ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lankan budget deepens austerity offensive

இலங்கை வரவு-செலவுத் திட்டம் சிக்கன தாக்குதலை உக்கிரமாக்குகிறது

By Saman Gunadasa 
15 November 2016

இலங்கை அரசாங்கத்தின், சமூக செலவுகளை வெட்டுக்கின்ற ஒரு தொகை வரிகளையும் தீர்வைகளையும் அதிகரிக்கின்ற 2017 வரவு-செலவுத் திட்டம், தொழிலாள வர்க்கத்தினதும் ஏழைகளதும் சமூக நிலைமைகள் மீதான ஒரு நேரடித் தாக்குலாகும்.

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவால் கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட வரவு- செலவுத் திட்டம், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆணைகளுக்கு ஏற்ப அமைக்கப்பட்டது. அது 2017 அளவில் வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.7 சதவீதமாகக் குறைப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. தற்போது வரவு-செலவு பற்றாக்குறை, 5.4 சதவீதமாகும். சர்வதேச நாணய நிதியம், அதை 2020ல் 3.5 சதவீதமாக குறைக்க கோரியுள்ளது.

அரசாங்க செலவுகள் அடுத்த 12 மாதங்களில் 1.94 ட்ரில்லியன் ரூபாயில் இருந்து 1.81 ட்ரில்லியன் ரூபாய் (சுமார் 12 பில்லியன் டாலர்) வரை குறைக்கப்பட உள்ள அதேவேளை, வரி வருவாய் 27 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.

வரவு-செலவு திட்டத்தை வெளியிடுவதற்கு பத்து நாட்கள் முன்னதாக, அரசாங்கம் தனது பெறுமதிசேர் வரியை (VAT) 11 சதவீதத்தில் இருந்து 15 சதவிகிதம் வரை அதிகரித்ததோடு உழைக்கும் மக்களால் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கே அது அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த வாட் வரி வலை, மாதம் 1 மில்லியன் ரூபா (6,800 டாலர்) வருவாய் ஈட்டும் வியாபாரங்களையும் உள்ளடக்கி விரிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் இதே மாதம் அரசாங்கம் சிகரெட் வரியை ஏழு ரூபாவால் அதிகரித்துள்ளது. வாட் அதிகரிப்பு உட்பட, சிகரெட்டின் மொத்த வரி வீதம் 90 சதவீதத்தை நெருங்கியுள்ளது.

வரவு-செலவு திட்டத்திலேயே உள்ளடக்கப்பட்டுள்ளவை:

* இணைய பயன்பாடு மீது ஒரு புதிய 25 சதவீத வரி (இதனுடன், இணைய பயனாளர்கள் மீதான வரி 45 சதவீதம் வரை அதிர்ச்சிதரும் வகையில் கூடியுள்ளது).

* புதிய அலைபேசி எண்ணை (சிம்) செயல்படுத்துவதற்கு 200 ரூபா வரி.

* அலைபேசிகள் மூலம் பணக் கொடுக்கல் வாங்கல் செய்வதற்கு 0.05 சதவீத வரி.

* லொத்தர் டிக்கெட்டுகளுக்கு 5 ரூபாய் வரி.

* விமான நிலையத்தில் பயணிகள் வரி 4,500 ரூபாவில் இருந்து 7,500 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

* வாகன புகை கழிவு (கார்பன்) வரியில் 50 முதல் 100 சதவிகிதம் வரை உயர்வு.

ஏனைய நடவடிக்கைகளில் பீடி, அல்கஹோல் செறிவு (எதனோல்) மற்றும் தொலைக்காட்சி நாடகங்கள் மீது வரி அதிகரிப்பும் அடங்கும். நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதன் மீதும் ஒரு புதிய வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 20 ரூபாவில் தொடங்கும் போக்குவரத்து அபராதம், 2,500 ரூபா வரை உயர்த்தப்படும்.

நவம்பர் 12 அன்று, அரசாங்கம் டிசம்பர் 1 முதல் நீர் கட்டணத்தை 30 சதவீதம் அதிகரிப்பதாக அறிவித்தது.

நவம்பர் 1 செயல்படுத்தப்பட்ட வாட் வரி உயர்வையும் சேர்த்து, புதிய வரி உயர்வுகள், அத்தியாவசிய நுகர்வோர் பொருட்கள் மற்றும் சேவைகள் விலை அதிகரிப்புடன் ஒட்டுமொத்த வாழ்க்கைச் செலவு அதிகரிக்கச் செய்யும். கடந்த மாதம் கொழும்பின் பணவீக்கம் 4.3 சதவீதத்தால் உயர்ந்தது.

