ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

On-the-spot report from Chennai
Death of Renault Nissan worker exposes reality of India’s pro-investor policies

ரெனால்ட் நிசான் தொழிலாளியின் இறப்பு இந்தியாவின் முதலீட்டாளர் சார்பு கொள்கைகளின் யதார்த்தத்தை அம்பலப்படுத்துகிறது

By Moses Rajkumar and Yuan Darwin
13 January 2017

இந்தியாவில், சென்னைக்கு அருகிலுள்ள ஒரகடம் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் (Oragadam Special Economic Zone) அமைந்துள்ள ரெனால்ட் நிசான் வாகன தொழிற்சாலையில் (Renault Nissan's auto plant) ஒரு இளநிலை பொறியாளராக பணியாற்றிவந்த 29 வயதான தியாகராஜன் மஹாலிங்கத்தின் கொடூரமான இறப்பு நாட்டின் பெரும்பாலான தொழிற்சாலைகளில் காணப்படுகின்ற கொடுமையான வேலை சூழ்நிலைகளை வெளிப்படுத்துகிறது. தொழிற்சாலை பராமரிப்பு துறையில் ஒரு இயந்திர பொறியாளரான மஹாலிங்கம் ஜனவரி 6 அன்று இயந்திர ஒருங்குபடுத்தும் பிரிவில் இயந்திரத்தை ஆய்வு செய்துகொண்டிருந்தபோது ஒரு நீரியல் அழுத்தி மூலமாக நசுக்கப்பட்டு இறந்தார்.

பிரதம மந்திரி நரேந்திர மோடியின் இந்துமத மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சி (BJP) அரசாங்கத்தினால் இயற்றப்பட்ட தொழிலாளர் சட்டங்களில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்களினால் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களின் இலாப தேவைகளுக்கு கீழ்படிந்ததாகவே அடிப்படை பாதுகாப்பு உள்ளது.  தொழிற்சாலை ஆய்வு அமைப்பு மோடியினால் பலவீனப்படுத்தப்பட்டதால் அது, மஹாலிங்கம் போன்ற இளம் தொழிலாளர்களின் உயிரை பறிக்கின்ற வகையிலான, முற்றிலும் தவிர்க்கப்படக்கூடிய விபத்துக்களில் ஒரு அதிகரிப்பினை விளைவித்துள்ளது.

ரெனால்ட் நிசான் தொழிற்சாலை  ஒரு பூகோளரீதியான முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக இருப்பதுடன், இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாகவும் உள்ளது. இது பிரான்ஸ் சார்ந்த ரெனால்ட் மற்றும் ஜப்பான் சார்ந்த நிசான் ஆகியவற்றின் கூட்டுடன் 1999ல் நிறுவப்பட்டதுடன், பூகோளரீதியாக கிட்டத்தட்ட 450,000 தொழிலாளர்களை பணியமர்த்தியுள்ளது. இந்த நிறுவனம் 2010ல் ஒரகடத்தில் அதன் இந்திய செயல்பாடுகளைத் தொடங்கியது. இந்த நகரம், தென் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.


ரெனால்ட் நிசான் தொழிற்சாலையின் நுழைவாயில்

இந்த ஒரகடம் தொழிற்சாலை வருடத்திற்கு 480,000 கார்களை உற்பத்தி செய்வதுடன், இந்தியா மற்றும் உலகளவில் 106 நாடுகளிலும் அவற்றை விற்பனை செய்கின்றன. நிரந்தர, ஒப்பந்த, மற்றும் பயிற்சி பெறுகின்ற தொழிலாளர்கள் உட்பட 10,000 க்கும் அதிகமான தொழிலாளர்களை இந்த தொழிற்சாலை பணியமர்த்தியுள்ளது. மோடியின் சமூக விரோத போக்கான பணம் செல்லாததாக்குதல் கொள்கைகளின் தாக்கத்துடன் சேர்ந்து  பூகோள மந்தநிலையையும் எதிர்கொண்டிருக்கின்ற நிலையில் இந்த நிறுவனம் கடந்த மாதத்தில் 900 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்தது.

இந்த இளம் தொழிலாளியின் இறப்பு குறித்து இந்த நிறுவனம் ஒரு வழக்கமான அறிக்கையினை பின்வருமாறு வெளியிட்டது: "எப்பொழுதும் எங்களது ஊழியர்களின் பாதுகாப்பும், நலனும் தான் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. Renault-Nissan Automotive India Pvt Ltd நிறுவன ஊழியர் தியாகராஜன் மஹாலிங்கம் ஜனவரி 6 அன்று ஆலையில் ஏற்பட்ட ஒரு தொழிற்துறை விபத்தில் இறந்தது குறித்து நாங்கள் ஆழ்ந்த வருத்தமடைந்து இருக்கிறோம்."

