ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Lessons of October: The political crisis within the Bolshevik Party on the eve of the seizure of power

அக்டோபரின் படிப்பினைகள்: அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன்னதாக போல்ஷிவிக் கட்சிக்குள் அரசியல் நெருக்கடி

By Chris Marsden
3 November 2017

தொடங்குவதற்கு முன்னதாக: எனது உரையில் நான் பழைய முறையிலான நாட்காட்டியை பயன்படுத்துவேன், ஏனென்றால் இதில் வரும் சில கருத்துரைகளில் இதன் தேதிகளே குறிப்பிடப்படுகின்றன என்பதோடு, சொற்பொழிவின் தலைப்பே அறிவுறுத்துகின்றவாறு, தேதியை மாற்றுவதற்கு முன்னரே போல்ஷிவிக்குகள் புரட்சி செய்ய வேண்டியிருந்தது என்பதனாலும் ஆகும்.

இத்தொடரின் முதல் சொற்பொழிவுக்கு, தோழர் டேவிட் நோர்த், "ரஷ்ய புரட்சியை ஏன் கற்க வேண்டும்?” என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்திருந்தார்.

நோர்த் இக்கேள்விக்கு பதிலளிக்கும் 10 புள்ளிகளின் பட்டியலில், ஒன்பதாவது காரணத்தில் பின்வருமாறு பதிலுரைத்தார்:

ஒரு உண்மையான புரட்சிகரக் கட்சி என்பது எவ்வாறிருக்கும் என்பதற்கும், சோசலிசப் புரட்சியின் வெற்றியை ஈட்டுவதில் அத்தகையதொரு கட்சியின் பிரதியீடுசெய்ய முடியாத பாத்திரம் என்னவாக இருக்கும் என்பதற்குமான ஓர் உதாரணத்தை போல்ஷிவிக்குகள் தொழிலாள வர்க்கத்திற்கு வழங்கியிருந்தனர். 1917 இன் புரட்சிகர நிகழ்வுப்போக்கை கவனமாக ஆய்வு செய்தால், லெனினையும் ட்ரொட்ஸ்கியையும் தலைமையில் கொண்டிருந்த போல்ஷிவிக் கட்சியின் பிரசன்னமானது, சோசலிசப் புரட்சியின் வெற்றியை ஈட்டுவதில் தீர்மானகரமானதாக இருந்தது என்பதில் எந்த சந்தேகமும் இருக்கமுடியாது. [1]

அக்டோபர் கிளர்ச்சிக்கு முன்னர் போல்ஷிவிக் கட்சிக்குள் உருவான நெருக்கடியை ஆய்வுக்குட்படுத்துவது, புரட்சிகரக் கட்சியின் பிரதியீடுசெய்ய முடியாத பாத்திரம் குறித்த இன்றியமையா கேள்வியை உருபெருக்கி காட்டியின் கீழ் நிறுத்தி, எமது கட்சியும் அதன் காரியாளர்களும் இன்று முகங்கொடுக்கும் கடமைகளை மேலும் முழுமையாக புரிந்துகொள்ள நமக்கு உதவுகிறது.

அக்டோபரின் படிப்பினைகள்: அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன்னதாக போல்ஷிவிக் கட்சிக்குள் அரசியல் நெருக்கடி

ஒரு தேசிய ஜனநாயக புரட்சியை பூர்த்திசெய்வதை முதலாளித்துவம் உறுதிப்படுத்தவதற்கு அழுத்தமளிக்கும் பாத்திரத்துடன், போல்ஷிவிக் கட்சியை, ஒரு தேசிய ஜனநாயக புரட்சியின் இடது கன்னையாக செயல்படுமாறு அடிபணிய செய்வதற்கான ஒவ்வொரு முயற்சியையும் எதிர்ப்பதே, ஏப்ரலில் லெனின் ரஷ்யாவுக்கு திரும்பிய பின்னர் அவரின் இன்றியமையா பணியாக இருந்தது.

இதுதான் மென்ஷிவிக் மற்றும் சோசலிசப் புரட்சிக் கட்சியின் (SR) வெளிப்படையான நிலைப்பாடாக இருந்தது, மேலும் லெனினின் ஏப்ரல் ஆய்வுரைகள் மீதான நீண்ட விவாதங்களுக்குப் பின்னரும் கூட, இது சினோவியேவ் மற்றும் காமனேவ் தலைமையிலான வலதுசாரி போல்ஷிவிக்குகளுக்கு புத்துணர்வூட்டும் கருத்துருவாகவும் —மற்றும் மிகவும் மூடிமறைக்கப்பட்ட மற்றும் தடுமாற்றம்மிக்க வடிவத்தில் ஸ்ராலினின் கருத்துருவாகவும்— தொடர்ந்து இருந்து வந்தது.

லெனின், ஏகாதிபத்திய போரில் ரஷ்யா தொடர்ந்து பங்கெடுப்பதை எந்தவிதத்திலும் ஆதரிப்பதற்கு எதிராகவும், சோவியத்துக்களில் பெரும்பான்மையை பெறுவதற்காகவும், இடைக்கால அரசாங்கத்தை தூக்கியெறிவதற்கும், ஐரோப்பிய மற்றும் உலக சோசலிசப் புரட்சியின் பாகமாக ரஷ்யாவில் சோவியத்துக்கள் அதிகாரத்தைக் கைப்பற்றி ஒரு சோசலிசப் புரட்சியை நடத்துவதற்கும் ஒரு சளைக்காத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். செப்டம்பர் மற்றும் அக்டோபரில், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான காலம் கனிந்துவிட்டதை கட்சித் தலைமைக்கு அவர் உணர்ந்த வேண்டியிருந்தது.

கட்சி, அதன் சொந்த பெயரில், அதன் அதிகாரத்தின் கீழ், தானே கிளர்ச்சிக்குத் தலைமையேற்க வேண்டுமென்ற ஒரு வெளிப்படையான வலியுறுத்தலுக்கு ஆதரவாக, லெனின், "அனைத்து அதிகாரங்களும் சோவியத்துக்களுக்கே" முழக்கத்தைக் கட்சி கைவிடுவதற்கு எவ்வாறு வலியுறுத்தினார் என்பதை தோழர் பரி கிரே அவர் உரையில் குறிப்பிட்டிருந்தார்.

போல்ஷிவிக்குகளையும் எழுச்சியையும் நசுக்குவதற்காக, சோசலிச புரட்சியாளர்களும் மென்ஷிவிக்குகளும் ஜூலையில் சிப்பாய்களை அணிதிரட்டுவதில் வகித்த பாத்திரத்திற்கு விடையிறுப்பாக அவர் அதை செய்திருந்தார்.

அவர், ஆலைக் கமிட்டிகளே இப்போது அதிகாரத்திற்கான போராட்டத்திற்கு அவசியமான ஒழுங்கமைப்புகளை வழங்கங்கூடுமென அறிவுறுத்தினார்.

ஆனால் கட்சியின் மத்திய தலைமைக்குள் முக்கிய செல்வாக்கு செலுத்தும் சக்திகளினால், சிப்பாய்களை அணிதிரட்டும் ஒரு போக்கு படுமோசமான சாகசவாதமாக இருக்கும் என்பதை ஜூலை அனுபவங்கள் புரிய வைத்தன. ஒரு ஒன்றுதிரண்ட முதலாளித்துவ ஜனநாயக புரட்சியில் கலந்துகொள்வதன் மூலமாக போல்ஷிவிக்குகளை அப்புரட்சியின் அதிதீவிர இடத்தில் இருத்துவதன் மூலமாக அவர்களின் நிலைமையை உறுதிப்படுத்திக்கொள்ளலாம் என்று வலதுசாரிகள் நம்பி, செப்டம்பர் நெடுகிலும், அவர்கள் அவ்வாறான நிலைப்பாட்டை முன்னெடுத்தார்கள் அல்லது நடவடிக்கைகளுக்கு வலியுறுத்தி இருந்தார்கள். ஆனால் இதற்கு பதிலாக ஸ்டாக்ஹோம் "சமாதான" மாநாடும், கெரென்ஸ்கியின் ஜனநாயக மாநாடு மற்றும் அது தோற்றுவித்த நாடாளுமன்றத்திற்குமே அது இட்டுச்சென்றது.

அக்டோபரின் படிப்பினைகள் என்ற படைப்பில் ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டார்:

“ஸ்டாக்ஹோம்க்கான பாதை, நடைமுறையில், இரண்டாம் அகிலத்தின் பாதையாக இருந்தது, நாடாளுமன்றத்திற்கு-முந்தைய சபையில் பங்கெடுப்பதென்பது முதலாளித்துவ குடியரசுக்கான பாதையாக இருந்தது. … மென்ஷிவிக்குகள் மற்றும் சோசலிச புரட்சியாளர்களின் பணி, சோவியத் சட்ட அதிகாரத்தின் கீழ் போல்ஷிவிக்குகளின் குரல்வளையை நெரித்து, பிந்தையதை [சோவியத்களை] சிரமமின்றி முதலாளித்துவ நாடாளுமன்ற சட்டபூர்வத்தன்மைக்குள் மாற்றுவதை உள்ளடக்கி இருந்தது. வலதினர் (rights) இதை வரவேற்க தயாராக இருந்தனர். … இதற்கிடையே, பெட்ரோகிராட் மற்றும் மாஸ்கோ சோவியத்துக்களில் ஏற்கனவே போல்ஷிவிக்குகள் பெரும்பான்மை பெற்றிருந்தனர்; ஒவ்வொரு நாளும் என்றில்லை, ஒவ்வொரு மணி நேரமும், இராணுவத்தினுள் நமது செல்வாக்கு அதிகரித்தது. இப்போது அது ஆய்வு முடிவு குறித்த அல்லது முன்னோக்கு குறித்த கேள்வியாக இல்லை; அது அதன் அர்த்தத்தில் அடுத்த நாள் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற கேள்வியாக இருந்தது.” [2]

கோர்னிலோவ்வினது முயற்சிக்கப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு சதியை எதிர்ப்பதில் போல்ஷிவிக் தொழிலாளர்கள் வகித்த தீர்க்கமான பாத்திரம் குறித்தும், அதற்குப் பின்னர் ஆலை கமிட்டிகளில் போல்ஷிவிக்குக்களுக்கு அதிகரித்த ஆதரவு குறித்தும் தோழர் ரொம் கார்ட்டர் அவர் உரையில் விவரித்திருந்தார். இந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியும் சோவியத்துக்களில் பிரதிபலிப்பைக் கண்டது, சமரசவாத-தலைமையைக் கொண்டிருந்த சோவியத்துக்கள் தங்களைத் தாங்களே பாதுகாக்க நிர்பந்திக்கப்பட்டன. அதன் பின்னர், சோவியத்துக்களில் போல்ஷிவிக்குகள் மேலோங்கிய சக்தியாக ஆனார்கள்.

கிளர்ச்சிக்கான நேரடி பொறுப்பை கட்சி ஏற்க வேண்டுமென லெனின் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். அவர் மத்திய குழுவுக்கு செப்டம்பர் 14 இல் எழுதிய ஒரு கடிதத்தில் குறிப்பிட்டார்: “இரண்டு தலைநகரங்களிலும் [பீட்டர்ஸ்பேர்க் மற்றும் மாஸ்கோ] தொழிலாளர்கள் மற்றும் சிப்பாய்களின் பிரதிநிதிகளைக் கொண்ட சோவியத்துக்களில் போல்ஷிவிக்குகள் பெரும்பான்மை பெற்றுள்ளனர், அவர்களால் அவர்களின் சொந்த கரங்களில் அரசு அதிகாரத்தை எடுக்க முடியும், எடுக்க வேண்டும்.” [3]

ட்ரொட்ஸ்கி, லெனின் அறிவுறுத்திய போல்ஷிவிக்-தலைமையிலான கிளர்ச்சிக்கு முழு ஆதரவாக இருந்தார் என்றாலும், அவர் புரட்சியை சோவியத்துக்களின் பெயரில் நடத்துவதற்கு ஆதரவாக இருந்தார்.

போல்ஷிவிக் நிலைப்பாடு நாளாந்தம் பலமடைந்து கொண்டிருந்ததால், அவர், “அனைத்து அதிகாரங்களும் சோவியத்துக்களுக்கே!” முழக்கத்தைப் பேண வேண்டுமென வாதிட்டார். போல்ஷிவிக்குகளை ஆதரிப்பதற்கு தயங்கி கொண்டிருந்தவர்களிடையிலும் ஆதரவை விரிவாக்குவதற்காக, பரந்தளவில் அங்கீகரிக்கப்பட்டிருந்த தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் சிப்பாய்களது ஜனநாயக அங்கங்களின் ஒப்புதலுடன் அதிகாரத்தை மாற்றுவதே அவர் நோக்கமாக இருந்தது.

லெனின், இடைக்கால அரசாங்கத்தை தூக்கி எறியுமாறு விட்டுக்கொடுப்பின்றி போல்ஷிவிக் கட்சிக்கு அழுத்தமளித்தார்.

லெனினின் எழுத்துக்களை, அக்டோபர் படிப்பினைகளின் பந்திகளில் ட்ரொட்ஸ்கி மேற்கோளிட்டார்.

“ஓர் உடனடிக் கிளர்ச்சியை" எதிர்க்கும் போக்கு … தோற்கடிக்கப்பட வேண்டும்.” தாமதிப்பது குற்றகரமானது. சோவியத்துக்களின் மாநாட்டுக்காக காத்திருப்பது குழந்தைத்தனமான சம்பிரதாயங்களின் விளையாட்டாக, சம்பிரதாயங்களின் ஒரு வெட்கக்கேடான விளையாட்டாக இருக்கும், புரட்சியின் காட்டிக்கொடுப்பாக இருக்கும்.” தாமதிக்கும் புரட்சியாளர்கள், “அனைத்தையும் இழக்கும் அபாயத்தை" உண்டாக்குகின்றனர்.

லெனினின் நடவடிக்கைகள் அவரின் வார்த்தைகளுடன் பொருந்துகின்றன.

