ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

US Republican senator calls Trump “dangerous to a democracy”

அமெரிக்க குடியரசு கட்சி செனட்டரே, ட்ரம்பை "ஜனநாயகத்திற்கு ஆபத்தானவராக" அழைக்கிறார்

By Andre Damon
25 October 2017

அரிசோனாவின் குடியரசுக் கட்சி செனட்டர் ஜெஃப் ஃப்ளேக், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைக் குற்றஞ்சாட்டியும், அவர் நடவடிக்கைகள் "ஜனநாயகத்திற்கு ஆபத்தானவை" என்று அறிவித்தும் செனட் தளத்தில் செவ்வாயன்று அசாதாரண உரை ஒன்றை வழங்கினார். அக்கட்சி உடைந்து வருகிறது என்பதையும், அமெரிக்காவில் அரசியல் நெருக்கடி தீவிரமடைந்து வருகிறது என்பதையும் எடுத்துக்காட்டும் வகையில், உயர்மட்ட குடியரசு கட்சியினரின் தொடர்ச்சியான பல அறிக்கைகளில் ஃப்ளேக்கின் உரை சமீபத்தியதாகும்.

“நமது ஜனநாயக வழிமுறைகள் மற்றும் கருத்தியல்களுக்கு குழிபறிப்பதை நாம் ஒருபோதும் 'சாதாரண' வழமையென கருதி விடக்கூடாது,” என்று கூறிய ஃப்ளேக், ட்ரம்பின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும், தெளிவாக அவரேயே குறிப்பிட்டார். “நம் நாட்டை அன்றாடம் பிளவுபடுத்திக் கொண்டிருப்பதை —தனிநபர்கள் மீதான தாக்குதல்கள், கோட்பாடுகள், சுதந்திரங்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிரான அச்சுறுத்தல்களை— நாம் ஒருபோதும் பணிவடக்கத்துடன் ஏற்றுக் கொள்ளக்கூடாது,” என்றார்.

ஃப்ளேக்கின் உரையைத் தொடர்ந்து செனட் வெளியுறவு குழுவின் தலைவரான டென்னஸியின் குடியரசு கட்சி செனட்டர் பாப் கோர்க்கருக்கும் ஜனாதிபதி ட்ரம்புக்கும் இடையே மற்றொரு சூடான விவாதம் நடந்தது, ட்ரம்ப் "நம் நாட்டின் மதிப்பைக் கெடுத்து வருவதாக" நேற்று அவர் கூறியிருந்தார். கடந்த வாரம் குடியரசுக் கட்சி செனட்டர் ஜோன் மெக்கெயின் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் இருவரும் ட்ரம்பின் தேசியவாத அரசியல் தன்மையை விமர்சித்து பேசியிருந்தனர்.

குடியரசுக் கட்சியின் செனட் பெரும்பான்மை தலைவர் மிட்ச் மெக்கொன்னல் உடனும் ட்ரம்ப் கூர்மையான மோதல் கொண்டுள்ளார். ஃப்ளேக்கின் உரைக்குப் பின்னர் மெக்கொன்னல் அவரை பாராட்டியதுடன், “ஓர் அருமையானவரிடம் இருந்து நாம் ஓர் உரையை செவிமடுத்துள்ளோம்,” என்று அறிவித்தார்.

ஃப்ளேக் மற்றும் கோர்க்கரின் கருத்துக்கள் மீது கருத்துரைக்கையில், NBC இன் Nightly News நிகழ்ச்சி, “ஓர் அரசியல் பூகம்பம், பழம் பெரும் கட்சி (GOP) ஐ நொருக்கும் அளவுக்கு, மிகவும் கடுமையாக உலுக்குவதாக" கண்டது.

மெக்கெயின் மற்றும் கோர்க்கர் இருவருமே இராணுவ பிரிவுகளுடன் நெருக்கமாக தொடர்பு வைத்திருப்பவர்கள். ஒரு வலதுசாரி குடியரசு கட்சியினரான ஃப்ளேக், வரிகளில், சமூக திட்டங்களில் வெட்டுக்களை அறிவுறுத்தியதற்காக நன்கறியப்பட்டவர்.

இப்போதைய இந்த மோதல், அரசுக்குள் பிளவுகள் தீவிரமடைந்திருப்பதைக் குறிப்பதுடன், இது ட்ரம்ப் நிர்வாகம் நெடுகிலும் அபிவிருத்தி அடைந்துள்ளது.

