ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Allegations of manipulation in French Socialist Party’s presidential primary

பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு தேர்தல் மீது மோசடி குற்றச்சாட்டுக்கள்

By Alex Lantier
24 January 2017

ஞாயிறன்று நடந்த ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு தேர்தலின் முதல் சுற்றுக்குப் பின்னர், PS இன் ஜனாதிபதி வேட்பாளர்கள் பெனுவா அமோனும் மானுவல் வால்ஸூம் சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் அந்தஸ்தை பெறுவதற்கான இரண்டாம் சுற்று தேர்தலுக்காக பிரச்சாரம் செய்ய தொடங்கிய நிலையில், இப்போட்டி மோசடி குற்றச்சாட்டுக்களால் தரந்தாழ்ந்துள்ளது. இது சோசலிஸ்ட் கட்சிக்கு மற்றொரு அடியை கொடுக்கிறது. PS ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டின் சிக்கன திட்டங்கள் மற்றும் போருக்கான செயல்வரலாற்றால் ஆழமாக மதிப்பிழந்துள்ள அது, ஏப்ரல்-மே 2017 ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் வாக்காளர்களால் துடைத்தெறியப்பட்டு சாத்தியமான உடைவையும் முகங்கொடுத்துள்ளது.

சோசலிஸ்ட் கட்சி நிர்வாகிகளின் கருத்துப்படி, திங்களன்று காலையில், ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு தேர்தலில் வாக்காளர் பங்கெடுப்பானது அதற்கு முந்தைய இரவுடன் ஒப்பிடுகையில் 350,000 அளவிற்கு அதிகரித்து 1.6 மில்லியனை எட்டியது. வலதுசாரி குடியரசு கட்சி (LR) ஜனாதிபதி வேட்பாளர் தேர்தலில் பங்கெடுத்த 4 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்களுடன் ஒப்பிடுகையில், இந்த வேட்பாளர் தேர்வு தேர்தலில் 2 மில்லியன் வாக்காளர்கள் பங்கெடுப்பர் என்று அறிவிக்க அவர்கள் நம்பியிருந்ததாக சோசலிஸ்ட் கட்சி நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர். விளங்கப்படுத்த இயலாத வகையில் கூடுதல் வாக்குகள் கிடைத்த போதினும், வெவ்வேறு சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர்களின் வாக்கு சதவீதங்களில் மாற்றமிருக்கவில்லை, இதில் சில்வியா பினெல் என்ற வேட்பாளருக்கு 161 கூடுதல் வாக்குகள் விளக்கமின்றி கிடைத்திருந்தது.

ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு தேர்தலை ஒழுங்கமைத்த கிறிஸ்தோப் போர்கெல் ஓர் அர்த்தமற்ற மற்றும் ஏற்றுக் கொள்ள முடியாத விளக்கத்தை வழங்கியதுடன் சேர்ந்து, அந்த குளறுபடியைக் கணினி கோளாறு மீது சாட்டி, பின்னர் வேட்பாளர் தேர்வு தேர்தலுக்கான வலைத் தளத்தில் அவரது குழு துல்லியமற்ற, சரிபார்க்கப்படாத முடிவுகளை பதிப்பித்ததாக ஒப்புக் கொண்டார். இதன் நோக்கம் வெளிப்படையாகவே, உண்மையில் வெவ்வேறு வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்திருந்தார்களோ அது தெரிவதற்கு முன்னதாகவே, வாக்காளர் பங்களிப்பை அதிகரித்து காட்டுவதற்காக இருந்தது.

போர்கெல் அறிவித்தார், “அங்கே குளறுபடி நடந்திருந்தது, அதைவிட வேறொன்றுமில்லை. அது ஒருவிதத்தில் எனது பிழை தான். அங்கே வாக்களித்தவர்களின் மட்டங்கள் குறித்து நிறைய அழுத்தம் இருந்தது; [வாக்காளர் பங்களிப்பு மீதான] எண்ணிக்கை குறித்து எந்தளவிற்கு சாத்தியமோ அந்தளவிற்கு விரைவாக விவரங்களைப் புதுப்பிக்க வேண்டுமென நான் கேட்டுக் கொள்ளப்பட்டேன். உண்மையில், [வேட்பாளர்கள் பெற்ற] புதிய மொத்த வாக்காளர் எண்ணிக்கை சதவீதங்களை ஒரு நாளுக்கு முன்னரே தீர்மானித்துவிட்டோம்,” என்றார்.