கட்சி தலைமையின் தள்ளிப்போடும் அலட்சியப் போக்கு பேரழிவாக நிரூபணமாகி, எதிர்புரட்சியின் வெற்றிக்கு வித்திடுமென அஞ்சி, அவர் கட்சி தலைவர்களுக்கு அழுத்தமளிக்கவும் மற்றும் உண்மைகளை களத்திற்கு கொண்டு செல்லவும் என இரண்டு விதத்திலும் அழுத்தமளிப்பதற்காக சாமானிய அங்கத்தவர்களுக்கு உருக்கொடுக்க முனைந்தார்.

அவர் பின்லாந்து மற்றும் பால்டிக் கடற்படை துருப்புகளிடையே எழுச்சிக்கான தயாரிப்புகளை விவாதிக்குமாறு, செப்டம்பர் 27 இல், தம் நம்பிக்கைக்கு நெருக்கமானவர்களில் ஒருவரான இவார் ஸ்மில்காவுக்கு கடிதம் எழுதினார். இரண்டு நாட்களுக்குப் பின்னர், மத்திய குழுவுக்கான ஒரு கடிதத்தில் அவர் அசாதாரண அறிவிப்பை வெளியிட்டார் — இதை முன்னெச்சரிக்கையாக அவர் கட்சியின் மாஸ்கோ மற்றும் பெட்ரோகிராட் கமிட்டிகளுக்கும் அனுப்பினார்:

நான் மத்திய குழுவிலிருந்து இராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டுள்ளேன், இங்கே அதை சமர்பித்து, கட்சியின் சாமானிய உறுப்பினர்களிடையேயும் கட்சி காங்கிரஸிற்குள்ளும் பிரச்சாரம் செய்வதற்கான சுதந்திரத்தை எனக்கு நானே எடுத்துக் கொள்கிறேன்.

“சோவியத்துக்களின் மாநாட்டுக்காக நாம் "காத்திருந்தால்", மேலும் இப்போதைய தருணத்தைக் கடந்து செல்ல அனுமதித்தால், புரட்சியை நாம் வீணடிக்கிறோம்" என்பதே என் ஆழமான முடிவு.” [4]

வாரங்கள் இல்லை, ஒரேயொரு நாள் தாமதத்தைக் கூட, பொறுக்க முடியாதளவுக்கு, எது லெனினின் அவசர உணர்வைத் தீர்மானித்தது?

ரஷ்ய நிலைமையை, அவர் புரட்சிக்கு கனிந்திருப்பதாக கருதினார். ஜூலையில், செயிண்ட் பீட்டர்ஸ்பேர்க் எழுச்சி ஒன்றுக்கு மாஸ்கோவில் ஆதரவு இருந்து, ஆனால் நாட்டின் பிற இடங்களில் ஆதரவு கிடைக்காமல் போயிருக்கும் என்றபோது, அவர் நிதானமாக இருக்க வலியுறுத்தி இருந்தார். இப்போதோ, பணக்கார நில-உரிமையாளர்களுக்கு எதிராக அதிகரித்து கொண்டிருந்த ஒரு விவசாயிகளின் கிளர்ச்சி, பெருந்திரளான விவசாய மக்ககளின் ஆதரவை வென்றெடுப்பதற்கு பாட்டாளி வர்க்கத்திற்கு அவசியமான நிலைமைகளை உருவாக்கி இருந்தது.

அனைத்திற்கும் மேலாக, லெனினின் அரசியல் கவலை வெறுமனே ரஷ்ய புரட்சியை குறித்து மட்டுமல்ல, மாறாக உலக பாட்டாளி வர்க்கத்தின் தலைவிதியைக் குறித்திருந்தது. அவர் அவரது புரட்சிகர முன்னோக்கை வெறுமனே ரஷ்ய நிலைமைகளின் மீது மட்டுமல்ல, சர்வதேச அடித்தளத்தில் அமைத்திருந்தார். போரின் பயங்கரங்களுக்கு விடையிறுப்பாக எழும் ஐரோப்பிய புரட்சியை முன்னுணர்ந்த அவர், தாமதிப்பது ஐரோப்பிய புரட்சிக்கு ஒரு சாத்தியமான மரணஅடியாக இருந்து விடக்கூடும் என்பதை தெளிவுபடுத்தினார்.

அக்டோபர் 10 இல் நடக்கவிருந்த வடக்கு சோவியத்துக்களின் மாநாட்டுக்கான, அக்டோபர் 8 தேதியிட்ட, கடிதங்களில் லெனின் குறிப்பிடுகிறார்:

நமது புரட்சி ஒரு அதிமுக்கிய காலகட்டத்தினுள் சென்று கொண்டிருக்கிறது. இந்த நெருக்கடியானது, மாபெரும் நெருக்கடியுடன் — அதாவது உலக சோசலிசப் புரட்சியின் வளர்ச்சியுடனும் மற்றும் அதற்கு எதிராக உலக ஏகாதிபத்தியத்தால் தொடுக்கப்படும் தாக்குதல்களுடனும் பொருந்தி உள்ளது. நமது கட்சியின் பொறுப்பான தலைவர்களுக்கு ஒரு மிகப் பிரமாண்டமான பணி முன்வைக்கப்பட்டு வருகின்றன, இதை செய்யத் தவறுவது சர்வதேசவாத பாட்டாளி வர்க்க இயக்கத்தின் ஒரு முழு பொறிவின் அபாயத்தை உள்ளடக்கி இருக்கும். நிலைமை அந்தளவுக்கு உள்ளது, உண்மையில், தாமதிப்பது பேராபத்தாக இருக்கும். [5]

இத்தாலியின் துரின் நகர பொது வேலைநிறுத்தம் மற்றும் செக் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களையும், போர்க்கப்பல் Prinzregent Luitpold மற்றும் பிற கப்பல்களின் தளத்திலேயே நூற்றுக் கணக்கான மாலுமிகள் போரை நிறுத்தக் கோரி அவர்களின் அதிகாரிகளது கட்டளைகளுக்கு கீழ்படியாது நடத்திய கலகத்தையும் சுட்டிக்காட்டி, அவர் குறிப்பிடுகையில், “துருப்புகளிடையிலான ஒரு கலகத்தைக் காட்டிலும், புரட்சி அதிகரிப்பதற்கான மிகவும் ஈர்ப்பான அறிகுறியைக் கற்பனையும் செய்யவியலாது. … இதுபோன்றவொரு தருணத்தில் இத்தகைய சாதகமான நிலைமைகளின் கீழ், ஜேர்மன் புரட்சியாளர்களிடம் இருந்து வரும் அழைப்புக்கு … வெறும் தீர்மானங்களைக் கொண்டு நாம் விடையிறுத்தால், ஆம், நாம் அகிலத்திற்கு நிஜமான துரோகிகளாக தான் ஆவோம்,” என்றார். [6]

கட்சியின் நோக்குநிலையை மாற்றுவதற்கான அந்த நெடிய போராட்டம், அக்டோபர் 10 இல் மத்திய குழு கூட்டத்தைக் கூட்டச் செய்தது. லெனின் இரகசியமாக வந்து அதில் கலந்து கொண்டார். அவர் இராஜினாமா செய்ய வேண்டியிருக்கவில்லை, இதற்கு அவர் பிடியிலிருந்த அதிகாரத்திற்கு தான் நன்றி கூற வேண்டும். அவரது தீர்மானம் 10 க்கு 2 என்ற விகிதத்தில் நிறைவேற்றப்பட்டது.

எழுச்சிக்கான எந்த தேதியும் நிர்ணயிக்கப்படவில்லை என்றாலும், லெனின் காட்டிய முழு அவசரமும், முடிவெடுப்பதற்கான அரசியல் அடித்தளம் குறித்த விபரங்களும் அத்தீர்மானத்தில் வியாபித்திருந்தன.

அது, பின்வருவதைப் பட்டியலிட்டு, ரஷ்ய புரட்சியின் சர்வதேச நிலைப்பாட்டிலிருந்து தொடங்குகிறது:

  உலக சோசலிசப் புரட்சிக்காக ஐரோப்பா எங்கிலும் வளர்ந்து வரும் ஒரு அதீத வெளிப்பாடாக, ஜேர்மன் கடற்படை கலகம்; ரஷ்யாவில் புரட்சியின் குரல்வளையை நெரிப்பதற்கான ஏகாதிபத்தியவாதிகளின் நோக்கம்.

பின்னர் அது ரஷ்ய சூழலை ஆராய்கிறது:

  பெட்ரோகிராட்டை ஜேர்மனியர்களிடம் சரணடையச் செய்து, இரண்டாவது இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு திட்டங்களை வகுக்க, ரஷ்ய முதலாளித்துவ வர்க்கமும் இடைக்கால அரசாங்கமும் எடுத்துள்ள முடிவு; சோவியத்துக்களில் போல்ஷிவிக் பெரும்பான்மையைப் பெறுவது; விவசாயிகள் கிளர்ச்சி.

அத்தீர்மானம் பின்வருமாறு நிறைவுறுகிறது:

ஆகவே ஓர் ஆயுதமேந்திய எழுச்சி தவிர்க்கவியலாதது என்பதையும், அதற்கான தருணம் முழுமையாக கனிந்துள்ளதையும் கருத்தில் கொண்டு, அதற்கேற்ப அனைத்து கட்சி ஏற்பாடுகளை வழிநடத்தவும், இந்த கண்ணோட்டத்திலிருந்து அனைத்து நடைமுறை கேள்விகளையும் (வடக்கு பிராந்திய சோவியத்துக்களின் மாநாடு, பெட்ரோகிராட்டில் இருந்து துருப்புகளைத் திரும்ப பெறுவது, மாஸ்கோ மற்றும் மின்ஸ்கில் உள்ள நம் மக்களின் நடவடிக்கைகள், இன்னும் இதரபிறவற்றையும்) விவாதித்து முடிவெடுக்கவும் மத்திய குழு அறிவுறுத்துகிறது. [7]

இதுவொரு நிஜமான வரலாற்று சம்பவமாகும். முதல்முறையாக தொழிலாள வர்க்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு கட்சி, சோசலிசத்தைக் கொண்டு முதலாளித்துவத்தைப் பிரதியீடு செய்யும் பொதுவான இலக்கை மட்டும் தனக்கு அமைத்துக் கொள்ளவில்லை, மாறாக ஒரு புரட்சியை நடத்துவதற்கு தானே பொறுப்பேற்றுக் கொண்டது.

இருப்பினும் எப்போது மற்றும் எந்த அதிகாரத்தின் கீழ் புரட்சியை நடத்துவது என்பதில் அப்போதும் கூட அங்கே கவலைகளும், ஆழ்ந்த விவாதங்களும் இருந்ததாக ட்ரொட்ஸ்கி குறிப்பிடுகிறார். கிளர்ச்சிக்கான தேதி திட்டமிட்டவாறு சோவியத்துக்களின் இரண்டாவது மாநாடு கூட்டப்படுவதற்கு (இது முதலில் அக்டோபர் 20 இல் கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தது) ஒரு சில நாட்களுக்கு முன்னதாக இருக்க வேண்டும், ஏனென்றால் அதை, பின்னர் அந்த அமைப்பால் மாநாட்டில் நிறைவேற்ற முடியும் என்றவர் தொடர்ந்து வாதிட்டார். அது சரியாக இருந்ததால் அவர் நிலைப்பாடு வென்றது.

அக்டோபர் புரட்சியின் முதல் நினைவாண்டில், வேறு யாருமல்ல ஜோசப் ஸ்ராலினே குறிப்பிடும் அளவுக்கு, ட்ரொட்ஸ்கி கிளர்ச்சிக்கான தலையாய மூலோபாயவாதியாக நிரூபணமானார்:

கிளர்ச்சிக்கான அனைத்து நடைமுறை ஏற்பாடு வேலைகளும் பெட்ரோகிராட் சோவியத் தலைவர் ட்ரொட்ஸ்கியின் உடனடி தலைமையின் கீழ் செய்யப்பட்டன. படைப்பிரிவுகளை சோவியத் தரப்புக்கு விரைவாக மாற்றுவதும் மற்றும் இராணுவ புரட்சிகர கமிட்டியின் பணியை தைரியமாக செயல்படுத்துவதும், கோட்பாட்டுரீதியில், முழு உறுதிப்பாட்டுடன், கட்சி, அனைவரையும் விட மேலாக தோழர் ட்ரொட்ஸ்கியிடம் ஒப்படைத்தது. [8]

ட்ரொட்ஸ்கி அக்டோபர் படிப்பினைகளில் விவரிக்கிறார், கிளர்ச்சிக்கான நேரம் வரவிருந்த இரண்டாம் மாநாட்டுடன் பொருந்துவதில் ஏற்றுக் கொள்ளவியலா தாமதம் இருக்குமோவென லெனின் அஞ்சியிருக்க வேண்டியதில்லை. அவற்றை இணைத்து கிளர்ச்சிக்கு தயார் செய்வதில், போல்ஷிவிக்குகளுக்கு அரசியல்ரீதியில் "மதிப்பிடமுடியா சாதகங்கள்" இருந்தது. ட்ரொட்ஸ்கி தாமதித்துக் கொண்டிருக்கவில்லை, மாறாக தயாரிப்பு செய்து கொண்டிருந்தார்:

நாங்கள், பெட்ரோகிராட் சோவியத், படைப்பிரிவின் (garrison) மூன்றில் இரண்டு பங்கை போர்முனைக்கு அனுப்புமாறு கெரென்ஸ்கியின் உத்தரவுக்கு கீழ்படியாத அந்த தருணத்திலிருந்தே, உண்மையில் ஆயுதமேந்திய கிளர்ச்சி நிலைக்குள் நுழைந்திருந்தோம். லெனின், பெட்ரோகிராட்டில் இல்லை என்பதால், இந்த உண்மையின் முழு முக்கியத்துவத்தை அவரால் மதிப்பிட முடியவில்லை. … எவ்வாறாயினும், பெட்ரோகிராட் படைப்பிரிவை நாங்கள் அனுப்புவதற்கு மறுத்த அந்த தருணமே, அக்டோபர் 25 கிளர்ச்சியின் முடிவு, முக்கால்வாசிக்கு அதிகமாக இல்லையென்றாலும், குறைந்தபட்சம் அந்தளவுக்கு முடிவாகி இருந்தது; இராணுவ புரட்சிகர கமிட்டியை உருவாக்கினோம் (அக்டோபர் 16); அனைத்து இராணுவ பிரிவுகளிலும் மற்றும் துறைகளிலும் எங்களின் சொந்த கமிஷார்களை நியமித்தோம்; மேலும், அவ்விதத்தில் பெட்ரோகிராட் மண்டல தலைமை தளபதியை மட்டுமல்ல, மாறாக அரசாங்கத்தையும் முற்றிலுமாக தனிமைப்படுத்தி இருந்தோம். [9]

அடுத்தடுத்த நாட்களில், லெனின் அஞ்சியவாறு கிளர்ச்சியின் வெற்றிக்கு கட்சி தலைமைக்குள் இருந்து வந்த அச்சுறுத்தல் ஒரு பகிரங்க கலகமாக வடிவெடுக்க இருந்தது.

