ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trump’s meeting with the UK’s Theresa May and the US/European conflict

இங்கிலாந்தின் தெரேசா மே உடனான ட்ரம்பின் சந்திப்பும், அமெரிக்க ஐரோப்பிய மோதலும்

Chris Marsden
27 January 2017

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடன் இங்கிலாந்து பிரதம மந்திரி தெரேசா மே இன் எதிர்பார்க்கப்படும் இன்றைய சந்திப்பு ஓர் அரசியல் மோசடியாகும். இது, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதை தொடர்வதில் பிரிட்டன் ஒரு சக்தி வாய்ந்த கூட்டாளியைக் கொண்டிருக்கிறது என்பதையும் மற்றும் ஐரோப்பாவின் ஒரே சந்தை அணுகுதலை இழக்க வேண்டியிருந்தால் அதை ஈடுகட்டுவதற்கு அது அமெரிக்க வணிக உடன்படிக்கை ஒன்றை பெறக்கூடும் என்பதையும் காட்டுவதற்காக ஆகும். ட்ரம்பின் ஆதரவானது, அனேகமாக ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் உடனான பேரம்பேசல்களில் மே இன் கரங்களையும் பலப்படுத்தக் கூடும்.

இது அமெரிக்காவிற்கும் உலகின் ஏனைய பகுதிகளுக்கும் இடையே பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளில் வேகமான சீரழிவுக்குரிய ஒரு நடவடிக்கையாகும், அத்துடன் மே இன் விஜயம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னணி குரல்களிடம் இருந்து கடுமையான குற்றச்சாட்டுக்களைக் கொண்டு வந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதைக் குறித்த இரண்டாண்டு கால பேரம்பேசல்களை தொடங்கி வைக்கும் 50ஆவது ஷரத்தை தொடங்குவதற்கு முன்னதாக, மே வாஷிங்டனுக்கு வந்துள்ளார். கடந்த ஆண்டின் வெகுஜன வாக்கெடுப்பின் போது ஐரோப்பிய ஒன்றிய அணுகுதலை இழந்துவிடுமோ என்ற அச்சத்தில் ஒரு செல்வாக்கான அடுக்குகள் அதிலேயே தங்கியிருப்பதை ஆதரித்திருந்த நிலையில், பிரிட்டன் வெளியேறுவது மீது பிரிட்டிஷ் ஆளும் வர்க்கம் ஆழமாக பிளவுபட்டுள்ளது. இந்த பிளவை இன்னும் அதிகரிக்கும் விதத்தில், மே கூறுகையில், பிரிட்டன் வெளியேற்றத்தை "ஐரோப்பிய ஒன்றிய உடைவு சம்பந்தமான ஒரு முடிவாக" பார்க்கவில்லை என்று ட்ரம்பிடம் அவர் தெரிவிக்க இருப்பதாக வாக்குறுதி அளித்தார்.

இதுபோன்ற வாக்குறுதிகளுக்கு ஏதேனும் முக்கியத்துவம் இருப்பதாக யாரும் நம்ப முடியாது. ட்ரம்ப் அவரது பதவியேற்பு விழா உரையில் “முதலிடத்தில் அமெரிக்கா" பாதுகாப்புவாத கொள்கையைச் சூளுரைத்து பேசுகையில், அமெரிக்கா சுதந்திர வர்த்தகத்திலிருந்து உடைத்துக் கொண்டு தண்டிக்கும் விதமான வரிவிதிப்புகளுக்கு ஆதரவளிப்பது என்பது, “அதனால் பாதிக்கப்படுபவர்களும், குறிப்பாக சீனாவும், அனேகமாக பதிலடி நடவடிக்கை எடுக்கலாம் என்பதே அர்த்தப்படுத்துகிறது… திரு ஜி இன் சீனா, ஐரோப்பியர்களுடன் மற்றும் ஏனைய ஆசிய சக்திகளுடன் கூட்டுறவாக விளங்கும் அமெரிக்காவுக்கு பிரதியீடு ஆகாது. அனைவருக்குமான சுதந்திர வர்த்தக கொள்கை பொறிந்து போவதே பெரும்பாலும் இதனால் ஏற்படக்கூடிய பாதிப்பாக இருக்கும்,” என்று மார்டின் வொல்ஃப் பைனான்சியல் டைம்ஸ் இல் எச்சரித்தார்.

