ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Wealth distribution in the United States and the politics of the pseudo-left

அமெரிக்காவில் சொத்து பங்கீட்டுநிலையும் போலி-இடதுகளின் அரசியலும்

By Eric London
18 January 2017

பேர்க்கெலி, கலிபோர்னியா பல்கலைக்கழக பொருளாதார அறிஞர்களான தோமஸ் பிக்கெட்டி, எமானுவேல் சாயெஸ் மற்றும் காப்ரியல் சுஹ்மான் ஆகியோர் டிசம்பரில் வெளியிட்ட ஒரு அறிக்கையானது அமெரிக்காவில் சமூக சமத்துவமின்மை முன்கண்டிராத மட்டங்களை எட்டியிருப்பதை வெளிக்கொண்டுவந்திருக்கிறது.

கடந்த பல தசாப்தங்களின் காலத்தில் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து பணக்காரர்களுக்கு செல்வம் தீவிரமாய் மறுபங்கீடு செய்யப்பட்டிருந்ததை இந்த அறிக்கை ஆவணப்படுத்துகிறது. தேசிய வருவாயில் அடிமட்டத்தில் இருக்கும் 50 சதவீதம் பேரின் வரிசெலுத்துவதற்கு முந்தைய பங்களிப்பு 1970 இல் 20 சதவீதமாக இருந்ததில் இருந்து 2014 இல் 12 சதவீதமாக சரிந்திருக்கிறது, அதேசமயத்தில் உச்சமட்டத்தில் இருக்கும் 1 சதவீதத்தினரின் பங்களிப்போ இரட்டிப்பாகி 20 சதவீதமாக ஆகியிருக்கிறது. செல்வந்த மேல்தட்டான 1 சதவீதம் பேரிடம் இப்போது 37 சதவீத வீட்டுச் செல்வங்கள் இருக்கின்ற அதேவேளையில் கீழிருக்கும் 50 சதவீதமான சுமார் 160 மில்லியன் பேரிடம் கிட்டத்தட்ட எதுவும் இல்லையெனும் அளவுக்கு வெறும் 0.1 சதவீத சொத்து மட்டுமே இருக்கிறது.

பிக்கெட்டி, சாயெஸ் மற்றும் சுஹ்மான் ஆகியோரது அறிக்கை உச்சமட்டத்தில் இருக்கும் 1 சதவீதம் பேரின் மீது மட்டுமே கவனம் குவிக்கிறது என்றாலும், அறிக்கையின் பின்னால் இருக்கும் புள்ளிவிவரங்கள் அமெரிக்க சமூகத்தை புரிந்து கொள்வதற்கு அத்தியாவசியமான இன்னுமொரு இயல்நிகழ்வின் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது: 1 சதவீதத்திற்கு அடுத்து வருகிற 9 சதவீத (“அடுத்த 9 சதவீதம்”) மக்களது பாத்திரம் தான் அது. விரிந்த அளவில் கூறினால், இந்த அடுக்கு நடுத்தர வர்க்கத்தின் மிகவும் வசதியான தட்டுகளைக் கொண்டதாகும்.

ஜனநாயகக் கட்சியை சுற்றி இயங்குகின்ற போலி-இடது அமைப்புகளிடையே, “99 சதவீத மக்களது கட்சி” ஒன்றை கட்டியெழுப்புவதற்கான அவசியத்தைக் குறிப்பிடுவது என்பது பிரபலமாகியிருக்கிறது.