சினோவியேவ்வும் காமனேவ்வும், அக்டோபர் 10ம் தேதி வாக்குகளில் எடுத்துக்காட்டியவாறு, நெஞ்சுரத்துடன் அக்கிளர்ச்சிக்கு எதிராக இருந்தனர். லெனின் மத்திய குழுயை மீண்டும் கூட்டுமாறு கோரினார், அது அக்டோபர் 16 இல் கூடியது. அக்டோபர் 10 தீர்மானம், 20 இற்கு  இரண்டு என்ற பெரும்பான்மை வாக்குகளுடன் ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தது, இம்முறையோ நால்வர் அதில் கலந்து கொள்ளவில்லை. காமனேவ் மத்திய குழுயிலிருந்து இராஜினாமா செய்து விடையிறுத்தார்.

அதிருப்தியை போல்ஷிவிக் பத்திரிகையில் வெளியிட வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கை மறுக்கப்பட்டதற்குப் பின்னர், சினோவியேவ் ஆதரவுடன், காமனேவ் பதவியிலிருந்து விலகி, மாக்சிம் கோர்க்கியின் Novaya Zhizn பத்திரிகைக்குச் சென்றார். அக்டோபர் 18 இல், அதன் பக்கங்களில், காமனேவ் கிளர்ச்சிக்கான திட்டங்களைப் பகிரங்கமாக தாக்கினார், தெளிவாக விளங்கிக் கொள்ளக்கூடிய வகையில், அது பொதுப்பார்வைக்குக் கொண்டு வரப்படவில்லை. அவர் எழுதினார், “இப்போது ஓர் ஆயுதமேந்திய கிளர்ச்சியை பிரகடனப்படுத்துவது என்பது நமது கட்சியின் தலைவிதியை மட்டுமல்ல, அத்துடன் ரஷ்ய மற்றும் சர்வதேச புரட்சியின் தலைவிதியையும் பணயத்தில் வைப்பதாகும் என நாங்கள் மிகவும் ஆழமாக நம்புகிறோம்.”

கிளர்ச்சிக்கு எதிராக, சோவியத்துக்கள், இராணுவம் மற்றும் தொழிலாளர்கள் இடையிலான போல்ஷிவிக்குகளின் செல்வாக்கை பயன்படுத்தி, காமனேவ், முதலாளித்துவ வர்க்கம் "அரசியலமைப்பு சபையை குழப்புவதை" சாத்தியமில்லாது செய்ய, பொறுமையாக செயல்படுவதற்கு முன்மொழிந்தார். அரசியலமைப்பு சபையை குழப்புவதற்கான எந்தவொரு முயற்சியும் இப்போது "குட்டி-முதலாளித்துவ கட்சிகளை மீண்டும் நம்மை நோக்கி தள்ளும். … சரியான தந்திரோபாயங்களை கொண்டு நம்மால் அரசியலமைப்பு சபையில் மூன்றில் ஒரு பங்கு ஆசனங்களையோ அல்லது அதற்கும் கூடுதலாகவோ வெல்ல முடியும்,” என்றார்.

தொழிலாளர்களும் சிப்பாய்களும் போல்ஷிவிக்குகளுக்கு ஆதரவாக இருந்தனர் என்றாலும், அமைதிவாத போர்-எதிர்ப்புணர்வுடன் மட்டுமே இருந்தனர் என்றும், நிலைமை கனிந்திருக்கவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்:

இப்போது (ஒட்டுமொத்த உலக நிலைமையின் விளைவாக) நாம் தனித்து அதிகாரத்தை கைப்பற்றி, புரட்சிகரப் போரை நடத்துவதற்கான அவசியத்தை எதிர்கொண்டால், பெருந்திரளான சிப்பாய்கள் நம்மை விட்டு விலகி விடுவார்கள் … மேலும் இங்கே நாம் இரண்டாவது வலியுறுத்தலுக்கு வருகிறோம் — அதாவது ஏற்கனவே சர்வதேச பாட்டாளி வர்க்கம் பெரும்பான்மையாக இப்போது நம்முடன் இருப்பதாக கருதுகிறோம். துரதிருஷ்டவசமாக இன்னமும் அது அவ்வாறு இல்லை. [10]

இத்தகைய அச்சங்கள் அடித்தளமின்றி இருந்தனவா? நிச்சயமாக கிடையாது. போல்ஷிவிக்குகள் அளப்பரிய முரண்பாடுகளை எதிர்கொண்டிருந்தனர் — மேலும் அவர்கள் முகங்கொடுத்த நிலைமை, அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னரும் கூட, ஓர் உள்நாட்டு போர் வெடிப்புக்குரியதாக மற்றும் ஏகாதிபத்திய தலையீடுகளை கொண்டிருந்ததாக இருந்தது.

ஆனால் வெளிப்படையாகவே பிற்போக்குத்தனம் பலமாக இருந்ததால், காமனேவும் சினோவியேவ்வும் வரவிருந்த பேரிடர்களை மட்டுமே பார்த்தனர், லெனின் வெற்றிக்கான சாத்தியக்கூறுடன் புரட்சிகர வாய்ப்புகளைச் சுமந்திருந்த நிலைமையைக் கண்டார். மற்றொரு மாபெரும் புரட்சியாளரான ஆப்ரகாம் லிங்கனைப் போலவே, இவரும் இவ்வாறு முடிவுக்கு வந்தார்: “அமைதியான கடந்த காலங்களது வரட்டுவாதங்கள், புயல்வீசும் நிகழ்காலத்திற்கு போதுமானவை அல்ல. இந்த சூழ்நிலை சிரமங்களைப் பெரும் உயரங்களுக்குக் குவித்து வைத்துள்ளது, இந்த சூழ்நிலைக்கு ஏற்ப நாமும் உயர வேண்டும்.”

சினோவியேவ் மற்றும் காமனேவ் இன் அரசியல் உளவியலை கையாளும் முக்கிய பந்தி ஒன்று அக்டோபர் படிப்பினைகளில் உள்ளது, இது ஆழ்ந்த சிந்தனைக்குரிய இன்றைய நாளின் படிப்பினையாகவும் நிற்கிறது. புரட்சிகர சக்திகளின் பலத்தைக் குறித்த மிகைமதிப்பீடும், பிற்போக்கு சக்திகளைக் குறித்த குறைமதிப்பீடும் பேராபத்தாக இருக்கும் என்பதை அவர்களின் கடிதம் எவ்வாறு எச்சரிக்கிறது என்பதை ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டு காட்டுகிறார். அவர்கள் எழுதினார்கள்:

எதிரிப் படைகள் கண்கூடாக தெரிவதைக் காட்டிலும் மிகப்பெரியது. பெட்ரோகிராட் முடிவெடுக்கும் — என்றாலும் பெட்ரோகிராட்டில் பாட்டாளி வர்க்க கட்சியின் எதிரிகள் கணிசமான படைகளை குவித்துள்ளனர்: தாராளமாக தளவாடங்கள் ஏந்தி ஒழுங்கமைக்கப்பட்ட, தங்களின் வர்க்க நிலைப்பாட்டுக்கு விசுவாசமாக உள்ள, சண்டையிடுவதற்கு வல்லமை கொண்ட ஆர்வத்துடன் 5,000 ஜூங்கர்ஸ் [Junkers - படைப்பிரிவு அதிகாரிகள்]; அடுத்து இராணுவத் தலைமை கட்டளையகங்கள்; அடுத்து அதிரடி துருப்புகள்; அடுத்து கொசாக்குகள் (Cossacks); அடுத்து காவற்படைபிரிவுகள் (garrison); அடுத்து பெட்ரோகிராட்டைச் சுற்றிலும் சுற்றி சுழன்று கொண்டிருக்கும் விதத்தில் நிலைநிறுத்தப்பட்ட மிக பலமான பீரங்கிப்படை பிரிவுகள் உள்ளன. [11]

இதேபோன்ற நிலைப்பாடு, 1923 இல் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் (KPD) ஒரு கிளர்ச்சியை தவிர்ப்பதற்கு எவ்வாறு இட்டுச் சென்றது என்பதை —வெளிப்படையாக எதிர்புரட்சியின் பலம் மேலோங்கிய ஒரு கட்சி தலைமை எவ்வாறு "ஜேர்மன் புரட்சியின் செயலூக்கமான படைகளை" (அளப்பரிய பலம் வாய்ந்த ஜேர்மன் பாட்டாளி வர்க்கத்தை) முழுமையாக குறைமதிப்பீடு செய்தது என்பதை— ட்ரொட்ஸ்கி விளக்குகிறார்:

இந்த தொடர்பில் நமது ரஷ்ய முன்னுதாரணம் பெரும் முக்கியத்துவத்தை பெறுகிறது. பெட்ரோகிராட்டில் நமது இரத்தந்தோய்ந்த வெற்றிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் —இந்த வெற்றியை இரண்டு வாரங்களுக்கு முன்னரே கூட நம்மால் பெற முடிந்திருக்கும்— வல்லமையுடன் உத்வேகம் கொண்ட ஜூங்கர்களும், அதிரடி துருப்புகளும், கொசாக்குகள் மற்றும் சுற்றி சுழன்று கொண்டிருக்கும் பீரங்கி படைகளும், காவற்படைகளின் பலமான ஒரு பிரிவும், போர்முனையிலிருந்து துருப்புகள் வந்து கொண்டிருப்பதும், இவையெல்லாம் நமக்கு எதிராக சரமாரியாக அணிவகுக்கப்பட்டிருப்பதாக அனுபவம் வாய்ந்த கட்சி அரசியல்வாதிகள் கண்டனர். ஆனால் இவை எல்லாம் ஒன்றுக்கும் உதவவில்லை; முற்றிலும் பூஜ்ஜியம், பூஜ்ஜியம். … இங்கே ஒவ்வொரு புரட்சியாளரின் நனவுக்குள் எரியூட்டப்பட வேண்டிய படிப்பினை உள்ளது! [12]

சினோவியேவும் காமனேவும், இப்போது முன்னிருக்கும் புரட்சிகர போராட்டத்தில் எதிர்நிற்கும் சமூக சக்திகளது சமநிலையை மட்டும் முற்றிலும் தவறாக புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் குட்டி-முதலாளித்துவக் கட்சிகளைக் குறித்தும் ஒரு பிழையான மதிப்பீட்டை செய்திருந்தனர்.

ஏகாதிபத்தியம் உருவாக்கிய சமூக உறவுகளால், இரண்டாம் அகிலத்தினுள் ஏற்பட்ட சந்தர்ப்பவாதத்தின் வளர்ச்சி மற்றும் சமூக பேரினவாத வெடிப்புக்கான மூலக்காரணங்களை 1914 இல் லெனின் கண்டறிந்திருந்தார்: அதுவாவது, இரண்டாம் அகிலத்தின் பிரதான சமூக அடித்தளமாக செயல்பட்டு வந்த தொழிற்சங்க பிரபுத்துவம் (labour aristocracy) உட்பட, தனிச்சலுகை கொண்ட குட்டி-முதலாளித்துவ அடுக்குகளின் விசுவாசத்தை ஆளும் வர்க்கத்தால் விலைக்கு வாங்க முடிந்திருந்தது.

மென்ஷிவிக்குகளையும் அவர்களைப் போன்ற ஏனையவர்களையும் போல்ஷிவிக்குகளை நோக்கி ஈர்த்து விடலாம் என்றும், அது ஜனநாயக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக முதலாளித்துவ வர்க்கத்திற்கு அழுத்தமளிக்கும் போராட்டத்தை முன்னெடுக்க உதவுமென்றும் சினோவியேவும் காமனேவும் கணக்கிட்டனர். லெனின், அவரின் பகுப்பாய்வில், இந்த இதே-சமூக ஜனநாயகவாதிகள், "தொழிலாள வர்க்க இயக்கத்தில் உள்ள நிஜமான முதலாளித்துவ முகவர்களாவர்", “தொழிலாளர்களுக்கான முதலாளித்துவ வர்க்க தளபதிகளாவர் … பாட்டாளி வர்க்கத்திற்கும் முதலாளித்துவ வர்க்கத்திற்கும் இடையிலான உள்நாட்டு போரில், சிறிய எண்ணிக்கையில் அல்ல, இவர்கள், தவிர்க்கவியலாமல் 'கம்யூன் உறுப்பினர்களுக்கு' (Communards) எதிராக 'வேர்சாயினர்' (Versaillese) போல, முதலாளித்துவத்தின் பக்கம் தரப்பெடுப்பர்" என்ற தீர்மானத்தை வழங்கினார். [13]

“இதே கேள்வி சம்பந்தமாக, தொழிலாளர்களின் கட்சிக்கு எதிராக முதலாளித்துவத்துடன் இரகசியமாக கைகோர்த்திருந்த ஒரு பத்திரிகையில்!” அவர்களின் தாக்குதல்களுக்காக, லெனின் அவர்களை "கருங்காலிகள்" என்றும், “சப்பாணிகள்" என்றும் கண்டித்து, சினோவியேவ் மற்றும் காமனேவ் இன் நேர்மையின்மை மீது சீறியிருந்தார். [14]

பெருந்திரளான மக்கள் போல்ஷிவிக்குகள் உடன் இல்லை என்ற வாதத்தை நிராகரித்து, அவர் அறிவித்தார்:

இன்றைய ரஷ்ய வாழ்வின் மிக முக்கிய உண்மை விவசாயிகள் கிளர்ச்சியாகும். இது புறநிலையாக, மக்கள் போல்ஷிவிக்குகளின் தரப்பில் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதையே, வார்த்தைகளில் அல்ல, மாறாக நடவடிக்கைகளில் எடுத்துக்காட்டுகிறது … "கிளர்ச்சியைத் தாமதிப்பது பேராபத்தானது", இதுவே, அதிகரித்து வரும் பொருளாதார சீரழிவு மற்றும் நெருங்கி வரும் பஞ்சம் என இவற்றை நோக்கி வக்கிரமான "தைரியம்" கொண்டிருப்பவர்களுக்கும், இப்போதும் தொழிலாளர்களை எழுச்சியிலிருந்து மனம் மாறச் செய்ய நினைப்பவர்களுக்கும் இதுவே நாம் கூறும் பதிலாகும்… [15]

காமனேவின் தாக்குதல் பிரசுரமான அந்நாள், பெட்ரோகிராட் இராணுவப் பிரிவு பிரதிநிதிகள் சந்தித்தனர். இடைக்கால அரசாங்கத்திற்கு எதிராக ஒரு கிளர்ச்சி நடத்துவதன் மீது அவர்கள் சரிபாதியாக பிளவுபட்டார்கள். மேலும், ட்ரொட்ஸ்கியின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் விதமாக, அது சோவியத்துக்களின் சார்பாக நடத்தப்பட்டால் மட்டுமே அவர்கள் அதை ஆதரிப்பதாக இருந்தார்கள்.