இந்த பின்மாலைப்பொழுதில், போர்கெல், “கணினி குளறுபடி என்பதை விட" அது "அதிகளவில் மனித பிழையே" என்று கூறி, அந்த தவறான விபரங்களுக்கு “எண்ணிக்கைகளை இணையத்தில் பதிப்பித்த ஒரு சோசலிஸ்ட் கட்சி உறுப்பினரின் பிழை" என்று பழிசுமத்தினார்.

விளங்கப்படுத்த முடியாத 161 வாக்குகளை பினெலுக்கு ஒப்படைக்கப்பட்டமை குறித்து குறித்து வினவியபோது, போகெல் கூறினார், “அதுவும் ஒரு பிழை தான். அங்கே நிறைய பிழைகள் இருந்தன. அதற்கு பொறுப்பு, சேவை-வழங்கும் நிறுவனமா அல்லது உள்ளமைந்துள்ள தகவல் தொழில்நுட்ப அமைப்புமுறையா என்பது எனக்குத் தெரியவில்லை, இந்த ஜனாதிபதி வேட்பாளர் தேர்தலில் பல்வேறு எந்திரங்களில், பைத்தியக்காரர்களைப் போல வேலை செய்து கொண்டிருந்தவர்கள் மீது நான் பழிசுமத்த மாட்டேன்,” என்றார்.

அமோனின் குழு உறுப்பினர் ஒருவர் L’Internaute.com க்கு கூறுகையில், வால்ஸ் "அவரது கடுமையான சூழலின் கீழ்,” அவர் "முகத்தைத் தொலைத்து விடக்கூடாது" என்பதற்காக எண்ணிக்கைகளை முடிவு செய்ய தீர்மானித்திருக்கலாமென அவர் சந்தேகித்ததாக தெரிவித்தார்.

நேற்று சுமார் 7 மணியளவில், சோசலிஸ்ட் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல் நிர்வாகிகள் அவர்கள் சரிபார்த்துவிட்டதாக அறிவித்த உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளை பதிப்பித்தனர். இதில் அமோனுக்கு 35.86 சதவீதம் வாக்குகளும், முன்னாள் பிரதம மந்திரி வால்ஸ் க்கு 31.22 சதவீதமும், மற்றும் முன்னாள் தொழில்துறை அமைச்சர் ஆர்னோ மொண்டபூர்க்கிற்கு 17.30 சதவீத வாக்குகளும் இருந்தன.

இந்த குளறுபடி குறித்த குற்றச்சாட்டுக்கள், சோசலிஸ்ட் கட்சியின் விரக்தி நிலையையும் ஜனாதிபதி தேர்தலில் அதுவொரு அழிவை முகங்கொடுக்கின்ற நிலையில் அதன் பதவிகளுக்குள் முன்பினும் கூர்மையான கன்னை மோதல்களையும் உயர்த்திக் காட்டுகிறது. அமோனும் சரி அல்லது வால்ஸூம் சரி, அவர்கள் ஹோலாண்டின் முன்னாள் ஆலோசகரும் ரோத்ஸ்சைல்ட் வங்கியாளருமான எமானுவெல் மாக்ரோனுக்கும், மற்றும் முன்னாள் இடது கட்சி தலைவர் மற்றும் சோசலிஸ்ட் கட்சி அமைச்சர் ஜோன்-லூக் மெலோன்சோனுக்கும் பின்னால் தள்ளப்பட்டு, 10 சதவீதத்திற்கும் கூடுதலான வாக்குகளை வெல்வார்கள் என்று அவர்கள் அனுமானிக்கவில்லை. வலதுசாரி வேட்பாளர் பிரான்சுவா ஃபிய்யோன் மற்றும் நவ-பாசிசவாத மரீன் லு பென்னுக்கு இடையிலான ஒரு போட்டிக்கு களம் அமைத்து, இந்த வேட்பாளர்கள் அனைவரும் போட்டியிலிருந்து வெளியேற்றப்படலாம் என்று தற்போதைய கருத்துக்கணிப்புகள் குறிப்பிடுகின்றன.

