ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

UK Prime Minister Theresa May pledges hard Brexit, threatens trade war

இங்கிலாந்து பிரதம மந்திரி தெரேசா மே கடுமையான பிரிட்டன் வெளியேற்றத்திற்கு சூளுரைப்பதுடன், வர்த்தக போருக்கு அச்சுறுத்துகிறார் 

By Chris Marsden
18 January 2017

செவ்வாயன்று லான்காஸ்டர் ஹவுசில் வழங்கிய உரை ஒன்றில், இங்கிலாந்து பிரதம மந்திரி தெரேசா மே, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து விலகியதும் ஐரோப்பிய சந்தைகளை அது கட்டுப்பாடின்றி அணுகுவதற்கு அனுமதிக்காவிட்டால், ஐரோப்பாவிற்கு எதிராக ஏறத்தாழ முழுமையான பொருளாதார யுத்தத்தை கொண்டு அச்சுறுத்தினார்.

மே இன் ஆக்ரோஷமான நிலைப்பாடு, அமெரிக்காவில் வரவிருக்கின்ற டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்துடன் ஒரு பொருளாதார மற்றும் அரசியல் கூட்டணியை ஏற்படுத்திக்கொள்ளும் முயற்சிகளுடன் பிணைந்துள்ளது. லிஸ்பன் உடன்படிக்கையின் 50 வது ஷரத்தைப் பயன்படுத்தி பிரிட்டன் வெளியேறுவதைத் தொடங்கி வைப்பதற்கு முன்னரே, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக, குறிப்பாக ஜேர்மனிக்கு எதிராக, வாஷிங்டன் சார்பான ஒரு குண்டாந்தடியாக செயல்படுவதற்கு மே தயாராக இருப்பது மட்டுமே கூட, அவரின் சீற்றமான நிலைப்பாட்டுக்கு ஒத்திருக்கிறது.

மே இன் லான்காஸ்டர் ஹவுஸ் உரையானது, ஐரோப்பாவிற்குள் மற்றும், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கு இடையே இரண்டிலும் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான உறவுகளை எந்தளவிற்கு முறிந்திருக்கின்றன என்பதை அளவிடுவதற்கான ஒரு அளவீடாக உள்ளது. இது, ரூபேர்ட் முர்டோச்சின் சண்டே டைம்ஸ் மற்றும் ஜேர்மன் Bild பத்திரிகை இரண்டுக்கும் சேர்த்து ட்ரம்ப் ஒரு பேட்டி அளித்த ஒரு நாளைக்குப் பின்னர் வந்துள்ளது, அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் அப்பேட்டியில், பிரிட்டன் வெளியேறுவது "ஒரு மிகப் பெரிய விடயமாக சென்றுமுடியும் ஒன்றாகப்போகிறது" என்று குறிப்பிட்டார். ஐரோப்பிய ஒன்றியம் "அடிப்படையில் ஜேர்மனிக்கான ஒரு வாகனம்" என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

மே ஆக்ரோஷமாக உரை வழங்கிய அதேநாளில், செவ்வாயன்று, பிரிட்டிஷ் சான்சிலர் பிலிப் ஹம்மாண்ட் ஜேர்மனியின் பொருளாதார உச்சி மாநாட்டில் Die Welt க்கு கூறுகையில், பிரிட்டனின் கோரிக்கைகளை பூர்த்தி செய்யாவிடில், “[நா]ங்கள் போட்டித்தன்மையை மீட்டுப்பெறுவதற்கு எங்களது மாதிரியை மாற்ற வேண்டியிருக்கும். நாங்கள் என்ன செய்ய வேண்டியிருக்குமோ அதையெல்லாம் நாங்கள் செய்வோம் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம்,” என்றார்.

பிரிட்டனின் Daily Telegraph செவ்வாயன்று தலையங்கத்தில் குறிப்பிடுகையில், “எதிர்பார்க்கப்படும் வகையில் அமெரிக்க பெருநிறுவன வரியில் டொனால்ட் ட்ரம்பின் ஆழ்ந்த வெட்டுக்களை முன்மாதிரியாக கொண்டும் மற்றும் ஐரோப்பிய நெறிமுறைகளை பெறுமதியற்றதாக விலக்கி விட்டும், சர்வதேச வணிகத்தின் ஒரு காந்தக்கல்லாக" பிரிட்டனை ஆக்குவதற்கு ஹம்மாண்டின் அச்சுறுத்தலை இங்கிலாந்து "ஒரு வாக்குறுதியாக" ஆக்க முடியுமென்றால், “அது அவ்வாறே தனியாக சென்று வெற்றி பெற முடியும்,” என்று குறிப்பிட்டது.

“ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கு முன்னதாக எழுதப்பட" இருக்கின்ற அமெரிக்க/இங்கிலாந்து வர்த்தக உடன்படிக்கையின் வரிகள் குறித்து "ட்ரம்ப் குழுவுடன்" வெளியுறவுத்துறை செயலர் போரீஸ் ஜோன்சன் இணைந்து வேலை வருவதாக Spectator குறிப்பிட்டது.

இங்கிலாந்தின் "சிறந்த நண்பர்கள் மற்றும் அண்டைநாட்டவர்களுடன்", வர்த்தக உறவுகளில் நேசத்துடன் பரஸ்பர ஆதாயமாக இருக்க வேண்டுமென்ற பிரிட்டனின் விருப்பத்தை வேண்டாவெறுப்புடன் வலியுறுத்தும் வெற்றுரைகளோடு மே அவரது உரையைத் தொடங்கினார். பிரிட்டன் வெளியேற்றமானது "ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரமாண்ட சிதறலின் தொடக்கத்திற்கு முன்னறிவிப்பாக இருக்குமென" “பலர் அஞ்சினாலும்", “அது பிரிட்டனின் சிறந்த நலன்களுக்காக செய்யப்படவில்லை" என்பதை அவர் சேர்த்துக் கொண்டார்.

எவ்வாறிருந்த போதினும், சீனா போன்ற முக்கிய சந்தைகள் உட்பட ஏனைய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்துவதற்காக, ஐரோப்பிய ஒன்றியம், ஒற்றை சந்தை மற்றும் சுங்கவரி ஒத்துழைப்பு ஒன்றியம் (Customs Union) ஆகியவற்றிலிருந்து இங்கிலாந்து வெளியேறுகிறது என்றவர் தெரிவித்தார். சக்தி வாய்ந்த இங்கிலாந்து வணிக பிரிவுகள் வலியுறுத்துவதைப் போல, தொடர்ந்து ஒற்றை சந்தையில் அங்கத்துவம் இருக்காது, ஏனென்றால் அதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தில் தொழிலாளர்களது சுதந்திர நகர்வை ஏற்றுக் கொள்ள வேண்டியதாக இருக்கும்.

இங்கிலாந்து கோரவிருக்கின்ற அசாதாரண கோரிக்கைகளை விவரிக்கும் அளவிற்கு மே சென்றார். ஏனைய நாடுகளுடன் வர்த்தக உடன்படிக்கை கையெழுத்திடுவதை தடுக்காத வகையில், ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒரு சுதந்திர வர்த்தக உடன்படிக்கையும் அவற்றில் உள்ளடங்கி இருக்கும். அமெரிக்கா உடனான பிரிட்டனின் பொருளாதார உறவுகள் சிதையக்கூடும் என்று, பிரிட்டன் வெளியேறுவதற்கான வாக்கெடுப்புக்கு முன்னர் ஜனாதிபதி ஒபாமா கூறிய கருத்துக்களை மேற்கோளிட்டு, மே கூறுகையில், “உலகின் மிகப் பெரிய பொருளாதாரமான அமெரிக்காவுடனான ஒரு வர்த்தக உடன்படிக்கையில் பிரிட்டன் 'வரிசையின் கடைசியில் இருக்காது', மாறாக முன்னிலையில் இருக்கும் என்று ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப் கூறியுள்ளார்" என்று பெருமைபட்டுக் கொண்டார்.

இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் சுங்கவரி ஒத்துழைப்பு ஒன்றியத்தின் ஓர் அங்கத்துவ நாடாக இல்லாமல் போனாலும், அப்போதும் "ஐரோப்பாவுடன் வரிவிதிப்பற்ற வர்த்தகத்தை" விரும்பும் என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

மே, அவரது கோரிக்கைகளுக்கு ஆதரவாக, ஐரோப்பாவில் இங்கிலாந்தின் இராணுவ/பாதுகாப்புத்துறையின் பாத்திரத்தை வலியுறுத்தினார். அவர் அறிவித்தார், “பிரிட்டனும் பிரான்ஸூம் மட்டுமே, ஐரோப்பாவின் இரண்டு அணுஆயுத சக்திகளாகும். எஸ்தோனியா, போலாந்து மற்றும் ரோமானியா உள்ளடங்கலாக ஐரோப்பிய நாடுகளில், இராணுவச் சேவையில் ஆண்கள் மற்றும் பெண்களை நிலைநிறுத்தியுள்ளதுடன், நாங்கள் மட்டுமே ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் நிரந்தர ஆசனங்களில் இருக்கும் இரண்டு ஐரோப்பிய நாடுகளாகும்.”

பின்னர் பொருளாதார பழிவாங்குதலின் அச்சுறுத்தல்கள் வந்தன. “பிரிட்டனை தண்டிப்பதற்கும் மற்றும் ஏனைய நாடுகளும் இதே பாதையை தேர்ந்தெடுப்பதில் இருந்து அவற்றை அதைரியப்படுத்துவதற்கும், அங்கே தண்டிக்கும் விதமான ஓர் உடன்பாட்டுக்கு அழைப்புவிடுக்கும் சில குரல்கள் ஒலிக்கின்றன" என்பதைக் குறிப்பிட்டு, மே எச்சரிக்கையில், இது "ஐரோப்பிய நாடுகளுக்கு சுய-அழிவு உண்டாக்கும் ஒரு நடவடிக்கையாக இருக்கும்" என்று எச்சரித்தார்.

ஒற்றைச் சந்தையை அணுகுவதை தடுத்தால், பிரிட்டிஷ் அரசாங்கம் "பிரிட்டனின் பொருளாதார முன்மாதிரியின் அடித்தளத்தை மாற்றுவதற்கு தான் சுதந்திரமாக நடவடிக்கை எடுக்கும்" அது "வரி விகிதங்களை போட்டித்தன்மையுடன்" அமைக்கும் என்பதோடு, "உலகின் தலைசிறந்த நிறுவனங்கள் மற்றும் மிகப்பெரும் முதலீட்டாளர்களை பிரிட்டனுக்குள் ஈர்க்கும் கொள்கைகளை ஏற்கும்.”

ஐரோப்பிய ஒன்றியத்தை பொறுத்த வரையில், அது ஐரோப்பிய முதலீடுகளில் ஒரு அரை ட்ரில்லியன் பவுண்டுகளுக்கான அச்சுறுத்தல், மற்றும் பிரிட்டனுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்றுமதிகளில் 290 பில்லியன் பவுண்டும் மற்றும் "இலண்டன் நகர நிதியியல் சேவைகளை ஐரோப்பிய நிறுவனங்கள் அணுக முடியாது போவதும்" என, "உலகின் மிகப் பெரிய பொருளாதாரங்களில் ஒன்றுடனான வர்த்தகத்திற்கு புதிய தடைகள்" என்பதே அதன் அர்த்தமாகும்.

மே மற்றும் ஹம்மாண்டின் பிரிட்டன் வெளியேறியதற்குப் பிந்தைய பிரிட்டனின் பொருளாதார முன்மாதிரி, ஐரோப்பிய ஒன்றிய விட்டுக்கொடுப்பு சலுகைகள் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும், யதார்த்தத்தில், அதை சார்ந்திருக்காது. மொத்த விற்பனை மீதான நெறிமுறை தளர்த்தல்கள், வரி வெட்டுக்கள், தனியார்மயமாக்கல்கள் மற்றும் நலன்புரி அரசில் என்ன எஞ்சியிருக்கிறதோ அதை நீக்குவது ஆகியவற்றின் மூலமாக, “தாட்சர் புரட்சியை முழுமைப்படுத்தும்" அதன் திட்டத்தின் பாகமாக, அந்த அரசாங்கம் 2020 க்குள் பெருநிறுவன வரியை 17 சதவீதத்திற்கு குறைக்கும் அதன் நோக்கத்தை அறிவித்துள்ளது. இராணுவவாதத்தை நோக்கிய முன்பினும் கூர்மையான திருப்பத்துடன் சேர்ந்து, இது, தீவிரமடைந்து வரும் வர்த்தக போருக்கான ஒரு முன்னோக்காக உள்ளது.