எதிர்பாராமல் அதிகரித்து வந்த போல்ஷிவிக்குகளின் செல்வாக்கை கண்டு போல்ஷிவிக்-அல்லாத கட்சிகளுக்கு உதறல் எடுத்தது, அவை தங்களின் சொந்த ஆதரவாளர்களை இன்னும் அதிகமாக அணிதிரட்டுவதற்காக, சோவியத்துக்களின் மாநாட்டை அக்டோபர் 25 க்கு மாற்றி வைத்தன. ஆனால் இந்த கூடுதல் ஐந்து நாட்கள், போல்ஷிவிக்குகளுக்கும், ஒட்டுமொத்த பொறுப்பில் இருந்த ட்ரொட்ஸ்கிக்கும், கிளர்ச்சியை நடத்துவதற்கான தயாரிப்புகள் செய்ய தேவையான அவகாசத்தை வழங்கின.

இது பெரும் உயிரிழப்பின்றி நடந்தது, சம்பந்தப்பட்டிருந்த ஆழ்ந்த அரசியல் மற்றும் அமைப்புரீதியிலான தயாரிப்புகளுக்கு தான் நன்றி கூற வேண்டும்.

ஸ்மோலினி கட்டிடத்தில் இருந்த சோவியத் தலைமையகம், இயந்திர துப்பாக்கி பாதுகாப்புடன் போல்ஷிவிக்குகளின் கட்டுப்பாட்டின் கீழ், ஒரு காவல்கோட்டையாக மாற்றப்பட்டிருந்தது.

அக்டோபர் 24 அன்று காலை, அரசாங்கம், போல்ஷிவிக் கட்சியின் மத்திய அங்கமாக விளங்கிய பெட்ரோகிராட் சோவியத் பத்திரிகையை மூடி, அச்சு வேலைகளை முத்திரையிட்டு நிறுத்தியது.

பெண் அச்சக பணியார் ஒருவர், “சீல் வைப்புக்களை நம்மால் உடைக்க முடியாதா?” என்று ட்ரொட்ஸ்கியிடம் வினவியதும், “அவற்றை உடைத்துவிடுங்கள்" என்றவர் பதிலளித்ததுடன், இதை உறுதியாக செய்து முடிக்க லிட்டொவ்ஸ்கி படைப்பிரிவையும் (Litovsky regiment) மற்றும் ஆறாவது சாப்பர் ரிசர்வ் படைப்பிரிவையும் (Sapper Reserve Battalion) அனுப்பினார்.

சோவியத் தகவல்தொடர்புகள் அனைத்தையும் முடக்கும் நோக்கம் கொண்டிருந்த இராணுவ மாணவர்களிடம் இருந்து, சிப்பாய்களைப் பிரித்ததன் மூலமாக, தொலைபேசி நிலையமும் விடுவிக்கப்பட்டது.

அன்றைய இரவு, இராணுவ புரட்சிகர கமிட்டியின் அங்கத்தவர்கள் அனைத்து மாவட்ட நகரங்களுக்கும் அனுப்பப்பட்டனர்.

நெவா (Neva) ஆற்றிலிருந்து விரைவு போர்க்கப்பல் Aurora ஐ வெளியேற்றுமாறு அரசாங்கம் உத்தரவிட்டிருந்தது, ஆனால் போல்ஷிவிக் மாலுமிகள் இராணுவ புரட்சிகர கமிட்டிக்கு விசுவாசமாக இருந்ததுடன், அதை அங்கேயே நிறுத்தி வைத்தனர்.

கெரென்ஸ்கி மற்றும் இடைக்கால அரசாங்கத்தால் ஒரு பீரங்கிப் படைப்பிரிவும், அதிரடி துருப்புகளின் ஒரு படைப்பிரிவு மற்றும் பீட்டர்ஹோஃப் (Peterhof) இராணுவ பள்ளியிலிருந்து மாணவ-அதிகாரிகளும் மற்றும் பெண்களின் படைப்பிரிவும் அணித்திரட்டப்பட்டு வருவதாக ட்ரொட்ஸ்கிக்கு செய்தி கிடைக்கிறது. அவர் நகரை அணுகுவதற்கான அனைத்து வழிகளிலும் இராணுவ பாதுகாப்புகளை நிலைநிறுத்த உத்தரவிடுகிறார்.

ஆனால் விடயங்கள் வேறுவிதமாக மாறிய நிலையில், வீதிகள் போல்ஷிவிக்குகள் வசம் வந்ததுடன், ஒருசில இராணுவ மாணவர்களைத் தவிர கெரென்ஸ்கியின் உத்தரவுக்கு வெகு குறைவானவர்களே விடையிறுத்தனர். ஆயுதமேந்திய போல்ஷிவிக்-தலைமையிலான படைப்பிரிவுகள் ஒரு துறை மாற்றி ஒரு துறையின் மீதும், பெட்ரோகிராட்டின் மிக முக்கிய இடங்கள் அனைத்தின் மீதும் கட்டுப்பாட்டை எடுத்தன.

அடுத்த நாள் காலை, அக்டோபர் 25 அன்று, குளிர் மாளிகை (Winter Palace) இப்போதும் அரசாங்கத்தின் வசம் உள்ளது என்றாலும், பலவீனமான காவலில் இருந்த அம்மாளிகை சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. அதிகாலை ஒரு மணிக்கு, ட்ரொட்ஸ்கி ஒரு பொது அறிக்கை வெளியிடுகிறார்:

இடைக்கால அரசாங்கம் இப்போது இல்லை என்பதை புரட்சிகர இராணுவ குழுவின் சார்பாக நான் பிரகடனப்படுத்துகிறேன். சில அமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மற்றவர்கள் இன்னும் ஒருசில நாட்களில் அல்லது ஒரு சில மணிநேரங்களில் கைது செய்யப்படுவர்கள். … குளிர் மாளிகை இன்னும் கைப்பற்றப்படவில்லை என்றாலும், அதன் தலைவிதி குறித்து அடுத்த ஒரு சில நிமிடங்களில் முடிவெடுக்கப்படும். [16]

அம்மாளிகை மோதல் இன்றி கைப்பற்றப்படுகிறது.

ட்ரொட்ஸ்கி குறிப்பிடுவதைப் போல, “அக்டோபர் 25 கிளர்ச்சியானது, குணாம்சத்தில், முழுமைப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக மட்டுமே இருந்தது. துல்லியமாக இதனால் தான் அது வலி ஏதுமின்றி நடந்தேறியது,” இதற்காக இராணுவ புரட்சிகர கமிட்டியின் தயாரிப்பு வேலைகளுக்குத்தான் நன்றி கூற வேண்டும்.

அன்றைய நாள் மாலை சோவியத்களுக்கான மாநாட்டு அமர்வில் மென்ஷிவிக் தலைவர் Fyodor Dan க்கு ட்ரொட்ஸ்கி அளித்த பதில்தான், என்ன சாதிக்கப்பட்டதோ அனேகமாக அதற்கான பொருத்தமாக மற்றும் மிகவும் பிரபலமான விவரிப்பாக இருந்தது.

சதியாளர்களுக்கு எதிராக Dan சீறியதற்கும், சோசலிச புரட்சியாளர்கள் மற்றும் மென்ஷிவிக்குகளுடன் போல்ஷிவிக்குகள் ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டுமென்ற வலியுறுத்தலுக்கும் ட்ரொட்ஸ்கி பதிலளிக்கையில், பின்வருமாறு விடையிறுத்தார்:

என்ன நடந்ததோ அதுவொரு எழுச்சி, சதி அல்ல. பெருந்திரளான மக்களின் எழுச்சிக்கு எந்த நியாயப்பாடும் தேவையில்லை. நாம் தொழிலாளர்கள் மற்றும் சிப்பாய்களின் புரட்சிகர ஆற்றலை பலப்படுத்தி உள்ளோம். நாம், எழுச்சிக்கான பெருந்திரளான மக்களின் விருப்பத்தை, பகிரங்கமாக, ஒன்றுதிரட்டி உள்ளோம். நமது எழுச்சி வென்றுள்ளது. இப்போது ஓர் உடன்பாட்டை எட்டுவதற்காக, நாம் வெற்றியை விட்டுக் கொடுக்க வேண்டுமென நம்மிடம் கேட்கப்படுகிறது. அதுவும் யாருடன்? நீங்கள் பரிதாபகரமாக, தனித்தனியாக பிரிந்துள்ளீர்கள்; நீங்கள் திவால்நிலைமையில் உள்ளீர்கள்; உங்கள் பங்கு முடிந்துவிட்டது. இப்போதிருந்து, நீங்கள் எங்கே இருக்க வேண்டுமோ அங்கே செல்லுங்கள் — வரலாற்றின் குப்பைத்தொட்டிக்கு! [17]

நவம்பர் 4 இல், அதிகாரம் கைப்பற்றப்பட்ட பின்னரும் கூட, நான்கு மத்திய குழு அங்கத்தவர்கள், காமனேவ், சினோவியேவ், ரெகோவ் மற்றும் நோகின் ஆகியோர் இன்னும் இருவருடன் சேர்ந்து மத்திய குழு மற்றும் மக்கள் கமிஷார் கவுன்சில் இரண்டில் இருந்தும் இராஜினாமா செய்தனர். அவர்கள் லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் "சீரழிக்கும் கொள்கையைக்" கண்டித்த அதேவேளையில், ஒரு புதிய அரசியலமைப்பு சபையில் அனைத்து சோவியத் கட்சிகளையும் உள்ளடக்கிய ஒரு கூட்டணி அரசாங்கத்தை உருவாக்குமாறு கோரினார்கள்.

ட்ரொட்ஸ்கியின் அக்டோபர் படிப்பினைகள் 1924 அக்டோபரில் பிரசுரிக்கப்பட்ட போது, அதில் அவர் இத்தகைய வரலாற்று பிரச்சினைகளை எழுப்பியதற்கு அவரது எதிர்ப்பாளர்கள் எவ்வாறு விடையிறுத்திருப்பார்கள் என்பதை இச்சொற்பொழிவைச் செவிமடுத்துக் கொண்டிருப்பவர்கள் கற்பனை செய்து பார்க்கலாம்.

அவரது நூல் தொகுப்புகளைப் பிரசுரிக்கும் திட்டத்தின் பாகமாக ரஷ்ய புரட்சியின் ஓராண்டுகள் குறித்த ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களின் இரண்டு-பாக தொகுப்பிற்கு அறிமுகமாக, "1917” என்ற தலைப்பில், அவர் கட்டுரை எழுதப்பட்டிருந்தது. அதன் 60 க்கு கூடுதலான பக்கங்களில் ஏகாதிபத்திய போர் சகாப்தத்திலும் சமூக புரட்சியிலும் மார்க்சிச கட்சி முன்னணி படையாக வகித்த இன்றியமையா பாத்திரத்தை ஆய்வுக்குட்படுத்துகிறது.

இது, இதுவரையில் எழுதப்பட்டதிலேயே மிக முக்கிய மிகுந்த விளக்கமளிக்கும் துண்டறிக்கைகளில் ஒன்றாகும்.

அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கு போல்ஷிவிக் கட்சி தொடுத்த போராட்டம் குறித்த ஒரு உறுதியான சித்தரிப்பிலிருந்து தொடங்கி, அது முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு வெற்றிகரமான புரட்சிகர போராட்டத்தை தொடுப்பதற்கு அவசியமான மிக மிக அடிப்படை அரசியல் தேவைப்பாடுகளைக் குறித்து விவரிக்கிறது.

அக்டோபர் படிப்பினைகள் என்ற படைப்பானது, பல்கேரியாவிலும், மிக முக்கியமாக, அதற்கடுத்த ஆண்டு ஜேர்மனியிலும், புரட்சிகர நிகழ்வுகள் கருக்கலைக்கப்பட்ட பின்னர், பிரசுரிக்கப்பட்டது — அச்சம்பவங்களில் கம்யூனிச அகிலமும் (Comintern), அதனுடன் இணைந்திருந்த கம்யூனிஸ்ட் கட்சிகளும் பின்பற்றிய கொள்கைகள் பேரழிவுகரமானவையாக நிரூபணமாகின.

பல்கேரியாவில், ஜூன் 9 ஆட்சிக்கவிழ்ப்பு சதி, விவசாயிகள் தலைவர் Aleksandar Stamboliyski தலைமையிலான பல்கேரிய விவசாய தேசிய கூட்டணி அரசாங்கத்தை பதவியிலிருந்து நீக்கி, போருக்கு முந்தைய பல்கேரிய பாசிசவாத தலைவர் Aleksandar Tsankov ஐ அதிகாரத்தில் அமர்த்தியது.

அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியை ஜூன் எழுச்சியில் விவசாய தேசிய கூட்டணியின் நடவடிக்கையாளர்களும் தனிப்பட்ட கம்யூனிஸ்ட் சுய-ஆர்வலர்களும் எதிர்த்தனர் என்றாலும், பல்கேரிய கம்யூனிஸ்ட் கட்சி ஒதுங்கி கொண்டதால் நசுக்கப்பட்டனர் — இக்கட்சியோ அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியை "நகர்புற மற்றும் கிராமப்புற முதலாளித்துவ வர்க்கத்திற்கு இடையிலான அதிகார போராட்டம்" என்று அறிவித்தது.

கம்யூனிச அகிலமும் ஒரு மாதம் கழித்து தாமதமாக, ஆகஸ்டில், எழுச்சியை நடத்துமாறு பல்கேரிய கம்யூனிஸ்ட் கட்சியை வலியுறுத்தியது! தொழிலாளர்களையும் பெருந்திரளான விவசாய மக்களையும் ஒன்றுதிரட்டுவதற்கு போதிய அவகாசம் கொடுக்கப்படவில்லை, அந்த இராணுவ அரசாங்கமோ கம்யூனிஸ்ட் கட்சி அங்கத்தவர்களை பெருந்திரளாக கைது செய்யும் ஒரு வேலைத்திட்டத்தை தொடங்கியது. அவ்வாறிருக்கையிலும், கம்யூனிஸ்ட் கட்சி செப்டம்பர் 23 எழுச்சியை மேற்கொள்வதற்கான கம்யூனிச அகிலத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றியது, அந்த எழுச்சியோ மிகப் பெரியளவில் ஈவிரக்கமின்றி நசுக்கப்பட்டது.

இந்த தோல்வியைக் குறித்து ட்ரொட்ஸ்கி பின்வருமாறு எழுதினார்:

அனைவரின் அனுதாபங்களும் இடதுநோக்கி திரும்பி, கம்யூனிஸ்ட் கட்சி மீது சென்றன. எதிரியின் ஆயுதப்படைகள் மிகச் சிறியளவில்தான் இருந்தன. இருப்பினும் நாம் தாக்கப்பட்டோம். என்ன இல்லையென்றால், ஒரு குறிப்பிட்ட தருணத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு தீர்க்கமான அடியை வழங்கக்கூடிய நடவடிக்கைக்கான, ஒரு தெளிவான, தனித்துவமான திட்டம் இருக்கவில்லை. … இது இன்றியமையா விதத்தில் ஓர் இராணுவ-புரட்சிகர பணியாகும். இதற்கு எதிரியை புறமுதுகிட்டு ஓடச் செய்ய வேண்டியதோடு, அவரது முன்முயற்சியை ஒன்றுமில்லாது ஆக்கி, அவரிடமிருந்து அதிகாரம் பறிக்கப்பட வேண்டும். [18]

அப்போதும் ஜேர்மனியே முக்கிய கருப்பொருளாக இருந்தது.

ஜேர்மன் புரட்சியானது, ஐரோப்பிய மற்றும் உலகப் புரட்சியின் வெற்றிக்கும், அதனுடன் சேர்ந்து சோவியத் ஒன்றியத்தின் உயிர்வாழ்வுக்கும் முக்கியமாக இருந்தது. ஐரோப்பாவில் பொருளாதார ரீதியில் மிகவும் அபிவிருத்தி அடைந்திருந்த அந்த முதலாளித்துவ சக்தி, முதலாம் உலக போரில் வெற்றி பெற்ற நேச நாடுகளுக்கு இழப்பீடுகளை ஈடு செய்வதற்காக வேர்சாய் உடன்படிக்கையின் வரையறைகளால் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஜேர்மன் ஏகாதிபத்தியமோ அதை தொடர்ந்து செய்ய மறுத்ததால், இதற்கு பிரான்ஸ் ஜனவரியில் Ruhr பிரதேசத்தை ஆக்கிரமித்ததன் மூலமாக விடையிறுத்தது.

ஜேர்மனியின் ஆட்சியாளர்கள் எதிர்ப்பை கட்டுப்படுத்தும் கொள்கைக்கு பணம் செலுத்துவதற்காக பாரியளவில் பணத்தை அச்சிட்டனர். இது உயர்-பணவீக்கத்திற்கும் வர்க்க பதட்டங்கள் அதிகரிப்பதற்கும் இட்டுச் சென்றது.

ஜேர்மனியின் Ruhr பிரதேசத்தை பிரெஞ்சு ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து, நீண்டகாலத்திற்கான ஒரு பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. இது மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் ஆதரவைப் பெற்றிருந்த கம்யூனிஸ்ட் கட்சி வேகமாக வளர்வதற்கு இட்டுச் சென்றது.

சமூக புரட்சி பிரச்சினை, நேருக்கு நேர் முன்நிறுத்தப்பட்டது. ஆனால் ஒரு புரட்சிகர கொள்கையைப் பின்தொடர்வதற்குப் பதிலாக, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான காலம் கனிந்துள்ளதா என்பதன் மீது ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டிருந்தது. அக்கட்சி சாக்சோனி மற்றும் துரின்ங்கனில் இடது சமூக ஜனநாயகவாதிகளுடன் ஒரு கூட்டணி உருவாக்கி இருந்தது. இறுதியில் கட்சி தலைவர்கள் கிளர்ச்சிக்கான ஒரு தேதியைக் குறித்த போது, அதன் தலைவர் ஹெய்ன்ரிச் பிராண்ட்லர் (Heinrich Brandler), அதற்கு இடது சமூக ஜனநாயகவாதிகளின் ஆதரவு இல்லை என்பதால் எழுச்சியை இரத்து செய்தார்.

இம்முடிவு அக்டோபர் 21 இல் சாக்சோனி மாநிலத்தில் கெம்னிட்ஸ் நகரில் ஆலை கவுன்சில்களின் ஒரு மாநாட்டில் எடுக்கப்பட்டது. அம்மாநாடு, ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கவும் மற்றும் கிளர்ச்சிக்கு சமிக்ஞை அளிப்பதற்காகவும் என்று கூறி கூட்டப்பட்டிருந்த ஒரு மாநாடாகும். கிளாரா ஷெட்கினுக்கு (Clara Zetkin) எழுதிய கடிதம் ஒன்றில் பிராண்ட்லரே ஒப்புக் கொண்டவாறு, பெரும்பான்மை பிரதிநிதிகள் ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கான அழைப்பை ஆதரித்திருப்பார்கள். ஆனால், அவர் விவரித்தார்:

ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கான தீர்மானத்தில் இடது SPD ஐ கையெழுத்திட சம்மதிக்க செய்யாமல், நாம் எந்த சூழ்நிலையிலும் தீர்க்கமான போராட்டத்திற்குள் நுழைய கூடாது என்பதை கெம்னிட்ஸ் மாநாட்டில் நான் உணர்ந்தேன்… பாரிய எதிர்ப்புக்கு இடையே நான் போக்கை மாற்றிக் கொண்டு, நமது சுய போராட்டத்தில் நுழைவதிலிருந்து, நம்மை, கம்யூனிஸ்டுகளை, தடுத்தேன். [19]

புரட்சியை இரத்து செய்வதென்ற முடிவு உரிய நேரத்தில் ஹம்பேர்க்கை வந்தடையவில்லை. ஓர் கிளர்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது, ஆனால் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த அது, மூன்றே நாட்களில் இரத்தக்களரியுடன் தோற்கடிக்கப்பட்டது.

பிராண்ட்லரின் ஒட்டுமொத்த விவகாரங்கள் மீதும் பழிசுமத்துவதே கம்யூனிச அகிலத்தின் விடையிறுப்பாக இருந்தது. ஆனால் சோவியத் ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை மற்றும் கம்யூனிச அகிலத்தின் தலைமையே இந்த தோல்விக்கான முழு அரசியல் பொறுப்பாகும் — ட்ரொட்ஸ்கிக்கு எதிராக ஒரு கன்னை மோதலில் ஈடுபட்டிருந்த சினோவியேவ், காமனேவ் மற்றும் ஸ்ராலினே அப்போது முன்னணி பதவியிலும், கம்யூனிச அகிலத்தின் தலைமையிலும் இருந்தனர்.

அக்டோபர் 1917 இல் —பல மாதங்களில் இல்லை, சில வாரங்களிலேயே— போல்ஷிவிக்குகள் செய்ததைப் போலவே, ஒரு கிளர்ச்சிக்கு தலையேற்குமாறு ட்ரொட்ஸ்கி ஜேர்மன் கட்சியைக் கிளர்ச்சிப்படுத்தினார். திட்டமிடப்பட்டிருந்த கிளர்ச்சியை பிராண்ட்லர் கைவிட்ட அதேநாள், அக்டோபர் 21 அன்று செம்படை மற்றும் செம்படையின் கப்பற்படைக்கு ஆற்றிய ஓர் உரையில் ட்ரொட்ஸ்கி அறிவித்தார், “ஒரு புரட்சிக்கான இராணுவ வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு, என்ன விலை கொடுத்தாவது வெற்றியடைய வேண்டுமென்ற விருப்பமும், அதற்காக தனது பாதையில் உள்ள அனைத்து தடைகளையும் உடைத்தெறிந்து, செயலூக்கத்துடனான போராட்டமும் ஒருவருக்கு இருக்க வேண்டும்.” [20]

ஸ்ராலின் இதற்கு முரண்பட்ட வகையில், தொழிலாளர்கள் இன்னமும் சமூக ஜனநாயகவாதிகள் மீது நம்பிக்கை கொண்டிருப்பதாக அழுத்தமளித்தும், “பாசிசவாதிகள் முதலில் தாக்கினால் அது நமக்கு சாதகமாகவே அமையும்" என்று வலியுறுத்தியும், நிதானமாக இருக்குமாறு வலியுறுத்தினார். [21]

ஸ்ராலினின் ரஷ்ய தேசியவாத அரசியலுக்கு எதிராக, ட்ரொட்ஸ்கி, இதுவரையில், 1922 இல் இருந்து கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த லெனினுடன் கூட்டணியில் இருந்து வந்தார். பொது செயலாளர் பதவியிலிருந்து ஸ்ராலினை நீக்குவதற்கான வலியுறுத்தல், லெனினுடன் மோதலில் போய் முடிந்தது. ட்ரொட்ஸ்கி 1923 இல் இடது எதிர்ப்பை உருவாக்கினார்.

அக்டோபர் படிப்பினைகள் படைப்பு அரசியல்ரீதியில் அவர் எதிர்ப்பாளர்களுக்கு பேராபத்தானதாக இருந்தது, ஆனால் அது வெறுமனே ஒரு விவாத எதிருரை கிடையாது. ட்ரொட்ஸ்கியின் கவலை எல்லாம் உலக சோசலிசப் புரட்சியின் எதிர்காலத்தை தவிர வேறெதுவுமாக இருக்கவில்லை. “ரஷ்ய புரட்சியை நாம் கற்க வேண்டும்" என்ற முதல் அத்தியாயத்தில், ட்ரொட்ஸ்கி இவ்வாறு வலியுறுத்துகிறார்:

[பா]ட்டாளி வர்க்க புரட்சியின் விதிகள் மற்றும் அணுகுமுறைகள் குறித்த ஆய்வுக்கு, இது வரையில், நமது அக்டோபர் அனுபவத்தை விட அதிக முக்கியமான மற்றும் ஆழமான ஆதாரவளங்கள் எதுவும் கிடையாது. திறனாய்வோடும் நுண்மையாகவும் விரிவாகவும் ஆய்வு செய்து, அக்டோபர் வரலாற்றை உள்வாங்க தவறிய ஐரோப்பிய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள், கடந்த ஏகாதிபத்திய போர்களின் மூலோபாய, தந்திரோபாய மற்றும் தொழில்நுட்ப அனுபவங்களை ஆய்வு செய்யாமல், நவீன நிலைமைகளின் கீழ் புதிய போர்களுக்குத் தயாரிப்பு செய்யும் ஒரு தலைமை தளபதியையே ஒத்திருப்பார்கள். அதுபோன்றவொரு தலைமை தளபதி எதிர்காலத்தில் தவிர்க்கவியலாமல் அவர் இராணுவத்தை தோல்விக்கே வழி நடத்துவார். [22]

“துல்லியமாக ஓர் உலக-வரலாற்று முக்கியத்துவம் மிக்க பிரத்தியேக புரட்சிகர நிலைமையை எவ்வாறு தவற விட முடிந்தது என்பதற்கு ஒரு சரியான எடுத்துக்காட்டை" எவ்வாறு "நாம் ஜேர்மனியில் கண்டோம்,” என்பதை ட்ரொட்ஸ்கி விவரித்தார். [23]

1917 இல் லெனினின் கீழ் போல்ஷிவிக் கட்சி எடுத்த அணுகுமுறையுடன் அவர்கள் முரண்பட்டதன் மூலமாக, கம்யூனிச அகிலம் மேற்கொண்ட பிழைகளை அவர் எதிர்த்தார். அவர் இவ்வாறு செய்கையில், போல்ஷிவிக் கட்சி 1917 நெடுகிலும் கருத்து வேறுபாட்டற்ற அமைப்பாக (monolithic entity) செயல்பட்டு வந்தது என்ற அவர் எதிர்ப்பாளர்களது வாதங்களுக்குப் பின்புலத்திலிருந்த யதார்த்தத்தையும் அம்பலப்படுத்தினார் — இதில் ட்ரொட்ஸ்கி, மேலெழும்புவதற்காக அற்பத்தனமாக குழப்பம் ஏற்படுத்துபவராக, அந்நியப்பட்ட ஒரு போக்காக பார்க்கப்பட்டார்.

அக்டோபர் கிளர்ச்சிக்கு சினோவியேவ் மற்றும் காமனேவிடம் இருந்து வந்த தீர்மானகரமான பகிரங்க எதிர்ப்பையும் —மற்றும் ஸ்ராலினிடமிருந்து எப்போதும் ஒருநிலைப்படாத ஊசலாடும் நிலைப்பாட்டையும்— எதிர்த்து லெனின் போராடி வந்தார் என்ற சங்கடமான உண்மையை ட்ரொட்ஸ்கி முன் உயர்த்திக் காட்டினார்.