அவருடைய இறப்பினைத் தொடர்ந்து, உடனே ஆலையில் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்ட எதிர்ப்பின் விளைவாக அச்சமுற்று, இந்த நிறுவனம் உடனடியாக தொழிலாளர்கள் வளாகத்தைவிட்டு வெளியேறுவதற்கு உத்திரவிட்டது. அடுத்த நாள், சனிக்கிழமை, விடுமுறையாக அறிவிக்கப்பட்டதுடன், திங்கட்கிழமை காலை வரையிலும் ஆலை திறக்கப்படவில்லை.


உலக சோசலிச வலைத்தள நிருபர் ஒப்பந்த தொழிலாளர்களுடன் உரையாடுகிறார்.

ரெனால்ட் நிசான் ஆலை வாயிற் பகுதியில் இருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் மஹாலிங்கத்தின் இறப்பு குறித்து உலக சோசலிச வலைத்தளத்திடம் பேசினார்கள். நிரந்தர தொழிலாளர்கள் பணிக்கு உள்ளே அழைத்து வரப்படுவதும், வெளியே கொண்டு செல்லப்படுவதும் நிறுவன பேருந்துகள் மூலமாக என்பதால் எங்களது நிருபர்களால் அவர்களுடன் பேச முடியவில்லை. நிரந்தர தொழிலாளர்களுக்கு நிகராக அதேயளவு வேலையினை ஒப்பந்த தொழிலாளர்களும் செய்கின்ற நிலையிலும் நிரந்தர தொழிலாளர்கள் பெறுகின்ற ஊதியத்தில் ஒரு சிறு பகுதி தான், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதியமாக வழங்கப்படுவதனால் இந்திய நிறுவனங்கள் அதிகமான அளவில் ஒப்பந்த தொழிலாளர்களையே பயன்படுத்துகின்றனர். தொழில்துறை தொழிலாளர்களின் கடந்தகால போராட்டங்களின் காரணமாக , நிரந்தர தொழிலாளர்களுக்கு கிடைத்த வரம்புக்குட்பட்ட நன்மைகளும் பிற உரிமைகளும் கூட அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளன.

Trigo ஒப்பந்த நிறுவனத்தை சேர்ந்த 23 வயதான மாரீஸ்வரன் என்ற ஒரு தொழிலாளி உலக சோசலிச வலைத் தளத்திடம் பேசினார். "நான் ஒரு BE (Bachelor of Engineering) பட்டதாரி, அத்துடன் என்னுடன் வேலைசெய்யும் அனைவருமே பட்டதாரிகள்தான். நான் மாத ஊதியமாக ரூபாய் 12,000 (US$176) பெறுகிறேன். நிரந்தர தொழிலாளர்களுக்கு அளிக்கப்படுகின்ற சலுகைகளான உணவகம் மற்றும் பேருந்து வசதிகளை நாங்கள் பெறமுடிவதில்லை. தேநீர் மற்றும் உணவுக்கு நாங்கள் சொந்த பணத்தை செலவு செய்யவேண்டியுள்ளது. எனது கல்வி தகுதிக்கு ஏற்றவாறு எனக்கு ஊதியமும் வழங்கப்படவில்லை. என்னுடைய சக தொழிலாளர்களில் பலர் அரியலூர், திருச்சி மற்றும் சிவகாசி, போன்ற தமிழ்நாட்டின் தென்கீழ் பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். நாங்கள் அனைவரும் திருமணமாகாதவர்களாக இருப்பதால் ஒரு வாடகை அறையில் ஒன்றாக தங்கியிருக்கிறோம்."