சக கட்டுரையாளர் பிலிப் ஸ்டீபன்ஸ் ட்ரம்ப் குறித்து அறிவிக்கையில், “ஐரோப்பிய திட்டத்தை மிகப்பெரியளவில் சிதறிடப்பதற்கான" அவர் ஆதரவு உட்பட “சுதந்திர வர்த்தகம், சுற்றுச்சூழல் மாற்றம், நேட்டோ, ரஷ்யா, ஈரான் என ஒவ்வொரு நடவடிக்கை மீதான அவரது கண்ணோட்டங்கள்,” "பிரிட்டனின் தேசிய நலன்களுடன் முரண்படுகிறது,” என்றார்.

கார்டியனின் மார்ட்டி கெட்லே இன் கருத்துக்கள் அனேகமாக மிகவும் அசாதாரணமானதாக இருக்கலாம், நாஜி ஜேர்மனி தொடர்பான சமாதானப்படுத்தும் கொள்கையை சாடையாக குறிப்பிட்டு அவர் எழுதினார், “அமெரிக்க வர்த்தக உடன்படிக்கை வழங்கும் ட்ரம்ப் கையெழுத்திட்ட ஒரு காகிதத்தை காட்டினால் அது ஒரு வெற்றியாக பார்க்கப்படுமென மே கருதினால், அவர் தவறாக இருக்கிறார். அது அவரை புதிய மார்கரெட் தாட்சராக ஆக்காது மாறாக புதிய நெவில் சேம்பர்லினாகவே ஆக்கும்.”

நேட்டோ மூலமாக ஐரோப்பிய ஒருங்கிணைப்பிற்கு நங்கூரமாக மற்றும் ஐரோப்பாவின் ஏகாதிபத்திய நலன்களுக்கு உத்தரவாதமளிப்பவராக, அமெரிக்காவின் போருக்குப் பிந்தைய பாத்திரத்தின் முழுமையான முடிவையே, ட்ரம்பின் ஏறுமுக நிலை குறிப்பதாக இப்போது பிரிட்டிஷ் மற்றும் ஐரோப்பிய ஆளும் வட்டாரங்களுக்குள் பரவலாக புரிந்து கொள்ளப்படுகிறது. ட்ரம்ப் ஐரோப்பிய ஒன்றியத்தை அமெரிக்காவிற்கான ஒரு பொருளாதார எதிர்விரோதியாக, ஜேர்மன் கருவியாக வர்ணித்துள்ளதுடன், அதிலிருந்து வெளியேறுவதற்கு ஏனைய நாடுகளும் இங்கிலாந்தை முன்னுதாரணமாக பின்பற்றும் என்று அனுமானித்துள்ளார்.

இது ஐரோப்பிய முதலாளித்துவ அரசாங்கங்களை ஓர் அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ விடையிறுப்பை நெறிப்படுத்த தாவுவதற்கு இட்டுச் சென்றுள்ளது.

ஜேர்மனியில், தன்னைத்தானே எதிர்கால வெளியுறவுத்துறை மந்திரி பதவியில் வைத்துக்காட்டும் சமூக ஜனநாயகக் கட்சி தலைவர் சிக்மார் காப்ரியேல் அறிவிக்கையில், “இதுதான் ஐரோப்பாவை பலப்படுத்துவதற்குரிய நேரம்… ஆசியா மற்றும் தென் அமெரிக்காவுடன் ட்ரம்ப் ஒரு வர்த்தக போர் தொடங்கினால், அது நமக்கு வாய்ப்புகளை திறந்துவிடும்,” என்றார்.

