ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The way forward in the fight against Trump

ட்ரம்ப்புக்கு எதிரான போராட்டத்தில் முன்னோக்கிய பாதை

By Socialist Equality Party
23 January 2017

டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதற்கு ஒரேயொரு நாளின் பின்னர் மில்லியன் கணக்கான மக்கள் பங்கேற்ற பாரிய ஆர்ப்பாட்டங்கள் வெடித்திருப்பதானது அரசியல்ரீதியாகவும் வரலாற்றுரீதியாகவும் முன்கண்டிராததாகும். இது, புதிய அமெரிக்க அரசாங்கத்தின் நெருக்கடி நிறைந்த தன்மைக்கும், தீவிரமான சமூக எழுச்சிகள் வரவிருக்கின்றன என்பதற்குமான ஆரம்பகட்ட அறிகுறியாகும்.

சனிக்கிழமையன்று ட்ரம்ப்புக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டங்கள் அமெரிக்க வரலாற்றில் மிகவும் பெரியதான மற்றும் மிகவும் விரிந்துபரவிய பேரணிகளைக் கொண்டிருந்தன, 500க்கும் அதிகமான அமெரிக்க நகரங்களில் இருந்து மூன்று மில்லியன் முதல் ஐந்து மில்லியன் வரையான மக்கள் இதில் பங்கேற்றனர். உலகெங்கிலும் இன்னும் நூறு 100 நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்திருந்ததை அடுத்து, 2003 இல் ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்பிற்கு பிந்தைய காலத்தின் சர்வதேசரீதியாக ஒருங்கிணைப்பு கொண்டிருந்த முதல் முக்கிய ஆர்ப்பாட்டங்களாய் அவை இருந்தன.

இந்த ஆர்ப்பாட்டங்களின் வீச்சானது ஒபாமா நிர்வாகத்தின் எட்டு ஆண்டு காலத்தில் மிகப்பரந்தளவிலான சமூக கோபம் அடக்கி வைக்கப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டுவதாய் இருக்கிறது. வாஷிங்டன் டிசியில் நடந்த பிரதான பெண்கள்’ பேரணியில் 500,000 க்கும் அதிகமான பேர் கலந்து கொண்டிருந்தனர், இது முந்தைய நாளில் ட்ரம்ப்பின் பதவியேற்புக்கு எதிர்பார்க்கப்பட்டிருந்த கூட்டத்தை விடவும் இருமடங்காகும். லாஸ் ஏஞ்சல்ஸ் பேரணியின் பங்கேற்பு எண்ணிக்கை இன்னும் பெரியதாகக் கூட இருக்கக் கூடும், நியூயோர்க் நகர பேரணியில் 400,000 முதல் 500,000 பேர் வரை கலந்து கொண்டிருக்கலாம் என ஊடக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. சிக்காகோவில் 250,000 பேர் மற்றும் டென்வரில் 200,000 பேர். ட்ரம்புக்கு இருந்த உலக அளவிலான விரோதம் ஒவ்வொரு கண்டத்திலுமான பேரணிகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருந்தது, அதிகப்பட்சமாய் லண்டனில் (100,000) மற்றும் டொரோண்டோவில் (60,000) பங்கேற்பு இருந்தது.

இந்த ஆர்ப்பாட்டக்காரர்களின் பங்கேற்பு அளவு, ஏற்பாடு செய்த ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அல்லது அதனைச் சுற்றி இயங்கும் தனிநபர்கள் அல்லது குழுக்களின், எதிர்பார்ப்புகளையும் விஞ்சி அமைந்திருந்தது என்பது தெளிவு. ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றவர்களது கவலைகள், ஆர்ப்பாட்டங்கள் எந்த குறுகிய கட்டமைப்பிற்குள் அழைக்கப்பட்டதோ அவற்றைத் தாண்டி அமைந்திருந்தன. புலம்பெயர்ந்த மக்களை பாரிய அளவில் சுற்றிவளைப்பது, முஸ்லீம் மக்களுக்கான ஒரு கூட்டரசாங்க பதிவேடு, புஷ் மற்றும் ஒபாமாவினது போர்களையும் தாண்டிய இராணுவ நடவடிக்கை, மற்றும் பொதுக் கல்வி, சுகாதாரப் பராமரிப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு போன்ற அத்தியாவசிய வேலைத்திட்டங்களை இல்லாதொழிப்பது ஆகிய ட்ரம்ப்பின் திட்டங்களுக்கு மில்லியன் கணக்கான மக்கள் எதிர்ப்பு காட்டுகின்றனர்.