வால்ஸ் மற்றும் ஹோலாண்டை பொறுத்த வரையில், இந்த எண்ணிக்கை மேற்கொண்டும் அவமானகரமான பின்னடைவாகும். ஹோலாண்ட் அவர் மீதான ஆழ்ந்த மக்கள் வெறுப்பின் காரணமாக தாம் போட்டியிடப் போவதில்லை என்று முடிவெடுத்ததற்குப் பின்னர், —1958 இல் ஜனாதிபதி பதவி உருவாக்கப்பட்டதற்குப் பின்னர் ஒரு பிரெஞ்சு ஜனாதிபதி மறுதேர்வுக்காக போட்டியிடாமல் இருப்பது இதுவே முதல்முறையாகும்— வால்ஸ், இவர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்காக பதவியை இராஜினாமா செய்யும் வரையில் ஹோலாண்டின் மிகவும் விருப்பத்திற்குரிய அமைச்சராக கருதப்பட்டு வந்த நிலையில், தோற்கடிக்கும் நிலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மொண்டபூர்க், அவரது வாக்காளர்களை அமோனுக்கு வாக்களிக்க கேட்டுக் கொண்டுள்ள நிலையில், மற்றும் பெயொன் இன்னமும் யாரை ஆதரிப்பதென்று முடிவெடுக்காத நிலையில், ஞாயிறன்று இரண்டாம் கட்ட தேர்தலில் அமோன் வால்ஸைத் தோற்கடிப்பார் என்று கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன. அவர் வாக்குகளில் 52 சதவீதத்தை வெல்லக்கூடும்.

நேற்று போர்தோவைச் சுற்றியுள்ள ஜிரோன் பிராந்தியத்தின் Cenon தேர்தல் கூட்டத்தை வால்ஸ் இரத்து செய்தார். நேற்றிரவு TF1 தொலைக்காட்சியில் பேசுகையில், அரசால் சகல பிரெஞ்சு மக்களுக்கும் ஒரு குறைந்தபட்ச வருவாய் வழங்குவதற்கான அமோனின் முக்கிய முன்மொழிவை, "நமது தேசிய வரவு-செலவு திட்டக்கணக்கை நாசப்படுத்துவது" என்று தாக்கியதுடன், அமோனை "உழைப்பை முடிவுக்குக் கொண்டு வர வக்காலத்து வாங்குபவர்" என்று கண்டித்தார்.

எவ்வாறிருப்பினும் வால்ஸ் பிரச்சாரம், சோசலிஸ்ட் கட்சியின் பிரிவுகளால் முன்பினும் அதிகமாக அழுத்தமளிக்கப்படும் கோரிக்கைகளால், அதாவது குறிப்பாக லியோனின் நகரசபை தலைவர் ஜெரார்ட் கொல்லாம்பைச் சுற்றியிருப்பவர்கள், அமோன் வெற்றியை உருவாக்குவதற்கு முன்னதாக சோசலிஸ்ட் கட்சி நிர்வாகிகள் வேட்பாளர் தேர்வு தேர்தல் நடைமுறையை கைவிட வேண்டும் என்றும் அதற்கு மாறாக மாக்ரோனை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க வேண்டுமென்றும் அழைப்பிடுவதால், வால்ஸ் பிரச்சாரம் வேகமாக பலவீனமடைந்து வருகிறது.

1968 மே-ஜூன் பொது வேலைநிறுத்தத்திற்குப் பின்னர், அண்மித்து ஒரு அரை நூற்றாண்டுக்கு முன்னர் அது ஸ்தாபிக்கப்பட்டதற்குப் பின்னர் இருந்து பிரான்சில் முதலாளித்துவ ஆட்சியின் அஸ்திவாரமாக விளங்கும் சோசலிஸ்ட் கட்சி, பொறிவை முகங்கொடுத்து நிற்கிறது. ஐரோப்பிய ஒன்றியமும் ஐரோப்பா எங்கிலுமான சமூக-ஜனநாயக கட்சிகளும், தசாப்தகாலமாக சிக்கனத் திட்டங்கள் மற்றும் போருக்கான கொள்கைகளைப் பின்பற்றியதால் மதிப்பிழந்து போயுள்ள நிலையில், சோசலிஸ்ட் கட்சியும் கிரீஸின் பாசோக் கட்சியைப் போல ஒரு சிறிய நாடாளுமன்ற கட்சியாக சிதைந்து பொறிந்துபோக அதேவழியில் போய் கொண்டிருக்கிறது.

