ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

වතුකරයේ පැවති සිනමා උලෙලක් පිලිබඳ සටහනක්

இலங்கை பெருந்தோட்ட பிரதேசத்தில் நடந்த திரைப்பட விழா பற்றிய குறிப்புகள்

Pani Wijesiriwardena and R. Shreeharan
14 January 2017

கடந்த டிசம்பர் 12-13 திகதிகளில் ஹட்டனில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் திரைப்பட விழா ஒன்று நடந்தது. “இளைஞர்கள் மத்தியில் கலைநயமுள்ள சினிமா பற்றிய நனவை ஏற்படுத்துவது” விழாவின் குறிக்கோள் என அதை ஏற்பாடு செய்திருந்த பெருவிரல் கலை இலக்கிய இயக்கம் அறிவித்திருந்தது.

இதில் பங்கபற்றியிருந்த சுமார் நூறு பேர் வரையானவர்களில் அநேகமானவர்கள் இளைஞர் மற்றும் யுவதிகளாக இருந்தனர். இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டவர், யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்ட சினிமா விமர்சகரும் அலை சஞ்சிகையின் ஆசிரியராகவும் இருந்த அ. யேசுராசா ஆவார். முதல் நாள் அவர் சமகால சினிமா பற்றியும் சிறந்த சர்வதேச சினிமா படைப்புக்களைப் பற்றியும் ஒரு குறிப்புரை நிகழ்த்தினார். அன்றைய தினம், தமிழ் சினிமாவில் பெருந்தோட்டக் கலைஞர்களின் பங்களிப்பு பற்றி ஊடகவியலாளர் சிவலிங்கம் சிவகுமாரன் உரையாற்றினார்.

முதல்நாள் காட்சிப்படுத்தல்களில் ரபிட் பூரூஃப் பென்ஸ் (Rabbit-Proof Fence), பைசிகல் தீஃவ் (Bicycle Thief), ஒப நெதுவ ஒப எக்க (பிறகு அல்லது With You Without You) ஆகிய முறையே ஆஸ்திரேலிய, இத்தாலிய, இலங்கை திரைப்படங்கள் திரையிடப்பட்டதுடன. ஒவ்வொரு காட்சியின் பின்னரும் அந்த படைப்புகள் பற்றிய சிறிய கலந்துரையாடலும் நடந்தது.

ஒப நெதுவ ஒப எக்க (பிறகு) பற்றி, உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியிடப்பட்ட விமர்சனத்தின் பிரதிகளையும், சினிமா உட்பட ஒட்டுமொத்த கலை சம்பந்தமான நிகழ்கால நெருக்கடி பற்றி, உலக சோசலிச வலைத் தளத்தின் கலை விமர்சகர் டேவிட் வோல்ஷ் ஆற்றிய விரிவுரையின் பிரதிகளையும் சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) ஹட்டன் கிளையினர் விநியோகித்து, கலந்துரையாடலை ஊக்குவித்தனர்.

இரண்டாம் நாள் காலை வளந்து வரும் சினிமா இயக்குனர்களின் பல குறுந்திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

பாடசாலை மாணவி ஒருவர் திரைப்படம் பற்றி கருத்து தெரிவிக்கின்றார்

விமல்ராஜ்ஜின் கிச்சான்: கிழக்கு மாகாணத்தில் தமிழ் குடும்பத்தில் பிறந்து, உள்நாட்டு போரின் விளைவாக தனது தந்தையை இழந்து, பல்கலைக்கழக உணவகம் ஒன்றில் உழைக்கத் தள்ளப்பட்ட கிச்சான் என்ற சிறுவனின் கடினமான வாழ்க்கையையும் அவனின் சிறுவர் உணர்வையும் வெளிப்படுத்தும் குறுந்திரைப்படமாகும்.

வரோதயனின் சந்தேகம்: தனது மனைவியின் கர்ப்பத்துக்கு தான் காரணம் அல்ல என சந்தேகிக்கும் கனவரின் அழுத்தத்தின் காரணமாக, தனது குழந்தையை கலைத்துவிடத் தள்ளப்பட்ட பெண் பற்றிய கதையாகும்.

சுந்தர பிரகாஷின் கனவு உண்டியல்: 2014ல் கொஸ்லந்த மீரியபத்த தோட்டத்தில் நடந்த மண்சரிவில் ஏற்பட்ட அழிவை அடிப்படையாகக் கொண்டு, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மாணவ மாணவிகளை நடிகர் நடிகைகளாக பயன்படுத்தி உருவாக்கப்பட்ட படைப்பாகும்.

கருணா கிருபாகரனின் சிவப்புக் கனவு: சவுதி அராபியில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்த இலங்கையின் கிழக்கைச் சேர்ந்த பாத்திமா ரிஸானா என்ற இளம் சிறுமி, அவள் பராமரித்து வந்த குழந்தையை கொன்றுவிட்டதாக குற்றச்சாட்டப்பட்டு தலை துண்டித்து கொல்லப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட குறுந்திரைப்படமாகும்.