99 சதவீத மக்களது ஒரு கட்சிக்கான அழைப்பானது, உச்சமட்டத்தில் இருக்கும் 1 சதவீதத்திற்கு சற்று கீழே இருக்கக் கூடிய 9 சதவீதம் பேரது நலன்களை கீழ்மட்டத்தில் இருக்கும் 90 சதவீதம் பேரது நலன்களுடன் ஒன்றுகலக்கிறது. உண்மையில், இந்த இரண்டு சமூக அடுக்குகளுக்கும் இடையில் ஒரு பிளவு பிரித்து நிற்கிறது. “நடுத்தர வர்க்கத்தின் சலுகைபடைத்த மற்றும் வசதிபடைத்த அடுக்குகளின் சமூகப்பொருளாதார நலன்களை ஊக்குவிப்பதற்காக ஜனரஞ்சக சுலோகங்களையும் ஜனநாயகச் சொல்லாடல்களையும் பயன்படுத்துகின்ற அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் தத்துவார்த்த/சித்தாந்த போக்குகளால்” அடையாளம் காட்டப்பதுவதே போலி-இடதுகள் என்று உலக சோசலிச வலைத் தளம் வரையறை செய்திருக்கிறது.

அடுத்த 9 சதவீதத்தினரின் பொருளாதார நிலை

அடுத்த 9 சதவீதம் பேரில், 1 மில்லியன் டாலர் முதல் 8 மில்லியன் டாலர் வரை நிகர செல்வம் கொண்ட மற்றும் வீட்டு வருவாய் 155,000 டாலர்கள் முதல் 430,000 டாலர்கள் வரை கொண்ட சலுகைபடைத்த மனிதர்கள் இருக்கின்றனர். இவர்கள் வணிக நிர்வாகிகளாகவும், கல்வியறிஞர்களாகவும், வெற்றிகரமான வழக்கறிஞர்களாகவும், தொழில்வல்லுநர்களாகவும், தொழிற்சங்க நிர்வாகிகளாகவும் மற்றும் அறக்கட்டளை நிதி ஆதாயதாரர்களாகவும் இருக்கின்றனர். அவர்களது சமூகத் துன்பங்கள் என்பதே அவர்களது சலுகைபடைத்த சமூகநிலையின் விளைபொருளாக இருப்பதாகும். சுகாதாரப் பராமரிப்புக்கான அணுகல், ஆயுள் எதிர்பார்ப்பு சராசரி, நீர் மற்றும் காற்றின் தரம், வீட்டுவசதி மற்றும் வீட்டு அமைவிடம், கல்லூரி பட்டங்கள், விடுமுறை ஓய்வுக்காலம் மற்றும் இன்னபிற வாழ்க்கைத்தர குறியீடு ஒவ்வொன்றிலுமே கீழிருக்கும் 90 சதவீதம் பேரில் இருந்து மாறுபட்ட ஒரு வாழ்நிலையே அவர்களுக்கு இருக்கின்றது.

   

அடுத்த 9 சதவீதம் பேர் கீழிருக்கும் 90 சதவீதம் பேரது மொத்த செல்வத்தைக் காட்டிலும் அதிகமாய் சொத்து கொண்டிருப்பதை UC பேர்க்கெலி (UC Berkeley) அறிக்கையில் இருந்தான தரவுகள் எடுத்துக்காட்டுகின்றன. தேசிய வருவாயில் அடுத்த 9 சதவீதம் பேரது பங்களிப்பானது 1970 இல் 23.1 சதவீதமாக இருந்ததில் இருந்து 2014 இல் 27.6 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. அதேகாலகட்டத்தில், கீழ்மட்டத்தில் இருக்கும் 90 சதவீதம் பேரது பங்களிப்போ 65.9 சதவீதமாக இருந்ததில் இருந்து 52.8 சதவீதமாக ஆகியிருக்கிறது. தேசிய வருவாயில் கீழ்மட்டத்தில் இருந்தான 50 சதவீதம் பேரின் பங்களிப்பு, இந்தக் காலகட்டத்தில் பாதியாய் குறைந்து 19 சதவீதத்தில் இருந்து 10.3 சதவீதமாக ஆகியிருக்கிறது. (இந்த எண்ணிக்கைகள் “வரிசெலுத்த முந்தைய காரணி வருவாய்” -ஓய்வூதியங்கள், வரிகள் மற்றும் இடமாற்றங்களுக்கு முந்தைய அத்தனை வருவாய் வரவுகளது கூட்டுத்தொகையாக வரையறை செய்யப்படுவது- ஐ குறிப்பிடுகின்றன. அடுத்து வரும் 9 சதவீதத்தினருக்கு இருக்கும் தரவுகள் கொண்ட புள்ளிவிவரங்களாக இவை மட்டுமே கிடைக்கப் பெறுகின்றன.)