பிரான்சில் இந்த வசந்தகால ஜனாதிபதி தேர்தலுக்கான மத்திய-வலது வேட்பாளர் பிரான்சுவா ஃபிய்யோன், “டொனால்ட் ட்ரம்பின் அமெரிக்கா, விளாடிமீர் புட்டினின் ரஷ்யா மற்றும் ஜி ஜின்பிங்கின் சீனாவிற்கு இடையே" ஐரோப்பாவின் இடத்தை எவ்வாறு பாதுகாப்பது என்பதன் மீது கொன்ராட் அடினோவர் (Konrad Adenauer) அமைப்பிற்கு ஒரு உரை வழங்க திங்களன்று பேர்லின் விஜயம் செய்தார். மிகவும் முரண்பாடாக, ரஷ்யாவை ஐரோப்பாவின் "ஒரு பிரதான பங்காளியாக" ஏற்றுக் கொள்வதற்காக வெளிநாட்டு இராணுவ பயன்படுத்தல்களுக்கான ஒரு கூட்டு வரவு-செலவு திட்டக்கணக்குடன் ஓர் ஐரோப்பிய இராணுவ சமூகம் உட்பட ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆழ்ந்த ஒருங்கிணைவை அவர் வலியுறுத்தினார். அவர் போட்டியாளரான, முன்னாள் சமூக ஜனநாயக கட்சியாளரும், இப்போது சுயேட்சையுமான இமானுவெல் மாக்ரோன் பைனான்சியல் டைம்ஸில் ஐரோப்பிய ஒன்றியம் குறித்து இதே சேதியை வழங்கினார், மாஸ்கோ உடனான ஒரு நல்லிணக்கம் மீதான எந்தவொரு அறிவுறுத்தலை மட்டும் தவிர்த்துக் கொண்டார்.

சீனா, மெக்சிகோ மற்றும் ஐரோப்பாவிற்கு எதிரான ட்ரம்பின் அச்சுறுத்தல்கள், பொதுவாக முதலாளித்துவ வர்க்க விமர்சகர்களால், அவருக்கு முன்பிருந்தவர்கள் பின்பற்றிய கொள்கைகளில் இருந்து விளக்கமுடியாத ஒரு உடைவாக கையாளப்படுகிறது. இது அமெரிக்காவில் அவர் எவ்வாறு தலைமைக்கு வந்தார் என்பதை விளங்கப்படுத்துவதை மட்டும் விட்டுவிடவில்லை, மாறாக இதுபோன்ற தீவிர-வலது இயக்கங்கள் ஐரோப்பா எங்கிலும் எழுந்துள்ளன என்பதையும் தவிர்த்துவிடுகிறது. பிரான்சில், ஜனாதிபதி தேர்தலின் முன்னணி இடத்தில் மரீன் லு பென்னின் தேசிய முன்னணி உள்ளது மற்றும் நெதர்லாந்தில் மார்ச்சில் பொது தேர்தல் வரவிருக்கின்ற நிலையில் சுதந்திர டச் கட்சியின் கிரீட் வில்டர்ஸ் (Geert Wilders) முன்னணியில் இருப்பதாக கருத்துக்கணிப்புகள் எடுத்துக்காட்டுகின்றன.

அதீத தேசியவாதம், அச்சுறுத்தல் மற்றும் வன்முறையை பயன்படுத்த ஆரம்பிப்பது என்பது, 2008 பொறிவு அறிகுறி காட்டிய ஒரு பொதுவான உலக முதலாளித்துவ உடைவின் நிலைமைகளின் கீழ், தவிர்க்கவியலாமல் அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் உலகளாவிய நிலைப்பாட்டிலிருந்து வீழ்ச்சி அடைந்து வருவதிலிருந்து பெருக்கெடுக்கிறது. சோவியத் ஒன்றிய பொறிவுக்குப் பின்னர், அமெரிக்கா இராணுவ பலத்தை வலியுறுத்துவதன் மூலமாக அதன் பொருளாதார வீழ்ச்சிக்கு எதிர்நடவடிக்கை எடுக்க முனைந்துள்ளது. எவ்வாறிருப்பினும், ஒரு கால் நூற்றாண்டுக்குப் பின்னர், வாஷிங்டன் தொடுத்த போர்கள் பேரழிவுகரமானவையாக நிரூபணமாகி உள்ளன, அதேவேளையில் அனைத்திற்கும் மேலாக ஒரு போட்டி சக்தியாக சீனாவின் வளர்ச்சியில் எடுத்துக்காட்டுகின்றவாறு, அதன் பொருளாதார இடம் தொடர்ந்து சீரழிந்து வந்துள்ளது.