அனைத்திற்கும் மேலாக, அக்டோபர் கிளர்ச்சிக்கு எதிரான இந்த எதிர்ப்பானது லெனினின் ஏப்ரல் ஆய்வறிக்கைகளுக்கு விரோதமாக வேரூன்றி இருந்தது என்ற இந்த உண்மையின் மீது அவர் அவரது மத்திய வலியுறுத்தலை நிறுத்தி இருந்தார்.

வரவிருந்த புரட்சியின் சோசலிச குணவியல்பு மீதான ட்ரொட்ஸ்கியின் ஊக்குவிப்புடன் லெனின் கொண்டிருந்த உடன்பாடு, முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்திற்கான தங்களின் ஆதரவிலிருந்தும் மற்றும் போரைத் தொடர்வதற்கான தற்காப்புவாத நியாயப்பாடுகளை அரசியல்ரீதியில் தழுவியதிலிருந்தும் தொடங்கி, பின்னர் உருவெடுத்த "முக்கூட்டுக்கு" (Triumvirate) எதிரான பல மாதகால உள்கட்சி போராட்டத்தில் ஏற்பட்டிருந்தது.

இங்கேயும் ட்ரொட்ஸ்கி அவர் அறிமுகத்தில் தெளிவுபடுத்தினார்:

1917 உடன்பாடின்மைகள் உண்மையில் மிகவும் ஆழமானவை, அவை எவ்விதத்திலும் தற்செயலானவை கிடையாது. ஆனால், பல ஆண்டுகள் கழிந்த பின்னர், அந்நேரத்தில் தவறு செய்தவர்களுக்கு எதிராக, அவற்றை இப்போது தாக்குவதற்கான ஆயுதங்களாக திருப்புவதற்கான ஒரு முயற்சி என்பது அற்பத்தனமானது என்பதை விட வேறொன்றுமில்லை. [24]

சினோவியேவ், காமனேவ் மற்றும் ஸ்ராலினுக்கு அதுபோன்ற எந்த தயக்கமும் இருக்கவில்லை. எதிர்காலத்திற்கான ஒரு அறிகுறியாக, அவர்கள் "ட்ரொட்ஸ்கிசத்திற்கு" எதிராக சீறினார்கள். ட்ரொட்ஸ்கி லெனினின் பாத்திரத்தைக் குறைப்பதாகவும், லெனினிசத்தைத் திருத்துவதாகவும், மத்திய குழுவின் முதுகுக்குப் பின்னால் 1917 தொகுப்பை பிரசுரித்திருப்பதாகவும் அவர்கள் ட்ரொட்ஸ்கியை குற்றஞ்சாட்டினர். இராணுவம் மற்றும் கடற்படை விவகாரங்களுக்கான மக்கள் கமிஷார் பதவியிலிருந்தும் புரட்சிகர இராணுவ கவுன்சில் தலைவர் பதவியிலிருந்தும் இராஜினாமா செய்ய வேண்டி நிர்பந்தம் ட்ரொட்ஸ்கிக்கு ஏற்படும் என்பதற்காக, சினோவியேவ் அவரை கட்சியிலிருந்தே நீக்க வேண்டுமென கோரும் அளவுக்கு சென்றார்.

சோவியத் ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சியையும் கம்யூனிச அகிலத்தையும் அரசியல்ரீதியில் மறுநோக்குநிலை கொள்ள செய்வதற்காக ட்ரொட்ஸ்கியின் ஒவ்வொரு முயற்சிக்கான வடிவமும், மூர்க்கமாகவும் கோட்பாடற்றரீதியிலும் எதிர்ப்பைச் சந்தித்தது.

அவசியமான சிறிய வரலாற்று விவரங்களையே நான் வழங்கியுள்ளேன், அக்டோபர் நிகழ்வுகளிலிருந்து ட்ரொட்ஸ்கி எடுத்த அனைத்து தீர்மானங்களின் அரசியல் அடித்தளத்தை இன்றும் நன்றாக புரிந்துகொள்ள இது உதவுமென நம்புகிறேன்.

அக்டோபர் படிப்பினைகளின் மிகவும் அடிப்படையான பந்திகள், சோசலிசப் புரட்சியில் அக்கட்சியின் இன்றியமையா பாத்திரம் மீது மீண்டும் மீண்டும் ஒருமுனைப்படுகிறது. ட்ரொட்ஸ்கி வலியுறுத்துகிறார்:

ஒரு கட்சியில்லாமலோ, ஒரு கட்சியைத் தவிர்த்து விட்டோ, ஒரு கட்சியின் தலைமை இல்லாமலோ, அல்லது கட்சிக்கான ஒரு மாற்றீட்டைக் கொண்டோ, பாட்டாளி வர்க்க புரட்சி வெற்றி அடைய முடியாது. இதுவே கடந்த தசாப்தத்தின் பிரதான படிப்பினையாகும். [25]

அவர் தனது அறிமுக உரையில் எழுதுகிறார்:

பாட்டாளி வர்க்கத்தை வழி நடத்தும் தகைமை கொண்ட ஒரு கட்சி இல்லாமல், புரட்சியே சாத்தியமில்லை என்பதை சம்பவங்கள் நிரூபித்துள்ளன. பாட்டாளி வர்க்கம் திடீர் தன்னெழுச்சியோடு அதிகாரத்தைக் கைப்பற்றி விட முடியாது. … ஒரு சொத்துடைமை வர்க்கம் அதன் வளங்கள், அதன் கலாச்சார மட்டம், மற்றும் பழைய அரசு எந்திரங்களுடனான அதன் எண்ணற்ற தொடர்புகளின் அடித்தளத்தில் தன்னை நிறுத்திக் கொண்டால் மட்டுமே, அதனிடமிருந்து மற்றொரு சொத்துடைமை வர்க்கம் பறித்த அதிகாரத்தை பறிமுதல் செய்ய முடியும். ஆனால் பாட்டாளி வர்க்கத்திற்கு அதனைத்தவிர அதனது சொந்த கட்சிக்கு ஒரு மாற்றீடாக சேவையாற்ற வேறு எதுவுமே கிடையாது. [26]

ட்ரொட்ஸ்கி பின்னர், ஒரு புரட்சிக்கான தயாரிப்பு போக்கில் அபிவிருத்தி அடையும் உள்கட்சி போராட்டத்தின் முக்கியத்துவம் மீது கவனம் செலுத்த திரும்புகிறார். அரசியல் போக்குகள் மற்றும் கன்னைகளுக்கு இடையிலான போராட்டமானது, ஒன்று வர்க்கங்களினது அல்லது வர்க்கங்களது கன்னைகளின் எதிர்விரோதமான சமூக நலன்களையே வெளிப்படுத்துகின்றன என்று வலியுறுத்தி, இதுபோன்ற பிரச்சினைகளில் முற்றிலும் அகநிலையான விளக்கங்கள் அனைத்தையும் அவர் நிராகரிக்கிறார்.

புரட்சி கொப்பறையில், வர்க்க மோதல்கள் உச்சக்கட்டத்தை எட்டி, கட்சி மற்றும் அதன் காரியாளர்கள் மீது இறங்கும் போது, உள்கட்சி பிரச்சினைகள் என்பது தவிர்க்கவியலாதது. அவர் எழுதினார்:

பாட்டாளி வர்க்கத்தின் அடிப்படை கருவி கட்சியாகும். பெப்ரவரி 1917 இல் இருந்து பெப்ரவரி 1918 வரையில், ஒரேயொரு ஆண்டை எடுத்துக் கொண்டாலும் — நமது அனுபவத்தின் அடிப்படையிலும், பின்லாந்து, ஹங்கேரி, இத்தாலி, பல்கேரியா மற்றும் ஜேர்மனியின் துணை அனுபவங்களின் அடிப்படையிலும், கட்சி நெருக்கடியானது, புரட்சிகர நடவடிக்கைக்கான தயாரிப்பு நிலையிலிருந்து அதிகாரத்திற்கான உடனடி போராட்டத்திற்காக மாறும்போது தவிர்க்கவியலாதது என்பதை ஏறத்தாழ முழுமையாக நம்மால் எடுத்துக்காட்ட முடியும். [27]

இது ஏன் இவ்வாறு என்பதை தொடர்ந்து அவர் விவரிக்கிறார்:

கட்சியின் ஒவ்வொரு வளர்ச்சி காலகட்டமும், அதற்கென சொந்த சிறப்பம்சங்களை ஏற்று, வேலைக்கான குறிப்பிட்ட பழக்கங்கள் மற்றும் அணுகுமுறைகளுக்கு அழைப்பு விடுக்கிறது. ஒரு தந்திரோபாய திருப்பத்தின் போது, இத்தகைய பழக்கங்கள் மற்றும் அணுகுமுறைகள் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ளார்ந்து உடைகின்றன. இங்கே தான் உள்கட்சி மோதல் மற்றும் நெருக்கடிகளின் உடனடியான மற்றும் மிகவும் நேரடியான வேர்கள் தங்கியுள்ளன. … இதன் காரணமாய் ஆபத்து எழுகிறது, அதாவது இத்தகைய திருப்பம் மிகவும் எதிர்பாராமலோ அல்லது திடீரென்றோ இருந்தால், மற்றும் முந்தைய காலகட்டத்தில் கட்சியின் முன்னணி அங்கங்களுக்குள் செயலின்மை மற்றும் பழமைவாதத்தின் மிக பல கூறுபாடுகள் ஒன்றுதிரண்டிருந்தால், பின் கட்சியானது பல ஆண்டுகள் அல்லது தசாப்தங்களின் போக்கில் தன்னை எந்த தருணத்திற்காக தயாரிப்பு செய்து கொண்டிருந்ததோ அந்த உச்சக்கட்ட முக்கிய தருணத்தில் அதன் தலைமையை நிறைவேற்ற இலாயக்கற்று இருப்பதை நிரூபிக்கிறது. கட்சி ஒரு நெருக்கடியால் நாசமாக்கப்பட்டு, இயக்கம் கட்சியைக் கடந்து சென்று — தோல்வியை நோக்கி செல்கிறது. [28]

இத்தகைய அபாயங்களை தொகுத்து அவர் எச்சரிக்கையில்:

இந்த சூழலை இன்னும் பட்டவர்த்தனமாக கூறுவதானால்: தனது சொந்த வர்க்கத்தின் வரலாற்று பணிகளுடன் அடியொற்றி செல்லாத கட்சி, பிற வர்க்கங்களின் மறைமுகமான கருவியாக ஆகிவிடுகிறது, அல்லது அவ்வாறு மாறுவதற்கான அபாயத்தில் செல்கிறது. [29]

அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தயாரிப்பை விட மிகவும் இன்றியமையா திருப்பம் என்று எதுவும் கிடையாது. ட்ரொட்ஸ்கி இதை, தந்திரோபாய திருப்பம் என்பதை விட ஒரு மூலோபாய திருப்பம் என்பதாக வரையறுக்கிறார், இவ்வாறு வேறுபடுத்துவதற்கு ஏற்படும் அவசியமே கூட போர்கள் மற்றும் புரட்சிகளின் ஏகாதிபத்திய சகாப்தத்தினது அரசியல் விளைவாகும் என்ற முக்கிய புள்ளியை அவர் சுட்டிக் காட்டுகிறார்.

1905 இல் ரஷ்ய சமூக ஜனநாயகவாதிகளைத் தவிர, முதலாம் உலகப் போருக்கு முன்னதாக, கிளர்ச்சி செய்வதற்கான, அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான பணி, ஒருபோதும் இரண்டாம் அகிலத்தின் கட்சிகளுக்கு கிடைத்திருக்கவில்லை.

1905 புரட்சி, ரஷ்ய மார்க்சிஸ்டுகளுக்கு ஒரு பிரதான அனுகூலத்தை வழங்கியது, அது புரட்சிகர மூலோபாயம் மீதான ஓர் ஆழ்ந்த விவாதத்தை கொணர்ந்தது. அதன் அதிகபட்ச செறிந்த விளைபொருளாக உருவெடுத்த ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவம், காலங்கடந்து முதலாளித்துவ அபிவிருத்தி அடைந்த ரஷ்யா போன்ற நாடுகளில், சோசலிசப் புரட்சியினூடாக தொழிலாள வர்க்கம் அதிகாரத்திற்கு வருவதன் மூலமாக மட்டுமே அந்நாடுகளில் ஜனநாயக மற்றும் தேசிய கடமைகளை தீர்க்க முடியுமென வலியுறுத்தியது.

இதற்கு முரண்பட்ட வகையில், இரண்டாம் அகிலத்தில் மேலோங்கி இருந்த புத்திஜீவித சூழல், நாடாளுமன்ற தந்திரோபாயங்கள், தொழிற்சங்க தந்திரோபாயங்கள், நகரசபை தந்திரோபாயங்கள், கூட்டுறவு தந்திரோபாயங்கள், இன்னும் இதர பிறவற்றைப் பயன்படுத்துவதற்காக தொடர்ந்து மேலாளுமை செலுத்தின. இந்த கண்ணோட்டத்தைக் காரல் காவுட்ஸ்கி, 1893 டிசம்பரில் Neue Zeit இல் பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையில் தொகுத்தளித்தார்:

சோசலிஸ்ட் கட்சி என்பது ஒரு புரட்சிகர கட்சியாகும், ஆனால் புரட்சி-செய்யும் ஒரு கட்சியல்ல. நமது இலக்கை ஒரு புரட்சி மூலமாக மட்டுமே எட்ட முடியும் என்பது நமக்கு தெரியும். ஒரு புரட்சியை உருவாக்குவதற்கான நமது பலம், அதை தடுப்பதற்காக நமது எதிரியின் பலத்தை விட மிகவும் குறைவானது என்பதும் நமக்கு தெரியும். ஒரு புரட்சியைப் பின்னின்று தூண்டுவதோ அல்லது அதற்கு பாதையைத் தயார் செய்வதோ நம் தரப்பு வேலையில்லை. [30]

இந்த மேற்கோள் பின்வரும் கருத்துடன் நிறைவடைகிறது:

சமூகப் போரின் தீர்க்கமான போர்க்களத்தில் கவலைப்படுவதற்குரியது குறித்து நமக்கொன்றும் தெரியாது என்பதால், அவை இரத்தந்தோய்ந்ததாக இருக்குமா இருக்காதா, ஸ்தூலமான பலம் ஒரு தீர்க்கமான பங்கு வகிக்குமா, அல்லது அவை உரிய முறையில் பொருளாதார, சட்டரீதியிலான மற்றும் தார்மீக அழுத்தங்களைக் கொண்டு எதிர்கொள்ளப்படுமா என்பதை நம்மால் தெளிவாக கூறவியலாது. [31]

அத்தருணத்தில் எந்தவொரு மார்க்சிஸ்டும் காவுட்ஸ்கியின் இந்த சூத்திரமாக்கலுடன் கருத்து வேறுபடவில்லை என்பதை வலியுறுத்தி ஆகவேண்டும். இரண்டாம் அகிலத்தில் மிகவும் பலம்வாய்ந்ததான ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி, பொதுவான முதலாளித்துவ விரிவாக்கத்தின் நிலைமைகளின் கீழ் செயல்பட்டு வந்ததுடன், உண்மையில், அது பாட்டாளி வர்க்கத்தின் ஒரு புரட்சிகர இயக்கத்திற்காக சாகசம் செய்ய முடியாததாக இருந்திருக்கலாம்.