ட்ரம்புடன் தொடர்ந்து நெருக்கமாக செயல்பட்டு வரும் ட்ரம்பின் முன்னாள் தலைமை மூலோபாயவாதி ஸ்டீபன் பானனின் நடவடிக்கை, குடியரசு கட்சிக்குள் நடக்கும் மோதலில் ஒரு காரணியாகும். ப்ரைய்ட்பார்ட் செய்திகளுக்கு தலைவராக மீண்டும் பதவி ஏற்ற பின்னர், பானன், குடியரசுக் கட்சியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதன் மூலம் அல்லது அதை உடைப்பதன் மூலம் ஒரு அதிவலது பாசிசவாத இயக்கத்தை உருவாக்க செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

கடந்த வாரம் பானனுடன் சேர்ந்து தனது பிரச்சாரத்தை தொடங்கியிருந்தவரும் ஃப்ளேக் க்கு பிரதான சவாலாக விளங்குபவருமான குடியரசு கட்சியாளர் கெல்லி வார்ட் உடனான மோதலில், ஃப்ளேக்கின் எண்ணிக்கை கருத்துக்கணிப்பில் சரிந்திருந்ததால் அவர் மீண்டும் தேர்வாவதற்கு முயலப் போவதில்லையென நேற்று அறிவித்தார். ஃப்ளேக்கின் இராஜினாமாவுக்கு விடையிறுத்து பானன் கூறுகையில், “எங்கள் இயக்கம் உங்களை கட்சி தேர்தல்களில் தோற்கடிக்கும் அல்லது ஓய்வூ பெற உங்களை நிர்பந்திக்கும்,” என்றார். “மக்களினது அமெரிக்கா முதலில் திட்டநிரலை எதிர்க்கும் ஸ்தாபக குடியரசு கட்சியினரின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

ட்ரம்பை விமர்சித்ததால், குடியரசுக் கட்சியின் பானன் அணியினரால் அவர் இலக்கு வைக்கப்பட்டிருப்பதை ஃப்ளேக் தமது உரையில் மறைமுகமாக ஒப்புக் கொள்வதாக தெரிந்தது. “... அரசியல் நோக்கங்களுக்காக, நாம் எதிரிகளை சம்பாதிக்க வேண்டியிருக்கும் என்பதற்காக, அடித்தளத்திலிருந்து அன்னியப்பட்டு விடுவோம் என்பதற்காக, நாம் ஒரு முதன்மை சவாலை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதற்காக… நாம் செயல்படாமல் மௌனமாக இருந்தால்… பின் நாம் நமது கோட்பாடுகளை அவமதிப்பவராகிறோம், நமது கடமைப்பாடுகளைக் கைவிடுபவர்களாகிறோம்,” என்றார்.

பானன், ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD), இங்கிலாந்து சுதந்திர கட்சி (UKIP) மற்றும் பிரான்சில் தேசிய முன்னணியை (FN) முன்மாதிரியாக கொண்ட ஓர் இயக்கத்தை அமெரிக்காவில் உருவாக்க முயன்று வருகிறார். ட்ரம்ப் தேர்வானமை ஒரு சர்வதேச நிகழ்வுப்போக்கின் பாகமாகும், இதில், அதிகரித்து வரும் சமூக பதட்டங்களின் கீழும், பெருநிறுவன மற்றும் நிதிய உயரடுக்கின் கொள்கைகளுக்கு எதிரான எந்தவொரு ஒழுங்கமைக்கப்பட்ட இடதுசாரி எதிர்ப்பும் இல்லாதிருக்கும் நிலைமையின் கீழ், அதீத தேசியவாத மற்றும் பாசிசவாத இயக்கங்கள் வளர்ச்சி கண்டுள்ளன.

அமெரிக்காவிற்குள் நிலவும் நெருக்கடி, வெள்ளை மாளிகைக்குள் அரசியலைப்புரீதியிலான ஜனநாயக வழிமுறைகள் உடைக்கப்படுவதால் மேலும் கூடுதலாக எரியூட்டப்படுகிறது. சமீபத்திய வாரங்களில், நைஜரில் நான்கு அமெரிக்க சிப்பாய்கள் இறந்ததைத் தொடர்ந்து, வாஷிங்டன் தீவிரமடைந்து வரும் பூசலில் சிக்கியுள்ளது. நைஜர் இராணுவ நடவடிக்கையோ அமெரிக்க மக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும், செனட் தலைவர்களின் அங்கீகாரமோ அல்லது அவர்களுக்கு வெளிப்படையாக தகவலோ இல்லாமல் நடந்து வந்துள்ளது.

கடந்த வாரம், ஓர் ஓய்வுபெற்ற கடற்படை தளபதியான, வெள்ளை மாளிகை தலைமை நிர்வாகி ஜோன் கெல்லி, இறந்த சிப்பாய்களின் ஒருவரது மனைவியை அழைத்து பேசியது உட்பட அந்த மரணங்களுக்கு அவரது விடையிறுப்புகள் மீது ட்ரம்பின் விமர்சனங்களை நியாயமற்றதென அறிவித்து விடையிறுத்தார். வெள்ளை மாளிகை பத்திரிகைத்துறை செயலர் சரா ஹுக்கபி சாண்டர்ஸ், கெல்லியின் விமர்சனங்களுக்கு விடையிறுக்கையில், “நான்கு-நட்சத்திர கடற்படை தளபதி ஒருவருடன் நீங்கள் சர்ச்சையில் இறங்க விரும்பினால், அது பெரிதும் பொருத்தமற்றதாக நான் கருதுகிறேன்,” என்றார்.

