ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Germany: How the pseudo-left justify the Left Party’s shift to the right

ஜேர்மனி: இடது கட்சியின் வலதை நோக்கிய திருப்பத்தை போலி-இடது எவ்வாறு நியாயப்படுத்துகிறது

By Johannes Stern and Peter Schwarz
18 May 2016

தீவிர வலது ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சியினது (AfD) வளர்ச்சிக்கும் மற்றும் மார்ச் மாத மாநில தேர்தல்களில் இடது கட்சியின் சொந்த தோல்விகளுக்கும், கூடுதலாக வலதிற்கு நகர்ந்ததன் மூலமாக இடது கட்சி தனது பிரதிபலிப்பை காட்டியுள்ளது. இடது கட்சியின் தலைவர்களான சாரா வாகன்கினெக்ட் மற்றும் ஒஸ்கார் லாபொன்டைன் இனை சுற்றியுள்ள ஒரு கன்னை AfD இன் வெளிநாட்டவர்-விரோத பிரச்சாரத்தை ஏற்றுள்ள நிலையில், கிரிகோர் கீசி மற்றும் துணை-தலைவர் கத்ஜா கிப்பிங் போன்ற ஏனையவர்கள், பழமைவாத கிறிஸ்துவ ஜனநாயக கூட்டணி (CDU) உட்பட பரந்த ஆளும் கூட்டணிகளிடம் முறையிடுகின்றனர்.

இவ்விதத்தில், தீவிர வலதின் வளர்ச்சிக்குப் பொறுப்பான அதே அரசியல் போக்கை இடது கட்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது. தீவிர வலதின் அதிகரித்து வரும் செல்வாக்கானது, இடது உட்பட சகல ஸ்தாபக கட்சிகளது வலது நோக்கிய திருப்பத்தின் விளைவாகும். மத்திய அரசால் தஞ்சம் கோருவதற்கான உரிமை மறுக்கப்பட்டமை, சக மாநில அரசாங்கங்களாலும் அகதிகளை கடுமையான வெளியேற்றும் கொள்கை அதிகரித்தளவில் நடைமுறைப்படுத்தப்பட்டமை, மற்றும் ஊடகங்களின் சர்வசாதாரணமாக இஸ்லாமிய-விரோத பிரச்சாரம் ஆகியவை AfD க்கு இலவச தேர்தல் விளம்பரங்களாக சேவையாற்றுகின்றன. அதேவேளையில், சமூக நல வெட்டுக்கள், வேலைநீக்கங்கள் மற்றும் ஏனைய சிக்கன நடவடிக்கைகளது திட்டங்களைச் சுற்றி சகல ஸ்தாபக கட்சிகளும் ஒருங்கிணைந்து வருவது, AfD தன்னைத்தானே அரசியல் ஸ்தாபகத்திற்கான ஒரு எதிர்ப்பாக தன்னை முன்னிறுத்திக் காட்டுவதற்கு உதவுகிறது.

AfD இன் வளர்ச்சிக்குக் கூடுதலாக வலதிற்கு மாறுவதன் மூலமாக இடது கட்சி விடையிறுப்பதானது, அக்கட்சியின் முதலாளித்துவ வர்க்க தன்மையிலிருந்து எழுகிறது என்பது தான் உண்மை. அதன் பெயர் மற்றும் அவ்வபோதைய தீவிர வாய்சவுடால்களுக்குப் பொருத்தமின்றி, அது முதலாளித்துவ அமைப்புமுறையின் அதிகாரத்தையும் மற்றும் சொத்துறவுகளையும் தயக்கமின்றி பாதுகாக்கிறது. அது பெரிதும் உடன்பட்டுள்ள AfD இன் வலதுசாரி வேலைத்திட்டத்தைப் பற்றி கவனத்திற்கெடுப்பதைவிட, வர்க்க போராட்டத்தைத் தணிப்பதற்கும் மற்றும் முதலாளித்துவ ஆட்சிக்கு முட்டுக்கொடுப்பதற்கும் கடந்தகாலத்தில் சேவையாற்றிய இயங்குமுறைகளின் உடைவைக் குறித்து அது கூடிய கவலையை கொண்டுள்ளது.

மார்ச் மாத மாநில தேர்தல்களில், AfD இன் ஆதரவு மட்டும் அதிகரிக்கவில்லை, மாறாக தேர்தலில் சமூக ஜனநாயக கட்சியினர் (SPD) தோல்வி அடைந்தார்கள். பாடன்-வூட்டம்பேர்க் மற்றும் சாக்சோனி-அன்ஹால்ட் ஆகிய இரண்டு மாநிலங்களில், சமூக ஜனநாயகவாதிகள் 10 சதவீத வாக்குகளைக் பெற்றுக்கொள்வதற்கே போராடி AfD இனைவிட குறைந்த வாக்குக்களை பெற்றனர். ஜேர்மன் குடியரசு நிறுவப்பட்டதற்குப் பின்னர், முதலாளித்துவ ஆட்சியை ஸ்திரப்படுத்துவதில் சமூக ஜனநாயக கட்சி ஒரு முக்கிய பாத்திரம் ஆற்றியது. அது வர்க்க போராட்டத்தை நசுக்க தொழிலாளர்கள் மத்தியில் இருந்த அதன் ஆதரவை மற்றும் தொழிற்சங்கங்களுடனான அதன் நெருக்கமான உறவுகளைப் பயன்படுத்தியது. 1999 இல், ஒஸ்கார் லாபொன்டைன் அவரது சமூக ஜனநாயக கட்சி தலைவர் பதவியை இராஜினாமா செய்தார் ஏனென்றால் சான்சிலர் ஹெகார்ட் ஷ்ரோடரின் வலதுசாரி கொள்கைகளின் காரணமாக, தன்னால் அப்பதவியை இனியும் வகிக்க முடியாதென நம்புவதாக கூறினார்.

