ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

US prepares to put nuclear bombers on 24-hour alert

அணுஆயுத குண்டுவிமானங்களை 24 மணிநேர தயார்நிலையில் வைத்திருக்க அமெரிக்கா தயாராகிறது

By Andre Damon
24 October 2017

வட கொரியாவுடன் ஆழமடைந்து வரும் மோதல்நிலை மற்றும் ரஷ்யா மற்றும் சீனாவுடன் அதிகரித்துவரும் பதட்டங்களுக்கு மத்தியில், 1991 ஆம் ஆண்டிற்கு பின்னர் முதல் முறையாக அமெரிக்கா அணுசக்தி திறன்வாய்ந்த B-52 ரக குண்டுவீசிகளை 24 மணிநேர தயார்நிலையில் வைத்திருக்க மீண்டும் அதன் கப்பற்படையை தயார்படுத்தி வருகிறது.  

“நாங்கள் தயாராக இருக்கிறோம் என உறுதிசெய்து கொள்வதில் இது முன்னோக்கிய ஒரு படியாகும்” என்று விமானப்படைத் தலைவர் ஜெனரல் டேவிட் கோல்ட்ஃபெய்ன் Defense One செய்தி ஊடகத்திற்கு அளித்த பிரத்தியேக பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

பனிப்போரின் போது, அமெரிக்க விமானப்படை மூலோபாய விமான கட்டளையகம் (US Air Force Strategic Air Command), அமெரிக்கா முழுவதிலுமான இராணுவத் தளங்களில், நிரந்தர தயாரிப்பு நிலைப்பாடாக தளத்தில் மாலுமி குழுவினர் தங்கும் வசதிகளுடன் B-52 ரக அணுசக்தி திறன்வாய்ந்த கனரக குண்டுவீசிகளை நிலைநிறுத்தி வைப்பதற்கு “கிறிஸ்துமஸ் மரம்” என அழைக்கப்படும் தயார்நிலையான பகுதிகளை தனது தளங்களில் பராமரித்து வந்தது.

லூசியானாவிலுள்ள பார்க்ஸ்டெல் விமானப்படை தளத்திற்கு பயணம் செய்தபோது கோல்ட்ஃபெய்ன், பனிப்போரின் முடிவிற்கு பின்னர் முடக்கி வைக்கப்பட்டிருந்தவற்றை புதுப்பித்தே இத்தகைய வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளது என்பதைத் தெளிவுபடுத்தினார்.

“ஒரு எச்சரிக்கை தோற்றப்பாங்காக B-52 ரக குண்டுவீசிகளை காட்டிக்கொள்ள பார்க்ஸ்டெல்லை தயார்செய்யும் பொருட்டு ஏற்கனவே பல்வேறு மேம்பாடுகள் அங்கே மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், எச்சரிக்கை தளங்களுக்கு அருகிலுள்ள ஒரு பழமையான கான்கிரீட் கட்டிடமும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. பனிப்போர் காலத்தில் B-52 குண்டுவீசி குழுக்கள், அங்கு தான் தங்கியிருந்து, தங்களது விமானத்தை நோக்கி ஓட எப்பொழுதும் தயாராக இருப்பர் என்பதோடு, கண நேர அறிவிப்பில் வெளியேறுவர். மேலும் அதன் உள்ளே, 100 க்கும் மேற்பட்ட குழு உறுப்பினர்களுக்கு தேவையான படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும், அத்துடன் வெளிப்புறத்திலுள்ள ஒன்பது எச்சரிக்கை தளங்களில் மனித குண்டுவீச்சாளர்களை நிலைநிறுத்தும் குழுக்கள் தங்குவதற்கும் சேர்த்து அங்கு தேவைக்கு அதிகமான அறைகளும் அமைக்கப்பட்டிருக்கும்” என Defense One இல் தெரிவிக்கப்பட்டது.

மினியாட் விமானப்படைத் தளத்தில் அமைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் மர வடிவிலான ஓடுதளத்தில் B-52 குண்டுவீசிகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளது - 1991 இல் எடுக்கப்பட்ட புகைப்படம்.