இதுபோன்றவொரு பொருளாதார தாக்குதலுக்கான குவிமையம், ஆரம்பத்தில் ஐரோப்பாவாக இருக்கலாம், ஆனால் மே கூறுகையில் இந்த அடிப்படையில் இங்கிலாந்து "உலகை அரவணைக்கும்" என்று வாதிடுகிறார். இது சித்த பிரமையானதாகும். “ஐரோப்பாவிலிருந்து வெளியேறி உலகிற்குள் நுழைவதில்" பிரதான பரிசாக மே மேற்கோளிடும் ஒரு நாட்டுக்கு எதிராக, அதாவது சீனாவுக்கு எதிராக, ட்ரம்ப் இடைவிடாது விரோதத்தை வெளிப்படுத்தி உள்ளார். அவர் பேசிய அந்த சமயத்தில் கூட, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், ட்ரம்பின் அச்சுறுத்தல்களுக்கு விடையிறுப்பாக, டாவோஸின் உலக பொருளாதார உச்சி மாநாட்டில் "ஓர் உலகளாவிய வர்த்தக போரில் வெற்றியாளராக யாரும் எழ முடியாது" என்று எச்சரித்தார்.

இங்கிலாந்துமே கூட தேசிய பதட்டங்கள் வெடிப்பதில் இருந்து விடுபட்டு இருக்க முடியாது. மே இன் 12 வாக்குறுதிகளில் “ஒன்றியத்தைப் பலப்படுத்துவது" என்பதும் ஒன்றாக உள்ளது, ஆனால் இது, பிரிட்டன் வெளியேற்றத்தால் ஸ்காட்டிஷ் வணிக நலன்களிடம் இருந்து அச்சுறுத்தல்கள் முன்வருவதால், ஸ்காட்டிஷ் தேசிய கட்சி (SNP) இன் முதல் மந்திரி நிக்கோலா ஸ்டர்ஜியன் சுதந்திரத்திற்கான இரண்டாம் சர்வஜன வாக்கெடுப்பை மீண்டும் மீண்டும் அச்சுறுத்தி உள்ள நிலைமைகளின் கீழ் கூறப்பட்டதாகும்.

"இங்கிலாந்து அரசாங்கம் தனித்த சந்தையிலிருந்து வெளியேற விரும்புகிற ஒரு சம்பவத்தில், ஸ்காட்லாந்து ஒற்றை சந்தையில் தங்கியிருக்க வழிவகை செய்யும் விதத்தில் ஸ்காட்டிஷ் பாராளுமன்றத்திற்கு அவசியமான அதிகாரங்களை பகிர்ந்து கொடுக்க, இங்கிலாந்திற்குள் மாற்று அணுகுமுறைகள் முயற்சிக்கப்பட வேண்டும்,” என்று குறிப்பிடும் ஒரு SNP தீர்மானத்தை, மே இன் உரைக்குப் பின்னர் உடனடியாக, ஸ்காட்டிஷ் நாடாளுமன்றம் நிறைவேற்றியது.

அனைத்திற்கும் மேலாக, பிரிட்டன் வெளியேறுவதற்கு ஆதரவான ஜனநாயக யூனியன் கட்சிக்கு (Democratic Unionist Party) குழிதோண்டும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவான சின் பென்னை போட்டியில் நிறுத்தும் விதத்தில், வரவிருக்கும் வடக்கு அயர்லாந்து சட்டமன்ற தேர்தல்களில் "ஐக்கியத்திற்கான உத்வேகத்திற்கு" மே முறையிட இருக்கிறார், மேலும் வடக்கு மற்றும் தெற்கு இடையே ஒரு "கடுமையான எல்லைக்கான" எச்சரிக்கைகளை எதிர்கொள்ள அயர்லாந்து குடியரசுடன் பொதுவான பயண பகுதியை பேணுவதற்கு வாக்குறுதியளிக்கவும் அவர் கடமைப்பட்டிருப்பதாக உணர்ந்தார்.

போட்டித்தன்மையை மீட்டமைக்க "என்னவெல்லாம் தேவையோ அதை செய்ய" ஹம்மாண்டின் சூளுரைக்கு உழைக்கும் மக்கள் விலை கொடுக்க செய்யப்படுவார்கள் என்பதால், மே இன் உரை அனைத்திற்கும் மேலாக வர்க்க போருக்கான ஒரு அறிவிப்பாகும்.