லாபொன்டைன் பின்னர் இடது கட்சிக்கு தலைமை ஏற்ற நிலையில், அது கூட்டணி அரசாங்கங்களை அமைத்ததன் மூலமாக சமூக ஜனநாயககட்சிக்கான புதிய பெரும்பான்மைகளை உருவாக்கும் நோக்கத்தைப் பின்பற்றியது. பல்வேறு முன்னாள் கிழக்கு ஜேர்மனி மாநிலங்களிலும், துரின்னிங்கியாவில் பசுமை கட்சியினரின் ஆதரவுடனும் இந்த நோக்கத்தில் அது வெற்றி பெற்றிருந்தது. ஆனால் மத்திய அளவில் இந்த சாத்தியக்கூறு வெற்றி பெறவில்லை. சமூக ஜனநாயககட்சி பொறிந்து போயுள்ள நிலையில், பசுமை கட்சியினரின் நிலைநோக்கு கிறிஸ்தவ ஜனநாயக யூனியனை-CDU- நோக்கி திரும்பி வருகிறது. கிறிஸ்தவ ஜனநாயக யூனியனை தழுவியதன் மூலமாக, அல்லது AfD இன் முழக்கங்களை ஏற்றதன் மூலமாக, இதற்கு இடது கட்சி விடையிறுத்துள்ளது.

இந்த வலதுசாரி நிகழ்வுகளுக்கு வரம்பே கிடையாது. இது கிரீஸின் அபிவிருத்திகளில் எடுத்துக்காட்டப்படுகிறது, இங்கே இடது கட்சியினது சகோதரத்துவ கட்சியான சிரிசா கடந்த ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றதும் உடனடியாக AfD மாதிரியான வலதுசாரி குழுவான சுதந்திர கிரேக்கர்கள் கட்சியுடன் (Anel) கூட்டணி அமைத்தது.

அப்போதிருந்து, அலெக்சிஸ் சிப்ராஸினது அரசாங்கம் ஒன்று மாற்றி ஒன்றாக கடுமையான சிக்கன பொதிகளை நிறைவேற்றியதுடன், அகதிகளுக்கு எதிராக எல்லை மற்றும் சிறைக்கூடங்களைக் காவல் காக்கும் பாத்திரத்தை ஏற்றுள்ளது. இதுவுமே கூட இடது கட்சியை சிரிசாவுடன் நெருக்கமாக கூடி ஒத்துழைப்பதில் இருந்து தடுத்துவிட வில்லை.

மார்க்ஸ் 21 மற்றும் சோசலிச மாற்றீடு (SAV)

இடது கட்சியின் நெருக்கடியானது, அக்கட்சிக்குள்ளேயோ அல்லது அதன் சுற்றுவட்டத்திலோ செயல்படும் போலி-இடது குழுக்களை அணிதிரட்டியுள்ளது. அவை வலதிற்கு மாறிய அதன் மாற்றத்தை நியாயப்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் பணியை எடுத்துள்ளன. இடது கட்சியின் அங்கம், Neues Deutschland, இந்த நோக்கத்திற்காகவே அதன் பக்கங்களைத் திறந்து வைத்துள்ளது. “வலது போக்கிற்கு எதிரான மூலோபாயங்கள்" என்று தவறாக வழிநடத்தும் ஓர் ஆவணத்தில், அவர்கள் இடது கட்சியின் துணை தலைவர்கள் கிப்பிங் மற்றும் பெர்ன்ட் றிக்ஷிங்கர், Neues Deutschland இன் பதிப்பாசிரியர் ரொம் ஸ்ரோஷினைடர் மற்றும் ஏனைய முக்கிய கட்சி பிரமுகங்களும் அதே தொனியில் பேசியுள்ளனர்.

இடது கட்சிக்குள் நீண்டகாலமாக இயங்கி வந்துள்ள மார்க்ஸ் 21 மற்றும் சோசலிச மாற்றீடு (SAV) போக்குகளுக்குப் பக்கவாட்டில், உத்தியோகப்பூர்வமாக இடது கட்சிக்கு வெளியே இருந்து கொண்டு, புரட்சிகர சர்வதேச அமைப்பும் (RIO) இந்த சர்ச்சைக்குள் பங்குபற்றி வருகிறது. "வலதிற்கு எதிரான பரந்த கூட்டணி" என்ற பெயரில், இந்த மூன்று குழுக்களும் கடந்த காலத்தில் சமூக ஜனநாயக கட்சி, பசுமை கட்சி, கிறிஸ்துவ ஜனநாயக கூட்டணி (CDU) மற்றும் கிறிஸ்துவ சமூக கூட்டணி (CSU) உடன் கடந்த காலத்தில் இருந்ததை விட நெருக்கமாக இருக்க அறிவுறுத்தி வருகின்றன. அவை தொழிற்சங்கங்கள், தேவாலயங்கள் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறையின் ஏனைய நம்பகமான முண்டுகோல்களையும் அவர்களது "பரந்த கூட்டணிக்குள்" உள்ளடக்க விரும்புகின்றன.