“கோல்ட்ஃபெய்னும், ஏனைய மூத்த பாதுகாப்பு அதிகாரிகளும், எச்சரிக்கை ஆணை பிறப்பிக்கப்படவில்லை என்றும், ஆனால் அது நிகழக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் தயாரிப்புக்கள் மட்டுமே நடைபெற்று வருகின்றதென வலியுறுத்தி கூறியதாக” Defense One குறிப்பிட்டது. Defense One இன் விபரிப்பிற்கு விடையிறுப்பாக விமானப்படை, அத்தகைய ஆணை ஏதும் பிறப்பிக்கப்படவில்லை என்றும், அது வெறும் மறுபரிசீலனை தான் என்பதாக “மறுப்பு” ஒன்றையும் வெளியிட்டது. அதிலும் அந்த வசதிகள், 24 மணி நேர தயார்நிலை பயன்பாட்டிற்காக மட்டுமே புதுப்பிக்கப்பட்டு வருகின்றன என்பது போன்ற குற்றச்சாட்டுக்களை விமானப்படை குறிப்பாக மறுக்கவில்லை.

பல வழிகளில், கோல்ட்ஃபெய்னின் அறிக்கைகள் பதில்களை விட அதிகளவு கேள்விகளையே எழுப்புகின்றன. ரஷ்யா, சீனா மற்றும் அவற்றின் நட்பு நாடுகள் நிலைநிறுத்தியுள்ள உயர்தர விமான எதிர்ப்பு ஏவுகணைகளுக்கு முன்னால் இந்த B-52 ரக குண்டுவீசிகள் அளவில் பெரிய, மெதுவான வேகம் கொண்ட மற்றும் வலுகுன்றியவையாக உள்ளன. பனிப்போரின் போது, இந்த குண்டுவீசிகள், எதிர்பாரா அணுஆயுத தாக்குதல்களுக்கு பாரியளவில் பதிலடி கொடுக்கும் விதமாக நிரந்தர தயார்நிலையில் பராமரிக்கப்பட்டு வந்தன. அணுஆயுத தாக்குதல் ஆகாயத்தில் நிகழும் அந்த கணத்திலேயே அதிவிரைவாக அவற்றை எதிர்கொள்ள இந்த குண்டுவீசிகளை பிரயோகிக்கும் விதமாக “கிறிஸ்துமஸ் மரங்கள்” வடிவமைக்கப்பட்டு இருந்தன. அந்த நேரத்தில், அவர்கள் தங்கள் இலக்குகளுக்கான ஒரு சிறு வழியைக் கண்டறிந்து, டசின் கணக்கிலான பெரும் நகரங்களை சாம்பலாக்கிவிடும் திறன் கொண்டதான, ஒரு மணி நேரத்திற்குள் அதன் இலக்கை சென்றடையக்கூடிய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அணுஆயுத சக்திவாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBMs) தொகுதிகளை ஏற்கனவே அங்கு நிறுவி வெடிக்க செய்யப்படவேண்டியிருக்கும்.

ஒரு எல்லைப்புற மோதலில் தற்செயலான துப்பாக்கிச்சூடு பரிமாற்றத்திற்கு பதிலடி கொடுக்கும் போதோ அல்லது மூர்க்கத்தனமாக உணர்ச்சிவசப்படும் ஜனாதிபதி ட்ரம்பின் பின் இரவு பிரமையினாலோ, அணுஆயுத சக்திவாய்ந்த நாடுகள் தாக்குதலுக்கு உள்ளானாலும் உடனடியாக அவற்றை மீள்கட்டமைக்கும் சாத்தியங்களை கொண்ட அளவில் பெரிய நாடுகளான ரஷ்யா அல்லது சீனா உடனான ஒரு முழு அளவிலான வெப்ப ஆற்றல்மிக்க அணுஆயுத பரிமாற்றத்திற்கானதொரு உலகையே அமெரிக்கா தயாரிப்பு செய்து வருகிறது என்பதாக கோல்ட்ஃபெய்ன் கருத்துக்களின் மிக நேர்த்தியான விளக்கம் இருந்தது.

அதே பாணியில், கோல்ட்ஃபெய்ன் Defense One இல், “எந்தவொரு குறிப்பிட்ட நிகழ்வுக்காகவும் திட்டமிடப்படவில்லை என்றே நான் இன்னும் இதைப் பார்க்கிறேன், என்றாலும் உலகளாவிய சூழ்நிலையின் யதார்த்தத்தை பொறுத்து நமக்கு நாமே தான் கண்டுபிடித்துக் கொள்ளவேண்டும்” எனவும் தெரிவித்தார்.

