ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

US admiral must “imagine the unimagined:” All-out war with North Korea

வட கொரியா உடனான முழுமையான போர் குறித்து, அமெரிக்க கடற்படைத் தலைவர் “கற்பனை செய்ய முடியாததை கற்பனை” செய்ய வேண்டும்

By Peter Symonds 
18 October 2017

அமெரிக்க பசிபிக் கட்டளையகத்தின் (US Pacific Command – PACOM) தளபதி அட்மிரல் ஹரி ஹரிஸ் வியாழனன்று கருத்து தெரிவிக்கையில், வட கொரியா உடனான போர் குறித்த அமெரிக்காவின் முன்னேறிய தயாரிப்புக்களை அடிக்கோடிட்டுக் காட்டினார். மேலும், கொரிய தீபகற்பம் மீதான போரில் மில்லியன் கணக்கிலான உயிர்களை விலையாக கொடுக்க நேரிடும் என்பதால் அது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றென பல்வேறு மூலோபாய ஆய்வாளர்களும், இராணுவ வர்ணனையாளர்களும் எச்சரிக்கை விடுப்பதை ஹாரிஸ் தனது சிங்கப்பூர் உரையின் போது நிராகரித்தார்.

மூலோபாய ஆய்வுகளுக்கான சர்வதேச நிறுவனத்தில் (International Institute for Strategic Studies) பேசிய போது ஹரிஸ், “வட கொரியா தொடர்பான இராணுவ தேர்வுகள் பற்றி பலரும் அவை கற்பனை செய்ய முடியாதவையாக இருப்பதாகக் கருதுகின்றனர்,” ஆனால், “மக்களே, கற்பனை செய்ய முடியாததையும் நான் கற்பனை செய்ய வேண்டும்” என அறிவித்தார். வட கொரியா மீதான அமெரிக்க இராணுவ தாக்குதல்கள் குறித்த தயாரிப்புக்களில் முன்னணி வகிக்கும் ஹரிஸிடமிருந்து வந்ததான இந்த குறிப்பு பியோங்யாங்கிற்கு எதிரான சமீபத்திய அச்சுறுத்தலாக உள்ளது.

கடந்த வாரம் அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஜேம்ஸ் மாட்டிஸ், தேவைப்பட்டால், [வட கொரியாவிற்கு எதிராக] எந்தவொரு இராணுவத் தெரிவையும் நமது ஜனாதிபதி நியமிக்கும் வகையில் நாம் அனைத்து இராணுவத் தெரிவுகளையும் கொண்டிருக்கிறோமா என்பதை உறுதி செய்ய ஏதுவாக அமெரிக்க இராணுவ படைகள் தயாராக இருக்க வேண்டுமென அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து ஹாரிஸின் இந்த அறிவிப்பு வெளிவந்தது. முந்தைய வாரத்தில், ஜனாதிபதி ட்ரம்ப், “உயர்ந்தபட்ச வேகத்திலான” இராணுவத் தெரிவுகளை வழங்கிடுமாறு உயர்மட்ட இராணுவ மற்றும் உளவுத்துறை தலைவர்களை வலியுறுத்தினார்.

கொரிய தீபகற்ப நீர்நிலைகளில் தென் கொரிய கடற்படை கப்பல்கள் உடனான பெரிய அளவிலான கூட்டு பயிற்சிகளில் தற்போது அமெரிக்க கடற்படை ஈடுபட்டுள்ளது. USS ரொனால்ட் ரீகன் எனும் அணுஆயுத சக்திவாய்ந்த விமானந்தாங்கிக் கப்பல், அழிப்புக்கப்பல்கள் மற்றும் போர்க்கப்பல்களின் தாக்குதல் குழுக்கள் உடனான அதன் பங்கேற்பு உட்பட, 40 க்கும் மேற்ப்பட்ட போர்க்கப்பல்கள் இதில் பங்கேற்றுள்ளன. மேலும், USS Michigan மற்றும் USS Tucson ஆகிய இரண்டு அணுஆயுத சக்திவாய்ந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் தென் கொரிய பிராந்தியத்தில் சமீபத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்தன.

தொடர்ச்சியானதொரு கூட்டு இராணுவ பயிற்சிகளையும், ஆத்திரமூட்டல்களையும் கொண்டதாக சமீபத்தில் நடத்தப்பட்டுவரும் இந்த கடற்படை போர் பயிற்சிகள் கொரிய தீபகற்பத்தின் மீதான பதட்டங்களை மிகவும் அதிகரிக்க செய்பவையாகவே உள்ளன. போர் தயாரிப்புக்களுக்கான மற்றொரு அறிகுறியாக, மோதல் ஏற்படுமானால், தென் கொரியாவிலுள்ள அமெரிக்க இராணுவம், அமெரிக்க படைத்துறை சாராத பாரிய வெளியேற்றும் பயிற்சியினை அடுத்த வாரம் மேற்கொள்ளும். இது போன்ற பயிற்சிகள் எல்லாம் “வழமையானவை”தான் என்று விவரிக்கப்பட்டு வருகின்ற போதிலும், நேரம் வரும்போது, அந்த நேரத்தில் “இராணுவத் தெரிவை” பயன்படுத்துவதற்கு முன்பாக நேரத்தை வீணடிக்காமல் இருப்பதற்கு இவை அவசியமென ட்ரம்பும் அவரது உயர்மட்ட அதிகாரிகளும் அறிவித்துள்ளனர்.

