ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Workers speak on police crackdown against oil protest in France

பிரான்சில் எண்ணெய் ஆலை தொழிலாளர்களது போராட்டங்கள் மீதான போலிஸ் ஒடுக்குமுறை குறித்து தொழிலாளர்கள் பேசுகின்றனர்

By Anthony Torres
25 May 2016

செவ்வாய்கிழமை காலை சுமார் 4.30 மணிக்கு, மார்சையில் எண்ணெய் கிடங்குகளையும் Esso எண்ணெய் சுத்திகரிப்பு மையத்தையும் முற்றுகையிட்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் 200 பேரை அகற்றுவதற்கு பிரெஞ்சு அரசின் பாதுகாப்பு போலிஸ் பிரிவு (CRS) தலையிட்டது. எல் கொம்ரி சட்டம் பலவந்தமாக நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஞாயிறு முதல் திங்கள் வரையான இரவில் இந்த முற்றுகைக்கு CGT அழைப்பு விடுத்திருந்தது. இது மார்சைய் பகுதியில் டீசல் பற்றாக்குறையைத் தூண்டியது.

எண்ணெய் துறைக்கான CGT இன் மத்திய செயலரான இமானுவேல் லேப்பின் கூறினார்: “சுமார் 40 கலகத் தடுப்பு போலிஸ் வாகனங்கள் வந்து CGT இன் செயல்பாட்டாளர்கள் ஏற்படுத்தியிருந்த சாலைத்தடைகளை அகற்றின. உள்ளூர் தொழிற்சங்க செயலரும் துறைத் தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்களும் குறைந்தபட்சம் இரண்டு மணி நேரத்திற்கு Fos sur Mer இல் இருக்கும் உள்ளூர் தொழிற்சங்கத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.”

ஆர்ப்பாட்டக்காரர்கள் ”போர்க்களம் போன்றதொரு காட்சி” குறித்துப் பேசினர். தொழிலாளி ஒருவர் WSWS செய்தியாளரிடம் கூறினார்: “ஒரு பாதுகாப்பு கவச டிரக்கை முன்னால் கொண்டு, பின்னாலேயே எங்களுக்கு எதிரான ஒரு தண்ணீர்ப் பீரங்கியுடனும் அவர்கள் குறுக்கிட்டனர். எல்லா திசைகளில் இருந்தும் கலகத் தடுப்பு போலிசார் வந்தனர், எங்களை அவர்கள் சூழ்ந்து கொண்டனர். எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் மிக நெருக்கமான தூரத்தில் இருந்து கண்ணீர் புகைகளை அவர்கள் வீசினர். எங்களுக்கு மேல் டசன்கணக்கான கண்ணீர் புகை குண்டுகள் பறந்து கொண்டிருந்தன. சிலருக்கு போலிசின் லத்தி அடி கிடைத்தது. போலிசுக்கு உதவ எங்கள் தலைக்கு மேல் ஒரு ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்தது. எங்களை தற்காத்துக் கொள்வதற்காக நாங்கள் கலகத் தடுப்பு போலிசார் மீது கல்லெறிந்தோம்.”

சாட்சிகள் கூறுவதன் படி, ஆர்ப்பாட்டக்காரர்கள் எண்ணெய் கிடங்குகள் முற்றுகையிடப்பட்ட பகுதிக்கு அருகே அமைந்திருக்கும் தொழிற்சங்க மையத்தின் பாதைக்கு, கலகத் தடுப்பு போலிசார் தாக்கிக் கொண்டிருந்த திசையை நோக்கி திட்டமிட்டு விரட்டியடிக்கப்பட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் சுமார் 50 பேர் உள்ளூர் தொழிற்சங்கத்தில் தஞ்சம் புகுந்ததன் பின்னர், CRS அந்த அறையில் கண்ணீர் புகையை வீசி ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்தக் கட்டிடத்தை விட்டு வெளிவருவதற்காகக் காத்திருந்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான போலிஸ் படையின் தாக்குதல் காலை சுமார் 6 மணியளவில் முடிவடைந்தது.

ஆர்ப்பாட்டக்காரர்களில் துறைமுகத் தொழிலாளர்களுடன் சேர்ந்து மாணவர்களும் இருந்தனர். இருதரப்பிலும் காயங்கள் ஏற்பட்டன. ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்வதற்கு பாதுகாப்புப் படைகளுக்கும் CGTக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

கைதுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் CGT திங்கள் காலை 9 மணி வரையிலும் மார்சையின் அத்தனை துறைமுக முனைகளையும் முற்றுகையிட்டது. அரசாங்கத்திற்கு நெருக்குதலளிக்கும் வகையில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை அன்று ஒரு வேலைநிறுத்தத்திற்கும் அத்துடன் ஜூன் 1 தொடங்கி ஒரு காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கும் அழைப்பு விடுப்பதற்காக துறைமுகங்களுக்கான CGT இன் ஒரு பொதுக் கலந்தாலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

துறைமுகத் தொழிலாளி ஒருவர் WSWS இடம் பின்வருமாறு கூறினார்: “அதுவே எங்களுக்குத் தேவையானது, ஆனாலும் அது மிகவும் கடினமானதாய் இருக்கும். மோதல் ஏற்படக் கூடிய நிலைமைக்காக இரண்டு அல்லது மூன்று மாத சம்பளத்தைத் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் தொழிற்சங்கத் தலைவர்கள் எங்களிடம் கூறினார்கள். இப்போது ஒருவர் நீண்டகால வேலைநிறுத்தத்தைத் தாக்குப்பிடிக்க முடியாது; ரொம்ப விரைவில் நிலைமை கழுத்துக்கு ஏறி விடுகிறது.”

கலகத் தடுப்பு போலிசின் முரட்டுத்தனத்திற்கான பதிலிறுப்பாய், மார்சைய் பிராந்தியத்தில் இருக்கும் ஆறு சுத்திகரிப்பு நிலையங்களும் Le Havre இல் இருக்கும் எண்ணெய் முனையமும் ஒரு வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. Total நிறுவனம் பிரான்சில் அதன் முதலீட்டுத் திட்டங்களை “தீவிரமாய் மறுபரிசீலனை செய்யவிருப்பதாக” அதன் தலைமை நிர்வாக அதிகாரியான Patrick Pouyanne கூறினார்.

எந்த முற்றுகை நடவடிக்கையையும் தடுப்பதற்காக மார்சைய் பிராந்தியத்தில் இருக்கும் பல்வேறு எண்ணெய் கிடங்குகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களின் நுழைவாயில்களில் CRS போலிசார் நிறுத்தப்பட்டிருந்தனர். சுத்திகரிப்பு நிலையங்களின் அருகில் கலகத் தடுப்பு போலிசாரின் ஆயுத வாகனங்கள் தொடர்ந்து காணக் கூடியதாக இருந்தன, அவை கடந்து செல்லும் வாகனங்களை கண்காணித்துக் கொண்டிருக்கின்றன.