இத்தகைய குழுக்கள் வர்க்க போராட்டத்திற்கும், சோசலிசம் மற்றும் மார்க்சிசத்திற்கும் விரோதமானவை என்பதையும், “தனியந்தஸ்து கொண்ட செல்வாக்கு படைத்த நடுத்தர வர்க்க அடுக்குகளின் சமூகபொருளாதார நலன்களை ஊக்குவிக்க வெகுஜனவாத முழக்கங்களை மற்றும் ஜனநாயக வனப்புரைகளைப்" பிரயோகித்து வருகின்றன என்பதையும் உலக சோசலிச வலைத் தளம் நீண்ட காலமாக எடுத்துக்காட்டி வருகிறது.

தொழிலாள வர்க்கத்தின் மீதான ஈவிரக்கமற்ற தாக்குதல்களுக்குப் பொறுப்பான தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுடனான அவர்களது "பரந்த கூட்டணி" AfD க்கு எதிராக திருப்பி விடப்பட்டதல்ல, மாறாக முதலாளித்துவ அமைப்புமுறையை கேள்விக்கு உட்படுத்தும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கத்திற்கு எதிராக திருப்பிவிடப்பட்டதாகும். சமூக சமத்துவமின்மை, அகதிகள்-விரோத கோபமூட்டல், போருக்கான தயாரிப்பு மற்றும் வலதுசாரிகளுக்கு எதிரான கோபம், சமூக ஜனநாயக கட்சியின், இடது கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் கட்டுப்பாட்டை பலவீனப்படுத்தும் என்றும், ஒரு சோசலிச திசையில் திருப்பிவிடும் என்றும் அவை அஞ்சுகின்றன.

(சர்வதேச சோசலிச போக்குடன் தொடர்புபட்ட) மார்க்ஸ் 21 இயக்கத்தைப் பொறுத்த வரையில், இத்தகையவொரு "பரந்த கூட்டணி" ஒருபோதும் பரந்தளவிற்கு போதுமானதாக இருக்காது. “இனவாதத்திற்கு எதிராக எழுவீர்" என்று அவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை, இடது கட்சியின் தலைமை மட்டுமின்றி, மாறாக பசுமை கட்சி, சமூக ஜனநாயக கட்சியின் உயர்மட்ட அரசியல்வாதிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரிகளும் ஆதரித்தனர். அந்த பிரகடனத்தில் கையெழுத்திட்டவர்களில் சமூக ஜனநாயக கட்சி பொது செயலாளர் காத்ரீனா பார்லி மற்றும் குடும்ப விவகாரத்துறை சமூக ஜனநாயக கட்சி மந்திரி மனுவேலா ஷ்வேசிக் ஆகியோரும் உள்ளடங்குவர்.

மார்க்ஸ் 21 இயக்கம் இதை "ஐக்கிய நடவடிக்கை" என்று விவரிப்பதுடன், “நவதாராளவாத கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் மற்றும் இனவாதத்தை ஊக்குவிப்பதில் அதன் தலைமையினது மத்திய பாத்திரத்தைக் குறிப்பிட்டு இத்தகைய ஐக்கிய நடவடிக்கையில் சமூக ஜனநாயக கட்சி பங்கெடுப்பதை" யாரொருவர் விமர்சித்தாலும் அவரை அது உறுதியாக தாக்குகிறது. “AfD க்கு எதிரான இந்த பரந்த ஐக்கிய நடவடிக்கையை" யாரொருவர் எதிர்த்தாலும், அவர் "ஸ்ராலினிசமயப்பட்ட ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்யியின் 'சமூக பாசிசவாத தத்துவ' பிரதிநிதிகளின் வருந்தத்தக்க சீடராக" மாறும் அபாயத்தை ஏற்கிறார் என்று அவர்கள் எழுதுகிறார்கள்.(1)

மத்திய அரசாங்கத்தின் ஓர் அங்கத்தவராக இருக்கும், அதன் மனிதாபிமானமற்ற அகதிகள் கொள்கைக்கு முழு பொறுப்பாகும் ஒரு சமூக ஜனநாயக கட்சி அரசியல்வாதியுடன் இணைந்து இயங்கி கொண்டே, AfD ஐ எவ்வாறு எதிர்க்க முடியுமென மார்க்ஸ் 21 இயக்கம் விளக்கவில்லை. ஆனால் தெளிவாக இருப்பதென்னவென்றால் SPD ஐ விமர்சனங்களில் இருந்து பாதுகாப்பதும் மற்றும் அது "இனவாதமற்றது" என்ற ஒரு மூடிமறைப்பை வழங்குவதும் அக்குழுவின் நோக்கமாக உள்ளது.

மார்க்ஸ் 21 இயக்கம், ஹோர்ஸ்ட் சீகோவர் மற்றும் கிறிஸ்தவ ஜனநாயக யூனியனை (CSU) கூட அதன் "பரந்த கூட்டணிக்குள்" கொண்டு வர விரும்புகிறது. இது ஏனென்றால், அவர்களது நியாயப்பாட்டின்படி, “ஒரு புதிய பாசிசவாத வலதை உருவாக்குவதற்கு உந்துசக்தியாக மாறக்கூடிய ஒரு பாரிய இனவாத இயக்கத்தை சீகோவர் வீதிகளில் கட்டமைக்கவில்லை.” (2) எதிர்வரும் தேர்தலில் ஜேர்மன் தேசிய கட்சி (NPD) அல்லது வேறு ஏதேனும் நவபாசிசவாத கட்சிக்கு ஆதரவு கிடைத்தால், AfD உடன் ஒரு "பரந்த கூட்டணியை" முடிவு செய்யவும் மார்க்ஸ் 21 தயாரிப்பு செய்யுமோ என்று அனுமானிக்க வேண்டியுள்ளது.