நிகர சொத்துமதிப்பை (அதாவது, ஆண்டு வருவாய் அல்ல, மொத்த சொத்துமதிப்பு) பொறுத்தவரையில், அடுத்த 9 சதவீதம் பேரது நிகர சொத்துமதிப்பு 1970க்குப் பின்னர் அதிகரிப்பை கண்டிருக்கிறது. ஆயினும், வீட்டு செல்வத்திலான அதன் பங்களிப்பு வீழ்ச்சிகாண்கிறது, என்றாலும் அதுவும் கூட முழுமையாக, உச்சத்தில் இருக்கும் 1 சதவீதம் பேரின் பங்களிப்பில் ஏற்பட்ட அதிகரிப்பின் தீவிரத்தினாலேயே ஏற்பட்டதாகும். வீட்டுச் சொத்துகளது பங்கில் அடுத்த 9 சதவீதத்தினரின் பங்கானது 1970 இல் 42.5 சதவீதமாக இருந்ததில் இருந்து இன்று 34.9 சதவீதமாக குறைந்திருக்கிறது. இதே காலகட்டத்தில், உச்சத்தில் இருக்கும் 1 சதவீதம் பேரது வீட்டு சொத்துகளது பங்கு 22.5 சதவீதமாக இருந்ததில் இருந்து 37.2 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. கீழிருக்கும் 90 சதவீதம் பேரது பங்கு கால்வாசிக்கும் சற்று அதிகம் என்ற மட்டத்திற்கு வீழ்ச்சி கண்டிருக்கிறது.

அடுத்த 9 சதவீதம் பேர் தங்களது செல்வத்தை உச்சத்தில் இருக்கும் 1 சதவீதத்தினரது ஒட்டுண்ணித்தனமான மற்றும் ஊக வணிக முறைகளை ஒத்த முறைகளிலேயே ஈட்டுகின்றனர். 1970 முதல் 2014 வரையான காலத்தில், மொத்த நிதி வருவாயில் அடுத்த 9 சதவீதம் பேரது பங்கானது 24 சதவீதத்தில் இருந்து 28.6 சதவீதமாக அதிகரித்தது.

இந்த அதிகரிப்பானது (சற்று மெதுவான வேகத்தில் என்றாலும் கூட) உச்சத்தில் இருக்கும் 1 சதவீதம் பேரது வருவாய் தொகுப்பின் நிதிமயமாக்கலுக்கு இணையானதாக இருக்கிறது, மாறாக பங்குகள் மற்றும் முதலீட்டு ஆதாயங்களை அதிகம் சார்ந்திராத கீழிருக்கும் 90 சதவீதம் பேரது வருவாய் தொகுப்புக்கு நேரெதிராய் இருக்கிறது. ஒட்டுமொத்த சந்தைப்பங்குகளில் 40 சதவீதத்தை உச்சத்தில் இருக்கும் 1 சதவீதம் பேர் கொண்டிருக்கின்றனர், சுமார் 70 சதவீதத்தை உச்சத்தில் இருக்கும் 5 சதவீதம் பேர் கொண்டிருக்கின்றனர். இதற்கு நேரெதிராய், 53 சதவீத வீட்டுவாசிகளிடம் எந்த சந்தைப்பங்கும் கிடையாது.