நேதாஜ் மற்றும் கேசவனின் அப்படியா?; வறுமையின் காரணமாக மத்திய கிழக்கில் வேலை தேடிச் செல்லும் பெண்கள் இறுதியில் சவப் பெட்டிகளில் வீடு திரும்பும் துன்பகரமான தலைவிதியை சித்தரிக்கின்றது.

லிங் சின்னாவின் மீண்டும் நாம் தொட்டிலுக்குள்: குழந்தை பிறப்பின் போது தாய், தந்தை பிறக்கும் குழந்தை வைத்தியர் உட்பட ஆஸ்பத்திரி நிர்வாகமும் எதிர்கொள்ளும் சரீர மற்றும் உளவியல் முயற்சிகளையும் அபிலாஷைகளையும் சித்தரிக்கும் குறுந்திரைப்படமாகும்.

திரைப்பட காட்சிப்படுத்தல்களின் முடிவில், தமது திரைப்படங்களைப் பற்றி கருத்து தெரிவிக்க படைப்பாளிகளுக்கும், அந்த படைப்புகளின் கலைத்துவத்தை மதிப்பீடு செய்வதற்கு பார்வையாளர்களுக்கும் திறந்துவிடப்பட்ட வாய்ப்பு, முக்கியமான கலந்துரையாடல்களாக அபிவிருத்தி கண்டன.

வளர்ந்துவரும் படைப்பாளிகள் கருத்துத் தெரிவிக்கும் போது, சினிமா ஊடகம் பற்றிய எந்தவொரு பொருத்தமான கல்வியையும் கற்பதற்கு அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதை அனைவருமே வெளிப்படுத்தினர். தமக்கு கிடைத்த குறைந்தபட்ச கருவிகளைக் கொண்டும், சில வேலை தொலைபேசி கமராக்களைக் கொண்டு கூட தமது திரைப்படங்களை சிருஷ்டித்ததாக அவர்கள் தெளிவுபடுத்தியமை, இவ்வளவு பிரமாண்டமான தொழில்நுட்ப வளர்ச்சி காணப்படும் ஒரு உலகில், தமக்கு அவை கிடைக்காமை சம்பந்தமாக ஒட்டு மொத்த முதலாளித்துவ முறைமைக்குமே எதிராக முன்வைக்கப்பட்ட பெரும் குற்றச்சாட்டாகும்.

தம் துன்பங்களுக்கு காரணமான முதலாளித்துவ இலாப முறைமை மற்றும் அதை பாதுகாக்கின்ற அரசியல் போக்குகள் பற்றிய ஒரு குழப்பமற்ற தெளிவு இல்லாமையும் மற்றும் குறித்த ஊடகம் பற்றிய அறிவு குறைந்தளவே இருந்தாலும், அவர்கள் தமக்கு நேர்கின்றவை பற்றி சாதகமான விதத்தில் உணர்வை வெளிப்படுத்தியிருந்தனர்.

அநேகமான படைப்பாளிகள், தமது வாழ்க்கை இருட்டுக்குள் வைக்கப்பட்டிருப்பதற்கு ஆளும் வர்க்கமும் மற்றும் தோட்டப்புற தொழிற்சங்கங்களும் ஆற்றும் வகிபாகம் பற்றி சித்தரிப்பதற்கு முயற்சி எடுத்திருந்தனர்.  

உலக சோசலிச வலைத் தளத்தின் கலை விமர்சகர் பாணி விஜேசிறிவர்தன கலந்துரையாடலில் பங்குபற்றி தெரிவித்ததாவது: “உண்மையில் கலாச்சார ரீதியில் சீரழிந்து போயுள்ள இந்த யுகத்தில், விசேமாக நீண்ட காலமாக பல்வேறு அலட்சியங்களுக்கு உள்ளான, இலங்கையின் மிகவும் ஒடுக்கப்பட்ட தொழிலாளர்களான தோட்டத் தொழிலாளர்கள் வாழும் பிரதேசத்தில், தமிழ் பேசும் இளைஞர்களுக்கு சர்வதேச கௌரவத்துக்கு உள்ளான படைப்புகளை அறிமுகம் செய்வதானது பாராட்டப்பட வேண்டிய விடயமாகும்.”

“தோட்டப்புறத்தில் இளைஞர் யுவதிகளின் உணர்வுப் பூர்வமான பங்களிப்புடன், கலை உட்பட கலாச்சாரத்தின் சாதகமான அங்கங்களை பயன்படுத்தி, தமது வாழ்க்கையை முன்னேற்றுவிப்பதற்கு அவர்களுக்கு இருக்கின்ற தாகத்தை இது தெளிவுபடுத்துகின்றது.”