அந்த இளம் பொறியாளரின் இறப்பு குறித்து கருத்து தெரிவித்த அவர், "இயந்திரங்களின் பராமரிப்பினை மேற்கொள்கின்ற, தொழில்நுட்ப வல்லமை கொண்ட ஒரு பொறியாளருக்கே இவ்வாறு நிகழ்ந்தது என்றால் தொழில்நுட்ப பிரச்சனைகள் பற்றி அறியாத தொழிலாளர்களுக்கு என்ன நடக்கும்? பொறியாளர் நிர்வாக ஊழியராக இருந்ததால், அவரது நெருங்கிய உறவினர்கள் இழப்பீடு பெறும் வாய்ப்புள்ளது. ஆனால், இதுவே ஒரு தொழிலாளருக்கு நடந்திருந்தால், அவருக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது? நிரந்தர தொழிலாளர்கள் செய்யும் அதே வேலையைத்தான் நாங்களும் செய்கிறோம் ஆனால் எங்களுக்கு கிட்டத்தட்ட பாதியளவு ஊதியமே வழங்கப்படுகிறது. நிர்வாகம் தொழிலாளர்களை பிரித்து வைத்திருக்கவே முயற்சி செய்வதுடன், ஒப்பந்த தொழிலாளர்களுக்கென்று உள்நுழைவுக்கும், வெளியேறுவதற்கும் கூட ஒரு தனிப்பட்ட பாதையை அமைத்துள்ளது."

உலக சோசலிச வலைத் தளத்தில் அவரது கருத்துக்களை பிரசுரிக்க வலியுறுத்தியது மட்டுமல்லாமல், "சர்வதேச அளவில் தொழிலாளர்களை ஒன்றிணைக்க உலக சோசலிச வலைத் தளம் போராடி வருவது குறித்து அவர் ஈர்க்கப்பட்டதாகவும்" தெரிவித்தார்.

SS Utility Service இனை சேர்ந்த 27 வயதான ஒரு தொழிலாளியான சக்திவேல் என்பவர், "நான் இந்த நிறுவனத்தில் ஒன்றரை வருடங்களாக வேலை செய்துவருகிறேன். ஒரு வருடத்திற்கு பெரும்பாலும் பத்து மாதங்கள் எங்களுக்கு இங்கு வேலை இருக்கும். காஞ்சிபுரம் அருகிலுள்ள ஒரு கிராமத்திலிருந்து நான் வருகிறேன். நான் மாத வருமானமாக பெறுகின்ற ரூபாய் 10,000 (US$147) ஒரு குடும்ப பராமரிப்பிற்கு போதுமானதாகவும் இல்லை." என்று கூறினார்.

மஹாலிங்கத்தின் இறப்பு குறித்து அவர் கூறுகையில், "அவர் இந்த மாதம் திருமணம் செய்துகொள்வதாக இருந்தார். அவர் இறந்தபோது அவர் வேலை செய்துகொண்டிருந்த அதே இடத்தில் தான் நானும் வேலை செய்துகொண்டிருந்தேன். ஒரு பராமரிப்பு அதிகாரி என்ற முறையில் ஒரு நீரழுத்த இயந்திரம் எனும் ஒரு துளையிடும் கருவியில் இருந்த ஒரு உணர்வுதிறன் பிரச்சனை (sensor problem) பற்றி அவர் ஆய்வு செய்துகொண்டிருந்தார். செயலற்ற உணர்வுதிறன் பிரச்சனையை (non-functioning sensor) ஆய்வு செய்வதற்காக துளையிடும் இயந்திரத்தின் அடிப்பகுதி ஊடாக தனது தலையினை வைத்தார். எனினும், அவரது தலை உள்ளே இருந்தபோதே, திடீரென துளையிடும் இயந்திரம் வேலை செய்ய தொடங்கிவிட்டது, அதன் அடியிலிருந்த அவரது தலையை நசுக்கிவிட்டது." என்றும் தெரிவித்தார்.

Place Craft ஒப்பந்த நிறுவனத்தை சேர்ந்த 27 வயதான ஒரு தொழிலாளியான சிவசங்கரன், "நான் இந்த நிறுவனத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக வேலை செய்துவருகிறேன். தொழிற்சாலைக்குள் மூன்று ஒப்பந்த நிறுவனங்கள் வழங்கும் ஒப்பந்த தொழிலாளர்களும் நிரந்தர தொழிலாளர்களுடன் சேர்ந்து ஒன்றாக வேலை செய்கிறார்கள். இந்த தொகுப்பில் இருக்கும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு, நிறுவனம் பேருந்து மற்றும் உணவக வசதிகளை வழங்குகிறது. எனக்கு மாதத்திற்கு ரூபாய் 10,000 ஊதியமாக வழங்கப்படுகிறது. இதில் ESI (health insurance) மற்றும் PF (Provident Fund) போன்ற பிடித்தங்கள் செய்த பின்னர் நிகர வருமானமாக நான் ரூபாய் 8,500 பெற்றுவருகிறேன். அதிலும் எங்களுக்கு தொடர்ந்து வேலையும் கிடைப்பதில்லை. ஆண்டு தொடக்கத்தில் முதல் இரண்டு மாதங்களுக்கு எந்த வேலையும் இருப்பதில்லை. மூன்றாவது மாதத்தில், இன்று எதேனும் வேலை கிடைக்கிறதா என்று பார்ப்பதற்கு நாங்கள் நிறுவனத்தின் வாயில் வரை வரவேண்டும்."