போலி-இடது அரசியலின் பொருளாதார அடித்தளம்

இந்த பொருளாதார யதார்த்தத்தின் அடித்தளத்தில் தான் அடுத்த 9 சதவீதத்தினரின் அரசியல் கண்ணோட்டம் அமைந்திருக்கிறது. மொத்தத்தில், இந்த சமூக அடுக்கானது தனது இருப்புநிலையை பங்கு மதிப்புகளின் அதிகரிப்பிலும், தொழிலாள வர்க்கத்தின் மீதான சுரண்டலிலும் அமெரிக்க முதலாளித்துவத்தின் உலகளாவிய மேலாதிக்க நிலையிலுமே கொண்டிருக்கிறது. அதேநேரத்தில், சூறையாடலில் அநியாயமான ஒரு பெரும் பகுதியை உச்சத்தில் இருக்கும் 1 சதவீதத்தினர் எடுத்துக் கொண்டு விடுவதாக அது கருதுகிறது. இந்த சமூக அடுக்கின் ஏராளமான அங்கத்தவர்கள் பேராசிரியர்களாகவும், நிர்வாகிகளாகவும் மற்றும் துறைத் தலைவர்களாகவும் பணியாற்றுகின்ற பல்கலைக்கழகங்களில் இந்த 9 சதவீதமானோரது சித்தாந்தமும் அரசியலும் மேலாதிக்கம் செலுத்துகின்றன.

கீழிருக்கும் 90 சதவீதம் பேரையும் மேலிருக்கும் 10 சதவீதம் பேரையும் பிரிக்கின்ற பிளவின் விஸ்தீரணம் தான் அடுத்த 9 சதவீதம் பேரது சலுகைக்கான போராட்டத்தின் ஆவேசக் குணத்தை அளிக்கிறது. அமெரிக்காவில் 90வது சதவீதத்தில் இருக்கும் ஒரு அங்கத்தவரது (அதாவது அடுத்த 9 சதவீதம் பேர் அடுக்கின் கீழ் முனை) நிகர வருமானம் 50வது சதவீதத்தில் இருக்கும் ஒருவரது வருமானத்தைக் காட்டிலும் கிட்டத்தட்ட 60 சதவீதம் அதிகமாய் இருந்ததாக முந்தைய ஆய்வுகளில் இருந்தான புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. நிகர சொத்துமதிப்புரீதியாக இந்த இடைவெளி இன்னும் அதிகமானதாகும். அமெரிக்காவில் இந்த வேறுபாடானது சமீப தசாப்தங்களில் கணிசமாக விரிவு கண்டிருக்கிறது என்பதுடன் பிற முன்னேறிய நாடுகளது இதனையொத்த புள்ளிவிபரங்களை விரைவாக விஞ்சிச் சென்று கொண்டிருக்கிறது.

புரூக்கிங்ஸ் மூத்த ஆராய்ச்சி அறிஞரான ரிச்சார்ட் ரீவ்ஸ் “அமெரிக்க உயர் நடுத்தர வர்க்கத்தின் ஆபத்தான பிரிப்பு” என்ற தலைப்பிலான தனது 2015 செப்டம்பர் கட்டுரையில் குறிப்பிட்டார்:

