக இருக்கின்ற ஒலிவியே ஜோன் பாப்டிஸ்ட், L'Express இடம் பின்வருமாறு கூறினார்: “தேங்கிய வேலைகளை முடித்து விடுவதற்காக வார இறுதியில் 24 மணி நேரமும் நாங்கள் வேலை செய்தோம். வெள்ளிக்கிழமை முற்றுகைகள் அகற்றப்பட்ட போது, நாங்கள் மறுபடியும் வேலையைத் தொடங்கினோம். அப்போதிருந்து நாங்கள் எங்களால் முடிந்த அளவுக்கு மிகச் சிறந்த முறையில் வேலை செய்து வருகிறோம்... மறுபடியும் வேலை பாதிக்கப்பட்டால், அது ஒரு பேரிடராக இருக்கும்.”

“அடிப்படையாக, ஒவ்வொருவருமே ஒருவித பீதியில் தான் இருக்கின்றனர்” என்று Le Havre தொழிற்பேட்டையில் இருக்கும் பெயர் கூறவிரும்பாத ஒரு மேலாளர் தெரிவித்தார்.

தொழிலாளர்களிடம் இருந்து எதிர்ப்பு பெருகுவதற்கு முகம் கொடுக்கும் நிலையில், தற்காலிகமாகவேனும் தொழிலாளர் சட்டத்தைக் கைவிடுவதற்கு PS நிர்ப்பந்திக்கப்படலாம் என்றும் கூட வலது-சாரி அரசியல்வாதிகள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். சட்டமன்றத்தில் UDI (ஜனநாயகவாதிகள் மற்றும் சுயேச்சைகள் ஒன்றியம்) இன் நாடாளுமன்றக் குழுத் தலைவராக இருக்கின்ற பிலிப் விஜியே கூறினார்: “அரசாங்கம் அதன் சொந்த தனிமைப்படலை ஆழப்படுத்தியிருக்கிறது. இந்த சட்டத்தை திரும்பப் பெறுவதைத் தவிர்த்து அவர்களுக்கு வேறு எந்தத் தெரிவும் இருக்காது.”

தொழிலாளர் சட்டம் திரும்பப் பெறப்படாது என்ற PS இன் வாக்குறுதிகளை நிராகரித்த வலது-சாரி குடியரசுக் கட்சி (LR) யின் கிறிஸ்டியான் ஜாகோப் கூறுகையில், “ஒன்றைக் கைவிடுகிறவரை ஒருவர் சொல்கிற வழக்கமான ஒன்று தான் இது” என்றார்.

2006 இல் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பாரிய போராட்டங்களுக்கு முகம் கொடுத்த நிலையில் முதல் வேலை ஒப்பந்த (CPE) பிரகடனப்படுத்தலை நிறுத்தி வைக்க வலது-சாரி ஜனாதிபதியான ஜாக் சிராக் எடுத்த முடிவை மனதில் கொண்டு ஜாகோப், “அது குறித்து எங்களுக்கும் கொஞ்சம் தெரியும்” என்றார்.

தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் இருந்தும் இடது முன்னணி மற்றும் புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி உள்ளிட்ட அவற்றின் அரசியல் கூட்டாளிகளில் இருந்தும் சுயாதீனப்பட்ட வகையில் ஒழுங்கமைப்படுகின்ற, ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் ஒரு நனவான சர்வதேசிய போராட்டமாக மட்டுமே தொழிலாளர் சட்டத்திற்கும் ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைக்கும் எதிரான ஒரு திறம்பட்ட போராட்டமானது நடத்தப்பட முடியும். CGT இன் தீவிரப்பட்ட திருப்பமாக இப்போது சொல்லப்பட்டு வருகின்ற ஒன்று - CGT இன் அடுக்குகள் PSக்கு எதிரான வேலைநிறுத்த நடவடிக்கைக்கு இப்போது பகிரங்கமாக அழைப்பு விடுத்து வருகின்றன - ஒரு அரசியல் சிக்குப்பொறியாகவும் சோசலிஸ்ட் கட்சியின் கொள்கைகளை எதிர்த்துப் போராட முனைகின்ற தொழிலாளர்களுக்கான முட்டுச்சந்தாகவுமே நிரூபணமாகும்.