அவர், “இந்நாட்டில் வாழும் மற்றும் வேலை செய்யும் ஒவ்வொருவருக்காகவும்" “ஒரு நியாயமான பிரிட்டனை" கட்டமைப்பது குறித்த வாய்சவடாலை அவர் உரையில் தூவியிருந்தார். ஆனால் அவரது அரசாங்கமும் மற்றும் அதற்கு முன்பிருந்த அரசாங்கங்களும் தொழிலாள வர்க்கத்தின் மீது திணிக்கப்பட்ட ஒவ்வொரு சமூக பாதிப்பிற்கும் புலம்பெயர்ந்தவர்களை குற்றஞ்சாட்டி, "புலம்பெயர்வை கட்டுப்படுத்துவதற்கான" வாக்குறுதியளிப்பதற்காக மட்டுமே அவ்வாறு இருந்தது.

உழைக்கும் மக்களை நோக்கிய டோரிக்களின் நிஜமான மனோபாவம், அத்தியாவசிய சேவைகளைப் பாதிக்கக்கூடிய மற்றும் "பகுத்தறிவுக்குகந்த மற்றும் பொருத்தமானதாக" கருத முடியாத வேலைநிறுத்தங்களுக்கு தடை விதிப்பதற்காக, இந்த வாரம் 50 நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் வெளியிடப்பட்டது. இன்னமும் அரசாங்கம் அதுபோன்ற நடவடிக்கைகளைச் சார்ந்திருக்கிறது என்றால், அதற்கு ஒரே காரணம் தொழிலாளர்களின் போராட்டங்களை காட்டிக்கொடுக்கவும் கட்டுப்படுத்தவும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தை சார்ந்திருந்து முடியும் என்பதனால் ஆகும், இது தெற்கு இரயில்வேக்கு எதிராக திட்டமிடப்பட்ட மூன்று நாட்கள் வேலைநிறுத்தத்தை இரத்து செய்வதென்ற Aslef ஓட்டுநர்களின் தொழிற்சங்கத்தால் அதே நாளில் எடுக்கப்பட்ட முடிவால் எடுத்துக்காட்டப்பட்டது.

“எங்களின் பேரம்பேசும் மூலோபாயத்தின் விபரங்களை" அறிய கோருகின்ற ஊடகங்கள் மற்றும் எதிர்கட்சிகள் "தேசிய நலன்களுக்காக செயல்படவில்லை" என்று அவர் எச்சரித்த அதேவேளையில், ஒரு "சுமூகமான, முறையான பிரிட்டன் வெளியேற்றத்திற்கு" மே சூளுரைத்தார்.

50 வது ஷரத்தைப் பயன்படுத்துவதை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் இம்மாதம் தீர்ப்பு வழங்குமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், ஒரு நாடாளுமன்ற வாக்கெடுப்புக்கும், அதிலிருந்து 2019 க்குள் எட்டப்பட வேண்டிய பிரிட்டன் வெளியேறுவதற்கான உடன்பாடும் எட்டபடும் என்றும் மே வாக்குறுதி அளித்தார், அதேவேளையில் சர்வஜன வாக்கெடுப்பின் முடிவை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்க வேண்டாமென அவரது எதிர்ப்பாளர்கள் எச்சரித்தனர். இது, “ஏனைய எல்லாவற்றோடு சேர்ந்து நாங்கள் 50 வது ஷரத்தைத் தடுக்க மாட்டோம் என்பதை கூறிக் கொள்கிறோம்" என்று Sky News இல் தொழிற் கட்சி தலைவர் ஜெர்மி கோர்பினிடமிருந்து ஒரு வாக்குறுதியைக் கொண்டு வந்தது.

அவர் அவரது எஞ்சிய கருத்துக்களை, ஐரோப்பிய "சந்தை அணுகல்" மீது கவலைகளை வெளிப்படுத்துவதில் ஒருமுனைப்படுத்தி இருந்தார், “தொழிலாளர் சந்தையின் நெறிமுறை மீதான ஒரு விடயமும்" அதில் உள்ளது என்றவர் வலியுறுத்தினார். இக்கோரிக்கை, சம்பளங்கள் மீது புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தாக்கத்தை எதிர்த்துபோராடும் அர்த்தத்தில், விசேடமாக கோர்பினின் தொழிற்சங்க ஆதரவாளர்களால் முன்வைக்கப்பட்டது.