“அமெரிக்க உயர் நடுத்தர வர்க்கமானது, சமூகத்தின் எஞ்சிய பகுதியில் இருந்து, கொஞ்சம் கொஞ்சமாய் என்றாலும் நிச்சயமாக, தனித்துச் சென்று கொண்டிருக்கிறது... மிக மிக உச்சத்தில் இருப்பவர்களுக்கும் எஞ்சிய மற்றவர்களுக்கும் இடையிலான பிரிப்புக் கோடுதான் பலருக்கும் மிக கவனத்துக்குரியதாக இருந்து வருகிறது. உச்சத்தில் இருக்கும் 1 சதவீதம் பேர் கீழிருக்கும் 99 சதவீதம் பேரில் இருந்து மிகப் பெருமளவில் விலகி இழுப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பது உண்மையே. ஆனாலும் உச்சத்தில் இருக்கும் 1 சதவீதம் பேர் எண்ணிக்கையளவில் ஒரு சிறிய குழுவே ஆகும். 95வது அல்லது 99வது சதவீதத்தில் இருக்கும் ஒரு தனிநபர் அல்லது குடும்பம் எந்த வகையிலும் அமெரிக்காவின் பிரதான நீரோட்டத்தின் ஒரு பகுதி என்று கூறுவது புரிந்துகொள்ள முடியாததாகும்.” இந்த சமூக இடைவெளியானது சலுகைபடைத்த அடுத்த 9 சதவீதம் பேரினிடையே எவ்வாறு சமூக கவலையின் ஒரு மிகப்பெரும் மட்டத்தை உருவாக்கி விட்டிருக்கிறது என்பதில் ரீவ்ஸ் இணைந்து எழுதிய இன்னும் இரண்டு ஆய்வுகள் உட்பார்வை வழங்குகின்றன.

”அமெரிக்கா மேலும் மேலும் அதிகமாய் வர்க்கப் பிளவுபட்ட சமூகமாக ஆகிக் கொண்டிருக்கிறது... வருவாய், சொத்து, தொழில் மற்றும் குடியிருப்பு ஆகியவைரீதியாக உயர் நடுத்தர வர்க்கத்தில் தோன்றியிருக்கும் இந்தப் பிரிவினையானது, நம்மில் சமீப தசாப்தங்களில் செழித்திருக்கக் கூடியவர்களுக்கும் தாங்கள் கைவிடப்பட்டுள்ளதாக, கோபமாக, அதிருப்தியாக உணர்ந்து, அநேகமாக அவர்கள்-அனைவரையும்-ஒழித்து-கட்ட-வேண்டும் என விரும்பும் ஜனரஞ்சக அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்கக் கூடியவர்களாக ஆகுபவர்களுக்கும் இடையிலான ஒரு சமூக இடைவெளியை உருவாக்கியிருக்கிறது” என்று ஒரு அறிக்கை குறிப்பிடுகிறது.

“தங்கள் பிள்ளைகள் ‘நடுத்தர வர்க்க’த்திற்குள் விழுந்து விடுமோ என்று பணம்படைத்த பெற்றோர்கள் ஏன் அஞ்சுகிறார்கள்?” என்ற தலைப்பிலான இன்னொரு ஆய்வு விளக்குகிறது: “உச்சத்தில் வருவாய் பிளவு விரிந்து சென்றிருக்கும் நிலையில், உயர் நடுத்தர வர்க்கத்தின் வீழ்ச்சியின் மீதான அதன் பின்விளைவுகள் மேலும் மோசமடைந்திருக்கின்றன. இவ்வாறாக, உயர் நடுத்தர வர்க்கம், தம்மையும், தமது பிள்ளைகளையும், உச்சத்தில் பராமரிக்க மேற்கொள்ளும் முனைப்புகள் மேலும் வலுப்பட்டிருக்கின்றன.”

அடையாள அரசியலும் அடுத்த 9 சதவீதம் பேரும்

இந்த சக்திவாய்ந்த அழுத்தங்களுக்கு முகம்கொடுக்கும் நிலையில், அந்தஸ்து மற்றும் நிதிநிலையை அதிகரிப்பதற்கான ஒரு முக்கியமான பொறிமுறையாக அடையாள அரசியல் ஆகிக் கொண்டிருக்கிறது.

