ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

International finance capital and the strikes in France

சர்வதேச நிதி மூலதனமும், பிரான்சில் வேலைநிறுத்தங்களும்

By Nick Beams
25 May 2016

வேலைநிறுத்தம் செய்து வரும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் ஏனைய துறை தொழிலாளர்களுக்கு எதிராக பிரான்சுவா ஹோலாண்டின் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் பிரெஞ்சு அரசு படைகளை அணிதிரட்டுவது, பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக சர்வதேச நிதி மூலதன பிரதிநிதிகளால் நீண்டகாலமாக கோரப்பட்டு வந்த தாக்குதலின் முதல்முனையாகும்.

2008 உலகளாவிய நிதி நெருக்கடிக்குப் பின்னர், குறிப்பாக 2012 யூரோ நெருக்கடி மற்றும் இரண்டாம் கட்ட இரட்டை-இலக்க மந்தநிலைக்குப் பின்னர், சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் ஏனைய நிதிய அமைப்புகள் சூசகமாக "கட்டமைப்பு சீர்திருத்தங்கள்" என்று கூறியதை நடைமுறைப்படுத்துமாறு கோரி வந்தன. இதன் நிஜமான திட்டநிரல், பிரெஞ்சு மற்றும் ஒட்டுமொத்தமாக ஐரோப்பிய முதலாளித்துவம் இலாபம்பெறும் தன்மையை ஊக்குவிப்பதாகும்.

“கட்டமைப்பு சீர்திருத்தம்" என்பது தொழில் வழங்குனர்கள் விருப்பம் போல் வேலையில் இருத்துவதற்கும் நீக்குவதற்கும், வேலைநீக்கங்களுக்கு எதிரான சட்ட பாதுகாப்புகளை அகற்றுவதற்கும், வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கான சலுகைகளை வெட்டுவதற்கும், மற்றும் அரசின் சமூக சேவை செலவினங்களைக் குறைப்பதற்கும் வழி வகுப்பதன் மூலமாக தொழிலாள வர்க்க நிலைமைகளைக் கண்மூடித்தனமாக தாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

மார்சைய்யில் வேலைநிறுத்தம் செய்து வரும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தொழிலாளர்களை தாக்க பொலிஸ் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியம் பிரான்சில் அதன் பொருளாதார கொள்கை நடவடிக்கைகளுக்கான சமீபத்திய பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அவை தொழிலாளர் சந்தை "வளைந்துகொடுக்கும் தன்மையை" அதிகரிப்பதற்கான, ஓய்வூதியங்கள் மற்றும் ஏனைய சமூக சேவைகளை குறைப்பதற்குமான உத்திகளை மையத்தில் கொண்டுள்ளன.

வேலைநிறுத்தங்களின் குவிமையமாக இருக்கும் எல் கொம்ரி தொழிலாளர் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது, “நிறுவன மட்டத்திலான உடன்படிக்கைகளது நோக்கத்தை விரிவுபடுத்துவதிலும், வேலைநீக்கங்களை சுற்றி நீதித்துறை நிச்சயமின்மையை குறைப்பதிலும் ஒரு முன்னோக்கிய படியாக" இருக்கும் என்று அது குறிப்பிட்டது. ஆனால் அது இன்னும் அதிகம் செய்யவேண்டியிருக்கும் என்று வலியுறுத்தியது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், 1930 களில் மற்றும் அதற்கு முன்னர் மேலோங்கி இருந்த நிலைமைகளுக்குக் கொண்டு செல்ல, அரசு சம்பளம் மற்றும் வேலையிட நிலைமைகள் சார்ந்த நெறிமுறைகளை தொடர்ந்து திரும்பப் பெற வேண்டும், அத்தோடு வேலைக்கு அமர்த்துவதற்கான மற்றும் நீக்குவதற்கான நிறுவனங்களது அதிகாரத்திற்கு இருக்கும் சட்டரீதியிலான முட்டுக்கட்டைகள் நீக்கப்பட வேண்டும் என்பதாகும். இந்த திட்டநிரலைத்தான் ஹோலாண்ட் அரசாங்கம் இப்போது அரசு படைகளைக் கொண்டு திணிக்க முயன்று வருகிறது.

