ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lanka: JVP leader expresses support for privatisation

இலங்கை: ஜே.வி.பி. தலைவர் தனியார்மயத்துக்கு ஆதரவு தெரிவிக்கின்றார்

By Saman Gunadasa 
27 August 2016

இந்த மாதம் நடந்த "இலங்கை பொருளாதார மாநாடு 2016" இல், மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைவர் அனுர குமார திசாநாயக்க, நட்டத்தில் இயங்கும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் கடன்களை அரசாங்கம் பொறுப்பேற்க முடியாத நிலையில், அவற்றை விற்பதற்கு தனது கட்சியின் ஆதரவை சுட்டிக்காட்டினார்.

இலங்கை வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு செய்து, உயர்மட்ட அரசாங்க தலைவர்கள் உரையாற்றிய ஒரு பெரிய வணிகக் கூட்டத்தில் கூறப்பட்ட திசாநாயக்கவின் கருத்துக்கள், ஒரு நிச்சயமான முக்கியத்துவம் உடையவை. 1960கள் மற்றும் 1970களில் மாவோவாத மற்றும் காஸ்ட்ரோவாத "ஆயுதப் போராட்டத்தின்" தீவிர ஆதரவாளராக இருந்த ஜே.வி.பி., இப்போது முழுமையாக கொழும்பு அரசியல் ஸ்தாபனத்துடன் ஒருங்கிணைந்துள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவையை தனியார்மயப்படுத்தினால் ஒரு கிராமவாசி கவலைப்படப் போவதில்லை என்று அந்த நிறுவனங்களின் கூட்டத்தில் கூறிய ஜே.வி.பி.யின் தலைவர், தான் தற்போதைய மாதிரியை மட்டுமே எதிர்ப்பதாக மேலும் கூறினார். "கடனை மக்கள் பொறுப்பேற்கப் போகிறார்கள் என்றால், பிறகு தனியார்மயமாக்குவதன் அர்த்தம் என்ன?" என அவர் கேட்டார்.

இந்த கருத்துக்கள், கடந்த ஏப்ரல் மாதம் ஒரு பிணை எடுப்பு கடன் வழங்குவதற்கு விதிக்கப்பட்ட ஒரு நிபந்தனையாக, சர்வதேச நாணய நிதியம் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்க கோரியது. இத்தகைய விற்பனைகள், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடந்த ஆண்டு 7.5 சதவீதமாக இருந்த வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை, 2020ல் 3.5 சதவீதமாக குறைக்குமாறு சர்வதேச நாணய நிதியம் கொடுத்த பரிந்துரைகளில் ஒரு முக்கிய அங்கமாகும்.

அரசாங்கம் ஏற்கனவே விற்பனைக்காக பல நிறுவனங்களை வரிசைப்படுத்தியுள்ளது. அது ஸ்ரீலங்கன் விமான சேவையின் விற்பனையை விளம்பரப்படுத்தியுள்ளதுடன் கொள்வனவு செய்யக்கூடியவரை ஈர்ப்பதற்காக விமானங்களில் ஆட்குறைப்பு செய்யத் தொடங்கியுள்ளது. தனியார்மயப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள ஏனைய அரச சொத்துக்களில் ஹில்டன் ஹோட்டல், கிராண்ட் ஹயாத் மற்றும் லங்கா ஹொஸ்பிடலும் அடங்கும்.

திசாநாயக்கவின் கருத்துக்கள், ஜே.வி.பி. ஒரு வணிக நட்பு கட்சி என பார்வையாளர்களுக்கு உறுதிசெய்வதை நோக்கமாகக் கொண்டிருந்தன. "தனியார் துறை நேரடியாக நம்முடன் கொடுக்கல் வாங்கல் செய்ய வேண்டும்," என்று அவர் கூறினார்.

அதன் ஜனரஞ்சக தோரணையை ஒதுக்கி வைத்துவிட்டு, கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலுக்கான ஜே.வி.பி.யின் விஞ்ஞாபனம், ஐந்து ஆண்டு வரி விலக்கு மற்றும் பொது-தனியார் கூட்டு ஏற்பாடுகளுக்குமான வாக்குறுதிகளுடன், பெரும் வர்த்தகர்களை குறிவைப்பதாக இருந்தது. பிரச்சாரத்தின் போதான ஒரு விசேஷ கூட்டத்தில், ஜே.வி.பி. "வணிகச் சமூகத்துடன் கைகோர்க்கத் தயாராக" இருப்பதாக உறுதியளித்தது.

கடந்த வருடம் ஜனவரி மாதம் நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த இராஜபக்ஷவை தோற்கடித்து ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அமைக்கப்பட்ட தேசிய செயற்குழு சபையில் (NEC) ஏற்கனவே ஜே.வி.பி. ஒரு பங்காளியாக உள்ளது. இந்த தேசிய செயற்குழு சபையானது அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் உயர்மட்ட குழுவாக இருப்பதோடு இதனால் அதன் வணிக சார்பு கொள்கைகளுக்கு பொறுப்பாக இருக்கின்றது.

ஜே.வி.பி, இராஜபக்ஷவை வெளியேற்றி ஜனாதிபதி தேர்தலில் சிறிசேனவை நியமித்த அமெரிக்க ஆதரவிலான ஆட்சி மாற்ற நடவடிக்கையை ஆதரித்தது. வாஷிங்டன், இராஜபக்ஷவின் ஜனநாயக விரோத நடவடிக்கைகள் மீதான கவலையினால் அவரை நீக்குவதற்கு முயலவில்லை, மாறாக, அவர் சீனாவுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்துக் கொண்டதற்கு எதிராகவே அவரை நீக்கியது.