தொழிலாளர்களின் சர்வதேச குழுவின் (CWI) ஜேர்மன் பிரிவான சோசலிச மாற்றீடு உம் "பரந்த கூட்டணிகளை" அறிவுறுத்துகிறது, ஆனால் "ஒருதலைபட்சமான அரசியலுக்கு" எதிராக எச்சரிக்கிறது. அத்தகைய கூட்டணிகள் "சிக்கன கொள்கைகள், சமூக வெட்டுக்கள், வீட்டு பற்றாக்குறை மற்றும் அரசின் இனவாத ஊக்குவிப்பு ஆகியவற்றிற்குப் பொறுப்பானவர்களையும் உள்ளடக்கினால்" அதுவும் விரைவிலேயே மதிப்பிழந்து போகுமே என அவர்கள் அஞ்சுகிறார்கள். (3) இருப்பினும், இத்தகைய கட்சிகளில் இருந்து முக்கியத்துவம் குறைந்த பிரதிநிதிகளை அவர்கள் வரவேற்கிறார்கள். “முதலாளித்துவ வர்க்க கட்சிகளுடன் கூட்டணி மேற்கொள்வதில் எங்களது விமர்சனம், எந்த விதத்திலும் அத்தகைய நடைமுறை கூட்டணிகளில் உள்ள தனிப்பட்ட அங்கத்தவர்களின் பங்களிப்புக்கு எதிரானதோ அல்லது சமூக ஜனநாயக கட்சி அல்லது பசுமை கட்சியினரின் ஒட்டுமொத்த குழுக்களுக்கு எதிரானதோ கிடையாது,” என்று குறிப்பிடுகிறார்கள். (4)

புரட்சிகர சர்வதேச அமைப்பு (Revolutionary Internationalist Organisation - RIO)

லியோன் ட்ரொட்ஸ்கியின் மேற்கோள்களை உள்ளடக்கத்திலிருந்து விலக்கி மேற்கோளிடுவதன் மூலமாக இத்தகைய வலதுசாரி கொள்கையை நியாயப்படுத்துவதே RIO ஏற்றிருக்கும் பணியாகும். “ட்ரொட்ஸ்கி என்ன கூறுவார்?” என்ற தலைப்பில் Neues Deutschland இல் RIO அங்கத்தவர் விளாடெக் ஃப்ளாகின் இன் ஒரு பங்களிப்பு, ட்ரொட்ஸ்கியின் சித்திரத்துடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. "விதிவிலக்கின்றி ஒவ்வொருவரையும் வரவேற்கும், சாத்தியமான அளவிற்குப் பரந்த ஓர் ஐக்கிய முன்னணிக்கான" அழைப்புடனும் அக்கட்டுரை உச்சத்தை எட்டியிருந்தது. (5) இதன் அர்த்தம் ஃப்ளாகினுக்கு நன்றாக தெரியும். அவர் வெளிப்படையாகவே துணை சான்சிலர் மற்றும் சமூக ஜனநாயக கட்சித் தலைவர் சிங்மர் கேப்ரியலை மற்றும் குடும்பநலத்துறை மந்திரி ஷ்வேசிக் ஐ AfD க்கு எதிரான "கூட்டு நடவடிக்கையில்" பங்காளிகளாக பெயரிடுகிறார்.

கேப்ரியல், ஷ்வேசிக் மற்றும் "விதிவிலக்கின்றி ஒவ்வொருவர்" உடனான கூட்டணிகளையும் நியாயப்படுத்துவதற்கு, ட்ரொட்ஸ்கியைப் பயன்படுத்தும் ஃப்ளாகின்னின் முயற்சி, படுமோசமான வகைப்பட்ட ஒரு வரலாற்று பொய்மைப்படுத்தலாகும். ட்ரொட்ஸ்கி தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான புரட்சிகர இயக்கத்தைக் கட்டமைக்கும் பணியில் அவரது ஒட்டுமொத்த வாழ்வையும் அர்ப்பணித்திருந்தார் என்பது அவரது வாழ்க்கை வரலாறை மிக சிறியளவிலேயே கூட அறிந்த எவரொருவருக்கும் தெரியும். தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ வர்க்கத்திற்கும் மற்றும் குட்டி-முதலாளித்துவ போக்குகளுக்கும் அரசியல்ரீதியில் அடிபணிய செய்வதற்கு எதிரான அவரது போராட்டமானது, அவர் ஒரு மாணவராக ரஷ்ய சமூக ஜனநாயகத்தில் இணைந்தது முதலாக அவர் படுகொலை செய்யப்படுவதற்கு சிறிது காலத்திற்கு முன்னர் நான்காம் அகிலத்தை ஸ்தாபிக்கும் வரையில், அவரது ஒட்டுமொத்த அரசியல் நடவடிக்கையினூடாக இருக்கிறது.