ஆனால் இந்த புறநிலைமை, காலப்போக்கில், அதன் அரசியல் தாக்கத்தைக் கொண்டிருந்தது. ட்ரொட்ஸ்கி போரும் அகிலமும் படைப்பில் விவரித்தைப் போல,

ஜேர்மன் தொழிலாளர் இயக்கம் தத்துவார்த்தரீதியில் மார்க்சிச பதாகையின் கீழ் அணிவகுத்திருந்தது. அப்போது அது அக்காலக்கட்ட நிலைமைகளைச் சார்ந்திருந்ததால், அங்கே ஜேர்மன் பாட்டாளி வர்க்கத்திற்கு அதன் ஆரம்ப நிலையிலிருந்த புரட்சிக்கான இயல்கணித (algebraic) சூத்திரமாக மார்க்சிசம் உருவாகியிருக்கவில்லை, மாறாக அது பிரஷ்ய கிரீடம் பூண்ட தேசிய-முதலாளித்துவ அரசை ஏற்பதற்கான தத்துவார்த்த முறையாக இருந்தது…

நாற்பத்தைந்து ஆண்டுகால வரலாறு, ஜேர்மன் பாட்டாளி வர்க்கத்திற்கு, ஓர் அதிரடியான தாக்குதல் மூலமாக தடையை நீக்குவதற்கோ, அல்லது ஒரு புரட்சிகர முன்னேற்றத்திற்காக எந்தவொரு எதிர்ப்பு நிலைப்பாட்டையும் கைப்பற்றிக் கொள்வதற்கோ ஒரேயொரு சந்தர்ப்பத்தைக் கூட வழங்கி இருக்கவில்லை. இதில் மார்க்சிசம் ஒரு தத்துவமாக, அரசியல் வழிகாட்டுதலுக்குரிய மதிப்பார்ந்த கருவியாக இருந்தது என்றாலும், அதனால் வர்க்க இயக்கத்தின் சந்தர்ப்பவாத குணாம்சத்தை மாற்ற முடியவில்லை, அக்குணாம்சமானது சாராம்சத்தில் அந்நேரத்தில் இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியில் இருந்ததைப் போன்றே இருந்தது. [32]

போர் வெடித்ததும், நிரூபணமானது என்னவென்றால், இரண்டாம் அகிலத்திலிருந்த கட்சிகளின் உத்தியோகபூர்வ மார்க்சிச சித்தந்தாந்தம் அல்ல, மாறாக அவற்றின் நடைமுறையில் இருந்த சீர்திருத்தவாத குணாம்சமும், அரசியல் சந்தர்ப்பவாதமும் மற்றும் இவற்றை தோற்றுவித்திருந்த முதலாளித்துவ ஒழுங்குமுறைக்குள் அவை ஒன்றிணைந்திருந்ததையுமே ஊர்ஜிதப்படுத்தின.

சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான இடையறாத போராட்ட வரலாறைக் கொண்ட போல்ஷிவிக் கட்சியே, உலகம் இதுவரையில் பார்த்திராத மிகவும் புரட்சிகரக் கட்சியாக இருந்தது. ட்ரொட்ஸ்கி விவரித்ததைப் போல:

ஜாரிச முடியாட்சிக்கு எதிரான வீரமான போராட்ட பாரம்பரியங்கள்; தலைமறைவு நடவடிக்கை நிலைமைகளுடன் பிணைந்த புரட்சிகர சுய-தியாகம் கொண்ட பழக்கவழக்கங்கள்; பரந்த தத்துவார்த்த ஆய்வு மற்றும் மனிதயினத்தின் புரட்சிகர அனுபவங்களை உள்ளீர்த்துக் கொண்டிருந்தமை; மென்ஷிவிசத்திற்கு எதிரான, நரோத்னிக்குகளுக்கு (Narodniks) எதிரான, சமரசவாதிகளுக்கு (Conciliationism) எதிரான போராட்டம்; 1905 புரட்சியின் உச்சக்கட்ட அனுபவம்; எதிர்புரட்சி ஆண்டுகளில் இந்த அனுபவம் மீதான தத்துவார்த்த ஆய்வும், உள்ளீர்ப்பும்; 1905 புரட்சிகர படிப்பினைகளின் வெளிச்சத்தில் சர்வதேச தொழிலாளர் இயக்கத்தின் பிரச்சினைகளை ஆய்வுக்குட்படுத்தியமை—என மொத்தமாக அவர்களில் கலந்திருந்த இவ்விடயங்கள் நமது கட்சிக்கு ஒரு பிரத்யேக புரட்சிகர துடிப்பையும், உச்சக்கட்ட தத்துவார்த்த உட்பார்வையையும் மற்றும் ஈடிணையற்ற புரட்சிகர உத்வேகத்தையும் அளித்தன. [33]

ஆயினும் இந்தக் கட்சியிலும், கிளர்ச்சிக்கு எதிர்ப்பு பலமாக இருந்தது. அது, உலக புரட்சியை நோக்கிய வேட்கை கொண்ட பாட்டாளி வர்க்க போக்குக்கும், முதலாளித்துவ ஒழுங்கிற்கு பாட்டாளி வர்க்கத்தை அடிபணிய செய்யும் அரசியலுக்கு தலைமை கொடுத்த குட்டி-முதலாளித்துவ போக்குக்கும் இடையிலான மோதலை அதிகரித்தது.

இதுபோன்ற உட்கட்சி மோதல்கள் தற்செயலானவை அல்ல, மாறாக அப்போதும் புரட்சியை அடுத்து வந்த நிலைமைகளிலும் தவிர்க்க முடியாததாக இருந்தன:

போல்ஷிவிசத்தின் மூலமாக —இங்கே அதன் இன்றியமையா அம்சத்தையே நாம் வலியுறுத்துகிறோம்— நாம் அதுபோன்றவொரு பயிற்சியை, அதுபோன்றவொரு துடிப்பை, அதுபோன்றவொரு பாட்டாளி வர்க்க முன்னணிப்படையின் ஒழுங்கமைப்பு முறையை புரிந்து கொள்கிறோம், ஏனெனில் இவை பிந்தையதன் [பாட்டாளி வர்க்க] கரங்களில் ஆயுதங்களுடன் அதிகாரத்தைக் கைப்பற்ற உதவுகிறது; மேலும் சமூக ஜனநாயகத்தின் மூலமாக முதலாளித்துவ சமூகத்தின் கட்டமைப்புக்குள் ஒரு சீர்திருத்தவாத எதிர்ப்பு நடவடிக்கை ஏற்கப்பட்டதையும், அதன் சட்டபூர்வத்தன்மை ஏற்கப்பட்டதையும் நாம் புரிந்துகொள்ள முடிகிறது —அதாவது முதலாளித்துவ அரசின் எல்லைகளை மீறாமல் அதற்குள்ளிருந்தே பெருந்திரளான மக்களைப் புடம் போட பயிற்சி அளிப்பது; உண்மையில், வரலாற்று உலையில் முழுமையாக எழுச்சி பெற்றிராத கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளேயே கூட, சமூக-ஜனநாயக போக்குகளுக்கும் போல்ஷிவிசத்திற்கும் இடையிலான போராட்டமானது, பின்னர் புரட்சிக்குப் பிந்தைய உடனடி காலகட்டத்தில் அதிகாரம் சம்பந்தமான கேள்வி வெளிப்படையாக முன்வரும் போது, அதன் மிகவும் தெளிவான, பகிரங்கமான மற்றும் உருமறைப்பற்ற வடிவத்தில் தன்னை வெளிப்படுத்துவதோடு பிணைந்துள்ளது. [34]

புரட்சியில் லெனின் வகித்த பாத்திரத்தை ட்ரொட்ஸ்கி எவ்வாறு மதிப்பீடு செய்தார் என்பதை நான் இறுதி விடயமாக வலியுறுத்த விரும்புகிறேன். ஆம், கட்சி அல்லது சோவியத்துக்களின் பதாகையின் கீழ் கிளர்ச்சிகர போராட்டத்தைத் தொடுப்பதில் இருந்த தந்திரோபாய பலன்கள் விவகாரத்தில், அவர் லெனினுடன் உடன்பாடின்றி இருந்தார். ஆனால் கிளர்ச்சியினது பாதையில், கட்சி தலைமையை முன்னோக்கி வழி நடத்தி சென்றதில் லெனின் வகித்த முக்கிய வரலாற்று பாத்திரம் குறித்து அவர் அளவுக்கு வேறெவருக்கும் அதிகமாக தெரிந்திருக்காது:

அவர் சொல்லாட்சியோடு வினவுகிறார்:

நிஜமாகவே இத்தகையவொரு வரலாற்று நிகழ்வு 24 மணி நேர இடைவெளியில் மாற முடியும் என்பது உண்மையா? ஆம், மாற முடியும். … லெனின் எச்சரிக்கை ஒலி எழுப்பி இருக்காவிட்டால், அவர் தரப்பிலிருந்து இந்த அனைத்து அழுத்தமும் விமர்சனமும் இல்லாது இருந்திருந்தால், அவரது ஆழ்ந்த உத்வேகமான புரட்சிகர ஐயப்பாடு இல்லாது இருந்திருந்தால், கட்சி அந்த தீர்க்கமான தருணத்தில் அனேகமாக அதன் முன்னணியை மாற்றியமைக்க தவறியிருக்கலாம், கட்சியின் உயர்மட்டங்களிடையே நிலவிய எதிர்ப்பை பொறுத்த வரையில் மிகவும் பலமாக இருந்தது, அந்த பணியாளர் உள்நாட்டு போர்கள் உட்பட எல்லா போர்களிலும் ஒரு பிரதான பாத்திரம் வகிக்கிறார். [35]

கம்யூனிஸ்ட் அகிலம் முகங்கொடுத்து வரும் அரசியல் பணியைத் தொகுத்தளித்து, அவர் சுருக்கமாகவும், ஆழமாகவும் ஒரு பந்தியைக் கொண்டு நிறைவு செய்கிறார்:

கம்யூனிஸ்ட் கட்சிகளை போல்ஷிவிசமயமாக்கல் என்றால் என்ன? அவர்களுக்கு அதே போன்றவொரு பயிற்சி அளித்து, அதன் விளைவாக, அவர்களது அக்டோபர் தாக்குதல்களின் அந்நேரத்தில் அவர்கள் "நிலை தடுமாறுவதில்" இருந்து அவர்களைத் தடுப்பதற்குரிய முன்னணி பணியாளர்களை தேர்ந்தெடுப்பதாகும். “அது தான் ஹெகலின் முழு அர்த்தமும், நூல்களிலிருந்து கிடைக்கும் அறிவு, அனைத்து மெய்யியல்களின் அர்த்தம் …" [36]

ட்ரொட்ஸ்கி எழுதிய ஸ்ராலினின் வாழ்க்கை வரலாற்றின் ஒரு முக்கிய பந்தி, லெனின் போன்ற மேதைமை பொருந்திய ஒரு தலைவருக்கும் புரட்சிகர கட்சிக்கும் இடையிலான உறவுகளைக் குறிப்பிடுகிறது.

மேதைமை பொருந்திய ஒரு தலைவராக லெனின் வகித்த பாத்திரம் மீது நிறுத்தப்பட்ட வலியுறுத்தலுக்கும் மற்றும் புரட்சிக்கான முன்னணிப்படையாக விளங்கும் கட்சியின் முக்கிய பாத்திரத்திற்கும் இடையே அங்கே மேலோட்டமாக ஒரு முரண்பாடு இருப்பதாக தோன்றலாம். ஆனால் இவ்விரண்டுக்கும் இடையிலான உறவு முறையாக புரிந்து கொள்ளப்படாத போதுதான் இவ்வாறு தோன்றும்.