உலகளாவிய பொருளாதார அபிவிருத்திக்கு "குறைவாக இணங்கியிருப்பதாக" பிரான்சின் தொழிலாளர் சந்தை காரணிகளைக் குறிப்பிட்டுக் காட்டுகையில், சர்வதேச நாணய நிதியம், “700 க்கும் அதிகமான கிளைகளுக்குப் பொதுவானதாக இருக்கும் தொழிலாளர் உடன்படிக்கைகள்; வேலைநீக்கங்கள் சம்பந்தமாக நீண்டகால மற்றும் நிச்சயமற்ற நீதித்துறை வழிமுறைகள்; வேலைவாய்ப்பின்மை மற்றும் சுகாதார சலுகைகளை பெறுவதில் ஒப்பீட்டளவில் எளிய நடைமுறை" அத்துடன் "ஒப்பீட்டளவில் அதிகளவிலான குறைந்தபட்ச ஊதியம்" ஆகியவற்றை மேற்கோளிட்டது.

மற்றொரு பிரதான கோரிக்கையான அரசு செலவினங்களை குறைப்பதானது, இதை சர்வதேச நாணய நிதியம் "பிரான்சின் நிதிநிலை சிக்கல்களின் இதயதானத்தில்" இருப்பதாக குறிப்பிட்டது. அது, “சம்பளச் செலவுகளைக் குறைக்க உதவும் வகையில் அரசின் எல்லா மட்டங்களிலும் சம்பள வேறுபாடுகளைக்" குறைப்பதற்கும் அழைப்புவிடுத்தது, அதாவது ஓய்வூதிய வயதை உயர்த்துவதன் மூலமாக ஓய்வூதியங்களை குறைப்பது, சமூக உதவிகளை தகுதி உடையவர்களுக்கு மட்டும் வழங்குவது, செலவுகளைக் குறைப்பதற்கு மருத்துவ சேவைகளை ஒழுங்குபடுத்துவது ஆகியவற்றைக் குறிப்பிட்டது.

இந்த தாக்குதல், உலகளாவிய பொருளாதாரம் மற்றும் சர்வதேச நிதிய அமைப்பில் ஆழமடைந்துவரும் உடைவின் ஒரு முக்கிய திருப்புமுனையில் வருகிறது. 2012 க்குப் பின்னர், மற்றும் யூரோ பொறிவைத் தடுக்க "என்னவானாலும்" செய்வதற்கு ஐரோப்பிய மத்திய வங்கி தலைவர் மரியோ திராஹி பொறுப்பேற்ற பின்னர், மத்திய வங்கி நிதியியல் அமைப்புமுறைக்குள் ட்ரில்லியன் கணக்கான யூரோவை பாய்ச்சும், "பணத்தை புழக்கத்தில் விடும்" ஒரு கொள்கையை பின்பற்றி வருகிறது.

இத்தகைய முறைமைகள் நிஜமான பொருளாதாரத்தை மீட்க எதுவும் செய்துவிடவில்லை. முன்பினும் அதிகமாக சமூக சமத்துவமின்மைக்கு இட்டுச் சென்று, நிதியியல் சந்தைகளில் ஊக வணிகங்களை ஊக்குவித்தது மட்டுந்தான் அந்த முறைமைகளின் ஒரே விளைவாகும். பொருளாதார வளர்ச்சியின் உந்து சக்தியான நிஜமான பொருளாதாரத்தில் முதலீடு என்பது, 2008 க்கு முன்னர் இருந்ததை விட சுமார் 25 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது, மேலும் யூரோ-மண்டல பொருளாதாரத்தின் பெரும் பகுதிகள் எட்டாண்டுகளுக்கு முன்னர் எட்டிய உற்பத்தி மட்டங்களுக்குத் திரும்பவே இல்லை.