மென்ஷ்விக்குகள் மற்றும் சமூக புரட்சியாளர்களின் இடைக்கால அரசாங்கத்திற்கு ட்ரொட்ஸ்கியின் விட்டுக்கொடுப்பற்ற எதிர்ப்பு, 1917 அக்டோபர் புரட்சியில் அவரை லெனினின் நெருக்கமான ஒத்துழைப்பாளராக ஆக்கியது. கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஸ்ராலினிச சீரழிவுக்கு எதிரான போராட்டத்தில் மற்றும் அதன் கொடூரமான விளைவுகளுக்கு எதிரான போராட்டத்தில்—அதாவது, 1926 இல் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியைத் தொழிற்சங்கங்களுக்கு அடிபணிய செய்தமை, 1927 இல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைக் கோமின்டாங்கிற்கு அடிபணிய செய்தமை மற்றும் 1930 களில் பிரெஞ்சு மற்றும் ஸ்பானிஷ் கம்யூனிஸ்ட் கட்சிகளை மக்கள் முன்னணிக்கு அடிபணிய செய்தமை ஆகியவற்றிற்கு எதிரான போராட்டத்தில்—தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனமே அதிமுக்கிய கேள்வியாகவும் இருந்தது.

இதே வரிசையில் தான் ஜேர்மனியில் பாசிசத்தின் வளர்ச்சிக்கு எதிரான ட்ரொட்ஸ்கியின் போராட்டமும் இருந்தது, இதன் மீது ஃப்ளாகின் அவரது வாதத்தை வைக்கிறார். ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் தேல்மான் மற்றும் ஸ்ராலினின் தீவிர இடதுசாரி வாய்சவுடால்களுக்குப் பின்னால் மறைந்து கொள்வது, முனைப்பற்ற ஊழ்வினைவாதம் (fatalism) மற்றும் தோற்கடிப்புவாதம் (defeatism) என்பதை ட்ரொட்ஸ்கி நன்கறிந்திருந்தார். ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி, சமூக ஜனநாயக கட்சியை "சமூக பாசிசவாதிகளாகவும்" மற்றும் "நாஜிகளின் இரட்டை சகோதரர்களாகவும்" கண்டித்து, அது பாசிசத்திற்கு எதிராக ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தையும் ஒன்றுதிரட்டுவதற்கு மறுத்த அதேவேளையில், புருஷ்யாவில் சமூக ஜனநாயக கட்சி அரசாங்கத்திற்கு எதிரான ஒரு நாஜி வெகுஜன வாக்கெடுப்பை ஆதரித்த நிலையில், அவர்கள் தங்களைத்தாங்களே அத்தகைய வெட்கக்கேடான நடவடிக்கைகளுக்குள் குறைத்துக் கொண்டார்கள்.

நாஜிக்கள் வேகமாக வளர்ந்த நிலைமைகளின் கீழ் மற்றும் அவர்கள் அதிகாரத்தைப் கைப்பற்றி தொழிலாளர்களது இயக்கத்தை வன்முறையாக அழிப்பதற்கு ஒருசில மாதங்களே இருந்த நிலைமைகளின் கீழ், ட்ரொட்ஸ்கி, பரந்துபட்ட தொழிலாளர் கட்சிகளாக இருந்த சமூக ஜனநாயக கட்சி மற்றும் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டினது ஐக்கிய முன்னணிக்கு அழைப்புவிடுத்தார். அவர் "கீழிருந்து ஐக்கிய முன்னணிக்கான" கோரிக்கையை நிராகரித்தார், அத்தகைய கூட்டணியை சிலவேளைகளில் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி வார்த்தையளவில் எழுப்பியது, ஏனென்றால் அந்நேரத்தில் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சமூக ஜனநாயக கட்சியை இரண்டும் நூறாயிரக் கணக்கான அங்கத்தவர்களைக் கொண்டிருந்தன மற்றும் தொழிலாளர் வர்க்கத்திலிருந்து அவற்றிற்குப் பின்னால் மில்லியன் கணக்கான வாக்காளர்களைக் கொண்டிருந்தன. “சமூக ஜனநாயக தொழிலாளர்களின் பெருகிய பெரும்பான்மை பாசிசவாதிகளுக்கு எதிராக போராடும், ஆனால்—குறைந்தபட்சம் தற்போதைக்கு—அவற்றின் அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து மட்டுந்தான் இது நடக்கும்,” என்று ட்ரொட்ஸ்கி எழுதினார். “இந்த கட்டத்தைத் தவிர்க்க முடியாது.”(6)

இருப்பினும், ட்ரொட்ஸ்கி, பாதுகாப்பு குறித்த நடைமுறை பிரச்சினைகளுக்கும் மற்றும் பாசிசத்தால் முன்வைக்கப்பட்ட அபாயத்தை எதிர்ப்பதுடன் ஐக்கிய முன்னணியை கட்டுப்படுத்திக்கொள்ள வலியுறுத்தவில்லை. அவர் அரசியல் முழக்கங்களை ஒன்று கலப்பதை மற்றும் அரசியல் விமர்சனங்களைக் கைவிடுவதை எதிர்த்தார். ஐக்கிய முன்னணியானது பாசிசத்தை எதிர்க்கும் நிகழ்வுபோக்கில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதை, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் “பாசிசத்தின் வெற்றியைத் தவிர்க்க முடியாததாக" கருதிய நிலையில் அதன் ஊழ்வினைவாதத்தைக் கடந்து வருவதை, மற்றும் "இறுதி ஆய்வுகளில் கம்யூனிசத்தை விட பாசிசத்தையே விரும்புவார்கள்" என்று ட்ரொட்ஸ்கி யாரைக் குறிப்பிட்டாரோ அந்த தலைவர்களின் செல்வாக்கிலிருந்து சமூக ஜனநாயக தொழிலாளர்கள் உடைத்து கொள்வதை நோக்கமாக கொண்ட ஒரு தந்திரோபாயமாக இருந்தது.