இட ஒதுக்கீடு (affirmative action) உள்ளிட இனரீதி அரசியலின் முக்கியமான பின்விளைவாக, சிறுபான்மை குழுக்களது ஒரு சிறு அடுக்கு அடுத்த 9 சதவீதம் மற்றும் உச்சத்தில் இருக்கும் 1 சதவீதத்திற்கு உயர்வது, இருந்து வந்திருக்கிறது. 2005 முதல் 2009 வரையான காலத்தில், பல்வேறு மாறுபட்ட இனக் குழுக்களின் இடையேயான இல்லங்களின் உச்சத்தில் இருக்கும் பத்து சதவீதம் கொண்டிருக்கும் மொத்த சொத்துகளின் மதிப்பு, இனங்களை கடந்து அதிரடியாக உயர்ந்திருப்பதாக Pew ஆய்வு மையத்தின் ஒரு சமீபத்திய ஆய்வு காட்டியது. ஹிஸ்பானிக்குகள் இடையே சொத்துக் குவியம் மிகக் கூர்மையாக இருந்தது, இந்த இனத்தில் தலைமையில் இருக்கும் பத்து சதவீதம் பேரது கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்தின் பங்கு, இந்தக் காலகட்டத்தில் 56 சதவீதத்தில் இருந்து 72 சதவீதமாக உயர்ந்திருந்தது, கறுப்பினத்தவர் மத்தியில், இந்த எண்ணிக்கை 59 சதவீதத்தில் இருந்து 67 சதவீதமாக உயர்ந்திருந்தது.

உச்சத்தில் இருக்கும் 10 சதவீதத்தினர் இடையே, பெண்களின் பங்கும் கடந்த நான்கு தசாப்தங்களில் சீராக உயர்ந்து சென்று சுமார் 27 சதவீதத்தை தொட்டிருப்பதையும் பிக்கெட்டி, சாயெஸ் மற்றும் சுஹ்மான் அறிக்கை காட்டுகிறது. ஆயினும் உச்சத்தில் இருக்கும் 1 சதவீதம் பேரில் ஊழியர்களாக இருப்பவர்களது எண்ணிக்கைவீதத்தில் பெண்கள் சுமார் 16 சதவீதம் பேர் மட்டுமே இருக்கின்றனர். மிக வசதிபடைத்தவர்கள் மத்தியில், “கண்ணாடிக் கூரை இன்னும் உடையும் நிலைக்கு நெருக்கமாக வந்திருக்கவில்லை” என்று அறிக்கையின் ஆசிரியர்கள் எழுதுகின்றனர். அடுத்த 9 சதவீதத்தினரில் இருக்கும் பெண்கள் ஏன் ஹிலாரி கிளிண்டனின் போர்-ஆதரவு, வோல்-ஸ்ட்ரீட் ஆதரவு ஜனாதிபதிப் பிரச்சாரத்தை சொத்து மற்றும் சலுகைக்கான தமது சொந்தப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான ஒரு வாகனமாகக் கண்டனர் என்பதற்கான காரணத்தை விளக்குவதாக இது அமைந்திருக்கிறது.  

99 சதவீதம் பேரது கட்சியும் சோசலிசமும்

பொருளாதார வர்க்க ஆய்வு ஒன்றின் அடிப்படையிலான எந்த அரசியலையும் போலி-இடதுகள் எதிர்க்கின்றன. இதுவே “99 சதவீதம் பேரது கட்சி” ஒன்றுக்கான போலி-இடது அமைப்புகளது அழைப்பின் அரசியல் அடிப்படை ஆகும். உதாரணமாக, சோசலிச மாற்று, ஒரு “பல-வர்க்க” (“multi-class”) கட்சி ஒன்றைக் கட்டியெழுப்புவதற்கு அழைத்திருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்குப் பிந்தையசமயத்தில் “ட்ரம்ப்புக்கு எதிரான ஒரு வெகுஜன எதிர்ப்பும், 99 சதவீதம் பேரது ஒரு புதிய கட்சியும் நமக்குத் தேவை” என்ற தலைப்பில் அது வெளியிட்ட ஒரு கட்டுரையானது பின்வருமாறு கூறியது: ”பெருநிறுவனக் கட்டுப்பாட்டுக் கட்சிகள் மற்றும் வலதுகள் இரண்டிற்கும் எதிராய் 99 சதவீதம் பேருக்கான ஒரு உண்மையான அரசியல் மாற்றினை நாம் இன்றே கட்டியெழுப்பத் தொடங்கியாக வேண்டும், அப்போது தான் 2020 இல் நாம் இதே அழிவுனூடாக நாம் மீண்டும் செல்லவேண்டியிருக்காது.”