அரசாங்கத்தின் நடவடிக்கைகள் சம்பந்தமான சமூக தாக்கத்திலிருந்து கவனத்தை திசை திருப்பும் ஒரு கொச்சையான முயற்சியாக, கருணாநாயக்க சில அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை 67 ரூபாவால் குறைக்கப்படலாம் என்றும் தெரிவித்தார். இவை அடிப்படையில் வாழ்க்கைச் செலவுகளை உள்ளடக்கியவை அல்ல.

இவற்றுக்கும் மேலாக, முதன்மை மற்றும் இரண்டாம் நிலை கல்விக்கான வரவு-செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு 60 சதவீதம் வரை வெட்டப்பட்டுள்ளது. இது 185 பில்லியன் ரூபாவில் இருந்து வெறும் 76 பில்லியன் ரூபாய்கள் வரை குறைக்கப்பட்டுள்ளது. பரவலான விமர்சனங்கள் எதிர்கொண்டுள்ள கருணாநாயக்க, மேலும் 17 பில்லியன் ரூபாய் அதிகரிப்பதாக வாக்குறுதியளித்தார். ஒப்பீட்டளவில் இது ஒரு அற்பம் அதிகரிப்பாகும்.

பல்கலைக்கழக கல்விக்கான ஒதுக்கீடு இந்த ஆண்டு 38 பில்லியன் ரூபாய்களில் இருந்து 5 பில்லியன் ரூபாய் குறைக்கப்படும். சுகாதாரத்துக்கான ஒதுக்கீடு இந்த ஆண்டு 174 பில்லியன் ரூபாயில் இருந்து 2017ல் 161 பில்லியனாக 13 பில்லியன் ரூபாய்களால் வெட்டப்படும்.

நிதி அமைச்சர் நிகழ்த்திய உரை, முக்கியமாக அரசாங்கத்தின் கல்வி தனியார்மயமாக்க விரிவாக்கல் திட்டத்தின் மீது இலக்கு வைத்திருந்தது. "நாட்டில் அரசு-சாரா பட்டப் படிப்பு வழங்கும் நிறுவனங்களுக்கு வசதியளிக்க வேண்டும்" என்று அவர் கூறியதோடு, மேலும் தனியார் உயர் கல்வியை ஊக்குவிக்க மாணவர்களுக்கு 800,000 ரூபா வங்கிக் கடன் திட்டம் ஒன்றையும் அறிவித்தார்.

கல்வி தனியார்மயத்துக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்புப் போராட்டம் நடத்தியதை கருணாநாயக்க கண்டித்தார். "கோஷங்களை சுமந்து கொண்ட, அரசியல் நோக்கம் கொண்ட சில குழுக்கள், இலஞ்சத்துக்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்காக நாம் நாட்டின் வளர்ச்சியை நிறுத்த அனுமதிக்க முடியாது," என அவர் கூறினார்.

அரசாங்க ஊழியர்களின் ஓய்வூதிய மீது மற்றொரு பெரிய தாக்குதலை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. நிதி அமைச்சர், "அரசாங்கத்தின் நிதி வழங்கப்படாத ஓய்வூதிய திட்டம், வெடிப்பதற்கு காத்திருக்கும் ஒரு நேர வெடிகுண்டாகும்" என கூறியதோடு மற்றும் அரசாங்கம் "பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை" அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது என அறிவித்தார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பங்களிப்புகளை ஊழியர்களின் ஊதியங்களில் இருந்தே கழிக்கப்படும்.

அரசுக்கு சொந்தமான நிறுவனங்களையும் திட்டிய கருணாநாயக்க, அவை "திறைசேரியை வடித்தெடுக்கின்றன" என கூறினார். அரசாங்கம் இலங்கை மின்சார சபை, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு நிதி வழங்குவது நிறுத்தப்படுவதோடு அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் செலவுகள் மற்றும் நட்டங்களை மீண்டும் ஈட்டுவதற்கு கட்டணங்களை அதிகரிக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ளது.