“இந்த முன்னணி இப்போதைக்கு பாசிசத்திற்கு எதிராக திரும்பி இருக்க வேண்டும்,” ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டார். “மேலும் பாசிசத்திற்கு எதிரான நேரடியான போராட்டத்தின் இந்த பொதுவான முன்னணி, ஒட்டுமொத்த பாட்டாளி வர்க்கத்தையும் அரவணைத்து, ஒரு பக்கவாட்டு தாக்குதலில் திருப்பிவிடப்பட்ட, ஆனால் எந்த விதத்திலும் செயல்திறனில் குறையாத, சமூக ஜனநாயகத்திற்கு எதிரான போராட்டத்தில் பயன்படுத்தப்பட வேண்டும்,” என்றார்.

ஓர் ஐக்கிய முன்னணியை ஏற்க ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி மறுத்தமை, இறுதியில் ஹிட்லர் வெற்றிகொள்வதை சாத்தியமாக்கியது.

ட்ரொட்ஸ்கியினது ஐக்கிய முன்னணி கொள்கையின் பெயரில், இடது கட்சியின் இழிவான அரசியல் தந்திரங்களை நியாயப்படுத்தும் ஃப்ளாகினது முயற்சி, அவரை ஒரு சிடுமூஞ்சித்தனமான சூழ்ச்சிக்காரராக அம்பலப்படுத்துகிறது. “வலதுக்கு எதிரான மற்றும் மரபார்ந்த வலதுசாரி சமூக ஜனநாயகத்திற்கு எதிரான மற்றும் புதிய இன்னும் அதிக இடது சமூக ஜனநாயகத்திற்கு எதிரான போராட்டத்தைக் கையாள்வதில் இன்று ஐக்கிய முன்னணி கொள்கையே புரட்சியாளர்களுக்கான சரியான அணுகுமுறை" என்றவர் எழுதுகிறார்.

ட்ரொட்ஸ்கி தொழிலாள வர்க்கத்தை முடமாக்கும் சமூக ஜனநாயக கட்சியின் செல்வாக்கிலிருந்து விடுவிக்க போராடினார், ஆனால் ஃப்ளாகின், சமூக ஜனநாயக கட்சி, இடது கட்சி மற்றும் தொழிற்சங்கங்கள் என இவை தொழிலாளர்கள் மத்தியில் எந்தவித இடது செல்வாக்கு கொண்டிராத நிலையில் மற்றும் அவர்கள் அவற்றை வெறுப்பும் அருவருப்பும் கலந்து பார்க்கின்ற நிலையில் அவற்றின் அதிகார எந்திரங்களைப் பலப்படுத்த முயன்று வருகிறார். “இன்றைய சமூக ஜனநாயக கட்சியை அப்போதைய சமூக ஜனநாயக கட்சி உடன் ஒப்பிட முடியாது" என்பதும் மற்றும் "இடது கட்சி இப்போது ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி உடன் பொதுவானவற்றை மிகக் குறைவாகவே கொண்டிருக்கிறது" என்பதும் அவருக்கு நன்கு தெரியும். இவ்வாறிருந்தாலும், அவர் இத்தகைய வலது சாரி, முதலாளித்துவ வர்க்க கட்சிகளுடன் கூட்டணிகளை நியாயப்படுத்த ட்ரொட்ஸ்கியை தவறாக பாவிக்கின்றார்.

1930 களுக்கு முரண்பட்ட விதத்தில், பாரிய கட்சிகளின் தலைவர்கள் அவர்களை நம்பிய தொழிலாளர்களைக் காட்டிக்கொடுத்துள்ளனர் என்பதல்ல இன்றைய பிரச்சினை. இன்றைய சமூக ஜனநாயக கட்சி மற்றும் இடது கட்சி தொழிலாளர்களின் கட்சிகளே கிடையாது, மாறாக முற்றிலும் முதலாளித்துவ கட்சிகளாகும், இவர்களின் அங்கத்தவர்கள் அதிகரித்தளவில் நடுத்தர வர்க்க மற்றும் முதலாளித்துவ வர்க்கத்திலிருந்து வருகிறார்கள்.

இதுவே தான் தொழிற்சங்கங்களுக்கும் பொருந்துகிறது. இவை தங்களது அங்கத்தவர்களின் குறைந்தபட்சம் நாளாந்த பிரச்சினைகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் சீர்திருத்தவாத அமைப்புகள் என்றளவிற்கு கூட இப்போது கிடையாது, மாறாக பெருநிறுவனங்களின் நலன்களுக்காக வேலைநீக்கங்கள் மற்றும் ஊதிய வெட்டுக்களை ஒழுங்கமைக்கும் மற்றும் சமூக போராட்டங்களை நசுக்கும் தொழிற்சாலை பொலிஸ் படைகளாகி உள்ளன. இத்தகைய வலது சாரி, அதிகாரத்துவ அமைப்புகள் தொழிலாளர்களது இயக்கத்தில் தசாப்தகாலமாக மேலாதிக்கம் செலுத்தியமை, ஓர் அரசியல் வெற்றிடத்தை உருவாக்கி உள்ளது, இது AfD மற்றும் ஏனைய வலதுசாரி கட்சிகளால் சுரண்டப்பட்டு வருகின்றது.