ட்ரொட்ஸ்கி வினவுகிறார்:

கட்சியின் போக்கை ஒருசில குறுகிய வாரங்களுக்குள் ஒரு புதிய பாதையில் திருப்ப லெனின் என்ன அதிசயம் செய்தார்? இதற்கான பதிலை ஒரேநேரத்தில் இரண்டு திசைகளில் பெற முடியும் — லெனினின் தனிப்பட்ட குணாம்சங்களில் இருந்தும் மற்றும் புறநிலைமைகளில் இருந்தும். வர்க்க போராட்டத்தின் விதிகளை புரிந்து கொண்டதால் மட்டுமே லெனின் பலமாக இல்லை, மாறாக ஏனென்றால் அவர் காதுகள், பெருந்திரளான மக்களின் இயக்க அசைவுகளுக்கு செவிமடுப்பதற்கு ஏற்பவும் மாறியிருந்தன. அவர் பாட்டாளி வர்க்க முன்னணிப் படையாக கட்சி எந்திரத்தை மட்டும் மிகவும் பிரதிநிதித்துவம் செய்யவில்லை. … லெனின் தனிநபராக மிக அதிக செல்வாக்கு செலுத்தவில்லை, மாறாக கட்சிக்கும் மற்றும் அதன் எந்திரம் மீதான கட்சியின் வர்க்க மேலாளுமைக்கும் அவர் உருவடிவமாக இருந்தார். [37]

அவர் தொடர்ந்து வினவுகிறார், “அப்படியானால் போல்ஷிவிக் கட்சியில் லெனின் தான் அனைத்துமாக இருந்தாரா, மற்றவர்கள் ஒன்றுமில்லை என்று அர்த்தமா?” அவர் அதுபோன்றவொரு மதிப்பீட்டை நிராகரிக்கிறார்:

மேதைகள் தங்களிலிருந்து விஞ்ஞானத்தை உருவாக்குவதில்லை; அவர்கள் வெறுமனே கூட்டு சிந்தனை நிகழ்வுபோக்கை வேகப்படுத்துகிறார்கள். மேதைமை பொருந்திய ஒரு தலைவரை போல்ஷிவிக் கட்சி கொண்டிருந்தது. அது தற்செயலானதில்லை. லெனினின் தோற்றத்திலும் பரந்த எண்ணத்திலும் இருந்த புரட்சிகரத்தன்மையால், தனது சிந்தனைகளிலும் நடவடிக்கைகளிலும் தங்களின் தர்க்கரீதியிலான தீர்மானங்களை ஏற்க தகைமை கொண்ட மிகவும் அச்சமற்ற கட்சியில் மட்டுமே அவர் தலைவராக ஆகி இருக்க முடியும். … கட்சி இல்லாமல், லெனின், கூட்டு விஞ்ஞான படைப்புகள் இல்லாத நியூட்டனும் டார்வினும் போல, நிராதரவாக இருந்திருப்பார். [38]

மென்ஷிவிக்குகளுடன் அமைப்புரீதியிலான ஒற்றுமை இருக்கமுடியாது என்பதையும், அங்கே "சிறந்த போல்ஷிவிக்கும்" இருந்திருக்க முடியாது என்று ட்ரொட்ஸ்கி ஒருகாலத்தில் புரிந்து வைத்திருந்ததை, லெனின் கொதிப்பான புரட்சிகர நிகழ்வுகளின் மத்தியில் குறிப்பிட்டார்.

போல்ஷிவிசத்தின் சாராம்சத்தை ட்ரொட்ஸ்கி உள்வாங்கி கொண்டதன் புத்திஜீவித விளைபொருளாக, அக்டோபர் படிப்பினைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

1982 இல், லியோன் ட்ரொட்ஸ்கியும் மார்க்சிசத்தின் வளர்ச்சியும் என்ற கூட்டு தலைப்பின் கீழ் டேவிட் நோர்த் நான்கு கட்டுரைகளை எழுதினார்.

நோர்த் பின்வருமாற்று எழுதுகிறார்:

ரஷ்யாவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் திடமான வரலாற்று அனுபவத்தின் அடிப்படையில் ட்ரொட்ஸ்கி விவரிக்கையில், பல ஆண்டுகளுக்கான, ஏன் பல தசாப்தங்களுக்கான, சோசலிசப் புரட்சியின் தலைவிதியே கூட, மார்க்சிச கட்சியின் தலைமை ஒரு சில நாட்களின் போக்கில் எடுக்கும் முடிவுகளில் தங்கியிருக்கலாம் என்ற கருத்துருவை எடுத்துரைத்தார்.

காரியாளர்களை படிப்பிக்கும் கருத்துருவும், அகிலம் வகிக்கும் பாத்திரமும் ஒரு புதிய வரலாற்று உள்ளடக்கத்தில் முதலீடு செய்யப்பட்டது. … கம்யூனிச அகிலத்தின் வரலாற்றுப் பணி, இந்த கடமையை நிறைவேற்றுவதற்கு ஆற்றல் கொண்ட அதன் பிரிவுகளது தலைமையில் சர்வதேச காரியாளர்களை பயிற்றுவிப்பதாக இருந்தது. [39]

அக்டோபர் படிப்பினைகளில் ட்ரொட்ஸ்கி எழுதியவாறு, புரட்சிக்கு தயாரிப்பு செய்வதும் அதன் வெற்றியை உறுதிப்படுத்துவதும் என்பதன் அர்த்தம், கட்சி காரியாளர்களை வளர்த்தெடுப்பதாகும், அனைத்திற்கும் மேலாக மார்க்சிஸ்டுகளாக அதன் தலைவர்கள், “அதுபோன்று பயிற்சியளிப்பதும், அதன் விளைபயனாக அத்தகைய தலைமை பணியாளரைத் தேர்ந்தெடுப்பதும், அவர்களது அக்டோபர் தாக்குதல்களின் நேரத்தின் போது அவர்கள் நிலைதடுமாறுவதில் இருந்து அவர்களைத் தடுக்கும்.”

கட்சியை "புரட்சிகர மூலோபாயத்தின் பள்ளியாக" அபிவிருத்தி செய்வதற்காக ட்ரொட்ஸ்கி உருவாக்கிய கருத்துருவின் அர்த்தம் இது தான், அடுத்த அக்டோபருக்கான தயாரிப்பானது, "ஹெகலை முழுமையாக்குவது, நூல்களிலிருந்து கிடைக்கும் அறிவு, அனைத்து மெய்யியல்களின் அர்த்தம்,” என்றவர் ஏன் கூறுகிறார், “உள்ளார்ந்த பார்வை இல்லாமல், நெஞ்சுரம் கொண்ட தைரியமான கட்சி தலைமை இல்லாமல், பாட்டாளி வர்க்க புரட்சியின் வெற்றி சாத்தியமே இல்லை,” என்றவர் ஏன் வலியுறுத்துகிறார்.

இன்று அக்டோபர் புரட்சியின் படிப்பினைகளை ஆராய்வதன் மீது ட்ரொட்ஸ்கியின் வலியுறுத்தலை தீவிரமாக ஏற்பதில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (ICFI) உலக சோசலிச வலைத் தளமும் மட்டுமே உள்ளன.

அக்டோபர் புரட்சி, உலக வரலாற்றில் மிகவும் அரிய நிகழ்வாகும். தொழிலாள வர்க்கம், அதற்கு முன்னர் எப்போதுமின்றி முதல் முறையாக, முதலாளித்துவ ஒழுங்கமைப்பை தூக்கி வீசி, உலக சோசலிசப் புரட்சிக்கான பாதையில் வீரமாக முதல் அடியை எடுத்து வைத்தது.

புரட்சியை மீறிச் சென்ற பயங்கரமான சம்பவங்கள் —ஸ்ராலினின் கீழ் அதன் அதிகாரத்துவ சீரழிவு, நடத்தப்பட்ட கொடூரமான குற்றங்கள் ஆகியவை— இந்த வரலாற்று சாதனையை மூடிமறைப்பதற்கோ, அல்லது அதிலிருந்து படிக்க கூடிய அனைத்தையும் தொழிலாள வர்க்கம் படிப்பதை தடுப்பதற்கோ அனுமதிக்க முடியாது.

ட்ரொட்ஸ்கி கையாண்ட இந்த பிரச்சினைகள் —போர் மற்றும் தற்காப்புவாதத்திற்கு எதிரான போராட்டம், நிரந்தரப் புரட்சி தத்துவம் மற்றும் லெனினின் ஏப்ரல் ஆய்வறிக்கைகள், ஜூலை நாட்கள், அக்டோபருக்கான தயாரிப்புகள், இன்னும் பல விடயங்களும், நமது சொந்த முன்வைப்புகளுக்கான இன்றியமையா கருப்பொருளாக உள்ளன என்பதை இந்த தொடர் சொற்பொழிவுகளைச் செவிமடுத்துள்ளவர்கள் உணர்வார்கள்.

இவ்விதத்தில் தான் —அதாவது, தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் தலைச்சிறந்த மற்றும் மிகவும் தொலைநோக்குப் பார்வை கொண்ட கூறுபாடுகளுக்கு அரசியல் கல்வியூட்டுவதன் மூலமாக தான்— நாம் சோசலிசப் புரட்சிக்கான பாதையைத் தயாரித்துக் கொண்டிருக்கிறோம்.

நான்காம் அகிலத்தின் ஸ்தாபக ஆவணமான இடைமருவு வேலைத்திட்டத்தில் (Transitional Programme) ட்ரொட்ஸ்கி எழுதினார்:

சோசலிசத்திற்கான வரலாற்று நிலைமைகள் இன்னும் "கனியவில்லை" என்ற நடைமுறை பேச்சுக்கள் அனைத்தும், அறியாமை அல்லது நனவுபூர்வமான ஏமாற்றுத்தனத்தின் விளைபொருளாகும். பாட்டாளி வர்க்க புரட்சிக்கான புறநிலை முன்நிபந்தனைகள் "கனிந்துள்ளன" என்பது மட்டுமல்ல; அவை ஓரளவுக்கு அழுகவும் தொடங்கிவிட்டன. ஒரு சோசலிசப் புரட்சியின்றி, அடுத்த வரலாற்று காலகட்டத்தில், ஒட்டுமொத்த மனிதயின கலாச்சாரத்தையும் ஒரு பேரழிவு அச்சுறுத்துகிறது. இப்போது பாட்டாளி வர்க்கத்தின் முறை, அதாவது பிரதானமாக அதன் புரட்சிகர முன்னணிப் படையினது. மனிதயினத்தின் வரலாற்று நெருக்கடியானது, புரட்சிகர தலைமைக்கான நெருக்கடியாக சுருங்கியுள்ளது. [40]

இந்நெருக்கடியைத் தீர்ப்பது என்பதன் அர்த்தம், ICFI உடன் இணைந்து, அதை கட்டமைப்பதாகும். போர்கள் மற்றும் புரட்சிகளின் ஒரு புதிய காலகட்டத்திற்குள் உலக முதலாளித்துவம் சென்று கொண்டிருப்பதால், ICFI இனுள், முன்னேறிய தொழிலாளர்களும் இளைஞர்களும், மிக அவசரமாக அவசியப்படும் புரட்சிகர அரசியல் தலைமையாக புடம் போடப்படுவார்கள்.

குறிப்புதவிகள்:

அக்டோபர் படிப்பினைகளின் இணையவழி பதிப்பு, உலக சோசலிச வலைத் தளத்தில் இங்கே கிடைக்கிறது. மெஹ்ரிங் புக்ஸ் பதிப்பகம் Kindle மற்றும் ePub பதிப்புகளை வழங்குகின்றது.

[1] David North, “Why Study The Russian Revolution?,” Why Study The Russian Revolution? Vol. 1 (Oak Park, MI: Mehring Books, 2017), pp. 20–21.

[2] Leon Trotsky, Lessons of October (London: New Park Publications, 1971), pp. 28–29.

[3] V.I. Lenin, “The Bolsheviks Must Assume Power,” Collected Works, Vol. 26 (Moscow: Progress Publishers, 1977), p. 19.

[4] Lenin, “The Crisis has Matured,” Collected Works, Vol. 26, p. 84.

[5] Ibid., “Letter to the Bolshevik Comrades Attending the Congress of Soviets of the Northern Region” p. 182.

[6] Ibid., pp. 182–83.

[7] Ibid., “Meeting of the Central Committee of the R.S.D.L.P. (B.) October 10 (23), 1917,” p. 190.

[8] Joseph Stalin, “The Role of the Most Eminent Party Leaders,” Pravda, November 1918, cited in Leon Trotsky, The Stalin School of Falsification (London: New Park Publications, 1974), p. 10.

[9] Trotsky, Lessons of October, p. 50.

[10] All above quotes: Grigorii Zinoviev, [with Lev Kamanev] “Statement to the Principal Bolshevik Party Organizations,” October 11 (24), 1917, cited in and translated by Robert V. Daniels, A Documentary History of Communism in Russia, (Hanover, NH: University Press of New England, 1993), p. 56.

[11] Trotsky, Lessons of October, p. 36.

[12] Ibid., p. 38.

[13] V.I. Lenin, “Imperialism, the Highest Stage of Capitalism,” Collected Works, Vol. 22 (Moscow: Progress Publishers, 1974), p. 194.

[14] Lenin, “Letter to Bolshevik Party Comrades,” Collected Works, Vol. 26, p. 217.

[15] Lenin, “Letter to Comrades,” Collected Works, Vol. 26, p. 197; 206–07.

[16] Leon Trotsky, My Life, (New York: Pathfinder Press, 1970), pp. 326–27.

[17] Ibid., p. 328.

[18] Leon Trotsky, Military Writings and Speeches, Vol. 5 (London: New Park Publications, 1981), pp. 224–25.

[19] Cited in Peter Schwarz, “The German October: The missed revolution of 1923, Part 2,” Accessed at: http://www.wsws.org/en/articles/2008/10/1923-o31.html

[20] Trotsky, Military Writings, Vol. 5, p. 233.

[21] Cited in Schwarz, accessed at: https://www.wsws.org/en/articles/2008/10/1923-o31.html

[22] Trotsky, Lessons of October, p. 4.

[23] Ibid., p. 2.

[24] Ibid.

[25] Ibid., p. 59.

[26] Ibid., p. 3.

[27] Ibid., p. 4–5.

[28] Ibid., p. 5.

[29] Ibid., p. 6

[30] Karl Kautsky, The Road to Power, (New York: Prism Key Press, 2013), pp. 47–48.

[31] Ibid., p. 48.

[32] Trotsky, The War and the International, (Oak Park, MI: Mehring Books, 2017), pp. 65–66.

[33] Trotsky, Lessons of October, p. 61.

[34] Ibid., p. 14.

[35] Ibid., p. 47.

[36] Ibid., p. 64.

[37] Trotsky, Stalin, (London: Wellred Books, 2016), p. 258.

[38] Ibid., p. 259–60.

[39] David North, Leon Trotsky and the Development of Marxism, (Oak Park, MI: Socialist Equality Party, 2013), pp. 29–30.

[40] Leon Trotsky, “The Death Agony of Capitalism and the Tasks of the Fourth International,” The Transitional Program (New York: Labor Publications, 1972), p. 8