வரவு-செலவு திட்டமானது கல்வி, விவசாயம் மற்றும் ஏற்றுமதி வர்த்தகத்தின் மீது சலுகை அடிப்டையிலான கூட்டுத்தாபன வரியை சிறிது உயர்த்தியும் -2 சதவிகிதம் வரை- மற்றும் வருமான மூல வரியை 2.5 சதவீதம் அதிகரித்தும் உள்ள அதே வேளை, பெரிய முதலீடுகளுக்கு 100 மில்லியன் டாலர் வரை வரி சலுகைகள் வழங்கியுள்ளது.

நிதி அமைச்சு, ஆடம்பர வீடுகளை கொள்வனவு செய்யும் வெளிநாட்டு வாங்குவோருக்கு உள்ளூர் வங்கியில் 40 சதவீத கடன் பெறுவது உட்பட மேலும் பல்வேறு சலுகைகளை முன்மொழிந்துள்ளது. இதற்கும் மேலாக, இலங்கையில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களின் தலைமையகங்களுக்கு பெருநிறுவன வரிவிதிப்பில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இச்சலுகைகள் அன்னிய முதலீட்டை ஈர்க்கவும் நெருங்கிவரும் அந்நிய செலாவனி நெருக்கடியை தடுப்பதற்காகவும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் அவநம்பிக்கையான முயற்சிகளாக உள்ளன. பூகோள பொருளாதார பின்னடைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், 2016 முதல் ஏழு மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி சரிந்துள்ளதுடன் வெளிநாட்டு நேரடி முதலீடு 339 மில்லியன் டொடலார் 37 சதவிகிதம் குறைந்துவிட்டது.

கருணாநாயக்க நான்கு புதிய சுதந்திர வர்த்தக வலயங்கள் களுத்துறை, இரத்தினபுரி, புத்தளம் மற்றும் வவுனியாவில் அமைக்கப்படும் என்று அறிவித்தார். இந்த குறைந்த ஊதிய வலயங்கள் தனியார் துறையினரால் நிர்வகிக்கப்படுவதோடு ரப்பர், இரசாயனப் பொருட்கள், மருந்துகள், கனிம, துணி மற்றும் வாகன பொருட்களை உற்பத்தி செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர், இந்த சுதந்திர வர்த்தக வலயங்களிலும் மற்றும் ஏனைய துறைகளிலும், 45 மணி நேர வேலை வாரத்திற்குள் வளைந்து கொடுக்கும் வேலை நேரம், ஒப்பந்த வேலை காலம் ஆறு மாதத்தில் இருந்து ஒரு வருடமாக அதிகரிப்பு மற்றும் செயல்திறன் அடிப்படையிலான ஊதிய முறையையும் தொழிற்சங்கங்கள் அனுமதிக்கும் என எதிர்பார்ப்பதாக அறிவித்தார். பல தொழிற்சங்கங்களின் ஆதரவை வென்ற இந்த முன்மொழிவுகள், தொழிலாளர்களை அவர்களது விடுமுறை நாட்களில் வேலை செய்ய நிர்ப்பந்திப்பதுடன் ஒப்பந்த வேலையை ஊக்குவிப்பதோடு உயர்ந்த உற்பத்தி திறனை திணிப்பதற்கு ஊழியர்களை நெருக்கும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இந்த வரவு-செலவுத் திட்டம் நாட்டின் வளர்ச்சிக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அறிவித்தனர். இக்கூற்றுகள் கேலிக்கூத்தாகும்.

புதிய வரவு-செலவுத் திட்டமானது சர்வதேச நாணய நிதியத்தின் நேரடி கட்டளையின்படி இயற்றப்பட்டது. அதன் நோக்கம், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் பணக்காரர்களுக்கு அதிக சலுகைகள் வழங்குவதும் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மீது ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியின் சுமைகளை திணிப்பதும் ஆகும்.

பெரிய வணிகர்கள் உடனடியாக வரவு-செலவு திட்டத்தை பாராட்டியுள்ளனர். பற்றாக்குறையை குறைக்கவும் முதலீட்டுகளுக்கு புதிய முதலீட்டு சலுகைகளை வழங்கவும் மேற்கொண்ட நகர்வுகள் பற்றி குறிப்பிடுகையில், இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் சமந்த ரணதுங்க, "சில மிகப்பெரிய சவால்கள் நன்கு உள்ளடக்கப்பட்டுள்ளன" என்று கூறினார். தேசிய வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் திலக் கொடுமன்ன, அரசாங்கத்தின் திட்டங்கள் "மிகவும் நம்பிக்கை ஊட்டுகின்றன," என கூறினார்.