இத்தகைய நிலைமைகளின் கீழ், தொழிலாள வர்க்கத்தின் ஓர் சுயாதீனமான அரசியல் இயக்கம் மட்டுந்தான் நடைமுறையில் வலதின் அபாயத்தை எதிர்க்க முடியும். அது போர், சர்வாதிகாரம், சமூக தாக்குதல்கள் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டங்களுடன் வலதின் வளர்ச்சிக்கு எதிரான போராட்டத்தையும் இணைத்த, ஒரு சர்வதேச சோசலிச இயக்கமாக இருக்க வேண்டும். அத்தகைய ஒரு இயக்கம் வலதுசாரி வனப்புரைகளின் அடியிலிருக்கும் அடித்தளத்தையே வேகமாக துண்டிக்கும் மற்றும் பரந்த சமூக அதிருப்திக்கான ஒரு முன்னுதாரணமாக மாறும். அத்தகைய ஒரு இயக்கத்தை சமூக ஜனநாயகவாதிகள், இடது கட்சி மற்றும் அவர்களது போலி-இடது பாதுகாவலர்களுக்கு எதிராக ஒரு சளைக்காத அரசியல் மற்றும் சித்தாந்த தாக்குதலில் மட்டுமே கட்டியெழுப்ப முடியும்.

ஃப்ளாகின் விடாப்பிடியாக இதை எதிர்க்கிறார். அதற்கு பதிலாக, “பிசாசும், அவரது பாட்டியும்" என்பதில் எழுதியதிலிருந்து அவர் ட்ரொட்ஸ்கியை மேற்கோள் இடுவதன் அடிப்படையில் முற்றிலும் உள்ளடக்கத்தை தவிர்த்து விட்டு, காப்ரியல், ஷ்வேசிக் ஆகியோருடன் "ஐக்கிய நடவடிக்கையைக்" கட்டமைக்க விரும்புகிறார். எகிப்திய சர்வாதிகாரி அப்தெல் பதாஹ் அல்-சிசி ஐ புகழ்ந்துரைக்கும், இராணுவவாதம் மற்றும் போரை ஊக்குவிக்கும் மற்றும் பெஹிடா உடன் விவாதங்கள் நடத்தும் ஜேர்மன் பொருளாதார மந்திரியான கேப்ரியலுடன் கூட்டாக சேர்ந்து எந்த விதமான பாசிச-எதிர்ப்பு நடவடிக்கைகளை ஒழுங்கமைக்க அவர் திட்டமிடுகிறார் என்பதை ஃப்ளாகின் நமக்கு தெரிவிக்க தவறுகிறார்.

சாத்தியமான அளவிற்கு சகல முதலாளித்துவ வர்க்க சக்திகளுடன் சேர்ந்து புரட்சிகர சர்வதேச அமைப்பு, மார்க்ஸ் 21 மற்றும் சோசலிச மாற்றீடு ஆகியவற்றால் பிரச்சாரம் செய்யும் இந்த “பரந்த கூட்டணிகள்,” “நடவடிக்கை முன்னணிகள்" மற்றும் "ஐக்கிய முன்னணிகள்" என்பவை தொழிலாள வர்க்கத்தைச் சிக்க வைக்கும் பொறியாகும், இவை தீவிர வலதை இன்னும் அதிகமாக பலப்படுத்துவதற்கான நிச்சயமான வழிகளாகும்.

புரட்சிகர சர்வதேச அமைப்பின் (RIO) தோற்றுவாய்கள்

ஜேர்மன் குழுவான இந்த RIO ஒப்பீட்டளவில் சமீபத்தில் தான் நிறுவப்பட்டது, ஆனால் இடதுசாரி பிதற்றல்கள் மற்றும் ட்ரொட்ஸ்கி குறித்த தவறான குறிப்புகளுடன் வலதுசாரி அரசியலை நியாயப்படுத்தும் ஒரு நீண்ட மரபில் நுழைந்துள்ளது. வரலாற்றுரீதியில், இது நான்காம் அகிலத்துடன் உடைத்து சென்ற இரண்டு போக்குகளின் அடிப்படையில் அமைந்ததாகும் மற்றும் ஒரு போலி-இடது மூடிமறைப்பில் கம்யூனிச-விரோத மற்றும் தேசியவாதத்தை வழங்குவதில் சிறப்புத்தன்மை பெற்றுள்ளது.

முதல் போக்கு அரசு முதலாளித்துவவாதிகளது. அவர்கள் 1940 களின் இறுதியில் சோவியத் ஒன்றியத்தை அரசு முதலாளித்துவமாக விவரித்து ட்ரொட்ஸ்கிசத்திலிருந்து உடைத்து சென்ற டோனி க்ளிஃப் உடன் அவர்களது தோற்றுவாய்களைப் பெறுகிறார்கள். இது வெறுமனே வார்த்தை அளவிலான ஒரு சிறிய பிரச்சினை அல்ல. சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச உருக்குலைவுக்கு இடையிலும் ஏகாதிபத்தியத்திடம் இருந்து வந்த தாக்குதலுக்கு எதிராக நான்காம் அகிலம் அதை பாதுகாத்தது, ஏனென்றால் அக்டோபர் புரட்சியின் மூலமாக அடையப் பெற்ற சொத்துறவுகளே முன்னேற்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்தன. அது சோவியத் ஒன்றியத்தை ஒரு "உருக்குலைந்த தொழிலாளர்களது அரசாக" விவரித்தது.

அரசு முதலாளித்துவம் பற்றிய க்ளிஃப் இன் தத்துவம், பனிப்போர் தொடங்கிய நிலைமைகளின் கீழ் ஏகாதிபத்தியத்திடம் அடிபணிவதை அர்த்தப்படுத்தியது. இது இடது வனப்புரைகளுக்குப் பின்னால் மூடிமறைக்கப்பட்ட கம்யூனிச-எதிர்ப்பின் ஒரு வடிவமாகும். இது, 1950 களின் ஆரம்பத்தில், கொரியா மீதான அமெரிக்க படையெடுப்புக்கு எதிராக சோவியத் ஒன்றியம் மற்றும் சீனாவைப் பாதுகாக்க அரசு முதலாளித்துவவாதிகள் மறுத்த போது, எடுத்துக்காட்டப்பட்டது.