ட்ரம்பின் அரசாங்கம் பாரிய மக்களது எதிர்ப்புக்கு முகம் கொடுக்கவிருக்கிறது என்பது மறுக்கவியலாததாகும். அதுவே ட்ரம்ப்புக்கு எதிராக மட்டுமல்லாது, அவரை உருவாக்கிய சமூக மற்றும் பொருளாதார அமைப்புமுறைக்கு எதிராகவுமான ஒரு தெளிவான முன்னோக்கையும் மூலோபாயத்தையும் உருவாக்குவதை அத்தனையிலும் அத்தியாவசியமானதாக்குகிறது.

உள்வரும் நிர்வாகம்தான் முதலாளித்துவ வெகுசிலவராட்சியின் உண்மையான முகமாகும். தவிர ட்ரம்ப், அமைதியான மற்றும் ஜனநாயகரீதியான சமூகத்தில் ஒரு தடம்புரள்வாக தோன்றியவரல்ல, மாறாக ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளின் நிர்வாகங்களின் கீழும் பல தசாப்தங்களாக நடைபெற்று வந்திருந்த சமூக வெட்டுகள், அதிகரித்த சமத்துவமின்மை மற்றும் முடிவற்ற போர் ஆகியவற்றின் விளைபொருளே அவர்.

ட்ரம்ப் மூலமாக ஆளும் வர்க்கமானது தனது முகமூடியைக் கழற்றிக் கொண்டிருக்கிறது, சொந்த நாட்டிலும் வெளிநாடுகளிலும் தனது நலன்களைப் பாதுகாப்பதற்கு முன்னினும் வன்முறையான வழிமுறைகளுக்கு தயாரிப்பு செய்கிறது. இது, ஆர்ப்பாட்டங்களைக் கண்டு தனது கொள்கைகளை மாற்றிக் கொள்ளக் கூடிய ஒரு அரசாங்கம் அல்ல. இது, போர் மற்றும் ஒடுக்குமுறையின் பாதையில் இறங்கி விட்டிருக்கின்ற ஒன்றாகும். ட்ரம்ப்பின் பதவியேற்பு உரையின் பாசிசத் தன்மையானது அது கட்டவிழ்த்து விட தயாரிப்பு செய்து கொண்டிருக்கின்ற அரசியல் சக்திகளின் தன்மையை தெளிவாக்குகிறது.

ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டத்தை கொண்டு ஆயுதபாணியாக இருக்கக் கூடிய அரசியல்நனவுமிக்க ஒரு தொழிலாள வர்க்கம் மட்டுமே முதலாளித்துவ வெகுசிலவராட்சியுடன் கணக்குத்தீர்க்கவல்ல ஒரேயொரு சமூக சக்தியாகும். எதிர்ப்பானது, ஒரு சுயாதீனமான மற்றும் புரட்சிகர சக்தியான தொழிலாள வர்க்கத்தில் வேரூன்றியிராத மட்டத்திற்கு, அது ஒடுக்கப்படும், கலைக்கப்படும் அல்லது ஜனநாயகக் கட்சியின் பிற்போக்கான கொள்கைகளுக்குப் பின்னால் திசைதிருப்பப்படும்.