இதேபோல இந்தாண்டின் ஆரம்பத்தில் ஐரோப்பிய மத்திய வங்கி தொடங்கிய எதிர்மறை வட்டி விகிதங்களும், எந்தவித பொருளாதார மீட்சியைக் கொண்டு வருவதில் தோல்வியடைந்துள்ளது. உண்மையில் தேக்கநிலையில் இருக்கும் உலக பொருளாதாரத்தில் பிரதான முதலாளித்துவ அதிகாரங்களுக்கு இடையே சந்தைகள் மற்றும் இலாபங்களுக்கான போட்டி நிலவுகின்ற நிலையில், இதேபோன்றதை [எதிர்மறை வட்டிவிகிதங்களை] பேங்க் ஆஃப் ஜப்பானும் அறிமுகம் செய்தபோது, அவற்றிற்கு இடையே அதிகரித்துவரும் பதட்டங்களுடன் சேர்ந்து, உலகளாவிய நிதியியல் சந்தைகளில் ஸ்திரமின்மை மட்டுமே ஏற்பட்டது.

முடிவற்ற வட்டிகுறைந்த பண வினியோகத்துடன் வங்கிகள் மற்றும் நிதியியல் அமைப்புகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க, அதன் போட்டியாளர்களுக்கு எதிராக தீவிரமடைந்து வரும் உலகளாவிய பொருளாதார போட்டியில் ஐரோப்பிய முதலாளித்துவம் அதன் நிலையைப் பேணுவதற்கு இத்தகைய முறைமைகளே கூட போதுமானதில்லை என்பது திராஹிக்குத் துல்லியமாக தெரியும். 1930 களின் பாசிசவாத அனுபவங்களுக்குப் பின்னர் சமூக புரட்சி அச்சுறுத்தலை எதிர்கொள்ள அறிமுகப்படுத்தப்பட்ட போருக்குப் பிந்தைய ஒட்டுமொத்த சமூக சேவை மற்றும் நெறிமுறைகளின் அமைப்புமுறை, ஐரோப்பாவை போட்டித்தன்மை இல்லாததாக ஆக்கி இருப்பதாகவும், இப்போது அவை அழிக்கப்பட வேண்டியிருப்பதாகவும் ஆளும் நிதியியல் உயரடுக்குகள் பார்க்கின்றன. இது தான் "கட்டமைப்பு சீர்திருத்தங்களுக்கான" கோரிக்கையின் இன்றியமையாத உள்ளடக்கமாக உள்ளது.

மே 2015 இல் இந்த பிரச்சினை குறித்த ஓர் உரையில் திராஹி குறிப்பிடுகையில், ஐரோப்பிய மத்திய வங்கி தலைவர் ஆனதற்குப் பின்னர் ஒவ்வொரு பத்திரிகையாளர் கூட்டத்திலும் அவர் "ஐரோப்பாவில் கட்டமைப்பு சீர்திருத்தத்தை தீவிரப்படுத்துவதற்கான அழைப்புடன்" அவரது அறிமுக குறிப்புகளை முடித்திருந்தார். இது உற்பத்தித்திறனை அதிகரிக்கும் என்றும் மற்றும் "விலை மற்றும் சம்பள இலகுத்தன்மையை" அதிகரிக்கும் என்றும், அதாவது இலாபத்தை அதிகரிக்கும் என்று கூறப்பட்டது.

ஆளும் உயரடுக்கின் நிலைப்பாட்டிலிருந்து, இந்த கடமையின் அதிகரித்த அவசரத்தன்மை ஏப்ரலில் பிரசுரிக்கப்பட்ட ஐரோப்பிய மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் எடுத்துக்காட்டப்படுகிறது. தற்போதைய கொள்கைகள் செயலுக்கு உதவுகின்றன என்று கூறிய பின்னர், அந்த அறிக்கை, மத்திய வங்கிக்கு 2016 ஆம் ஆண்டு “சவாலான ஆண்டாக” இருக்கும் என்று குறிப்பிட்டதன் மூலமாக அந்த மதிப்பீட்டை இன்றியமையாத விதத்தில் மறுத்தது. “உலக பொருளாதார மதிப்பீட்டின்படி நாம் நிச்சயமற்றத்தன்மையை எதிர்கொண்டுள்ளோம். நாம் தொடர்ந்து பணவீக்கத்தைச் சுருக்கும் சக்திகளை முகங்கொடுக்கிறோம். மேலும் புதிய அதிர்வுகளுக்கு, ஐரோப்பாவின் திசை மற்றும் அதன் எதிர்த்தெழும் திசையைக் குறித்த கேள்விகளை முகங்கொடுக்கிறோம்.