“இந்த வளர்ந்து வரும் படைப்பாளிகள், கலை என்பது வாழ்க்கையை கற்றுக்கொள்ளும் ஒரு ஊடகம் என்பதை, தம்மைச் சூழ வாழும் மனிதர்களின் வாழ்க்கையின் பக்கம் திரும்பி, தமது ஊடகங்கள் ஊடாக அவற்றை கற்றுக்கொள்வதற்கு மேற்கொண்டுள்ள முயற்சியின் மூலம், கலையின் பிரதான பணி சம்பந்தமாக அவர்கள் எடுத்துள்ள நிலைப்பாடு சாதகமானதாகும்” என விஜேசிறிவரத்ன சுட்டிக்காட்டினார்.

“எவ்வாறெனினும், கலைப் படைப்பில் பன்முகத்தன்மை மிகவும் முக்கியமானது. இந்த வளரும் கலைஞர்களின் படைப்பில் காணப்படும் அருவமான தன்மையின் காரணமாக, அவற்றின் கலைத்துவத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.”

“ஆயினும், இந்த படைப்புகளில் பன்முகத்தன்மையை காத்துக்கொண்ட, அதன் காரணமாகவே தீவிரமான உணர்வு மற்றும் மனோநிலையை வென்று, பார்வையாளரை திகைப்புக்குள்ளாக்குவதில வெற்றிகொள்ளும் படைப்புகளும் இருந்தன. மீண்டும் நாம் தொட்டிலுக்குள் குறிப்பிடத்தக்கதாகும். உண்மையில், கலைப் படைப்பில் இருக்க வேண்டிய இன்னொரு விசேட அங்கமான, முன்னர் கண்டிராதவை என்ற அபூர்வம் அதில் சிறப்பாக காணப்பட்டது.”

“கடைசியில் நான் குறிப்பிட விரும்புவது, கலைப் படைப்பில் எம்மைச் சூழ உள்ள உலகம் பற்றி, அல்லது சமூக அரசியல் உறவுகள் சம்பந்தமாக, சரியான மற்றும் பல்பூரணமான புரிதல் இன்றியமையாததாகும். இதை உலக சோசலிச வலைத் தளம் உயர்ந்தளவில் முன்வைக்கின்றது. அதை வாசிக்க முயலுமாறு உங்கள் எல்லோரிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.”

குறுந்திரைப்பட காட்சிப்படுத்தலின் முடிவில், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலாநிதி சிவமோகன் சுமதியின் படைப்பான இங்கிருந்து என்ற விவரணத் திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்டது.

அந்த திரைப்படம் பற்றிய கலந்துரைடாயலைத் திறந்த உடனேயே எழுந்து நின்ற, மாவோவாத புதிய ஜனநயாக மார்க்சிச லெனினிசக் கட்சியின் உறுப்பினர் ஒருவர், திரைப்படம் சம்பந்தமான ஆரோக்கியமான கலந்துரையாடலை தடுத்து, அதை திசை திருப்புவதற்காக, “திரைப்படத்தை பட்டம் பெறுவதற்கான கற்கையாக எடுத்தீர்களா, அல்லது வெளிநாடுகளுக்கு காட்டி பணம் பெறுவதற்காக எடுத்தீர்களா” என, அங்கு வந்திருந்த கலாநிதி சுமதியிடம் கேள்வி எழுப்பினார். பெரும் சிரமத்துக்கு உள்ளான சுமதி, தமது படைப்புக்காக பணம் திரட்டிய விதத்தை மன வேதனையுடன் விளக்குவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்.

அப்போது எழுந்து நின்ற விஜே சிறிவர்தன, அந்த தலையீட்டை எதிர்த்தார். “கலைப் படைப்பு சம்பந்தமான மதிப்பீட்டைச் செய்யும் போது, இவ்வாறான அணுகுமுறை கலைக்கு எதிரானதும் கலாச்சார விரோதமானதுமாகும். ஒரு படைப்புக்குள்ளே அது பற்றிய மதிப்பீட்டுக்குச் செல்ல வேண்டும். வேறு விதத்தில் சொல்வதென்றால், அந்த படைப்பின் கலைத்துவ மற்றும் சமூக விஞ்ஞான உண்மை பற்றி ஆராய்வதன் மூலமே அதை மதிப்பிட முடியும்.”

கலந்துரையாடலின் முடிவில், சோ.ச.க. உறுப்பினர்களுடன் மேலும் கலந்துரையாடலில் ஈடுபட்ட கலைஞர்களும் ரசிகர்களும், கலை பற்றியும் சோ.ச.க. அரசியல் பற்றியும் விடயங்களை கேட்டறிந்தனர். சோ.ச.க. இலக்கியங்களை கொள்வனவு செய்த அவர்கள், மேலும் கலந்துரையாடுவதற்கான விபரங்களையும் வழங்கினர்.