இந்த ஆர்ப்பாட்டங்கள் மில்லியன் கணக்கான மக்களின் உண்மையான மற்றும் ஆழமான-உணர்வுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன. ஆனால் ஏற்பாடு செய்தவர்களும் உரைமேடைகளில் ஆதிக்கம் செலுத்தியவர்களும் பெரும்பாலும் ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர்களாகவே இருந்தனர். அவர்கள் வர்க்க மற்றும் பொருளாதார சமத்துவமின்மை குறித்த பிரச்சினைகளை பால், நிறம் மற்றும் பால் விருப்பம் ஆகிய அடையாளப் பிரச்சினைகளுக்கு கீழ்ப்படியச் செய்வதற்கு முனைந்தனர். அது மக்களிடம் ஜனரஞ்சகமான பதிலிறுப்பைக் காணவியலாத போது, பல பேரணிகளில் உரையாற்றியவர்கள், தேர்தல் பிரச்சாரத்திலும் அதற்குப் பின்னரும் ஜனநாயகக் கட்சியின் மையக் கவனமாக இருந்து வந்திருந்த ரஷ்ய-விரோத மற்றும் போர்-ஆதரவுப் பிரச்சாரத்தை ஊக்குவிப்பதற்காய் முனைந்தனர்.

ஹிலாரி கிளிண்டன் மட்டும் வெற்றி பெற்றிருந்தால் ஆர்ப்பாட்டம் செய்ய ஏதுமிருந்திருக்காது என்பதே ஆர்ப்பாட்டங்களுக்கு தலைமையில் இருந்த அரசியல் சக்திகளின் மறைமுகமான அல்லது நேரடியான அனுமானமாக இருந்தது. ஆயினும், ஹிலாரி கிளிண்டன் உள்ளபடியானநிலையின் வேட்பாளராக, வோல்-ஸ்டீரிட் மற்றும் இராணுவ/உளவு எந்திரத்தின் கூட்டணியின், வேட்பாளராகவே போட்டியிட்டார். தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் பொருளாதார நலன்களுக்கான எந்த விண்ணப்பத்திற்கும் ஜனநாயகக் கட்சி காட்டிய குரோதமே ட்ரம்ப்பின் வாய்வீச்சிற்கும் அமெரிக்காவெங்கிலும் இருந்த நாசமாக்கப்பட்ட தொழிற்சாலை நகரங்கள் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் தொழிலாளர்களின் நண்பராக தன்னை அவர் காட்டிக் கொள்வதற்கும் பாதையமைத்து கொடுத்திருந்தது.

ட்ரம்ப் உடன் ஜனநாயகக் கட்சிக்கு பேதங்கள் எவ்வளவு இருந்தாலும், அவை அனைத்தும் தந்திரோபாயம் தொடர்பானவையே. ஒரு “சோசலிஸ்ட்” எனக் காட்டிக் கொண்டு ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக முயற்சி செய்த செனட்டர் பேர்னி சாண்டர்ஸ், பாஸ்டனில் பேரணியில் பேசுவதற்கு முந்தைய நாளில் தான் ஜெனரல் ஜேம்ஸ் “Mad Dog” மாட்டிஸை ட்ரம்ப்பின் பாதுகாப்புச் செயலராக பரிந்துரைப்பதற்கு ஏற்பாக வாக்களித்திருந்தார் என்ற உண்மையில் இருந்தே ஜனநாயகக் கட்சியினரின் “எதிர்ப்பு” மோசடி வெளிப்படக் காணலாம். ஜனநாயகக் கட்சியினரின் செனட்டர்களில் ஒருவரை தவிர்த்து கிட்டத்தட்ட அனைவருமே அவருடன் இணைந்து இதே ஏற்பு வாக்கினை அளித்திருந்தனர்.

இன்று ட்ரம்பை எதிர்த்து நிற்கும் அனைவரும் கடந்த காலத்தின் படிப்பினைகளை -குறிப்பாக ஈராக் போருக்கு எதிரான 2003 ஆம் ஆண்டின் பாரிய போர்எதிர்ப்புப் போராட்டங்கள் தோல்விகண்டதன் படிப்பினைகளை- கற்றுக் கொண்டாக வேண்டும். அந்த ஆர்ப்பாட்ட பிரச்சாரமானது ஜனநாயகக் கட்சிக்கு கீழ்ப்படியச் செய்யப்பட்டது, அக்கட்சி போரை அங்கீகரித்தும் அதற்கு நிதியாதாரம் ஒதுக்கவும் நாடாளுமன்றத்தில் வாக்களித்து விட்டு, அதன்பின்னர் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்குள் ஆர்ப்பாட்ட பிரச்சாரத்தை திசைதிருப்பி விட்டது. 