அட்மிரல் ஹரிஸ் நேற்றைய தனது உரையில் பின்வருமாறு அறிவித்தார்: “ஒரு மூர்க்கமான தலைவரான கிம் ஜோங் இன் கையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைக் கொண்ட அணுஆயுதங்கள் உள்ளதென்பது பேரழிவுக்கான ஒரு செய்முறையாகவே உள்ளது.”

உண்மையில், உலகின் மிகப் பெரிய மற்றும் மிகவும் அதிநவீன அணுஆயுத படைகளத்தை கட்டுப்படுத்தும் மற்றும் வட கொரியாவை “ஒட்டுமொத்தமாக அழிக்க” அச்சுறுத்தும் ட்ரம்பிற்கே இவ்வாறு கூறப்படும் விளக்கங்களும், ஒரு அபாயகரமானவர் என்பதும் பொருந்தக்கூடியவையாகும்.

அமெரிக்க மற்றும் அதன் நட்பு நாடுகளின் உடனடி இராணுவ தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதை நம்புவதற்கும், அதற்கேற்ப போருக்கு தயாராவதற்கும் பியோங்யாங் தலைமை அனைத்துக் காரணத்தையும் கொண்டுள்ளது. திங்களன்று, ஐ.நா.வுக்கான வட கொரிய துணை தூதர், கிம் இன் ரியோங், அணுஆயுதப் போர் “எந்த நேரத்திலும் வெடிக்கக்கூடும்” என எச்சரித்ததோடு, அமெரிக்க நட்பு நாடுகள் பழிவாங்கும் நடவடிக்கையை தவிர்க்க விரும்பினால் போரில் பங்கேற்க வேண்டாம் எனவும் வலியுறுத்தினார்.

ஐக்கிய நாடுகள் அணுஆயுத ஒழிப்பு குழுவிடம் கிம், அமெரிக்காவிடம் இருந்து “இத்தகையதொரு தீவிர மற்றும் நேரடியான அணுஆயுத அச்சுறுத்தலுக்கு” உள்ளான ஒரே நாடாக எங்களது நாடு தான் உள்ளது என்றும், மேலும் இந்த அச்சுறுத்தல் அகற்றப்படாவிட்டால் மட்டுமே தனது அணுஆயுதங்களை பேச்சுவார்த்தை மேசையில் வைக்கும் எனவும் தெரவித்தார். மேலும், “எங்களது உயர் தலைமைத்துவத்தை அகற்றுவதை நோக்கமாக கொண்டுள்ள இரகசிய நடவடிக்கையை” செயற்படுத்த முயற்சிப்பதாக அமெரிக்க அரசாங்கத்தையும் அவர் குற்றம் சாட்டினார்.

OPLAN 5015 இன் கீழ் வட கொரிய தலைவர்களை படுகொலை செய்ய அமெரிக்கா மற்றும் தென் கொரியா மூலமாக அமைக்கப்பட்டுள்ள “முக்கிய தலைவர்களை கொல்லும் குழுக்கள்” தொடர்பானதாகவே கடைசி கருத்து உள்ளது. தென் கொரிய ஊடகம், இத்தகைய குழுக்கள் கூட்டு கடற்படை பயிற்சிகளில் பங்கேற்றுக் கொண்டிருக்கும் USS Michigan போர்க்கப்பலில் இடம்பெறும் என தெரிவித்தது.

வட கொரியா அதன் அணுஆயுத மற்றும் ஏவுகணைத் திட்டங்களை கைவிடக் கோரும் அமெரிக்க கோரிக்கைகளுக்கு அடிபணிய அதனை வலியுறுத்தி அதன் மீது இன்னும் மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை திணிக்க ரஷ்யா மற்றும் சீனா மீதான அழுத்தத்தை ஹரிஸும் அதிகரித்தார். நிலக்கரி, இரும்பு தாது மற்றும் பிற கனிமங்கள் உள்ளிட்ட வட கொரிய முக்கிய ஏற்றுமதிகளை தடை செய்யும் மற்றும் பியோங்யாங்கிற்கான பெட்ரோலிய பொருட்கள் விற்பனையை மட்டுப்படுத்தும் வகையில் கடுமையான அபராதங்களை விதிக்கும் சமீபத்திய ஐ.நா.தீர்மானங்களை ஏற்கனவே பெய்ஜிங்கும், மாஸ்கோவும் ஒப்புக் கொண்டுள்ளன.