ஃப்ளேக்கின் உரை மற்றும் "ஜனநாயகத்திற்கு ஆபத்து" குறித்து அவர் குறிப்பிடுவதிலிருந்து எழும் ஒரு கேள்வி என்னவென்றால்: அமெரிக்க மக்களுக்கு அவர் கூறவில்லை என்பதில் ஃப்ளேக் என்ன தெரிந்து வைத்துள்ளார்?

அரசியலமைப்பு நடைமுறைகளுடன் அதிகரித்தளவில் பகிரங்கமான முறிவு என்பது ஆளும் வர்க்கத்திற்குள் மோதல்களை உருவாக்காமல் போகாது. ஃப்ளேக் அவர் உரையில், ட்ரம்பின் "அமெரிக்கா முதலில்" தேசியவாதம் வெளிநாடுகளில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கு குழிபறித்து வருவதாக கவலை வெளியிட்டார். “இப்போது உலகெங்கிலும் அமெரிக்க தலைமையின் தகைமை கேள்விக்கு உள்ளாகியுள்ளது.” “இந்தளவுக்கு சுதந்திரத்தையும் செல்வ வளத்தையும் கொண்டு வந்துள்ள, தொலைநோக்கு பார்வை கொண்ட விதிகள் அடிப்படையிலான இந்த உலக ஒழுங்குமுறையின் கட்டமைப்பாளர்களான நாமே அதை கைவிடுவதற்கு மிகவும் ஆர்வத்துடன் இருப்பதாக தெரிகிறது.” “இவ்வாறு கைவிடுவதன் தாக்கங்கள் ஆழமாக இருக்கும்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

ஆனால் ட்ரம்ப் நிர்வாகம் வேறெங்கோ இருந்து உதித்து வரவில்லை. அது, களவாடப்பட்ட 2000 ஆம் ஆண்டு தேர்தல்கள், ஜனநாயக உரிமைகளின் அழிப்பைத் தொடர்ந்து வந்த “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்", ஒபாமா நிர்வாகத்தின் டிரோன் படுகொலை திட்டங்கள் என இந்த மைல்கற்களையும் உள்ளடக்கிய ஒரு நீடித்த நிகழ்ச்சிப்போக்கின் விளைபொருளாகும். அரசுக்குள் அரண்மனை சதிக்கூட்டத்தின் பல்வேறு தரப்புகள் அனைத்தும் இராணுவத்தின் ஆதரவுக்கு முறையிட்டு வருகின்றன, அது அமெரிக்க அரசியலின் மத்தியஸ்தராக முன்பினும் அதிக வெளிப்படையாக மேலெழுந்து வருகிறது.

ஜனநாயகக் கட்சியினர் அவர்களின் பங்கிற்கு, செவ்வாய்கிழமை இரவு மிகவும் மேலோட்டமான அறிக்கைகளை மட்டும் வழங்கி, ட்ரம்ப் மீதான ஃப்ளேக்கின் கண்டனத்திற்கு குறிப்பிடத்தக்களவில் மென்மையாக இருந்தனர். “செனட்டர் ஃப்ளேக் ஓய்வு பெறுவது, குழப்பமடைந்து வரும் குடியரசுக் கட்சி வேட்பாளர்களின் பிளவுக்கு மற்றொரு உதாரணமாக உள்ளது,” என்று ஜனநாயகக் கட்சியின் செனட் பிரச்சார கமிட்டி செய்தி தொடர்பாளர் டேவிட் பெர்க்ஸ்டீன் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

ஜனாதிபதியாக ட்ரம்பின் பதவிகாலம் முழுவதிலும், ஜனநாயகக் கட்சியினரோ ஜனநாயக ஆட்சி வடிவங்கள் மீதான ட்ரம்பின் வெளிப்படையான தாக்குதல்களுக்கு எதிராக ஓர் எதிர்ப்பு பிரச்சாரம் செய்ததில்லை. அதற்கு பதிலாக அவர்கள், ரஷ்ய-விரோத வெளியுறவு கொள்கையைத் தொடர்வதற்கு அந்நிர்வாகத்திற்கு அழுத்தமளிக்கும் நோக்கில், ரஷ்யாவுடனான ட்ரம்பின் தொடர்புகள் எனக்கூறப்படுவதனை தாக்குவதிலேயே ஒருமுனைப்படுத்தியுள்ளனர். ரஷ்ய-விரோத பிரச்சாரம் பேச்சு சுதந்திரம் மீதான தாக்குதலுக்கு ஒரு நியாயப்பாடாகவும், இணையம் மீது பெருநிறுவன-அரசு கட்டுப்பாட்டை திணிப்பதற்கான ஒரு முயற்சியாகவும் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, ஜனநாயகக் கட்சியினர் பெருநிறுவன வரிகளை வெட்டுவதற்கான ஒரு உடன்படிக்கையை எட்ட முடியுமென்பதில் நம்பிக்கையாக உள்ளனர், இதற்கு இரு கட்சி பிரதிநிதிகளது ஆதரவும் உள்ளது.