ஜனநாயகக் கட்சியின் வெற்றிகள் உருவாக்கியதென்ன? ஒபாமா ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் புஷ்ஷின் போர்களை தொடர்ந்தார் என்பதோடு லிபியா, சிரியா மற்றும் ஏமனில் புதிய போர்களை தூண்டினார், அத்துடன் ரஷ்யா மற்றும் சீனா இரண்டு நாடுகளுக்கு எதிராகவும் போர்த் தயாரிப்புகளுக்கு துவக்கமளித்தார். சொந்த நாட்டில், முந்தைய எந்த ஜனாதிபதியை விடவும் அதிகமாய் ஒபாமா புலம்பெயர்ந்தமக்களை சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பினார் என்பதோடு, போலிசுக்கு இராணுவ சாதனங்களை வழங்கினார், மின்னணுக் கண்காணிப்பை முன்கண்டிராத ஒரு அளவில் ஆதரித்தார், அத்துடன் அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரும் அளவுக்கு தொழிலாள வர்க்கத்திடம் இருந்து செல்வந்தர்களுக்கு செல்வம் இடமாற்றப்படுவதை மேற்பார்வை செய்தார்.

ட்ரம்ப் நிர்வாகத்திற்கான எதிர்ப்பு திறம்பட்டதாக இருக்க வேண்டுமென்றால், அது முதலாளித்துவ சமூகத்திலுள்ள தீர்மானகரமான புரட்சிகர சக்தியான தொழிலாள வர்க்கத்தில் வேரூன்றியதாக இருந்தாக வேண்டும். ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பு —பெண்கள், சிறுபான்மையினர், புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் ஓர்பால் விருப்பத்தாரின் உரிமைகள் உள்ளிட்டவை— சமத்துவமின்மை, வேலைவாய்ப்பின்மை, வறுமை, போலிஸ் வன்முறை, சர்வாதிகாரம் மற்றும், மிக இன்றியமையாததாக, போர் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்துடன் இணைக்கப்படுவது என்பது இதன் பொருளாகும்.

ஜனநாயக உரிமைகளது பாதுகாப்பு, வேலைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்களுக்கான போராட்டம், மற்றும் போருக்கு எதிரான போராட்டம்: இந்த மூன்றும் தான் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கம் அரசியல்ரீதியாக அணிதிரட்டப்படுவதற்கு அடிப்படையாக அமைய வேண்டிய மூன்று மூல பாகங்களாகும்.

ட்ரம்ப்புக்கு எதிரான போராட்டமானது முதலாளித்துவத்திற்கும் அதன் அத்தனை அரசியல் பிரதிநிதிகளுக்கும் எதிரான போராட்டமாகும். சமத்துவமின்மை மற்றும் சுரண்டலில் வேரூன்றிய ஒரு சமூக மற்றும் பொருளாதார அமைப்புமுறைக்கு —மனிதகுலத்தை பேரழிவை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கின்ற ஒரு அமைப்புமுறை— எதிராக உலகின் ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர்களை கல்வியூட்டுவதையும், ஒழுங்கமைப்பதையும் மற்றும் அணிதிரட்டுவதையும் அது சார்ந்திருக்கிறது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அத்தனை பிரிவுகளுடனும் அரசியல் கூட்டணி கொண்ட, சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே இப்போராட்டத்திற்குத் தலைமை கொடுத்துக் கொண்டிருக்கிறது. பரந்த தீவிரப்படல் மற்றும் முன்கண்டிராத அரசியல் போராட்டங்களது ஒரு காலகட்டத்திற்குள் நாம் நுழைந்து கொண்டிருக்கிறோம். இது பங்குபெறுவதற்குரிய சமயமாகும். சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து அதனைக் கட்டியெழுப்புவதற்கு உதவுங்கள்!