கடந்த ஓரிரு வாரங்களில் கருத்துக்கணிப்புகளில் முன்னுக்கு வந்த அமோனின் ஆச்சரியப்படுத்தும் வெற்றியானது, அவரது அனைவருக்குமான குறைந்தபட்ச சம்பளத்திற்கான அழைப்பை தங்களின் கொள்கைகளுக்கு ஒரு "இடது" முகம் அளிப்பதற்கான முயற்சிக்காக பயன்படுத்தி, தங்களின் எதிர்காலத்திற்கு புத்துயிரூட்ட முயற்சிப்பதற்கு சோசலிஸ்ட் கட்சியின் பிரிவுகளை இட்டு செல்கிறது. இது, இந்த நடவடிக்கையை ஆதரித்த சோசலிஸ்ட் கட்சி வாக்காளர்களில் 55 சதவீதத்தினரை ஒரு குறிப்பிட்டளவிற்கு செவிமடுக்க செய்திருக்கிறது என்பதைப் பொறுத்த வரையில், அவர்கள் ஹோலாண்ட் மீதான தங்களின் கோபம் மற்றும் எதிர்ப்பை பதிவு செய்வதற்கே அமோனுக்கு வாக்களித்தனர்.

ஆனால் 1969 இல் அது ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்து, ஒரு பிற்போக்குத்தனமான முதலாளித்துவ கட்சியாக இருந்து வரும் சோசலிஸ்ட் கட்சியின் ஏதேனுமொரு கன்னையை ஆதரிப்பதன் மூலமாக, ஹோலாண்டின் திட்டத்தை எதிர்ப்பது சாத்தியமில்லை. அமோன் அவரே கூட ரஷ்ய-விரோத முறையீடுகளின் அடிப்படையில் பிரச்சாரம் செய்தார் மற்றும் பொலிஸ் அதிகாரங்களை அதிகரிக்க அழைப்புவிடுத்தார், மேலும் அவர் கொள்கைகளும் மிக குறைவாகவே ஆதரவைப் பெற்றுள்ளன. அனைவருக்கும் குறைந்தபட்ச சம்பளத்திற்கான அவரின் முன்மொழிவை 61 சதவீத மக்கள் எதிர்ப்பதுடன், பெருமளவிலான மக்களிடையே மதிப்பிழந்துள்ளது, ஆனால் ஹோலாண்டின் தொழிலாளர் சட்டத்தை நீக்குவதற்கு 63 சதவீத ஆதரவுள்ளது.

Lille நகரசபை தலைவர் Martine Aubry மற்றும் ஹோலாண்டின் முன்னாள் நீதித்துறை அமைச்சர் Christiane Taubira உட்பட பல்வேறு உயர்மட்ட சோசலிஸ்ட் கட்சி பிரமுகர்களின் ஒப்புதலை அமோன் பெற்றுள்ளார்.

தேசிய சட்டமன்றத்தில் சோசலிஸ்ட் கட்சியின் "கிளர்ச்சி" கன்னையுடன் இணைப்பு கொண்ட ஹோலாண்ட் நிர்வாக அமைச்சர்களான அமோன் மற்றும் மொண்டபூர்க் போலவே, Aubry மற்றும் Taubira உம் ஹோலாண்ட் நிர்வாகத்தின் பல முக்கிய நடவடிக்கைகளுக்கு பகிரங்கமான விமர்சகர்களாக இருந்துள்ளனர். அரசாங்கமும் தொழிற்சங்கமும் பிரான்சின் தொழிலாளர் நெறிமுறைகளில் உள்ள பாதுகாப்புகளை அழிப்பதற்கு அனுமதிக்கும் ஹோலாண்டின் பிற்போக்குத்தனமான தொழிலாளர் சட்டத்தை Aubry விமர்சித்தார் மற்றும் பிரெஞ்சு குடியுரிமையை பறிக்கும் அரசு அதிகாரத்தை அரசியலமைப்பில் உள்ளடக்குவதற்கான ஹோலாண்டின் அழைப்பை Taubira எதிர்த்தார்.

இருந்தபோதிலும், அதன் பிற்போக்குத்தனமான திட்டங்களுக்காக ஹோலாண்டின் அரசாங்கத்தை தேசிய நாடாளுமன்றத்தில் கலைக்க விரும்பாத சோசலிஸ்ட் கட்சி "கிளர்ச்சியாளர்களைப்" போலவே, Aubry மற்றும் Taubira இருவருமே அவர்களது விமர்சனங்களுக்கு இடையிலும் அவர்கள் தொடர்ந்து ஹோலாண்டை ஆதரித்தனர்.