திசாநாயக்கவின் பேச்சு, எவ்வாறு சிறந்த முறையில் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை விற்றுத்தள்ளுவது என ஆலோசனை வழங்கவே முக்கியமாக அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. அவர் தொலைத் தொடர்பு துறை திறம்பட தனியார்மயமாக்கப்பட்டது என வலியுறுத்திய அவர், "கடந்த காலத்தில் ஏனைய அனைத்து தனியார்மயமாக்கல் திட்டங்களும் தோல்வி கண்டதால், அவை எதிர்பார்த்த பெறுபேறுகளை வழங்காததால், தனியார்மயம் பற்றி மக்கள் மத்தியில் நியாயமான பீதி தூண்டிவிடப்பட்டது," என்றும் கூறினார்.

ஜே.வி.பி.யின் தலைவர், “எதிர்பார்த்த பெறுபேறு” என அவர் கூறியதன் பொருள் என்ன என்பதை விரிவாகக் கூறவில்லை. உண்மையில், வேலை இழப்புக்கள், உழைப்புப் படையின் சம்பளம், வேலை நிலைமைகளிலான வெட்டுக்கள், நுகர்வோருக்கு அதிக விலை போன்றவற்றை அர்த்தப்படுத்தும், இலாபங்களை உத்தரவாதப்படுத்தினால் மட்டுமே தனியார் முதலீட்டாளர்கள் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை வாங்குவர்.

ஜே.வி.பி. இலங்கை விமான சேவையை விற்பதை மௌனமாக ஆதரித்துள்ள அதே வேளை, அதன் ஊழியர்கள் தனியார்மயமாக்கலை எதிர்த்து போராடுகின்றனர்.

அரசாங்க நிதி வழங்கல் பற்றாக்குறை மற்றும் உயர்மட்ட ஊழல் காரணமாக, மானிய முறையிலான சேவைகள் வழங்குநர்களாக இருந்த அரசுக்குச் சுந்தமான நிறுவனங்களின் வகிபாகம் முடிவுக்கு வந்துவிட்டது. இலங்கை மின்சார சபை (இ.மி.ச.), தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (சி.பி.சி.) ஆகியவற்றில் ஏற்பட்ட நட்டத்தில் இருந்து மீள்வதற்காக, மின்சாரம், தண்ணீர் மற்றும் எரிபொருள் கட்டணங்களை மேலும் உயர்த்த வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தி வருகின்றது.

"அரசாங்கம் பிரதானமாக பொது தேவைகளுக்கு சேவை செய்வதற்காக அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களில் தனது பங்கிற்காக அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும்” என்று திசாநாயக்க அறிவித்தார். ஆனால், ஒரு பங்கைப் பராமரிப்பதானது விலை அதிகரிப்பது அல்லது தொழிலாளர்களின் இழப்பில் செலவுகளைக் குறைப்பதில் இருந்து அரசாங்கத்தை தடுத்துவிடாது.

பரந்த பொருளாதார பிரச்சினைகள் சம்பந்தமாக, ஜே.வி.பி. தலைவர், சமூக சமத்துவமின்மை மற்றும் வறுமை பெருகிவருவதன் ஆபத்து பற்றி எச்சரித்த அதே வேளை, வர்த்தக சார்பு கொள்கைகளைப் பரிந்துரைத்தார். "அரசாங்கம் உடனடியாக பாரிய கடன் சுமையை, ஏற்றுமதி வீழ்ச்சியை, வருமான சமத்துவமின்மையை, வர்த்தக பற்றாக்குறையை, உற்பத்தி பற்றாக்குறை மற்றும் (பொருளாதாரதை) அரசியலாக்குதையும் சமாளிக்க வேண்டும்," என்று அவர் அறிவித்தார்.

திசாநாயக்க, நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை சமாளிக்க ஒரு மினி வரவுசெலவுத் திட்டத்தை முன்மொழிந்தார். "அரசாங்கம் நிலைமை சமாளிக்க விரைவில் ஒரு மினி வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் முன்வைத்து, நடப்பு நிதி நிலைமை பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்தும் வேண்டும்," என்று அவர் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அவசரகால நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜே.வி.பி. தலைவர் விடுக்கும் அழைப்பு, வறுமை பற்றி அவர் கவலை கொண்டிருப்பதாக காட்டிக்கொள்வதன் மோசடித்தனத்தை அம்பலப்படுத்தியது. "இலங்கை மக்கள் தொகையில் 43 சதவிகிதத்தினர் 200 ரூபாவுக்கும் ($ US1.50) குறைவான ஒரு நாள் வருமானத்தில் வாழ்கின்றனர் என்று பிரதமரே பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த நாட்டின் அபிவிருத்தி என்று அழைக்கப்படுவதற்கு எதிரான என்ன ஒரு பயங்கரமான குற்றச்சாட்டு இது" என்று அவர் கூறினார்.

வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறையை குறைப்பதற்கான அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள், வர்த்தகத்தை அதிகரித்து, அரசாங்கத்தின் செலவுகளை குறைக்கும். இது தொழிலாளர்களின் மற்றும் கிராமப்புற ஏழைகளின் மீது புதிய சுமைகளை மட்டுமே சுமத்துவதுடன் சமூக ஏற்றத்தாழ்வுகள் வரிவடைவதற்கு வழிவகுக்கும்.

திசாநாயக்கவின் பேச்சு, இலங்கை ஆளும் தட்டினதும் சர்வதேச நிதி மூலதனத்தினதும் ஆணைகளை செயல்படுத்த தயாராக உள்ள, ஒரு முழு முதலாளித்துவக் கட்சியாக ஜே.வி.பி. உருமாற்றம் பெற்றிருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.