அதாவது, உலகளாவிய பொருளாதார உடைவு தொடங்கியதிலிருந்து ஏறத்தாழ எட்டாண்டுகளில் இருந்து, கண்ணுக்கு எட்டிய தூரத்தில் ஒரு "பொருளாதார மீட்சி" கூட இல்லாமல், உலகளாவிய மூலதனம் எதிர்கொண்டிருக்கும் நிலைமை மோசமடைந்து வருகிறது.

1930 களைப் போலவே, இந்த ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடி பிரான்சிலும் மற்றும் உலகெங்கிலும், உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான புதுப்பிக்கப்பட்ட கடுந்தாக்குதலும் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலும் சேர்ந்து, போர் மற்றும் இராணுவவாதத்தை நோக்கி ஆளும் வர்க்கங்களை உந்திக் கொண்டிருக்கிறது. ஆகவே பிரான்சில் என்ன கட்டவிழ்ந்து வருகிறதோ, அது உலகளாவிய போக்குகள் மற்றும் நடைமுறைகளின் மிக கூர்மையான வெளிப்பாடாகும்.

அதை கடந்த கால்-நூற்றாண்டு வரலாற்று உள்ளடக்கத்தில் நிறுத்தினால் மட்டுமே அதன் முக்கியத்துவத்தை முழுமையாக மதிப்பிட முடியும்.

1991 இல் சோவியத் ஒன்றியத்தின் பொறிவு, முதலாளித்துவ வர்க்கம் மற்றும் அதன் அரசியல் பிரதிநிதிகளின் பாகத்தில் வெற்றி பிரவாக அலையுடன் வரவேற்கப்பட்டது, அவர்கள் அதை "சோசலிசத்தின் மரணம்" என்றும், சந்தைகளின் "வெற்றி" என்றும் புகழ்ந்தார்கள் —இந்த எதிர்வினையானது குட்டி முதலாளித்துவ போலி இடது போக்குகளின் விடையிறுப்பில் பிரதிபலித்தது, அவர்கள் தங்களைத்தாங்களே இன்னும் கூடுதலாக முதலாளித்துவ அரசு மற்றும் அதன் அரசியல் ஸ்தாபகத்தின் கட்டமைப்பிற்குள் ஆழமாக ஒருங்கிணைத்துக் கொண்டார்கள்.

சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு சோசலிசத்தின் மரணம் கிடையாது மாறாக பூகோளமயப்பட்ட உற்பத்தியின் விளைவாக ஸ்ராலினிசத்தின் மற்றும் அதன் தேசியவாத வேலைத்திட்டமான "தனியொரு நாட்டில் சோசலிசத்தின்" பொறிவு என்பதையும், அது ஒரு புதிய முதலாளித்துவ சமநிலையை ஸ்தாபிப்பதற்கு பதிலாக, போர்கள் மற்றும் புரட்சியின் ஒரு புதிய காலக்கட்டத்திற்குள் உலகத்தைக் கொண்டு செல்லும் என்பதையும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) மாத்திரமே விளங்கப்படுத்தியது.

எவ்வாறிருப்பினும் சோவியத் ஒன்றியத்தின் பொறிவு, தொழிலாளர் வர்க்கத்திடையே கணிசமானளவிற்கு நோக்குநிலை பிறழ்ச்சியை அதிகரித்தது. ஆனால் ICFI அடையாளம் கண்டிருந்த முக்கிய போக்குகள் இப்போது மேற்புறத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன மற்றும் வர்க்க போராட்டத்தின் மீளெழுச்சியை உருவாக்கி உள்ளன. அவசரமான உடனடியாக பணி என்னவென்றால் ஹோலாண்ட் அரசாங்கத்திற்கு எதிராக மற்றும் அதற்கு பின்னால் நிற்கும் நிதிய உயரடுக்குகளுக்கு எதிரான போராட்டத்தில் பிரெஞ்சு தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஐரோப்பா எங்கிலும் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதாகும். இத்தகையவொரு இயக்கம், அரசியல் அதிகாரத்திற்காக போராடுவதற்கும் மற்றும் அதை முன்னின்று எடுத்துச் செல்ல புரட்சிகர கட்சியாக ICFI ஐ கட்டமைக்கும் நோக்கத்தில் ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கினால் ஆயுதபாணியாக்கப்படவேண்டும்.