கடந்த வெள்ளியன்று வெளியிடப்பட்ட சமீபத்திய சீன வர்த்தக புள்ளிவிபரங்கள், ஏழாவது தொடர்ச்சியான மாதாந்திர வீழ்ச்சியாக செப்டம்பரில் வட கொரியாவிலிருந்து செய்யப்படும் இறக்குமதிகளில் 37.9 சதவிகித வீழ்ச்சியையும், மேலும் வட கொரியாவுக்கான சீன ஏற்றுமதிகளில் 6.7 சதவிகித இழப்பையும் காட்டுகிறது. திங்களன்று, ரஷ்யா, துத்தநாகம், வெள்ளி, தாமிரம் மற்றும் நிக்கல் போன்ற வட கொரிய இறக்குமதிகளை தடை செய்துள்ளதையும், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதையும், மேலும் ஹெலிகாப்டர் மற்றும் கப்பல்கள் ஏற்றுமதியை தடை செய்துள்ளதையும் உறுதிப்படுத்தியது.

இருந்த போதிலும், உலகமும் சரி, இந்த பிராந்தியமும் சரி சீனா இன்னும் செய்ய வேண்டியுள்ளதென எதிர்பார்ப்பதாக ஹரிஸ் அறிவித்தார். மேலும் அவர், “ஏனைய நாடுகளை விட பியோங்யாங் மீது மிகுந்த செல்வாக்கை பெய்ஜிங் கொண்டிருக்கின்ற” நிலையில் வட கொரிய வர்த்தகம் சீனாவை சார்ந்திருப்பது, கொரிய தீபகற்பத்தை அமைதியாக வெளிக்கொணருவதற்கு சீனாவை முக்கியமாக்குகிறது” என தெரிவித்தார். இவ்விடயத்தில், ரஷ்யா உதவிகரமாக இருக்குமா அல்லது எதிர்க்குமா என்பது குறித்து பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டுமென ஹரிஸ் தெரிவித்தார்.

ஈரான் உடனான 2015 அணுசக்தி உடன்படிக்கையை கடந்த வாரம் ட்ரம்ப் நிராகரித்தமையானது, வட கொரியா உடனான நல்ல நம்பிக்கையிலான பேச்சுவார்த்தைக்கு வாஷிங்டன் நோக்கம் கொண்டிருக்கவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது. பியோங்யாங் ஆட்சியை பலவீனபடுத்தவும், நீக்கவும் நோக்கம் கொண்ட ஒருபோதும் முடிவுறாததான தொடர்ந்த அமெரிக்க கோரிக்கைகளுக்கு அது முழுமையாக சரணடைய வேண்டும் என்ற ட்ரம்பின் கருத்து மட்டுமே இதற்கான ஒரே “அமைதியான தீர்வு” ஆகும்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பூகோள அளவிலான மேலாதிக்கத்தை அச்சுறுத்தும் சீனா, ரஷ்யா மற்றும் எந்தவொரு சக்திக்கும் எதிராக நோக்கம் கொண்ட பரந்த மூலோபாயத்தின் ஒரு கூறாகவே வட கொரியா உடனான அமெரிக்க மோதல் உள்ளது என்பதை ஹரிஸின் கருத்துக்கள் மீண்டும் நிரூபிக்கின்றது.

தென் சீன மற்றும் கிழக்கு சீன கடற்பகுதிகளில் சீனா தனது “ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை” நிறுத்த வேண்டுமென ஹாரிஸ் மீண்டும் கோரினார். உண்மையில், இந்த சர்ச்சைக்குரிய நீர் பகுதிகளில் பதட்டங்களை மிகவும் அதிகரிக்கச் செய்தது அமெரிக்கா தான். சீன பிராந்திய உரிமை கோரல்களுக்கு சவாலாக அமெரிக்க போர்க்கப்பல்களை அனுப்புவதில் ஈடுபடும் மோதலுக்குரிய “கடல்வழி சுதந்திர” நடவடிக்கைகளுக்கு அழுத்தம் கொடுப்பதில் முன்னணி வகிப்பவராக ஹரிஸ் இருந்து வருகிறார்.

வட கொரியாவுடனான மோதலை வேண்டுமென்றே அதிகப்படுத்துவதாக, சீனா மற்றும் ரஷ்யா போன்ற மாபெரும் சக்திகளை விரைவாக போருக்குள் இழுக்கக்கூடியதான ஒரு தவறு அல்லது தவறான கணிப்பு மூலம், கொரிய தீபகற்பம் மீதான பேரழிவுகர மோதலை தோற்றுவிக்கும் மிகுந்த அபாயகரமானதொரு சூழ்நிலையையே ட்ரம்ப் நிர்வாகமே உருவாக்கியுள்ளது.