இது, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பொருளாதார மற்றும் அரசியல் இயங்குமுறைகளது வலையமைப்பின் மையத்தில் அமெரிக்கா இனியும் தன்னைத்தானே நிறுத்தி கொள்ள இயலாமல், அதற்கு விருப்பமுற செய்யவிடாமல் வைத்துள்ளது, இவை சவாலுக்கிடமற்ற உலகளாவிய மேலாதிக்கத்திற்கான வாஷிங்டனின் உந்துதல் மீது தடைகளைத் திணிப்பதாக பார்க்கப்படுகிறது. மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் அமெரிக்க இராணுவ மேலாத்திக்க வலியுறுத்தல், அமெரிக்காவின் பிரதான ஐரோப்பிய விரோதியாக ஜேர்மனி மீது விரோதம் அதிகரித்து வருவதுடன் சேர்ந்து, மாஸ்கோ மற்றும் பெய்ஜிங் இரண்டிற்கும் எதிராக போர் அச்சுறுத்தல்களாக உருப்பெற்று வருகிறது. அதிகரித்தளவில், அமெரிக்கா அக்கண்டம் முழுவதிலும் பிரித்து ஆளும் ஒரு கொள்கையைப் பின்பற்றி வருகிறது.

உலக மேலாதிக்க சக்தியாக அதன் இடத்தை காப்பாற்றுவதற்கான வாஷிங்டனின் முயற்சிகளால் ஏற்பட்டுவரும் உலக அரசியல் நிலைகுலைவு, ஐரோப்பிய அதிகாரங்களை அமெரிக்காவுடன் மோதலுக்குள் உந்துகிறது. இது வர்த்தக போர் மற்றும் இராணுவ மோதலுக்கான பாதையாக உள்ளது.

ட்ரம்பை நோக்கிய மே இன் பயணத்திற்கும், இத்தகைய ஆழ்ந்த மற்றும் தீவிரமடைந்து வரும் மோதல்கள் தீர்க்கப்படுவதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இவை உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் தீர்க்கவியலாத முரண்பாடுகளில்—அதாவது பூகோளரீதியில் ஒருங்கிணைந்த மற்றும் ஒன்றோடொன்று இணைந்த பொருளாதாரத்திற்கும் எதிர்விரோத தேசிய அரசுகளாக உலகம் பிளவுபட்டிருப்பதற்கும் இடையிலான முரண்பாடுகளிலும், மற்றும் உலகளாவிய உற்பத்தியின் சமூகமயப்பட்ட தன்மைக்கும், உற்பத்தி கருவிகளின் தனிச்சொத்துடைமை மூலமாக ஆளும் முதலாளித்துவ வர்க்கம் தனிப்பட்ட இலாப திரட்சிக்கு அதை அடிபணிய வைப்பதற்கும் இடையிலான முரண்பாடுகளில் வேரூன்றி உள்ளன.

இதே முரண்பாடுகள் தொழிலாள வர்க்கத்தை போராட்டத்திற்குள் உந்தி வருகிறது. ஒவ்வொரு இடத்திலும், வேலைகள், கூலிகள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் அழிக்கப்படுவதானது வர்த்தக போர் மற்றும் இராணுவ ஆக்ரோஷத்துடன் கை கோர்க்கிறது. ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலுமான தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக ஒரு புரட்சிகர போராட்டத்தில் ஐக்கியப்படுவதன் மூலமாக மட்டுமே, சிக்கன திட்டம், அரசியல் பிற்போக்குத்தனம் மற்றும் போரை முடிவுக் கொண்டு வர முடியும்.