தான் ஒரு விவசாய குடும்பத்திலிருந்து மிகுந்த கஷ்டங்களுக்கு இடையில்தான் வருவதாக அவர் கூறினார். "இந்த குறைந்த கூலியை கொண்டு எனது குடும்பத்தை நடத்துவது என்பதும் மிகவும் கடினமானது, மேலும் குழந்தைகளின் கல்வி செலவினை சமாளிப்பதற்கு கூட இயலவில்லை என்பதையும் நான் பார்க்கிறேன்" என்றும் தெரிவித்தார்.

பாதுகாப்பிற்கு "உயர் முன்னுரிமை" அளிப்பது பற்றிய நிர்வாகத்தின் அனைத்து பேச்சு இருந்த போதிலும், மஹாலிங்கத்தின் இறப்பு தொழிற்சாலையில் இருக்கும் அபாயகர நிலைமையினை வெளிப்படுத்திய முதல் நிகழ்வு அல்ல. 2013ல் ரெனால்ட் நிசான் உபகரணசேவை வழங்கல் (Renault-Nissan's logistics company) நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் போதே பாதுகாப்பற்ற நிலைமைகள் குறித்த கடுமையான கேள்விகள் எழுந்தன. மலிவு உழைப்பினையும், சில கட்டுப்பாடுகளையுமே தேட முனைகின்ற உலகளவிலான கார் தயாரிப்பாளர்களால் நடத்தப்படுகின்ற இன்னும் பிற தொழிற்சாலைகளிலும் இதேபோன்ற நிலைமை என்பதே உண்மை. இருங்காட்டுக்கோட்டை சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ள ஒரு ஹுண்டாய் மோட்டார் ஆலையில் சமீபத்தில் ஏற்பட்ட ஒரு விபத்தில் ஒரு தொழிலாளி இறந்தார். அத்துடன் ஒரு பயிற்சியாளரும் கடுமையான காயமடைந்து பாதிக்கப்பட்டார்.

வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான ஒரு முயற்சியாக, மோடி எஞ்சியிருக்கும்  வரம்புக்குட்பட்ட பாதுகாப்பு விதிமுறைகளையும் தளர்த்தியுள்ளார். அரசாங்க தொழிலாளர்துறை ஆய்வாளர்கள் வழக்கமாக சென்று பார்வையிட வேண்டிய இடத்தில், மோடி "சுய-சான்றிதழ் அளிக்கும் திட்டத்தை" முன் வைக்கின்றார், அது தொழிற்சாலை உரிமையாளர்களே அவர்கள் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றுவதாக அறிவிக்கும் சான்றிதழ்களை அவர்களே அளித்திட அனுமதியளிக்கின்றது.  ஆந்திர பிரதேசம், குஜராத், மஹாராஷ்டிரா, பஞ்சாப், இராஜஸ்தான் மற்றும் உத்திர பிரதேசம் உட்பட குறைந்தபட்சம் 10 இந்திய மாநிலங்களில் இதுபோன்ற திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. எந்த தொழிற்சாலைகள் மீது அவர்கள் ஆய்வு செய்ய விரும்புகின்றனர் என்பது தொடர்பாக தொழிலாளர்துறை ஆய்வாளர்களும் தங்களது அறிவுடைமையினை இழக்க நேரிடுவதுடன், அதற்கு பதிலாக ஒரு கணினி உருவாக்கிய பட்டியலினை அடிப்படையாக கொண்டு செயலாற்ற வேண்டிய நிலைமை ஏற்படும்.

தேசிய பாராளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவையில் (Lok Sabha) இந்த நடவடிக்கைகளுக்கு எற்கனவே ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேல் சபையான இராஜ்ய சபாவில் பெரும்பான்மை ஆதரவு இல்லாத நிலையில், மோடி அரசாங்கத்தினால் இந்த மசோதாவை இதுவரை அமுல்படுத்த இயலவில்லை. எனினும், இந்த மசோதா சட்டமாக்கப்பட்டு அமுல்படுத்தப்படுமாயின் அடிப்படை பாதுகாப்பு விதிமுறைகளை முதலாளிகள் முற்றிலும் அலட்சியப்படுத்துவார்கள்.