“தொழிற்சங்கங்கள், இயக்கங்கள் மற்றும் இடது கட்சிகள்” கொண்ட ஒரு “வெகுஜன, இடது மாற்று”க்கு சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பும் (ISO) அழைப்பு விடுத்திருக்கிறது. “99 சதவீதம்” என்ற சுலோகத்தை தொடர்ந்து முன்னெடுத்து வரும் அது, 2014 இல் எழுதியது: “1 சதவீதத்தினரின் இரண்டு கட்சிகளுக்கும் எதிராய் 99 சதவீதத்தினரின் ஒரு புதிய கட்சி நமக்கு தேவையாக இருக்கிறது.” பிற போலி-இடது குழுக்களும்  ஜாக்கோபின் மற்றும் புதிய அரசியல் போன்ற மற்றும் வெளியீடுகளும் கூட இதே சுலோகங்களை எதிரொலித்திருக்கின்றன.

இந்த மொழிப்பிரயோகம் தற்செயலானதல்ல. “99 சதவீதத்தினரது கட்சி” ஒன்றுக்கான போலி-இடதுகளின் அழைப்பு, இடைத்தொடர்பு கொண்ட இருவேறு நோக்கங்களுக்கு சேவைசெய்கிறது.

முதலாவதாய், போலி-இடதுகள் தொழிலாள வர்க்கத்தை, முதலாளித்துவ வர்க்கத்திற்கு நெருக்கமான நடுத்தர வர்க்கத்தின் மிக வசதியான தட்டுகளின் நலன்களுக்கும் கவலைகளுக்கும் அடிபணியச் செய்யவைக்க முனைகின்றன. இவை சமூகத்தின் ஒரு சோசலிச மறுஒழுங்கமைப்புக்கும் அத்துடன் சொத்துகளின் விநியோகத்தில் கணிசமாக பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் கூட எதிரானவையாக இருக்கின்றன. இரண்டாவதாய், வர்க்க உள்ளடக்கம் இல்லாத வெறுமையான “இடது” வார்த்தைஜாலங்களை பயன்படுத்தி, தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாக நிராயுதபாணியாக்கவும் சமூக எதிர்ப்பை ஜனநாயகக் கட்சியின் பின்னால் திருப்பி விடுவதற்கும் அடுத்த 9 சதவீதம் முயற்சி செய்கிறது.

ஜனநாயகக் கட்சியை நோக்கிய போலி-இடதுகளின் நோக்குநிலையானது, அவற்றின் சமூக நலன்களை முன்னெடுப்பதற்கான அவற்றின் போராட்டத்தில் அத்தியாவசியமான கூறாக இருப்பதாகும். ஜனநாயகக் கட்சி நிறம், பால் மற்றும் பால்விருப்ப நோக்குநிலையை பயன்படுத்துவதை அங்கீகரிக்கின்ற கட்சியாகும், ஏனென்றால் அது சமூக சீர்திருத்தத்திற்கான எந்த வேலைத்திட்டத்தையும் நிராகரித்து வந்திருப்பதோடு மாறாக பரந்த அடித்தளத்திற்கான தொகுதியாகக் கருதி அடுத்த 9 சதவீதம் பேரைக் கொண்ட சுமார் 21 மில்லியன் பேருக்கே விண்ணப்பம் செய்து வந்திருக்கிறது.