பகுதியாக, போட்டித் தொழிற்சங்கங்களுக்கு எதிரான CGT இன் நிலையை மேம்படுத்திக் கொள்வதற்காகவும், எல்லாவற்றுக்கும் மேல் ஒட்டுமொத்த அரசியல் அமைப்புக்கும் எதிரான தொழிலாள வர்க்கத்தின் ஒரு கிளர்ச்சியை தவிர்த்து தொழிலாளர்களை ஒரு தேசியப் போராட்டத்தின் தளைக்குள்ளாக அடைத்து வைப்பதற்குமான நோக்கத்துடன், தொழிலாளர்களிடையே தன்னியல்பாக எழுகின்ற கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதற்கு CGT இன் தலைவரான பிலிப் மார்ட்டினேஸ் அத்தொழிற்சங்கத்தை நெருக்கி வருகிறார்.

அவரது மூலோபாயத்தை Le Monde நேற்று பின்வருமாறு ஆய்வு செய்தது: “ஒரு பொது வேலைநிறுத்தத்திற்காய் அழைக்காமல், ஒரு புதுப்பிக்கத்தக்க வேலைநிறுத்த நடவடிக்கைக்காய் அவர் அழைக்கிறார். இடைவிடாத நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிலையிலும், அதன் பாரம்பரியமான ஆதரவுக் கோட்டைகளில் பலவீனப்பட்டிருக்கும் நிலையிலும், பிரான்சின் மிகப்பெரும் தொழிற்சங்கம் என்ற அந்தஸ்தை 2017 இல் (PS-ஆதரவு) பிரெஞ்சு ஜனநாயக தொழிலாளர் கூட்டமைப்பிடம் (CFDT) இழக்கும் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்ற நிலையிலும், CGT ஆனது மிகப்பெரும் பணயங்களைக் கொண்டு ஆடிக் கொண்டிருக்கிறது.”

தொழிலாள வர்க்கம் எந்த ஆளும் வர்க்கத்திற்கும் அரசியல் ஸ்தாபகத்திற்கும் எதிராய் போராட்டத்தில் அணிதிரண்டு கொண்டிருக்கிறதோ அவற்றின் நீண்டகால அரசியல் கருவிகளாக இருந்து வருபவை தான் இந்த தொழிற்சங்க அதிகாரத்துவங்கள். 2012 இல் PS அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டது முதலான நான்கு ஆண்டுகளில், தொழிலாளர் சட்டத்திற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் உள்ளிட்ட அரசாங்கத்தின் மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளுக்கு அவை எந்த எதிர்ப்பையும் ஒழுங்கமைக்கவில்லை.

தங்களின் நிதிநிலைகளின் 95 சதவீதத்திற்கு பெருநிறுவன மற்றும் அரசு நிதியாதாரத்தைச் சார்ந்திருக்கும் இவை, தொழிலாளர் அமைப்புகளாக இல்லை, மாறாக நிதிப் பிரபுத்துவத்தால் மேலாதிக்கம் செலுத்தப்படுகின்ற வெற்றுக் கூடுகளாகவே இருக்கின்றன. PSக்கான நீண்டகால எதிர்ப்பிற்குத் தலைமை கொடுப்பதற்கான திறனற்றதாக மட்டுமல்ல, PSக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் எதிராய் தொழிலாள வர்க்கத்தில் இப்போது எழுந்து வருகின்ற வெடிப்பான எதிர்ப்புக்கு முற்றுமுதல் குரோதம் கொண்டவையாகவும் அவை நிரூபணமாகும்.