ஆனால் பிற கேள்விகளும் உள்ளன. திட்டங்கள் குறித்து விவாதிக்க கோல்ட்ஃபெய்னை பணியாளர் கூட்டு தலைவர்கள் அங்கீகரித்துள்ளனர் என்பதை விமானப்படை விரைவாக ஏன் “மறுதலித்தது”? 24 மணிநேர தயார்நிலைக்கு விமானப்படை திட்டமிடவில்லை என்றால், புனரமைப்புக்கு அங்கீகாரம் அளித்தது யார், அவற்றை நிலைநிறுத்த விமானப்படை ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லை?

இந்த கருத்தின் அடிப்படையில், வடக்கு டகோட்டாவில் மினியாட் விமானப்படைத் தளத்தில் இருந்து, ஒவ்வொன்றும் W80 அணுசக்தி வெடிக்கும் சாதனங்களைக் கொண்டதான ஆறு AGM-86 கடல்வழி ஏவுகணைகளை தாங்கிய, B-52 ரக குண்டுவீசி ஒன்று தளத்தை நோக்கி “தற்செயலாக” பறந்து வந்தபோது, ஆகஸ்ட் 2007 இல் நடந்ததான இன்னும் விவரிக்கப்படாத நிகழ்வில் பார்க்ஸ்டலே விமானப்படைத் தளத்தின் ஈடுபாட்டின் மதிப்பு குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம், USAF செயலர் மிக்கேல் வெய்ன் மற்றும் USAF தலைமை அதிகாரி மிக்கேல் மொசேலே ஆகியோர் உள்ளிட்ட பல உயர்மட்ட விமானப்படை அதிகாரிகளின் இராஜிநாமாவிற்கு வழிவகுத்தது.

இது தொடர்பாக, கோல்ட்ஃபெய்னின் கூடுதல் கருத்துக்கள் நடுங்கச் செய்பவையாக உள்ளன. “குற்றங்களை தடை செய்யும் விதமாகவோ அல்லது போருக்காகவோ அணுஆயுதங்களை பயன்படுத்தக்கூடிய புதிய வழிகள் பற்றி சிந்திக்க அவரது படையினரை அவர் கேட்கிறார்” என Defense One தெரிவிக்கிறது. வேறு வார்த்தைகளில் குறிப்பிடுவதானால், ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீதான குண்டுவீச்சு தாக்குதலுக்குப் பின்னர், விமானப்படைத் தலைவர் முதல் முறையாக அணுஆயுத பயன்பாடு கொண்ட போருக்கு உந்தும் அவரது சொந்த முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார், மேலும் புதிய ஆயுத அமைப்புக்களை உண்மையில் களத்தில் இடம்பெறச் செய்யும் நடவடிக்கையை எடுப்பதற்கு முன்னதாகவே அவற்றை நிலைநிறுத்துவதற்கான தயாரிப்புகளை செய்து வருகிறார்.

மேலும் இது தொடர்பாக, கோல்ட்ஃபெய்னால் உந்தப்படும் அமெரிக்க அணுசக்தி படையின் ஆக்கிரோஷமான அபிவிருத்தி, அமெரிக்காவின் அணுசக்தி ஆயுதங்களின் எதிர்காலம் பற்றிய தனது அமைச்சரவை மற்றும் இராணுவ அதிகாரிகளுடனான முரண்பாடான விவாதங்களில் ஜனாதிபதி ட்ரம்பினால் முன்வைக்கப்பட்ட நிலைப்பாடுகளுடன் பிணைந்துள்ளது. பேர்போன ஜூலை 20 பென்டகன் கூட்டத்திற்கு பின்னர், எண்ணற்ற உடன்படிக்கைகளை வெளிப்படையாக மீறும் நிலைக்கு அமெரிக்காவை இட்டுச்செல்லும் ஒரு நடவடிக்கையாக, அமெரிக்க அணு ஆயுதங்களின் எண்ணிக்கையில் பத்து மடங்கு அதிகரிப்புக்கு ஜனாதிபதி ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ள நிலையில், தேசிய செயலர் றெக்ஸ் ரில்லர்சன் அவரை “மூடன்” என அழைத்தார்.