மக்களின் பரந்த பெரும்பான்மைக்கும், 1 மில்லியன் டாலரை நிகர சொத்துமதிப்பாகக் கொண்டவர்களுக்கும் இடையிலான பொருளாதார நலன்கள் ஒன்றாக இருப்பதில்லை என்பது தெளிவு. செல்வத்தில் உச்சத்தில் இருக்கும் பத்து சதவீதம் பேர், அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும், தொழிலாள வர்க்கத்தைச் சுரண்டியதன் மூலமாகவே தமது செல்வத்தை ஈட்டியிருக்கின்றனர். சமூக சமத்துவமின்மையின் பரந்த மட்டங்கள் ஒரு தற்செயலான நிகழ்முறையின் விளைபொருள் அல்ல, மாறாக ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளாலும் மற்றும் உலகெங்கிலுமான அவர்களது முதலாளித்துவ சகாக்களாலும் அமல்படுத்தப்பட்ட திட்டவட்டமான கொள்கைகளால் விளைந்தவையே ஆகும். தனியார் இலாபம் என்பது தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதன் விளைபொருளாகும், இதுவே முதலாளித்துவத்தின் கீழான விதிமுறையாக இருக்கிறது.    

அதீதமான சமூக துருவப்படல் என்பது ஒரு சர்வதேச நிகழ்வுப்போக்காக இருக்கிறது. உலகின் பாதி ஏழை மக்கள், அதாவது சுமார் 3.6 பில்லியன் மக்கள் கொண்டிருக்கும் அதே அளவுக்கான சொத்துமதிப்பினை, வெறும் 8 பில்லியனர்கள் கொண்டிருக்கின்றனர் என்று ஜனவரி 16 அன்று ஆக்ஸ்போம் வெளியிட்ட ஒரு அறிக்கை காட்டுகிறது. உச்ச அளவிலான செல்வம் படைத்த 1 சதவீதம் பேர் எஞ்சிய 99 சதவீதம் பேர் கொண்டிருப்பதை விடவும் அதிகமான செல்வத்தைக் கொண்டிருக்கின்றனர். சர்வதேச அளவில், மேலே உள்ள பத்து சதவீதம் பேர் 89 சதவீத செல்வத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக 2016 நவம்பரில் கிரெடிட் சூய்ஸ் (Credit Suisse) வெளியிட்ட ஒரு அறிக்கை காட்டியது.

“99 சதவீதம் பேரது கட்சி” தொடர்பாக இங்கே காட்டப்பட்டிருக்கும் வர்க்க பகுப்பாய்வானது உலகெங்கிலுமான நாடுகளில் போலி-இடதுகளால் விடுக்கப்படும் இதேபோன்ற ஜனரஞ்சக விண்ணப்பங்களுக்கும் பொருத்திக் காணக்கூடியதாகும்.

உலகின் 7 பில்லியன் மக்களில் மிகப்பெரும்பான்மையாக இருக்கும் தொழிலாள வர்க்கம் தான் உலகின் செல்வம் அத்தனையையும் உருவாக்குகிறது. அது மிகச்செறிந்த ஆற்றல் வளத்தைக் கொண்டிருக்கிறது. ஆயினும், வர்க்கப் போராட்டத்தை அடிப்படையாக கொண்ட ஒரு முதலாளித்துவ-விரோத மற்றும் சோசலிச வேலைத்திட்டத்தின் மூலமாக ஆயுதபாணியாக ஆகின்றபோது மட்டுமே அதனால் தனது சொந்த நலன்களை முன்னெடுக்க இயலும். 99 சதவீதம் பேரது ஒரு கட்சியின் சுலோகத்தை முன்னெடுப்பதின் மூலமாக போலி-இடதுகள், அத்தகையதொரு போராட்டம் அபிவிருத்தி காண்பதைத் தடுத்து நிறுத்தி முதலாளித்துவ அமைப்புமுறையை பாதுகாத்திடும் நோக்கம் கொண்ட ஒரு மோசடியை மேற்கொள்கின்றன.