பின்னர் வந்த வருடங்களில், அரசு முதலாளித்துவவாதிகள் தொடர்ச்சியான பிளவுகளுக்குள் சென்றார்கள். முதலாளித்துவ வர்க்கத்தின் வெவ்வேறு கன்னைகளுடன் அரசியல் மாற்றங்கள் செய்து கொண்டதன் அடிப்படையில் அரசியலை அமைத்திருந்த சந்தர்ப்பவாத குழுக்களிடையே, இது தவிர்க்க இயலாததாக இருந்தது. எவ்வாறிருப்பினும் இது அவர்களது அடிப்படை அரசியல் நிலைநோக்கில் எதையும் மாற்றிவிட வில்லை. மார்க்ஸ் 21 போலவே, புரட்சிகர சர்வதேச அமைப்பும் இந்த அரசு முதலாளித்துவ போக்கிற்குள் ஏற்பட்ட ஓர் உடைவின் விளைபொருளாக இருந்தது. அதன் முன்னோடி அமைப்புகளில், ஐந்தாம் அகில கோரிக்கையுடன் ட்ரொட்ஸ்கிசத்திற்கு அதன் எதிர்ப்பை வெளிப்படுத்திய தொழிலாளர் பலத்தின் குழுவும் (Workers Power Group – GAM) உள்ளடங்கும்.

புரட்சிகர சர்வதேச அமைப்பு (RIO) அடிப்படையாக கொண்டிருக்கும் இரண்டாவது போக்கு, மோரெனோயிசம் (Morenoism). 2011 இல், ஆர்ஜென்டினா சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சி (PTS) ஒரு முன்னணி பாத்திரம் வகித்து வந்த நான்காம் அகிலம்-ட்ரொட்ஸ்கிச கன்னை (FT-CI) என்பதில் RIO இணைந்தது. Nahuel Moreno இன் Movimiento Al Socialismo (MAS) இல் இருந்து வந்த கட்சிகளில் ஒன்றாக, PTS, 1988 இல் உருவாக்கப்பட்டதாகும்.

க்ளிஃப் ஐ போலவே, மோரெனோவும் போருக்குப் பிந்தைய காலக்கட்டத்தில் நான்காம் அகிலத்திற்கு ஒரு பலமான எதிர்ப்பாளராக தன்னைத்தானே மாற்றிக் கொண்டிருந்தார். ஆர்ஜென்டினாவில் யுவான் பெரோன் இல் இருந்து கியூபாவில் பிடல் காஸ்ட்ரோ வரையில் அதன் ஆஸ்தான வழிநடத்துனர்களுக்கு இடையே அவரது ஆதரவை மாற்றி மாற்றி, அவர் இலத்தீன் அமெரிக்காவில் முதலாளித்துவ வர்க்க மற்றும் குட்டி முதலாளித்துவ வர்க்க தேசியவாதத்தை ஏற்றிருந்தார். அதன் சாரத்தில், மோரெனோயிசம் ஒரு போலி-மார்க்சிச மொழியுடன் முதலாளித்துவ வர்க்க தேசியவாத மூடுதிரை அணிந்திருந்தது.

ட்ரொட்ஸ்கியை மேற்கோளிடுவதன் மூலமாக இடது கட்சியின் வலதுசாரி சூழ்ச்சிகளை நியாயப்படுத்தும் அவரது முயற்சிகளுடன், ஃப்ளாகின் இப்போது தன்னைத்தானே எதன் மீது அமைத்து கொண்டிருக்கிறாரோ, அந்த வலதுசாரி பாரம்பரியத்தால் உருவாக்கப்பட்ட கொடுமையான தொடர் தோல்விகளுக்குத் தொழிலாள வர்க்கம் நிறைய விலை கொடுத்துள்ளது. உண்மையாகவே AfD ஐ எதிர்க்க விரும்பும் தொழிலாளர்களும் இளைஞர்களும் இந்த போலி-இடது வீராவேச பேச்சுக்களுக்கும் நிஜமான சோசலிச அரசியலுக்கும் இடையிலான வித்தியாசத்தை

தெரிந்து கொள்ள வேண்டும்.

மேற்கோள்கள்

[1] https://www.neues-deutschland.de/artikel/1006070.den-keil-ansetzen.html [2] https://www.marx21.de/afd-strategien-gegen-die-rechte-gefahr/ [3] https://www.neues-deutschland.de/artikel/1003002.breite-buendnisse-aber-keine-politische-beliebigkeit.html [4] http://www.neues-deutschland.de/artikel/1007468.mit-rotgruen-gegen-rassisten.html [5] https://www.neues-deutschland.de/artikel/1008551.was-wuerde-trotzki-tun.html [6] இந்த மேற்கோள், மற்றும் இதைத் தொடர்ந்து வருவது, 9 ஜனவரி 1932 இல் மிலிடண்ட் இதழில் பிரசுரிக்கப்பட்ட ட்ரொட்ஸ்கியின் கட்டுரையான "பாசிசத்திற்கு எதிரான ஓர் ஐக்கிய முன்னணிக்காக" என்பதிலிருந்து எடுக்கப்பட்டதாகும்.