அமெரிக்க அணுஆயுத படைக்கலசாலையை விரிவுபடுத்துவது பற்றிய ட்ரம்பின் பெருமைபீற்றல் அவரது சொந்த குரூர இயல்பினதாக இருந்தாலும், ஒரு புதிய வகை அணுஆயுதம் தாங்கிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்கள், ஒரு புதிய வகை ICBM மற்றும் ஒரு புதிய அணுஆயுதம் தாங்கிய கடல்வழி ஏவுகணை ஆகியவற்றை நியமிப்பதன் மூலமாக, வாஷிங்டனின் அணுஆயுத படைக்கலத்தை நவீனமயமாக்க 1 டிரில்லியன் டாலர் திட்டம் போன்ற ஒரு பெரிய பாரிய இயக்கத்தை ஏற்படுத்த உதவிய ஒபாமாவின் கீழ் பின்பற்றப்பட்ட கொள்கைகளின் தொடர்ச்சியாகவே அவை உள்ளன என்பதையே குறிக்கிறது.

வட கொரியா அத்துடன் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு எதிராக தொடர்ச்சியான அமெரிக்க ஆத்திரமூட்டல்களுக்கு மத்தியில் விமானப்படை, ஒரு நிரந்தர தயார்நிலைக்கு ஏதுவாக மூலோபாய குண்டுவீசிகளை நிலைநிறுத்த தயாராகி வருகிறது என்பதே வெளிப்படையாகவுள்ளது.

அமெரிக்க மற்றும் தென் கொரிய கடற்படைகளுக்கு இடையே கடந்த வாரங்களில் நடைபெற்ற பாரிய கூட்டு இராணுவ பயிற்சிகள் குறித்த முனைப்புகளில், போருக்கான சாத்தியத்தை எதிர்நோக்கி தென் கொரியாவில் இருந்து பணியாளர்களை வெளியேற்றுவதற்கான திட்டங்களை உடனடியாக சோதிக்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்தது.

பயிற்சிகளில் ஈடுபட்டுள்ள விமானம் தாங்கி கப்பல் ஒன்றிலிருந்து வந்த அறிவிப்பின்படி, ABC’s Martha Raddatz ஞாயிறு தின “This Week” நிகழ்ச்சியில், “ஜப்பான் கடல் போர்க்கப்பல்களால் நிறைந்துள்ளது” என தெரிவித்தார். மேலும், நிகழ்ச்சி பகுதியை நிறைவு செய்யும்போது, Raddatz, மாலுமிகள் “இன்று இரவே போராடத் தயாராக இருக்க வேண்டும்” என அறிவித்தார்.

இதற்கிடையில், நேட்டோ, கிழக்கு ஐரோப்பாவில் ரஷ்யாவுடனான மோதலுக்கு தயார் செய்வதில் அதன் பிரசன்னத்தை அதிகரிக்க ஒரே நேரத்தில் முனைந்து வருகிறது. நேட்டோவின் இராணுவ படைகளை இன்னும் விரிவுபடுத்துவதற்கு அழைப்பு விடுக்கும் நேட்டோ, உள்நாடுகளுக்கான வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட வேண்டிய உள்ளடக்கங்களைப் பற்றி, ஜேர்மனியின் Der Spiegel இதழ் இவ்வாறு குறிப்பிடுகின்றது, “1989 க்கு பிந்தைய ஆண்டுகளில் மேற்கத்திய நாடுகள் தங்களது தற்காப்பு திறன்கள் குறித்து நீண்ட காலத்திற்கு அதிகம் செலவழிக்கும் தேவை இருக்காது என உணர்ந்ததை குறிப்பிடுவதான “சமாதான பங்கீடு” என அழைக்கப்பட்ட காலம் முடிவடைந்துவிட்டது, மேலும் பனிப்போர் கால கட்டளை அமைப்புக்களுக்கு திரும்பியுள்ளது. மீண்டும் ஒருமுறை, ஒரு பெரும் இராணுவ மோதலுக்கு நேட்டோ தயாராக வேண்டும்.”

இந்த சூழலில் பார்த்தால், அணு ஆயுதம் தாங்கிய அத்தகையதொரு “பெரும் போருக்கு” அமெரிக்க விமானப்படை தயாராகி வருவது தெரிகிறது.